”பாராளுமன்றத்தில் வைகோ“: நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் ..

”பாராளுமன்றத்தில் வைகோ“: நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் ..தோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின்  நோபல்பரிசு பெற்ற  காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தனக்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.

சமீபத்தில் எனக்குப்பிடித்த இரு நூலகளைப் பற்றி சொல்கிறேன். அமரர்   பொன்னியின் செல்வன் பற்றிய வை.கோவின் உரையில் சோழர்களின் பெருமை பற்றி  அற்புதமாகச் சொல்வார். சோழன் கடாரம் கொண்டவன். அந்த கடாரம் மலேசியாவின் கெடா மாநிலப்பகுதி. மலேசியாவில் சயாம் பர்மா  இரயில் பாதை போடும் பணியில் நாற்பதுகளில் 2 லட்சம் தமிழர்கள் பலியாக்கப்பட்டார்கள். அதை பற்றி சொல்லும் நூல் சயாம் பர்மா இரயில் பாதை. அதேபோல் கொங்கு நாட்டில் இரயில் பாதைகள் பற்றின போராட்டம் ஒன்றை வை.கோ. கடந்த 5 ஆண்டுகளாய்    நடத்தியிருக்கிறார். எத்தனைப் போராட்டங்கள். எத்தனை கூட்டங்கள்.பொள்ளாச்சி கேரளா கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது. உடுமலை சேலம் கோட்டத்துடன் இருப்பது காரணமாய் வஞ்சிக்கப்பட்டிருப்பது போராட்டத்தின் மையம்.இன்னும் உடுமலை பழனி ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரவைல்லை.எத்தனை பேரணிகள். இவற்றை உடுமலை ரவி ஒரு நூலாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இவை இரண்டு சமீபத்தில் என்னை பாதித்தவை. உடுமலை திண்டுக்கல் இரயில் பாதை பிடுங்கியெறியப்பட்டு புது பாதை முழுமையடையவில்லை. சாதாரண மக்களுக்கான குறைந்த கட்டண ரயில் பயணம், பாதுகாப்பான பயணம் பற்றியவை அடிப்படிடை உரிமை சார்ந்தது அவரின் போராட்டம்.இது போல் தொடர்ந்து அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர் வை.கோ.இது போல் அணுசக்கிக்கெதிர், நதி நீர் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு  என்று அடிப்படை உரிமைகளுக்காகத்  தொடர்ந்து போராடுகிறார். அவரின் தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் எனக்கு கார்ஸனின் “ மவுன வசந்தம் “ நூலை ஞாபகப்ப்டுத்துகிறது. கார்ஸனின் அந்த நூல் 1962 ல் வெளிவந்தது.நாற்பதுகளில் உலகின் பல பாகங்களில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக  இருந்த மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டி. மருந்துக் கொல்லி சிறு நுண்ணுயிர்கள், வண்ணத்துப்பூச்சிகள்,மீன்களை கொல்லும் இயல்புடையது. அமெரிக்காவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்ற கழுகையும் கொன்றது. மனிதனுக்கும் ஆபத்தானது. இதை கார்ஸன் தந்து நூலில் விவரித்திருந்தார். அதன் பின் எழுத்தாளர்கள், சுற்றுசுழலாளர்கள்  இணைந்து பல் போராட்டங்களை நடத்தினர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி அதைப்பற்றி ஆராய ஒரு கமிசனை நியமித்தார். அது மனிதர்கள் மீதான ஆபத்தை ஒத்துக் கொண்டு  டி.டி.டி பயன்பாட்டை மெல்ல குறைத்துக் கொண்டு பின் முற்றிலும் தடை செய்யப்பட்ட்து. 1964ல் கார்சன் மரணமடைந்தார். 2001ல் கார்சனின் சுற்றுச்சூழல் பணிக்காக அமெரிக்காவின் உயரிய விருது தரப்பட்டது.அதேபோல் வை.கோ.வின் சுற்றுச்சூழல் போராட்டங்களும், சுத்தமான தண்ணீர், நதி நீர் பாதுகாப்பு  குறித்த போராட்டங்களும் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் .

     தாகூரின் 150 வது பிறந்த தின கொண்டாட்ட ஆண்டு இது .தாகூரின்  “ எங்கே பயமில்லாமல் இருக்கிறதோ..” என்ற கவிதையின் அடையாளமாய் வை.கோ. பாராளுமன்றத்தில் பேசிய பல பேச்சுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா இந்து நாடென்றால் சிதையுறட்டும், இந்திராவின் பேச்சுசுகளை இந்த நூற்றாண்டின் மகத்தான பொய்கள், இந்தியாவின்  மைலாய் இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை, கல்வி காவி மயமாக்க் கூடாது, இந்தியாவின் மனிதாபிமானம் அரைக் கொடி கம்பத்தில் பறக்கிறது, இலங்கையில்  இந்திய ராணுவத்தின் அத்து மீறல்கள் என்று பயமில்லாத மனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  இது போன்ற புத்தகங்கள் பல தலைமுறைகளுக்கு பேசப்படும் இயல்பு கொண்டதாகும். நுணுக்கமான நம்பகமான தகவல்கள், பாராளுமன்றத்தில் வை.கோ எழுப்பும் தார்மீகக் கேள்விகள், அறம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த நியாயங்கள் ஆகியவை நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.சொல்லும் பாணியில் இருக்கிற இலக்கியத் தரம் கவனிக்கத் தக்கது. உரையின் ஊடாக ஸ்பார்டகஸ், கசபிளாங்கா, உலக இலக்கிய பாத்திரங்கள், இந்திய புராண கதைகளின் உவமைகள் அடுத்த நிலைக்கு புத்தகத்தை, நல்ல வாசிப்பிற்குக் கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கையேடாக்குகிறது.

  இதில் ஓரிடத்தில் எழுத்தாளர் குஷ்வந்த்சிங்   சிறுபான்மை சீக்கியர் மீதான வன்முறைக்கு எதிரான வை.கோ.வின் குரலை பாராட்டி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார். குஷ்வந்த்சிங் 20 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாத ஆனந்தவிகடன் பேட்டியில்  தமிழர்களின் நம்பிக்கைக்கான ஒரே அரசியல் தலைவர்  வை. கோ.என்பதை உறுதிப்படுத்தியிருப்பது அவரின் தொடர்ந்த செயல்பாட்டை கவுரவத்துள்ளாக்குகிறது.

     அவரின் பேச்சுசுகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தது  இன்று புத்தகப் பதிவு பெற்றுள்ளது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அந்த மொழிக்குள்ளேயே ஜீவிப்பதில்லை. எந்த மொழியையும் கடந்து செல்லும் இந்த நூலும் குறைந்த பட்சம் இந்திய மொழிகளில்  இளம் தலை முறை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையேடாக மையும். அவை எழுப்பும் மனித உரிமை சார்ந்த  கேள்விகள் இந்திய தேசியம்  என்பது மாயை என்பதை நிலைநிறுத்தும்.

     பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரின் குரல் திட்டமிட்டு பாராளுமன்றத்தில் ஒலிக்காமல் முடக்கப்பட்டிருக்கிறது ஆனால் இந்தப் புத்தக வீச்சு இன்னும் பல மடங்கு வீரியமாய் ஒலிக்கும்.அவரின் பேச்சின் வலிமை பாராளுமன்றத் தூண்களையும் அசைய வைப்பது போல் ஒவ்வொரு கலாச்சார தூணையும் அதிரவைக்கும் இயல்பு கொண்டது. என் பேச்சின் வலிமை தமிழர்களுக்கு , தமிழ்நாட்டிற்கு, தமிழ்  மொழிக்குப் பயன் படட்டும் என்கிறவர் அவர். அவரின் நீண்ட பயணங்களில்  இனியும்   இது ஒலிக்கட்டும். திருப்பூரில் இவ்வாண்டு தீபாவளியின் போது 2 தினங்களில்  5 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது,தமிழ் சமூகமே மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து மீட்டெடுப்பது அவசியம். இதுவரை தமிழ் மக்கள் 49, 05,000 பேர் உலக சரித்திரத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஈழப்போராட்டம், சயாம் பர்மா ரயில் பாதை போடும் பணி, சுனாமி, வெள்ளம், காலனிஆதிக்க கொடுமைகள், காணாமல் போனவர்கள் என்று… மதுவால் தமிழன் தற்கொலைக்குள் மூழ்கி காணாமல் போய்க்கொண்டிருக்கிறான். அதிலிருந்து தமிழனை மீட்க டிசம்பர் மாதத்திலான வை.கோ.வின் நீண்டபயணம் ஆயிரம் புதிய பூக்க்களை மலரச்செய்கிறதாக இருக்கும்.. ஒற்றை கலாச்சார பண்பாட்டை, உணவு முறையை, வாழ்க்கை முறையை முன்வைக்கும் உலக ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுகளும் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குஎதிரான போக்கை தொடர்ந்து வை. கோ. தன் படையுடன் எதிர் கொள்ளும் ஒரு குரூர சூழல் இன்றைக்கு உருவாக்கப்படிருக்கிறது. அதை வை.கோ தன் பலத்தால் எதிர்கொள்வார். தமிழ் இன மீட்சிக்காக அவர் தொடர்ந்து போராடும் அடையாளமே அவரின் பூரண மது விலக்கு போராட்ட நெடும் பயணம் என எண்ணுகிறேன்

. ( பாராளுமன்றத்தில் வை.கோ.  தொகுப்பு: செந்திலதிபன், விலை ரூ 450, தாயகம், சென்ன்னி

subrabharathi@gmail.com