‘பாலியல் இலஞ்சம்’

ஶ்ரீ ரெட்டி!– நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் ‘பாலியல் இலஞ்சம்’ என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட  வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள்  எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். –  பதிவுகள் –


நடிகை ஶ்ரீ  ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.

எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் – பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.

பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.

இப்படியான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் தமது சமூக, குடும்ப, தனிப்பட்ட, மற்றும் உளவியல் காரணங்களினால் இதற்கு இணங்கவோ, அல்லது மறுக்கவோ செய்கிறார்கள். இது எப்படி முடிந்தாலுங்கூட,  இங்கு ஆண்கள், தம்மிடம் உள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பெண்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வளங்களை, வாய்ப்புகளை, உரிமைகளை மறுத்து, பாலியலை இலஞ்சமாக பெற்றுக்கொள்ள முனைகிறார் என்பதே அடிப்படையான பிரச்சனையாகும். இப்படியாக ஆண்கள், தம்மிடம் ஆணாதிக்க சமுதாயம் ஒப்படைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பெண் உடலை அத்துமீறியிருக்கிறார்கள் அல்லது மீற முயன்றார்கள் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும்.  

Me Too Movement
இப்படியாக பெண்கள் மீது பாலியல் ரீதியாக நடத்தப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக – பாலியல் தொல்லைகள், வன்புணர்வுகள், பாலியல் இலஞ்சம் கோரல் போன்ற பலவிதமான அத்துமீறல்களுக்கும் எதிராக – இப்போது பெண்கள் உலகலாவியரீதியாக போராட தலைப்பட்டுள்ளார்கள். ‘Me Too’ இயக்கம் என்பது இதன் வெளிப்பாடேயாகும். பலகாலமாக இப்படியாக தாம் பாலியல்ரீதியாக துண்புறுத்தப்பட்டதை, சுரண்டப்பட்டதை, சகித்துக்கொண்டு இருக்க நேர்ந்ததை வெளிப்படுத்தும் இந்த பெண்களைப் பார்த்து, அசட்டுத்தனமான கேள்விகை யாரும் கேட்பதில்லை. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்திலேயே நாம் இந்த பிரச்சனையை முகம் கொடுக்கிறோம் என்பதையும், எமது எதிர்வினைகளை இந்த பின்னணியில் வைத்துமே நாம் பார்க்க முனைய வேண்டும்.  

முதலில் ஶ்ரீரெட்டி இந்த பிரச்சனையை உரிய மட்டத்திலேயே, நடிகர் சங்கத்திலேயே முறையிட்டிருக்கிறார். இவரது பல்வேறு தோல்விகளினதும் முடிவிலேயே அரை நிர்வாண போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக இவர் தனது முழு எதிர்காலத்தையும் பணையம் வைத்திருக்கிறார். அவரது சமூக கௌவரம், அந்தஸ்த்து, நடிப்பு தொழிலின் எதிர்காலம், எதிர்கால குடும்ப வாழ்வு போன்ற அனைத்தையுமே இங்கு இவர் பணையம் வைத்துத்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார். ஒருவர் எந்தளவிற்கு கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார், இப்படியாக தனது முழு எதிர்காலத்தையும் பணயம் வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கத் துணிவார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் அல்லவா? இந்த பிரச்சனையை நாம் எவ்வாறு முகம்கொடுப்பது என்பதுதான் இப்போது எம்முன்னுள்ள பிரச்சனையாகும்.

பரபரப்பான செய்திகளை உருவாக்குவதன் மூலமாக மலிவான பிரச்சார உத்தியில் ஈடுபடுகிறார் என்பது அப்பட்டமான ஆணாதிக்க வாதமாகவே எனக்கு படுகிறது. Deal Making, கொடுக்கல் வாங்கல் போன்ற வார்த்தையாடல்கள் இந்த பிரச்சனையின், அவர் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் பாரதூரமான, தீவிரமான தன்மை புரியாததன் விளைவாகவே எனக்குப் படுகிறது.  பாலியலை எந்த வாய்ப்பு கருதியும் வழங்குவதற்கு அவரொன்றும் பாலியல் தொழிலாளி கிடையாது. நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கே பாலியல் இலஞ்சமாக கேட்கும் ஒரு சமுதாயத்தில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரலாகவே நாம் இதனை பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட விடயங்களில் சம்பந்தப்பட்ட சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும், பொதுப்புத்தி மட்டத்தில் பேசும் சிலரும் மேலே குறிப்பிட்ட விதத்தில் கருத்துக்களை கூறுயிருப்பது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆணாதிக்க சித்தாந்தம் இவர்களின் குரலில் வெளிப்படுவது ஆச்சரியமானதல்ல. ஆனால் தம்மை முற்போக்காளர்கள்,ஜனநாயக சக்திகள், பெண்விடுதலைக்கு ஆதரவானவர்கள்… என்றெல்லாம் காட்டிக்கொள்பவர்கள் கூறும்போதுதான் இவர்களது ஆணாதிக்க வெளிப்படுவதை நாம் காண முடிகிறது.

அரசிற்கு எதிராக நிர்வாண போராட்டத்தை முன்னெடுத்த மிசோராம் பெண்கள்
இந்த நடிகையின் நிர்வாண போராட்டம் பற்றி விமர்சிப்பவர்களில் பலர், சில காலத்திற்கு மிசோராம் மாநில பெண்கள் நிர்வாணமாக  நடத்திய போராட்டங்களுக்கு பெரும் ஆதரவாளர்களாக இருக்க முடிந்தது எவ்வாறு என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதவாறு எழுகிறது அல்லவா?

இந்த விடயம் தொடர்பான பல ஆண்களது எதிர்வினைகளை பார்த்தபோது, இவர்கள் எந்த உலகத்தில் இருந்து வருகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. “ஊசியும் – நூலும்” கதை, அவரது உடை, அவர் அந்த நேரத்தில். ஒரு ஹோட்டலுக்கு தனியாக போனது…போன்ற பல்வேறு, விடையே கிடைக்க முடியாத கேள்விகளை இந்த முட்டாள்கள் முன்வைக்கிறார்கள்.

மேற்கூறிய கேள்விகள் எதுவுமே நான் முன்வைக்கும் ‘பாலியல் இலஞ்சம்’ குறித்த பிரச்சனையுடன் சம்பந்தப்படுத்த முடியாதவை என்றபோதிலும், அப்படிப்பட்ட கேள்விகள் பொது அரங்கிற்கு வந்த பின்னர், அவற்றிற்கான பதில்களையும் அளித்து செல்வதே இந்த விவாதத்தை முழுமைப்படுத்தும் என்று கருதுவதால், இவற்றையும் நாம் இங்கு எடுத்துக்கொள்வோம்.

இப்போதெல்லாம், பாலியல் வன்புணர்வு  தொடர்பான வழக்குகளில், நீதி மன்றங்களில் இவர்கள் கூறும் சப்பை நியாயங்கள் எதுவுமே எடுபடுவதில்லை என்பதை அறியாத அளவிற்கு அசடர்களா என்று தெரியவில்லை. இன்றைய நீதியின் முன்னாள் ஒருவரது உடை, அவர் நடமாடும் நேரம், இடம், அவரது நடத்தை போன்ற எவையுமே, ஒரு ஆணால் அவரது உடல் அத்துமீறப்படுவதற்கான காரணமாக, நியாயமாக கருதப்படுவதில்லை. ஆண் – பெண் பாலியல் உறவைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் என்பது மிகவும் முக்கியமான, தீர்க்கமான அம்சமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே, அந்த குற்றத்திற்கான காரணங்களை தேடும் அயோக்கியத்தனங்களை எதிர்த்தே மேற்கு நாடுகளில் ‘Slut Walk’ போன்ற இயக்கங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன. பெண்கள் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும் சமுக நிகழ்விற்கு எதிரான எவருமே, தமது கருத்துக்களை பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக முன்வைக்க முனைய மாட்டார்கள். மாறாக இவர்களது இலக்காக அமைய வேண்டியது, இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடும் ஆண்களாகவே இருக்க வேண்டும். பெண்களை பற்றிய ஆணாதிக்க கண்ணோட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றாங்கள் ஏற்படாத வரையில் நிலைமைகளில் அதிகம் மாற்றங்கள் ஏற்பட்டுவிடமாட்டாது. சிறுமிகள் தொடக்கம், வயோதிப பெண்கள், மிகவும் பாரம்பரியமாக உடைகளை அணிபவர், வீட்டிலேயே இருக்கும் பெண்கள் போன்ற பல்வேறு தரப்பு பெண்களும் பாலியல் தாக்குதல்களுக்கு இலக்காவதற்கு காரணம் பெண்களது உடையோ, அவர்கள் பொது வெளியில் இரவு நேரங்களில் நடமாடுவதோ கிடையாது. மாறாக, பெண்கள் தொடர்பாக ஆணாதிக்க சமுதாயம் கட்டமைத்திருக்கும் மனநிலைதான் என்பதை நாம் கவனிக்க

இந்த விடயம் தொர்பாக அண்மையில் வெளிவந்த இந்தித் திரைப்படமான ‘Pink’ ஐ அனேகமாக அனைவருமே பார்த்திருப்பார்கள். அதிலே பெண்கள் மீது – அவரது உடை, நடத்தை, நடமாட்டம், செயற்பாடுகள் போன்றவற்றின் மீது- ஆணாதிக்க சமுதாயம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், அவற்றை மீறும்போது அந்த பெண்பாலியல் வல்லுறவிற்கு அவாவுவதாக ஆணாதிக்க சமுதாயம் எடுத்துக்கொள்வதன் அபத்தம் பற்றியும் விளக்கியிருப்பார். கூடவே ‘No’ என்பது ஒரு சொல் அல்லவென்றும், அதுவொரு வசனம் என்றும் விளக்குவார். அந்த வார்த்தைக்குப் பின்னர் வேறு எந்த நியாயமும் ஒரு பெண்ணின் உடலை அத்துமீறுவதற்கான காரணமாக ஆகிவிடமுடியாது என்று அழகாக விளக்குவார். “ ஒருவர் உனக்கு தெரிந்தவராக, நண்பியாக, காதலியாக, மனைவியாக, ஏன் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவர் No என்று சொல்லிவிட்டால், அவரது மறுப்பை மீறி அவரது உடலை அத்துமீறுவதற்கான உரிமை எவருக்குமே கிடையாது என்று நெற்றியில் அடிப்பது போல அந்த திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் திட்டவட்டமாக கூறியிருப்பார். ஆனால் இங்கு கருத்தை பலவிதமாக தெரிவிக்கும் கருத்து கந்தசாமிகளுக்கு இப்படிப்பட்ட ஒரு வாதம் இருப்பதே தெரியாமலா இருக்கிறது.

ஆணாதிக்க சமுதாயமானது ஒரு பெண்ணை சுயமான சிந்தனையும், அந்த சுயசிந்தனை அடிப்படையில் முக்கியமான முடிவுகளை எடுத்து அவற்றை சரிவர செயற்படுத்தும் வல்லமையும் இருக்கும் ஒரு சக மனிதியாக கருதுவதில்லை. இப்படியாக பெண்களது ‘தன்னிலை’ (Subjectivity) மற்றும் ‘செயலாண்மை’ (Agency) போன்றவற்றை மறுத்து, வெறுமனே ஒரு ‘பாலியல் நுகர்பண்டமாகவே’ கருதி அணுக முனைகிறது. இதனால் சமூகத்தில் யதார்த்தமாக ஏற்படும் பல ஆண் – பெண் உறவுகள் முதலில் இந்த ‘பாலியல் நுகர்பண்டம்’ என்ற விம்பத்தில் இருந்து எழும் பிரச்சனைகளை சதா முகம்கொடுத்து போராடியாக வேண்டியுள்ளது. ஆண்கள் பலரும் மிகவும் இயல்பானதாக (granted) ஆக எடுத்துக்கொள்ளும் பல விடயங்களை, பெண்கள், கணத்த போராட்டங்களின் ஊடாகவே அன்றாடம் வென்றாக வேண்டியுள்ளது.

சாதாரணமாக வீதியில் நடமாடுவது, பொதுப்போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பது, சமூக ஊடகங்களில் தமது படத்தை வெளியிடுவது, தமது சொந்த கருத்துக்களை தயங்காமல் வெளியிடுவது, வேலைத்தளங்களில் சக ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் போன்ற ஒவ்வொரு தளத்திலும் பால்வாத தாக்குதல்களை அன்றாடம் முகம்கொடுத்தே ஒரு பெண் தனது அன்றாட காரியங்களையே செய்தாக வேண்டியுள்ளது. இப்படியாக தனது இருப்பை நிலைநிறுத்தவே அன்றாடம் மல்லுக்கட்ட வேண்டிய நிலைமை இருக்குமாயின், ஒரு பெண் எவ்வாறு தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் விதத்தில் செயற்படுவது சாத்தியப்படும் என்ற பிரச்சனை எழுகிறது அல்லவா?

ஒருவிதத்தில் பெண்ணை பாலியல் நுகர்பண்டமாக்குவது என்பதுகூட, பொது வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவற்றில் இருந்து மிகவும் தள்ளிவைப்பதற்கான ஒரு ஆணாதிக்க தந்திரமாகவும் நாம் புரிந்து கொண்டாக வேண்டியுள்ளது. ‘சினிமாவில் பெண்கள்’ என்பது கதை மாந்தர் தொர்பானது மாத்திரமல்ல, நடிகைகள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பற்றியதாகவும் பேசப்பட வேண்டும்.

சினிமாவில் இப்படிப்பட்ட பாலியல் சுரண்டல்கள் நடைபெறுவது என்பது நீண்டகாலமாகவே நாம் அறிந்துவந்த ஒன்றுதான். இப்போது பாதிக்கப்பட்ட ஒரு பெண், தானாக முன்வந்து  பலர் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்றால், அதனை தீவிரமான பிரச்சனையாக கருதி, முறையான விசாரணைகளை மேற்கொள்வதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். இப்படிப்பட்ட ஒரு செயல்முறைதான் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் பல்வேறு துறைகளிலும் எழுவதை, முழுமையாக ஒழுக்காவிட்டாலும், குறைக்கவாவது உதவும்.

ஆகவே பாதிக்கப்பட்டவர் மீது நாமும் பழியை போடாமல், இது தொடர்பான விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இது போன்ற குற்றச் செயல்களுக்கு எதிரான சமூக மனநிலையை கட்டமைக்க முயல்வோம்.

நன்றி: https://www.facebook.com/notes/ragul-chandra/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/2110429039282358/?fref=mentions