பண்டைத் தமிழர் வாழ்வியலில் நிலவிய களவொழுக்கம் – கற்பொழுக்கம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆறறிவு படைத்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் மற்றைய ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான உயிரினங்களைவிட மிகவும் விஞ்சிய நிலையில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் ஆகிய இனங்கள் உள்ளதென்பதும் நாம் அறிந்த உண்மையாகும். இவ்வாறான உயிரினங்கள் நிறைந்ததுதான் உலகம் என்றாகின்றது. இந்த ஆண், பெண் உறவுதான் உலகை நிலைக்க வைக்கின்றது. இவ்வுறவுக்கு ஏதுவான ஆண், பெண் இனங்களில் ஓர் இனம்தானும் இல்லையெனில் எல்லா இனங்களும் அழிந்து விடும். உயிரினங்கள் இன்றேல் உலகமும் இல்லையெனலாம்.

களவொழுக்கம்
பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாய் வகுத்து அறநெறியோடு, இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம்- புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை சார்ந்த பல்வேறு பணிகளும், வீரம் செறிந்த போரியல் மரபு பற்றியும் எடுத்துக் கூறும். இவை பற்றிச் சங்க நூலான புறநானூறு திறம்பட எடுத்துக் கூறுகின்றது. இங்கே ஆண்கள் முன்னிலை வகிப்பர். அகம்- அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையைக் கூறும். இவை பற்றி அகநானூறு என்ற சங்க நூலில் விவரமான செய்திகளைக் காணலாம். இதில் ஆண்களும் பெண்களும் பங்கேற்பர்.

 இங்கே, அகத்தெழு உணர்வும், பருவ மலர்ச்சியும், பாவை வனப்பும் நிறைந்த ஒரு கன்னியவள் இன்று. ஆங்கே, மறமாண்பும், தமிழ்ப் பண்பும், திறத்தின் உருவும், ஆண்மையும், வீரமும், சிறப்பும் நிறைந்த ஒரு காளையவன் இன்று. இவர்கள் இருவரும் பிறப்பட்டு ஒருவரையொருவர் எதிர்கொண்டனர். காளையவன் அடங்கிலாக் காதலால் கன்னிப் பெண்மையில் மயங்கி, மருண்டு நின்றான். கன்னியவள் காதல் கனிந்து காளையின் ஆண்மையில் மயங்கிக் கலந்திடத் துடித்தாள். இருவரும் அருகருகே நின்று கண்ணாற் கதைத்தபின் காதற்களவு நிகழும். களவொழுக்கம் என்பது காதலர்கள் பிறர் அறியாதவாறு தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற் கூடிக் காதற் களவு நிகழ்த்துவதாகும்.

காமப் புணர்ச்சியும், இடந்தலைப்படலும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டமும் என்று சொல்லபட்பட்ட நான்கு வகையானும், அவற்றைச் சார்ந்து வருகின்ற மொழியானும் வருவன களவென்று கூறுதல் மறையறிந்தோர் நெறியாமென்று தொல்காபபியர் (கி.மு.711)   சூத்திரம் அமைத்தமை காண்க.
                                “காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
              பாங்கொடு தழாஅலும்  தோழியிற் புணர்வுமென்று
              ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
              மறையென மொழிதல் மறையோர் ஆறே.”  — (பொருள்- 487)

இன்பம், பொருள், அறம் என்று சொல்லப்பட்ட அன்புடனிணைந்த ஐந்திணையில் (கைக்கிளை, பெருந்திணை நீங்கிய ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்) நிகழும் காமக் கூட்டமானது எண் வகை மணத்துள் அமைந்த யாழினையுடைய காந்திருவரது கூட்டத்தை ஒத்தது போலாகும் எனக் களவொழுக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.

                            “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
             அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
             காமக் கூட்டங் காணுங் காலை
             மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
             துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே.” – (பொருள்- 89)

மணம் எட்டாவன:- (1)  அசுரம், (2)  இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5)பிரமம்,
(6) பிரசாபத்தியம், (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம். இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளையைச் சாரும் என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.

                             “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.” – (பொருள்- 102)

இன்னும், மேற்காட்டிய எண்வகை மணத்துள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணையைச் சாரும் என்று சூத்திரம் அமைத்துள்ளார் தொல்காப்பியர்.

                            “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.” – (பொருள்- 103)

எண்வகை மணத்துள் எஞ்சிய காந்திருவம் ஐந்திணைக்குரியதாம். ஐந்திணையோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புற்ற ஐவகை நிலத்தையும் பெற்றதனால், யாழோர் கூட்டம் ஐந்தெனப்படுமாம். நிலமும், காலமும் முதல் எனக் கூறப்பட்டுள்ளது. ஐவகைக் கூட்டமாவன:- களவு, கற்பு, உடன் போக்கு, இற்கிழத்தி, காமக்கிழத்தி / காதற்பரத்தை என்பனவாம்.

                            “முதலாகு புணர்ந்த யாழோர் மேன
             தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.” – (பொருள்- 104)
இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்ட சிறப்பினையும் காண்கின்றோம்.

தலைமகன் இலக்கணம்
தலைமகனுக்கு இவ்வாறு இலக்கணம் அமைத்துக் காட்டியுள்ளார் தொல்காப்பியர்.

                       “பெருமையும் உரனும் ஆடூஉ மேன.” – (பொருள்- 95)

பழிபாவங்களுக்கு அஞ்சிக் குற்றச் செயல் புரியாமலும், அறிவுடையவனாய் இருத்தலும், ஆண்மகனுக்குரிய இயல்பாகும். இதனால் தலைமகளது வேட்கைக் குறிப்பை உணர்ந்த தலைமகன், உடன் புணர்ச்சியை நினையாது வரைந்து கொண்டதன் பின்பே நிகழ்த்தும் என்பதும் அறியப்படும். இங்கே தலைமகனின் ஆளுமை புலனாகின்றது.

தலைமகள் இலக்கணம்
தலைமகளுக்கும் இவ்வாறு இலக்கணம் அமைத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர்.

                            “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
             நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.”– (பொருள்- 96)

அச்சம், நாண், பேதைமை ஆகிய இம்மூன்று குணங்களும் தலைவியருக்கு என்றும் முந்தி நிற்றல் மகளிர்க்குரிய ஒரு சிறப்பாகும். இதனால் அவர்கள் வேட்கையுற்றவிடத்தும் புணர்ச்சிக்கு இசையாது, வரைந்தெய்தலையே வேண்டி நிற்பர். தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், மடம், நாணம் ஆகிய முக்குணங்கள் மட்டுமே இருந்துள்ளமையும் புலனாகின்றது. இவ்வாறான முக்குணங்கள் இந்நாளில் மகளிர்க்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றாகி அவர்களுக்கு நாற்குணங்களாயும், நாற்படையாகவும் திகழ்கின்றதைக் காண்கின்றோம். இந்நாற்குணங்களும் மகளிர் பிறப்புடன் ஒட்டிப் பிறந்தனவாகின்றன. தொல்காப்பியர் காலத்தில் ‘பயிர்ப்பு’ என்ற நான்காவது குணம் மகளிர்க்கு இருக்கவில்லை என்பதும் அறியக்கிடக்கின்றது.

இயற்கைப் புணர்ச்சியில் தலைமகள் இயல்பு
இயற்கைப் புணர்ச்சியில் தலைமகள் இயல்பு பற்றி இவ்வாறு தொல்காப்பியர் சூத்திரம் அமைத்த பாங்கின் சிறப்பினையும் காண்போம்.

                             “வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
             ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
             நோக்குவ எல்லாம் அவையே போறல்
             மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிச்
             சிறப்புடை மரபினவை களவென மொழிப.”– (பொருள்- 97)

(1) அடையப் பெறவேண்டுமென்ற பேராசையும், (2) என்றும் நினைத்தலும், (3) எண்ணம் கிட்டாதெனின் உண்ணாது உடல் மெலிதலும், (4) விழித்திருத்தலும், (5) தன் எண்ணப்படி தானே கூறிக்கொள்ளுதலும், (6) நாணம் நீங்குதலும், (7) காணும் பொருள் யாவும் முன்கண்ட பொருளென நினைத்தலும், (8) அவை நினைவாகப் பித்தாதலும், (9) மயக்க முறுதலும், (10) கைகூடாதவிடத்து இறந்து விடுதலும் ஆகியன இப்பத்தும் தலைவிக்குரிய சிறப்பு வாய்ந்த மரபினையுடைய களவென்று புலவர் சொல்லுவா.;

இயற்கைப் புணர்ச்சியில் தலைமகன் இயல்பு
இயற்கைப்  புணர்ச்சியில்  தலைமகன்  இயல்பு  பற்றித்  தொல்காப்பியர் கூறும் சூத்திரத்தையும் காண்போம்.
                                  “முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
                நன்னயம் உரைத்தல் நகைகனி உறாஅ
                அந்நிலை அறிதல் மெலிவுவிளக் குறுத்தல்
                தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று
                இன்னவை நிகழும் என்மனார் புலவர்.”– (பொருள்- 98)

(1) முன்னிலையாகாதவற்றை முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல், (2)அவை சொல்லாதவற்றைச் சொல்வனபோலச் சொல்லுதல், (3) அவை பேசுவதாக நினைத்துத் தன் மனத்திலுள்ளதைக் கூறுதல், (4) தலைவி மிகவும் மகிழ்ச்சியுறாமல் புணர்ச்சிக்கு இனமாகிய பிரிவுநிலை அடைய அவள் ஆற்றும் தன்மையை அறிதல், (5) இப் பிரிவினால் ஏற்பட்ட தன் வருத்தத்தைத் தலைவி அறியுமாறு கூறுதல், (6) தலைவி வருத்தம் அறிந்து அது தீரக் கூறுதல், (7) ‘எம் தொடர்பு நிலைக்கும், பிரிவு ஏற்படாது’ என்று தலைமகள் மனம் குளிரக் கூறுதல் ஆகிய இவ்வேழும் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைமகனுக்கு உரியனவென்று கூறுவர் புலவர்.

களவின்கண் தலைமகனும் தலைமகளும்
(1) காதற்களவு ஒழுக்கத்தில் தலைமகனும் தலைமகளும் ஈடுபடுங்கால், ஆசைமிகுதியில் தலைமகன் தலைமகளின் மேனி தொட்டுப் பழகுதலும், (2) அவள் கூந்தல், நுதல் முதலியவற்றைத் தடவிப் பொய்யாகப் புனைந்து கூறுதலும், (3) அவளிடம் நட்புப் பூண்டு பழகித் தழுவவேண்டுமெனக் கூறுதலும், (4) நாணங்கொண்ட தலைமகளுக்குப் புணர்ச்சிக்கு இடையூறாகத் தலைமகன் கூறுதலும், (5) புணர்ச்சி நிகழாது காலம் நீடித்தலுக்கு வருத்தப்படக் கூறுதலும், (6) வருந்தினானென்றறிந்த தலைமகளின் நாணம் நீங்குதலும், (7) தலைமகன் முற்கூறிய நுகர்ச்சியை விரைவில் பெறுதலும், (8) என்றும் பிரியாமைக்கான சூள் உரைப்பதும் ஆகிய சிறப்பினையுடைய எண்வகையான கூற்றுக்களும் தலைமகன் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியனவாம்.
                                                 “மெய்தொட்டுப் பயிறல் பொய்யா ராட்டல்
                      இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்
                      நீடுநினைந்து இரங்கல் கூடுத லுறுதல்
                      சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
                      தீராத் தோற்றம் உளப்படத் தொகைஇப்
                      பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்….” – (பொருள்- 99)

காம ஒழுக்கத்தில் நிலைத்து வருகின்ற நாணம், மடம் ஆகியவை பெண்மைக்குரியனவாம். தலைமகளிடத்து எழும் வேட்கையானது குறிப்பினாலும் இடத்தினாலும் ஏற்படுமேயன்றி, அவள் வாயிலாக வெளிப்படையாகத் தோன்றாதெனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                    
                   
                                                 “காமத் திணையில் கண்நின்று வரூஉம்
                      நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
                      குறிப்பினும் இடத்திலும் அல்லது வேட்கை
                      நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.” —  (பொருள்- 106)

களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவகையோரும் களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவார் என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.

                                 “பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
               சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு
               அளவியன் மரபின் அறுவகை யோரும்
               களவியற் கிளவிக் குரியர் என்ப.”–   (பொருள்- 490)

களவுக் காதலில் தலைமகனுக்கு உறுதுணையாய் நின்று வேண்டிய உதவி புரிபவனும், புத்திமதி கூறுபவனும் பாங்கன் ஆவான். தலைமகனுக்குப் பாங்கன் அமைவதுபோல் தலைமகளுக்குத் தோழி அமைவாள். தலைமகளின் தோழியாக இருப்பவள், செவிலியின் மகள் ஆவாள்.
           
                       
                                    “தோழி தானே செவிலி மகளே.” – (பொருள்- 123)

சில வேளைகளில் பாங்காயினர் எவருமின்றித் தலைமகனும், தலைமகளும் தாமே கூடுவதும் உண்டாம். இந்நிலையில் தாமே தமக்குத் தூதுவரும் ஆதல் உளவாம். இதைத் தனிமை ஒழுக்கம் எனக் கூறுவர்.
               
                               
                                      “காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின்
                 தாமே தூதுவ ராகலும் உரித்தே.” – (பொருள். 117)

குறியிடத்துக் கூட்டம்
தலைமகன், தலைமகள் களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். இரவில் கூடுமிடம் ‘இரவுக்குறி’ என்றும், பகலிற் கூடுமிடம் ‘பகற்குறி’ என்றும் தொல்காப்பியம் கூறும்.

                                 “குறியெனப் படுவது இரவினும் பகலினும்
               அறியக் கிளந்த ஆற்ற தென்ப.”-  (பொருள்- 128)

இரவுக்குறிக்குரிய இடமானது இல்லத்துக்கு அண்மித்ததாகவும், வீட்டிலுள்ளார் பேசுவனவற்றைக் கேட்கும்படியாக அமைந்த இடமாகும்.

                                 “இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
               மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
               மனையகம் புகாஅக் காலை யான.”-  (பொருள்- 129)

பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைமகளுக்கு நன்கு அறிந்த இடமாக இருத்தல் வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

                                 “பகற்புணர் களனே புறனென மொழிப
               அவளறி வுணர வருவழி யான.”-  (பொருள்- 130)

தலைமகன் தலைமகள் களவுக் கூடல் முதல் மூன்று நாட்களும் பாங்கனின் துணையுடன் நடக்கும். இம் மூன்று நாட்களும் அவன் துணை நீக்கப்படாது எனத் தொல்காப்பியம் கூறும்.

                                 “முந்நா ளல்லது துணையின்று கழியாது
               அந்நா ளகத்தும் அதுவரை வின்றே.”  –  (பொருள்- 120)

களவு வெளிப்படல்
தலைமகன், தலைமகள் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலும் உண்டு. அது ‘அம்பல்’, ‘அலர்’ என இருவகைப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இவ்விரண்டிற்கும் தலைமகனே பொறுப்பாவான் என்று தொல்காப்பியம் கூறும். தலைமகளானவள் இவற்றிற்குப் பொறுப்பாகாள் என்றவாறு.

                                 “அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
               அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.”  –   (பொருள்- 137)

களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள் களவு வெளிப்பட்ட பின்னரும், களவு வெளிப்படா முன்னரும் ஆகிய இரு நிலைகளிலும் தலைமகளிரைத் தலைமகனார் திருமணம் புரிந்து கொள்வர் எனத் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.

                                 “வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
               ஆயிரண் டென்ப வரைதல் ஆறே.”  –  (பொருள்- 138)

களவொழுக்கக் காலவரை
களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைமகன் தலைமகளை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் என்றும் இல்லை. களவுக் காதலைத் தெய்வீகமாக அன்றைய காதலர்கள் எண்ணிக் கருத்தொருமித்துச் செயற்பட்டனர். இருந்தும், தலைமகன் தலைமகளிரிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

                                 “களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
               திங்கள் இரண்டின் அகமென மொழிப.” –  (நூற்பா- 32)

தலைமகன் தலைமகளிரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பெரு நோக்குக் கொண்ட பழந்தமிழ் அறிஞர் இவ்வாறான சிறந்த வரையறையை வகுத்துக்கொடுத்துள்ளமை போற்றற்குரிய செயலெனவாம்.

கற்பொழுக்கம்
கற்பின் வழிநின்று வாழ்வதையே மனித சமுதாயம் வேண்டி நிற்கின்றது. அதிலும் பெண் கற்பை முன்னிலைப் படுத்திப் பேசுவர் யாவரும். இதில் பெண் தவறிவிட்டால் அவள் மேனி தவறைக் காட்டிக்கொடுத்துவிடும். அவ்வாறு அவள் மேனி அமைப்பு அமைந்துள்ளது. ஆணுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை.  எனவே ஆண்  புரியும் தவறுகள்  வெளிவராது மங்கிவிடும்.

சீரான குடும்ப வாழ்வுக்குக் கற்புநெறியின் முக்கியத்தை உணர்ந்த ஆன்றோரும் சான்றோரும் சில கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதில், இற்றைக்கு இரண்டாயிரத்து எண்ணூறு (2,800) ஆணடுகளுக்குமுன் எழுந்த பழந்தமிழ் இலக்கிய நூலான தொல்காப்பியம் கற்பொழுக்கத்தின் இயல்புகளை எவ்வாறு உணர்த்தி நிற்கின்றன என்பதையும் காண்போம்.
கற்பு

தலைமகன், தலைமகள் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் (உற்றார், உறவினர்) மூலம் திருமணம் செய்து கொள்ளுதலும் என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தப்பாது மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல் தீர்த்தலும், பிரிதலும் என்று சொல்லப்பட்ட இவற்றோடு கூடிவருவது கற்பு என்று கூறப்படும்.
                               “மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
                 இவைமுத லாகிய வியனெறி திரியாது
                 மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
                 பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.”  — (பொருள்- 488)

கற்பும் கரணமும்
கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வாகும். சடங்கோடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய தலைவியின் தமர் மணஞ்செய்து கொடுக்கும் முறையைக் கற்பென்று கூறுவர். இது கொண்டு கொடுக்கும் முறையாகும். இன்னும் கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபினர், கொடைக்குரி மரபினர், கொண்டு, கொடுத்து என்பன வரிசைப் படுத்திக் கற்பொடு பொருந்திய மணவிழாவினைக் காண்கின்றோம்.

                  “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
         கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
         கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.” – (பொருள்- 140)

தலைவனும் தலைவியும் அன்பினாற்கூடி ஒன்றுபட்டுத் தனிவழி சென்ற பொழுதும், கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கொடுகூடிய மணநிகழ்வு (கரணம்) நடைபெறுதலும் உண்டாம். இங்கு, கரணத்தின் சிறப்பினையும் காண்கின்றோம்.

                                 “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
               புணர்ந்துடன் போகிய காலை யான.”  —  (பொருள்- 141)

நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று நிலவியிருந்தது. அதன்பின் மேலோரென்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.

                                   “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
                கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.”   —  பொருள்- 142)
தொல்காப்பியர் காலத்துக்குமுன் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வகுப்பினரிடையில் கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்ந்ததென்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தத்தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் தெளிவாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகிவிட்ட நிலையில் நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்த்துகின்றனர். மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனம் கொடுத்தல், வாங்கற் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் புலனாகின்றது. 

தலைவன் தலைவியை நாடி, காதல் கொண்டு,; சிலநாட் பழகி,  பல நாள் களவொழுக்கத்தில் மறைந்தொழுகி, ‘என்றும் உன்னைக் கைவிடேன்’ என்று வஞ்சமொழி கூறி, பின் ‘அவளை நானறியேன்’ என்று பொய் கூறுதலும், குற்றமுடன் ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக்களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன. தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் (ஆன்றோரும் சான்றோரும்) யாத்தனர் கரணம் என்று சொல்லப்பட்ட சடங்குகளை வகுத்து, வரையறைகளையும் அமைத்தனர்.
            
                                        “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”   —   (பொருள்- 143)

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்று வரும் கூற்று, பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமையும், அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் புலனாகின்றது.

வாயில்கள்
தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய பன்னிருவரும் ஒழுக்கத்திற்குச் சிறந்த வாயில்களாவார் என்று கற்பியலில் தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.

                                     “தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
                 பாணன் பாடினி இளையர் விருந்தினர்
                 கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
                 யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.”   —  (பொருள்- 191)

கற்பிற் கூற்று நிகழ்தற்குரியோர்
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் களவிற் கூற்று நிகழ்தற்குரிய சிறப்பினையுடைய  பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்j;தற்கு உரியோராவார் என்று தொல்காப்பியம் கூறும்.
                              
                                   “பாணன் கூத்தன் விறலி பரத்தை
                யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
                பேணுதகு சிறப்பில் பார்ப்பான் முதலா
                முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
                தொன்னெடு மரபிற் கற்பிற் குரியர்.” — (பொருள்- 491)

களவிற் கூற்று நிகழ்த்தற்கு அறுவகையினரையும், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குப் பன்னிருவகையினரையும் தேர்தெடுத்த நம் பண்டைத் தமிழர் தம் வாழ்வியலில் களவிற் கூற்றிலும் பார்க்கக் கற்பிற் கூற்றுக்கு மிக்க முக்கியத்துவம் கொடுத்துள்ள சிறப்பினையும் காண்கின்றோம். 

அலர்
களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டிலும் தலைவன் தலைவியர் ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் எழுவதுண்டாம். அது சில வேளை நிகழ்வதும், சில தருணம் நிகழாமையும் உண்டாம்.
               
                          “களவுங் கற்பும் அலர்வரை வின்றே.” — (பொருள்- 160)

மேலும், அலரைப் பற்றித் திருவள்ளுவர் (கி.மு. 31) கூறும் இரு குறள்களையும் காண்போம். ‘காதலனை யான் ஒரு நாள்தான் பார்த்தேன். அதனால் எழுந்த அலரோ பாம்பு சந்திரனை விழுங்கிய செய்தி போல் எங்கும் பரவி விட்டதே’ என்று காதலி குறைபடுகின்றாள்.
              
                                      “கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
                 திங்களைப் பாம்புகொண் டற்று.’      — (குறள்- 1146)

ஊரவர்களின் அலர் தூற்றல் எருவாகவும், அது கேட்டு அன்னையானவள் சொல்லும் கடுஞ்சொற்கள் நீராகவும் கொண்டு இக்காம நோயானது செழித்து வளர்கின்றதெனக் காதலி களிப்படைகின்றாள் என்று குறள் கூறும். அலர் தரும் பயன் இதுவாகும்.

                                      “ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
                 நீராக நீளும்இந் நோய்.”  —  (குறள்- 1147)

பிறர் அலர் தூற்றியதால் தலைவன் தலைவியரின் காம வேட்கை அதிகரிக்கும் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறும். அலரினால் வரும் பயனிதுவெனத் தலைவன் தலைவியர் மகிழ்வர்.
                        “அலரில் தோன்றும் காமத்து மிகுதி.”  —  (பொருள்- 161)

தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, அவளுடன் சேர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தி, ஆற்றிலும், குளத்திலும் நீராடி மகிழ்தலும,; அலர் பரவலுக்குக் காரணமாம்.
            
                                 “கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.”  —  (பொருள்- 162)

முடிவுரை
களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டும் மனித வாழ்வியலில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்வொழுக்கங்களை ஆறறpவு படைத்த மனிதd;> மனிதனுக்காக அமைத்தான். மனிதனுக்குமுன் தோன்றிய மற்றைய உயிரினங்களிடம் இவ்விரு ஒழுக்கங்களும் என்றும் நிலவியதில்லை. இவையின்றி அவைகளின் வாழ்க்கை மங்கிவிடவுமில்லை. அவைகளின் வாழ்முறைகள் வேறு. மனிதனின் வாழ்முறைகள் வேறு. வாழ்க்கை என்பது ஆண், பெண் உறவில் எழுவதாகும். இவ்வுறவை மற்றைய உயிரினங்களிற் கண்டான் மனிதன். ஆண், பெண் தனித்தனியே வாழ்ந்தால் அது வாழ்வாகாது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதும் வாழ்க்கையன்று.

களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவன், தலைவியர் தனித்துச் சந்திக்க முடியாமை, அவர்களுடன் பாங்கன், தோழி கண்காணித்து நிற்பது, களவொழுக்கம் இரு மாதம்தான் நிகழுமென்பது, அவர்களுக்குத் துணைநின்று அறிவுரை கூற அறுவர் உள்ளமை, குறியிடம் கூடல் என்ற நிபந்தனைகள், வழிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை தலைவன், தலைவியரிடையே தவறேதும் ஏற்படாது காத்து நிற்கின்றன.

‘கற்பு இல்லாத அழகு வாசனையில்லாத பூ’ என்பர். கற்பு என்பதற்கு ‘மகளிர் கற்பு’, ‘கன்னித் தன்மை’ என்று அகராதி கூறும். கற்பு என்றால் ‘அது பெண்ணுக்குரியது. அதை அவள் என்றும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்’ என்றுதான் யாவர் மனத்திலும் உறைந்துள்ளது. பெண்ணுக்குக் கற்பு இருப்பதுபோல் ஆணுக்கும் கற்பு உள்ளது. எனவே அவர்கள் இருவரும் அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆண் தன் கற்பைக் காப்பாற்றினால், பெண்களின் கற்புத் தானாகவே காப்பாற்றப்படுமென்பதை யாவரும் உணரவேண்டும். ஏனெனில் பெண்கள் கற்பு ஆண்களால்தானே சிதைக்கப்படுகின்றது. பிறர்மனை, பரத்தையர் ஆகியவர்களை நாடும் ஆடவர்கள்கூடத் தம் மனைவியர் கற்புடையவர்களாய் இருக்க வேண்டுமென்று விரும்புவர். தம்மைத்தாமே திருத்திக்கொள்ள முடியாதவர்களுக்கு இப் பேர்விருப்பம் எழலாமா?

கற்பிற் கூற்று நிகழ்த்தற்குப் பன்னிருவரை நியமித்தமை போற்றற்குரிய விடயமாகும். காதலர்களிடையே பொய்யும;;, வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் ‘கரணம்’ என்ற சடங்கொடு கூடிய மணநிகழ்வை ஏற்படுத்தியமை சாலச் சிறந்ததாகும். தொல்காப்பியர் காலத்திலிருந்து இற்றைவரை இச் சடங்குமுறை நடந்தேறிக் கொண்டிருப்பது ஓர் அற்புதச் செயலெனலாம். தொல்காப்பியரின் தொல்காப்பியம் என்ற நூல் தமிழருக்கு ஒரு பொக்கிசமாகும். ‘ஒருத்திக்கு ஒருவன்,  ஒருவனுக்கு ஒருத்தி’  என்ற தமிழர் தனித்துவமான கோட்பாட்டினைக் கைக்கொண்டால் தமிழர் வாழ்வியல், வாழ்வின் நோக்கம்,  குடும்ப ஒற்றுமை  மேலும்  மேம்படும் என்பது திண்ணம்.

wijey@talktalk.net