புஷ்பராஜனின் குருதிநாளங்களில் குருநகர்மண் தோய்ந்துள்ளது. லண்டனில் ‘வலை உணங்கு குருமணல்’ நூல் வெளியீட்டுவிழா

புஷ்பராஜனின் குருதிநாளங்களில் குருநகர்மண் தோய்ந்துள்ளது. லண்டனில் ‘வலை உணங்கு குருமணல்’ நூல் வெளியீட்டுவிழா - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -‘ஈழத்து தமிழ் சமூகங்களைப் பற்றிய சமூகவியல், இனவரைவியல் ஆய்வுகள் போதுமான அளவில் உருவாகவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். தென்னிலங்கைச் சமூகங்கள் குறித்து ஒப்பீட்டு ரீதியில் முக்கியம் வாய்ந்த சமூகவியல் ஆய்வுகள் காணப்படும் அதேவேளையில், தமிழ் சமூகங்கள் பற்றி குறிப்பிடத்தக்க எந்த ஆய்வும் இதுவரை வெளியாகவில்லை. கல்வித்தரம் கூடிய வடமாகாணத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் காட்டப்;பட்ட ஆர்வம் சமூகவியல் ரீதியில் காட்டப்படாமை முக்கிய குறைபாடு எனலாம். இந்தப் பின்னணியில் மு.புஷ்பராஜன் தனது ‘வலை உணங்கு குருமணல்’ என்ற நூலில் குருநகர் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் குறித்த மிகச் சிறந்த இனவரைவியல் பதிவினை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ் சமூகங்களில் இனவரைவியல் ஆய்வில் இது சிறந்த முன்னுதாரணமாக அமையத்தக்கது’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ‘வூட்கிறீன் ஏசியன் சென்ரர் அரங்கில்’ நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

குருதி நாளங்களின் குருநகர்
‘லண்டனில் இருந்து தன் ஆழ்ந்த அனுபவங்களின் பின்னணியில் குருநகர் மக்களின் வாழ்க்கை முறை, தொழில் முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மதவழிபாடுகள், முரண்பாடுகளைக் கையாளுதல், தொழில் பாதுகாப்புகள், உலகம் பற்றிய கண்ணோட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மிகச் செறிவான விவரணங்களைத் தந்திருக்கிறார். ஒரு ஆய்வாளர் பல ஆண்டுகள் கூர்மையாக அவதானித்து குறிப்புகள் எடுத்து எழுத முயன்றாலும்கூட இவ்வளவு ஆழமான தகவல்கள் கொண்ட ஒரு நூலினை ஆக்கியிருக்க முடியாது. லண்டனில் இருந்து தனது அனுபவங்களை மீள்நோக்கி, தனக்கு வாய்த்த எளிமையான தமிழ் நடையில் புஷ்பராஜன் இந்நூலை ஆக்கியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். புஷ்பராஜனின் இதயத்திலும் குருதிநாளங்களிலும் குருநகர் மண் தோய்ந்து சுவறியுள்ளது என்பதை இந்தநூல் பிரகடனம் செய்கிறது’ என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

‘ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, அரசியல் கட்டுரையாளராக, திரைப்பட சுவைஞராக  பன்முக ஆற்றல் கொண்ட புஷ்பராஜன் தனது வளமான இலக்கியப் பின்னணியில் நின்று இந்த அபூர்வமான நூலைப் படைத்திருக்கிறார். மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற இலக்கிய ஆளுமைகளால் வசீகரிக்கப்பட்ட புஷ்பராஜன் ‘அலை’ என்ற இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், திருமறைக் கலாமன்றத்தின் சஞ்சிகையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்ட புஷ்பராஜனின் நான்காவது நூலாக ‘வலை உணங்கு குருமணல்’ என்ற இந்த இனவரைவியல் நூல் வெளியாகியிருப்பது அவரது விசாலமான உலகப் பார்வையை குறித்து நிற்கிறது. ஏற்கனவே புஷ்பராஜன் தொகுத்து வெளியிட்டுள்ள ‘அம்பா’ என்ற மீனவ நாட்டார் பாடல்கள் மிக மிக அபூர்வமான மீனவக் களத்தில் எழுந்த நாட்டாரியலின் பதிவாகும். தமிழ் நாட்டின் மீனவ சமூகங்களின் ஆய்வுகளில்கூட எடுத்தாளப்படும் மிகமுக்கிய பதிவாக புஷ்பராஜனின் நூல் விளங்குகிறது’ என்று மு.நித்தியானந்தன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டார். 

புஷ்பராஜனின் குருதிநாளங்களில் குருநகர்மண் தோய்ந்துள்ளது. லண்டனில் ‘வலை உணங்கு குருமணல்’ நூல் வெளியீட்டுவிழா

‘இலங்கையின் வடக்குääகிழக்கு மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற கத்தோலிக்க மீனவ சமூகங்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையினர் குருநகரில் வாழ்கின்றார்கள். குருநகர் கத்தோலிக்க மீனவ சமூகத்தில் பிறந்த திரு.மு.புஷ்பராஜன் தனது சொந்தக் கிராமத்தின் பூர்வீக வரலாறுää சமயம்ää தொழில்கள்,  அம்பாப் பாடல்கள் ஆகியவற்றைத் தொகுத்து இந்நூலை வழங்கியுள்ளார். அசிங்கங்களுக்குக் கச்சை கட்டி, அபத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பல சமூகவியல் ஆய்வுகளிலிருந்து மாறுபட்டுää நிர்வாணமான பதிவினைத் தந்திருக்கின்றார் என்றால் அது மிகையானது அல்ல’ என்று திரு. ஏ.செபஸ்ரியன் தனது உரையில் தெரிவித்தார்.

முதிர்ச்சியின் முத்திரை
‘இந்நூலின் முதலாம் பாகத்தில் குருநகர் வாழ் மக்களின் பூர்வீக வரலாற்றினையும் கத்தோலிக்க சமய மாற்றத்தினையும் ஆய்வு செய்த ஆசிரியர், தனது சொந்தக் கருத்து எதனையும் கூறிக்கொள்ளாது,  பல ஆய்வாளர்களின் கருத்துக்களையும் அதற்கான ஆதாரங்களையும் உறுதி செய்துகொண்ட முறைமை வித்தியாசமானது. பல சமூகக் கோட்பாட்டாளர்கள் தமது சமூகத்தை உயர்த்திக்கொள்வதற்காக,  மாற்றுச் சமூகங்களுடன் ஒப்பிட்டு, தமது ஆய்வினைக் கூறும் நடைமுறையிலிருந்து வித்தியாசப்பட்டு, இதுதான் எனது சமூகத்தின் அடையாளம் என்ற எல்லைக்குள் தான் கூறவந்த விடயத்தினை ஆதாரங்களுடன் கூறிக்கொண்ட நேர்த்தி புஷ்பராஜனின் இலக்கிய முதிர்ச்சியின் முத்திரை’ என்றும் ஏ. செபஸ்ரியன் மேலும் தெரிவித்தார்.
   
‘ஆசிரியரால் இப்புத்தகத்தில் கையாளப்பட்ட ஆவணங்கள், உசாத்துணை நூல்கள் குருநகரை மீண்டும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றிää இலங்கையின் கரையோர கத்தோலிக்க சமூகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கும் பயன்படத்தக்கது. மூன்றாம் பாகத்தில் தொழில், சமயம், சடங்குகள் சம்பிரதாயங்கள் அம்பாப் பாடல்கள்ää ஊரின் அடையாளமாகிய புனித யாகப்பர் ஆலயம் எனத் தனது வாழ்வியல் அனுபவத்தினை, தான் நுகர்ந்த மொழியில் இலகுவானதும் வித்தியாசமானதுமான கவிதையோட்ட மொழிநடையில் தெளிவுபடுத்தியுள்ளார். இது புஷ்பராஜனது வழமையான பாணியிலிருந்து மாறுபட்ட ஒரு அடையாளம் எனக் கொள்ளலாம். இது குருநகர் பற்றிய முற்று முழுதானதொரு ஆய்வு எனக் கூறிக்கொள்ளாவிட்டாலும், எதிர் காலத்தில் ஒரு முழுமையான ஆய்வுக்கான ஒரு திடமான அத்திவாரம. தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்த ஆசிரியரின் இலக்கியங்கள், தனது சமூகத்தினைச் சென்றடையவில்லை என்ற நீண்ட காலக் கேள்விக்கும் முற்றுப்புள்ளி தேடிக் கொடுத்ததுடன், வித்துவச் செருக்கின்மூலம் தனது சொந்தச் சமூகங்களைப் பற்றி சிந்தியாத எழுத்தாளர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது’ என்றும் ஏ.செபஸ்ரியன் கருத்துத்  தெரிவித்தார்

சுதேசிய அடையாளம்

‘சுதேசிய தேசிய அடையாளங்களை நிராகரித்துவிட்டுஇ தேசிய அடையாளம் குறித்து எந்தக் கருத்துருவாக்கத்தையும் ஆக்க முடியாது. சாதியம் என்பது ஒரு சுதேசிய தேசிய அடையாளம். எனவே, சாதியத்தைப் பற்றிப் பேசாமல் சாதியத்தின் கூறுகளை உள்ளடக்காமல் தேசிய அடையாளம் பற்றிப் பேசுவது சாத்தியமில்லை. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள், நிந்தனைகள் அழிக்கப்படவேண்டுமே தவிர, சாதிய அடையாளத்தைப் புறந்தள்ளிவிட்டு தேசிய அடையாளத்தை உருவாக்க முடியாது என்று’ தீபம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தயாரிப்பாளர் திரு சாம் பிரதீபன் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார்.
     
‘புஷ்பரரஜனின் ‘வலை உணங்கு குருமணல்’ என்ற நூல் குருநகர் என்ற இடத்தைப்பற்றி அல்ல அங்கு வாழ்கின்ற கரையார்  சமூகத்தின் சுதேசிய அடையாளங்களை விபரிக்கும், சுதேசிய தேடலில் ஈடுபடும் முயற்சியே. இந்த ஆய்வு குருகுலமக்கள், மகரக்கொடி போன்ற வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், குருநகர் மக்கள் வர்த்தகம், போர் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும்,  மீன்பிடித் தொழிலுக்கு இறுதியாக எப்படி வந்து சேர்ந்தார்கள் என்பதைத் தெளிவாக்கி உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
    
‘குருநகர் போன்ற கரையோரப் பகுதிகளில் குற்றவியல் தண்டனைகளிலிருந்து தப்புமுகமாகவும் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுமே கத்தோலிக்க மதமாற்றம் நிகழ்ந்ததென்பதை விவரிக்கும் புஷ்பரரஜன், உயிர் கொடுத்தும் கத்தோலிக்க விசுவாசத்தைக் காட்டி நிற்கும் கரையார் சமூகத்தின் இந்த நம்பிக்கையையும் விளக்கி உள்ளார். நாவலர் போன்றோர் ‘சோற்றுக் கிறிஸ்தவர்கள்’ என்று இழிவுபடுத்திப் பேசினாலும், இறை விசுவாசத்தில் பற்றுறுதி கொண்டவர்களாக குருநகர் மக்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது’ என்றும் திரு. சாம் பிரதீபன் குறிப்பிட்டார்.
    
‘பாரம்பரிய மிக்க தென்மோடிக் கத்தோலிக்கக் கூத்து மரபுகள் இந்நூலில் குறிக்கப்பெறாமை விசனத்துக்குரியதாகும். குருநகர் சமூகத்தின் இன வரைவியலில் அவர்கள் பேணிப் பாதுகாத்து இன்றும் நிகழ்த்தி வரும் கூத்துக்கள் குருநகரின் பெருமை மிக்க கலைமரபை சித்தரிப்பவையாகும். அதேபோன்றுஇ குருநகர் விளையாட்டுத் துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய பிரதேசமாகும். மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீhர்களை குருநகர் அளித்திருக்கிறது. அந்த விளையாட்டு மரபு பற்றியும் இந்த நூல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
    
‘குருநகரில் வீழ்ந்த முதல் செல்அடி மரணத்தை நேரில் கண்டவன் என்ற முறையிலும், புனித யாகப்பர் ஆலயத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆசிரியை வெண்ணிலா மரணித்த கணங்களில், அவரைத் தாங்கியவன் என்ற வகையிலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள யுத்தகால அழிவுகள் பற்றிய அத்தியாயம், அந்த துயரத்தை மீண்டும் மனக்கண்ணின் முன்கொண்டு நிறுத்துகிறது’ என்றும் சாம் பிரதீபன் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

உன்னத இசை மரபு
‘ஈழத்து மண்ணுக்கே உரிய இசைமரபுகளைக் கொண்ட மீனவ நாட்டுப்பாடல்களின் மிகச்சிறந்த பதிவை இந்த நூல் கொண்டிருக்கிறது. மகாகவியின் ‘புதியதொரு வீடு’ என்ற நாடகத்தில் இடம்பெறும் ‘சிறுநண்டு மணல்மீது படமொன்று கீறும்’ என்ற பாடல் மீனவ களத்தில் எழுந்த இசையில் உருவானதாகும். ஈழத்தின் கரையோர சமூகங்களின் மத்தியில் காணப்படும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து நோக்கினால் மிக உன்னதமான இசை மரபை நாம் தேடிக்கொண்டவர்களாவோம்’ என்று கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் பாலசுகுமார் தெரிவித்தார்.
    
‘ஈழத்து கலைமரபின் முக்கிய ஊற்றான கூத்து மரபின் செழுமையை மீனவ சமூகங்களின் மத்தியில் பரவலாக காணமுடியும். கரையோர சமூகத்தின் இந்த கூத்து மரபுகள் பற்றியும் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும். பேராசிரியர் சு. வித்தியானந்தன் மேற்கொண்ட மன்னார் நாட்டாரியல் ஆய்வுகள் நமக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமையக் கூடியவையாகும். நாம் மேலும் முயன்று இன்னும் அச்சேறாத நாட்டாரியல் கூறுகளை பதிவில் கொணர்வது மிக முக்கிய தேவையாகும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எழுதடா எழுது
‘எனது ‘அம்பா’ என்ற முன்னைய தொகுதி பற்றியும் அப்பாடல்களில்,  குறிப்பாக நாட்டார் பாடல்களில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்ட காரணத்தையும் நானிங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். என் பாடசாலை காலங்களில் எனக்கு தமிழ் இலக்கியம் கற்பித்த நீர்வேலியைச் சேர்ந்த எம்.எஸ்.அந்தோனிப்பிள்ளை ஆசிரியரை நான் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். அவர் பாடத்திட்டத்திற்கு அப்பாலும் சிறந்த கவிதைகள் பற்றியும் நாட்டார் பாடல்கள் பற்றியும் அறிமுகப்படுத்தினார். வால்மீகியின் இராமனுக்கும் கம்பனது இராமனுக்கும் குணங்களில் வித்தியாசம் இருந்ததுபோல், கம்பனின் இராவணனுக்கும் அவர் தெரிந்தெடுத்த பாடல்கள்மூலம் அறிமுகப்படுத்திய இராவணனுக்கும் வித்தியாசம் இருந்தது. ‘வஞ்சக விபீசணனின் அண்ணன் என்று  வையகத்தார் சொல்லுமொரு மாபழிக்கு அஞ்சும் நெஞ்சகன்’என்றும், வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி விரும்பாத பெரும்தகை’ என்று பாரதிதாசன் பாடல்மூலம் வேறொரு இராவணனைக் காட்டினார். அவர் அந்த வகுப்பறையில் சொல்லித்தந்த நாட்டார் பாடல்கள் இன்றும் என் நினைவுகளில் உண்டு. நாட்டார் பாடல்கள் மீதான விருப்பு இன்றுவரை என்னுள் உயிரோடு இருக்கிறது. இந்த நாட்டார் பாடல்களின் விருப்பே நான் கடற்றொழிலுக்கு சென்ற காலங்களில் அவர்கள் பாடிய ‘அம்பா’ப்பாடல்கள்மீதான விருப்பை ஏற்படுத்தியது. அந்தப் பாடல்கள் என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளை ‘எழுதடா எழுது கடலோடு பிறந்து காற்றோடு மறையும் இக் கவித்துவங்களை எழுதடா எழுது’ என்று குறிப்பிட்டேன்’ என்று தனது ஏற்புரையின்போது  நூலாசிரியர் மு. புஷ்பராஜன் தெரிவித்தார்.
  
‘அது வெளிவந்து பலரது கவனத்தைப் பெற்றபொழுதும் அதன் போதாத் தன்மை என்னால் உணரப்பட்டபோதும் அப்போது செய்ய முடிந்ததெல்லாம் அதுவே. புலம் பெயர்ந்த காலங்களில் என் நண்பர் மு.நித்தியானந்தனுடன் ஏற்படும் உரையாடல்களின்போது அம்பாப் பாடல்களின் மறுபதிப்பை வலியுறுத்தியும் அதன் விரிவாக்கங்கள் பற்றி ஆலோசனைகளையும் சலிக்காது வழங்கியபடியிருந்தார். அதன் விளைவுதான் இந்த ‘வலை உணங்கு குருமணல்’ என்ற நூலாகும். குருநகரில் ஏனைய பல தொழில்கள் இருந்த போதிலும் இந்நூல் கரைவலைத் தொழிலை மையமாகக் கொண்டது. அதேவேளை ஏனைய  கடற்தொழில் பிரிவகைகளைக் கொண்டவர்களுக்குமான  பொதுவான வாழ்வு முறையைக் கொண்டதாகும்’ என்றும் தனது ஏற்புரையின் போது மு. புஷ்பராஜன் தெரிவித்தார்.
  
‘எந்த மக்கள் சமூகமும் வேரிழந்தவர்களாக வாழ முடியாது. இன்று பல சமூக குழுமங்கள் காலனித்துவத்தால் தொலைந்துபோன தமது வேரினைத் தேடுகிறார்கள். குறிப்பாக ஆபிரிக்க ஆசிய மக்கள் இவர்களுள் முதன்மையானவர்கள். அந்த வகையின் ஒரு கிளையாகத்தான் முதல் பாகம்; இங்கு பதியப்பட்டுள்ளது. இது ஒரு சமூகக் குழுமத்திற்கான தொடர்பின் அறிதல் முயற்சியே. இன்றைய நவீனகாலநிலையில் அறிதலுக்கப்பால் எந்தப் பெறுமதியும் இல்லை என்றே கருதுகிறேன்’ என்றும் கருத்தினைத் தெரிவித்தார்.
  
‘இந்நூலைப் படித்தவர்கள் குறிப்பாக மு.நித்தியானந்தன் மற்றும் முன்னுரை வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் போன்றவர்கள் இந்த நூல் ‘இனவரைவியல்’ தன்மை கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்கு இனவரைவியல் சார்ந்து எந்த அறிவும் இல்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எந்த வாழ்வு முறைக்குள்ளிருந்து நான் வளர்ந்தேனோ அந்த வாழ்வு முறையை விருப்புடன் பதிவில் வைத்துள்ளேன். இவை இனவரையறைக்கு அண்மித்ததாகவோ அல்லது அதற்கு உதவக்கூடியதாகவோ இருந்தால் அதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் இங்கு பேசியவர்கள் இந்நூல்சார்ந்து என்னைப் பாராட்டுகிறார்கள். இந்த நூலில் பதியப்பட்டுள்ளவைகள் எவையும் எனது கண்டுபிடிப்புக்கள் அல்ல. எனது மக்களின் வாழ்வும் அந்த வாழ்வின் சீர்மைக்காக அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மரபுகளுமே இவை. புறச் சூழலால் அழிந்துபோய்க்கொண்டிருக்கின்ற அவர்களது தடங்களை பதிந்து நூலாக்கியுள்ளேன் அவ்வளவுதான். நான் பதிந்துள்ள அனைத்து வாழ்வுமுறையின் சொந்தக்காரர்கள் அவர்களே’ என்றும் மு.புஷ்பராஜன் தனது ஏற்புரையில் மேலும் தெரிவித்திருந்தார்.
     
நிறைந்த எழுத்தாளர்களும்இ இலக்கிய ஆர்வலர்களும் பெருமளவில் கலந்து கொண்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் குருநகர் முன்நாள் உதைபந்தாட்ட வீரர் யேசுதாசன் இந்நூலின் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார். திருமதி எரின் சில்வியா லெனின் நன்றியுரை நிகழ்த்தினார். லண்டனில் அண்மைக்காலங்களில் நடந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகளில் மிகக் காத்திரமான விமர்சனங்களுடன் இனிதாக நிறைவுபெற்ற நிகழ்வு இதுவாகும்.

14.6.2012
navajothybaylon@hotmail.co.uk