புத்தாண்டே வருக….!

புத்தாண்டே வருக….!

புத்தாண்டே வருக….! 

– ஜுமானா ஜுனைட், இலங்கை –
 
அண்டமெங்குமே கொண்டாட்டம்
இன்று
பூமி புதிதாய் சுற்றத் தொடங்குதே…
அழகான சிறகு முளைத்து
உலகு பறக்குதே
கலைப் பண்டமாய்…
 
எங்கும் மழை
இனிதாய்ப் பொழிய
மேகக் கூட்டங்கள்
பரவிட வேண்டும்…
ஆறுகள் நிரம்பியெங்கும்
அளவாய்ப் பாய
பூமித் தாய் சிரிக்கும்
குதூகலமாக..
 
உள்ளங்கள் இனி
மகிழட்டும்…
இதயங்கள் இனிதாகத்
துடிக்கட்டும்…
 
தென்றல் வீசிடும்
அலைகள் எழும்பிடும்
இயற்கையெல்லாம் நன்றாய்க்
கவி சொல்லிடுமே…
 
பூமி புதிதாய்
சுழலத் தொடங்குதே
எம் கவலை மெதுவாய்
விலகி அடங்குதே…
 
அழகிய பூவாய்
அண்டத்திலே பூப்பாயோ..
இவ்வுலகே ஒரு
கலைப் பண்டமாகட்டும்…
துண்டுதுண்டாகிய
உள்ளங்களெல்லாம்
ஒன்றாய் சேரட்டும்..
 
நிலவு வந்து சிரிக்கட்டும்
நீரலைகள் பாடட்டும்
நினைப்பதெல்லாம் நலமாக
இனி எப்பொழுதும் ஆகட்டும்…
 
அழுத கண்ணீர் காயமுதல்
இடிவந்து வீழ்ந்ததெல்லாம்
கடல் நீரில் கரைந்து போகும்
சிறு பனித்துண்டு ஆகட்டுமே… 
 
காண்பதெல்லாம் சுகமாக
ஆயுள் வரை தொடர வேண்டும்…
கனிவாக வாழ்த்துப்பா
நீ இசைக்கின்றாய்,
கேட்கின்றதே…!
 
உண்மையென்ற அச்சு கொண்டு
உலகு இனி சுழல வேண்டும்
நியாயங்கள் பெருகியெங்கும்
நீதி நிலைத்திட வேண்டும்…
 
உண்மை பேசிடும்
உதட்டைப் பெறுங்கள் –
நன்மை செய்திடும்
“கரங்கள்” ஆகுங்கள் –
இதயம் சிறந்திட
சிந்தை செய்யுங்கள் –
சாதிபேதங்கள் இனியும் வேண்டாம்
நீதி கொண்டே எதையும்
சாதியுங்கள் –
சாந்தமாகவே சுற்றும் பூமி
இனி நாளைய சரித்திரங்கள்
சொல்லும் மீதி…!
 
jjunaid3026@yahoo.com


வாழ்க ! வாழ்க ! புத்தாண்டில் வாழ்கவே !

– சக்தி சக்திதாசன் –

புத்தாண்டே வருக….!

இனிய தைத்திங்கள் முதல் நாள்
இசைபாடி  வருகுதிந்த புதுவருடம்
இருளினுள்ளே மறையுது ஒரு வருடம்
இன்னல் பல தந்தாலும், இன்பம் பல தந்தாலும்
இன்றோடு போனது அவ்வருடம்
இதயத்தினுள் புது நம்பிக்கை பொங்க
இகத்தினிலே அடுத்தொரு அகவை
இனிதாய் ஆரம்பம் துணிந்திடுவீர்
இயன்றால் முடியாதது எதுவுமில்லை
இல்லாதோர் இருப்போர் ஆகவும்
இருப்போர்கள் ஈவோர் ஆகவும்
இவ்வருடம் பல புதிய வழிகாளை
இயந்தருளும் என்னும் நம்பிக்கையுடன்
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை
இனியவநல்லுள்ளங்கள் உங்களுக்கு
இனிதாய்ப் பொழி்கின்றேன் வாழிய ! வாழியவே !

புதுவருட வாழ்த்துக்கள் இனி’ய 2012

– சக்தி சக்திதாசன் –

புத்தாண்டே வருக….!

உள்ளம் முழுவதும் பன்னீர்ப்பூக்கள்
உவகை பொங்கிட துள்ளும் எண்ணங்கள்
உம்மை இன்று வாழ்த்த நெஞ்சம்
உயிர்த்துடிப்புடன் எழுச்சி கொள்ளுது

உலகின் உயிர்கள் பாபம் களைய‌
உன்னத தேமைந்தன் பிறந்தான்
முள்ளில் கிறீடம் தலையில் ஏந்தி
முழுதாய் உடலைச் சிலுவையில் ஏற்றி

மானிட சமூகம் தளைத்து ஓங்கிட‌
மாபெரும் தேவன் தனையே ஈந்தாண்
மானிடநேயம் ஓங்கிட அருளிய‌
மாதா மேரியின் அன்பு மைந்தன்

தேவன் இயேசுவின் பிறந்தநாளில்
தேடுவோம் நாமும் மகிழ்வு வாழ்க்கையை
அடுத்தவர் வாழ்வை உயர்த்திட எண்ணும்
தேவமைந்தனின் நேசத்தைப் போற்றுவோம்

புதிதாய் மலரும் ஆண்டு தனிலே
புதுமைகள் பலவும் புலர்ந்திடும் வகையில்
புரிந்திடல் உணர்வை பெரிதாய் போற்றி
புரிந்திட வேண்டும் செயல்கள் பலவே

அன்பும் சமாதனமும் இரு கண்கள் என‌
அகிலம் முழுவதும் அன்பின் வழியில்
ஆனந்தம் கொண்டே வாழ்ந்திட வேண்டி
ஆயிரம் வாழ்த்துக்கள் பொழிகின்றேன்

ssakthi@btinternet.com


புத்தாண்டு கொண்டாட்டம்!

– முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) –

புத்தாண்டே வருக….!

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com

மலரட்டும் புத்தாண்டு!

– முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) –

புத்தாண்டே வருக….!

சாதியுள்ள சமுதாயம் சரியட்டும்!
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!

munaivendri.naa.sureshkumar@gmail.com