பதிவுகளில் அன்று: இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த ‘சே’ குவேரா) கவிதைகள்!

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –

இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா)எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை என இவரது இலக்கியபங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. சித்தார்த்த ‘சே’ குவேரா, சிசேகு, ரமணிதரன் போன்ற பெயர்களில் இவர் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதிய கவிதைகள் இவை. இவரது கவிதைகளின் மொழி சொற்களைக் கையாள்வதில் தனித்துவம் வாய்ந்தது. இவரது இன்னுமொரு பெயர் எனக்கு மிகவும் பிடித்த புனைபெயர்களிலொன்று. ‘திண்ணைதூங்கி’ என்னும் புனைபெயரில் இணையத்தில், இணைய இதழ்களில் இவர் விவாதங்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கின்றார்.  சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகள் பலவற்றை இவர் திண்ணைதூங்கி என்னும் பெயரில் பதிவு செய்திருக்கின்றார். பதிவுகள் இணைய இதழின் விவாதங்களிலும் (ஆரம்ப காலகட்டத்தில்) இவர் கலந்துகொண்டிருக்கின்றார். விவாதத்தளத்தை நிர்வகித்தவர்களில்  இவருமொருவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். பதிவுகள் மூலம் எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில் இவருமொருவர். – பதிவுகள் – –


1.

பதிவுகள் தை 2001   இதழ்-13
சித்தார்த்த ‘சே’ குவேராவின் (அ)கவிதைகள்

பழைய தெருவுக்கு மீண்டும் தயிருடன்
கூவிக்கொண்டு வருகின்றான் இடையன்.

கடையக் கடைய வழிந்த வெண்ணெயைத்
தொலைத்தபின்னால், முன்னர் மீந்த தயிரை
பின்னும்
இன்னும்
விற்றுப் பிழைக்கும் கலைஞன்.

தெரு தூங்கிக்கிடக்கின்றது கிடையாய்க் கைவிரித்து,
அடித்தோய்ந்து தூங்கிய அரவச்சாட்டையாய்
செட்டைச்செதில் உதிர்த்தும் உரிக்காமலும்.

மேலே விரலொட்ட வொட்ட விற்றுப் போவான்,
புளி சொட்டிக் கண் சுருக்கும் தயிர் – இடையன்.

வீதிக்கு, வீட்டுக்கு விலைப்படுகின்றபோதும்
இவனுக்கு எண்ணமோ, இன்னும்
கடையச் சடைத்துத் தொலைந்த
கட்டி வெண்ணெயில்.

காலமும்கூடக் கடவாய் கசியக்கசியப்
புசிக்கும்
வெண்ணெய்.

2.
விரல்கள் மட்டுமே இருக்கின்றவர்களுக்கு,
சொற்கள் மட்டுமே தேறும்.
கோர்த்த சொற்களைக் குலைத்து,
குலுக்கிப் போட்டு மீட்டுக் கோர்த்தாலும்
சேர்ப்பது விரல்கள் மட்டுமே என்றானால்,
சொற்கள் மட்டுமே குவியற்கற்களாய்த் தேறும்.

விற்காத சொற்களையும் வினையாத விரல்களையும்
வீணுக்கு வைத்துக்கொண்டு விளைமீனுக்காய்க்
காத்திருக்கும் கொக்கொன்றினது எனது கால்.

3.
இறந்தபின்,
எனது கடிகாரத்தை முறித்துவிடு
காலம் கடந்தபின் அ·துனக்குக் காட்டப்போவது,
நிழல்களுக்கு மட்டும் நினைவு படரும் நேரங்களை
என்றாகக்கூடும் என்று புரிந்து கொள்கின்றேன்.

நான் கடந்து போனபின்,
காற்தடயங்களை மணலுட் புதைத்துவிடு.
அந்த அடிகளிற் தொலைந்த மணலையெண்ணி
திசையை மறுக்கக்கூடும் என் தேசத்தை
எண்ணிப்பார்க்கமுடிகின்றது எனக்குள் இப்போது.

முடிந்துபோனபின்,
என் முகத்திரையைக் கிழித்துவிடு.
உள்ளுக்குள்ளொரு முகமில்லை,
உறைந்த குருதியும் நிணமும் சதையுமே
உருகி வழியக்கிடந்தது ஒவ்வொருவர்போலவும்
என்று உலகறியக்கூடட்டும் என்றென் விழைவு.

என் முடிவு மூச்சுக்காற்றை
வெளியிலே கலந்ததற்காகக்கூட
கவலைப்படுகின்ற நாட்டார் வாழக்கூடுமானால்மட்டும்,
என் பெயரால் அவர்க்கு உரத்துச் சொல் ஒரு கூற்று,
“கட்டின்றி களிப்பில் புடைத்து அலையும் பொருள்
புவிமேலே என் அடிக்காற்று.”

தேசக்காற்றையும்கூட திசைபற்றித் திருப்பி
இழுத்திறுக்கிக் கட்டவிரும்புகின்றவர்களுக்காக,
நீயும் நானும் கவலைப்படமுடியாது காதலி.

4.
மரணச்சாலைக்கு முன்னால் நிற்கும்
மணிக்கூட்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு.

ஓய்ந்துபோனவர்கள் நிமித்தம்
உள்வாய் கைபொத்தி உறைந்து
கிடக்கும் மரணக்கூட்டு இருட்டில்
ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு மணிக்கூண்டினைப் பற்றி
நான் எண்ணிக்கொள்வதுண்டு

இல்லாமையைத் தேக்கி நிற்கும் நிலத்திலே
இருப்பில் நிலைத்துப்போன நசிகாலநினைவு,
தனித்திழுத்து ஓசை உச்சந்தலையிடிக்க-
பகைவர்கூட்டத்தின் முன்னர்,
ஒற்றையாளாய் வாளை ஓங்கிக்கொண்ட
ஒரு வீரனின் உயிர்த்துடிப்பாய்
– எண்ணிக்கொண்டதுண்டு
அந்த மணிக்கூண்டை.

வாளெடுத்துப் பொருதும்
வீரர்களும் வயதேறிச்
சாவது வியப்பல்ல.

செத்தபின்னும் சில
சீவிப்பதும் அதுபோல.

5.
தொலைவில் நகர்கின்ற புகையிரத்தின் சாளரக்கரையிருக்கும்
பயணிக்குத் தோன்றும் எண்ணங்களைப் பற்றி
என்னிடம் எத்தனை முறை கேட்டிருப்பாய்?

கேட்கின்றபோதிலே, அவன் மனைவியைப் பற்றி,
அவள் குழந்தையைப் பற்றி, அவர் வேலையைப் பற்றி
எதையெதையோ பற்றி என்று சொல்லிக்கொண்டிருக்க
எனக்குத் தெரிந்திருந்து பற்றி என்றைக்கும்
இரதம் கடந்த அடுத்த கணங்களிலே
எண்ணிக்கொண்டதில்லை நான்.

நகரும் புகையிரதத்துக் கரையில் நான் இருக்கையிலே
“என்ன எண்ணுகின்றேன் என்கின்றாய்?” இன்றைக்கும் நீ.
நடைபாதையிலே அவளோடு நகரும் அந்த அவன்
என்ன எண்ணிக்கொண்டிருப்பான் என்றுமட்டும்தான்
எனக்கு எண்ணத்தோன்றுகின்றதென்றதைச் சொன்னால்,
என்ன எண்ணிக்கொள்வாய் நீ?

6.
ஒரு கறிவேப்பிலைச்செடியாகப்
நான் உனக்குப் பிறந்துவிட்டதற்காய்
நீ மட்டும்தான் அழுதுகொண்டிருக்கின்றாய்
என்று எண்ணிவிடாதே அம்மா!
நானும் கூடத்தான் தூரத்திலும்கூட
அறையை அவதானமாய்ச் சாத்திவிட்டபின்னர்.

ஊற்ற ஊற்ற துளிர் ஊறாது உற்றுப்போவேன்
என்று பார்த்து, காத்து, பொத்தி முளைக்கு
முலை புகுத்திச் சொட்டுச் சொட்டாய்
உயிர் பருக்கிய மொட்டுக்காலங்களை
நீ எனக்கு சொல்லிக்காட்டப்போவதில்லை
என்றபோதும் தட்டிக்கொண்டேன் இருக்கின்றது
என் நடையொற்றிலும் தடுமாற்றத்தடை.

சடைத்து மணத்துக்கொள்ளமுன்,
உடைத்துச் சிதைத்துப் போனவைக்கும்
தப்பிக் கிடந்து முளைத்து கிளைபெருக்கிச்
சுற்றிக்குட்டி தழைத்துப் போன நேரத்திலும்
அடித்துக்கொள்கின்றது இவர்கள் பறிக்கின்ற
ஒவ்வாரு குருத்திஇலைக்கும் அடிக்குறியென்றால்,
மரத்தை, முடிவாய்த் தொலைத்ததுபோல, காலத்
தொலைக்கு தத்துக்கொடுத்த அம்மா, நினைவில்
அடித்துமட்டுமோ கொள்ளும் உன் அகம்?

7.
காலைப்பொழுதில் உருமாறு மீள்வட்டச்செய்கை.

எழுதிய களிமண்பலகை இளக்கிப் பிசைந்து
பிதுக்கிச் சமைத்த எழுதுபலகை.

உருக்கிய இரும்பை கரியுடன் பிணைத்து
உருக்கி உருக்கித் தின்ற உடலின் தொழில்.

தினவட்டத்துள் சலித்துப் புழுக்கும் சிந்தனைகள்;
தின்று மடிந்து மடிந்ததைத் தின்று பிறந்து வளர்ந்து
தின்னவேதுமின்றி இறந்ததைத்தின்று பிறந்து
தினவட்டத்துள் புழுத்துச் சலித்து கலித்துகொட்டும்
சிந்தனைகளும் செயலும் ஒன்றையொன்று வெறுத்திருக்கும்.

பிசையமுடியாப் பிண்டப்பண்டமானபோது,
உருக்க ஒழுகா தடித்த முண்டமானபோது,
உருக்கும் களியும் உருகிக் கழியும்.

ஒரு மாலைப்பொழுதில்,
ஓய்ந்துபோய் முற்றுப் பெறும்
மீள்வட்டச் செதில்.

8.
உருவிக்கொள்ளும் தீ பரவித் திரியும்
எரியும் கொள்ளி தேடி.

இறந்த எலிகளுக்கு உயிர்மீள வரம் தருகின்றோம்
எனக்கூவும் பாசிகளின் மேலாகப் படரும்
பாசிசாயத்தாள் நீலமும் செம்மையும்
மாறி மாறிப் படர.

இருக்கின்ற புறாக்களுக்கு ஒரு கரண்டி நீர் வார்க்கமுடியாதவர்கள் ,
இறந்த உடல்களைக் கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள்,
உயிர்கொடுத்து நடத்தி நாடகம் ஆட்டப் பாவையாக்க.
மரங்களை அறுத்துக்கட்டிய மண்டபத்திலே
வனங்களை வளர்ப்பது பற்றிப் பாடம் நடத்துக்கின்றோம்.

என்னை மூட்டைப்பூச்சிக்குள் முளைக்கவைத்தவனையிட்டும்
இன்றைக்கு நான் கவலைப்படுக்கின்றேன்.
மூட்டைப்பூச்சிகளைப் பற்றி மெத்தைகளோ மனிதனோ
கலைப்படாதது பற்றி நான் கவலைப்படமுடியாது,
அவற்றைப் படைத்திருக்கக்கூடிய அவனே
கவலைப்படாதபோது.

மரங்களும் மூட்டைப்பூச்சிகளும் ஏதோ காராணத்துக்காக
தோல் எரிந்தோ அறுந்தோ உரிந்தோ போகலாம்.
காரணங்கள் தாமாக இருக்கின்றவையல்ல,
திரிந்தலைந்து தேடிக் கண்டு தரப்படுகின்றவை.

எலிகள் உயிர்க்க, இறந்துபோம் மூட்டைப்பூச்சிகள்.

 


9.
பதிவுகள் ஆனி 2000   இதழ்-6
அப்பா –   சித்தார்த்த ‘சே’ குவேரா

நீண்ட காலத்தின்பின்
நேற்று அண்ணாந்து
வானம் பார்த்தேன்.

நடு விரலிடை வைத்து
வாய் அகல் V ஆக வளைத்த
நீள்கோடொன்றில் இருப்பதுபோலக்
கிடந்தன இன்றும் அம்மூவுடுக்கள்.
ஆயினும், அப்பா,
நீங்கள் சொன்னதுபோல்,
அவை பின்னாய்,
வானில் இருந்து
ஏது விமானங்களும் இறங்கவில்லை;
விண்ணவர் பெயரில்
வெள்ளிக்கிரகவாசிகளும்
மினுங்கவில்லை.
ஆனால், அவற்றிடை
மங்கிக் கிடந்தது
ம(¨)றந்துபோன
ஒரு முகம்.

மறந்துபோன
பௌதீக இரசாயனச் சூத்திரங்கள்,
ஊக்கி, வெப்பவுள்ளுறை, மாற்றீடு
தேவையின்றி வீதிச்சந்துகளில்
ஊக்காமலே மாற்றீடற்ற
வெப்பம் உள்ளுறை சுடுநீர்க்கிணறென
ஞாபகத்திற்கு வந்திருந்தன.

கூடவே,
வீட்டோரக்குப்பைத்தொட்டி அருகே
குவிந்திருந்த பச்சைமேனிப்புல்லுக்கெல்லாம்
தாவரவியற் பெயர் தேடிக் களைத்திருந்தேன்.
அந்தமுகமும் அதற்குரிய மனிதர் பெயரும்
அதனோடான என் உறவும் மட்டுமே
நினைவுத் துண்டு துண்டாய்
ஞாபகத்திற்கு வந்து விழுந்தன.
துளியாய்க் கீழ் இமையிற்
சில கணம் தொங்கியன.

கடல் நண்டு,
கரை மண் மேல் நின்றுபிடிப்பதும்
நினைவில் எழுந்தது.
அதைக் கூட
மணற் குன்றில் எழுப்பிய
கோட்டையுடன் சேர்த்துக்
கால அலை
கொடூரமாய்க் கொன்று தின்றது.
அன்று
நீங்கள் சொன்னதுபோல்,
என்னை விஞ்சிய
இயற்கையை அஞ்சி
இன்றும் நின்றேன்
நான் மட்டும்,
தனியே இங்கு மிஞ்சி.

தொலைவு நகர்ந்தபோதும்,
என் மேய்ச்சலுக்கான நிலம்,
நூல்நிலையம்,
பழைய நூற்கடை என்றாகிப்
போயிருக்கக் கேட்டீர்கள்.
நூற்கடையில் நேற்று நிற்கையிலே
கூட நின்று கூர்மூக்குள்ள நிழலொன்று நெய்திருந்தது,
நெஞ்சில் நெகிழ் ஆடையொன்று,
முன்னை நினைவெல்லாம்
நெய் ஊசி முனை என் உள்ளம் தைத்திருக்க.
“தூய காரணங்கள்” என்னுட் தோற்கக்கண்டேன்;
துவண்டேன், மீளொரு பையெடுத்து
சனி காலை, சித்திரக்கதைகளும்
சின்ரல்லாச் செருப்புக்களும் உள்நுழைத்து
துவிச்சக்கரவண்டியிலே பின் இருக்க
அவதியிற் துள்ளிக் கிடந்த
ஒரு பையன் நொய்மனத்தே,
நேற்று ஒரு நாள்
பெற்றவன்
அருகே சுற்றி இராக்
குற்றம் தந்த வெப்பம் உட்பிறக்க.

காற்றில் கரியாய்க் கலந்து பாதி,
மீதி கடல் அலையில் கரைந்து ஒளியும்
என்றாகி இயற்கை,
கொடிதாய்ச் சாற்றும் மொழியாப் போனபோதும், போட்ட
நாற்று வளரும் என் நினைவில், செயலில்,
கொடி பந்தலாய்ப் பரவி, மேலும் விதை
போட்டு முளைக்கும் இன்னும் பல பந்தல்
பிறர்க்கு நிழல் பார்த்துக் காத்திருக்க.
அது எண்ணி,
ஊருக்கு உத்தமனாய் வாழ்தலுக்குப் பக்குவம் அற்றாலும்
ஒரு மனிதன் மனம் உணரும் சக மனிதனென
இதுவரை நாள் நிலை தடுமாறா
நேர்கோட்டுப் பாதையிலே நின்றகலா
நிழலாய் நின்று வழிகூட வந்ததற்கு
நன்றிகளுடன்
நான்.


10.

பதிவுகள் செப்டெம்பர் 2001  இதழ் 21
வகிட்டுக்கோல்  – சிசேகு-

இதுவரை நாள் என்ன செய்தேனென்று
இனியாவது என்னைக் கேள்;
எங்கே என்பதையும் கூட,
இனி வரும் ஒரு கணம்
அறுத்துறுத்து
என்னிடம் வருத்திக் கேள்.

சுடுநீர் கொட்டுமொரு வேளை,
குளியற்றொட்டி நீர்த்துளை மூடும்
கற்றை உச்சந்தலைமயிர்
உதிர்வை ஒரு வசவிட்டுச் சபிக்கமுன்
என்ன செய்தேன் என்பதை

எதிர்த்துக் கேள்
என்முகம் முன்னே.
பெருங்கடலைக் கரமடங்கு பையுக்குட் பொத்தி வைத்தலைவிட்டு,
தேங்கிய ஆறுகளில் வெகுதீவிரமாய், நீளக்கை உராய்ந்து காந்திட
வீண் புண்கோடுகளை இழுத்துக்கொண்டலைந்தேன்
இருபுறமும் சங்கிலியாய்.

சரிவுருளும் வளையத்துள் எதிர்ப்புறமாய்
உடலினிலே ஒளிக்கவும் ஒன்றுமின்றி
உலுப்பியுலுக்கி ஓடித்திரிந்திருந்தேன்;
காற்றைச் சாடுதலைக் கை வீசோலைக்கீற்றொலியில்,
தனித்துக் களித்திருந்தேன் அகத்துள்ளே நான்.

இயலுமன்றால், இனி இங்கே என்னிடம் ஊர்ந்து வா.
இறந்த காலம் பற்றி எதையும் சொல்லக் காத்திருப்பேன்
திறந்த மனதுடன் நான் – தேவையென உனக்குப் பட்டால்.

ஆனால், நெரிந்த புருவத்தை நீட்டி நேராக்கி,
சென்றகாலத்தைக் கந்து பிரிக்கச்சொன்ன
வகிட்டுக்கோல் கை வசப்பட்டு வருதற்காய்
என்ன எண்ணினேன் என்று மட்டும் கேளாதே.

தடித்த இடி தொடுத்துப்படரமுன் வால் வெட்டித்துடித்து
வீச்சுமின்னல் பாய்ச்சல் ஒளிக்கமுன்னர்
அதன் தடிப்பம் வளப்பம் பிடித்துக் குறிக்கச்சொன்னால்,
என்ன செய்வாய் என்று மட்டும் கேட்டுக்கொள் உன்னை
– எனக்கொரு சொடுக்கு வகிட்டுக்கோல்
சொக்க வாலாயப்பட்டதை நினைக்கும்போதெல்லாம்.

மீதிப்பட,
துறந்த காலம் பற்றி எதையும் திறந்து சொல்லக் காத்திருப்பேன்
பரந்த உளக்களத்துடன் நான் – தேவையென உனக்குப் பட்டால்.


11.

பதிவுகள் ஜூலை 2001   இதழ்-19
கிளிப்போர்வீரன்  -சி’சே’கு-

காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.

மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.

தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.

இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.

வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.

தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.

எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.

இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?

“அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா”
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?

தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.

“கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி தண்ணீர்ச்சுனை
கண்டால்,கொண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?”
என்று கேட்டேன்.
பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.


12.

பதிவுகள் டிஸம்பர் 2001  இதழ் 24 
சித்தார்த்த ‘சே’ குவேரா கவிதைகள்

வழுப்படு தலைப்பிலி-I

என்ன சொல்லக்கூடும்?
ஏற்கனவே தெரிந்ததுதான்…
இதற்குத்தானா?
இவ்வளவுதானா?
என்ன செய்யக்கூடும்?
எதுவுமில்லை.
இம்மியளவும் அசையவில்லை,
காற்புல்லும் கைவிரலும்.
என்றாலும் வெளியே
சொல்லிக்கொள்ளமுடியாததென்னவோ,
இழந்த நாளும் இரைந்த எண்ணமும்தான்.
விக்கிரமாதித்தன் தோளிலே ….
….. வேறென்ன?
தோல் திரும்பிப்போட்ட ஆரம்ப வேதாளம்.
அதே!

வழுப்படு தலைப்பிலி -II

அவரவர் வாசலிலே சுடுமரணம் நிற்கிறது.
விரல்களைப் பற்றி விபரித்துக்கொண்டிருக்கிறேன்.
நகக்கண்ணிலே முளைக்கக்கூடிய பருப்புத்தாவரத்தைப் பற்றிய
நொண்டிப்பாட்டாக இருக்கிறது எனது மொழி.
கவரப்பட்டவை பற்றியும் பேசுகிறோம்;
கவர்ந்தவை பற்றியும் கலந்தாலோசிக்கிறோம்.
கொடுமரணம் மெல்ல நிழலுக்குள் முகம் புதைத்து நிற்கிறது.
எல்லாருடைய பெயருக்கும் எழுமூலம் குறித்துக்கொண்டிருக்கிறேன்;
என்னிடம் ஏனென்று கேட்கக்கூடாது –
ஆனால்,ஏற்கனவே இன்னார் இன்னாரென எல்லாம் எழுதியாகிவிட்டது.
மரணம், மதியத்துப்பள்ளிக்கூடப்பிள்ளைகள்போல,
தெருமதிலுக்குப் முன்னாலும் பின்னாலும் முகத்தையும் முதுகையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறது.
இன்னும் கரைந்து கொண்டிருக்கிறது நேரம்,
சீனி திகட்டத்திகட்ட தேநீர் புகட்டிக்கொண்டு
பேசிக்கொண்டிருக்கின்றோம்
பெருமிதம் பிடுங்கியடுத்த பெரும் பழங்கதை.
மடக்கமுடியாமல் மரணம் தன் மனத்தோடு ல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது.
“எல்லா அத்தியாயங்களும் எப்போதோ எழுதிமுடித்தாகிவிட்டது”
என்று நகர்கின்ற தெருவிலே படரும் யாரோ சொல்லிக்கேட்கிறது.
நாமோ விடுவதாயில்லை விரல்களின் வீரப்பிரதாபங்களின் விபரிப்பை.
செவிக்குள் ஊதுகிறது வெண்சங்கு; சேமக்கலம் சாபம்போட்டதுபோல் சத்தம்.
தருணம் பார்த்து மரணம் தட்டும் முன்வாயில்…..
….. நீ திறக்கிறாயா,
இல்லை,
நான்தான் போகவேண்டுமா?

வழுப்படு தலைப்பிலி -III

எல்லாம் முடிந்தபின்னால்,
கால்களில் நீர் உரசிக்கொண்டோம்;
கைகளைக் கழுவிக்கொண்டோம்.
நகரும் போது நரம்பிலே நன்னியது கொக்கி
சேற்றிலே நனைத்துக்கொள்ளவா பிறந்தன கைகள்?
காற்றைக் கிழித்துக் கரிக்கோட்டைக் கீறிக்கொண்டாலும்,
கலங்கத்தான் செய்கிறது….
மூளியுருவைக் கீறிக் கெட்டது புல்வெளி;
மழுங்குரு உடல் கெளித்தது விழி, கோணியது வாய்.
படைத்த பாவம் புடைத்துப் பருத்து விடை கேட்டு
நகர்ந்தது அலைபாதம்தொட்டுப் பின்னால் நாயாய்
ஒயிலை மழுக்கவா பிறந்தன கரிகிறுக்கும் விரல்கள்?
ஒதுக்கப்பட்ட ஓலைக்கப்பாலான அகல்வெளியில்
தவிர்க்கப்பட்ட மனைகளையும் வரியப்பட்ட வேலிகளையும்
நினைத்தும் உடைத்தும் போன தடங்கள் தளராது; தாளப்பட்டுக் கேட்கும்
விலக்கப்பட்ட நிலங்களை மிதிக்கவா பிறந்தன பாதங்கள்?
எல்லாம் முடிந்தபின்னால்,
இரைத்திறைத்து எல்லாவற்றையும்தான் கழுவிக்கொண்டோம் என்றுதான் பட்டது
இவ்வளவும் எதற்கென்ற எண்ணத்தைத்தவிரவோ??

வழுப்படு தலைப்பிலி – IV

கடக்கும் ஒவ்வொரு நகரத்திலும்
அதே கதையை முகங்கள் பேசிக்கொண்டு நகர்கிறன.
என்ன,
வேகம்தான் நத்தையா நண்டா நரியா என்று திக்குத்திக்காய் தத்தும்..
முகங்களின் கதையேனோ முற்றுமே ஒன்றுதான.
நாடகப்படியொன்றை நாலு குழுக்கள் நடித்ததுபோல,
படிமங்கள் தடித்து கலைந்தலையும் தனித்தனியே
தமக்கான முகங்களின் கட்குழி தேடி….
கதையேதோ அதுவேதான்.
உதிர்க்கும் சிரிப்பு சொல்லும் கதையை
ரௌத்திரம் உதிர்க்கச்சொல்லும்போதும்
தனிப்படத் தன்னைக் காட்டிக்கொள்கிறது கதை….
அதுவேதான்.
வரக்கிடக்கும் நகர்களைக் கடக்கும்போது,
கண்களை மூடிக்கொள்வேன்;
நினைவில் நடித்துப்பார்க்கக்கூடாதோ நான்,
கதைக்கு என்னிற்படுமேதும் இரஸத்தை?

வழுப்படு தலைப்பிலி – V

கிடைக்கும் மூங்கிலெல்லாம் ஊதிக்கொண்டு நகர்கிறேன்…
இன்னும் பிடித்த ஓசை பிறக்கவில்லை.
எறிந்த மூங்கிலையெல்லாம் எவரெவரோ இசைக்கிறார்…
பிறந்து நகர்கிறது பிடித்த பேச்சு.
இருந்தும் மரத்துக்குருத்துமூங்கிலைத்தான் உடைத்துக்கொண்டும் திக்கொண்டும் நரம்பு
விடைத்துப்புடைக்கத்திரியமுடிகிறது.
பிறர் பிடித்தெறிந்த பேச்சுக்களையும் பிடித்துப் போட்டுக்கொள்கிறேன்
வாய்விரித்த சுருக்குப்பைகளெல்லாம்.
கைப்படத்தொட்டவுடன் சுருதிசெத்துச் சரிகிறன.
சொற்களை மட்டும் சுருக்கிக்கொள்கிறேன் பைவயிற்றுள்.
படகுட் பறியோடு, ஆற்றில் தூண்டிலைப் போடாமல்
காட்டுமூங்கிலும் கைப்பையுமாயா நடந்து திரிவான்,
ஒரு கசட்டுமீன்பிடிப்பான்?

வழுப்படு தலைப்பிலி – VI

காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?
அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.
“திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே”
திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து…..
“நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??”
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.


13.
பதிவுகள் பெப்ருவரி 2002 இதழ் 26
எதிரிகள்! – சித்தார்த்த சே குவேரா-

எனது எதிரிகளுக்கு,
தமக்கென்று தனித்தனி வடிவில்லை;
பலருக்கு முகமேயில்லை;
சிலருக்கு வெளிக்காட்டும் உருவம் கூட
உயிர் அற்றுச் செத்திருக்கும்.

ஆனாலும்,
தூக்கத்தின் மத்தியிலும்
என்னைத் துரத்திக் கொண்டிருப்பார்,
கடிவாளமற்ற கனவுகளில்,
நன்கு விளை மேய்ச்சல்நிலம் கண்ட
வேகம் கொள் வீரிய பாய்ச்சற் குதிரைகளாய்.

என்னை உதறிக் கெடுப்பாரும் உண்டு- அவர்களில்,
எனக்கு உதவிக் கெடுப்பாரும் உண்டு.

அவர்களுடன் என் போராட்டம்,
ஒரு காற்று வெளி சுழற்று
கூர்மைக் கத்திவீச்சு.
அந்தப்புறம், காயங்கள் பட்டாலும்
என் கண்ணுக்குத் தெரியாது;
வாள், உறைக்குள் ஓய்வதற்குள்,
சளைக்காமல், பின்னிருந்து
இன்னொரு தூண்டிற் கனைப்பு
பின்னொரு வேண்டாப் போருக்கு
விழைந்து அழைப்பு விடும்.

எனது யுத்தங்கள்,
நிறுத்து முற்றுப்புள்ளிகள் கண்டவிடத்தெல்லாம்
அவை தின்று,
மாரிகாலத்தே,
மலையிறங்கு மழைவெள்ளமாய்
நெடுத்து சலசலப்பில் ஓடிக்கொண்டிருக்கும்.
அவை காலடிக்குளம்புகள்
தேய்த்து அழுத்தும் பாதையெல்லாம்,
பரவிக் கிடக்கும் சதுப்புநிலமாய்,
கொடி சுற்றி
நினைவுகள் மேல் எழ, மேலும் புதைந்து,
எரிவாயு பீறிட்டு தீச்சுவாலை பற்றிக் கிடக்கும்
என் மனது.

ஆனால்,
அவர்களுக்குத் தெரியும்,
அவர்களின் ஆவேசம் போலவென்று,
என் முனை மழுங்காப் போராட்டகுணம்;
முதுகுச்சுமை ஏறி முறிந்துபோனாலும்,
அடங்கிப்போகாது,
முறையற்ற,
அவர்கள் மூர்க்க அடக்குமுறைக்கென்று.
எந்தப்பாய்ச்சலுக்கும் உளச்சோர்வில்
ஓய்ந்துபோய்த் தூங்காது,
ஒரு மூலையிலே
படர் கருஞ்சிலந்தி வலைக்குக்
களம் அமைத்துத் தான் கொடுத்து.

அவர் கொடி விரிக்கும் தேசப்பரப்பெல்லாம்
ஊடறுத்துத் துளைத்துப்போய்,
ஓர் உதைப்பில் ஓங்கி மேலெழுந்து,
எட்டி நின்று என் கையுயர்த்தி
வெற்றிச் சமிக்ஞை விடையாய்க் கொடுக்கும்வரை
உடல் வற்றிச் செத்து, ஜீரணித்துப் போகமாட்டேன்.

என் மனித விட்டுக் கொடுப்புக்களை,
மன இயலாமை வழிப்பிறந்த
தம் வெற்றிக்கோல் குறிகளென்று
கண்டு நின்று கூத்தாடும்
எதிரி முட்டாள்கள்,
முடிவில்,
முகம் கறுத்து,
முட்டி முழந்தாளிட்டு,
பின்,
கூன் முதுகு தெறித்து,
எட்டிச் சிறு காலடி வைக்க இயலாது,
ஆடிக் காற்றகப்படு காய்த்த முருங்கைகளாய்
ஒற்றை ஒற்றையாய்த் தடி முறிந்து
உள்ள முகமும் உளுத்துப்போய்
மண்ணாய்ப் பரவிப்போவார்கள்,
தம் நிலத்தே, என் அகத்தளத்தே.

சத்தியம்,
பின்னொரு,
காலத்தே மூச்சடக்கியிரு
காரியம் விடுத்து,
தான் தூங்கு விதையிருந்து
மேலுறை நகம்
கிழித்தெழுந்து,
ஓங்கிக் கை பரப்பி,
ஓர் இரட்டைச் சிறு பச்சைத் துளிர் விடும்;
“வெற்றி நமதே.”


14.

பதிவுகள்பெப்ருவரி 2002 இதழ் 26
கவிமனம் – சித்தார்த்த சே குவேரா-

விடிகாலையிருந்தே சொற்கள் விபரம்தப்பித்
தாம் சுழன்று ஆங்காங்கே கரணமிட்டு..
வெந்நீர்த்தேவையினை அடுப்புப்புகைவறுந்த அவளிடம்,
“வெதுப்புமுகிழ் வான்வர்ஷிப்பு” என்று (வாலற்ற) கவித்துவமாய் வேண்டி
வண்டியாய் வாய்அர்ச்சிப்பு வாங்கிக் கட்டிக்கொண்டேன்.
வெளிமுற்ற
இளஞ்செடி தொட்டு வெண்பனி கொட்டு
புதுமலர்மொட்டு சிறுமுத்தமிட்டு,
“தேன்சொட்டும்பால்நிறத்துஇளங்கன்னிமெதுகன்னம்” சொல்லக்கண்ட
மகள் சொல்லாமலே பாலர்பள்ளி தனியே இன்று தான்
சென்றாள்.
பின்,
“‘சிண்டி குரோவாட்’ நீள்விரல் அழகுப்பிஞ்சு வெண்டிக்காய்” கேட்டதற்கு,
நாகசாகிக்குண்டுக்கே நான் சவால் என்பது போற்
சொத்தைவிதைப்பரல் ஒட்டற்பூசணிச்சிலம்பது கையெடுத்து,
கனன்று கண்ணகியாய் கத்தினாள் க(ந)`ய்கடை(டி)க்காரி,
“சிந்திப்பாய், இச்சந்தை இனியென்னைச்
சந்தித்தாய், சிறுமனிதா, செத்தாய்.”
தொடர்ந்தும் என்னைப் பணயம் வைத்து,
“எச்சிலொட்டாப் பயணச்சீட்டு எனக்கொன்று,
முன்மாலைமதுமணம்மாறாச்செங்கண் நடத்துனரே” எனறு செப்பி,
செருப்பால் அடியுண்டு பேரூந்தால் உதையுண்டு, தள்ளுண்டு,
பின், ஊர்ந்து,அலுவலகம் ஈரைந்து மணிவந்து,
“நல்நாளாய் நகரட்டும் நண்பரே இன்றும் உம் நாள்”,
என வந்தனங்கள் பலகூற,
முன் வியந்து, பின் பயந்து,
முழுவேலைத் தரமும் தளமும்
இப்பின்நாள் அரைநாள் எனத்
தன்னால் விடுப்பில் விரைந்து வெளித்தது.
இனி எது சொல்ல, என் செய்ய?
காசு கொடுத்துக் கல்லடி பட்டது போல்
எல்லாமே நேற்று,
விமானத்தபால் வந்த விக்ரமாதித்யன் கவி
தொகுதியாய்ச் செய்த கலி.
இடி தாங்கும் -என் கவிதாங்கா-நண்பன்
நல்லுரை மெத்தச்சரி.
“ஊர்படும் பாட்டில் ஊமையன் அடித்தானாம்
விசில் என்றாற்போல்,
நாடெரியும்போது,
நாற்பது வயது நாயுனக்கேன் கவிதை நயம்?”


15

பதிவுகள் நவம்பர் 2004 இதழ் 59
நிறங்களின் நிறங்கள்! -ரமணிதரன் –

I
வண்ணச்சுளுக்குகள் வளையமாய்க் கண்களுக்குள்.
முன்னே கிடப்பதெல்லாம் இரண்டாய்க் கிளை உருப்பிரியும்,
ஒன்றின் உலர்வெளுப்பாய், உடன்படேல் கடுங்கறுப்பாய்.
வெண்மைச்சட்டத்துள் கறுப்பு, நுனிவிரல்பாவியும் கால் திரிந்தலையாது;
கறுப்படர்த்திக்குள் வெண்மை வளைகீல வழிந்தோடு கோடாயுமாகாது.
சாம்பல் உயிர்வலுச்செத்த விழிகளுள் விழுந்ததெலாம் வகையிரண்டு;
நண்பன் – எதிரி
நல்லவன் – கெட்டவன்
என்னவன் – மாற்றான்
சகநாட்டான் – அந்நியன்.

கருத்து விழியின் மொழி நிறக்குருடு.

II

நுகத்தடி மனிதரின் முகங்கள் மட்டுமே
பார்த்துக் கொண்டன மற்றோரின் நிறங்கள்.
ஈரநெஞ்சு நிறங்களோ அருகுறங்கவிட்டால்,
நிறங்கள் பார்ப்பதில்லை தம் இனசனங்களுக்குள்.
தொட்டுப் பேசிக்கொண்டன.
கரைந்தோடிக் கலந்து புணர்ந்து பெற்றன,
பெற்றோர் நிறமுறைந்தும் தம்சுயம் உணர்ந்த
வெவ்வேறு நிறங்கள்.
வேற்றுநிறத்தின் விளைவேரைப் பார்க்கவில்லை மாற்றுவண்ணங்கள்.
தம்முள் விரைந்து பிரிந்து கூடிக்குலாவிப் பெருக்கும் வேறான நிறங்கள்.

உருகிக் கலத்தலும், கரைந்த குடித்தன விளைவெனத் தனித்துவம்
தோற்றலும் கொண்டது
நிறங்களின் சமூகம்.
மனிதரோ, முகங்களின் நிறங்களை முன்வைத்து வைத்துப் போற்றி,
நிறப்படைத்தளவடுக்கு விருத்தியாய்ப் பெருக்கினார் தனித்தனிச்சமூகம்.

மொத்தத்தில்,
நிறங்களின் நிறங்கள் பெயர்சாராது வெளிச்சமானவை;
மனங்களின் முகநிறங்களோ இன்னும் மேற்பட்டைத் தோல்சார்ந்த
சூத்திரங்கள்மட்டுமே.


16.
நவம்பர் 2004 இதழ் 59 -மாத இதழ்
விதையும் கதையும் –  -ரமணிதரன் –

கவிதை எழுதுவதென்பது கடிலாஸ்கோப்பிலே
குறுணிவண்ணக்கண்ணாடிச்சிதறல் போட்டுக் குலுக்குதல் போலாம்;
கவிதை எழுதுவதென்பது இருண்டலர்ந்த கண்ணுக்குக்
குளிர்க்கண்ணாடி போர்த்திச் சூரியோதயம் சுட்டிக்காட்டுதலாம்;
கவிதை எழுதுவதென்பது கச்சற்பொருளுக்குச்
சக்கரைப்பாகு சுத்தி அண்ணாக்கழுத்தி நெக்குருக்குவதலாம்.

நெருப்பிலே உடைப்பிலே உருக்கி நொருக்கிப் போடுகிறேன்
என்னிடம் கேட்கப்பட்ட காக்காப்பொன் கவிதைகளின் சொற்களை.
முரட்டுப்பாதை போகும் கறுப்புக்குதிரை
ஒன்றில் உதை தள்ளும்; அன்றில் கதை சொல்லு


 

17.

பதிவுகள் 15, டிசம்பர் 2002
திண்ணை தூங்கியின் (இரமணி) கவிதைகள்

விரல், தறி & வாதம்

உளுத்த பலகையுள்
நாட்பட
நகர்கிறது நோய்க்கோழி;
நினைத்தும் நினைக்காமலும்
நடக்க முயல்கிறது,
கனத்துத் தூங்கும் கால்; துவண்டு
தள்ளிப்போம் மெல்லிய தூக்கலும்;
களரணமுனகல் ஊறி நனையும்
கணித்தறி. அறிவேன்; தோழன் அழுகிறான்.
‘குளிர்’ எழுதும் மொழியும்
முள்ளெரித்து என்பு தின்னும்.
எண்ணம் எழுத்திடை எரிசுவர்த்தடுப்பு;
மூட்டில் மோகித்து சூள்மூட்டும் மின்சாரம்.

சொல் உளறு முளையில் வலி கிளறு மிளிரூசி;
வீட்டுமன் முதுகென் வேகுவிரலாகிப்போகாதோ?

தூரப் போ புழுவே, தூர்ந்து போ!
வேண்டுமட்டும் வில்வாதப்படு;
இனியும் காட்டேன் ஏதும் முதுகு.
சொல் புரிதல் என் யாகம்;
காண் முன் மார்பு; கணை எய் சரம்;
கை தையத் தைய,
பையவேனும் தமிழ்
தட்டுவேன், தறிப்பேன்.

உள்ள மொழி, உருகி முறிதல் வரை
நொய்ய நொய்யக் கைக்கணிநெசவு.
பின்னு விரல் வேணுமென்றால்
பிணி விறைத்துச் சாகட்டும்;
ஆகா அப்பின்னும், ஆழ்விழி
அதிர்ந்தியங்கும் என் மூளை.

தலைப்பிலி 1

நுனிநகம் பரபரத்துக் கிள்ளிப்போட்ட சொல்லோடு
துள்ளிக் குவிகிறது கூடை.
தேங்கிய தாகம் தீர்ந்தபின்
அள்ளக்கேட்பாரின்றி
புல்லுக்கோடுது அமுதம்
-அவதி.
ஊற்று வழிய வழிய உளறி நடக்கிறது உட்பாதம்.
மழை சமயங்களில் விடேனென்று பெய்கிறது;
வேட்டைத்தினவு வேறெப்போதோதான்
வீட்டுக்கு வருவேனெனத் திமிர்கிறது.

நடுவில்
மழை கரைத்த மொழியை
அழுகாமற் பூப்பது யார்?

13, டிசம்பர் 2002 வெள்ளி

தலைப்பிலி 2

முன்னமர்ந்து பேச, முழுதாய் வருவதில்லை;
திக்கிக்குழறும் கொத்து மழைக்குட்டைப்பேத்தை
எகிறித்தத்தும்; திரியும் எங்கெங்கும்.
அழிந்த முடிச்சுகளை அள்ளிமுடியமுன்
தெறித்த குண்டுக்குக் கண்டதெல்லாம்
தெரு; பட்டதெல்லாம் குறி.
பாடல் முகிழ்குது.
குறியும் தெருவும் அழிந்த மலைப்பனியில்
ஒழுக்கென்றோடுது உள்மந்தை.

போம் வழிக்குப் புரிகிறது பொன் பிறை.
நடக்கிறேன் நான்.

13, டிசம்பர் 2002 வெள்ளி

தலைப்பிலி 3

எல்லாத்தெருவும் எனதென்றும் தெரிகிறது;
இல்லையென்றும் போல.
காண்கின்ற இல் பலதில்
கரைந்துபோயிருக்கும் முகப்பு

போகிறவீடெல்லாம் முன்னைப்புக்கோரில்
ஒருவரேனும் என் நண்பர்.
இருந்தும், தரிக்கமுடியவில்லை.

போக்கிற் கல்லெடுத்து
போம் வழி காணக் கட்டியதும்
எனதென்று ஏனோ இன்னும் தோன்றவில்லை.

“அழையாவீட்டின் பூட்டை
முறிப்பதுமட்டும் அநாகரீகம்.
தாழ்ப்பாள் தூங்காத தாழ்வாரம்,
வீட்டுக்கணக்கா? வீதிப்பரப்பா?”
-அலைஞனோடு தொடர்கின்ற
ஆட்டுக்குட்டிகள்.

தட்டாமற்போன கதவும்
தட்ட, திறக்கப் புகாத வாயிலும்
படி பட்டுத் திரும்பிய புலமும்
இத்தனையாய் விரிகின்ற வீடெல்லாம்
போனதென் வாதக்கால்கள்.
தட்டியும் திறக்காதென்ற தேசத்தின் வாசனை
தெரிந்ததென் நாசி.
முள்ளுக்காணிக்குள்ளும் சக்கரம் சுற்றிய பாதம்.

அப்படியாய் அலைகின்ற கூத்தாடிக்கும்
பிடித்த தெருவென்றும் உண்டு;
அடிக்கடி தட்டும் வீடென்றும்
அவ்வப்போது அடையாளம் தெரிவதுண்டு.

வரித்த புலி அலைச்சல் மட்டும்
இரைக்காய்ப் பை குறாண்டும்.

13, டிசம்பர் 2002 வெள்ளி

அறுத்த அகவிதைக்கும் நட்ட
விதைக்கும் நடுவில் முளைத்தவை

நாட்படத் தோண்டிய கால்நக அழுக்கு;
அலறித்தூங்கும் அடுத்தவன் தொலைபேசி;
வேளை மாறிய வானொலி நடத்துனர்;
பசித்துப்படுத்த இரைப்பைப்புகைச்சல்;

ஆளைச் சுற்றிய ஈயக்குமிழில்
ஆழ நூல்போக பேனைக்கோல் ஓட்டை;
கையை எறிதல், கழுத்தை மடக்கல்-
எல்லைவிரித்தல் என்று நினைத்தல்;
காலைப் பரப்பி ஆழத்தூங்கல்;
நனவைக் குழப்பிக் கனவென்று துரத்தல்
(என்று நனைய முதிர்கனவில் இருத்தல்);
கதவு தட்டலைக் காணாதிருத்தல்;
புதிய கவிஞனை வலையிற் தேடல்;
பழைய கடிதங்கள் மடித்தலும் கிழித்தலும்;
துழாவிய நகங்களைத் துளைக்கத் தவிப்பு.

தவிர்த்து நிமிர்ந்திருந்து
சாமான்பட்டியலில் சங்கீதக்கோர்ப்பு;
சாம்பார்ச்சட்டிக்கு அகவிச்சிட்டிகை.
பட்டினி தீர்க்கமுன், பட்டியல் பதிவு.

ஆறமுன் பரிமாறு.
புசிப்பதும் கழிப்பதும் பசித்தவன் பொறுப்பு.

13, டிசம்பர் 2002 வெள்ளி

18.

பதிவுகள் ஜூன் 2003 இதழ் 42
மதிப்பீட்டைக் கேட்டுப்பெறுதல் பற்றிய மதிப்பீடு – திண்ணைதூங்கி

எதையும் தவறாகச் சொன்னதாய் ஞாபகமில்லை;
“மாடுதான் என்றாலும் நான் வண்டில் மாடில்லை”
என்று மட்டும் மேய்வழியிற் சொன்னதாய்,
சின்ன நிழலாட்டம் உள்ளே.
நிரைக்களத்தில் வயல்மாட்டைப் பற்றி
வரி பத்துச் சொல்லக் கேட்டார் போலும்;
“மாடுகள் பற்றிய என் மதிப்பீடுகள்,
திரைப்பட விளம்பரங்கள் அல்ல
காணும் தெருமூலைக்கெங்கும்
சாறி, சாணிச்சுதை சேர்க்க”
என்றிருப்பேனாக்கும்; வேறில்லை.
இதிற்கூட, கேட்டவர் மூலத்தில்
ஆழக் கெளுத்தி செருகியதாய்
எனக்கேதும் தோற்றமில்லை.

உன்னைப்போல், அவனைப்போல்
நானும் உணர்கொம்புள்ள மாடுதான்.
விலகிப்போகாது வேண்டுமென்றிடித்தால்
வேறென்ன செய்ய?

முட்டிய தெருவில், முதுகில், முனை
இலேசாய் இடறக் குத்துதல் தவிர
வேறேதும் புரியவில்லை; வேறேதும் தெரியவில்லை.

இனியாவது தெரிந்துகொள்; உன்னைப்போல்
இவ்வூரில் எந்தத் தெருமாட்டுக்கும்
உண்டு ஏதேனும் உட்கருத்து.
ஆனாலும், மாட்டுக்கு மாடு
வால் தூக்கி மாறாது மூத்திரமணம்.