புது வாழ்க்கை

சிறுகதை: புது வாழ்க்கைவண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல… உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே… எங்கயும் நிக்காது… பைப்பாஸ் வழியா போறது…” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.

“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா… எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்… சார் டைம்பாஸ் புத்தகம் சார்…” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்…

“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே…” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு…”

“மாதுளை கிலோ எம்பது, எம்பது”

“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்…”

“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை…” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது…

“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்…”

“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா…”

சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது… குரு தியேட்டர் திரும்பி… வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது…

“டிக்கெட்… டிக்கெட்… எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க… “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு… பாட்ட கேட்க முடியல… ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க…”

“சத்தம் காதுசவ்வைக் கிழிக்குது… செத்த நேரம் இந்த பாட்டத்தான் அமத்தினா என்ன? டிக்கெட் போட முடியல…” எனக் கண்டக்டர் அலுத்துட்டு “அண்ணே டிக்கெட் போட முடியல… இந்த ஆளோட தினந்தினம் இதே இளவாப் போச்சு, இவனோட சேர்த்து விட்டு இவனோடு டியூட்டி பார்க்கிற ஒரு நாள் ஒரு வாரம் பாத்த கனக்க ஆக்கிறான் மனுசன்” எனக் கண்டக்டர் சக டிரைவரை எண்ணிப் புலம்பிக் கொண்டு இருக்கையில்… அதற்குள்ளாக கண்டக்டர் சொன்னது டிரைவருக்குப் புரிந்து டேப்ரிக்காடரை நிறுத்திட்டு… வட்டையில கவனம் செலுத்தியது கணக்கா விறைப்பா மூஞ்சிய வைச்சிட்டு இருந்தாப்புள…

பஸ்ல பெரிய நிசப்தம். மாலையிலே வண்டுகள் ரீங்காரம் இடும் ஓசை ஆறுதலாக இருந்தது. பவர்ஹவுஸ் – சமயநல்லூர் வேகத்தடையிலே மனுசன் பிரேக்க புடிச்சுவிடாம அப்படியே விடுறான் என ஒருவர், பக்கத்தில் இருந்தவுககிட்ட சொல்ல “கடைசியிலே இருக்கவனுக்கு இடுப்பு எலும்பு ஒடிய வேண்டியதுதான்.”

“ஏண்யா, வேகத்தடையிலே கொஞ்சம் நிறுத்தி மெதுவாப் போகச் சொல்லுங்க, கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லுங்க…”

“டிரைவர் சார் கொஞ்சம் வேகத்தடையில் பாத்துப் போங்க…”

“வா வா வந்து சொல்லிக்குடு, சும்மா உக்கரமாட்டாங்க… வண்டிய ஓட்டுற எனக்குத் தெரியாதா… எதையாச்சும் பேசனும்னு பேசக்கூடாது… வந்து நமக்கின்னு கிடந்து எங்கயிருந்து தான் வருவாங்களோ… கண்டக்டர் என்னன்னா… பாட்டுப் போடாத என்கிறான்… இந்த ஆளு செத்த பாத்துப் போகவாம். கட்டை வண்டியில போக வேண்டியவன்ல்லாம் பஸ்சில ஏறிப்போனா இப்பிடித்தான்.”

“நீங்க பேசினது காதுல விழுந்து இருக்கும் அடுத்த வேகத்தடையில் மெல்லமாத்தான் போகும்… பாருங்க,”

பஸ் பைப்பாசைத் தொட்டதும் சிறுமலைக் காத்து லேசா உயிரை உரசிறாபில இருந்துச்சு… சித்த நாழி கண் அசந்தாப்பல இருந்துச்சு..

“ஒட்டன்சத்திரம்…”

“ஏம்மா, ஒட்டன்சத்திரத்திற்குப் போக ஒத்த சீட்டுக்கு ஐநூறு ரூபாத்தாள நீட்டினா எப்படி? வேல செய்யிறதா என்ன…”

“பாக்கிய குடுங்க நான் இறங்கனும், பொம்பளபிள்ளைக் கிட்ட சத்தமா பேசுற… உனக்கு சமமான ஆம்பளக்கிட்ட மல்லுகட்டு… இப்ப பாக்கி சில்லறய கொடுயா… எங்க ஊர் கடைசி பஸ்சைப் பிடிக்கணும்…

கார்காலத்துப் பொழுது வேகமாக மசங்க லேசா நிலவு மேலே வர.. நல்ல முன்னிருட்டு, பின் சீட்டுக்காரர் கண்ணாடியைத் தூக்கிப் பாத்து ஒன்னும் சுகப்படல போல, பொழுது நல்ல மடங்கிறுச்சு.

“கண்டக்டர், அண்ணே கொஞ்சம் லைட்ட போடுங்க” எனக் கூவியதும் லைட்டைப் போட்டுவிட்டார். அப்படியே நீல வண்ணக் கலருக்கு உள்ளே இருந்த ஒவ்வொரு முகமுமே அழகாய்த் தெரிந்தது. அழகாக இருந்த முகம் கூடுதல் பொலிவு பெற்று இருந்தது, இந்த நிறம் பாத்து ‘‘ஏஞ்சோடி மங்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி… ஆட்டம் போடடி பாட்டுப் பாடடி…” எனப் பாட்டு ஒலிக்கு ஏற்ப பின் படிக்கட்டில் ஏறி கடைசி படிக்கு முன் வரிசையில் அமர்ந்த போதும் அவள் மனத்தில் இனம் புரியாத படபடப்பு…

எப்ப பஸ்ல ஏறினா? பாட்டு போட்ட பிறகா முன்னாடியா?

கடைசி வரிசையில் கறுத்த ஒல்லியான தேகம் உடைய ஒருவன் மஞ்சள் கலர் சேலை கட்டுண பெண்ணைப் பார்ப்பதும் “ஏதோ, மனசுக்குள்ள பேசுவதுமாக…” திரும்பி பார்ப்பதுமாகவும், சில நேரம் அவன் முகத்தில் மகிழ்ச்சியையும், பல நேரம் சோகத்தையும் படர விட்டும் ரசித்துக் கொண்டு இருப்பதாகவே பார்ப்பவர்களுக்குத் தெரிந்தது. ஆனா அது அப்படி அல்ல பலநாள் பழகிய வாஞ்சையோடு அவன் தன்நிலை மறந்தும், பிறழ்ந்தும் அவள் இருப்பதைப் பாக்கப் புரியவில்லை…

“…அம்பிளிக்கை காட்டு ஆஸ்பத்திரி இறங்குறவக எந்திரிச்சு வாங்க… நிப்பாட்டுன பிறகு இடத்தவிட்டு ஆடி அசஞ்சு வந்து சேரச் சிரமப்பட வேண்டா, முன்னாடி வாங்க…”

“ஏதோ நல்ல மூடில படுத்து இருக்கராப்பில… இல்லாட்டி வா… இந்தப் பக்கம்னு.. என ஒருமையில இல்லாம, வாங்கண்ணு… பேசுறாரு”

இலேசா வாடைக் காத்து அழுத்தி வீசுது… அதில் கொஞ்சம் மண் வாசனையும் கலந்து செம்மண் சுவை நாசியைத் தொட்டு இதயத்தை நமக்கரித்தது…

கிரிஸ்க்கு என்ற இரைச்சலோடு பஸ் நின்றதும், கடைசி வரிசை ஆசாமி எழுந்து நின்னு மஞ்சள் புடைவைக்காரப் பெண்ணைப் பார்த்து கொண்டே இருந்தவர், இடம் கிடைக்கவும், “அக்கா நீங்க ராணி அக்கா தானே…” எனத் தயங்கித் தயங்கிக் கேட்க,

“ஆமாடா பயந்தாங்கோலி பாஸ்கரன் தானே.”

“அக்கா, நீங்க, இன்னும் என்னை மறக்கலை… அக்கா…”

“சரிடா உட்காரு, இவ்வளவு நேரமா அப்படி என்னத்தா மொரச்சு மொரச்சுப் பார்த்த…”

“அட நம்ம அக்கா இந்த பக்கமின்னு…” கார்த்திகை மாசப்பொழுது காப்பொழுது, இருந்தாப்பில இருக்கும், பாடர்ண்ணு மசங்கிரும்… என்ன கொஞ்சம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கு போல, பஸ் கண்ணாடியச் சாத்தினா நல்ல இருக்கும் போல தோனுது.

“மகராசி, எப்படி இருந்த ஊருல… அதுவும் சாதா பஸ்ல…. ஆடியும், பேன்சும், இன்நோவாவும் அக்கா வீட்டில் தவம் கிடக்கும், பாதகத்தி மவ இப்படியா ஆளே அடையாளம் தெரியாம தோரனையே மாறிப் போச்சேக்கா… பாத்ததும் எம் உசுறு பதறிப்போச்சு! என்ன இருந்தாலும் அக்கா இங்க வரச் சோலி இல்லையேன்னு தான் ரோசுச்சு ரோசுச்சுப் பார்த்தேன். எனக்கு மனசுகேக்கல… அதான் எப்படியாவது கேட்டுவிட வேண்டும்னு இருந்தேன். வேறயாராவதா இருந்து, நான் உங்கள நெனச்சு கேக்க, அவுக வேற ஆளா இருந்தா வம்ப விலைக்கு வாங்கின கதையாகிப் போகப்பிடாதில்ல பாரு..” போயிடுமேன்னு பயமாவேற இருந்துச்சு…

டேய், பாஸ்கரா என்னை இங்க பார்த்ததாகப், பேசியதாக யார்கிட்டேயும் சொன்ன சங்க அறுத்துப்படுவேன்… படுவா…”

“ஏக்கா, சென்னையை விட்டு இங்க வந்து எவ்வளவு நாள் ஆச்சு… மகாராணி மாதிரி இருந்தவுக.”

“அடப்போடா எல்லாம் அளுத்துப் போச்சு.”

“என்ன அப்பிடிச் சொல்லிட்டீங்க. எப்படி இருந்தவுக காசு பணத்திற்கு என்ன குறையிருந்துச்சு… யாரையும் எப்பையும் போன்ல கூப்பிடும் தோரணை, எத்தம் பெரிய ஆபீசரும் அக்காகிட்ட குட்டிபோட்ட நாயப் போல வாலச்சுருட்டிக் கிட்டு நிப்பாகளே… இப்ப நினைச்சாலும் அது மறக்க முடியுமா…”

“டேய் அது வாழ்க்கையாடா… போடாப் போ காவயித்து கஞ்சியைக் குடுச்சாலும் உடம்புல ஒட்டுறது தான் ஒட்டும்… அப்ப சாப்பிட்ட சாப்பாட்டை நினைச்ச ஈராக்கொலை நடுங்குது. எத்தனை பேத்த பலியாட ஆக்கி இருப்பேன்… நான் பலியாடானது, என் புருஷன் காட்டினவழி, ஆனா நான் பலருக்கு இந்த சாக்கடையை சுகம்னு, அடையாளங் காட்டிடேனே… எல்லா பாவத்தை எம் தலையில் போட்டனே…”

“அக்கா, அது எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு… இப்ப அதப் பத்திக் கேட்டது தப்பாப் போச்சே, அத விடுக்கா, நல்லா இருக்கலே…” தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு,

“நீ என்னப்பண்ணுற, உம் குடும்பம் எங்க, எப்படி இருக்க… இன்னும் அதே வேலையா?”

“அய்யோ, அக்கா எல்லாம் மறந்து ஏழட்டு வருசம் ஆச்சு, ஒட்டஞ்சத்திரம் பக்கம் லக்கம்பட்டி வந்து புது மனுசனா வாழ்ந்துகிட்டு இருக்கேன். இப்ப நல்ல மனுசனா, நாலுபேர் மதிக்க வாழ்ந்திட்டு இருக்கேன், ஏம் பொண்டாட்டி மகராசி நல்லவ என்னைத் தாங்கு தாங்குன்னு தாங்குறா…

“உம் பொஞ்சாதி பேரு…”

“முத்துலெட்சுமிக்கா…”

“நீ எங்கடா…”

“பல்லடம் வரைக்கும் எம் மச்சின வீட்டுல காலையிலே புண்ணிய அர்ச்சனை அதுக்குதான் போறேன்.”

“புள்ளைகளக் கூட்டிப் போகாம நீ மட்டும் போற…”

“இல்லக்கா விரலுக்கு ஏத்த வீக்கம் வேணுமில்ல… அவுக, கொஞ்சம் சம்சாரித்தனம் நினைச்ச வீடு, அதுல கொஞ்சம் காசு பணத்தில கொஞ்சம் தூக்கினாப்பில இருக்கா, எம் பெண்டாட்டிக்கு அதுல மனத்தாங்கல் ஆனா, மதிப்பில குறையில்லா, நம்ம நாலுபேர் வந்து போனா ஆயிரம் செலவாகும் அதமொய்யாவச்சிட்டு வந்திருலாம்தான் நாமட்டும் வந்தேன்… ஆண்டவன் புண்ணியத்திலே அதுவும் நல்லதாத்தான் போச்சு… அவ இருக்க அக்காவ பாத்தாலும் பேசமுடியுமா. பேசினாலும் இவ்வளவு மனசுவிட்டு பேசமுடிஞ்சு இருக்காதுல.”

“பொண்ணுக என்ன பண்ணுது”

“அட பெரியவ… பி.ஏ முடிச்சுட்டா, சின்னவ பன்னன்டாம் கிளாஸ் படிக்கா… இவளுகளுக்காக தானே என்ன மாத்தி இந்த மண்ணிலே மல்லுக்கட்டிட்டு இருக்கேன்…”

“மாமா…”

“அவர் சரியா இருந்தா எனக்கு ஏண்டா…” அந்த மனுசன் சரியில்லாமப் போனதுதான் எல்லாத்துக்கும் காரணம்…”

“அப்ப அவுகல”

“அங்கே விட்டுட்டு வந்துட்டேன். இங்க வந்து நாலு வருசத்துக்கு மேலாச்சு. இருக்காப்பிலையா செத்தாப் பிலையான்னு.. எந்த சேதியுமில்ல… என்ன செய்ய? மனுஷன் இல்லாட்டி… புருஷன் இல்லாச் சோறு பொங்கவா மாட்டேண்ணுது…”

“என்ன நாளைக்கு கல்யாணம் காச்சின்னா, அப்பனுக்க…”

“அதுதான் இல்லைன்னு போச்சு… ஒரு மழுக்கச் சத்தியமா இல்லையிணு சொல்லிற வேண்டியதுதான், உன்னைப்போல பக்கத்தில இருக்கிற பாடி பரதேசிய மாமா அண்ணன்னு சொல்ல வேண்டியதுதான்…”

“அக்கா அங்க நம்ம சொந்தக்காரணுக யாருமில்லையா.”

“நமக்கு எங்கடா நாதி அத்த நாய்க்கு, சொந்தமாம் சொந்தம்… ஒரு துப்பும் துவரையும் இல்ல…”

பஸ் தாராபுரம் பேருந்து நிலையத்தை நெருங்கவும் லேசா வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது… மதுரையில் அமத்துன ரேடியோவ… இப்பப் போட்டுவிட்டார். அட என்னத்த போடுறான் மனுஷன் எனக் கண்டக்டர் மனத்துள் அலுத்துகிட்டாலும், வெளிக்காட்டிக்காம இருந்துட்டார்…

பேச்சிலே கவனமாக இருந்த பாஸ்கரன் “எவ்வளவு நாள் கழிச்சு இப்ப… பாத்து பேசறது என்ன லேசா… அக்கா…”

தாராபுரம் இறங்கு… இறங்கு…

கோயமுத்தூர் ஏறு ஏறு…

“சரி நான் வரேன்க்கா…”

“அக்கா எந்த ஊரு.”

“அது எதுக்கடா உனக்கு நான் உன்னைப் பாக்கல நீ என்னையப் பாக்கல…”

“சரிக்கா காப்பித் தண்ணி…”

“போடா…”

“அக்கா, என் போன் நம்பரை வச்சுக்கக்கா எப்பயாச்சம் தேவப்படும்போது கூப்பிடுக்கா…”

“போடா வாடான்னு தம்பியக் கூப்பிட்டது போல, இல்ல உன்வீட்டு வேலைக்காரனா நினச்சு, உனக்கு எப்போதாவது தம்பி வேணும் தோணுச்சின்னா அப்பக் கூப்பிடு… அதுவரைக்கும் நீ யாரோ, நான் யாரோ… உறவுகளே இல்லைனு நினைக்காதக்கா… யாராவது தாய்மாமனுக் கேட்டா… யாராவது கேட்டா இருக்காக…” எனச்சொல்ல வேண்டியது தான்.

“யாரு கேப்பாக… நம்மல… நம்ம சொல்லுறதுதான்… நம்மல நாமே மாத்திப்புதுசா வாழ்ந்துகிட்டு இருக்கும்போது, தெய்வம் துணைநிக்கும்…”

‘வெள்ளரிப்பிஞ்சு, கடலைப் பருப்பு, அவிச்ச கடலை…’ “ஏப்ப… புதுசா, இப்ப அவிச்சதா.. காலையில அவிச்தசா…”

“இப்ப புதுசு தான் சார்…”

“ஏ… சார் பழைசப்பத்திப் பேசுகிறீக…”

சந்திரா பஸ்போன திசையில் இருந்து எதிர்திசைநோக்கி நீண்ட பெருமூச்சுவிட்டு, போக வேண்டி பஸ்ஸைத் தேடிப் போனாள்…”

“பழையன கழிதலும் புதியன புகுவதும் புதுமைதானே…” எனத் தனக்குள் பேசிக்கொண்டவளின்… நடையில் புதுத் தெம்பு தெரிந்தது. உழைத்து வாழப்பழகிவிட்டாள் புது வாழ்க்கையின் வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்…

suruligandhidurai@gmail.com