பூநகரான் (பொன்னம்பலம் குகதாசன்) நினைவாக: நேற்றிருந்தார் இன்றில்லை.

குரு அரவிந்தன் ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் மறைவு இதைத்தான் இன்று எங்களுக்குச் சொல்லி நிற்கின்றது. நண்பர் பொன்னம்பலம் குகதாசன் பழகுவதற்கு இனிமையானவர். பூநகரான் என்ற பெயரில் ரி.வி.ஐ யின் செய்திக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பல தடவை அவரது பங்களிப்பைப் பார்த்திருக்கின்றேன். சி.எம். ஆர் வானொலியிலும் இவர் குரலைக் கேட்டிருக்கின்றேன். உதயன் பத்திரிகையில் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் அவரது ‘வாலிவதை’ என்ற நூல் சமீபத்தில் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியிடப்பட்டது. கலாநிதி  எஸ். சிவநாயகமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பச்சையப்பன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் அவர்களும் விசேட அதிதியாக வந்திருந்து உரையாற்றினார். கனடா தமிழ் எழுதத்hளர் இணையத்தின் சார்பில் உபதலைவர் என்ற வகையில் நானும் உரையாற்றியிருந்தேன். அவருடன் உரையாட அப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவருடனான கடைசி உரையாடலாகவும் இருந்துவிட்டது.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

kuruaravinthan@hotmail.com