பிரெஞ்சு நாவல்: எமிலி ஸோலாவின் ‘நானா’! | தமிழில் அறிஞர் அ.ந.கந்தசாமி

அத்தியாயம் மூன்று: மோகப் புயல்!

நாவல்: 'நானா'![ ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.]

பாரிஸ் நகரின் ஒரு முக்கிய்மான வீதியில் அமைந்திருந்த ஒரு பெரிய மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தாள் நானா. நானாவுக்கு இந்த வீட்டை எடுத்துக் கொடுத்து உதவி செய்தவன் மாஸ்கோ நகரில் இருந்து வந்த ஒரு வியாபாரி. வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் அவன் வாங்கியிருந்தான். பாரிஸ் நகருக்கு வந்த மாஸ்கோ வியாபாரி வந்த சமயம் மாரிகாலமாக இருந்ததால் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நானா அவன் வசத்தில் சிக்கினாள். ஒரு சிலரிதைத் தலைகீழாகத் திருப்பி நானாவிடம் மாஸ்கோ வியாபாரி சிக்கினான் என்றும் கூறினார்கள். ஆனால் மாஸ்கோ வியாபாரியிடம் நானாவும், நானாவிடம் மாஸ்கோ வியாபாரியும் சிக்கினார்களென்று வைத்துக் கொள்வதுதான் பொருத்தமாயிருக்கும்.

ஆனால் மாரி கழிந்து கோடை வந்ததும் வியாபாரி மாஸ்கோவுக்குப் போகவேண்டி வந்தது. நானா தனது இரண்டாவது மாடியில் பகட்டான தட்டுமுட்டுச் சாமான்கள் மத்தியில் ஒன்றிரண்டு பட்டாடைகளுடன் தனியாக விடப்பட்டாள்.

நானாவுக்கு இப்பொழுது பல காதலர்கள் ஏற்பட்டனர். ஆனால் எல்லோரும் அனுபவசாலிகளாகவும், அயோக்கியர்களாகவும் இருந்த காரணத்தினால் பல இடங்களிலும் கடனெடுத்துக் காலம் கழிக்கவேண்டிய கட்டம்தான் அவள் வாழ்க்கையில் தற்போது நடந்துகொண்டிருந்தது. வீட்டுக் கூலியும் பல மாதங்களுக்கு பாக்கியாகிவிட்டதால் காலி செய் என்ற பயமுறுத்தல் வேறு கிளம்பிக்கொண்டிருந்தது.


இரவு வெகுநேரம் வரை கண் விழித்து ஆடிய நாடகக் களைப்பு இன்னும் தீர்ந்து போய்விடவில்லையாதலால் நானா அடுத்த நாள் காலை பத்து மணியாகியும் படுக்கையில் புரண்டபடியே கிடந்தாள். வளவளப்பான் அவள் கரங்கள் தலையணையைப் பின்னிக் கொண்டு கிடக்க முகத்தை அதிலே புதைத்துக் கொண்டு, குப்புறப்படுத்துக் கிடந்தாள் அவள். ஆயாசத்தினால் அவள் முகம் வெளிறிப் போய்க் கிடந்தது. படுக்கை அறையின் யன்னல்கள் மூடப்பட்டு இருள் கப்பி இருந்ததும் அவள் நித்திரைக்கு ஒத்தாசை புரிந்தது.

சரியாக பத்தே கால் மணியளவில்தான் அவள் துயில் கலைந்தெழுந்தாள். எழுந்ததும் பக்கத்தில் எவரும் இல்லாது காலியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் அவள். தன் தலையணையைத் தொட்டுக் கொண்டு கிடந்த மற்றத் தலையணையைப் பார்த்தாள். அதன் மத்தியில் தலையின் அழுத்ததால் ஏற்பட்ட குழி ஒன்று காணப்பட்டது.

அவள் அதைக் கவனித்ததும் படுக்கைக்குப் பக்கத்திலிருந்த ஒரு மணியை அடித்தாள். வேலைக்காரி உடனே ஒடோடி வந்தாள்.

“அப்படியானால் அவர் போய் விட்டாரா?” என்று கேட்டாள் நானா.

“ஆம், எஜமானி! தங்கள் நித்திரையைக் கலைக்க விரும்பாமல் என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். நாளை அவர் திரும்பவும் வருவ்தாக்ச் சொன்னார்” \என்றாள் வேலைக்காரி ஸோ.

அதன்பின் அவள் படுக்கை அறையின் யன்னல்களைத் திறந்துவிடும் வேலையை ஆரம்பித்தாள். ஒரு நிமிஷத்தில் ஒரே ஒளிமயமாகக் காட்சி தந்தது அந்தப் படுக்கை அறை.

“நாளைக்கா…? அப்போது அவனது தினமா?” என்றாள் நானா சிந்தனையுடன்.

“ஆம் எஜமானி புதன்கிழமை அவரது தினந்தானே!” என்றாள் ஸோ.

“ஆம். இப்போ ஞாபகம் வருகிறது. ஆனால் இந்த ஏற்பாட்டை நான் மாற்றிக் கொண்ட்தாக சொல்ல நினைத்தேன். ஆனால் மறந்தே போய் விட்டது. நாளைக்கு அந்தக் கரிமுண்டத்தைத் கண்டதும் சண்டையும் சச்சரவும்தான் ஏற்படப் போகிறது!” என்றாள் நானா.

“எஜமானி என்னிடம் ஒருவார்த்தைகூடச் சொல்லவில்லையே. இனிமேல் இவ்விதம் நாள் மாற்றும் நேரம் மாற்றத்தைச் செய்யும்போது எஜமானி என்னிடம் சொல்லிவிடவேண்டும். நான் தக்கபடி ஏற்பாடு செய்துவிடுவேன். அது சரி அம்மா அந்தக் கிழட்டு மூதேவி அப்போ செவ்வாய்க்கிழமைகளில்
வாராதோ? ” என்றாள் வேலைக்காரி ஸோ.

‘கிழட்டு மூதேவி’ ‘கரி முண்டம்’ னெறு அவர்கள் சர்வசாதாரணமாகப் பேசிக் கொண்டவர்கள்தான் நானாவின் செலவினங்களுக்கு வகை சொல்லும் ‘காதலர்கள்’. அவர்களில் ‘கிழட்டு மூதேவி’ வரும் நாட்களில் காலை எட்டுமணி வரை டாக்குனே வந்து நானாவின் சமையற்கட்டில் ஒளிந்திருப்பான். கிழவன் காலை எட்டு மணிக்கெல்லாம் தனது வர்த்தகத்தைக் கவனிப்பதற்காக கிளம்பிவிடுவான். அதன்பின் டாக்குனேயின் முறை. கிழவனின் உடம்புச் சூடுபட்டு கணகணவென்றிருக்கும் மெத்தையிலே குதித்தேறிப்படுத்துக் கொள்வான் அவன். சுமார் பத்துமணிக்குப் பிறகுதான் அவன் அங்கிருந்து
கிளம்புவான். நானாவுக்கும் டாக்குனேய்க்கும் இந்த ஏற்பாடு மிகவும் பிடித்துப்போய் இருந்தது.

ஸோவிடம் நானா பின்வரும் உத்தரவை முடிவாகப் பிறப்பித்தாள்:

“காரியமில்லை இன்று பிற்பகலே நான் கடித மூலம் நாள் மாற்ற விஷயத்தை அவனுக்குத் தெரிவித்துவிடுகிறேன். ஆனால் அகஸ்மாத்தாகக் கடிதம் கிடைக்காமல் அவன் இங்கே ஆஜராகிவிட்டால் வீட்டில் அழையாமல் மெல்ல அனுப்பிவிட்டுவிட வேண்டும்.”

ஆகட்டும் என்று தலையை அசைத்துவிட்டு நாடகத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள் ஸோ. எஜமானி மிகவும் அபூர்வமாகப் பாடி நடித்தாள் என்றும் எதிர்காலத்தைப்பற்றி இனிக்கவலைப்படவேண்டியதில்லையென்றும் அவள் கூறினாள்.

நானா தலையணையில் முழங்கையை ஊன்றிப்படுத்துக் கொண்டே ஸோவின் விமர்சனத்தைக் கேட்டுகொண்டிருந்தாள். தொளதொளப்பான உள்சட்டை மட்டுமே அவள் அணிந்திருந்தாள். அதுவும் அவள் புரண்டு உருண்டுகொணிடிருந்த போக்கில் தோள்பட்டையை விட்டு நழுவிக் கிடந்தது. தலை மயிரோ குழம்பிப்போய் அந்தத் தோள்பட்டையை ஒரு தோகைபோல்போர்த்தியிருந்தது.

நானாவைப் பல்வேறு சிந்தனைகளும் அலைக்கழித்துக்கொண்டிருந்தன. ‘ஆம். நீ சொல்வது மெய்தான். ஆனால் இன்று வேண்டுமே காசு! வாடகை கேட்டு ஆள் இன்னும் வரவில்லையா?” என்று கேட்டாள் அவள்.

அதன் பின் கடன் விபரங்களைக் கணக்குப் பார்க்க் ஆரம்பித்தார்கள். முதலில் மூன்று மாதக் குடிக்கூலி; அதுதவிர ஜவுளிக் கடைக்காரன், தையல்காரன், கரிக்கடைக்காரன் எல்லோருக்கும் ஏராளமான பாக்கி. அவர்கள் நானா வீட்டுக்குத் தினமும் விஜயஞ் செய்ய ஆரம்பித்திருந்தனர். அங்கிருந்த ஒரு ‘ பெஞ்சில்’ உடகார்ந்து பழிகிடக்கப் பழகியிருந்த அவர்களில் ஒருவன் – அதாவது கரிக் கடைக்காரனால் தாங்க முடியாத தொல்லை. அவன் மாடிப் படிகளிலிருந்தே பலமான கூச்சல்போட ஆரம்பித்துவிடுவான்.

ஆனால் நானாவுக்கு அதிக மனக் கஷ்டத்தைக் கொடுத்த விஷ்யம் வேறு. பதினாறு வயதாக இருக்கும் பொழுது அவள் ஒரு தடவை பிரசவித்தாள். அந்தக் குழந்தை கிராமப்புறத்தில் வசித்து வந்த ஒரு செவிலித்தாயின் கரத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. குழந்தையைத்தானே கொண்டுவந்து வளர்க்கவேண்டுமென்ற ஆசை நானாவுக்குச் சமீபகாலமாக ஏற்பட்டது. ஆனால் அவளது இன்றைய சூழ்நிலையில் இது சாத்தியமானதல்ல; இருப்பினும் குழந்தையை சமீபத்தில் வசித்த் தன் மாமி லெராட் வீட்டில் வளர விட்டால் அடிக்கடி பார்த்துக்கொள்வதற்காவது முடியுமல்லவா? இந்த சபலத்தை நிறைவேற்ற முன்னூறு பிராங்குகள் (பிரெஞ்சுக் காசு) செவிலித் தாய்க்குப் பாக்கி செலுத்தவேண்டும். அதற்கு எங்கே பணத்திற்குப் போவது?

இவைகளை எல்லாம் அவள் வாய்விட்டுப் புலம்பிக்கொண்டிருக்க ஸோ கேட்டுக் கொண்டே வந்தாள். அந்தக் “கிழட்டுக் மூதேவி”யிடம் இவற்றை எல்லாம் கூறி இருக்கவேண்டுமென்று ஸோ அபிபிராயம் தெரிவித்தாள்.

“சொன்னேன்! ஆனால் இப்பொழுது மாதாமாதம் கொடுத்துவரும் ஆயிரம் பிராங்கைவிட ஒரு சல்லி கூட அதிகமாகக் கொடுக்கமாட்டான் அவன். பணக் கஷ்ட்டம் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. டாக்குனேயின் நிலைமையோ பரிதாபம்; எனக்குப் பூ வாங்கி வருவதற்குக்கூட இப்போது பணம் கிடையாது” என்று கூறினாள் நானா.

நானா மிகவும் துக்கப்பட்டாள்; முதல் நாளிரவு காது செவிடுபடும்படியாக மக்கள் கரகோஷம் செய்தது இன்னும் அவள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. அவ்வளவு பேரும் விரும்பும் தன்னால் நினைத்த மாத்திரத்தில் கேவலம் முன்னூறு பிராங் பெற்றுக்கொள்வதற்குக்கூடத் திராணி இல்லை என்று எண்ணியதும் அவள் மனம் சில்லிட்டுவிட்டது. சின்னஞ்சிறு மணிக்கண்களுடன் கூடிய அம்புக் குழந்தையின் ‘மம்மா!’ ‘மம்மா!’ என்ற குதலை மொழியை எண்ணியதும் அவள் துக்கம் கரை கடந்தது.

அப்பொழுது வாயில் மணி திடீரென் அடிக்க ஆரம்பித்தது. ஸோ யாரென்று போய்ப் பார்த்தாள். வந்தவள் ஒரு வயோதிப மாது. தன் பெயர் ட்ரிக்கோன் என்ரு கூறினாள் அவ்ள். நானாவுக்கு ஸோ அவ்விபரத்தைத் தெரிவித்ததும் உள்ளே அழைத்துவரும்படி கட்டளையிட்டாள். ட்ரிக்கோன் என்ற அம் மாது உயரமாயும், நல்ல முறையில் உடை அணிந்தும் கானப்பட்டாள். ஸோ அங்கே இருந்து நழுவியதும்

“நானா உனக்கு ஒரு ஆளை வைத்திருக்கிறேன் சம்மதமா? ” என்று கேட்டாள் அவள்.

“ஆகட்டும் ஆனால் எவ்வ்ளவு பணம் கிடைக்கும்?” என்று கேட்டாள் நானா.

“இருபது லூயிஸ்… (பிரெஞ்சுக் காசு) ” என்றாள் கிழவி.

“எத்தனை மணிக்கு?”

“மூன்று மணிக்கு – அப்போ நான் வருகிறேன்”

“சரி”

கிழவி அதன்பின் அதிகம் பேசிக்கொண்டு நிற்கவில்லை. ஒரு நோட் புத்தகத்தைத் திறந்து பார்த்து ‘இன்னும் ஐந்தாறு ஆட்களைப் பார்க்க வேண்டு’மென்று கூறிச் சென்று விட்டாள்.

நானாவின் மனப்பாரம் இப்போது நீங்கி விட்டது. கட்டிலிலே இரண்டு மூன்று தடவை உருண்டு படுத்தாள். கண்களை மூடிக்கொண்டு நாளைக்குத் தன் குழந்தையைக் காண் முடியுமென்ற இன்ப நினைவிலே சொக்கிப் போயிருந்தாள். அப்படியே சிறிது சிறிதாக மீண்டும் அயர்ந்து தூங்கி விட்டாள் அவள். இரவு கேட்ட கரகோஷம் , ஜனங்களின் உற்சாகக் காட்சி எல்லாம் துயிலும் போது அவளிடம் மீண்டன. இனிய சொர்ப்பனங்கள் தாலாட்ட சுக நித்திரையில் மூழ்கி இருந்தாள் அவள்.

பன்னிரண்டு மணிக்கு லெராட் மாமி வந்தபோதுதான் அவளது நித்திரை கலைந்தது. லெராட் மாமி “இன்று கிராமத்துக்குப் போய்க் குழந்தையையைக் கூட்டிவர” வேண்டும் என்றாயே!.. பன்னிரண்டரை ரயில் இருக்கிறது. ஆயத்தமாகு!” என்று கூறினாள் நானாவிடம்.

“பன்னிரண்டரை வண்டியைப் பிடிக்க முடியாது. பின்னேரம்தான் பணம் கிடைக்கும்” என்று கொண்டே நானா திமிர் முறித்துக்கொண்டு நிமிர்ந்து படுத்தாள். அவளது நெஞ்சம் நிமிர்ந்து குவிந்தது.

“சாப்பிட்டு விட்டுப் போக்லாம்” என்று கூறினாள் லெராட்டிடம்.

இதற்கிடையில் ஸோ நானாவின் “ட்ரெஸ்ஸிங் கவுணை” எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “எஜமானி, பிரான்ஸிஸ் வந்திருக்கிறான்” என்றாள்
அவள்.

பிரான்ஸிஸ் என்பவன் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளி. பெண்களின் கூந்தலை அழகுபட அலங்கரிப்பதில் திறமைசாலி. நானாவின் பொன்னிறமான கேசத்தை அலை அலையாக்கி அலங்கரிப்பதற்காக வந்திருந்தான்.

“சரி வரச்சொல்” என்றாள் நானா படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே. அவள் வெள்ளை வெளேரென்ற கால்கள் வெறுமையாக விளங்க, ஒய்யாரமாக நிமிர்ந்துட்கார்ந்துகொண்டு இரண்டு கரங்களையும் அகல விரித்தாள். ஸோ சட்டையைக் கைகளில் மாட்டினாள். இதற்கிடையில் உள்ளே வந்திருந்த பிரான்சிஸ் சர்வ சாதாரணமாக ஒரு புறத்தில் நின்றுகொண்டிருந்தான்.

அவள் உடை அடுத்தி முடித்ததும் “எஜமானி பத்திரிகை வாசித்தீர்களா? நேற்றைய நாடகத்துக்கு ‘பிகாரோ’ பத்திரிகையில் விமர்சனம் வந்திருக்கிறது” என்றான் பிரான்ஸிஸ்.

பத்திரிகை இதழொன்று அவன் கைவசம் இருந்ததால் லெராட் மாமி அதனை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள். நானா நடிகை என்ற முறையில் அதில் பாராட்டப்படவில்லை. அவளது இனக் கவர்ச்சியைத்தான் வானளாவப் புகழ்ந்திருந்தான் விமர்சகன். விமர்சகன் வேறு யாருமல்ல போச்சரிதான்.

பிரான்ஸிஸ் வேலை முடிந்ததும் வெளியேறிச் சென்றான். மாலைப் பத்திரிகைகளையும்ம்கவனித்துக்கொள்வதாகக் என்று கூறினான் அவன்.

பத்திரிகை விமர்சனம் நானாவுக்கு உண்மையில் பெருமையையும், மகிழ்ச்சியையுமே உண்டு பண்ணியது.

லெராட் மாமிக்குத் தன் மருமகளையிட்டுப் பெருமையாகவே இருந்தது. நானாவைக் கட்டிப்பிடித்துக் கன்ன்ங்களில் முத்தமிட்டாள். இருவரும் குழந்தைகளைப்போல் குதூகலித்துக் கொண்டு நின்றார்கள். இனிமேல் குறைச்சலில்லை. நானாவுக்கு சுக்கிரதிசை அடிக்கிறது என்ற நினைவு இருவரையும் இன்பத்தில் திளைக்கச் செய்தது.

அதன்பின் வேறு விஷய்ங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“நானா! உன் மகன் இருக்கிறானே. அவன் அப்பா யார்?” என்று கேட்டாள் லெராட்.

“ஒரு கண்ணியமானன் கனவான் தான்!” என்று நானா சுருக்கமாகப் பதில் தந்தாள்.

லெராட் தனது முகத்தில் திருப்தியின் சின்னங்களைக் காட்டிக் கொண்டாள். “அதுதானே கேட்டேன். யாரோ ஒரு மோசமான பயலுக்குப் பிறந்த பிள்ளை என்று கூறக் கேட்டிருக்கிறேன். முழு விபரத்தையும் அப்புறம் பேசிக் கொள்ளலாம். அது எப்படியென்றாலும் உன் குழந்தையை ஒரு ராஜகுமாரன்போல் வளர்க்க வேண்டுமென்பது எனது திட்டம். ஆம். அப்படித்தான் வளர்ப்பேன்” என்றாள் அவள்.

நானா தன் குழந்தையை வளர்ப்பதற்கு அவளுக்கு மாத ஒன்றுக்கு நூறு பிராங்குகளும், வசிக்க நல்ல அறைகள் சிலவும் எடுத்துத் தருவதாக உறுதி கூறினாள். லெராட் மாமிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. சில புத்திமதிகளைத் தன் மருமகளுக்குக் கூறினாள்.

“வசதி இருக்கும்போதே நன்றாக்க் கறந்தெடுத்துவிட வேண்டும்” என்று ஆண்களைக் குறிப்பிட்டுப் பேசினாள். அதன்பின் மீண்டும் இரண்டாவது தடவையாக லெராட்டும், நானாவும் முத்தமிட்டுக் கொண்டார்கள். நானா திடீரென பிற்பகல் மூன்று மணிக்குள்ள தனது வேலையை ஞாபகப் படுத்திக் கொண்டாள்.

” என்ன தொல்லை நிறைந்த வாழ்வு! மூன்று மணிக்குள் போகவேண்டும்!” என்று சலித்துக் கொண்டாள் அவள்.


மத்தியான உணவுக்குப்பின் டாக்குனேய்க்கு ஒரு கடிதம் எழுதினாள்.

” எனது அன்புப் பொக்கிஷமே, என்றும் எக்காலமும் உன் நினைவால் உருகுகிறேன்” என்று ஆரம்பித்து அடுத்த நாள் வரவேண்டாம் என்றும் தனக்கு அதிக அலுவல் இருப்பதாகவும் நாசூக்காகக் கூறி முடித்திருந்தாள். முடிவில் “உன் அழகுக் கண்களில் முத்தம் மூவாயிரம்” என்ற முத்தாய்ப்பையும் வைத்தாள் அவள்.

வாயில் மணி அதன்பின் அடித்தது. போதினாவின் ஆள் ஒருவன் வந்தான். போதினாவுக்கு முதல் நாள் வெற்றியில் பரம சந்தோஷமென்றும், அடுத்த ஒரு வாரத்திற்கு ஹாலிலுள்ள ஆசனங்கள் பூராவுமே ‘ரிசேர்வ்’ ஆகிவிட்டதென்றும் தெரிவித்தான் அவன். அதன்பின் கடன்காரரில் ஒருவன் வந்தான். அவனைத் தலைவாயிலில் உட்காரவைத்துவிட்டு நானா கடை வாயிலால் வயோதிப
ட்ரிக்கோன் இடத்துக்குப் போவதற்காக நழுவி விட்டாள்.

போகும்போது லெராட் மாமி “விஷயத்தைச் சீக்கிரமே முடித்துக் கொண்டு வா!” என்று புத்திமதி கூறி அனுப்பினாள்.

பின்னர் தனக்குத்தானே “ஒருத்தி தன் குழந்தைக்கு உண்மையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டால் அதுவே போதுமானது. மற்றதெல்லாம் சின்ன விஷயங்கள்” என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்தாள்.


ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.நானா போவதற்கு முன்னால் ஸோவிடம் “யாராவது வந்தால் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறி உட்காரவை” என்று தெரிவித்திருந்தாள். கடன்காரர் மேலும் இருவர் வந்தனர். அவர்கள் உட்கார் என்று கூறுவதற்கு முன்னரே உட்கார்ந்து பழி கிடப்பவர்கள். ஸோ வேண்டா வெறுப்பாக அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றாள்.

சிறுது நேரம் சென்றதும் மீண்டும் மணி அடித்தது. ஸோ வெளியே போய்ப்பார்த்துவிட்டு வந்தாள்.

“யார் அது?” என்று கேட்டாள் லெராட்.

“ஒருவருமில்லை. சின்னஞ்சிறு பையன். பயலை விரட்டி விட்டிருக்க வேண்டும். ஆனால் பாவம். ரொம்பவும் அழகானவன். குறுகுறுத்த நீலக் கண்களுடன் ஒரு சிறுமியைப் போல் விளங்குகிறான். இருக்கும்படி சொல்லி வந்திருக்கிறேன். கையில் ஒரு பெரிய பூங்கொத்தையும் தூக்கி வந்திருக்கிறான். நேரே எஜமானியிடம் கொடுக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறான்” என்றாள் ஸோ.

அதன்பின் சிறிது செல்ல மீண்டும் மணி அடித்தது.. இந்தத் தடவை எவரும் நேரில் வரவில்லை. நாடக வானில் நானாவின் உதயத்தில் மகிழ்ச்சி கொண்ட யாரோ ஒரு பரம ரசிகர் தம் வேலையாள் மூலம் அனுப்பிய பூங்கொத்தை வாங்கி வந்தாள் ஸோ.

ஆனால் ஒரு பூங்கொத்துடன் நிறகவில்லை. முல்நாள் அரங்கத்தில் நானா மூட்டிய மோகப்புயல் பாரிஸ் முழுவதும் வீசி அடிக்க ஆரம்பித்து விட்டதன் சின்னமாக எல்லாமாக ஏழு பூங்கொத்துகள் இவ்விதம் கிடைத்தன.

அதன்பின் முதல் நாள் நாடகம் நடந்துகொண்டிருக்கும்போதே பூங்கொத்தனுப்பிய பாங்கர் ஸ்டினர் நேரில் வந்துவிட்டாஎ. அப்புறம் ‘கருங்குரங்கு’ என்று நானாவால் பட்டப்பெயர் சூட்டப்பட்டிருந்த அவளது பழைய பேர்வழியும் வந்துவிட்டான். அவனோ நேரே நானாவின் படுக்கை அறையில்போய் செளக்ரியமாக நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.

நானா நினைத்ததுபோல் சீக்கிரமாகத் திரும்பிவிட அவளுக்கு வசதி ஏற்படவில்லை. பணம் செலுத்தியவன், பணத்திற்குத் தக்க பலனை அடைவதில் கண்ணுங்கருத்துமாய் இருந்திருக்க வேண்டும்.

நானா கடைசியில் வந்து சேர்ந்தபோது தனக்காகப் பலர் காத்திருப்பதைப் பற்றி ஸோ மூலம் அறிந்தாள். அவளுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. போதாதற்கு “எஜமானி சில சமயங்களில் மடைத்தனமாக நடந்து கொளவ்து வழக்க்க! இல்லாவிட்டால் இவ்வளவு நேரம் செல்லுமா? அவனை ஒரு மாதிரி ஏமாற்றி விரைவாகக் வரத்தெரியவில்லையே!” என்று கூறினாள் வேலைக்காரி ஸோ.

“போதும் உன் வாயை மூடு! ” என்று குச்சலிட்டாள்நானா. அவளுக்கு ஆத்திரம் பொங்கும் நேரங்களில் இந்த மாதிரித்தான் அவள் கூச்சலிடுவது வழக்கம். ஒருவிதமான அருவருப்பும் எரிச்சலும் அவள் முகத்தில் முத்திரை இட்டிருந்தது. இருப்பினும் ஸோவுக்கு இது நெடுங்கால அனுபவம். அவளை அது எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை.

(தொடரும்)