பிரமிளின் புனைவுலகு

பிரமிள்[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, ‘குவாண்டம்’ இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார்.  இதனைத்தான்  ‘விஞ்ஞானம் – ஞானம் – விபூதிப்பட்டை’, ‘விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்’ போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில ‘பதிவுகளி’ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்]

 தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் பிரமிளின் கவிதைகள் என்றும் நிலைத்திருக்கும் தனித்தன்மை மிக்கன. அவர் புனைகதை ஆக்கத்திலும் தீவிரமாகச் செயற்பட்டது பெரிய அளவில் பிரபல்யமடையவில்லை. கவிஞர் என்ற ஆகிருதியானது. அவரது புனைவுலகின் வீச்சினை மட்டப்படுத்தியுள்ளது.  அவ்வப்போது வெளியான சிறுகதைகளை, இன்று ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது திகைப்பை ஏற்படுத்துகின்றது. கடந்த நாற்பதாண்டுகளில் வெளியான புனைகதைகளுக்குச் சவால் விடும் வகையில் பிரமிள் நுட்பமான கதைகளை எழுதியுள்ளார். இன்று நவீன மோஸ்தராகக்  கருதப்படும் புதிய போக்குகள் ஆரவாரமின்றிப் பிரமிளால் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளன. அவருக்குக் கதை சொல்லலில் நவீனக் கோட்பாடுகள், இசங்கள் குறித்துப் பெரிதும் அக்கறையில்லை. தேர்ந்த வாசகராக உலக இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த பிரமிள், தமிழில் அசலான படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

எழுபதுகளில் தமிழிலக்கியத்தினைப் பீடித்த ‘சோகை’ நோய் இன்று முற்றிவிட்டது. மேலை இலக்கியம் மேன்மையானது. தமிழில் அசலான படைப்புகளைவிட மொழிபெயர்ப்புகள் அதியற்புதமானவை என்பன போன்ற புனைவுகள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பினுக்குள் பொதிந்துள்ள நுண்அரசியலைப் புரிந்திராத வாசகர்கள் வறண்டு கொண்டிருக்கின்றனர்.  இத்தகையச் சூழலில் புனைகதை ஆக்கத்துடன் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருந்த பிரமிளின் ஆக்கத்திறனை மதிப்பிட வேண்டியுள்ளது.

முதன் முதலாக இலத்தீன் அமெரிக்க இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்தது நான்தான் என்று சிலர் இன்று பெருமை பாராட்டுகின்றனர். பிரமிள் எழுபதுகளிலேயே முக்கியமான மேலைநாட்டுப் புனைகதைகளைத் தமிழாக்கியவர் என்பதனை வசதியாக மறந்து விடுகின்றனர். பிரமிள் தான் வாழ்ந்த காலத்திலே தனது படைப்புகள் குறித்துப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். எப்படி விமர்சித்தாலும் நவீனத் தமிழ்ப் புனைகதை பிரமிளிடமிருந்து தொடங்குகிறது என்று உறுதியாகச் சொல்லவியலும்.

தமிழ் மரபில் வைதீக நெறிக்கு எதிரான போராட்டம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் சநாதனம் சகல மட்டங்களிலும் உச்ச நிலையை அடைந்த போது அதற்கெதிரான கலகக்குரல் ஓங்கி ஒலித்தது. மனிதனைச் சாதியின் பெயரால் இழிவுக்குள்ளாக்கும் ஒடுக்குமுறையினை எதிர்ப்பதனைப் பிரமிள் தனது வாழ்வின் அங்கமாகவே கருதினார். எனினும் படைப்பாக்கத்தில், எந்த இடத்திலும் நேரடி போதனையில் இறங்கிவிடவில்லை. புனைவுகளின் வழியே ‘சொடக்’ என்று சநாதானத்தின்மீது சவுக்கினைச் சுழற்றுகின்றார்.

அவருக்குள் கனன்றுகொண்டிருக்கும் தார்மீகக் கோபம் சிறந்த கதைகளாக வெளிப்பட்டுள்ளன. பாதாளச் சாக்கடைக் குழிக்குள் மூழ்கி அடைப்பினைச் சீராக்கிவிட்டு, மலக் குவியலுக்கிடையில் தலையை வெளியே நீட்டும் சாமுண்டி மணமகனாகத் திருமணத்திற்கு வருகிறான் என்று அங்கதமாகக் குறிப்பிடும் பிரமிள் ‘சாமுண்டி’ கதையில் பல்வேறு உடைப்புகளை நிகழ்த்தியுள்ளார். அக்கதையின் முதல் பத்தி அழுத்தமான சமூகச் சித்திரம். ‘அயோத்தி, அத்தினாபுரம், காவிரிப் பூம்புகார், சைதாப்பேட்டை, ரோட்டுக்கு கீழே இன்னொரு ரோடு. மேலே மனுஷன் போறான் வாறான். கீழே கொதக்குப் பிதக்குன்னு பிராய்டு வீட்டு அன்கான்ஷஸ் மைன்டாட்டம் நகர்ந்துவிட்டு வருது இம்மாம் பெரிய அகலத்துல மனுஷன் விட்டுக் கழிச்ச  சாக்கடை.  சிந்துவெளி முத்திரை. நாலுவேதம், ஆறு சாஸ்திரம், அறுவத்தினாலு கலை, ஆனையேத்தம், குதிரையேத்தம் ஒரு அம்பை உட்டா அது நூறு ஆயிரமா மல்டிப்ளை பண்ணி, கூடா கூடமா நொய்யிறு சாக்கடைத் தேசத்துலேருந்து கிளம்பற கொசுக்களாட்டம் வர்றப்போ, அதன் மறைவில கபகபன்னு ஒளிச்சுவர்ற பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்த்தரம், பாசுபதாஸ்த்ரம் இதெல்லாம் புளுகுடாங்கிற உப்பாநிஷத்து, திரிபிடக்கு…. புள்ளை குட்டி இல்லாத புணர்ச்சி விந்திலேருந்து புஸ்வாணப் புரட்சி வரைக்கும் அந்தப் பாதாளக் குழாயில் ஒண்ணடி மண்ணடி. எந்த அவதாரமும் எந்த யுகத்து தர்மாவேசப் புரட்சி சாஸ்த்ரமும் சாதிக்காத சமத்துவம் நிலவுதுடா அந்தக் குழாயிலே. அதுக்குள்ள தாண்டா எனக்கு நேத்து டூட்டி. பீடூட்டி” என்றான் சாமுண்டி.
பல்வேறு காட்சிகளை அடுத்தடுத்து அடுக்குவதன் மூலம் பிரமிள் உணர்த்த விரும்பும் உலகு, அழுத்தமான சமூக எதிர்வினையின் விளைவாகும்.

எல்லாவற்றையும் மறுதலிக்கும் கேலிக் குரலில் பிரமிளின் கலக மனோபாவம் வெளிப்படுகின்றது. நிலவும் மதிப்பீடுகளின் போலித்தனத்தைக் கவிழ்ப்பதன் மூலம் புதிய வகைப்பட்ட சொல்லாடலை முன்னிறுத்தியுள்ளார்.

பொய் சொல்லா மெய்யன் என்ற தமிழாசிரியர் “சாதி மத சேதி சரித்திரத்தில் பேதி” என்று வகுப்பறையில் மாணவர்களுக்குப் போதிக்கின்றார். பள்ளியில் எல்லா மாணவர்களும் சாதி மத பேதமற்று ஒரே பானையில் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற அவரின் முயற்சி முறியடிக்கப்படுகின்றது. தலித்திற்குள் நிலவும் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மேல்-கீழ் பாகுபாடுகூட வர்ணாசிரமத்தின் இன்னொரு முகம் அன்றி வேறு என்ன? குஜராத்தில் தீபாவளியிலோ திருநாளிலோ ஜாதிக்காரர்கள் முன்னால் சங்கீதமாக ஒரு ஹரிஜன் பாடிவிட்டான் என்பதற்காகச் சேரி சேரியாகப் புகுந்து அடித்தனர் என்ற தகவல் கதையாடலில் சொல்லப்படுகிறது. மறுபிறப்பில் ஹரிஜனனாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் காந்தி. அப்படிப் பிறந்திருக்கக்கூடிய காந்திக்கும் செமத்தியாக கொடுத்தான்கள் என்று நையாண்டி பண்ணும் பிரமிளின் பார்வையில் நுட்பமான ‘சாதி’ அரசியல் பொதிந்துள்ளது.

“ஆர்யபட்டா செயற்கைக் கோளை மேலே விடுகிறவன், ஹரிஜனப்பட்டா சாக்கடை மெஷினை ஏன் கீழே விடமாட்டேங்கறான்” என்ற கேள்வி ஆழமான சமூக விமரிசனம்.

‘ஆலா’ கதையில் தமிழகத்திலிருந்து ஈழத்திற்குச் சென்ற தலித் பெண்கள் கள் குடிப்பதற்கு எதிராகக் கிளர்ச்சிக் கவிதை எழுதுகின்றார் கவிஞர் விசுவநாதன். பகல் முழுக்க மலம் அள்ளி சுமந்து கழிவகற்றும் தலித் பெண்கள் ‘கக்கூஸ் வீச்சம் மறக்கக் கள் குடிப்பதாகக்’ கூறி கவிஞரைத் திட்டுகின்றனர். அப்பொழுது அவர்கள் “உங்க வூட்டுப் பொச்சிலே போய் செண்ட் பூசி கக்கூசுக்கு இருடா” என்று ஆத்திரப்படுகின்றனர். ஈழத்தில் மக்கள் படும் அவலத்தினைவிடப் போலியாகத் தமிழ் பேசித் திரியும் அற்ப ஜீவிகளின் செயல் பிரமிளுக்கு உறுத்தலாக இருக்கின்றது. வாய் சவடால் பேர்வழியாகச் சித்தரிக்கப்படும் கவிஞரின் நிலை ஒருவகையில் அன்றைய ஈழத்தின் வெளிப்பாடு.

கணினியை முன்வைத்து அறிவியல் ரீதியில் புனையப்பட்ட கதை ‘அசரீரி’ மிகவும் நவீனமான விஷயத்திலும் சாதியத்தின் வேர் ஆழமாக வேரூன்றியிருப்பது. நாலாயிரம் ஆண்டுகள் கெட்டி தட்டிப் போயிருக்கும் மனநிலையின் வெளிப்பாடு என்பதனைப் புனைகதை விவரிக்கின்றது மருத்துவக் கல்லூரியில் பயிலும் ‘தலித்’ தான வினோத்திற்கும் உயர்ஜாதி இந்துவான சிங்கலட்சுமிக்குமிடையில் ஏற்படும் உறவு முக்கியமானது.

தலித் மாணவர் ‘சர்ஜரியில் டாப்’ என்ற மகளிடம், அவரது தந்தை, ‘அப்பன் பன்னியை அறுத்த ட்ரடிஷன்’ என்று பதிலளிக்கிறார். ‘சர்ஜரி என்பது உயிரைக் காப்பதற்கு; பன்னியை அறுப்பது என்பது அதனைக் கொன்று தின்ன’ என்ற அடிப்படைப் பேதமற்றுப் பேசும் உயர்ஜாதி வக்கிர மனநிலை புனைகதையில் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது.

தமிழ்த் தீவே சாதிகள், உட்கோத்திரப் பிரிவுகள் மூலம் பிரிவுண்டு பல்வேறு குட்டித் தீவுகளாகி மிதப்பதனை  விவரிக்கும்போது , HAC இயந்திரம் எரிச்சல் தாங்காமல் ‘ங்கோத்தா டாய் லவ்டோ கபால்’ என்று கெட்ட வார்த்த்தை சொல்லித் திட்டுவது எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. அறிவியல் கதையாடலிலும் பிரமிளின் கருத்துலகினை அவதானிக்கலாம்.

ஈழத்துப் பிரச்சினையை மூலமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ள கதைகளைத் தொகுத்தால், அவை ஒரு குறுநாவலாகிவிடும். சமூக அக்கறையுள்ள கலைஞன் என்ற ரீதியில் காய்த்தல், உவத்தல் இன்றி மனித இருப்பின் அவலத்தினைக் கதைகளாக்கியுள்ளார். தமிழகத்திலிருந்து ஈழத்து முரண்பாட்டினை வெற்று உணர்ச்சிப்பூர்வமாக அணுகுகிறவர்களுக்குத் தமிழ் மனோபாவம் பொங்கிவழியும். பொழியின் வழியே கட்டமைக்கப்பட்ட இரு பெரும் பிரிவுகளாக எதிரெதிர் களத்தில் முரண்பட்டு மோதுகின்ற ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வாழும் மக்களின் பிரச்சனையை நுணுக்கமாக ஆராய்ந்திட வேண்டும். பரஸ்பர அவநம்பிக்கையின்மையும் வெறுப்புணர்வும், பரந்துபட்ட மக்களின் ஆழ்மனதில் உறைந்திருப்பதற்கான காரணங்களை மொழி அரசியல் வழியாகத்தான் புரிந்துகொள்ளவியலும்.

‘லங்காபுரி’ என்ற கதைத் தலைப்பே நடைபெறும் பல்வேறு விஷயங்களை எதிர்நிலையில் விளக்குகிறது. சர்வேயரான கோபாலகிருஷ்ணன் பணிமாறுதல், காரணமாகச் சிங்கள கிராமத்திற்கு வருகிறான். காட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் தங்குகிறான். அங்குள்ள இன்னொரு கட்டிலில் உடும்பு படுத்துக் கிடக்கின்றது. அதை விரட்டினாலும் மீண்டும் கட்டிலின்மீது ஏறிப் படுக்கின்றது. ‘அது வசித்து வந்த பொந்தின்மீது கூடாரமிடப்பட்டிருப்பதனால் அக்கூடாரத்தினைத் தனது உறைவிடம் எனக் கருதுகின்றது’ என்று வேலையாள் பியாதாஸா சொல்கிறான். இடம் மாறுதலை உடும்பினால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆயின் இன மோதல் காரணமாகப் புலம்பெயர்ந்திடும் அவலத்தினை மக்களால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்ற வினா பிரதியினுள் சொல்லப்பட்டுள்ளது. அசைவ உணவுப் பழக்கமுள்ள கோபாலகிருஷ்ணன், உடும்பைக் கொன்று சமைத்திட விருப்பமற்றவனாக இருக்கிறான். அத்துடன் யானைகள் வாழ்ந்திடும் காட்டையும் நேசிக்கிறான். கோபாலகிருஷ்ணன், தனது இளம் மனைவியுடன் கிராமத்திற்கு வருகையில் கிராமத்துத் தலைவரான சார்ளிஸ் உட்பட அனைத்துச் சிங்களவரும் உற்சாகமான வரவேற்பு அளிக்கின்றனர். மொழிரீதியான பேதமற்ற நிலை. கிராமத்தில் ஏதும் தவறு நிகழ்ந்தால், ராஜாதி ராஜாவான யானை அவ்விடத்தில் தோன்றி, தீயவர்களை அழித்துவிடும் என்ற சிங்களவரின் நம்பிக்கை அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. வனப் பிராந்தியம் முழுக்க யானையின் ஆதிக்கத்தில் உள்ளது என்ற வாய்மொழிக் கதை மரபில், ஒருவிதமான மாந்திரிகத் தன்மை உள்ளது. ஐநூறு ஆண்டுகளுக்கும் கூடுதலாக வாழ்ந்துவரும் யானையை நடமாடும் கடவுள் போல மக்கள் நம்புகின்றனர். ராணுவ அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலியின் ஒன்றுவிட்ட தம்பியான சிரில் திஸ்ஸ நாயக்க, காட்டிற்குள் முகாமிட்டு, பிரமாண்டமான கூண்டுகளை நிறுவி, யானைகளைப் பிடிக்க முயலுகின்றான். கூண்டுக்குள் அகப்பட்ட யானைகளை மீட்கும் ராஜாதி ராஜாவின் மத்தகத்தில் பட்டுத் தெறிக்கிறது சரில் திஸ்ஸ நாயக்கரின் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய புல்லட்.  எனினும் அவனை நசுக்கிக் கொல்கிறது யானை. இறுதியில் அது ‘மகா பரிநிர்வாணம்’ அடைகின்றது” சார்லிஸ் வார்த்தைகளில் சொன்னால், இதற்கு முன்னர் 1983-ல் இனக்கலவரம் வெடித்திட எங்கும் பேரவலம். கோபாலகிருஷ்ணனின் மகனான அபி, இயக்கத்தில் சேர்ந்து தலைமறைவாகிவிடுகிறான்.  அபியின் விடுதலைப் போராட்டம் தர்மத்திற்குட்பட்டது. ஏனெனில் அவன் லங்காபுரியில் பிறந்தவன் என்கிறார் சார்ளிஸ்.

ராஜாதி ராஜா என்று யானை பற்றிய கதையாடல் முழுக்க அதியற்புதமானது. எனினும் நம்பகத்தன்மையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. ‘மொழி வேறுபாட்டினுக்கப்பால், மனிதர்கள் நேசமுடன் இருப்பதனை அதிகாரம் எப்பவும் விரும்புவதில்லை. மக்களின்மீது ஆதிக்கம் செலுத்திட விரும்பும் சக்திகள். மொழி அரசியலைக் கட்டமைப்பதனைக் கதையாக்கியுள்ள பிரமிளின் பார்வையில் சமூக அக்கறை பொதிந்துள்ளது. சிறிய தீவில், வன்முறை  காரணமாக இருபக்கத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் கொலையுண்டு கொண்டிருக்கும் சூழலில், மனித இருப்பின் மேன்மையினை வெளிப்படுத்துவதாக பிரமிளின் கதைகள் உள்ளன.

1967-ஆம் ஆண்டில் பிரமிள் எழுதிய ‘கோடாரி’ கதையும் ஈழத்துப் பிரச்சினையை மூலமாகக் கொண்டது. அறுபதுகளில் ஆயுதமேந்திய போராட்டம் நடைபெறவில்லை. இரு பக்கத்து அரசியல்களும் மொழியின்வழியே முரண்பாட்டினைக் கூர்மையடையச் செய்திட முயன்று கொண்டிருந்தனர். இது பிரமிளுக்கு உறுத்தலாக இருந்திருக்கின்றது. எனவே தான் பெரும்பான்மையினருக்குக் கடவுளின் உருவாகத் தோன்றும் அரசமரம். சிறுபான்மையினருக்கு ராட்சதனாகத் தோன்றுவதைப் படைப்பாக்கியுள்ளார். நாடு, இனம், சாதி, மதம், மொழி போன்றன மக்களுக்குப் போதைப் பொருளாக உள்ளன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் அரச மரத்தினை வெட்டுவதற்கான காரணங்கள் நிரம்ப உள்ளன. உண்மையில் வெட்டப்படுவது மரம் மட்டும் அல்ல.  காலந்தோறும் இரு பிரிவினரிடையே நிலவிய நம்பிக்கையும்தான். வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தில் கூடு கட்டியிருந்த காகம் போல, மனிதனும் தனமற்று அலைவதுடன் பிரச்சனைகளும் தொடங்குகின்றன. இது அதிகாரத்தின் மையத்தினைக் கட்டமைக்கிறவர்களுக்குக் கொண்டாட்டம் தரும் விஷயம். ‘கோடாரி’ கதை மூலம் சமூக அவலத்தின் கோரத்தினைப் பிரமிள் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளார்.

பிரமிளின் கதை சொல்லும் முறையானது தனித்துவமானது. ஒவ்வொரு கதையிலும், அக்கதைக்கே உரித்தான சிறப்பான மொழியமைப்பினைக் கையாண்டுள்ளார். மௌனி கதைகளில் செறிவு மிகுந்திருப்பதாகப் பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். யதார்த்தப் புனைகதை ஆக்கத்தில், செறிந்தமொழியில் கட்டமைக்கப்பட்ட பிரமிளின் பிரதிகள் பன்முகத்தன்மையுடையன. படைப்பாக்கத்தில் ஒவ்வொரு சிறு சம்பவமும் அவரது கவனத்தில் இருந்து தப்பவில்லை. அதேவேளையில் சம்பவங்களின் கோர்வையின் வழியே அவர் விரும்பிய விநோத உலகிற்கு வாசகரை அழைத்துச் செல்கினறார்.

கதையாடலில் பிரமிள் எந்த இடத்தில் மாறி கதையைப் புதிருக்குள் மூழ்கடிப்பார் என்பது அறிய இயலாதது. அவருக்கு எல்லாமே சாதாரணம். எல்லாமே மேன்மையானவை. ஒவ்வொரு சின்ன விஷயத்தினையும் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னர் சரியான முடிவுக்கு வருகின்றார். கதைகளில் வெவ்வேறு மொழிப் பயன்பாட்டினைக் கையாண்டுள்ளது வாசிப்பில் வியப்பினைத் தருகின்றது.

‘காடன் கண்டது’ – கதையில் குறவர் பேசும் மொழியில் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. கஞ்சா பயிரிடுபவனுக்கும், அதனைத் திருட்டுத்தனமாகக் கடத்துகிறவனுக்குமிடையிலான மோதல், கொலையில் முடிகின்றது. நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட அழகிய சிற்பம்போல, மொழியினால் நுட்பமாகச் செறிவாக்கப்பட்டுள்ள கதையானது பிரமிப்பைத் தருகின்றது. வேறு எதையோ சொல்வது போன்ற பாவனையில் விரிந்திடும் கதை, வாசகரைத் தடுமாறச் செய்திடும் இயல்புடையது. குமரி மாவட்டத்துத் தமிழில் உரையாடல்கள் வழியாகச் சொல்லப்பட்டுள்ள ‘ஆயி’ கதை துப்பறியும் தன்மையில் புதிராக இருந்தாலும், முக்கியமான கதையை வாசித்த அனுபவம் ஏற்படுகின்றது. கதைக்குள் ஒருவிதமான மாயத்தன்மை பொதிந்துள்ளது. இன்னும் கதைக்குள் ஏதோ இருப்பதுபோல தோன்றிக்கொண்டேயிருப்பது பிரமிளின் கதை சொல்லலுக்குக் கிடைத்த வெற்றி.

பிரமிள் தொடக்கத்தில் எழுதிய ‘சந்திப்பு’ கதையில் மௌனியின் தாக்கம் உள்ளது. பிரக்ஞையற்ற வெளியில் உலாவிடும் மனதின் ஓட்டத்தினைக் கையகப்படுத்த முயன்றுள்ளார் எனினும் தொடர்ந்து அதே வழியில் பயணிக்கவில்லை. அவருக்கெனத் தனித்த மொழியில் கதையாடலைத் தொடங்கியுள்ளார். இதனால் பெரும்பாலான கதைகள் தம்மளவில் தனித்துவமாக உள்ளன. ஜனரஞ்சக ரீதியில் எளிமையாக எழுதப்பட்டுள்ள கதைகளும்கூட தரத்துடன் உள்ளன.

யோகியர் பற்றியும், வாழ்வின் புரியாத புதிர்கள் குறித்தும் ஒருவிதமான தேடலும் நம்பிக்கையும் பிரமிளுக்கு இருந்து வந்தது. ஆன்மத் தேடலின் வழியே வாழ்வின் சூட்சுமங்களுக்கு விடை காணவியலும் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு கணத்திலும் வெளிப்படும் வாழ்வின் இருப்பு, யோசிக்கையில் விநோதமானது. இது பிரமிளின் பிரக்ஞையில் தொடர்ந்து ஏற்படுத்திய உறுத்தல் காரணமாகப் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையினை அவதானிக்க முயன்றார். இத்தகைய போக்கு அவரது கதையாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. அவற்றை முற்றாக மூடநம்பிக்கை என்று ஒதுக்கிட இயலாது. அவர் வாழ்க்கையின் பன்முகத்தன்மைகள் குறித்துப் பரிசோதனைகள் மேற்கொண்டிருந்தார். இதனால் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்ளவும் வெறுத்து ஒதுக்கவும் செய்தார். இதனால்தான் அவர் அவ்வப்போது தன் பெயரை மாற்றிக்கொள்ளும் விசித்திரச் செயல்களில் ஈடுபட்டார். ஒரு படைப்பின் வெற்றிக்கும் பெயர் மாற்றத்திற்குமிடையில் தொடர்பு உள்ளது என்று ஆழமாக நம்பிய பிரமிளின் செயற்பாட்டினை அபத்தம் என்று சொல்வதில் தவறில்லை.

பிரமிளின் படைப்பாக்கத்தில் அங்கதம் முக்கிய இடம் வகிக்கின்றது. கூர்மையான பகடி மூலம் போகிற போக்கில் ‘நச்’சென்று கிள்ளுவது பிரமிளுக்கு இயல்பானது. ‘பாறை’ கதையில் பெண்ணியம் பேசும் பாலிகா என்ற மல்லிகா, விமர்சகரான திருவேங்கடசாமி, சிறுபத்திரிகைகாரர்கள் என்று விரியும் கதை முழுக்கப் பகடியை மையமிட்டதாக உள்ளது. பாலிகா தன்னைக் ‘கன்னி அல்ல’ என்று போலியாகப் பிரகடனப்படுத்துகிறாள். அவளது எழுத்து, வாழ்வு அனுபவம் சார்ந்தது என்கிறார் திருவேங்கடசாமி. பிரமிள் தான் வாழ்ந்த காலத்தில் இலக்கிய சர்ச்சையில் முக்கிய இடம் வகித்தார். சக எழுத்தாளர்களைக் கடுமையாக கண்டித்து எழுதினார். இதனால் நிரம்ப எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டார். இலக்கிய உலகின் ஊழல்கள் என்று ‘கண்டமேனி’க்குப் பலரையும் அடித்து வீழ்த்த முயன்ற பிரமிளின் எழுத்து குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சக இலக்கியவாதிகளைப் பாத்திரங்களாக்கி விமர்சன ரீதியில் பிரமிள் சொல்லியுள்ள கதை, இன்று நகைச்சுவை தருவதாக இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கதை வெளியான காலகட்டத்தில் பெரும் எரிச்சலைத் தந்திருக்கும். பிரமிளின் உச்சபட்ட அங்கதம் ‘பாறை’யில் வெளிப்பட்டுள்ளது.

பிரமிளுக்கு ஒரு சொல் அல்லது ஒரு சம்பவம் போதும். அது அவருக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளின் புனைவில் நெசவினைத் தொடங்கிவிடுகின்றார். சொற்களுக்குள் பொதிந்துள்ள கதையம்சத்தினை நுட்பமாகக் கண்டறிகின்றார். இதுவே அவரது கதை சொல்லலில் மேன்மை. பல்வேறு சம்பவங்களையும் ஒரே கதையாக்கிடும் திறன், அவரது எழுத்தில் உள்ளது. ஒரே சம்பவம் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுவது கதையாடலின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது.

பிரதியை வேறுபட்ட சாத்தியங்களின் மூலம் அணுகிடுவதற்கான ‘தோது’வுடன் கதை பிரமிளால் சொல்லப்பட்டிருப்பதனால், வாசகரும் பிரதிக்குள் இழுக்கப்படுகின்றார். கதையை வாசித்துவிட்டு மகிழ்ந்துபோவது என்பது இயலாதது பெரும்பாலான கதைகள் வாசித்து முடிக்கப்பட்டாலும் அவை நினைவு வெளியில் சலனத்தினை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. பிரதிக்குள் பொதிந்துள்ள நுட்பமான விஷயங்களைத் தொடர்ந்து உள்வாங்கிட மறு வாசிப்புகள் அவசியம் தேவைப்படுகின்றன. மேலோட்டமான வாசிப்பில் கதையை அறிமுகமாக்கிக் கொண்டாலும், ஆங்காங்கே விவாதத்தினைத் தூண்டும் மையப் புள்ளிகள் நிரம்ப உள்ளன. பிரமிளின் கலை ஆளுமையும் அறிவுத் திறனும் அருமையான விகிதத்தில் கலந்து வெளிப்பட்டுள்ள புனைகதைகள் தமிழில் முக்கியமானவையாக என்றும் விளங்கும்.

இறுதியாக பிரமிளின் கதை மொழிகள் :

இரவு ஒரு பெரும் நிசப்த வெளியாக நட்சத்திரக் கண் கொண்டு யாவற்றையும் விடாது கவனித்துக் கொண்டிருக்கிறது.’

‘வெகுதூரத்தில் இரவுக்கும் அப்பால் வான எல்லையில், அமானுஷ்யமான கையொன்றால் உருவப்பட்டு மின்னல்கள் தோன்றி மறைந்தன.’

நன்றி: http://natpu.in/?p=1543

‘அழியாச் சுடர்’ இணையத்தளத்திலிருந்து …
பிரமிள்பிரமிள் 1939-1997. தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 20.04.1939-ல் இலங்கைத் திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள காரைக்குடியில் 6.01.1997-ல் மறைந்தார். தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் அவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமைபடைத்தவர்; இவரது ஆன்மிக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மிகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும். பிரமிளின் வாழ்நாளில் வெளியான நூல்கள்: கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் (கவிதைத் தொகுப்புகள்), லங்காபுரி ராஜா (கதைத் தொகுதி), ஆயி(குறு நாவல்), ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை (சமூகவியல் விமர்சனம்), ஊழல்கள், விமர்சனாஸ்ரமம், விமர்சன மீட்சிகள் (விமர்சனம்), படிமம்(தொகுப்பாசிரியர்).

நன்றி: http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_1371.html