‘பதிவுகளில் அன்று’ : நீதி யாதெனில்…

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள்   ஜூன் 2008 இதழ் 102

தமிழ்நதிஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் ‘பெரும்போக்கு’ மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். பேரறிவாளர்கள் இந்நெகிழ்வை பெண்ணியல்பு எனக்கூடும். பெருநகருக்கேயுரித்தான பைத்தியக்காரப் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கொழும்பில் நுழையும்போது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. தேவைகளின் குரல்களால் ஓயாமல் அழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பம் அற்ற ‘தனியறை நாட்கள்’ என்னளவில் கொண்டாடத்தக்கன. மடிக்கணனி, சில புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கடலோரம் மாலை நடை இவை போதும் தனியறை நிரப்புதற்கு. கனடா கடவுச்சீட்டிற்கு இந்திய விசா தர ஒரு வாரம் வேண்டுமென்றது ஒருவகையில் நல்லதாயிற்று.

இரண்டு நாட்கள் இனிதே கழிந்தபின் உண்டியல்காரர் வடிவில் வந்தது வினை. “இந்த அறையில் தனியே இருக்கிறீர்களா?”புருவங்களை உயர்த்திக் கேட்டார். ஆமென்றேன். “இப்படியான இடங்களில் தனியே இருப்பது பிழை. தேவையற்ற பிரச்சனை வரும்”என்றார். நான் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தவர் ஒருவரின் – ஒரு நட்சத்திர குறியும் அற்ற விடுதியொன்றில். 2001ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு வரும்போதெல்லாம் அதுவே என் தங்ககமாயிருந்தது. விடுதிப் பையன்கள் கோழிப்பார்சல் சொல்லியனுப்பினால் கூடவே பழங்களும் வாங்கிவருவார்கள். அடிக்கடி படுக்கை விரிப்பு மாற்றி, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பெரிய குவளையில் பிரத்தியேகமாகத் தேநீர் தந்து ‘ஆதரவாக’க் கவனித்துக்கொள்வார்கள். அதற்காக நான் சில நூறு ரூபாய்களை உவந்தளித்திருந்தேன் எனச் சொல்ல வேண்டியதில்லை. உண்டியல்காரர் போனபிறகு பயம் ஒரு குளவியைப் போல அறையினுள் சொய்யிட்டுக்கொண்டிருந்தது. அதற்குத் துணையாக அறையின் வசதிக்குறைவு தன்னைப் புதுப்பித்துக்கொண்டு கண்ணெதிரில் நின்றது. மேலும், அந்தத் தெருமுனையில் நிற்குமொரு ஆட்டோக்காரன் என்னை ஏற்றிக்கொண்டு போனபோது தனது சகாவை அவசரமாக வரும்படி அழைத்திருந்தான். நான் கைப்பையை இறுக்கிக்கொண்டு ஆட்டோவை சடுதியாக நிறுத்தி போகுமிடத்திற்கு முன்னதாகவே இறங்கிவிட்டேன். ஒன்றைச் செய்ய முடிவெடுத்துவிட்டால், அதனை வழிமொழியும் காரணங்களைக் கற்பித்துக்கொள்வதொன்றும் சிரமமில்லை.மறுநாள் காலை நான்கு நட்சத்திர விடுதியொன்றின் ஆளை அமிழ்த்தும் கட்டிலின் மென்மையை வியந்தபடி படுத்திருந்தேன். நேர்த்தியாக தரை ஓடு பதிக்கப்பட்டிருந்த விசாலமான குளியலறைப் பீங்கான் மீதமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதற்கான ஒருநாள் கட்டணம் 6,800ரூபாய்கள். குற்றவுணர்வைத் தூண்டும் தொகைதான். எனினும், ‘உயிருக்கு விலையில்லை’ என்ற மகாதத்துவத்தின் முன் யாதொன்றும் செய்வதற்கில்லை.

இப்போது பிரச்சனைப் பூதம் இல்லாத யன்னலிலிருந்து கிளம்பியது. நான் இருந்த 308இலக்க அறையிலிருந்து அலையெறியும் கடலைப் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் தெருவைக்கூடப் பார்க்க முடியாது. எஞ்சியிருந்த இடத்தை என்ன செய்வதென்றறியாமல் கட்டிய அறைபோலிருந்தது அது. என் வயிற்றெரிச்சலைக் கிண்டுவதற்கென்றே ஏப்ரலிலும் அதிசயமாக மழை வேறு பெய்துகொண்டிருந்தது. அறையை மாற்றித் தரும்படி கேட்டேன். விடுதி நிறைந்திருப்பதால் இல்லையென்றார்கள். யன்னலற்ற அறையொன்றினுள் குருட்டு வெளவாலைப்போலமுட்டிமோதிக்கொண்டிருப்பது ‘வாராமல் வந்த மாமணியாகிய’ஓய்விற்கு இழைக்கும் துரோகமெனப்பட்டது.

இப்போது மாறியிருக்கும் அறையோ உல்லாசியொருத்தியால்- ஒருவனால் வடிவமைக்கப்பட்டதைப் போலிருந்தது. குளிர் சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, படுக்கை, குளியலறை எல்லாமே பிரமாண்டம். கட்டிடங்களைக் காசாக்கும் கொழும்பில் அவ்வறையைப் பிரம்மச்சாரிகளுக்கு மாத வாடகைக்கு விடுவார்களெனில் பத்துப் பேராவது படுத்து உருளலாம். கண்ணாடித் தடுப்புக்கப்பால் நீலப்படுகையாய் கடல் மௌனித்திருந்தது. அலை போவது வருவது தெரியாமல் ஒரே இடத்தில் வெள்ளைக்கோடாய் உறைந்திருந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது தெரிந்த மரங்களின் பச்சைத் தலைவிரிப்பும் பூக்களும் எழுத அழைத்தன. நிதானமாக விசா தந்தால் போதுமெனத் தோன்றவாரம்பித்துவிட்டது. அன்றிரவு அவர்களோடு நான் உணவருந்தப் போகாமலிருந்திருக்கலாம். போகாமலிருந்திருந்தால் இதை எழுத முடியாமலும் போயிருக்கலாம்.

“எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”என்ற கேள்விக்கான என் பதிலைக் கேட்டதும், விழிகளில் திடுக்கிடல் தெரிய “உங்களுக்கென்ன பைத்தியமா?”என்றார்கள். எனக்கு உறுதியாய் தெரிந்தது அவர்களுக்கு ஐயமாயிருந்தது. “ஏன்?”என்ற என் கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலில், குடித்துக்கொண்டிருந்த சூப் கூட தொண்டைக்குள்ளால் இறங்கமாட்டாமல் சண்டித்தனம் செய்யவாரம்பித்துவிட்டது.

“அந்த வசதிகளெல்லாம் மீனுக்குப் புழுப்போல காட்டப்படுவன. அந்த விடுதியின் சொந்தக்காரன் சிஹல உறுமயவைச் சேர்ந்தவன். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களைத் தங்கவைத்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் அந்த விடுதியொரு மரணப்பொறி. பலருடைய கடவுச்சீட்டுக்களை வாங்கிவைத்துக்கொண்டு குறிப்பிட்ட தொகை தந்தால்தான் தருவேன் என்று பயமுறுத்திப் பணம் கறந்திருக்கிறார்கள். வேறொருவரின் ரீ.சீ (Traveller cheque) பறித்துவிட்டார்கள். இன்றே இப்போதே வேறிடம் மாறுங்கள்”என்றார்கள். அவர்கள் அதைச் சொன்னபோது இரவு நேரம் ஒன்பதரை மணி. “காலையில் மாறுகிறேன்”என்று சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.

கண்கள் சில சமயங்களில் நமக்கு விசுவாசமாக நடந்துகொள்வதில்லை. நான் அறைக்குத் திரும்பியபோது வரவேற்பறையில் இருந்தவன் சிங்களத் தேசிய உடை அணிந்திருந்ததைப் பார்த்தேன். அவனது முகத்தில் புன்னகை இல்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களிலெல்லாம் யானைகள் உலவின. அதுநாள்வரை பைபிளையே விடுதிகளில் பார்த்திருக்கிறேன். முதற்தடவையாக மகாவம்சம் இருக்கக்கண்டேன். மஞ்சள் நிறம் மிகுதியாக விசிறப்பட்ட தலதா மாளிகையின் ஓவியம் தலைக்குமேல் தொங்கியது. விடுதியின் ஒவ்வொரு துளியும் தன்னை அடையாளப்படுத்தி அறிவித்துக்கொண்டிருந்ததைக் காணத்தவறியிருந்தேன். என்னளவில் மஞ்சள் நிறமோ சிங்கமோ வெறுப்பிற்குரியன அல்ல@ பயத்திற்குரியன. இரவுகள் சிலசமயங்களின் மிக நீளமானவை. பன்னிரண்டு மணியளவில் எங்கோ ஒரு அறைக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. யாரோ உரத்த குரலில் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டது. அழகிய அந்த அறை அவ்விரவில் வதைகூடமென தோற்றம்காட்டவாரம்பித்திருந்தது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களைக் காவித்திரிவதானது சிலசமயங்களில் நம்மைக் கடவுளராக்கிவிடுவதாக கற்பனித்துக் கொண்டிருக்கிறோம். விமான நிலையங்;களில் குடிவரவு படிவங்களை நிரப்பும்போது ‘கனேடியன்’ என்றெழுதுகையில் புளகாங்கிதம் கொள்வதும் இயல்பே. பிரயோகிக்கக்கூடாத இடத்தில் மந்திரத்தைப் பிரயோகித்து மாண்டவர்களைப்போல, கணப்பெருமைக்காகப் ‘படம் காட்டும்’ கடவுச்சீட்டுக்களே மரணத்திற்கான அழைப்பிதழாகவும் ஆகிவிடுவதுண்டு. இலங்கைக்குப் போகும்போது பழைய, ஓரம் நைந்துபோன தேசிய அடையாள அட்டைகளைத் தேடி எடுத்துவைத்துக்கொள்வது மிக நன்;று.

எங்களுடைய ‘கிரடிட் கார்ட்’ கட்டணங்களைக் கட்டுமாப்போல கட்டி அடுத்தநாளே அவற்றை இயந்திரங்களிலிருந்து பிடுங்கிக்கொண்டு No frills இலும் தமிழ்க்கடைகளிலும் நிற்பது அவர்களுக்குத் தெரியாது. வட்டிக்கு கடன் தந்தவனின் இலக்கம் தொலைபேசியில் அழைத்துக்கொண்டிருக்க, அதைக் கிலேசத்தோடு குனிந்து பார்த்துவிட்டு நெற்றியைத் தேய்த்தபடி கடந்துசெல்வதை அவர்களறிய மாட்டார்கள். தொழிற்சாலைகளில் துரிதகதியில் இயங்கும் ‘பெல்ட்’களுக்கு இணையாக இரவும் பகலும் இயங்கிக்கொண்டிருக்கும் மனித இயந்திரங்கள் குறித்து அவர்களிடம் யாரும் சொல்வதற்கில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், நமது கழுத்துகளில் மின்னும் கனத்த சங்கிலிகள், (சில ஆண்களின் கைகளில் இரண்டங்குல அகலத்தில் இருக்கும் கைச்சங்கிலிகள்) தங்கும் நட்சத்திர விடுதிகள், ரூபாய்களாய் மாற்றப்பட்டு No limit, Majestic city, Liberty plaza இங்கெல்லாம் அள்ளி இறைக்கப்படும் டொலர்களும் பவுண்ஸ்களும் பிராங்குகளும்தான்.

நான் எனது பழைய விடுதிக்குத் திரும்பினேன். அங்கு கொழுப்பு போக நன்றாகத் தேய்த்துக் குளித்தேன். குளிரூட்டி உபயத்தில் உறங்கினேன். நான்கு நட்சத்திர விடுதியில் பார்க்க முடியாத மழையை கண்குளிரப் பார்க்க முடிந்தது. விசா கிடைக்கும்வரை என் பாதுகாப்பிற்கு எந்தக் குந்தகமும் நேரவில்லை.

ஆயிரம் ரூபாய் பிசாத்துக் காசாகத்தான் போய்விட்டது. ஊரிலுள்ள உறவுகளுக்கு நூறு டொலர் அனுப்பினால் வயிறாரச் சாப்பிடுவார்கள் என்பதெல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போயிற்று. ஒரு பவுன் இருபத்தையாயிரம் விற்கிறது. கொழும்பில் ஒரு கோழிப் பார்சல் 275ரூபாய்கள். பம்பலப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வர ஆட்டோவிற்கு 130ரூபாய் கேட்கிறார்கள். அடம்பிடித்தால் 100க்கு இறங்குகிறார்கள். முன்னர் கொழும்பில் தெருக்களில் காணக்கிடைத்த வெள்ளைமுகங்கள் அருகிவிட்டன. பொருளாதாரம் மணல்வீடென பொலபொலவென்று சரிந்துசெல்கிறது. பணக்காரர்கள் நடுத்தர வர்க்கமாகவும், நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகவும் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பிழைப்பதற்கான வழிகள் அடைபட்டுக்கொண்டே போக, ஆட்களைக் கடத்தி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் தொழில் துப்பாக்கி, ஒரு வாகன சகித முதலீட்டில் அமோகமாக நடக்கிறது. சகலமானவருக்கும் சொல்வது யாதெனில், விமான நிலையங்களில் மட்டும் கடவுச்சீட்டை வெளியில் எடுப்பதே உத்தமம். இல்லையெனில், அது மரணச்சீட்டாக வாய்ப்பிருக்கிறது. அடக்கம் அமரருள் உய்க்குமாம்!

tamilnathy@gmail.com

நன்றி: பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102