பாரதிதாசன் கவிதைகளில் இயற்கை!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.

மயில்:-
மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.

சிரித்தமுல்லை:-
மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணில்:-
கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானும் முல்லையும்:-
நம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமா?அது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.
இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.

இயற்கைச் செல்வம்:-
விரிந்த வான் வெளி எங்கும் விளைந்த பொருட்களின் ஆதியாகவும், காற்று, நீர், மண், தீ யெனும் நான்கு பூதந்தகளை உன்னின் திரிபுகளாகவும் கொண்ட புதுமை வடிவமே நீதான். கதிரவனும் நிலவும் உனது வித்துகளேயாகும்.
இவ்வுலகில் அசைவைக் கொடுப்பதும் நீ, அந்த ஒலி அலையை செய்ததும் நீ விருப்பத்தைக் காணும் வண்ணம், அந்த வண்ணம் மூலம் நிலத்தை நான்காய் விரியவும் செய்தாய். அதன் மூலம் பசுந்தமிழை பேசச் செய்தாய், இசைக்கும் தமிழையும் தந்தாய். பறவையின் ஏந்திழையான இனிய குரலால் மனதை அசைக்கவும் செய்தாய். நமது தொல்;லைகள் எல்லாம் விலக்கும் ஆடற்கலை அமையச் செய்ததும் நீ என்று பாவேந்தர் இயற்கைச் செல்வம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை:-
அமைதியான வெளிச்சம் பரவும் அதிகாலை இருட்சோலையில் அழகான தன் குறை வெளிச்சத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பரவுகிறது.
தலைவி கேட்டால் சேவல் எழுந்திருயுங்கள் என்று தன் பேச்சால்.
தமிழின் தேன் பாடு வீடெல்லாம் தனது ஒலிக் கீற்றுகளைப் பரவ விட்டது.
பெற்றவர்கள் நீராடி தன் குழந்தைகளும் நீராடி வந்தவுடன் கூடத்தில் கூடி உணவருந்தினர்.

வானம் பாடி:-

வானம் பாடியதா? ஓலி வெள்ளம் வானிலிருந்து கேட்கிறது. இல்லை வான் நிலவு பாடியதா? தேனை அருந்திய சிறு வண்டுகளின் மேலேறி ரீங்காரம் மறந்து நல்ல இசை பழகியதா? இல்லை நடுங்கும் இடியோ? அல்லது மெல்லிசை பயின்று இனிமை தந்ததோ. வானவூர்தி வானிலிருந்து நல்ல தமிழ் இசையை அசைவின் ஊடே தந்ததோ? இல்லை மூங்கில் குழலோ? யாழோ தனியாக இருக்கும் பெண்ணொருத்தி மக்கள் மகிழ இசைத்தாளோ? இப்படியாக கேட்கும் என் கண் எதிரில் வானம் பாடிக் குருவி வானிலிருந்து இன்ப வெள்ளம் கொடுத்து இசை மழையில் இன்புறுவோம் பச்சை பசுந்தமிழா என்றும் பாவேந்தர் பாடியுள்ளார்.

தென்றல்:-
தென் தமிழகத்தின் பொதிகை மலையிலிருந்து விழுந்த சந்தனம் புதுமணத்தில் கலந்து, பூவின் தாதுக்கள் கொடுத்த தேன் தழுவி, அருவியின் தோள் உந்தித் தூத்துக்குடியின் நல்ல முத்துக்களை கடல் அலையிலிருந்து எடுத்து, மூங்கிலில் பாடலிசை எழுப்பியதாகக் கூறியுள்ளார்;
மாலையிலே சிறு முல்லைப் பூ சிலிர்க்கவும் நெற்கற்கள் முதிர்ந்து அடிதோறும் மடைப் புனலில் நனைந்து சிலிர்க்கவும், தென்றல் காற்று வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி விட்டதென தன் மனைவி அடுக்களைக்குச் சென்றாள் எனவும், வீட்டின் பின்புறப் பகுதியில் அமர்ந்திருந்த என்னைத் தாலாட்டியதால் அங்கிருந்த விசுப்பலகையில் படுத்து விட்டேன் எனவும் தெரிவிக்கிறார்.
தென்றலாகிய பெண் அருகில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசி பழந்தமிழின் இனிய சாறெடுத்து அதனுடன் காதல் கலந்து மிக்க அவசரமாகச் செல்கிறாள் என்றும், மீண்டும் மிக விரைவாக என்னிடம் வரவேண்டும் என்றும் நீ வரும் வேளையில் பூனைகள் செய்யும் நாசத்தால் கோபமுற்றேன். அதில் என் கவலை போகும் எனவும் தென்றலின் வழி உரைத்துள்ளார்.
தனிமை, மாலைநேலம் இவைகளால் துயரப்படும் நம்மை, குளிர்ந்த, மெல்லிய மனங் கொண்டு வரும் தென்றலாய் துயரம் தூளாகும். எனக்கு அறியாமல் வந்த பெண்ணாய் பின்புறத்தில் தொட்டு சிலிர்க்க விட்டாள். மேலும் எனை நெருங்கி சரியாத குழல் தடவி சரிய விட்டாள். அவள் கரத்தால் புரியாத இன்பத்தைப் புரிய விட்டாள். தான் பிரிவுக்கு வருந்துகிறேன் என்றாள் பேசுபவள் மனைவியாகவும், மற்றொருத்தி தென்றலாகவும் இருப்பதாக உவமைப்படுத்தியுள்ளார்.

தமிழின் இனிமை:-
பலாக் கனியினுள்ளே உள்ள சுளையும், முற்றிய கரும்புச் சாறும், பனி மலருள்ளே உள்ளத் தேனும், காய்ச்சியப் பாகிடையுள்ள இனிப்பும், நல்ல பசு பொழியும் பாலும், தென்னையின் இளநீரும் இனியவை. அவை போல்வன தமிழ் என்று கூறியுள்ளார்.
பூங்காவில் வண்டின் ரீங்காரமும், ஓடும் ஓடைத் தண்ணீரும் தரும் இன்பம் குழலில் பிறக்கும் இசையும், வீணைதரும் நல்ல அமுதப் பாடலும், குழந்தைகளின் மழலைப் பேச்சும், பெண்கள் இனிய கொஞ்சல் தரும் வாயும் தரும் இன்பம் போன்று தருவது தமிழேயாம் என்று தன் எண்ணத்தை வெளியுட்டுள்ளார்.
நீல வானத்தில் நிறைய குளிர்ந்த வெண்ணிலவாம், காலைச் சூரியனின் உதயம் அங்கே கடல் மேல் பொன்னொளியாய் மின்னும், மாலைச் சுடரில் செவ்வானம் நல்ல மலைகளின் இன்பக் காட்சி தரும் என்றும் கூறியுள்ளார்.

தென்றல் செய்த குறும்பு:-
என் உடலை துணியால் இழுத்து இழுத்து மூடுகின்றேன். மீண்டும் எடுத்து எடுத்துப் போடுகின்றேன். தென்றலே என் மேலாடையை ஏன் இப்படிச் செய்கிறாய் என பாவேந்தர் பகர்கின்றார்.
செந்தாழம்பூ வாசம் கொண்டு குலுக்கி நடக்கும் பெண்களின் பாவாடையை குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்கிறாய்.
கன்னத்தைத் தொட்டு காதில் முத்தமிட்டு செந்தாமரை முகத்தினை ஏன் கருங்குழலால் மூடுகிறாய் என்றும், தன் உடலை குளிரச் செய்து மிக மிக இன்பத்தை ஊட்டுகிறாய் என்றும் தென்றலைக் குறித்து விளித்துள்ளார்.

கடல்மேற் குமிழ்கள்:-
பச்சைப் பட்டு விரித்தது போன்று பசும்புற்கள். விசும்பி தரையை நிறைத்துள்ளன. முல்லைப்பூ படர்ந்து விளாவை அளாவச் செல்வச் செழுமலர் கொன்றையைத் திரட்டி, ஆயிரம் கிளைகள் கொண்ட கைகளால் அளித்து நிற்கிறது. இதைப் பார்த்து வாய் அடங்காத மணிப்புறா புன்னை மரக்கிளையில் தென்றலின் இன்பத்தோடு பாடுகிறது. மின்னலைப் போன்ற ஒளி அன்ன நடையோடு அணுகினாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வளர்க்கப்படும் மயில் மரத்தடியில் ஓடி ஆனந்தப்பட்டு, கிளிப்பேடு கெஞ்சிய சேவற்கிளியை வஞ்சித்து மகிழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக் கவிஞராகத் தன்னை இனம் காட்டிய பாவேந்தரின் பாடல் வரிகளில் இயற்கையின் அழகு மிளிர்வதைக் காணலாம்.

chandrakavin@gmail.com