மகாபாரத மங்கா மாண்புடை மகளிர்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, ‘நல்லாபிள்ளை பாரதம்’, பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, மூதறிஞர் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, பல்கலை அறிஞர் ”சோ’ அவர்களின் ‘மஹாபாரதம் பேசுகிறது’, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் ‘மகாபாரதம்’, அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் ‘மகாபாரதம்’, சுவாமி சித்பவானந்தர் அவர்களின் ‘மகாபாரதம்’, பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் ‘மகாபாரதம் உரைநடையில்’ ஆகிய நூல்களும் எழுந்தன.  

சகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.

மகாபாரதத்தில் பிரதீபமன்னன், சந்தனு, பீஷ்மர், சித்திராங்கதன், விசித்திரவீரியன், துருபதன், திருதராட்டிரன், பாண்டு, விதுரர், துர்வாச மகருஷி, வியாசர், கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரியோதனன், துச்சாதனன், அபிமன்யு, துரோணர், அசுவத்தாமன், சகுனி, சல்லியன், சஞ்சயன் ஆகிய அரசர்களும், கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகிய அரச மகளிரும் அதிகம் பேசப்படும் பாத்திரங்களை வகித்துள்ளனர்.

இனி மகாபாரதத்தில் மகளிர் வகித்த பாத்திரங்களும;> அவற்றில் அவர்கள் நின்று ஆற்றிய நற்பணிகளும், அதனால் அரச குலம் எய்திய சிறப்பு நிலைகளையும் காண்போம்.

கங்காதேவி 

அன்றொரு நாள் சந்தனு மன்னன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற பொழுது கங்காதேவி என்ற பெண்ணைப் பார்த்துக் காதல் கொண்டு அவளை மணக்க விரும்பினான். அவளும் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டாள். ‘என்னைப் பற்றி ஒன்றும் கேட்கக் கூடாது, என் செயலில் தலையிடக் கூடாது’ என்பதுதான் அவளின் நிபந்தனைகள். அவள்மேல் மோகம் கொண்ட சந்தனு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். மன்னன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு அத்தினாபுரத்தை அடைந்தான். நல்லதொரு நாளில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

ஆண்டுகள் பல கடந்தன. கங்காதேவி கருவுற்றுக் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து உடனே அக் குழந்தையைக் கங்கையில் வீசியெறிந்து கொன்றுவிட்டாள். சந்தனு இதைக் கண்டு நிபந்தனைப்படி ஒன்றும் பேசாதிருந்து விட்டான். இவ்வாறு ஏழு குழந்தைகளையும் கொன்றாள்.

எட்டாவது குழந்தையையும் கங்கையில் எறிய முற்பட்ட பொழுது ‘இக் குழந்தையையாவது கொல்லாதே!’ என்று கதறி அழுதான் சந்தனு. ‘வேந்தே! இக் குழந்தையை நான் கொல்ல மாட்டேன். இனி நான் உம்முடன் வாழவும் மாட்டேன்.  நான் ஜன்கு மகரிஷியின் மகள். தேவர்களுக்கு உதவி புரியவே நான் இந்நாள் வரை உன்னுடன் வாழ்ந்தேன். நமக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளும் புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள். இவர்கள் வசிஷ்டரின் சாபத்தால் எங்களுக்கு வந்து பிறந்தனர். அவர்களுக்கும் சாபவிமோசனம் கிடைத்துவிட்டது. இக் குழந்தையை நான் என்னுடன் அழைத்துச் சென்று, அவன் பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைப்பேன். தாங்கள் என்னை நினைக்கும் போது உங்கள்முன் வந்து நிற்பேன்.’ என்று கூறிவிட்டு மறைந்து விட்டாள்.

சந்தனு மன்னன் தன் மனைவியையும், மகனையும் நினைந்து முப்பத்தாறு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்தான். அன்றொரு நாள் அம்பு செலுத்தும் வியப்புக்குரிய ஒரு வாலிபனைக் கண்டு திகைத்து நிற்கையில் அவ்வாலிபன் திடீரென மறைந்து விட்டான். உடனே தன் கங்காதேவியை அழைத்தான். கங்காதேவி ஒரு வாலிபனுடன் சந்தனு முன் தோன்றி ‘மன்னவ! இவன்தான் உன் எட்டாவது மகன். இவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இவன் தேவேந்திரனுக்கு இணையானவன். இவன் பெயர் தேவவிரதன். இவ்வீரனை அரண்மனைக்கு அழைத்துச் செல்லவும்’ என்று கூறி மறைந்து விட்டாள். சந்தனு மன்னன் தன் மகனை அழைத்துக்கொண்டு நகரத்துக்குத் திரும்பித் தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டித் தன் மகனுடன் நான்கு ஆண்டுகள் இன்புற்றுக் கழித்தான்.

சத்தியவதி

சந்தனு மன்னன் அன்று ஒரு நாள் யமுனைக் கடற்கரைக்குச் சென்ற பொழுது சத்தியவதி எனனும் பெயருடைய ஓர் அழகிய செம்படவப் பெண்ணைக் (சத்தியவதி செம்படவ அரசனால் வளர்க்கப்படுபவள்) கண்டு மயங்கி அப் பெண்ணின் தந்தையிடம் சென்று சத்தியவதியைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். அதற்குச் செம்படவ அரசன் ‘என் மகளுக்குப் பிறக்கும் மகனுக்கே பட்டாபிசேகம் செய்து நாட்டை ஆளவேண்டும். வேறொருவருக்கும் அரசுரிமை கிடையாது.’ என்று ஒரு நிபந்தனை விதித்தான். இதற்குச் சந்தனு உடன்படாது அரண்மனை நோக்கிச் சென்று விட்டான். இதன்பின் சந்தனு கவலையில் ஆழ்ந்து சிந்தித்த வண்ணமிருந்ததை அவதானித்த தேவவிரதன் தேரோட்டியிடம் விசாரித்து முழு விவரத்தையும் அறிந்து கொண்டான். உடனே தேவவிரதன் செம்படவ அரசன் வீடு சென்று ‘செம்படவ அரசே! நான் சற்றுமுன் அரசுரிமையைத் துறந்துவிட்டேன். இன்றுமுதல் நான் பிரமச்சரிய விரதத்தை மேற்கொள்கிறேன். என்னுயிர் உள்ளவரை புத்திர உற்பத்தி செய்யேன். இது சத்தியம். எனவே உம் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து கொடு!’ என்று கேட்கச் செம்படவ அரசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தான்.

தேவவிரதனின் சபதத்தைக் கேட்டு அனைவரும் வியப்புற்றனர். இது செயற்கரிய வீர சபதம் என்றும் புகழ்ந்தனர். தேவவிரதனைப்  ‘பீஷ்மர்’ (அஞ்சத்தக்க சபதத்தை மேற்கொண்டவர்)  என வாழ்த்தினர். அன்றிலிருந்து தேவவிரதன் பீஷ்மர் ஆனார். சந்தனு மன்னன் முறைப்படி சத்தியவதியைத் திருமணம் செய்து கொண்டான். சந்தனுவுக்கு முதலில் ‘சித்திராங்கதன்’ என்னும் மகன் பிறந்தான். சில ஆண்டுகளின்பின் ‘விசித்திரவீரியன்’  என்னும் இரண்டாவது மகன் பிறந்தான். விசித்திரவீரியன் சிறுவனாயிருக்கும்போதே சந்தனு இறந்து விட்டான். பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார். பெரு வீரனான சித்திராங்கதன் நாட்டைச் சிறப்புற ஆண்டு வந்தான். இவன் கந்தர்வநாட்டு அரசனுடன் போர் தொடுத்து மாண்டுவிட்டான். பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்து, அவனுக்கு உதவி நின்றார். ஆண்டுகள் பல கடந்தன.

விசித்திரவீரியன் வாலிபனானான். அவனுக்குத் திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விரும்பினார். அப்பொழுது காசி நாட்டு வேந்தன் தன் கன்னியர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் நடாத்துவதை அறிந்தார். சத்தியவதியின் அனுமதியுடன் காசியை அடைந்தார் பீஷ்மர். சுயம்வர மண்டபத்தில் கன்னியர் மூவரும், அரசர்களும் இருந்தனர்.  பீஷ்மர் ‘அரசர்களே! மணங்களில் எட்டு வகை உண்டு. அந்த எட்டு வகையில் பெண்ணைப் பலாத்காரமாகக் கவர்ந்து திருமணம் செய்வதை ‘இராக்கதம்’ என்றும், அதுவே சிறந்ததெனவும் கூறுவர். அதன்படி நான் இக்கன்னியர்களை அழைத்துச் செல்லவுள்ளேன். உங்களுக்கு ஆற்றல்  இருந்தால்  தடுத்து  நிறுத்துங்கள், பார்க்கலாம்.’  என்று கூறிவிட்டுக் கன்னியர் மூவரையும் தேரில் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்றார். வீற்றிருந்த அரசர்கள் பீஷ்மரைத் தடுத்துப் போர் புரிந்து தோல்வியடைந்து தத்தம் நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பீஷ்மர் கன்னியர் மூவருடனும் அத்தினாபுரம் சென்றடைந்தார். சில நாட்கள் சென்றபின் அம்பை பீஷ்மரை விட்டு வெளியேறிவிட்டாள். பீஷ்மர் விசித்திரவீரியனுக்கு அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரையும் திருமணம் செய்து வைத்தார். விசித்திரவீரியன் தன் மனைவியர் இருவருடனும் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தபின் காசநோய் பிடித்து மாண்டு விட்டான். விசித்திரவீரியன் மக்கட் பேறின்றி இறந்து விட்டானே என்று பீஷ்மரும், சத்தியவதியும் வருத்தப்பட்டனர்.

சத்தியவதி பீஷ்மரை நோக்கி ‘மகனே! நான் கன்னியாயிருந்த பொழுது பராசர முனிவர் என்னுடன் உறவு கொண்டு ஓர் ஆண் குழந்தையைத் தந்தார். நான் மீண்டும் கன்னியானேன். அவர் தன் மகனுடன் பிரிந்து சென்றுவிட்டார். அந்த மகனின் பெயர் வியாசன். வேதங்கள் யாவும் தெரிந்த சக்தி வாய்ந்த மகரிஷியாவான். நான் நினைத்தால் என்முன் வந்து நிற்பான். நான் சொல்லுவதையும் கேட்பான். எனவே நாங்கள் கட்டளையிட்டால் அவன் தன் சகோதரன் மனைவியர்க்குப் புத்திர பாக்கியம் கொடுப்பான். உன் எண்ணம் யாது?’ எனக் கேட்டாள். அதற்கு பீஷ்மர் மிக்க மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். சத்தியவதி மகனை நினைத்ததும் வியாசர் தோன்றினார். சத்தியவதி முழு விவரத்தையும் வியாசருக்குச் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அவர்கள் சிறுவராக இருந்தபடியால் தந்தை நிலையிலிருந்து பீஷ்மர் அவர்களைக் கவனித்து வந்தார். சத்தியவதி தன் இறுதிக் காலத்தைத் தவத்தில் ஈடுபடக் காட்டுக்குச் சென்றுவிட்டாள்.

அம்பை

பீஷ்மர் காசி நாட்டிலிருந்து கவர்ந்து கொண்டுவந்த அரசிகள் மூவரில் மூத்தவள் அம்பை ஆவாள். அவள் பீஷ்மரிடம் ‘நான் சௌபல நாட்டு மன்னன் சால்வன் மேல் காதல் கொண்டுள்ளேன். அவனையே திருமணம் செய்யவுள்ளேன்.’ என்றுரைத்தாள். பீஷ்மரும் நீ அவனை விரும்பினால் இப்பொழுதே அவனிடம் செல்லலாமென்றார். அம்பை சால்வனை நாடித் தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்டாள். அதற்குச் சால்வன் ‘அம்பையே நாம் காதலித்தது உண.மைதான். மன்னர் பலர் கூடியிருந்த சபையிலிருந்து பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார். அவரையே நீ திருமணம் செய்துகொள்.’ என்று கூறி அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டான். அம்பை கலங்கிய மனத்துடன் அத்தினாபுரத்துக்கே வந்துவிட்டாள். பீஷ்மர் பிரமசரிய விரதம் கடைப்பிடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அம்பை சால்வனிடமும் பீஷ்மரிடமும் மாறிமாறிச் சென்று முறையிட்டு ஆறு ஆண்டுகளைக் கழித்தாள். விரக்தியுடன் இமயமலைச் சாரலையடைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாள்.

முருகக் கடவுள் அவள்முன் தோன்றி ‘இனி உன் துன்பங்கள் அகன்றுவிடும். இத் தாமரை மாலையை அணிபவனால் பீஷ்மர் இறந்து விடுவார்.’ என்று கூறிச் சென்றார். அம்பை பல அரசர்களை நாடி ‘இந்த மாலையை அணிந்து கொள்பவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவர். பீஷ்மரைக் கொல்பவரை நான் மணந்து கொள்வேன்.’ என்று கூறினாள். பீஷ்மரின் ஆற்றலை அறிந்த மன்னர்கள் எவராவது மாலையை வாங்க முன் வரவில்லை. அதன்பின் அவள் பாஞ்சால நாட்டு அரசனான துருபதன்; என்பவனிடம் சென்று தன் கதையைக் கூறித் தனக்கு அடைக்கலம் தருமாறு வேண்டி நின்றாள். பாஞ்சால மன்னனும் அவள் கோரிக்கைக்கு இணங்கவில்லை. அம்பை அந்த மாலையை மன்னனின் மாளிகையில் தொங்கவிட்டு ஓடிச் சென்று விட்டாள். துருபத மன்னன் அந்த மாலையை எவரும் எடுக்காது காத்து வந்தான்.

அம்பை முனிவர்கள் தவம் இயற்றும் ஒரு காட்டை அடைந்து தனக்கு நடந்த அவலங்களைத் தவத்தோருக்குக் கூறினாள். அவர்கள் பரசுராமரை அணுகும்படி கூறினர். அம்பை பரசுராமரிடம் சென்று தனக்கு நடந்தவற்றைக் கூறினாள். பரசுராமர் பீஷ்மரைச் சந்தித்துக் கதைத்த பொழுது இருவருக்குமிடையில் போர் மூண்டு வெற்றி தோல்வி இன்றி இறுதியில் பரசுராமர் போரிடாது விலகி விட்டார். பின்னர் அம்பை சிவனை நோக்கிக் கடும் தவம் செய்தாள். சிவன் அவள்முன் தோன்றி ‘பெண்ணே! இப்பிறவியில் உன் இலட்சியம் நடைபெறாது. அடுத்த பிறவியில் அது ஈடேறும். பீஷ்மரும் இறந்து விடுவார்.’ என்று கூறிச் சென்றார். மறுபிறவி எடுப்பதற்காக அம்பை தீயில் விழுந்து மாண்டு, துருபதன் மகளாகச் சிகண்டி என்ற பெயரில் மறுபிறவி எடுத்தாள்.

ஒரு நாள் அரண்மனையில் தொங்கிய மாலையை எடுத்துத் தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். இதை அறிந்த தந்தை துருபதன், பீஷ்மரின் பகைக்குப் பயந்து சிகண்டியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார். இதன்பின் சிகண்டி தவத்தில் ஈடுபட்டாள். ‘இஷிகர்’ என்னும் முனிவருக்குப் பணிவிடை செய்து வந்தாள். அம் முனிவர் சிகண்டியைப் பார்த்து ‘கங்கை ஆற்றின் உற்பத்தியிடத்தில் ‘விபஜனம்’  என்னும் விழா நடைபெறவுள்ளது. அங்கு ‘தும்புரு’ என்னும் கந்தருவ அரசனுக்குப் பணிவிடை செய். உனக்கு நன்மை வரும். உன் எண்ணமும் நிறைவேறும்.’ என்று கூறிச் சென்றார். சிகண்டியும் அவ்விழாவுக்குச் சென்றாள். அங்கு சில கந்தர்வர் இருந்தனர். அவர்களில் ஒருவன் சிகண்டியை நோக்கி ‘நாம் இருவரும் நமது உருவத்தை மாற்றிக் கொள்ளலாமா? அதாவது நீ எனக்கு உன் பெண் வடிவத்தைக் கொடு, நான் உனக்கு என் ஆண் வடிவத்தைத் தருகிறேன்.’ என்றான். சிகண்டியும் அதற்குச் சம்மதித்து ஆணாக மாறிவிட்டாள். ஆனால் தன் பெயiu மாற்றிக் கொள்ளவில்லை. கந்தர்வனும் பெண் வடிவம் தாங்கிச் சென்று விட்டான். ஆணாக மாறிய சிகண்டி பல போர்ப் பயிற்சிகள் பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். பின் பாஞ்சாலம் சென்று தன் தந்தையை அணுகி ‘தாங்கள் இனி பீஷ்மருக்குப் பயப்பட வேண்டாம்!.’  என்று கூறி நடந்தவற்றை எடுத்துரைக்கத் துருபதனும் சந்தோசப்பட்டு இருந்தான். பதினெட்டாம் நாள் நடந்த போரில் நள்ளிரவில் பாண்டவர் பாசறையில் தூங்கிக் கொண்டிருந்த சிகண்டியை அசுவத்தாமன் கொன்று விட்டான்.

காந்தாரி

காந்தார நாட்டு மன்னன் சுலபனுடைய மகளான காந்தாரியைத் திருதராட்டிரனுக்கு மணம் முடித்து வைத்தார் பீஷ்மர். திருதராட்டிரன் கண் பார்வையற்றவன். கணவன் பிறவிக் குருடன் என்ற காரணத்தால் தானும் தன் கண்களைத் துணியால் இறுகக் கட்டிக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தாள். குந்திக்கு குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டாள். அப்பொழுது காந்தாரி கருத்தரித்திருந்தாள். குந்திக்குக் குழந்தை பிறந்துள்ளதால் காந்தாரி பொறாமை கொண்டாள். ஆத்திரம் கொண்டு தன் அடிவயிற்றில் அடித்ததால் மாமிசப் பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால் அதிலிருந்து நாளாந்தம் ஒருவர் வீதம் நூறு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். இவ்வாறு காந்தாரி நூற்றொரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இவர்களில் மூத்தவன் துரியோதனன். இவன் பேராசையும், பிடிவாதமும் கொண்ட மூர்க்கன். இரண்டாவதாகப் பிறந்த துச்சாதனன் மிகக் கொடியவன். கடைசிச் தம்பி விகர்ணன் ஒருவன் மட்டுமே நீதி, நியாயங்களுடன் நின்றவன்.

நடந்தேறிய போரில் நூறு பிள்ளைகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் நாடாளும் மன்னனான தருமர் ஆறுதல் கூறி அவர்களைப் பதினைந்து ஆண்டுகள் குறையேதுமின்றிப் பாதுகாத்து வந்தான். எனினும் அவர்கள் தங்களின் கடைசிக் காலத்தைக் காடு ஏகித் தவம் புரிந்து வாழ விருப்புடையோம் என வேண்டி நின்றனர். தருமர் எவ்வளவு கூறியும் அதை அவர்கள் கேட்கவில்லை. திருதராட்டிரனையும், காந்தாரியையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும், சஞ்சயனும் கானகம் சென்றனர். அவர்கள் அங்கு மூன்றாண்டுகள் துறவு, தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். அன்றொருநாள் காட்டுத் தீ எங்கும் பரவிய பொழுது தியானத்தில் இருந்த திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகிய மூவரும் மாண்டனர். அன்றைய தினம் விதுரரும், சஞ்சயனும் தியானத்தில் ஈடுபட இமய மலையை நோக்கிச் சென்றதால் அவர்கள் இத் தீயிலிருந்து தப்பித்துள்ளனர்.

குந்தி – மாத்ரி

யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னனுக்குப் பிரிதா என்னும் மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர். இந்த வசுதேவன் கிருஷ்ணனுக்குத் தந்தையாவான். சூரசேனன் தன் மகள் பிரிதாவைக் குந்திபோஜனுக்கு வளர்ப்பு மகளாகக் கொடுத்தான். இதனால் பிரிதாவைக் குந்தி என்ற பெயரால் அழைத்தனர். ஒரு சமயம் துர்வாச மகரிஷிக்குப் பணிவிடை செய்யக் குந்திக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் பணிவிடையில் மகிழ்ச்சியுற்ற மகரிஷி குந்திக்கு ஒரு மந்திரத்தை அருளினார். அந்த மந்திரத்தை உச்சரித்தால் நினைத்த தெய்வம் தோன்றி நினைத்ததைக் கொடுக்கும். ஒருநாள் மந்திரத்தைச் சோதிக்க விரும்பிச் சூரியனை வேண்டி அம் மந்திரத்தை ஓதியதும் சூரியன் தோன்றி அவளுக்கு ஒரு மகப்பேறு கொடுத்தான். அதனால் அச்சமடைந்த குந்தி அக் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்துக் கங்கை  ஆற்றில் விட்டதும்  குந்தி மீண்டும்  கன்னியானாள்.  இந்த  இரகசியம் எவருக்கும் தெரியாது காப்பற்றிக் கொண்டாள் குந்தி. கங்கையில் விட்ட குழந்தை பின்னாளில் கர்ணன் எனப் புகழ் பெற்றான். நடந்தேறிய சுயம்வரத்தில் குந்தி அத்தினாபுர மன்னனான பாண்டுவுக்கு மாலை சூட்டி மனைவியானாள். சில நாட்களின்பின் மத்திர நாட்டு மன்னன் மகளும் சல்லியனின் சகோதரியுமான மாத்ரி என்பவள் பாண்டுவுக்கு இரண்டாம் மனைவியானாள். பாண்டு மன்னன் வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டவன். அன்றொருநாள் பரிவாரங்களுடனும் மனைவியருடனும்  காடு சென்று வேட்டையாடிய பொழுது புணர்ச்சியில் உள்ள இரு மான்கள் மீது அம்பு செலுத்தினான். ஆண் மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவை நோக்கி ‘நீ மனைவியருடன் கூடும்போது இறக்கக் கடவது!’ என்று சாபமிட்டுச் சென்றார். இதனால் பாண்டு மகப்பேறு இல்லாமற் போகுமே என்று மனங் கலங்கித் தவித்தான்.

பாண்டு மன்னனின் நிலையை அவதானித்த குந்தி தன் இளமைப் பராயத்தில் துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் கூறினாள். அந்த மந்திரத்தால் மகப்பேறு கிடைக்கும் என்றும் கூறினாள். இதனால் பாண்டு மிக்க சந்தோசமடைந்தான். ஒரு நல்ல தினத்தில் தருமதேவதையை நினைந்து அந்த மந்திரத்தை உச்சரித்தாள் குந்தி. அதனால் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு யுதிஷ்டிரன் (தருமர்) எனப் பெயர் சூட்டினர். அதன்பின் வாயுபகவானை நினைத்துப் பீமன் பிறந்தான். இதையடுத்துத் தேவேந்திரன் அருளால் அருச்சுனனைப் பெற்றெடுத்தாள் குந்தி. பின்னர் பாண்டுவின் விருப்புக்கேற்ப மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். மாத்ரியும் அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினித் தேவர்களை நினைந்து உச்சரிக்க நகுலன், சகாதேவன் ஆகிய இருவரும் பிறந்தனர். இவ்வண்ணம் பாண்டு மன்னனுக்கு ஐந்து புதல்வர்கள் வந்துதித்தனர். பாண்டு மன்னன் மனைவியர் மக்களுடன் சிலகாலம் காட்டிலேயே வாழ்ந்து வந்தான். அன்றொருநாள் பாண்டு காம இச்சையால் மாத்ரியைக் கட்டியணைத்தான். அக்கணமே ரிஷியின் சாபத்தால் அவன் உயிர் துறந்தான். மாத்ரி ‘மூதானந்த நிலையில;’ நின்று பாண்டுவுடன் உடன் உயிர் நீத்தாள். ஆனால் குந்தி ‘தாபத நிலையில்’ நின்று உடன்கட்டையேறாது கைம்மைபூண்டு தன் ஐந்து புதல்வர்களையும் காப்பாற்றி வளர்த்து வந்தாள். மேYம்  பஞ்ச கன்னியர்களில் குந்தியும் ஒருத்தியாவாள்.

பாரதப் போரில் கர்ணன் மாண்ட பொழுது, அவன் முன் கூறி வைத்த இரகசியக்  கூற்றின் படியும்,  குந்தி அவன் தலையைத் தன் மடிமேல் வைத்து ‘மகனே! மகனே!’ என்று அழுது புலம்பித் தன் மற்றைய ஐந்து புதல்வர்களையும் அழைத்து ‘இவன்தான் உங்கள் அண்ணன். இதுவரை இதை நான் உங்களுக்குச் சொல்லாததற்கு என்னை மன்னித்துக் கொள்ளவும்’ என்று கூறித் தான் இதுவரை கட்டிக் காத்த இரகசியத்தைப் பலரும் அறியப்படுத்தினாள். இதைf; கேட்ட பாண்டவர்கள் ‘அண்ணனைக் கொன்று விட்டோமே!’ எனக் கதறி அழுதனர். குந்தி தன் இறுதிக் காலத்தில் காடேகித் தவத்தில் ஈடுபட்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் செய்து கொண்டிருக்கையில் காட்டுத் தீ பரவியதில் மாண்டுவிட்டாள்.

திரௌபதி – சுபத்திரை

பாஞ்சால நாட்டு மன்னனான துருபதன் மகள்தான் திரௌபதி. இவளுக்குச் சுயம்வரம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தணர் வேடத்துடன் ஏகசக்கர நகரத்தில் தங்கியிருந்த பாண்டவர்களுக்கு இச் செய்தி கிட்டியது. குந்தியும் பாண்டவர்களும் பாஞ்சாலம் சென்று ஒரு குயவன் வீட்டில் தங்கியிருந்தனர். சுயம்வரத்தன்று பல நாட்டு மன்னர்கள் அரங்கின் உள்ளே தமக்குரிய இருக்கைகளில் அமர்ந்தனர். பாண்டவர்கள் அந்தணர்க்குரிய இடத்தில் சென்று பரவலாக அமர்ந்தனர். திரௌபதி மாலையுடன் வந்து நின்றாள். சுயம்வர நிபந்தனைகளை அவள் சகோதரனான திட்டத்துய்மன் ‘மன்னர்களே! இதோ வில;;லும் ஐந்து அம்புகளும் இருக்கின்றன. துவாரத்துடன் கூடிய சக்கரம் மேலே சுழன்று கொண்டிருக்கின்றது. அதற்கு மேலே மீன் வடிவில் ஓர் இலக்கு இருக்கிறது. அதன் நிழல் கீழே உள்ள தண்ணீரில் தெரிகிறது. இந்த நிழலை நோக்கிக் குறிபார்த்து மேலே உள்ள மீன் இலக்கைச் சுழலும் சக்கரத்தின் துவாரத்தின் ஊடாக அம்பைச் செலுத்தி வீழ்த்த வேண்டும். அவ்வண்ணம் வீழ்த்துபவருக்கு என் தங்கை மனைவியாவாள்’  என்று கூறினான். நிபந்தனைகளைக் கேட்ட சிலர் அதிர்ச்சியுற்றனர், சிலர் முயன்று பார்த்துத் தோற்றனர். சிசுபாலன், சல்லியன், ஜராசந்தன், கர்ணன், துரியோதனன் ஆகியோரும் முயன்று தோற்றுப் பின்வாங்கினர்.

மன்னர்கள் எவரும் வெற்றியடையாததைக் கண்ட திட்டத்துய்மன் போட்டி முறைகளைத் தளர்த்தி ‘சுயம்வரப் போட்டியில் மன்னர்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்’ என்று அறிவித்தான். உடனே அந்தணர் கூட்டத்திலிருந்து ஒரு வாலிபன் எழுந்து வந்து வில்லை எடுத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்து, மீன் வடிவ இலக்கைச் சுலபமாகக் கீழே வீழ்தினான். திரௌபதி வந்து அவனுக்கு மாலை சூட்டி அவனுக்கருகில் நாணத்துடன் நின்றாள். வெற்றிக் கனியான திரௌபதியுடன் பாண்டவர்கள் குயவன் வீட்டை அடைந்தனர். தாங்கள் கொண்டுவந்த கனி பற்றிய செய்தியை வீட்டின் உள்ளே இருந்த குந்திக்குக் கேட்குமாறு கூறினர். அங்கிருந்தவாறே குந்தி ‘நீங்கள் ஐவரும் அக்கனியைப் பகிர்ந்து உண்ணுங்கள்’ என்று கூறினாள். வெளியே வந்து திரௌபதி அருச்சுனன் அருகில் நிற்பதைக் கண்டு திகைத்துப் பெரிதும் வருந்தினாள். தாயின் சொல்லைக் கருத்திற் கொண்டும், வியாசர் கூற்றை ஏற்றும் துருபதன் திரௌபதியைப் பாண்டவர் ஐவருக்கும் திருமணம் செய்வித்து வைத்தான். பீஷ்மர், விதுரர் கருத்துக்கேற்ப பாண்டவர்க்குப் பாதி இராச்சியம் கொடுக்கச் சம்மதித்தான் திருதராட்டிரன். குந்தியும், மைந்தர்களும், திரௌபதியும் அத்தினாபுரம் வந்தனர். தருமருக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். காண்டவப் பிரஸ்தம் பாண்டவர்க்கு ஒதுக்கப்பட்டது. பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்திலிருந்து அவர்களுக்குரிய நாட்டை ஆண்டு வந்தனர்.

அருச்சுனன் ஓர் ஆண்டுத் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு பல தலங்களுக்குச் சென்று கடைசியாகத் துவாரகையில் உள்ள பிரபாசா என்னும் தலத்தையடைந்தான். அவனுக்குக் கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரையை அடைய வேண்டுமென்ற ஆசை பல நாட்களாக இருந்தது. இதற்குப் பலராமர் தடையாயிருந்தார். கிருஷ்ணர் உதவியுடன் அருச்சுனன் துறவுக் கோலம் பூண்டு பலராமரிடம் செல்ல, அவர் துறவியை வணங்கித் தன் அரண்மனைக்கு அருகிலுள்ள ஆசிரமத்தில் தங்கி இருக்குமாறும், சுபத்திரையை அத்துறவிக்குப் பணிவிடை புரியுமாறும் வேண்டிக்கொண்டார். சில நாட்களில் தான் பணிவிடை செய்யும் துறவி அருச்சுனனே என்று சுபத்திரை தெரிந்து கொண்டாள். பின்பு கிருஷ்ணன் முன்னின்று அருச்சுனன்-சுபத்திரை ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. இருவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்பினர்.

சிறுகாலம் செல்லச் சுபத்திரை அபிமன்யு என்னும் உலகப் புகழ் வாய்ந்த மாவீரனைப் பெற்றாள். நாளடைவில் திட்டமிட்டபடி அபிமன்யுவுக்கும் விராட வேந்தன் மகள் உத்தரைக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது.  திரௌபதி  தன் ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். திரௌபதி பஞ்ச கன்னியர்களில் ஒருத்திAkhவாள். பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு (36) ஆண்டுகள் சென்றபின், சுவர்க்க லோகம் செல்வதற்குப் பாண்டவர்களும், திரௌபதியும் மரவுரி தரித்து, உண்ணா விரதம்  மேற்கொண்டு, புண்ணிய நதியில் நீராடி, புனிதத் தலங்களைத் தரிசித்து, இமயமலையைக் கண்டு, மேருமலையைத் தரிசித்து, சுவர்க்கத்தை நோக்கிப் பயணம் தொடர்கையில் திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து போனாள்.

நிறைவாக

‘சத்தியம் மிக உயர்ந்த தருமம்’, ‘தருமம் வெற்றி பெறும்’ என்ற ஓர் உண்மைத் தத்துவத்தை மகாபாரதம் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது. தருமம் இரண்டு மனித உருவம் தாங்கிச் செயற்பட்டதையும் மகாபாரதத்தில் காண்கின்றோம். ஒருவர் தருமர், மற்றவர் விதுரர். அறவுரை கூறி நின்றார் விதுரர். அதேநேரம் தருமர் அறத்தைப் பேணிக் காக்க ஆயுதத்தை நாடினார். அதில் இருவரும் வென்றனர்.     

பார்வதி, பரமசிவன், இந்திரன், வாயுபகவான், தருமதேவதை, முருகக் கடவுள், சூரியன், அசுவினித்தேவர்கள், சப்தரிஷிகள், முனிவர்கள், மகரிஷிகள், நாரதர், வியாசர், துர்வாச மகரிஷி, பராசர முனிவர், கண்ணன், பலராமர், அகஸ்தியர், சத்தியபாமா, அனுமன் ஆகிய மேலோர் அனைவரும் மகாபாரதம் முழுவதும் உலாவித் திரிந்து தத்தமது ஞானத் தத்துவங்களை வீசிச் சென்றமையால் மகாபாரதம் ஈடிணையற்ற இதிகாசமாக மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மகாபாரதத்தில் நட்பு, ஞானம், சத்தியம், தவம், தானம், ஆசை, தியாகம், அறியாமை, விரோதம், சுவர்க்கம், நரகம், பிறப்பு, காதல், திருமணம்,  இறப்பு, போர், அழிவு, பணிவு, அறிவு, சுத்தம், தூய்மை, பரிசுத்தம், கல்வி, அறம், பொருள், இன்பம், முக்தி, காலத்தின் வலிமை, காலத்தின் நியதி, வினையின் பயன், பாவம், புண்ணியம்,  இன்சொல்லின் சிறப்பு, உபவாசத்தின் உயர்ச்சி, குதிரை யாகம், இராஜசூய யாகம்,  கர்மவினை, சாபம், துறவு வாழ்க்கை ஆகிய விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு அவற்றிற்குரிய விடைகளும் காணப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.

அறம், மறம் ஆகிய இரு நிலைகளில் நின்றவர்களையும் மகாபாரதம் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அறநிலையில் சந்தனு, பீஷ்மர், விதுரர், பாண்டு, தருமர், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், துரோணர், துருபதன், பலராமர், கிருஷ்ணன், கங்காதேவி, சத்தியவதி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் நின்று அறங்கூறிப் பேரும் புகழும் பெற்றனர். அதேநேரம் மறநிலையில் திருதராட்டிரன், காந்தாரி, துரியோதனன் ஆகிய தொண்ணூற்றி ஒன்பது சகோதரர்கள், சகுனி, அசுவத்தாமன், கர்ணன் ஆகியோர் மறங்காத்து மாண்டொழிந்தனர்.

குந்தியானவள் ஒரு முனிவரால் அருளிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்ததால் கர்ணன், தருமர், பீமன், அருச்சுனன் ஆகியோர் வந்துதித்தனர். அதன்பின் குந்தி, மாத்ரிக்கு அந்த மந்திரத்தை உபதேசித்தாள். மாத்ரி அந்த மந்திரத்தை இரட்டையர்களான அசுவினி தேவர்களை நினைந்து உச்சரிக்க  நகுலன், சகாதேவர் என்னும் இரட்டையர் பிறந்தனர். இன்னும் வியாசர் மூலமாக அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் முறையே திருதராட்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் பிறந்தனர். அக்காலத்தில் அரச மகளிர் மந்திரம் உச்சரித்தும், முனிவர்கள் மூலமும் மகப்பேறு பெற்ற அதிசயச் செய்திகளையும் காண்கின்றோம்.

மன்னர் பலதார மணம் புரிவது ஒரு வழக்காக இருந்துள்ளதை மகாபாரதத்தில் காணக் கூடியதாக உள்ளது. சந்தனு மன்னன் கங்காதேவி, சத்தியவதி ஆகிய இருவரையும், விசித்திரவீரிய அரசன் அம்பிகை, அம்பாலிகை ஆகியோரையும், வியாச மகரிஷி அம்பிகை, அம்பாலிகை, பணிப்பெண் ஆகிய மூவரையும், திருதராட்டிர வேந்தன் காந்தாரி, காந்தாரியின் பத்துச் rNfhதரிகள் ஆகிய பதினொருவரையும், பாண்டு மன்னன் குந்தி, மாத்ரி ஆகிய இருவரையும், அருச்சுன அரசன் திரௌபதி, சுபத்திரை ஆகிய இருவரையும், பீமன் ஆன அரசன் திரௌபதி, இடும்பி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டனர். அக்கால மன்னர்கள் அதிகமாகப் போர் தொடுத்து மடிவதாலும், தத்தமது அரசுக்குப் பல வாரிசுகளை வைத்திருக்க வேண்டியதாலும், அவர்கள் பலதார மணம் புரிந்தனர் போலும்.

மேற்காட்டிய அரசியர்களான கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி, மாத்ரி, திரௌபதி, சுபத்திரை, உத்தரை ஆகியோர் தத்தமக்குரிய மன்னர்களுடன் இணைந்து வாழ்ந்து, அரசுப் பரம்பரையை நிலைநாட்ட உதவி நின்று, அரச வாரிசுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆட்சிப் பொறுப்பிலும் உதவி நின்று, தம் மன்னர்களை அறநெறிக்குட்படுத்தி ஆகிய பெரும் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள அரசியர்கள் வாழ்த்திப் போற்றற்குரியோராவர்.

wijey@talktalk.net