பாரிஸ் மாநகரில் ‘அனலைத் தென்றல்’ விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

பாரிஸ் மாநகரில் 'அனலைத் தென்றல்' விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!“சிறுவர் இலக்கியம் படைப்பது மகத்தான பணியாகும். புலம்பெயர்ந்த மண்ணில் எம் சிறார்களின் மொழி ஆளுமைக்கு உதவத் தமிழ்மொழியில் சிறுவர் இலக்கியம் அதிகமாகப் படைக்கப்பட வேண்டியது அவசியமாகும். சிறுவர்க்கான மனநிலையிலிருந்து அவர்களுக்கான பாடல்களைப் படைப்பதில் சில பெருங்கவிஞர்களே தோற்றுவிடுகிறார்கள். ஆசிரியராக அனுபவம் பெற்றவரும் பாலர்கல்வியில் விசேட பயிற்சிபெற்றவருமான பத்மா இளங்கோவன் சிறுவர் பாடல்கள்,குழந்தைப் பாடல்கள் படைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். அவர் படைத்துள்ள பாடல்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,தமிழகத்தில் சிறந்த பரிசான ‘சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின்” சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசினையும் அவர் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும். அவர் மேலும் இலக்கியத்துறையில் சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள்” இவ்வாறு,பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற ‘அனலைத் தென்றல்” விழாவில் ஐந்து நூல்களை வெளியிட்டு உரையாற்றிய ‘கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

‘பிரான்ஸ் அனலைதீவு மக்கள் ஒன்றியம்” நடாத்திய ‘அனலைத் தென்றல்” விழாவில் விசேட நிகழ்வாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.  பத்மா இளங்கோவனின் ‘செந்தமிழ் மழலைப் பாடல்கள்,செந்தமிழ் சிறுவர் பாடல்கள்”,நாவேந்தன் கதைகள்,’காப்பியக்கோ” ஜின்னா செரிபுதீனின் ‘எல்லாள காவியம்” ‘Tamil Stories from France” – (வி. ரி. இளங்கோவன் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகிய ஐந்து நூல்கள் விழாவில் வெளியிடப்பட்டன.

பாரிஸ் மாநகரில் 'அனலைத் தென்றல்' விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

நூல்களை வெளியிட்டுவைத்துக் ‘கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘காலஞ்சென்ற நண்பர் நாவேந்தன் பல்துறைச் சாதனையாளர். அவரை யான் நன்கறிவேன். தலைசிறந்த பேச்சாளர்,சிறந்த எழுத்தாளர்,கவிஞர்,அரசியல் – தொழிற்சங்கவாதி. தனது பேச்சாலும் எழுத்தாலும் தமிழ்த் தேசிய உணர்வையூட்டிய பெருமைக்குரியவர்;.  தொடக்க காலத்திலேயே கவிதைப் போட்டிகளில் – பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றதோடு அன்றே சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றவர். அரசியலில் அன்று பாராளுமன்றம் செல்லும் வாய்ப்புக்குரியவராகவிருந்தும் அதனைவிடுத்துக் கட்சிப்பணியாற்றியதோடு ஆசிரியர்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர். அவரது சிறுகதைகள் பலவற்றைத் தொகுத்து வெளிவந்த ‘நாவேந்தன் கதைகள்” நூலினை வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

பாரிஸ் மாநகரில் 'அனலைத் தென்றல்' விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

அடுத்து அவரது சகோதரர் வி. ரி. இளங்கோவனின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினைப் பற்றிக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி. இளங்கோவன் சிறுகதைகளை யான் வாசித்திருக்கிறேன். அவரது கதைகள் ஏற்கனவே இந்தி மொழியிலும் வெளிவந்து 2012 -ம் ஆண்டு புதுடில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்திலும் வெளியிடப்பட்டதை யான் அறிந்திருக்கிறேன். அவர் சிறந்ததோர் படைப்பாளி. ஒரு குடும்பத்தில் அத்தனைபேரும் கல்வியாளர்களாக,எழுத்தாளர்களாக மிளிர்வது பாராட்டுக்கும் பெருமைக்குமுரியதாகும்.

அடுத்து ‘காப்பியக்கோ” ஜின்னா செரிபுதீன் படைத்த ‘எல்லாள காவியம்” குறித்துச் சொல்;வதில் மகிழ்ச்சி. மன்னனின் வரலாற்றினை காப்பியமாகப் படைப்பது சிரமமான காரியம். அதற்கான வரலாற்றாய்வு – மொழியாற்றல் – இலக்கண அறிவு – புலமை அவசியம். அந்தவகையில் காப்பியக்கோ வெற்றிபெற்றுள்ளார். அவர் பல காப்பியங்ளைப் படைத்துள்ளதாகவும் அறிகிறேன். அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்” எனக் ‘கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார். வி. ரி. இளங்கோவன் ஏற்புரை வழங்கினார்.

பாரிஸ் மாநகரில் 'அனலைத் தென்றல்' விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இலண்டனிலிருந்து வருகைதந்த கலாநிதி சிவசம்பு ஆதித்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்;. அவர் தமதுரையில்,’அனலை மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டுமெனவும், பிள்ளைகளின் கல்வியில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும், கல்வியினால் எம்மக்கள் உயர்நிலை பெறவேண்டுமெனவும் வலியுறுத்தினார். ‘அனலைத் தென்றல்” சிறப்பு மலரையும் வெளியிட்டு வைத்தார்.

வண்ணை தெய்வம்,லினோதினி சண்முகநாதன்,கி. ஜெகதா,மு. நடராசா ஆகியோர் வாழ்த்துக் கவிதை வழங்கினர். பிரான்ஸ் நாட்டில் செயற்படும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்,நயினாதீவு அபிவிருத்திக் கழகம்,வேலணை மத்திய மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வாழ்த்துரை வழங்கினர். பரத நாட்டியம்,வாத்திய இசை,நாடகம் ஆகியனவும் விழாவில் இடம்பெற்றன.
 
vtelangovan@yahoo.fr