பதிவுகளில் அன்று: அம்மூடனார் பக்கம்! – முடமூளை அம்மூடனார் –

ammuudanar5.jpg - 10.85 Kb– ஏப்ரில் 2003  இதழ் 40 – டிசம்பர் 2003 ; இதழ் 48 வரை வெளியான பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த அம்மூடனார் பக்கத்தில் பிரசுரமான கவிதைகள் மற்றும் குறிப்புகள் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. –

 இந்தக்கிழமை -I: எமக்கானது / எம்மாலானது

குழம்பியிருக்கிறேன்
நிரம்ப, உட்குடம் நுரை ததும்பத் ததும்ப.
நிலையால், நிகழ்வால் நீங்காக்குழப்பம்;
மேலாய், எரிநாள் நெடுக்க, 
பேசியதை மீள மூளப் பேசவேண்டிய 
மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால்.
ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும், 
ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்;
“நான் குழம்பியிருக்கிறேன் – முக்கியமாய்
பேசப்படும் நான் பிம்பமில்லாதானானதினால்.”
இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய் 
தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே
உயிர்கொத்தியள்ளி, அதிர்கிறது சொத்திக்கூத்து.
கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும்
கறைக்கையைக் கோர்த்துக்கொண்டு
துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம்.
இடையிடையே எனதென்ற கடிதத்தில்
என்னைக் கொள்ளையடித்தவனுக்கும்
முகமிறுக்கி விட்டோம் முழுக்குத்தென
ஏராளமிட்டுக்கொண்டார் கையொப்பம் –
என் பெயரால், உன் பெயரால்
ஊரிருந்தார், உருவிறந்தார் 
நிழல் பெயர்ந்தார், நிலைபெயரார்
எல்லார் பெருகுதுயர் பெயராலும்.
அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி
அரசச்சு விளம்பரப்பொறி பரந்த தெரு அகல்சுவரில் 
மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி 
மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா, 
மெய் சொல்.
அவனிவன்மேல் ‘கொள்கைக்காரன்’, ‘கொள்ளைக்காரன்’


இந்தக்கிழமை -2:  அந்தகக்கவிக்கான அ(வை)வத்திரை

ammuudanar5.jpg - 10.85 Kbஅந்தகக்கவிக்கும் அரசனுக்கு மிடை அவிழ்
திரை தொங் கவை யென்றான வாழ்வறை;
எரியும் உலைகளும் எளிய மனிதரும் புரி 
நூல் திரிந்து கீற்றாய்ப் பொசிந்து புகை பரவ,
உருட்டி உருட்டி உண்கி றேனென் உணவை;
எண்ணெய்த்தேச எரிகொள்ளிக்கிடை 
பதுங்கிப் பருகுநீருக்கலை சிறுவர்
கண் தெரியும் பயத்தை, பசியை,
துரத்தித் தனக்குள் அமுக்கி,
எனக்குப் பிதுக்கும் படக்கருவி.
ஓலமும் உறுமலும் ஓருடல் கூறும்
அர்த்தநாரீஸ்வரம்;  அறைச்சுவர் 
அதிர்ந்து அனுங்கி அமுங்கும்;
அடக்கம், 
அடுத்த ஒப்பாரி வரை நிலைக்கும்.
அத்தனை ஆயுததாரிகளும்
பொய்யைப் மெல்லப் பிடியென்று 
அள்ளித் தருகிறார் அவல்; 
கிள்ளி மெல்ல மெல்ல, 
இன்னும் விரியுமாம்
குசேலர் தேசத்தே கூற்றுவன் நாட்டியம்.
உள்ள முத்திரை,
முழுதாய்த் தோற்றுமோ திரை?
என்னைவிட எவரேனும் கண்டீரா,
எரிந்த தெரியாதா தென் றிலா 
தெல்லாப் பிணங்களின் திறந்த கண்களும்
இ·தெதற்கென்று கேட்பதை?

தொடர்ந்து
தொலைந்த பருவப்பெண்களையும்
தொலையா நோய்க்கிருமியையும்கூடப்
பின்னுக்கு வன்மையாய்த் தள்ளிப் 
பொல்லாப்போரைத் துப்புதென்
தொலைக்காட்சி.

ஜன்னலின் பின்னால், 
கண்ணிருண்டு காயும் வெறுவானம்;
கீழ் உதரம் கனத் தரக்கி யரக்கி நகரும் கயர்மேகம்.
இரவு பகலின்றி
இடைவிடாது பருகிக்கொண்டிருக்கின்றேன்
என்னுடைய நீரையும் நீருக்கலைவார் துயரையும்.

எப்பொழுதும்போல, இப்பொழுதும்
ஆயுதங்கள் மட்டும் அழுத்தமாய்
நெறிச்சாத்திரங்கள் போதிக்கிறன

எல்லாச் சொற்களும் இவர்களுக்காய் நானே வகுத்தேன் 
என்ற (அ)மங்கலச்செய்திச்செவியுறுவீர் நீர் நாளை;
நீங்கள் நெறி வகுத்தீரென்றும் நானுந்தான்.
முகமில்லார் எம்பெயரால் 
இனியும் நடக்குமாம் முருங்கைமர ஏற்றம்.
எம்பங்காய் நம் கையை முறித்துக் கொள்வோம் வா
அழுகு கவிதையேனும் அழுகை பிழைத்துப் போகட்டும்
அடுத்த இயலு தலைமுறைக்கும் எஞ்சுகிற பூக்களுக்கும்.

ஏப்ரில் 2003  இதழ் 40 –


“கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி”

ammuudanar5.jpg - 10.85 Kbகணணித்திரையின் வலக்கீழ்மூலையிலே விண்டோஸ் மீடியா பிளேயரிலே, பாக்தாத்தின் மத்தியிலே சதாம் ஹ¤ஸேனின் ஒரு பிரமாண்டமான சிலையை அமெரிக்கப் போர்வீரர்களும் மக்களும் உடைக்கச் செய்யும் முயற்சியினை பிபிஸி-   உலகச் சேவையிலே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்திலே மக்கள் தாமாகவே உடைக்க முயற்சி செய்துகொண்டிருந்ததைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். திரையிலே தெரியாமல், எங்கோ தொலைவிலே இன்னும் இடைவிட்டுவிட்டு வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. பின்னால், அமெரிக்கப்போர்வீரர்கள் ஒரு கவசவண்டியின் உதவியோடு பெயர்க்க உதவுகிறார்கள். ஹ¤ஸேனின் கழுத்திலே கயிற்றைப் போட்டு, அவர் தலையை அமெரிக்கக்கொடியினாலே மூடினார்கள். பிபிஸியிலே இதுவரை வரவேற்பாகப் பேசிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த ஈராக்கியின் குரலிலே தடங்கலும் தொடர்ந்து அதிர்வும் தெரிகிறது; இப்போரின் ஆரம்பத்திலே உம்-கஸாரிலே அமெரிக்கக்கொடியினை ஏற்றியபோது இணையத்திலே வாசித்த ஆட்சேபத்துக்கு அவர் ஒலிவடிவம் கொடுக்கிறார். அவசரத்தவறை(?) உணர்ந்துகொண்ட அமெரிக்கர்கள் தம்கொடியைக் கீழிறக்கிவிட்டு, ஈராக்கியக்கொடியை ஏற்றுகிறார்கள். இப்போது ஹ¤ஸேனின் சிலை கவசவாகனத்தினாலே இழுத்துக் கவிழ்க்கப்பட, சுற்றி நிற்கும் மக்கள் (முற்றுமுற்றாக இளம் ஆண்கள்) குதித்தாடுகிறார்கள்; பிபிஸிலே பேசிக்கொடிருந்த புலம்பெயர்ந்த ஈராக்கியர் ஹஸன் கருத்துச் சொல்லமுடியாமல் மகிழ்ச்சியோடு அழுவதாகக் கூறி, ஒலிபரப்பாளர் (நிஷா பிள்ளை என்று நினைக்கிறேன்) மீண்டும் பாக்தாத்திலே நிருபர் ஒமரிடம் வர்ணனைக்குப் போக…..

….. எனக்கு 1987 இலே இலங்கையிலே இந்திய இராணுவம் கப்பலிலே வந்திறங்கிய போது, வாடகைக்கார் பிடித்து வரவேற்கப்போனவர்கள் சிலரின் நினைவும் அன்றிரவு என்னூரிலே தமிழிளைஞர்கள் நெடுங்காலத்துக்குப் பிறகு தெருக்களிலே கூட்டமாக ஏதோ தனிநாடு கிடைத்ததுபோல ஆர்ப்பாட்டமாகப் போனதும், இருவர் இலங்கை ஊர்காவற்படைச்சூட்டுக்கு இலக்காகி இறந்ததும், எல்லாவற்றுக்கும்மேலாக, அதைத் தொடர்ந்து வந்த மூன்றாண்டுகளும் ஞாபகத்துக்கு வருகிறன. சோமாலியாவும் இப்படித்தான் இருந்திருக்கக்கூடும். இவை இரண்டும்போலல்லாது எல்லாமே நல்லதுக்கென்றாகவும் கூடும். இப்போதைய நிலைமையை வைத்து எதையும் சொல்லலாமென்று தோன்றவில்லை.

ஆனால், இப்படியான நிகழ்வுகளால், வரலாறு ஏதும் பாடத்தை உலகுக்குக் கற்றுத்தந்திருக்கிறதாவென்றால், நிச்சயமாக இரண்டு உள்ளன; ஒன்று, வரலாறு எந்தளவு நிகழ்வுகளைப் பொருத்தி, எவ்வாறு, எவரால், எவருக்கு, எழுதப்படுகின்றது என்பது. பொதுவிலே நிகழ்காலத்தின் அழுத்தமும் உணர்வலையும் வரலாற்றினை உண்மைகளை எவ்வாறு மழுங்கடித்தோ, மறைத்தோ விடுகின்றது என்பது அடுத்ததாகும். இன்றைக்கு சதாம் ஹ¤ஸேனை அடித்து விழுத்திய அமெரிக்க அரசு (கூடவே, தன் பங்குக்கு முன்னைய சோவியத் இரஷியாவும்) கடந்தகாலத்திலே எந்த அளவுக்கு அவரைத் தக்கவைத்துக்கொள்ள வசதியாக இருந்திருக்கின்றது என்பதையும் ஈராக்கிய குர்திஷ்களின் நலத்தை இன்றைக்கு முன்வைக்கும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னாலே என்ன நிலைப்பாட்டோடு இருந்தன என்பதும் துருக்கி குர்தீஷ்கள் சம்பந்தமாக இன்றைக்கும் என்ன நிலைப்பாட்டிலே இருக்கின்றன என்பதும் பொதுவிலே உலக அளவிலே அறியப்பட்டவைதான்.

இடித்து விழுத்தியதிலிருந்து இனி எழப்போகும் ஈராக் இருந்ததை விட நல்லதேயென்றானால், சதாம் ஹ¤ஸேனை அகற்றியது நல்லதொரு விடயமென்பதிலே மறுப்பேதும் இருக்கமுடியாது. அமெரிக்காவிலும் உலக அளவிலும் இது நிச்சயமாக கணிசமான அளவு இந்தப் போருக்கெதிரான கூட்டணியினரிலே தனிப்பட்டவளவிலே புஷ்கூட்டுக்கு எதிரான பலரை வாயடைக்கவும் உடைந்துபோகவும் பயனாகும். தமது சொந்த அரசியற்காரணங்களுக்காக இப்போரை எதிர்த்த பிரான்ஸ், ஜெர்மனி, இரஷியா, சீனா போன்ற பல நாடுகளும் சிதறியதிலே தம் பங்குகளைப் பொறுக்கிக்கொள்ள அவசரக்கூட்டணி அமைத்துக்கொள்வதையும் காணப்போகின்றோம். கூடவே, எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்தியவாதமே காரணமெனும் எதிர்ப்பாளர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இதனை இயன்றளவு தங்களைப் பலப்படுத்தப் பயன்படுத்தப்போகின்றார்கள்.

ஆனால், ஏற்கனவே ஈரான், சிரியா, வட கொரியா என்று பட்டியல் தொடரப்படக் குரல் தொடங்கப்பட்ட நிலையும் அமெரிக்காவின் ‘வருமுன்காப்பான்’ தத்துவத்தை இஸ்ரேலும் (கணநேரத்துக்கு முன்னாலே வாசித்த ரோயட்டர், பாக்நியூஸ் செய்தியின்படி) இந்தியாவும் (பாக்கிஸ்தானும்) பயன்படுத்த விழைகின்ற நிலையும் உருவாகியிருக்கிறன. தவிர, வில்லியம் கிரிஸ்டல், இரிச்சட் பேர்ல், போல் உவுல்போவிட்ஸ் போன்ற அமெரிக்க புதுப்பழமைவாதிகளின் “பலத்தினால் மக்களாட்சி”த்தத்துவத்தின் நீட்சியும் உதிரி வருவிப்புகளும் பயமுறுத்துகின்றன. இப்படியான பின்புலத்திலே, ஈராக்குக்கு நடந்ததை (சோவியத் இரஷ்யா சார்பரசு கவிழ்ந்ததின்பின்னாலான ஆப்கானிய நிலை இங்கே ஏற்படாதென்று கொண்டால்) மட்டும் கீலமாக வெட்டியெடுத்து நல்லது-கெட்டதை உருப்பெருக்கிப் பார்க்கமுடியாது.

ஈராக்கின் பாத் ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் வெறுமனே இரண்டுவரி வரலாற்றுக்குறிப்புகள் மட்டுமே என்று நினைக்கிறேன்; எதற்காக இந்த எழுச்சியும் வீழ்ச்சியும் அமைந்தன என்பதே -வரலாறு ஏதும் பாடத்தை இனி வருவோருக்குக் கற்றுக்கொடுக்குமென்றால்- முக்கியமானதாகும். 
அமெரிக்கக்கூட்டணிக்கு இ•து இராணுவப்பலம்சார்ந்த வெற்றியென்பதிலே சந்தேகமில்லை; சொல்லப்போனால், ஆரம்பத்திலேயிருந்தே, ஏற்பட்டிருந்திருக்கக்கூடிய சேதத்தின் அளவு குறித்து விவாதங்களும் சந்தேகங்களுமிருந்தாலும், இந்த வெற்றி கிடைக்கும் என்பதிலே சந்தேகமிருக்கவில்லை. ஆனால், கருத்தார்ந்த ரீதியிலே இந்தப்போருக்கெதிரானவர்களின் நிலைப்பாட்டிலே இந்த வெற்றி ஏதும் கருத்து மாற்றத்தை ஏற்படுத்த அவசியமில்லை; மாற்றியிருக்கமுடியாது; மாற்றப்போவதுமில்லை. ஒரே திசையிலான இரு கோணல்கள் ஒரு நேர்கோட்டை என்றுமாக்கமுடியாது. நிச்சயமாக, அவர்களிலே சிலருக்கு ஏற்பட்டிருந்திருக்கக்கூடிய போரின் அழிவுகாரணமாக, அமெரிக்க மக்களிடையிடையே தம் அரசின் அணுகுமுறைக்கெதிராக எதிர்ப்பலை உருவாகி, போருக்கெதிராகவும் அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கெதிராகவும் திரும்புமென்று எண்ணமிருந்திருக்கக்கூடும். அந்த எண்ணம் தகர்ந்து, மேலும் அவர்கள் தம் கருத்தை மக்களிடையே பரப்ப உழைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருந்திருக்கலாம். ஆனால், எந்தவிதத்திலும், புதுப்பழமைவாதிகளின் அணுகுமுறைக்கெதிரான நிலைப்பாடு தொடர்பாகவும் இந்தப்போர் கொள்கையளவிலே நெறி பிறழ்ந்தது என்பதிலும் ஏதும் கருத்து மாற்றமேற்பட வாய்ப்பில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்தப் போருக்கான காரணம், பேரழிவுக்கான ஆயுதங்களை ஈராக் கொண்டிருக்கின்றது என்பதும் அவற்றைக் களைவதுமாகும். அதற்கெதிரான ஐக்கியநாடுகளின் பரிசோதனைக்கு அமெரிக்காவோ பிரித்தானியாவோ முழுமையாகக் கால அவகாசம் கொடுக்கவில்லை (போன கிழமை அமெரிக்கப் பிபிஎஸ் (PBS) தொலைக்காட்சியிலே, அமெரிக்காவுக்கான முன்னைய பிரித்தானியத்தூதுவர் 2001, செப்ரெம்பர் 11 இற்கு அடுத்தடுத்த நாட்களிலே எப்படியாக ஈராக்கிலே அமெரிக்க ஜனாதிபதி தாக்குதல் மேற்கொள்ளவேண்டுமென்று முனைந்தாரென்றும் அதை எவ்வாறு ரொனி பிளேயர் திருப்பி, ஆப்கானிலே இருக்கும் பயங்கரவாதிகளே முதலிலே கவனிக்கப்படவேண்டியவர்களென்று ஆக்கினார் என்றும் விபரித்தார்). பிறகு, ‘பேரழிவுக்கான ஆயுதங்கள்’ என்பது, ‘ஈராக்கிலே அரசுமாற்றம்’ என்றானது. இந்த உருமாற்றத்தை முன்வைத்து, தன் முன்னைய நிலைப்பாட்டை மாற்றியபோது பிளேயருக்கு எதிராகக் கிளம்பிய குரல்களையும் கவனத்திலே கொள்ளவேண்டும். இப்போது கிட்டத்தட்டப் போர் முடிந்துவிட்டது; இன்னும், பேரழிவுக்கான தடயங்கள் கிடைக்கவில்லை; சிரியாவிற்கு இடம் மாற்றப்பட்டிருக்கக்கூடுமென்ற அடுத்த யுத்தத்துக்கான அத்திவாரம்போடலும், ‘அங்கே, இங்கே’ என்ற வதந்திகளுமே பரவிக்கிடைக்கின்றன. அண்மைய சிஎன்என்/யுஎஸ்ருடே (CNN/USAToday) கருத்துக்கணிப்பு பெருமளவு அமெரிக்க மக்கள் பேரழிவுக்கெதிரான ஆயுதங்கள் ஈராக்கிலே இல்லாவிடினும்கூட, இந்தப்போர் நியாமென்றே கருதுவதாகச் சொல்கிறது. இன்னொரு புறத்திலே, கண்டெடுக்கப்பட்டு இரசாயன-உயிராயுதமென்று சந்தேகப்படும் மாதிரிகளையும் தாமே பரிசோதனை செய்வோமென்று ஐக்கியநாடுகளின் பரிசோதகர்களை அமெரிக்க அரசதிகாரிகள் தள்ளிவைத்துவிட்டார்கள். நிச்சயமாக, தற்போது அமெரிக்க உபஜனாதிபதியின் உரைக்குக் கிடைத்த கைதட்டுக்களும், இணையத்தின் ஒவ்வொரு வலைக்குறிப்புத்தளத்திலும் காணும் பெருமளவு அமெரிக்கர்களின் உணர்வலைகளும் ஈராக்கியர்களின் விடுதலை என்பதின்மேலாக, “அமெரிக்கர்கள் வென்றோம்” என்ற ஆங்காரத்தொனி நிறைந்தவைபோலவே தோன்றுகின்றன. ஆனால், உலகின் மிகுதியும் அமெரிக்காவிலேயே போருக்கெதிராகக் கொள்கையடிப்படையிலே கருத்தை முன்வைத்தவர்களும் அந்தப்பேரழிவு ஆயுதங்களுக்கான தடயங்களை எதிர்பார்க்கின்றார்கள் என்று சலூன் இணையச்சஞ்சிகை நேற்று எழுதியிருந்தது. ஆனால், போருக்கெதிராகக் குரல் எழுப்பதுவதே தேசத்துரோகம் என்ற விதத்திலே பார்க்கப்படும் நிலையிலும் ரிச்சர்ட் பேர்ல் போன்ற புதுப்பழமைவாதிகள் வெளிப்படையாகவே (அண்மையிலே இங்கிலாந்து கார்டியன் பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வியிலே) “ஐக்கியநாடுகள் சபை இறந்ததற்குக் கடவுளுக்கு நன்றி” என்று சொல்லும் கணத்திலும் ஒரு தனிப்பெரும் வல்லரசின் கீழே உலகம் இருக்கின்றது. எல்லாவற்றையும்விட வேடிக்கை, வழக்கமான நடைமுறையிலேயிருந்து விலகி, மதமும் அரசும் வேறாகியிருக்கவேண்டிய அமெரிக்காவின் கிறிஸ்துவ அடிப்படைவாதி ஜனாதிபதி, இஸ்லாமியமதச்சார்பு செறிந்த அரபுலகில் மதஞ்சாராச் சர்வாதிகாரிக்கெதிராக – பெருமளவு அரசியல்சாராக்கிறிஸ்துவர்களின் எதிர்ப்புக்கிடையே சிலுவையுத்ததுக்காகச் சென்றது.
இந்தப்போரின் அணுகுமுறையை ஆரம்பத்திலிருந்தே அவதானித்துப் பார்த்தால், அமெரிக்க-பிரித்தானிய கூட்டு முரண்நகையாக, -தமக்கெதிரானவர்களின் குரலை மழுங்கச்செய்வதிலாகட்டும், செய்தித்தாபனங்களை அழிப்பதிலாகட்டும்- சதாம் ஹ¤ஸேனினதும் பாத் கட்சியினதும் ஒரு விரிந்த வடிவமாகவே, சின்ன மீனை விழுங்கிய நடுத்தரமீனை விழுங்கும் பெரியமீனாகவே தோன்றுகிறது. இப்படியான ‘வல்லான் விதித்ததே நல்லது’ என்ற புதுப்பழமைவாதிகளின் அடிப்படைத்திட்டத்தை உலகத்தினர் – குறிப்பாக, இடஞ்சாய் அரசியல்-தாராளவாதிகள்- எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதே கேள்வியாகின்றது. 

இத்தனை ஈராக்கிய விடுதலை ஆரவாரத்திலும் அமுங்கிப்போயிருக்கின்றவற்றைப் பார்க்கிறேன்; நைஜீரிய, கொங்கோ ஜனநாயகக்குடியரசின் அவச்சாவுகளும் அமெரிக்கச்செய்தியூடகங்களின் தம்முதுகைத்தாமே தட்டிக்கொள்ளும் நடுநிலைமைத்தனமும். அதேநேரத்திலே, எங்கே தேசத்துரோகி என்று அடையாளமிடப்பட்டுவிடுவோமோ என்று பட்டதைப் பேசப்பயந்திருக்கும் அமெரிக்கர்களையும் (குறிப்பாக, கொலம்பியாப்பல்கலைக்கழகப் பேராசிரியர் டி ஜெனோவாவுக்கு ஏற்பட்ட எதிர்வினைக்குப்பின்னால்) நிறையவே காணக்கூடியதாக இருக்கின்றது; இத்தனைக்கும் மேலாக, ஈழத்தவனாக ஒரு விடயத்தை அவதானிக்கின்றேன்; தனி ஈழம் வேண்டுமென்று கருத்துள்ள ஈழத்தமிழர்களிலே இரண்டு விதமானவர்களும் இருக்கின்றார்கள்; குர்தீஷியர்களையும் ஈழத்தவர்களையும் சமதட்டிலே வைத்தும் இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்க ஜனாதிபதிக்கெதிரான, “நீர் மட்டும் ஈராக்குக்குப் பயங்கரவாததுக்கெதிராகப் போருக்குப் போகலாம்; நாங்கள் மட்டும் விடுதலைப்புலிகளோடு போரிடக்கூடாதோ?” கூற்று-கேள்வியை முன்வைத்தும், அமெரிக்காவுக்காதரவாகக் குரலெழுப்பி, அவர்களை எங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்பவர் ஒரு பக்கம்; கொள்கையடிப்படையிலே, இ•து அத்துமீறலும் அநியாயமும் என்ற வகையிலே ஆக்கிரமிப்பு எதிர்ப்புவாதத்தை முன்வைக்கின்றவர்கள் மற்றப்புறம். இப்படியான ‘பொருள்முதல்வாதத்துக்கும்’ ‘கருத்துமுதல்வாதத்துக்கும்’ இடையான கயிறிழுப்பிலேமட்டும் நான் “கருத்துமுதல்வாதிகள்’ பக்கம்;-)

மொத்தத்திலே தனிப்பட்ட அளவிலே எனக்கு இந்தப்போர், ஊடகங்கள் தொடர்பான தெளிவையும் கருத்தளவிலே எந்தளவிலே தெரிந்த உற்ற நண்பர்களோடு விலகிருக்கமுடியுமென்றும் கண்தெரியாமல் இணையத்தூடாகப் புனைபெயர் மட்டுமெ தெரிந்தவர்களோடு ஒற்றுமைப்படமுடியுமென்றும் அறிந்து அடுத்த நாளை எதிர்கொள்ளக்கூடிய நடைமுறைப்பக்குவத்தைத் தந்திருக்கின்றது

ஏப்ரில் 2003  இதழ் 40 –


விமானநிலையம்… 
 
ammuudanar5.jpg - 10.85 Kbநேற்றிரவே மூசி மூசி 
இருட்டு மூக்கு 
மூலைக்குள்ளும் முடிதேடி, 
முளை பிடுங்கி
ஆழ மழித்துப்போட்டேன் நான் 
நாலு நாள் (நெல்)நாற்றுத்தாடி.
விரல் மேவி வீரம் பேசாமல் 
கை நகங்கூட முழு
வீச்சாய் வெட்டிச்சாய்த்துச் 
சரி பார்த்தேன் சில நாழி,
உன்னைக் கேட்டு, பின்னால் 
அவளைக் கேட்டு.
கைச்சின்னப்பைக்குட் 
சதத்துச்சீப்புக்குக்கூடக்
கொன்னைப்பற்கொடுக்கு 
படக்கென்று முறித்துப் 
போட்டேனென்றால், 
பார். 
 
மொத்தமாய்ப் பார்த்தாற்கூட
பத்துக் கிலோத்தான் பொதிப்பாரம்.
புடைத்த சட்டைப்பைக்குள்
உடல் தடித்துக் கடவுச்சீட்டு, 
சிறிதும் பெரிதுமாய்ச் செறியச் சொருகி  
உறுப்பாய், ஊரலும் மரத்த அடையாளவட்டை.
 
இப்படியாய்,
என்னைப் பொறுத்தவரை 
எல்லாமே தம்மளவில்
இயல்பாய்த்தான் இருந்தனவாம்
-எண்ண மறந்த என்(னூர்) முகவெட்டைக் கண்ணில்
சந்தேகக்கண்ணி சடைத்தார் காணும்வரை.

ஜூலை 2003 இதழ் 43


பெயர்*  

ammuudanar5.jpg - 10.85 Kbஇரவின்றிப் பகலின்றி உனக்கின்றி எனக்கின்றி
எதிர்ப்பட்ட திசையெல்லாம் விரிந்து செல்லும் வெறுங்காற்று.
பட்ட உடலில், பக்கத்துப்பூவில், பாற்பிள்ளைச்சத்திக்குள்
நாசி பெற்ற பெயர் நசிந்துபோகிறது.
நீர்பட்ட நெடுங்கிழக்கோ நிலம் பரந்த நேர்தெற்கோ,
உந்தித் தள்ளி வளி உந்தப் போகிறது.
கிளை சுற்றித்தான் உலா – என்றாலும்,
காற்று~மரம் தொட்ட உறவில்
பெயர் ஒட்டிடமும் ஒடிவிடமும்
சட்டெனத் தெரிதலில்லை.

*(கல்யாண்ஜியின் வளையல் பூச்சி உரசிய பதிவு)

~10, ஜூலை ’03 13:14 மநிநே.


நீ வரும் வரைக்கும்
ammuudanar5.jpg - 10.85 Kbநாள் முழுக்கத் தூங்குகிறேன் – தூங்காநேரத்தில்
தூசு தட்டித் துடைத்துக்கொண்டிருக்கிறேன்
கணியை, பலகணியை, பத்தாண்டுப் பின்நினைவணியை.
அப்போதைப் போலத்தான் அகலாமல்
காலடியிற் கட்டிப்போட்ட குட்டிநாயாய் உறங்குது கொள்காலம்;
விதிரத் தவித்தெழ எப்போதேனும் வீரிடும் தொலைபேசி.
தாயில்லாப் பிள்ளையாய்த் தான் வளரும் வயசையும்
இடை முடிந்துக்கொண்ட இணைப்பையும் தவிர்த்துவிட
சுற்றி எதுவுமே சுற்றா வெம்மதியம், இப்போதும்
உடையும் குமிழாகும் உன் ஒரு சாவித்திருப்பலால்.

ஜூலை 2003 இதழ் 43


பாலியல்வதை  

திரும்பித் திரும்பத் தேர்ச்சில்லுட் செருகவும்
இத்திசை சாமி முலை எறிந்து எரியத் தினவு.
எண்ணிப்பார்த்தால், எண்ணெய்க்காப்பெல்லாம் கை
தடமிழுத்திழுத்துத் தனக்குடம் தடவிய கற்கருஞ்சிலை.
இந்திரியம் தித்தித்துத் திரியத் திரிய
தந்தம் முளைத்துத் தள்ளும் தாந்திரீகம்.
இறைவி குமரியானால், இதுதான் கஷ்டம்.
~17, ஜூலை ’03 14:07 மநிநே.

சுற்று

மழையைப் பற்றியே பேசி முடித்து அவிழ்த்துப் பேசினோம்
நான் அறுத்தால் அவன் தொடக்கம்;  அவன் அறுந்தால் என் துளிர்ப்பாம்.
ஆலங்கட்டி மழை பற்றி நானும் அதுபோல வேறொன்றை அவனும்.
ஆலங்கட்டியளவு அகட்டவொணா என் கை தொங்கிக் கருந்தோற்பை;
உள்ளொட்டி நனைந்திருக்குமோ கோப்பு? – அலைக்கும் மென்நடுக்கம் தலைக்குள்.
நூற்றாண்டு வெள்ளம் பற்றிச் சொன்னானாக்கும்
~பைத்தோல் வழுகி உட்கை குளிர்ந்தவன்~
சென்றாண்டுப் புயல் பற்றிச் சொன்னேனா பின்னே?
அடித்தள்ளிய அடைமழை அவசரத்தில் ~ ஆளாள் ~
நுழைந்த கதவால் தலை குனிந்தகலல்வரை,
மழையைச் சுற்றினோமென்றே சொன்னாலும் – ஆளுக்காள்
சொன்ன மனதைச் சுற்றினோமாக்கும்;
ஏற்றிக்கொண்டு எங்கும் சுற்றின
எம் ஓட்டி எதனைச் சுற்றினானோ?
14, ஜூலை ’03 20:27 மநிநே.

இயக்கம்

எனக்குச் சம்பந்தமிலாப் பங்குகளிற் தொங்குகிறதென் தொழில்
நான் தொழாத் தெய்வத்தின் பாழ்சந்நிதிக்குப் போகிறதென் வரி
என்னோடிணங்காப் பிறர் சுமத்திய அரசியல்வாதியென் குரல்
என்னையறியா எவரோ அனுப்புவதெல்லா மாகுமென் அஞ்சல்
என்னைத் தவிர இங்கே எல்லாமே இங்கெனக்கான இயக்கமானால்,
என்னாலானது என்னவென்றெண்ணியிருத்தலே இனி.


பகிர் பூட்டு  
ammuudanar5.jpg - 10.85 Kbநட்ட கிளை நாவல் இடறிச் சரிக்கவும்
வீசிப்பரவு குழல் குருதிபூசி முடிக்கவும்
வில்லங்கப்படுத்தும் பொழுதுக்குப் பதுங்கி
ஒரு நிறைகள்ளனைப் போல் நடக்கும்
வேளையும் எனக்குண்டு.
கழற்ற முடியாக் காலாணிபோல
அறுக்க அறுக்கவும் அடரத் தழைக்கும்
எனக்காகா நானும் என் வேலிக்குள்
எதிரும் புதிருமாய் தின்கோப்பை பகிர்வதுண்டு.
என்றாவது
எரியும் தணலை உள்ளங்கை பொத்தி
எடுத்தலைந்திருந்தால்,
உனக்கும் தெரிந்திருக்கலாம்:
“உள்ளவற்றுட் பொல்லாதது,
உனக்கே நீ பதுங்குவது”
ஆனாலும் சொல்லுவேன்:
“அவ்வப்போது முளைக்கும் 
அந்த அரிவாளுக்கப்பாலும் 
அகப்படாத்துண்டேனும் உண்டு, 
நான்.”

அக்டோபர் 2003 இதழ் 46


மார்கழி_02- தலைப்பிலி 1

ammuudanar5.jpg - 10.85 Kbநுனிநகம் பரபரத்துக் 
கிள்ளிப்போட்ட சொல்லோடு
துள்ளிக் குவியுது கூடை.
தேக்கிய தாகம் தீர்ந்தபின்
அள்ளக்கேட்பாரின்றி 
புல்லுக்கோடுது அமுதம்
-அவதி.
ஊற்று வழிய வழிய 
உளறி நடக்கிறது உட்பாதம்.
மழை சமயங்களில் விடேனென்று பெய்கிறது;
வேட்டைத்தினவு வேறெப்போதோதான் 
வீட்டுக்கு வருவேனெனத் திமிர்கிறது.
நடுவில்
மழை கரைத்த மொழியை 
அழுகாமற் பூப்பது யார்? 
13, டிசம்பர் 2002 வெள்ளி 
 
மார்கழி_02- தலைப்பிலி 2

முன்னமர்ந்து பேச, முழுதாய் வருவதில்லை;
திக்கிக்குழறும் கொத்து மழைக்குட்டைப்பேத்தை
எகிறித்தத்தும்; திரியும் எங்கெங்கும் திக்கு.
அழிந்த முடிச்சுகளை அள்ளிமுடியமுன்
தெறித்த குண்டுக்குக் கண்டதெல்லாம்
தெரு; பட்டதெல்லாம் குறி.
பாடல் முகிழ்குது பையப்பைய.
குறியும் தெருவும் அழிந்த மலைப்பனியில்
ஒழுக்கென்றோடுது உள்மந்தை.
போம் வழிக்குப் புரிகிறது பொன் பிறை.
நடக்கிறேன் நான்.
13, டிசம்பர் 2002 வெள்ளி

நவம்பர் 2003 இதழ் 47


குறையாய்ச் சேமித்த 
விடிகாலைக்கனவொன்றின் 
மீளெழு விம்பங்கள்!

ammuudanar5.jpg - 10.85 Kb

கீழ்க்காணுகூற்றுக்களுடன் ஆஇங்கே தொடங்கும்
ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆவணமிடுகை;
ஆவணமிடுமை….
        ஓர் ஊதாகடந்த இரைச்சலூறு
        விந்துக்கறைபடி நிர்வாணப்படிமங்களின்,
        ஆதன் முன்னே சுவைத்திருக்காக் கனியொன்றின்
        வடிகட்டா நறுமணத்து உள்ளிழுப்பின்,
        அலைச்சலுறுத்து அவலச்சூழல் நிறமூட்டு சமிச்ஞைகளின்
        இளைத்த எதிரொலிதன் இழைப்பட்ட பிசிறுகளின்,
தொகுத்த அதிகாலைக்கனவுகளின் ஆவணமிடுகை.
 
“தொலைந்தவை காரணங்களும் நேர்கோட்டு ஏரண ஆயக்கங்களும்;
 கைவிடாமற் தொடரும் காலைக்கனவின் முயல்வெல்லாம், 
 கற்றுக்கொண்டது என்
 அரையுணர்நிலை ஊமத்த உன்மத்த ஆட்டங்களும்
 சென்றகால தனிப்பேச்சு எதிரொலிப்பும்”
 
காலைக்கனவுகள்,
ஒரு தொகுதி உடைந்த வண்ணவாடி மதுக்குவளைத்தூள்கள் ஆக்கும்
வன்னக்குழாய் வடிவங்கள்; அவை அமைப்படுக்கில் ஒழுக்குண்டு; 
ஆனாலும், மாயத்தோற்றங்கள்; விளக்கத்தை வெகுவாய் விலக்குபவை;
விஞ்ஞான வரைப்புக்குத் வெளியே தப்பியவை; 
கூடவே, ஒழுங்கான பெயரீடுகட்கும் தம்மை ஒப்புக்கொடுக்காதவை..
 
நானொரு தன்முனைப் பினிக்கும் சொந்த இராச்சியத்துக் காலவேட்டுச்சுவடிகளின் 
நாளாந்த நடப்புத்தேடியும் ஓயாத் தொகுப்பாளனும் ஆனதோர் மேலான உத்தியோகி.
 
சூடான மூளைக்கலத்துச் சீராகா எரியூட்டியின்
நாளேதும் ஓயா நனைஎண்ணத்தின் எதேச்சைப்புணர்வுகள்
நினைவுப்பதிவிட்ட நீலநெருப்புச்சுவாசத்துக் காட்டோட்டம்,
என் கனவுக்கோப்பின் கதைகள்;
பெய்கை, தொகுப்பு, நிரம்பல், ஆவிபடல், பதங்கமுறல்…
— உணர்வுக்குழப்பம் கருக்கு, ஒரு முற்றிய காட்டுத்தன சுற்றுச்செய்கை. 
 
காற்றுடைக்கும் பட்டுத்துகிலின்கீழ் அவள் முகத்தைத் தொட்டேன்.
புலப்படா அவள் விழியிருந் தோடும் புனல், 
வெட்டுண்டு, அரையுண்டு, களிகொண்டு, ஒட்டுண்டு, உருண்டோடு
மஞ்சள்நிலாக்குழம்பின் ஒரு பெருக்கல்விருத்தி,
அவள் வதனக்கண்ணீர்.
சுழிக்காற்றும் பெருமழையும் காயப்படுத்து, 
இரு பொய்கைமுலைச்சுழலில் அலையும்
குழம்பு, என் கையில் நனையும்
 
தள்ளலும் இழுத்தலுமாய் நகரும் என் இடக்கால்,
அவள் கனவில் வழுக்குறு மென் தொடையிடை மெதுவே.
பேரலை நீளத்தே பரவிக் கசியும், ஒரு தாளா மென்சுகந்தச் சக்தி.
இக்கணத்தே என்னுள்ளே எண்ணிக்கொள்வேனாம் நான்,
இ•தொரு என்றுமே பகுத்தறியா முடிவிலிச் சங்கிலிச்சேதனச்சேர்வையுட்
தன்னாலெழு மூலக்கூற்றுக்காத்தாடி விடும் செய்கையென்று
 
பின்னொரு குருட்டுச்செவிட்டுப் பேருவகை உச்சத்துச் சந்திப்பில்,
மிச்சமிரு நனவுச்சட்டங்கள், கனவுப்படை முகிழ்க்கும் குமிழ்களிடை
படுத்துக் கிடக்கும் இருட்டு வெனிஸியன்படங்கு வெடிக்கும்; 
தானே தனை முறித்துப் பறக்கும்.
 
கனவின் தொடர் தாக்கம் முற்றுமாய் விலங்குப்படும்.
ஓரலையும் பகுத்தறிவு விலங்கின் 
காரணப் பொருமற்பொங்கல்கள்
சுத்தமாய் மறைந்தன.
 
தேங்குகூட்டிற்குமப்பால் அனலும் சூரியன் நோக்கிய சிறு குருகின் முதற்பறப்பாய்
நான் விடுதலித்தேன்; மிதந்தேன் வெளியில்.
அத்தகுசிறு புலனொழி கணத்தே,
ஆரையறு வானும் அளவெல்லை அல்ல,
ஆக என் ஆரம்பச்சிறகடிப்பின் ஓர் அடிதாழ்புள்ளியே.
வரையுறா உருவிலிக் காற்றுப்பொருளொன்றின்
மேலுதைப்புவிசையிடையே அவசரத்தே தின்னப்பட்டது 
அச்சிறு புவியீர்ப்பு ஆழுவை.
 
இந்தவெளி ஆட்சியுட் தொலைந்தது, வேறொரு பரிமாணத்தே கரை சேர்ந்துற்றது.

டிசம்பர் 2003 இதழ் 48
************************