பரிணாம வளர்ச்சியின் மனித வரலாறு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும்  காண்போம்.  ஒரு  கருநிலைக்  கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலமூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது.

இது முகிற்சுழற்சி, ஈர்ப்பு, செறிவு ஆகியவற்றை விரைவுபடுத்தியது. அதனால் செறி தொகுதிகள் கெட்டியடைந்து மத்தியில் வெப்பம் பெருகியது. இவ்வெப்பம் வெளியேற முடியாது மேலும் மையவெப்பம் கூடிக்கொண்டது. ஈற்றில் நீர்வாயு (Hydrogen)  கீலியமாக (Helium)  அணுமாற்றம் பெற்று ஒரு நட்சத்திரம் (T.Tauri) தீப்பிடித்து எரிந்து ஒரு சூரியன் உருவாயிற்று. இச் சூரியன் 460 கோடி ஆண்டுகளாக இற்றைவரை பிரகாசித்து எரிந்துகொண்டிருக்கின்றது.

கதிரவன் மண்டலம் தொடக்கத்தில் சுழற்சியான தூசி, பாறை, நீரகம், கீலியம் போன்றவை நிறைந்திருந்தன. கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமி. இப்பூமியானது 457 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியதென்பர். அன்று பூமியும் நெருப்புக் கோளமாகச் சூரியனைப்போல் எரிந்துகொண்டிருந்தது.

நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாகவே இருக்கின்றது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் குழிகளில் பாய்ந்து தேங்கிக் கடல்கள் தோன்றின. பூமியில் 453 கோடி ஆண்டளவில் ஒரு நிலா தோன்றியது.

இனி பூமியில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதில் தோன்றிய உயிரினங்களையும், மனிதன் தோன்றிய முறைகளையும், அவன் எய்திய உயர்ச்சிகளையும் காண்போம்.

இனி பூமியில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதில் தோன்றிய உயிரினங்களையும், மனிதன் தோன்றிய முறைகளையும், அவன் எய்திய உயர்ச்சிகளையும் காண்போம்

• பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள்   
           தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது

• 350 கோடி ஆண்டுகளுக்குமுன் தாவர இலைகள் பச்சிலை 
           பெற்று உணவைத் தயாரிக்கும் தாவர ஒளி இயைபாக்கம் 
           பெற்றன.

• 260 கோடி ஆண்டளவில் நீரிலுள்ள உயிரணுச் சவ்வுகள் 
            தரையிலும் தோன்றின.

• 230 கோடி ஆண்டளவில் உயிரகம் செறிந்த வளிமண்டலம்
            தோன்றியது.

• 100 கோடி ஆண்டுகளுக்குமுன் காளான்கள் தோன்றின.

• தாவரம் 70 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.

• 53 கோடி ஆண்டுகளுக்குமுன் கடல் மீன்கள் முள்ளெலும்புடன்
           தோன்றின.

• 45 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒட்டுத்தோடுடைய 
           இணைப்புடலி உயிரினங்களின் ஒரு வகைப் பிராணி 
          (Arthropods)  நீரிலிருந்து நிலத்தில் வாழத் தொடங்கியது.

• 38 கோடி ஆண்டுகளுக்குமுன் நாற்கால் (Tetrapods) 
           பிராணிகள் மீனிலிருந்து தோன்றின. இவை நீரிலிருந்து
           தலையை வெளியில் நீட்டிச் சுவாசிக்கத் தொடங்கின. இதே
           காலப்பகுதியில் முதலாவது முதுகெலும்பு பொருந்திய தரை
          விலங்குகளும் தோன்றின.

• 36 கோடி ஆண்டுகளின்முன் தாவரங்கள் விதைகளைத் தம்
           விருத்திக்காகத் தந்துதவின.

• 31 கோடி ஆண்டுகளில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன  
          தோன்றின.

• 23 கோடி ஆண்டுகளின்முன் ஊர்ந்து செல்லும் மாபெரும்
          விலங்குகள் (Dinosaurs) தோன்றின.

• 15 கோடி ஆண்டுகளில் பழமையானதும் பறப்பனவற்றிற்கும்
           ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்ட ஓர் அதிசயப் பறவை
           (Archaeopteryx)  இனம் தோன்றியது.

• 7 கோடி ஆண்டுக் காலப்பகுதியில்  பாலூட்டிகள் பெரிதாக
           வளர்ந்தன.

• 3 கோடி ஆண்டளவில்  சில பாலூட்டிகள் டொல்வின் 
           மீன்களாகக் கடலுக்குத் திரும்பின.

• 20 இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆபிரிக்காவில்
           தோன்றினான்.

• எட்டு  (08)  இலட்சம்  ஆண்டுகளுக்குமுன்  நெருப்பின்
           பிரயோகமும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் மனிதன்
           பெற்றுக்கொண்டான்.

• இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் சார்ந்த
           அமைப்பியலான புது நாகரிகப் பண்பாடுடைய மனிதன்    
           ஆபிரிக்காவில் தோன்றினான்.

60 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு சிறிய ஆபிரிக்க குரங்கின் இரு மரபினர்வழித் தோன்றலின் ஒன்றான வாலில்லாக் குரங்கு இனம் எழுந்து நிமிர்ந்து நின்று நடக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றது. இதன் மூளை வளர்ச்சியும் மிகுதியாகப் பெருகியது.

20 இலட்சம் ஆண்டளவில் இந்த வாலில்லாக் குரங்கினத்தை மனித இனமாக வகைப்படுத்தப்பட்டது. மனித இனம் இரு காலுள்ள பாலூட்டும் இனத்தின் குரங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. மனித இனத்தின் மிக நெருங்கிய உறவினர் சிம்பன்சியாகும். (Chimpanzee).

 இஃது இவ்வாறிருக்க மனிதன் எப்படித் தோன்றினானென்பதை மனு நீதிச் சட்ட நூலான சுமிருதி கூறுவதையும் காண்போம்.

• பிரமன் தன் மேனியை இரு கூறாக்கி ஒரு பகுதியை ஆணாகவும் மறு பகுதியைப் பெண்ணாகவும் தோன்றினான்.-(I: 32 )

• உலகின் நற்பேற்றுக்காகப் பிரமன் தன் வாயிலிருந்து பிராமணனையும், தோள்களிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரியனையும் அவதரிக்கச் செய்தான். – (I :31 )   

பல்லினால் அரைக்கும் முறையைச் சீராக்கி, கோரைப் பல்லைக் குறைத்து, குரல்வளையையும் வளைந்த நாவடி எலும்பையும் சரிவுபடுத்தப்பட்டமை மனிதன் கதைப்பதற்கு ஏதுவாயமைந்தது. சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் உள்ள பரிணாம வளர்ச்சி எலிக்கும் சுண்டெலிக்கும் உள்ளதைவிடப் பத்து மடங்கு கூடியதாக அவதானிக்கப்பட்டது. அணுமரபுவழிப் பரிசோதனையில் 98.4 சத வீதம் சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒப்பானதாக இருந்தமையும் காணப்பட்டது.

உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான புது நாகரிகப் பண்பாடுடைய மனிதன் சுமார் இரண்டு  இலட்சம் (2,00,000) ஆண்டளவில் ஆபிரிக்காவில் தோன்றினான். இதை ஓர் இலட்சத்து அறுபதினாயிரம் (1,60,000) ஆண்டுகளுக்கு மேலான புதை படிவமூலம் கணக்கிட்டுள்ளனர்.

நின்டர்தல் (Neanderthals)   என்றொரு தனி இனம் ஆன்மிகத் துறையில் ஊறிய முதல் மனிதனாக இருந்துள்ளமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இறந்த பொழுது சடலங்களை அவர்கள் உண்ட உணவுடனும், பாவித்த கருவிகளுடனும் அடக்கம் செய்து தம் ஆன்மிக உணர்வை வெளிக்கொணர்ந்தனர். இவர்களின் வழித்தோன்றல் அன்றிலிருந்தே அருகிவிட்டது.

தற்கால மனித மூளையின் நிறை 1,400 கிறாம் (1.4 கிலோ அல்லது 03 இறாத்தல்) ஆகும். இதன் கன பரிமாணம் 1,400 கன. சென்ரி மீற்ரறாகும். மனித மூளையானது சிம்பன்சி, கொறில்லா குரங்குகளின் மூளையிலும் பார்க்க இரு மடங்காகும். மனித மூளையின் விரிவுk; வளர்ச்சியும் அவன் உயர்வுக்கு முழுமுதற் காரணமாம்.

மூளையின் பருமன் கூடியபடியால் தலைகள் பெரிதாக வளரமுன் குழந்தைகள் விரைவில் பிறக்கின்றனர். இதன் காரணமாக எளிதில் கூடிய உருமாறும் தன்மையையும் புதிதாகக் கற்பதற்குரிய கூடிய பரும அளவையும் கொண்டுள்ளனர். இத்துடன் அவர்களுக்குக் கூடிய காலச் சார்புநிலையும் (Dependence) தேவைப்படுகின்றது.

ஆதி மனிதனின் மனச் செயற்றிறன் தன் உடலை நிமிர்த்தி நிற்கச் செய்தது. இதனால் அவன் மேல் உறுப்பான கைகளால் பொருள்களைக் கையாளுவதற்கும் கருவிகளைப் பெரிய அளவில் பாவிப்பதற்கும் மற்றைய இனங்களைவிட மனிதன் முன்னிலை அடைந்துள்ளான். இன்று மனிதன் தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பைத் (Antarctica)  தவிர மற்றைய எல்லாக் கண்டங்களிலும் செறிந்து வாழ்கின்றான்.  2012-ஆம் ஆண்டின் உலகச் சனத்தொகை 707 கோடியாகும்.

பொதுநலத் தொண்டுச் செயற்றிறன், உறவினர்க்கிடையில் நிலவும் உறவு போன்றவற்றில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. மொழி பெரும் முன்னேற்றமடைந்தது. கருவிகள் மிக நுட்பமாகச் செய்யப்பட்டன. இவைகள் மேலும் ஒத்துளைப்பையும் மூளை வளர்ச்சியையும் கொடுத்தன.  குடியேற்றமற்ற தென் அமெரிக்காக் கண்டத்தின் தென் முனைப் பகுதிக்கு 11,000-ஆம் ஆண்டளவில் கடைசியாக மக்கள் குடியேறினர்.

ஆதி மனிதர் நாடோடி வேட்டையாடும் சிறு குழுவாக வாழ்ந்தனர். மொழி சிக்கலைக் கொடுத்தபடியால் ஞாபகத் தன்மையிலும் செய்திப் பரிமாற்றத்திலும் சிரமங்கள் ஏற்படப் புது விதமான முறைகளைக் கைக்கொண்டு கருத்துப் பரிமாற்றம் விரைவாகச் செய்தனர்.  திருவள்ளுவருக்கு முன் (தி.மு)  8500 – 7000 ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கில் பயிர் வேளாண்மையும், விலங்குடனான உழவு விவசாயமும் செய்யத்தொடங்கினர்.

இது அயல் நாடுகளுக்கும் பரவித் தனித்துவமாகச் சீவித்து ஒரேயிடத்தில் நிரந்தரமாகக் கமத்தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்தனர். விவசாயம் பெரு விளைச்சலைத் தந்தது. அதேநேரம் அரச வகுப்பினரும் தோன்றினர். அத்தோடு உழைப்புப் பங்கீட்டு (Division of Labour)  முறையும் நடைமுறைக்கு வந்தது. இது பூமியின் முதல் நாகரிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் தி.மு. 4000 – 3000 ஆண்டுகளில் ஏற்பட்டது. இதனோடு பண்டைய எகிப்தும், இந்து ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகமும் தோன்றியது.

 இன்னும் தி.மு. 3000 ஆண்டுகளுக்குமுன் பழமை வாய்ந்ததும் இன்றும் புழக்கத்திலுள்ளதுமான இந்து மதம் தோன்றியது. மேலும் எழுத்து முறை, பதிவுகள், நூல் நிலையம், விஞ்ஞானம் (முதல் நிலை) வியாபாரம், சண்டை சச்சரவு, நிலம் பற்றல், வல்லரசு போன்றன உருவாகியன. தி.மு. 500-ஆம் ஆண்டளவில் மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, ஈரான், கிறீஸ் ஆகிய நாடுகள் ஆதிக்கம் பெற்றன.

இத்தாலியில் கலை, சமயம், விஞ்ஞானம் ஆகியவற்றில் 14-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி தோன்றியது. மேலும் 15-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானம், தொழில் முறை ஆகியவற்றில் ஐரோப்பிய நாடுகளில் பெருமாற்றங்கள் பெற்றன. 1914–1918ஆம் ஆண்டுகளிலும் 1939–1945ஆம் ஆண்டுகளிலும் இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்தன.

அன்றிருந்த சர்வதேச சங்கம் இந்த யுத்தங்களைச் சமரசம் செய்து வைக்க முடியவில்லை. இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாகியது. 1992-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாட்டினம் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கினர். போக்குவரத்தும், தொடர்சாதனமும் முன்னேற்றமடைந்தன. உலகப் பொருளாதாரமும் நாட்டின் அரசியல் நடைவடிக்கைகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தன.

தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் உள்ளடங்கிய அணு படைக்கலம், கணிணி, மரபுவழிப் பண்பியல் சார்ந்த பொறியியல், உலக மயப் பொருளியல், தொடர் சாதனம், போக்கு வரத்து, தொழில் நுட்பம் ஆகியன 1940-ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை உலகின் அநேக பகுதிகளில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் அதிக செல்வாக்கைக் கொடுக்கின்றன. இன்னும் குடியாட்சி, முதலாளித்துவம், சூழ்நிலைச் சுற்றாடல் ஆகியனவும் செல்வாக்கை உயர்த்தி உள்ளன.

உலகச் சனத்தொகை பெருக, நோய், யுத்தம், வறுமை, வன்முறை, தீவிரவாதம், உலகளாவிய வெப்பநிலை ஆகியன தோன்றின. 1957-ஆம் ஆண்டில் ருசிய கூட்டரசு தன் முதலாவது செயற்கைத் துணைக்கோளைக் கோள்வீதியில் செலுத்தியது. திரு. யூரி ககாரின் (Yuri Gagarin) என்பவர் முதலாவது விண்வெளி வீரனானார். அமெரிக்க வீரனான திரு. நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) சந்திரனில் கால் பதித்தார். 20-ஆம் நூற்றாண்டில் ருசியாவும் அமெரிக்காவும் விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர். 

உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு வளர்ச்சியடைகின்றன. அவ்வாறே உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வளர்ச்சியடைந்துள்ளன. புல், செடி, கொடி, மரம், பிராணி, நாற்கால் விலங்கு, பறவை ஆகியவற்றினதும், மக்கள், தேவர், அசுரர், இயக்கர் போன்றோரினதும் உயிர் வளர்ச்சியின் ஏறுநிலைப்பட்டியலை இற்றைக்கு மூவாயிரம் (3000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியர் கூற்றுத் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

                                     ‘  ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
                 இரண்டறி வதுவே அதனொடு நாவே
                 மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
                 நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
                 ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
                 ஆறறி வதுவே அவற்றொடு மனமே
                 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ‘
                                                                                              – ( தொல். பொருள். 571)
மேலும் மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறியுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.
            
                   ‘  புல்ஆகி பூடுஆய் புழுஆய் மரம்ஆகி
        பல்விருகம்ஆகி பறவைஆய் பாம்புஆகி
        கல்ஆய் மனிதர்ஆய் பேய்ஆய் கணங்கள்ஆய்
         வல்அசுரர்ஆகி முனிவர்ஆய் தேவர்ஆய்
         செல்லாஅ நின்ற இத்தாவர – சங்கமத்துள்
         எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
        மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன். ‘

மனிதன் ஒரு தனிக் குரங்கினத்திலிருந்து தோன்றியவன். மற்றைய உயிரினங்களைவிட  மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு உள்ளது. அதுவே அவன் சிறப்புமாகும். இனி, ஆறறிவு மனிதனுடன் உயிர் வளர்ச்சி தடைப்பட்டு நின்று விடுமா?  என்றொரு கேள்விக்கு விடை காணவேண்டிய நிலையொன்று எழுகின்றது. என்றோ ஒரு நாள் ஏழறிவுடன் மனிதன் தோன்றுவான். அவன் அசாதாரண மனிதனாய், தேவநிலையாளனாய், ஆய்வறிவாளனாய், சிந்தனையாளனாய், மேம்பட்ட ஆற்றல் கொண்டவனாய்த் தோன்றி  ‘மாமனிதன்’ (Superman)  என்றழைக்கப்படுவான்.

ஆறறிவு படைத்த மனிதருள் ஒரு சிலர் மிக்க ஆற்றல், அறிவு, தெளிவு உள்ளவர்களாய்த் திகழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம். இவ்வகையில் விவேகானந்தர், காந்தி, யேசு, திருமூலர், நபிநாயகம், திருவள்ளுவர், அகத்தியர், தொல்காப்பியர், ஆறுமுகநாவலர் போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான ஒரு வகுப்பினர் ஏழறிவுடன் தோன்றுவர். அல்லது விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்படுவர். mவர்களே ஏழாம் அறிவுடைய மாமனிதரும் ஆவர்.
                 
wijey@talktalk.net