பதிவுகள் ‘ஆகஸ்ட்’ கவிதைகள்!

பதிவுகள் ‘ஆகஸ்ட்’ கவிதைகள்: 

 ‘பதிவுகளோ’ நவ யுகம்!

– கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை –

ஆகஸ்ட் கவிதைகள்உள்ளதின்  விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித்  தளங்கள்— 
 
பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச்  சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை  பூக்கள்!

ஒருயுக  விடிவில்
கலை  நோய்  பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு  நோக்கில்
குணப் படுத்த –
மருந்தாய்  மலிந்த
புதுக் கவிதை  தொகுதிகள்—-

தளம்பி   வீழும்
மரபுகளில்
ஒரு  சிறு
வழுக்கலை நீக்கும்
புது  வடிவங்கள்!
 
கசிவுகளாய்
உள்ளத்து   ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப்  பதிவுகள்
தனி  ரகமாய்  ஜொலிக்கும்

விமர்சனம்  வீச –
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ….
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்……

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச……

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்….!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி –
காண விழையும்…

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு –
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்…..!!
                        
2011.06.06


1. எனக்குள்ளே வருவாயா…? 

– சம்பூர் சனா, புத்தளம். –

ஆகஸ்ட் கவிதைகள்ஒரு நாள் சிரித்தேன்
ஒரு நாள் அழுதேன்
உன்னை எண்ணித் தவித்தேன்
எனக்குள்ளே மரித்தேன்
மீண்டும்
உனக்குள்ளே தரித்தேன்
எனைத் தாங்கிடுவாயா..?
 
ஒரு நாள் சிறையில்…
ஒருநாள் சிறகில்…
என் மனம் உனக்குள்
உனக்குள் வாழ்வேன்
அனுமதிப்பாயா..?
 
சில வெறுத்தேன்
பல நாள் வருந்தினேன்
உனைக் காண நினைத்தேன்
எனக்குள்ளே தேடினேன்
எதிரில் வருவாயா….?
 
சில நாள் தூங்கினேன்
பல நாள் விழித்தேன்
எம் பயணத்தை நினைத்தேன்
பாதியில் அழுதேன்
கண்ணீர் துடைப்பாயா..?
 
சில நாள் கதைத்தேன்
பல நாள் பகைத்தேன்
என் இதயத்தில் உனை வைத்தேன்
எனக்குள் உனை அழைத்தேன்
விடையளிப்பாயா..?
 
ஒரு நாள் உயிர்த்தேன்
மறு நாள் மரித்தேன்
உன் சுவாசத்தில் வாழ்ந்தேன்
உன் பார்வையில் கரைந்தேன்
இதயத்துள் நீ இருப்பாயா..?
 
சில நாள் சிலிர்த்தேன்
சில நாள் சினந்தேன்
உனை விட்டு பரிதவித்தேன்
எனக்குள்ளே அவதரிப்பாயா..?

2. நாள் தோறும் அண்மிக்கின்றேன்…

– சம்பூர் சனா, புத்தளம். – 
 
ஆகஸ்ட் கவிதைகள்இரக்கமுள்ள மனசே!
உன்
இருதயத்தில் விழுந்தேன்
இறகில்லாமல்
பறக்க வைத்தாயே…
 
கருணையின் கடல் நீ
என்று
தெரிந்த பின்னால் தான்
என்
வாழ்வெனும் படகில்
மிதந்து வந்தேன்
உனக்குள்…
 
ஆயினும் தோழி
எனக்குமட்டும்
உன்
அன்பினில் ஒரு துளி
தரமறுத்தாய்..!
 
சிலருக்கு கடல் நீ,
எனக்கொரு துளியாய்
சுருங்கி விட்டாய்!
 
வாழ்வது சில நாள்
அதற்குள்ளே
பாசத்தைப் புரிவது
சிலர் தான்..!
 
sampoorsana@yahoo.com


சமீலா யூசுப் அலி (மாவனல்லை ,இலங்கை ) கவிதைகள்!

1. காணாமல் போன அம்மிக்கல்

ஆகஸ்ட் கவிதைகள்பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்

நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.

அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.

அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்

அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்

கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.

முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

2. சாத்திய யன்னல்கள்

– சமீலா யூசுப் அலி –

ஆகஸ்ட் கவிதைகள்ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை
வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்
உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட

அசைக்கவில்லையென்பதவள்
அறுதியான வாதம்.
ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென
தூங்குவதாயொரு பாவனை.
நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்
எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…
நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்
துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும்.
அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்
வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.
அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு
விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர…

31.07.2011

3. அடர் மழை வனாந்தர நேசம்

– சமீலா யூசுப் அலி –

ஆகஸ்ட் கவிதைகள்வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட
உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று
…கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.
அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை
அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.
பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த
கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.
உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்
அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று
நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்
இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

2011 July 29

sk.risvi@gmail.com


ஒரு வயது வேதாவின் வலை

– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.-

ஆகஸ்ட் கவிதைகள்தந்தனதோமென்று வேதாவின்வலை
தலைநிமிர்கிறது ஒரு வயதில்.
தமிழ் வர்ணமிட  ஆடி ஒன்றில்
தரணியில் பிறந்தது இரண்டாயிரத்துப் பத்தில்.
சொற் தொடர்கள் சிதறித் தெளித்து
அற்புதப் புதையலாய் விதைக்கிறேன் கவியாக.
தனித்தன்மையின் தமிழ் வர்ணமிது.
இனிதான தாகம்! குறையாத ஞானமிது!
பூக்கள் பரப்பும் எழுத்து ஊர்வலத்தில்
வாழ்க்கை வாசிப்பும் வாகாக மொழிதலுமான
தனமிது! அம்பலத்தில் ஆடுதலெனும், அறிவு
மனம் நெய்திடும் தமிழ் பூவிது!
வெட்டவெளிக் கருத்துகள் சிலகணம்
பொட்டென்று விழும் எங்ஙணும்.
பட்டுத் தெறித்துப் பிரதிபலிக்கும் கருத்து
எட்டிப் பலஅடி எடுக்கச் செய்யும்.

உறவு மேடையின் அறிவுப் பாலிது!
மனிதநேயத்து நீதியின் ஆடையிது!
விமரிசனத்தராசில்  விழும் பெரும்
உண்மையின் கனம், ஆளுமைச் சிதறல்!
அறிவு உழவு இது! என்
எழுத்தெனும் சுவாசம்! உயிர்ச் சுவாசம்!
நான் எழுந்து நிற்கவுனைச் சரணடைந்தேன்!
தமிழே! உன் கதிரால் எனைப் பிணை!

26-7-2011.


சித்ரா கவிதைகள்!

1. காண்டிப தேடல்

– சித்ரா –

ஆகஸ்ட் கவிதைகள்வஞ்சிக்க பட்டவரும்
வஞ்சித்தவரும்
வேடிக்கை மட்டும் பார்த்தவரும்
நெருங்கியவர்களே !

சமபந்தி உணவு இவர்களோடு
மற்றொமொரு நெருங்கியவரின்  திருமணத்தில்.

ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு
இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு”
இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு
கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென..

போலி நாகரிகத்தை கிழித்தெரிய
சந்தர்ப்பமில்லா துவண்ட என்னிடம்
“காண்டிபத்தை” தேடி எடுக்க சொல்ல
தேவை எனக்குமொரு பரமாத்மா.

2. சம்பாஷனை

– சித்ரா –

ஆகஸ்ட் கவிதைகள்ஓங்கிய பொருளில், பேச்சில்
என்னை கீழே இறக்குவதும்,
அதையே நானும் செய்ய
நீ கீழே இறங்குவதுமாய்
அவரவர் பிடியை பிடித்தபடி
ஆடும் சீ-சா விளையாட்டா ? – சம்பாஷனை !

இயைந்த சொல்லில்,நயத்தில்
ஆமோதித்து கோல் தட்டி
இடிபடாத, பிடிபடாத ,லயித்த
சுய அபிப்பராய அசைவுகளுமான
குதுகூல கோலாட்டம் தானே ! சம்பாஷனை ?

நீயே சொல்லேன் !
யோசித்தாவது…….

k_chithra@yahoo.com


அந்த ஒருவன்…

– மன்னார் அமுதன் –

ஆகஸ்ட் கவிதைகள்உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்

amujo1984@gmail.com


தலைப்பில்லாத கவிதை -1

-துவாரகன்

ஆகஸ்ட் கவிதைகள்குளித்த ஈரம் துவட்ட நேரமில்லை.
காற்சட்டை காயும்முன்னே அணிந்து கொள்கிறேன்
சாப்பாடும்
ஆலயப் பூஜைபோல் ஆறுவேளையாயிற்று

அப்புச்சியின் உலகில்
பழஞ்சோற்றுடன்
வயிறு குளிரக் கஞ்சி.
பின்னொரு காலம்
வெள்ளைப் பிட்டுடன்
ருசியான மிளகாய்ச் சம்பல்.
அவசரக் கோமாளிகளின் கையில்
‘கேக்’கும் ‘மைலோ’ பாலும்.

நினைவுகளின் துகிலுரிப்பு
நிலைப்பவற்றின் நிலையழிப்பு
என்னையும் தொலைக்கிறது

என் கண்ணிலும்
மூளையிலும்
மூக்கின் வழியிலும்
பாட்டனின் கறுப்பு
இன்னும் மீதியாய் ஒட்டியுள்ளது.

அவசரமாகக் கண்ட இடமெல்லாம்
குந்தி எழும்பியதில்
என் பின்பக்கம் மட்டும்
கொஞ்சம் கறுத்துப் போயுள்ளது.

நண்பரே
சந்தேகமெனில்
காட்டட்டுமா?

யூலை/2011
(குறிப்பு – கவிஞர் சோ. ப வின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று ஞாபகம் வருகிறது)
kuneswaran@gmail.com


கிராமத்து தென்றல்  

– ஜே.ஜுமானா (புத்தளம் ) –

ஆகஸ்ட் கவிதைகள்சொட்டும் தென்றல் சொடக்கெடுத்து
சோனாமாரி பொழிகிறது….
போதை கசிந்து உள்ளத்திலே
ஊழித் தீயாய் எரிகிறது….
 
இத்தனை சுவாசங்கள் தாண்டி
மறுபடி ஜனனம் நடக்கிறது
இருதயத் துடிப்பைத் தூண்டிவிட்டு
அழகிய தென்றல் அழைக்கிறது…
 
தென்றல் ஊதிய எழில் மிகு தீபம்
நெஞ்சில் பிடித்து ஒளிர்கிறது….
ஏதோ மனது பீடித்திங்கு
பட்டுத் துண்டாய்ப் பறக்கிறது
 
இதுவரை நாளும் உயிரின்றி உடலோ
தனியாய் வாடிக்கிடந்ததிங்கே..
தென்றலின் தணிக்கரம் தீண்டியதாலே
முதல் முறை நாடி துடிக்கின்றதே….
 
ஒரு சொற்ப முகிலாய்
மனசுக்குள் புகுந்து
“சோ”வென மழையாய்ப்
பொழியுகிறாய்…
கீழ்த்திசை ஒளியாய் உள்ளத்தில் எழுந்து
உஷ்ணத் தீயால் வாட்டுகிறாய்….!

J.Junaid, Srilanka.
jjunaid3026@yahoo.com