பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்கு ஒரு இளைய தலைமுறைப் பார்வை

பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்கு ஒரு இளைய தலைமுறைப் பார்வைஅன்புள்ள நவம் அங்கிள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கில் நான் வந்து படப்பிடிப்புச் செய்தமைக்காக நீங்கள் அனுப்பிய நன்றிக் கடிதத்திற்குச் சும்மா “you are welcome ” என்று மட்டும் பதில் அனுப்ப மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வேண்டும் போல இருந்தது. அதனால்தான் சற்று பிந்திவரும் பதில் இது. முதலில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எம்முள் வாழ்ந்த ஒரு பெரியவரின் ஞாபகார்த்த நிகழ்சியைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு. அத்தோடு நீங்கள் எனக்குப் பிடித்தமான காரியத்தைத்தானே உதவியாகக் கேட்டீர்கள். செய்யாமல் விட்டிருப்பேனா? விழாவின் தொடக்கம் ஒரு புது மாதிரியான தொடக்கம். தேசியகீதம் மற்றும் தமிழ் வணக்கம் (நாட்டியத்துடன்) என்பன தன்பாட்டிலேயே நடந்தன. இவை நடைபெறும் போது எல்லோரும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இவை பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என நம்பியதற்கு நன்றி. இல்லாவிடின் வழமைபோல யாரோ ஒருவர் வந்து, “இப்போது இது நடைபெறும் எல்லோரும் எழுந்து…….” என்று மணிக் குரலில் அறிவிப்பு விட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பொன்னான நேரத்தையும் கொஞ்சம் சேமித்தீர்கள். குறிப்பிட்ட நேரத்தைவிட சற்று தாமதமாக தொடங்கியிருந்தும், சிலர் பிந்தியே வந்தனர்..பிந்தி வந்தவர்களில் சில பெரியவர்களும், இப்படியான நிகழ்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் என நாம் நினைக்கின்றவர்களும் அடங்கியிருந்த மாதிரி ஒரு உணர்வு!

அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் அளந்து பேசிய தலைமையுரையும், மாலினி பரராஜசிங்கம் அவர்களது பாரதி பாடல்களும், அவர் தமது இரு மாணவியருடன் இணைந்து நிகழ்த்திய தமிழ் வணக்கப் பாடலுக்கான நடனமும் கச்சிதமாக இருந்தன. சுப்பர் லீட்ஸ் குமரனை வரவழைத்து பின்னணி இசையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்தியதும் புதிதாகவே இருந்தது.  

 மாலினி பரராஜசிங்கம் மாலினி பரராஜசிங்கம் அவர்களது பாரதி பாடல்களும், அவர் தமது இரு மாணவியருடன் இணைந்து நிகழ்த்திய தமிழ் வணக்கப் பாடலுக்கான நடனமும் கச்சிதமாக இருந்தன

இவ்வாறு, சற்று வித்தியாசமான தொடக்கம்தான். நல்ல மாற்றங்கள் தேவைதானே. மற்றது, தொடர்ந்து பேச்சுக்கள் என்று இல்லாமல், பேச்சு, பின் பேராசிரியரின் துண்டு துண்டுக் காட்சிகள் என்று மாறிமாறி. பேராசிரியரது நினைவு நிகழ்ச்சியில் அவரது ஒளி – ஒலிக் காட்சிகளையும் பார்க்கக் கிடைத்தமை ஒருவித மனநெகிழ்வை ஏற்படுத்தியது. இப்படி மாறி மாறி வந்ததால் எமக்கும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. நல்ல சிந்தனைகள், நல்ல முன்னெடுப்புக்கள் எப்போதுமே வரவேற்கப்பட வேண்டியவையே. பாராட்டுக்கள், இதனை ஒழுங்கு செய்த உங்களுக்கும் நண்பர் மூர்த்திக்கும்!

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தமிழ் மொழிக்காற்றிய சேவைகள் பற்றிப் பேசிய பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் பல புதிய தகவல்களை எம் போன்ற இளைஞர்களுக்குச் சொன்னார். நன்றே சொன்னார் எமக்கு புரியும் படியாக. குறிப்பாக, தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியே பேசிப்பேசிக் காலம் கடத்தாது, அதன் தொடர்ச்சி பற்றிச் சிந்திப்பதன் அவசியம் குறித்து. தொன்மை பேசிக் காலம் தள்ளாது தொடர்ச்சி பற்றிப் பேசுவது முக்கியம். இது மொழிக்கு மட்டும் அல்ல, எமது ஏனைய எல்லாவற்றுக்குமே பொருந்தும். ம்ம்ம்ம்… எம்மவர்கள் தொன்மை பேசுவதில்தானே வல்லவர்கள்!. நான் மொழித் தொன்மையை மட்டும் இங்கு சொல்லவில்லை. தமிழ் மொழி வாழவேண்டும் என்பதற்காகப் பேராசிரியர் கா. சிவத்தம்பி எடுத்த முயற்சிகளை மிக அழகாக எமக்கு எடுத்துக் கூறினார் பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அவர்கள்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தமிழ் மொழிக்காற்றிய சேவைகள் பற்றிப் பேசிய பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் பல புதிய தகவல்களை எம் போன்ற இளைஞர்களுக்குச் சொன்னார்.அதிபர் பொ. கனகசபாபதி

உரைமொழி பற்றி சொல்லும்போது, பேராசிரியர் ஒரு சோசலிசவாதியும் கூட என்பது என் போன்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனைத் தெளிவுறவே எடுத்துக்காட்டிய உங்கள் உரைமொழிவு, எமக்கு ஒரு ஆழமான விரிவுரையாகவே தென்பட்டது. துண்டு துண்டான ஒளி விளக்கக் காட்சிகளுடன் ஒரு விரிவுரை மண்டபத்தில் பாடம் படித்தமாதிரி இருந்தது. ஒரே குரலில் தொடராமல், மாறி மாறிக் குரல்கள் வந்ததில் ஒரு கவர்ச்சி. மாற்றங்களும் புதுமைகளும் எப்பவும் எல்லோருக்கும் பிடிக்கும்தானே என்ற உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. எப்படித்தான் தமிழை இப்படி அழகாக மூவரும் (ஸ்ரீரஞ்சனி, தர்ஷினி, நவம்) உச்சரிக்கிறார்களோ என எண்ணி அங்கலாய்த்தேன்!

இனி, யாராவது கரும்பைப் துப்பரவு செய்து, அதனை பிழிந்து தந்தால் குடிக்காமல் போவோமா என்ன? எமக்கு இரு கரும்புக் கட்டுக்களையல்லவா பிழிந்து தந்தார் நண்பர் மூர்த்தி! இருவேறு துறைகளைச் சார்ந்த இரு மேதைகளைப் பற்றி நம்மூர்ப் பேரறிஞர் கருத்து வெளியிட்ட ஆவணப் படங்களைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கனடா மூர்த்தி (ஆவணப்பட இயக்குநர்)

நாம் சரி என்று நினைத்ததை, இன்னொருவர் தனது பார்வையில் மிக இலகுவாகப் பிழை என்று காட்ட முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக ’பேராசியரின் பார்வையில் சிவாஜி’ என்ற ஆவணப் படம் அமைந்திருந்தது. ஒரு காலத்தில் சிவாஜியின் விசிறியாக இருந்து, பின் சிவாஜியின் நடிப்பானது ’மிகைநடிப்பு’ என்று நாம் அதனை அண்மைக் காலங்களாக ஒதுக்கி வைத்தோம். ஆனால் பேராசிரியரின் விளங்கத்தை பார்த்த பின்தான் ’அட பிழை செய்துவிட்டோமே’ என்று விளங்கியது. அவர் உறுதியாக அடித்தே சொன்னார் “அது அப்படித்தான் இருக்கவேண்டும். அது மிகை நடிப்பு என்றால், தமிழ் சினிமாக்களில் பாடல் காட்சிகளே இருக்கக்கூடாது” என்று. பேராசிரியரின் ஏனைய விளக்கங்களுடன், எல்லா சந்தேகங்களும் தெளிவாயின, சிவாஜியின் மிகைநடிப்பின் மீது இருந்த சந்தேகங்களும் கோபங்களும் உட்பட.

சிவாஜி குடும்பத்தாருக்கும் நண்பர் மூர்த்திக்கும் இடையே ஏதாவது ஒப்பந்தங்கள் இருக்கின்றனவோ? ஏனென்றால் சிவாஜியின் மிகை நடிப்புமீது எம்போன்ற இளம் தலைமுறையினர்க்கு இருந்த குழப்பத்தைப் பேராசிரியர் மூலம் அறவே நீக்கி, சிவாஜியின் படங்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சி இது என்பதில் சந்தேகமே இல்லை. நிகழ்ச்சி முடிந்த உடனேயே எம்மில் சிலர் பேசிக்கொண்டோம், சிவாஜியின் நடிப்பை மிகை நடிப்பு என்ற குழப்பம் இல்லா மனநிலையுடன். அத்தோடு சிவாஜியின் சில படங்களை நாம் மீண்டும் பார்ப்பதாகவும் முடிவு செய்துகொண்டோம் . குறிப்பாக ’கௌரவம்’. நடிகர் கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ” ரஜனிகாந்தின் அசைவுகள், உத்தமபுத்திரனில் ’யாரடி நீ மோகினி’ என்ற பாடலில் வரும் சிவாஜின் அசைவுகள் மாதிரி” என்று. இந் நிகழ்சியின்போது அப்பாடலைச் சில செக்கன்களுக்குப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து. ஆமாம், கமல் சொன்னது உண்மை போலத்தான் தெரிகிறது.

 தர்ஷினி, நவம், ஸ்ரீரஞ்சனி

ஒன்று மட்டும் இப்போது விளங்குகின்றது. எல்லாத் தென்னிந்திய நடிப்புகளும், நடிகர்களும் சிவாஜியின் விம்பங்கள்தான் என்று. சிவாஜி மீது இருந்த எமது தவறான எண்ணத்தை நீக்கிய பேராசிரியருக்கும், தனது பொன்னான நேரத்தை செலவழித்து இதனைத் தயாரித்து, அதனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை எமக்குக் கொடுத்த மூர்த்திக்கும் நன்றி. நடிப்பென்றால் சிவாஜிதான் என்று முழங்கும் வகையில் அந்த ஆவணப் படம் விழங்கியது. சிவாஜியிடம் நடிப்புத் திறமை இருந்த மாதிரி இயக்குனர் திறமை இருந்ததில்லை. அதுவும் அவரிடம் இருந்திருந்தால் நிலைமையே வேறாகியிருந்திருக்கும்!

அடுத்து, இனி இப்படியான உங்கள் நிகழ்ச்சிகளிற்கு வரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன். ஜெயகாந்தன் போன்ற சிந்தனையாளர்களை எமக்குக் காட்டி எம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைத்து விடுவீர்களோ என்ற பயத்தினால். சிந்திக்காமல் சும்மா ஜடமாக இருப்பதில் உள்ள சுகம் வேறொன்றும் இல்லைத்தானே! நான் ஜெயகாந்தனின் புத்தகத்தையோ, அவருடைய பேச்சுக்களையோ பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டதுடன் சரி. கேள்விப்பட்ட பின்பும் அவருடைய ஆக்கங்களை தேடவில்லை. இப்போது இந்த ஆவணப் படத்தின் பின்தான் அவருடைய ஆக்கங்களை பார்க்கவேண்டும் போல உள்ளது. இந்த ஆவணப் படக் காட்சிகள் மூலமும் பேராசிரியரின் விளக்கமும் சேர்ந்து, அந்த உலகப் பொது மனிதனின் பரிமாணத்தை எம்போன்றோருக்கு இலகுவாகக் காட்டியுள்ளன. ஜெயகாந்தனின் பேச்சுக்கள் சில இடங்களில் எனக்குத் தெளிவாக விளங்காத மாதிரி இருந்தது. அது பழைய பதிவுகள் என்ற படியால் அப்படி இருக்கலாம். ஆனால் அதற்குள் ஏதோ அவர் எமக்குத் தேவையான விசயங்களைத்தான் சொன்னமாதிரி இருந்தது.

க.நவம்ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

சின்ன நெருடல், கல்யாண வீடுகளில் மாப்பிள்ளைத் தோழன், மாப்பிளையை விட கொஞ்சம் கவர்சி குறைந்தவராகவோ அல்லது கவர்ச்சி குறைத்துக் காட்டப்பட்டவராகவோதான் இருப்பார். மன்னிக்கவும் தோழன்மார்களே! ஏனென்றால், மாப்பிள்ளை மட்டும்தான் மிளிரவேண்டும் என்பதற்காக. அன்றைய நாள் அவனது நாள். இதனை கல்யாண வீட்டுக்காரர்கள் கருத்தில் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் கல்யாண வீட்டுக்கு வருகை தருவோருக்கும், புகைப்படம் ( இப்ப, புகைப்படம் என்று சொல்வது சரியா தெரியவில்லை? நல்ல புதிய தமிழ் சொல் வேணும் பேராசிரியரின் வேண்டுகோளிற்கு இணங்க ) எடுக்கும் எனக்கும் மாப்பிள்ளையும், தோழனும் கவர்சிகரமாக இருப்பதைத்தான் விரும்புகின்றோம் என்பது வேறு விடயம். இங்கு இரு தோழன்களில் குறிப்பாக, சிவாஜி என்ற தோழனைக் கண்டதும், மற்றவர்களெல்லாம் மாப்பிளையை விட்டு, தோழனுக்கு தோழனாகி விட்டமாதிரி ஆயிற்று. இதனைக் கல்யாண வீடுக்காரர் கவனிக்கவில்லையோ தெரியவில்லை. அல்லது கல்யாணவீட்டுக்காரர் பெரும், விரிந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கலாம். மன்னிக்கவும், நாம் சாதாரண – தீவிர இரசிகர்கள் மாத்திரமே!

புதுமையும், புதிய சிந்தனையும், நாம் அறியாத புதிய அறிவுக் கருவூலங்களையும் கொண்ட, இந்தமாதிரியான பிழிந்த கரும்புச் சாறுகளை எமக்கு மென்மேலும் தந்துதவுங்கள்.

அன்புடன்,
திரவியம் சர்வேசன்

அனுப்பியவர்: க.நவம் knavam27@hotmail.com