போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம்! – சிவராசா கருணாகரன் –

 - சிவராசா கருணாகரன் - – எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற்  பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால்  `பதிவுகள் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.  நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் –


மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.

தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது?  அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் – ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு மாவீரர் நாளும் வந்திருக்கிறது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகள், ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகியவற்றிலிருந்து உயிர் நீத்தவர்களே நினைவு கொள்ளப்படுகின்றனர். ஏனையவர்களைப் பற்றிய சிந்தனையோ கரிசனையோ கொள்ளப்படவில்லை. அதைப்பற்றிய அக்கறைகளும் இந்த நாளை நினைவு கூருவோரிடமில்லை. தாம் விரும்புகின்றவர்களை மட்டுமே தியாகிகளாகவும் வீரர்களாகவும் கருதுகின்ற, போற்றிப் பாடுகின்ற ஒரு பக்க நிலைப்பாடும் நியாயப்பாடுமே இங்கே நீடிக்கிறது. இதில் கூட ஈரோஸ் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலியும் கூட நடக்கிறது என்பதை இன்றுள்ள இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. அதை அவர்கள் அறிய முற்படவும் இல்லை. “மற்றவர்களைப் பற்றி அக்கறைப் படத்தேவையில்லை என்பது மற்றமைகளை நிராகரிப்பதன் வெளிப்பாடேயாகும்”. இதனால்தான் அவர்களுடைய தியாகமும் வீரமும் மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. இது நியாயமான செயல் அல்ல. விடுதலையைப் பற்றிப் பேசுகின்ற, ஜனநாயகத்தைக் கோருகின்ற சமூகம் இவ்வாறு பாரபட்சமாகவும் தனிமுதன்மைப்பாட்டோடும் இருக்க முடியாது. இயங்குவதும் நல்லதல்ல.

1970, 80 களின் முற்பகுதியை நினைவு கொள்ளக்கூடியவர்களுக்கும் அந்தக் காலகட்ட அரசியல் யதார்த்தத்தை அறிய முற்படுவோருக்கும் நன்றாகவே தெரியும், அனைத்து இயக்கங்களிலும் இணைந்தவர்கள் “மக்களின் விடுதலை” என்ற உயரிய எண்ணத்தை – குறிக்கோளையே கொண்டிருந்தனர் என்பதை. அந்த உயர்ந்த எண்ணத்தோடும் உயரிய குறிக்கோளோடும்தான் அவர்கள் உயிர் நீத்தனர். ஆகவே போராட்டத்தின்போது உயிர் நீத்த அனைவரும் மாவீர்களே. இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மன நிலை மாவீரர் நாளை நினைவு கொள்வோரிடத்தில் வரவேணும். இந்தப் பிரச்சினையைப் பற்றி 1991 இல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கலை, இலக்கியப் படைப்பாளிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றின்போது பேசப்பட்டது. அ்ப்பொழுது, “விடுதலைப்போராட்டத்தில் பல இயக்கங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் உயிர்நீத்திருக்கின்றனர். அவர்களுடைய சாவுக்குரிய மரியாதையை எப்படி வழங்குவது? அவர்களுக்கான நினைவிடங்களை எங்கே அமைப்பது?எப்படி அமைப்பது?” என்ற கேள்விகள் படைப்பாளிகளினால் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரபாகரன், “எல்லா இயக்கப்போராளிகளின் தியாகங்களும் மதிப்புக்குரியவையே. ஆகவே அவர்களுக்கான இடத்தை வரலாற்றில் நிச்சயம் பதியவே வேணும். தற்போதைய (1991) சூழலில் அதற்கான உடனடிச் சாத்தியங்கள் குறைவாக இருப்பதால், அவர்களை இந்தத் துயிலுமில்லங்களில் நாம் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் சில பொது இடங்களில் அனைத்துப் போராளிகளுக்குமான நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் நினைவு கூரப்படுவார்கள்.யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகிலே இருக்கிற இடத்தை இவ்வாறு அனைத்துப் போராளிகளுக்குமான நினைவுச் சதுக்கமாக மாற்றலாம். அப்படியான திட்டம் எமக்குண்டு” என்றார். எனினும் இதுவும் இறுதி வரை நிறைவேறவில்லை. பொது நினைவு கூரலும் சாத்தியமாகவில்லை. எனவே, இந்த ஆண்டு அனுபவங்களையும் கவனத்திற் கொண்டு, மேலும் இந்த விடயத்தைத் தள்ளிப் போடாமல், அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு பொது வடிவத்தை எட்டுவது சிறப்பு. அது அவசியமும் கூட. விடுதலைக்காக உயிர் நீத்தவர்கள், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை இன்னும் நாம் தனித்தனியாக வேறு படுத்திப் பார்ப்பது பொருத்தமானதல்ல. அது மாண்புடைய செயலும் இல்லை. இதை இந்த நாளில் கவனம் கொள்வோமாக.