பிரேம்ஜி ஞானசுந்தரம் நினைவாக…

– பதிவுகள் நவம்பர் 2009 இதழ் 119இல் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு பற்றி வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் மறைவையொட்டி, அவர் நினைவாக மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் –

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  பிரேம்ஜி ஞானசுந்தரம் இடதுசாரிக்கருத்துகளால் கவரப்பட்ட ஒரு முற்போக்காளர். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தி வந்தவர். 1954 தொடக்கம் அதன் செயலாளராக இருந்துவருகின்றார். அவர் 1950களில் இருந்து எழுதி வந்த கட்டுரைகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு நூல் கடந்த 27.09.2009 மாலை ‘ஸ்காபுரோ விலேச்’ சனசமூக நிலையத்தில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை திரு. வி.என். மதியழகன் தொகுத்து நெறிப்படுத்தினார். செல்வி ஆதிரை விமலநாதன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் இசைத்தார். தொடர்ந்து த.சிவபாலு அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து தலைமையுரையாற்றினார் அதிபர் கனகசபாபதி அவர்கள். தலைமையுரையில் ‘பிரேம்ஜீ அவர்கள் இலைமறை காயாக இருந்து செயலாற்றிய ஒருவர்; ஆரம்பத்திலவர் பரமேஸ்வராக்கல்லூரியில் கற்றபோது அவரைப் பரீட்சைக்குத்தோற்றுமாறு அவரது ஆசிரியர் கேட்டபோது அவர் நான் பரீட்டைஎடுக்கவரவில்லை அறிவுக்குப் படிக்கவே வந்தேன் என்றபோது அப்படியானால் இது உனக்கு உகந்த இடமல்ல என்று பாடசாலையில் இருந்துவெளியேற்றப்பட்டபோது, அவரது பெற்றோரும் அதனை ஒரு சவாலாக எடுத்து அவரை வேறு பாடசாலையில் சேர்ந்து படிக்கவைத்துள்ளனர் என்றால் பிரேம்ஜிக்குப் பெற்றோர் தந்த ஒத்துழைப்பு எத்தகையது என்பது எனக்க வியப்பைத்தருகின்றது. அது மட்டுமல்லாது கொழும்பில் நாமக்கல் கவிஞரைக் கண்டு நான் ஆங்கிலத்தை அல்ல தமிழைத்தான் கற்க விரும்புகின்றேன் என்று கூறி அவருடைய அனுமதியைப் பெற்று இந்தியாவிற்குச் சென்று தமிழைப் படித்துள்ளார் என்றால் அவரது மொழிப்பற்று, தேசப்பற்று என்பன பற்றிச் சொல்லத்தேவையில்லை. சென்னையில் வி.க. வ.ரா. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது மட்டுமன்றி சுவாமிநாத சர்மாவின் ஆலோசனைப்படி கொம்யூனிசக்கட்சியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இயங்கி வருவதோடு மட்டுமன்றி பல்வேறுபட்டி பிரிவினரையும் இணைத்துப் பாலமாகச் செயற்பட்டவர். சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டி பல வெளிநாட்டு எழுத்தாளர்களும் இணைத்து பெரிய ஒரு மகாநாட்டைக் கூட்டியவர்’ என்று அவரைப்பற்றிய சிறப்புக்களை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பிரேம்ஜியின் கட்டுரைத் தொகுதிக்கு ஆய்வினை மேற்கொண்ட சேரன் ‘அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் தேவைப்பாட்டை மிக முக்கியமான ஐந்து பிரிவுகளில் வகுத்து நோக்க முயல்கின்றேன் ஒன்று இடதுசாரிகளின் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மீள் எழுச்சியும் உலகமயமாதலின் எழுச்சியும். இரண்டாவதாக நிதி மூலதனச் சிக்கல்கள் ஆகியன இன்று அமெரிக்கா போன்ற வல்லரசுகளை ஆட்டங்காண வைத்துள்ளன. மார்க்ஸ் சொன்ன தத்துவார்த்த ரீதியல் அமைந்த கருத்துக்களை இன்று நடைமுறையில் காணமுடிகின்றது. மூலதனம் முதலாளிகளையும் தொலைத்திருப்பது இது அழிவின் விளிம்பு அன்னியமாதல், அன்னியமயமாதல் ஆகிய கட்டற்ற உரிமையினை அரசாங்கத்தின்மீது திணிக்கின்றது. மூன்றாவதாக கட்டற்ற சந்தை என்ற நிலைமையினால் அரசு என்று சொல்லப்படும் கருத்துக்கும் அரசுக்கும் தொடர்பில்லாத ஒரு நிலையைத்தோற்றுவித்து அதனை அப்பட்டமாக ஏற்றுக்கொள்ளவும் வைத்துள்ளது. அரசு வங்கிகள், பெரும் நிறுவனங்களுக்கு உதவி செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளது. மக்களைப் பற்றிய எந்தவித கருத்துக்களையும் முன்வைக்காது முதலாளித்துவத்தின் பாதுகாவலனாக அரசு இயங்குகின்ற காலகட்டம். நான்காவதாக தாராள பொருளாதார இரட்டை நிலை. சீனா, வடகொரியா, இலங்கை தொடர்பான இன்றைய நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். ஐந்தாவதாக இலங்கையில் இடதுசாரிகளின் நிலைமை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை நோக்கும்போது இடதுசாரிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டனர் என்றே சொல்லவேண்டும். தமிழ் மக்களின் நிலைப்பாட்டைச் சரியாக எந்தஒரு இடதுசாரிக்கட்சியும் உறுதியாக முன்எடுக்கவில்லை. குறிப்பிடத்தக்க ஒரு சிலரே இன்று உள்ளனர். விக்ரமபாகு, கருணாரட்ண, நிமல்க்கா பெர்னாண்டோ, இவ்விதமாக ஒரு 57 நண்பர்களைத்தான் காணமுடிகின்றது. மற்றவர்கள் வகுப்புவாதிகளோடு இணைந்துவிட்டார்கள. தமிழ் இடதுசாரிகளின் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக சிங்கள இடதுசாரிகள் நடந்துகொள்ளவில்லை’ என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார். இறுதியாக ‘பிரேம்ஜியால் எழுதப்பட்ட இந்தக்கட்டுரைகள் எந்தக்காலகட்டத்தில் எழுதப்பட்டன என்று தெரியாத நிலை உண்டு. இதனை ஒரு ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.

பிரேம்ஜியின் அன்புக்குப்பாத்திரமானவரும் இந்த விழாவை எடுகக முன்நின்று உழைத்தவருமான கவிஞர் க.நவம் உரையாற்றும்போது “Politics is the art of looking for trouble, finding it whether it exits or not, diagnosing it incorrectly and applying the wrong remedy என்றும் Politicians and diapers have one thing in common. They should be changed regularly and for the same reason என்றும் ஆங்கிலத்தில் ஆரம்பித்து அரசியல்வாதிகள் மீது ஆத்திரம் வரும்போதெல்லாம் நகைச்சுவையாக ஆங்கிலத்தில் அவ்வப்போது இவ்வாறு கூறுவாருமுண்டு. அரசியல்வாதிகள் ஆராவது இங்கிருப்பின், பெருமனதுகொண்டு அவர்களை மன்னிப்பார்களாக! நகைச்சுவைக்கெனக் கூறப்பட்ட போதிலும், இக்கூற்றுக்களின் உள்ளார்ந்த அர்த்தங்களில் சிலவேளைகளில் உண்மை இல்லை என்பதற்கில்லை. இத்தகைய தன்மை வாய்ந்த “அரசியல்” பற்றிய கருத்தாக்கங்களை பிரேம்ஜியின் கட்டுரைகளில் இனங்கண்டு அவை குறித்து உரையாற்றுமாறு நான் இங்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்றைய நிலையில் இது எனக்கு ஓர் உவப்பான காரியம் அல்ல என்ற அச்சம் என்னை இம்சைப்படுத்துகின்றது என்ற அவர் தொடர்தும் சமூகமும் அரசியலும் இலக்கியமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள போதிலும் – இவை மூன்றும் தத்தமக்கே உரிய தனியான துறைகள் என்பதுவே உண்ம. என்றார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் திரு. பிரேம்ஜி அவர்களது நூலினை இந்த மூன்று துறைகளினூடாக தனித்தனியே அணுகிக் கருத்துத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்கப்பட்டிருக்கின்றமைக்கும் அதுவே காரணம். இவற்றுள் “அரசியல்” துறை பற்றி பிரேம்ஜி எத்தகைய கருத்துகளை இந்த நூல் வழியாக முன்வைகின்றார்? பிரேம்ஜியின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பவற்றை இங்கு தொட்டுக் காட்டுவதே எனது நோக்கமாகும் என்றுரைத்ததோடு தொடர்ந்து முழு உலகையும் அடிப்படையாகக் கொண்ட பிரேம்ஜியின் அரசியற் பார்வை, இலங்கையை அடிப்படையாகக் கொண்ட பிரேம்ஜியின் அரசியற் பார்வை என இருகூறுகளாக நோக்கலாம் என்ற அவர் பிரேம்ஜி அவர்கள் தமக்கென வரித்துக்கொண்ட மார்க்சிய சித்தாந்தத்தில் அன்று தொட்டு இன்றுவரை மிகத் தெளிவான, உறுதியான, நம்பிக்கையைக் கொண்டவர் என்பதையும் – மார்க்சிய விஞ்ஞானத்தினூடாகவே அரசியல், சமூக, பொருளாதார, கலை இலக்கியங்களை அணுகும் கொள்கைப் பற்றாளர் என்பதையும் – அவரது கட்டுரைகள் சுட்டுகின்றன என்றதோடு “எல்லார்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்” என்னும் பாரதிதாசனின் பாடலையும் எடுத்துக்கையாண்டு உரைநிகழ்த்தினார். சுரண்டலும்; அனைத்து வடிவ சமூக ஒடுக்கு முறைகளும் ஒழிந்த ஓர் பதிய சமுதாய அமைப்பான – சோஷலிச சமுதாயம் தோன்றும்வரை, மானுடர் மத்தியிலுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முற்று முழுதான இறுதியான முடிவினைக் கட்டிவிட முடியாது. சுரண்டலும் ஒடுக்கு முறையும் – இவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பும் – உலக வியாபிதாமானவை. ஆகவே இவற்றை ஒழிப்பதற்கான இயக்கமும் போராட்டமும் உலகளாவியவை. இதனால் தான் உலகளாவிய சோஷலிஸ அணியுடன் இவர் தம்மை இணைத்துக் கொண்டார் என்றவர் தொடர்ந்தார். சோவியத்யூனியனின் உடைவினால் ஏற்பட்ட விளைவுகளையும் பின்கண்டவாறு எடுத்துரைத்தார் “சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இனவாதமே முனைப்பான சக்தியாக ஆதிக்கம் பெறலாயிற்று. இது ஏனைய உலக நாடுகளுக்கும் பின்னர் பரவலாயிற்று. இந்த இனவாதத்தின் தத்துப் பிள்ளையான தேசியவாதம் இந்நாடுகள் பலவற்றில் அரசியல் எரிபொருளாகப் பரவியிருந்து, தீப்பற்றி எரிந்தமையைப் பார்த்தோம். இதன் கெடுதிகளையும் கண்டுகொண்டோம்” மார்க்ஸியத்தை வெறுமனே ஓர் அரசியல் கோட்பாடாக மட்டும் பார்த்து, அதன்வழி சென்று வீழ்ச்சியடைந்த அரசுகளை நினைந்து விசனப்படுவதை விடுத்து, அதனை ஒரு சமூகக் கோட்பாடாக உற்று நோக்குவோமேயானால் அதன் எதிர்கால நடைமுறைச் சாத்தியப்பாடுகளையும் பலாபலன்களையும் எளிதில் இனங்காண முடியும்! இந்த வகையிலான நம்பிக்கை பிரேம்ஜியின் கட்டுரைகளில் வெகுவாகப் பரவிக் கிடக்கக் காணலாம். என எடுத்துரைத்தார்.

தொடர்ந்து முன்னைநாள் தமிழ்ப்பேராசிரியர் நா.சுப்பிரமணியன் உரையாற்றும்போது பிரேம்ஜி என்ற புனைபெயர் தாங்கிய திரு ஸ்ரீகதிர்காம தேவஞானசுந்தரம்அவர்கள் (17-11-1930) ஈழத்தின் தமிழிலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்து வந்துள்ள இலக்கியவாதிகளுள் முக்கியமான ஒருவராவார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பின் செயலாளராக ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தொடர்ந்து செயற்பட்டுவந்துள்ளவர். மேற்படி சங்கம் ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் கடந்த அறுபதாண்டுக்கால வரலாற்றுச் செல்நெறியை நிர்ணயிப்பதில் – ஈழத்து நவீன தமிழிலக்கியம் நடைபயிலவேண்டிய திசைவழியை இனங்காட்டுவதில் -முக்கிய பங்களிப்புச் செய்துவந்துள்ள இலக்கிய இயக்கமாகும். இந்த இயக்கத்தின் செயல்திட்டங்களை வகுப்பதிலும் அவ்வாறு வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்வடிவம் பெறச்செய்து சமூகத் தளம்நோக்கி இட்டுவருவதிலும் ஓர் இயக்குவிசை என்ற நிலையில் செயற்பட்டு வந்துள்ளவர் திரு. பிரேம்ஜி அவர்கள். அவ்வாறான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் எழுத்தில் பதிவுசெய்தவற்றுள் ஒரு பகுதியே இங்கு பிரேம்ஜி கட்டுரைகள் என்ற தலைப்பில் ‘நான்காவது பரிமாணம்’வெளியீடாக நூல்வடிவில் தொகுநிலை எய்தியுள்ளது. ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட இவருடைய எழுதாக்கங்களில் பேணப்பட்ட 35 கட்டுரைகளே இநநூலாக்கத்தில் இடம்பெற்றுள்ளன.இவ்வெழுத்துகளின் இலக்கியநிலையிலான முக்கியத்துவம் தொடர்பான ஒரு பார்வை இது. இத்தொடர்பிலே முதலில் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்பதைப்பற்றியும் அதில் பிரேம்ஜி அவர்கள் பங்குகொண்ட முறைமை பற்றியுமான ஒரு குறிப்பை இங்கு முன்வைக்க விழைகின்றேன் என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முற்போக்கு இலக்கியம் என்பது சமூகத்தை முன்னெடுப்பதான உணர்வோட்டத்தின் வெளிப்பாடாக அமையும் இலக்கியம் என்ற பொருள்தருவது. இலக்கியநிலைச் செயற்பாடுகள் என்பன அநுபவப்பகிர்வு மற்றும் சுவையுணர்வு என்பவற்றோடு மட்டும் எல்லைப்பட்டு நின்றுவிடாமல் சமூகக்குறைபாடுகள் மற்றும் முரண்நிலைகள் என்பவற்றைக் களைவதற்கான செயலூக்கத்தை வழங்குவனவாகவும் அமையவேண்டும் என்பதே முற்போக்கு இலக்கியத்தின் அடிப்படையான குறிக்கோளாகும். இலக்கியத்துக்கு ஒரு சமூகநிலைப் பயன்பாட்டம்சம் உளது என்பது நமது மரபில் பண்டைக்காலமுதலே உணரப்பட்ட ஒன்றேதான். அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே என்ற மரபுசார் கூற்று இதனை உணர்த்தும. அதாவது ஒருவர் தமது வாழ்விலே அறத்தைப் பேணிப் பொருளீட்டுவதற்கும் பொருளினூடாக இவ்வுலக இன்பத்தை அநுபவிப்பதற்கும் அதன் தொடர்ச்சியாக வீடுபேறு எனப்படும் பேரின்பநிலையை எய்துவதற்கும் வழிகாட்டிநிற்பதே நூலின் பயன் என்பதுஇந்த மரபின் தெளிபொருளாகும். இவ்வாறான சமூகப்பயன்பாட்டு நோக்கினின்று இங்கு நாம் நோக்கும் முற்போக்கு இலக்கியம் சுட்டும் சமூகப்பயன்பாட்டுநிலை திட்டவட்டமாக வேறுபட்ட ஒன்றாகும். முன்னையது அதாவது மரபுசார் சிந்தனையானது அறவுணர்வு மற்றும் சமயஉணர்வுகளின் தளத்தில் உருவான கருத்தியல் ஆகும். அக்கருத்தியல் தனிமனித மனத்தை மையப்படுத்தியது. மனிதமனம் தன்னளவில் மாற்றமடையக்கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு போதனை முறைமையாக அமைந்த சிந்தனை அது. முற்போக்கு சார்ந்த கருத்தியலானது மனித மனத்துக்குப் பின்னால் இருந்து அதனை இயக்கி நிற்கும் சமூகத்தளத்தை மையப்படுத்தியதாகும். சமூகம் என்ற ஒட்டுமொத்த அமைப்பின் ஒரு கூறாக மட்டுமே தனிமனிதரை அது தரிசிக்கிறது. அவ்வகையில் சமூகத்தின் பொதுநிலைத் தேவைகளுக்பேற்ப தனிமனிதர்களான இலக்கியவாதிகளின் உணர்வுநிலைகள் குவிமையப்பட்டு இயங்கவேண்டும் என்பதே முற்போக்கு இலக்கியவாதிகளின் நிலைப்பாடாகும். இந்த அடிப்படையிலே இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அவை அநுபவ வெளிப்பாடு சுவையுணர்வு ஆகிய எல்லைகதை; தாண்டி சமூகநலன் நோக்கிய செயற்பாடுகளுக்கான இயக்குசக்திகளாகவும் கருவிகளாகவும் வடிவம் எய்திவிடுகன்றன. இவ்வாறான முற்போக்குச்சிந்தனைக்கான அடிப்படை உணர்வாக அமைந்தது ஏற்றத்தாழ்வற்ற சமூகமொன்றைக் கட்டியமைக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்காகும். இதற்கான செயன்முறைத் தத்துவ அடிப்படையாக அமைவது மார்க்சியம் என்ற சமூக அறிவியல் ஆகும். சமூக வரலாற்றை வர்க்கப்போராட்டங்களின் வரலாறாகக் காணும் அத்தத்துவம் அடக்கியொடுக்கப்பட்ட அடிநிலை மாந்தரின் விடிவுக்கான வழிமுறைகளை முன்வைத்துச் சமநிலைச் சமூக அமைப்பு முயற்சிக்கு வழிகாட்டுவது. தொழிலாளர் மற்றும் விவசாயிகள் எனப்படும் உடலுழைப்பாளர்கள் தம்மளவில் இணைந்து செயற்படுவதன்மூலம் தம்மை அடக்கியொடுக்கும் மேல்தட்டுவர்க்கத்தினரின் அதிகாரமையங்களை அழித்தொழிக்கலாம் என்பதே இத் தத்துவத்தின் முக்கிய போதனை அம்சமாகும்.இத்தத்துவசார்பால் சமூக உணர்வு பெற்ற சிந்தனையாளர்களின் கூட்டுச் சிந்தனையே ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற கருத்தியல் வடிவம் பெறலாயிற்று. ஆங்கிலத்தில் Pசழபசநளளiஎந டுவைநசயவரசந என்பதன் தமிழாக்கமாக இச்சொற்றொடர் தமிழில் பயிற்சிக்கு வந்துளது. இந்திய மண்ணில் 1930களின் நடுப்பகுதியில்(1935-36 காலப்பகுதியில்) ‘அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ உருவாகியது. ஆதன் தொடர்பால் 1940 களில் தமிழகச்சூழலிலும் ஈழத்திலும் மேற்படி ‘முற்போக்கு இலக்கியக் கருத்தியல் பரவியது. இதன்தொடர்ச்சியாக 1946இல் ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர்சங்கம் உருவாகியது. இது தொடர்ச்சியாகச் சிறப்பாக இயங்கமுடியாதிருந்த சூழலில் எட்டு ஆண்டுகளின் பின்னர் 1954இல்(27-06-1954) அச்சங்கம் மீள அமைக்கப்பட்டது அவ்வமைப்பின் பொதுச்செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பொறுப்பில் தொடர்ந்து இயங்கிவந்தவர் வந்தவர் என்றவகையிலேயே, பிரேம்ஜி அவர்கள் ஈழத்து த்தமிழிலக்கிய வரலாற்றை முன்னெடுத்த முக்கிய சிந்தனையாளராகிறார்.

பிரேம்ஜி அவரகளின் இவ்வாறான இயக்கநிலைச் செயற்பாடுகளில் ஒரு கூறாக வெளிப்பட்ட அவருடைய இந்த எழுத்தாக்கங்கள் ஒருவகையின. மேற் குறித்தவாறு பலநிலைகளிலும் அவர் பதிவுசெய்த கருத்துகளின் பரப்பில் இரு முக்கிய அம்சங்கள் முனைப்புற்றுநிற்பதை அவதானிக்க முடியும். ஓன்று முற்போக்கு என்ற அம்சம் இன்னொன்று தேசியம் என்ற அம்சம். முற்போக்கு என்ற வகையிலே சாதி மற்றும் பொருளியல் ஏற்றத்தாழ்வுகளற்ற சமநிலைச் சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான திசை வழியை நோக்கி இலக்கியவாதிகள் நடைபயில வேண்டும் என அவர் அறைகூவல் விடுக்கிறார். அதற்கான செயல்திட்டங்களை முன்வைக்கிறார் “அத்திசையிலே சரியான வழியிலேதான் நடைபயில்கிறோமா?” என்பதை அடிக்கடி வினாவாக எழுப்பி விடைகாண- திருப்திகாண- முற்படுகிறார். முற்போக்கு இலக்கியத்துக்கான கருத்தியல் முதல்வராகத் தமிழகத்தின மகாகவி பாரதியை இனங்காட்ட முற்படுகிறார். அதேவேளை தேசியம் என்றவகையிலே தமிழகத்தின் தொப்புள்கொடி உறவிலிருந்து ஈழத்திலக்கியம் விடுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகத் திகழவேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். .அவ்வாறான ஈழத் தமிழ்த் தேசியத்துக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார் எனச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார். ஈழத்தில் இலக்கிய இதழ்கள்மற்றும் படைப்பாக்க முயற்சிகள் சிறப்பாக வளர்வதற்கான திட்டங்களை முன்வைக்கின்றார். என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஈழத்தில் நவீன தமிழிலக்கியம் மரபின் பிடியிலிருந்து படிப்படியாக விடுபட்டு முகங்கொள்ளத் தொடங்கிய காலப்பகுதி அது. தமிழகத்தில்; ராஜமையர், பாரதி, புதுமைப்பித்தன் முதலியவர்களின் எழுத்துகளில் 1890- 1940 காலகட்டத்தில் மரபிலிருந்து நவீன இலக்கியச் செல்நெறிக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவட்டது. ஆனால் ஈழத்தில் 1930- 1940 களிலேயே இவ்வாறான மாற்றம் நிகழத் தொடங்கியது. இவ்வாறு ஈழத்தில் நவீன இலக்கிய உணர்வு முளைவிடத் தொடங்கிய சமகாலத்திலேயே திட்டவட்டமான கோட்பாட்டு முறைமையாக முற்போக்கு இலக்கிய நெறி ஈழத்து இடதுசாரிகளால் 1940-50களில் முன்வைக்கப்படலாயிற்று. அதனால் கடந்த 60 ஆண்டுக்கால ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாறானது முற்போக்கு இலக்கியம் என்பதை மையப்படுத்தி அதனைச் சார்ந்தும் அதனை விமர்சித்தும் வளரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதான் இன்றுவரையான பொது வரலாற்றுநிலையாகும். இவ்வகையிலேயே இக்கருத்துகள் வரலாற்று முக்கியத்துவமுடையனவாகின்றன.

இவ்வாறான இந்த வரலாற்றுப்போக்கைத் திட்டமிட்டு வழிநடத்திய சிந்தனையாளர்களுள் ஒருவர் என்பதுதான் பிரேம்ஜி அவர்களின் வரலாற்றுப்பாத்திரமாகும். ஏனைய சிந்தனையாளர்கள் என்றவகையில் கே.இராமநாதன் ,கே.கணேஷ், கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன் முதலிய சிலரைச்சுட்டலாம். இவர்கள் அனைவரும் மார்க்சிய தத்துவச்சார்பினர். இவர்களில் முதலிருவரும் முதலில் – 1946இல் – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தோற்றவித்தவர்களுமாவர். இவ்வகையில் பிரேம்ஜி அவர்களின் எழுத்துகளாக அதாவது முற்போக்கு இலக்கியம்சார் கருத்துநிலைகளாக இந்நூலில் இடம்பெற்றவை அவரின் சொந்த தனிமனித – மூளையின் உருவாக்கங்களன்று என்பதும் சம காலத்தில் முற்போக்குச் சிந்தனையாளர்களாகத் திகழ்ந்த மேற்சுட்டிய பலரின் கூட்டு மனத்தின் உருவாக்கங்களே என்பதையும் இங்கு சுட்டவேண்டியது எனது கடமையாகிறது. இவற்றைச் சிந்தாமற் சிதறாமல் எழுத்துநிலையில் பதிவுசெய்த வகையிலும் தொடர்ந்து அத்தொடர்பில் சிந்தித்துவந்த வகையிலும் ஒரு பொறுப்புள்ள இயக்கச் செயற்பாட்டாளராக அவர் திகழ்ந்து வந்துள்ளார் என்ற வகையிலுமே அவர் ஈழத்து இலக்கிய வரலாற்றை ஆராய்ந்துவரும் என்போன்றோரின் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவராகிறார் என்றுரைத்த ஐயா அவர்கள் தொடர்ந்து “வரவேற்கத்தக்க அம்சம் என்ற வகையில் பாரதியும் மற்றும் பாரதிதாசனும் ஓர் ஒப்பு நோக்கு என்ற தலைப்பிலான  1956இல் எழுதப்பட்ட விமர்சனக்கட்டுரையில் அவர் வந்தடைந்த முடிவு பொருத்தமான ஒன்று என்பதை இங்கு முதலில் சுட்ட விழைகின்றேன். கவிஞர் கனக சுப்புரத்தினம் அவர்கள் தன்னைப் பாரதிதாசன் எனக்கூறிக்கொண்டாலும் கவித்துவததுக்கு அடிப்படையான நோக்குநிலையில் அவர் பாரதியின் தாசன் அல்ல என்பதை ஒப்பியல் பார்வைமூலம் தெளிவுறுத்தியுள்ள கட்டுரை இது. இம்முடிபுக்குச் சான்றாக இருவரிடமும் நிலவிய வேறுபாடுகள் பலவற்றைப் பிரேம்ஜி அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வகையில், பாரதிபோல சமகால மக்களியக்கத்தில் தன்னை பாரதிதாசன் இணைத்துக்கொண்டவரல்ல என்பதும எட்டநின்று கவிதை பாடுவதோடு மட்டும் நின்றுகொண்டவர் என்று பிரேம்ஜி காட்டும் வேறுபாட்ட அம்சம் மிக முக்கியமான ஒன்றாகும். படைப்பாளி அகன்றிருந்து உபதேசிப்பவனாக மட்டும் இருப்பதில் நிறைவுபெற முடியாது என்ற முற்போக்குக் கருத்தியல் சார்ந்த விமர்சனம் இது. பிரேம்ஜி இக்கட்டுரையை எழுதிய காலத்தில் – 1956இல்- இத்தகு விமர்சனப்பார்வையானது முற்போக்குச் சிந்தனை கொண்ட சிலரிடம் மட்டுமே நிலவியிருக்கமுடியும். அவ்வகையில் இப்பார்வை முக்கியமானது.

பிரேம்ஜி அவர்களின் இலக்கியம் தொடர்பான எழுத்துகளில் கோட்பாட்டு நிலைகளாக அவர் சுட்டியுள்ள இருவிடயங்கள் இங்கு நமது தனிக் கவனத்துக்குரியன. அவற்றுள் ஒன்று, ‘ஜனநாயக யதார்த்தம்’ எனப்படுவது. மற்றது சோஸலிசயார்த்தவாதமாகும். சமுதாயத்தின் அனைத்துக் கோணல் மாணல்களையும் பிரத்தியடசப்படுத்துவதோடு சமுதாயத்தின் விடுதலைக்காக வழியைக் கோடி காட்டுவதான இலக்கிய முயற்சியே இங்கு ஜனநாயகயதார்த்தம் என்பதாக பிரேம்ஜி அவர்களால் சுட்டப்படுகிறது.(பக்.8-9) 1957இல் நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க முதலாவது மாநாட்டில் சமர்ப்பித்த ‘முற்போக்கு இலக்கியம்- ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பிலான அறிக்கை தரும் தகவல் இது. இரண்டாவதான சோஸலிசயார்த்தவாதம் என்ற கோட்பாடானது ரஷ்யாவில் மார்க்சிய அரசியல் முன்னெடுக்கப்பட்ட சூழலில் ஸ்டாலினுடைய ஆட்சியிலே அவருடைய ஆசியுடன், 1934 இல் உருவாக்கப்பட்ட கருத்தாக்கமாகும். ‘உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டிச் சோசலிஸக் கட்டமைப்பை முன்னெடுக்கும்’ வகையிலான கலை, இலக்கிய ஆக்க முயற்சிகளைக் கோரிநிற்கும் கோட்பாடு இது. இவற்றுள் முதலாவதான ‘ஜனநாயக யதார்த்தம்’ என்பதே முற்போக்கு இயக்கத்தில் முன்வைக்கப்பட்டதென்பதும் இரண்டாவதான ‘சோஸலிச யதார்த்தவாதம’  அடுத்த கட்ட இலக்காக வரித்துக்கொள்ளப்பட்தென்பதும் பிரேம்ஜியின் எழுத்துகள் உணர்த்தும் செய்திகள். இவ்வாறாக அவர் சுட்டியுள்ள கோட்பாட்டம்சங்களை ஈழத்தின் கடந்த அரை நூற்றாண்டுக் காலப்பகுதியின் இலக்கியவரலாற்றியக்கத்தோடு பொருத்திநோக்கலாம் என்ற அவர் இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளில் முற்போக்கு இலக்கியம் என்ற கோட்பாடு உருவானபோது மேற்படி ரஷ்ய சூழலுக்கு அமைவானதாக உருவான சோஸலிஸயார்த்தவாதம் என்ற கோட்பாடு நடைமுறைச் சாத்தியமாக ஒன்றாக இருக்கவில்லை. ஏனெனில் இந்நாடுகளில் ரஷ்யாவைப்போல முதலாளித்துவத்துக்கெதிரான சோஸலிசப் புரட்சிககான சூழல் நிலவவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய-ஜனநாயகப் புரட்சிக்கான சூழலே நிலவியது. எனவேதான் தமிழகத்திலும் ஈழத்திலும் முற்போகுப் பேசியவர்கள் சூழலுக்கு ஏற்றவகையில் யதார்த்தம் பற்றிப் பேசவேண்டியவர்களாயினர். இதன்விளைவுதான் பிரேம்ஜி முதலியோர் முன்வைத்த ஜனநாயக யதார்த்தம் என்ற கோட்பாடாகும். சோஸலிஸயார்த்தவாதம் என்பதை இறுதி இலக்காகக் கொண்ட உடனடிச் செயற்பாட்டுத்தளமாக இது அமைந்தது. சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சினைகளை இனங்காட்டுவதோடு அவற்றினின்று விடுபடும் வழியையும் மார்க்சிய அடிப்படைசார்ந்து உணர்த்துவது என்ற அளவில் அமைந்த ஜனநாயக யதார்த்தம் என்ற கோட்பாடு 1950 -60கள் காலகட்டத்தில் தமிழக ஈழச் சூழல்களுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்தது. தமிழகத்தின் தொ.மு.சி ரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும்,டி. செல்வராஜின் மலரும்சருகும், முதலிய ஆக்கங்கள் இந்த அடிப்படையில் உருவானவையேயாம். ஈழத்தில் இளங்கீரன் எழுதிய தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்டபயணம், செவ்வானம் முதலிய பல ஆக்கங்கள் முருகையன், பசுபதி, டொமினிக்ஜீவா, அகஸ்தியர், கே. டானியல், பெனடிக்ட் பாலன்,செ.யோகநாதன் மற்றும் தெணியான் முதலிய பலரின் ஆக்கங்களுக்கு இவ்வாறான ஜனநாயக யதார்த்தக் கோட்பாடுதான் அடித்தளமாகவும் உந்துசக்தியாகவும் திகழ்ந்தது என்பது இங்கு நினைவில் இருத்தவேண்டிய ஒரு வரலாற்றம்சமாகும். அவ்வகையில் பிரேம்ஜி அவர்களும் அவர்களைச்சார்ந்த முற்போக்காளர்களும் சரியான ஒரு திசைவழியையே காட்டியுள்ளனர் என்பது எனது கணிப்பாகும் என்றார். தொடர்ந்து “வெறும் கருத்துகளும் உள்ளடக்கமும் இலக்கியமாகிவிடுவதில்லை இவை இலக்கிய உருவத்தைப்பெறும்போது தான் இலக்கியமாகின்றன… இலக்கியத்தரத்தைப் பெறாத எதையும் இலக்கியமாகக் கொள்ள முடியாது”. என அவர் தந்துள்ள குறிப்பு முக்கியமானது. இவ்வாய்வுரையை நிறைவு செய்யும்நிலையில் பிரேம்ஜி அவர்கள் முன்வைத்த முற்போக்கக்கருத்தியலைப் புரிந்தகொள்வதில் நிகழ்ந்த சிக்கலொன்றைச் சுட்டவேண்டியது அவசியமாகிறது. 1957 இல் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் பிரேம்ஜி அவர்கள் முன்வைத்த அறிக்கையிலே முற்போக்கு அணி சாராத – அணி சாரத்தயங்கும் எழுத்தாளர்களை எதிரிகளாகக் கருதவேண்டியவர்களல்லர் என்பதும் அவர்கள் உயர்ந்த பண்போடும் பரிவோடும் அணுகப்பட்டு முற்போக்கு அணிக்கு இட்டுவரப்படவேண்டியவர்கள் என்பதும் சுட்டப்பட்டிருந்தது. (பக்.2-3) வரவேற்கப்படவேண்டிய அணுகுமுறை இது என்பதில் ஐயத்திற்கிடமில்லை. ஆனால் நடைமுறை வரலாற்றிலே இது சாத்தியப்படவில்லை என்பதே வரலாறு.

1970களின் இறுதிவரை முக்கிய மனிதநேயப் படைப்பாளிகள் சிலர் – குறிப்பாக எஸ் பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், மஹாகவி,நீலாவணன் முதலியவர்கள் – முற்போக்கு அணியின் முதல் தலைமுறையினரால்- குறிப்பாக கலாநிதிகள் க. கைலாசபதி ,கா.சிவத்தம்பி முதலியோரால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர். அல்லது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். 1970களின் இறுதியிலேயே முற்போக்கின் முதல் தலைமுறை சார்ந்தோரில் திரு ஏ.ஜே. கனகரத்னா மற்றும் இரண்டவது தலைமுறையினரான திரு சி.மௌனகுரு , திருமதி மௌனகுரு சித்ரலேகா, எம்.ஏ.நுஃமான் ஆகியோரே மேற்படி மனிதநேயப் படைப்பாளிகளைக் கவனிப்புப்பெற வைத்தனர்.  இவ்வாறு இவர்கள் கணிப்பெய்தியமைக்கு அழகியல் தொடர்பாக ஐரோப்பிய- அதாவது ரஷ்யாவுக்கு அப்பாலான மார்க்சியரிடையில 1950 – 70 காலப்பகுதியில் நிகழ்ந்த கருத்து வளர்ச்சிகளே காரணங்களாகும். இவ்வகையில் ஜேர்ர்ஜ் லூகாக்ஸ், அந்தோனியோ கிராம்சி, Nரூபர்ட் மார்க்யூஸ்,பியர்மெஸ்ரீரி முதலிய பலரின் கருத்துகள் முக்கியமானவை.

“இலக்கியத்தின் உண்மையான சமூகக்கூறு அதன் உள்ளடக்கமன்று உருவமே”,என்ற லூகாக்ஸின் கூற்று அழகியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். மார்க்சிய அழகியல் தொடர்பான இப் புதியபார்வைகளை முன்வைத்து 1070-80 காலப்பகுதியல் ஈழத்து முற்போக்காளரிடையே விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகவே கலாநிதி கா.சிவத்தம்பியவர்கள் 1960-70களில் தாம் முன்வைத்த பார்வைகள் தவறு என்பதைப் பகிரங்கமாக 1980களின் ஈற்றில் ஒப்புக்கொணடார். தாங்கள் தொடக்கத்தில் சோஸலிஸ யதார்த்தவாதப் பார்வையை முன்வைத்ததாகவும் மாறாக விமர்சன யதார்த்த வாதப் பார்வையை முன்வைத்திருக்கவேண்டும் என்பதுமாக அவருடைய வாக்குமூலம் அமைந்தது. கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களது மேற்படி கூற்றை அவருடைய பெயரைச் சுட்டாமலே பிரேம்ஜி அரவர்கள் தமது முற்போக்கு இலக்கியம் – சித்தாந்த நெருக்கடிகளும் முன் போதலுக்கான வழி மார்க்கங்களும்; என்ற ‘விபவி’கருத்தரங்க உரையில் (1996)குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். தாம் சோஸலிச யதார்த்த வாதத்தை நடப்பு நிகழ்ச்சி நிரலில் என்றுமே முன்வைத்ததில்லை எனவும் ஜனநாயக யதார்த்தத்தையே தெளிவான பார்வையுடன் முன்வைத்ததாகவும் பிரேம்ஜி அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் (பக்.127-28). இத்தொடர்பிலே எழும் சில அடிப்படை வினாக்களை பிரேம்ஜி அவர்களுக்கு முன்வைத்து அவருடைய கவனத்தைக் கோருவதுடன் இய்வுரையை நிறைவுசெய்ய முயல்கிறேன்.

அ. மேலே சுட்டிய எஸ் பொ., மு. தளையசிங்கம், மஹாகவி ,நீலாவணன் முதலிய முக்கிய மனிதநேயப் படைப்பாளிகள் தொடர்பாக –அவர்களுள்ளும் குறிப்பாகப் பின்னைய இருவர் தொடர்பாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எத்தகு கருத்துக்கொண்டிருந்தது. கலாநிதிகள் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரின் கருத்தோடு உடன்பாடுகொண்டிருந்ததா ? அல்லது வேறபட்ட நிலைப்பாடு கொண்டிருந்ததா? இதுபற்றிப் பிரேம்ஜி கருதது எதனையம் தெரிவித்துள்ளாரா?.

ஆ. இ.மு.எ.ச ஜனநாயக யதார்த்தத்தை முன்வைத்த சூழலில் அதனோடியைந்து செயற்பட்ட கலாநிதிகள் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகிய இருவரும் சோஸலிச யதார்த்த நோக்கில் விமர்சனம் செய்தார்கள் என்பதை அவ்வியக்கம் அறிந்திருந்ததா? இதுபற்றி அவ்வியக்கத்தில் வாதப்பிரதி வாதங்கள் நிகழ்ந்தனவா? செயலாளர் என்றவகையில் பிரேம்ஜி அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாடு எத்தகையதாக அமைந்தது?

இவை தனிப்பட்ட எஸ் பொ,  மு. தளையசிங்கம், மஹாகவி மற்றும் நீலாவணன் ஆகியோரை ஏற்றுக் கொள்வதா விடுவதா என்பது பற்றிய வினாவன்று. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றைக்கட்டமைப்பதில் ஏற்படக்கூடிய பிரச்சினை தொடர்பானதாகும்.

ஈழத்தின் தமிழிலக்கியச் செல்நெறியைத் தீர்மானிப்பதில் கடந்த அரைநூற்றாண்டுக்காலத்தில் முனைப்புடன் செயற்பட்டுநின்ற திரு.பிரேம்ஜி அவர்கள் மேற்படி வினாக்களுக்கு விடைதரக்கூடியவகையில் தமது அநுபவங்களை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து இவ்வுரையை நிறைவுசெய்கிறேன் என்றார். உதயன் பத்திரிகையின் ஆசிரியரும் கவிஞருமான மலையன்பன் ஆர்.என்,லோகேந்திரலிங்கம் கருத்துரை தெரிவித்தபோது இடதுசாரி என்று சொல்லும்போது ஒரு கனமும், மதிப்பும் இருந்தது. பிரேம்ஜிபோன்றவர்களின் செயற்பாடே அதற்குக்காரணம். என்னை வெளியே அறியத்தந்தவர் பிரேம்ஜி.  நான் சோவியத் நாடு இதழில் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவந்தேன். அவருக்குப் பிரேம் என்ற பெயரை மாற்றி பிரேம்ஜி என மரியாதை கொடுத்து அழைத்தவர் கேரளாவைச் சேர்ந்த கிருஸணா. காந்திஜீ, நேருஜீ என்பதுபோன்று பெருமைசேர்க்குமம் வகையில் அவரை அழைத்துள்ளார். அது நிலைபெற்ற ஒன்று. அவர் அனைத்து எழுத்தாளர்களையும் இணைத்து செயற்பட்டார் என்றால் அது சாதாரணமான ஒரு விடயமல்ல என்றார். தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் ஆசிரியர் எஸ். புத்மநாதன் உரையாற்றும்போது பிரேம்ஜி ஈழத்தில் கல்வி கற்றது முதல் இந்தியா சென்றமை, அங்கு கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியமை. இங்குவந்தும் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டமை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1954 தொடக்கம் இன்றுவரை இயங்கிவருவது ஈறாக அனைத்து வரலாற்றையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து முனைவர் பார்வதி கந்தசாமி உரையாற்றும்போது பிரேம்ஜி என்ற தனிமனிதன் அமைதியாக தன்னை வெளியே காட்டிக்கொள்ளாமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அனைவரையும் இணைத்துச் செயற்பட வைத்தார் என்றால் அவரது ஆற்றல் அளவிடமுடியாதது என்ற அவர் தனக்கிருந்த வாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டு உலக எழுத்தாளர்களைக் கூட்டி பெரியதொரு மகாநாட்டை பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் கூட்டினார் என்றால் அது சாதாரணமான ஒன்று அன்று. தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமலே பணியாற்றி வரலாறு படைத்த சாதனையாளராகவே அவரை நான் காணுகின்றேன் என்றார்.

தொடர்ந்து ஏற்புரை வழங்கினார் விழா நாயகர் பிரேம்ஜீ ஞானசுந்தரன் அவர்கள். தனது உரையில் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை நூலாகக் கொண்டுவரவேண்டும் என எனது நண்பர்கள் பலர் ஆசைப்பட்டனர். அதற்குப் பல இடர்பாடுகள் இருந்தன. அவற்றைத் தாண்டி இன்று இந்த நூல் வெளிவந்துள்ளது. பல நண்பர்கள் என்னிடம் வந்து எழுதுங்கள் எழுதுங்கள் என்று அன்புக்கட்டளை பிறப்பித்தனர். ஆனால் காலம் கை கூடவில்லை. இன்று பெருந்தொகையில் வந்து எனக்க ஆதரவு தந்துள்ளீர்கள் அதற்கு எனது நன்றி என்ற அவர், தலைவர் பொ.கனகசபாபதி, தொகுப்பாளர் வி.என். மதியழகன் என அனைவருக்கும் தனது நன்றியறிதலைக் குறிப்பிட்டு உரையாற்றியதோடு கவிஞர் நவம் அவர்களின் நான்காவது பரிமாணத்தின் வெளியீடாக இந்நூல் வெளிவந்ததில் பெருமை கொள்ளவதாகவும் குறிப்பிடத் தவறவில்லை.

thangarsivapal@yahoo.ca