மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உள்ளன!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -வட மாகாண சபைத் தேர்தலுக்கான  நாளை  தேர்தல் ஆணையாளர் நீண்ட காத்திருக்குப் பின்னர் அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் மாதம் 21 ஆம் நாள் நடைபெறவுள்ளது.  தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டாலும் தேர்தல் அறிவித்த படி நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  காவல்துறை, காணி அதிகாரங்களை நீக்கும் வரை அரசு வட மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாது என வலியுறுத்தியும்  13 ஆவது சட்ட திருத்தத்தையிட்டு இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவும் சிங்கள மக்களை அணிதிரட்டி, கொழும்பில் பெரும் போராட்டங்களை சிங்கள தேசியவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.  வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து சிங்கள தேசியக் கூட்டமைப்பு  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.  அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் தேர்தல் நடைபெறுவதற்கான நாளை ஒத்திப் போடலாம்.

கேள்வியும் அவரே பதிலும் அவரே என்பது போல் சட்டமா அதிபர் திணைக்களம் இப்போது சனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே சட்டமா அதிபர் சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. வழக்கு விசாரணைக்கு வரும்போது சட்டமா அதிபர் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற மனுதாரர்களின் மனுவை எதிர்த்து வாதாடாது விட்டால் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க வாய்பிருக்கிறது.

இந்தத் தேர்தலை மகிந்த இராசபக்சே விரும்பி வைக்கவில்லை.  நான்கு ஆண்டுகள் சாக்குப் போக்குச் சொல்லிப் பின்போடப்பட்டு வந்த வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் நிர்ப்பந்தத்தின் பெயரிலேயே தேர்தல் நடைபெறுகிறது.

“வட மாகாண சபைத் தேர்தல் வடக்கு மக்களின் சனநாயகத்தை நிலைநிறுத்த இடம்பெறவில்லை, மாறாக இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே வட மாகாணத் தேர்தல் இடம்பெறுகின்றது” என ஜேவிபி இன் பரப்புரைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்திருக்கிறார்.

மாகாண சபை முறைமை கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.  1988 ஆம் ஆண்டில் இருந்து அய்ந்து ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கில் பலமுறை தேர்தல் நடந்துள்ளது. விதி விலக்கு வடக்கும் கிழக்கும்தான்.  1988 இல் ஒன்றிணைக்கப்பட்ட வட – கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் 2008, 2012 இல் தேர்தல் நடைபெற்றது.

ஆனால் வட மாகாண சபைத் தேர்தல்தான் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் மத்தியில் பெரிய கொந்தளிப்பைத் தோற்றுவித்துள்ளது. வட மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) கைப்பற்றினால் அது பிரிவினையில் முடியும், பிரபாகரனால் போராடிப் பெறமுடியாத தமிழீழத்தை சம்பந்தன் இலேசாகப் பெற்றுவிடுவார் என்ற பரப்புரை தெற்கில் செய்யப்படுகிறது. “நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிப்போம்,   ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம்,  மாகாண சபை முறையை ஒழிப்போம்” என்பதே சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் போர்க்குரலாக இருக்கிறது.  குறைந்த பட்சம் வட மாகாண சபைத்  தேர்தலை வைக்கு முன்னர் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை  மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். 

தமிழர்கள் எந்த மாகாணத்தையும் தங்கள் சொந்த மாகாணமாகக் கொண்டாடக் கூடாது என்ற பேரினவாத சிந்தனையே  காணி, காவல்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குக் காரணமாகும். 

இந்த தீவிர சிங்கள – பவுத்த பேரினவாத சக்திகளுக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய இராசபக்சே தலைமை தாங்குகிறார்.  

“நாட்டில் சிங்களவர்கள் 78 விழுக்காடு இருக்கும் போது வடக்கில் பெரிய நிலப்பரப்பில் தமிழர்கள் எப்படி 98  விழுக்காடு இருக்க முடியும்? இது இயற்கையானதா? இது திணிக்கப்பட்டதாகும்.  13 ஆவது சட்ட திருத்தம் தேசியச் சிக்கலுக்கு தீர்வாக இருக்க முடியாது. அது முற்றாக ஒழிக்கப்பட  வேண்டும் என்பது எனது கருத்தாகும்” என கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலி நியூஸ் செய்தித்தாளுக்கு செவ்வி கொடுத்துள்ளார். (Daily Mirror July 4, 2013)

சனாதிபதி மகிந்த இராசபக்சேயும் தனது பங்கிற்கு இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் எனவே தற்போது மட்டும் காணி மற்றும் காவல்துறை  அதிகாரங்கள் குறித்து  அதிக அக்கறை கொள்ளத் தேவையில்லை” எனக்   குறிப்பிட்டுள்ளார்

வட மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் போட்டி போடுகின்றன. ததேகூ இன் வாக்குகளைப் பிரிப்பதற்கே சுயேட்சைக் குழுக்கள் களம் இறங்கியுள்ளன. புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் ஈபிடிபி பெண் சுயேட்சைக் குழுவொன்றை வடமாகாண சபைத் தேர்தலில் இறக்கியுள்ளது.

வட மாகாண சபைக்கு 36 + 2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் – 16, கிளிநொச்சி – 4,  முல்லைத்தீவு – 5, வவுனியா – 6, மன்னார் 5 ஆக மொத்தம் 36+2 உறுப்பினர்கள். தேர்தல் மாவட்டம் ஒவ்வொன்றிலும் 3 வேட்பாளர்கள் மேலதிகமாகப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். எனவே வேட்பாளர்களின் எண்ணிக்கை 51 ஆகும்.

ஒரே பார்வையில்
வட மாகாண சபைத் தேர்தல்

தேர்தல் மாவட்டம்

 இருக்கை

வேட்பாளர்

வாக்காளர்

யாழ்ப்பாணம்

16

19

426,703

கிளிநொச்சி

4

7

68,589

முல்லைத் தீவு

5

8

52,409

வவுனியா

6

9

96,707

மன்னார்

5

8

70,085

மொத்தம்

36+2

51

714,493

 

வட மாகாணத்தின் 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்டையில்  தமிழர் 993,741 (93.86) முஸ்லிம்கள் 32,364 (3.05) சிங்களவர் 32,331 (3.05) ஏனையோர் 326 (0.03) ஆக மொத்தம் 1,058,762 பேர் வாழ்கிறார்கள். 

அய்ந்து கட்சிகள் அடங்கிய ததேகூ பொது வேட்பாளர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நீங்கலாக மீதி 50 இடங்களையும் தமக்குள் பிரித்துகொண்டுள்ளன. தமிழரசுக் கட்சி 19, இபிஎல்ஆர்எவ் 9, ரெலோ 9, தமிழர் விடுதலைக் கூட்டணி  7, புளட் 6 என ஒதுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான வேட்பாளர்கள் பிரதேச அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இப்படி நியமிக்கப்படும் பொழுது சில பிரதேசங்கள் விடப்பட வாய்ப்புண்டு.

வலிகாமம் வடக்கில் 1990 இல் சிங்கள இராணுவத்தினால் துரத்தப்பட்ட 29,000 மக்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் நலன்புரி மையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான 6,382 ஏக்கர் (102,112 பரப்பு) காணியை சிங்கள இராணுவம் பறித்துவிட்டது. இந்தக் காணி  சுகீகரிப்பு மிகவும் அநீதியானது. அடாத்தானது. தமிழ்மக்களது தன்மானத்துக்கு விடுக்கப்படும் அறைகூவல் எனலாம்.  சுமார் 5,000 மக்கள் காணி சுகீகரிப்பை எதிர்த்து நீதிமன்றம் போயுள்ளார்கள். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பை மகிந்த இராசபக்சே அரசு மதித்து நடப்பதில்லை என்ற அவல  நிலை இருக்கிறது.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளாராக ததேகூ அறிவித்திருப்பது பல வட்டாரங்களில் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அலரிமாளிகையில் ஊடக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, சனாதிபதி மகிந்த இராசபக்சே அவரைப் பேய் என்று மறைமுகமாக வர்ணித்துள்ளார். “நாம் நினைப்பது போல பேய் ஒன்றும் கறுப்பானது அல்ல” என்று சொல்வதன் மூலம் பேய் விக்னேஸ்வரனைப்  போல சிவப்பு நிறத்திலும் இருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் “நிறைவேற்று அதிகாரமுள்ள என்னிடமே காணி, காவல்துறை அதிகாரங்கள் இருக்கும். அவற்றை என்னிடம் இருந்த எவராலும் பறித்து விட முடியாது. எந்தக் சூழ்நிலையிலும் காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது” எனச் சூளுரைத்தார்.

சனாதிபதி மகிந்த இராசபக்சே அமைச்சரவையில் இருக்கும் சம்பிக்க இரணவக்க “வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால், தமிழ் மக்களுக்கு சுடுகாடே உறுதியாகும். 13 ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலானது.

தமிழீழத்தை அமைத்துக் கொடுப்பதற்காக, இந்தியா கபட நோக்கத்துடன் 1987 ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் ஊடாக மாகாணசபை முறைமையை அறிமுகம் செய்ததுடன், அதில் பிரிவினைவாத அதிகாரங்களையும் உட்படுத்தியது. தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலின் ஊடாக தமிழீழக் கனவை நிறைவேற்றிக் கொள்ள இந்தியா முற்படுகின்றது. இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

ததேகூ இன் முதன்மை வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் வெற்றி பெற்றால் வடக்கு மக்களுக்கு பழையபடி கண்ணீர், குருதி மற்றும் சுடுகாடு என்பனவே உறுதிப்படுத்தப்படும். தெரிவு வடக்கு மக்கள் வசமே உள்ளது. பிரபாகரனை நம்பி அழிவைத் தேடிக் கொண்டது போல, மீண்டும் ததேகூ இன் இனவாத அரசியல் ஊடாக வடக்கு மக்கள் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடாது” எனத்  தமிழ் வாக்காளர்களை அச்சுறுத்தும்  தொனியில் பேசியிருக்கிறார். மீண்டும் இனக் கலவரம் வெடிக்கும் என மறைமுகமாகச் சொல்கிறார்.

நீதியரசர் விக்னேஸ்வரனது நியமனத்தை விமர்ச்சித்து தமிழர் தரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. அவர்  கொழும்புத் தமிழர், அவர் இன்னொரு இலட்சுமன் கதிர்காமர்,  அவரது பிள்ளைகள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள், அவருக்கு நல்லூர் கந்தசாமி கோயிலை மட்டும் தெரியும் வேறு எதுவும் தெரியாது என்ற குற்றச்சாட்டுக்கள் வீசப்படுகின்றன.

படித்தவர்களைப் பிடிக்காத ஒரு கிணற்றுத் தவளைக் கூட்டமே இப்படிக்  கீழ்த்தரமான  விமர்சனங்களை முன்வைக்கின்றன. வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவில் இயங்கும்  ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பும் கொழும்பில் வாழும் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடதமிழீழத் தமிழர்களின் மனங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இராயப்பு யோசேப்பு தக்க விடை அளித்துள்ளார்.

“தமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வடமாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு. இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், அறிவுப் பிழைப்பாளர்கள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையைக் காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.”

தமிழ்மக்கள் இன்று நேற்றல்ல 1948 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எதிராகவே தேர்தல்களில் வாக்களித்து வந்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் மகிந்த இராசபக்சே தலைமை தாங்கும் ஆளும் கட்சியையும் அதன் அடிவருடிகளையும் தோற்கடித்துப் பழிக்குப் பழிவாங்கக்  காத்திருக்கிறார்கள். மகிந்த இராசபக்சேயின் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தமிழ் வாக்காளர்களுக்கு ஒராயிரம் காரணங்கள் உண்டு.

1) வலிகாமம் வடக்கு – கிழக்கு  உட்பட தமிழர் தாயகத்தில் நடை பெறும் நில அபகரிப்பு.

2) தமிழர் தாயகத்தில் துரித கெதியில் நடைபெறும் நூற்றுக் கணக்கான சிங்களக் குடியேற்றங்கள்.

3) வடக்கில் நடைபெறும் சிங்கள இராணுவத்தின் அடக்கு முறை ஆட்சி.

4) வடக்கிலும் கிழக்கிலும் நிறுவப்படும்  பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள், இராணுவக் குடியிருப்புக்கள் போன்றவற்றால் ஏற்படும் கலாசார சீரழிவு.

5) 89,000 கைம்பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க மறுக்கும் அநீதி.

6) பூசா, வெலிக்கடை, அனுராதபுரம் போன்ற சிறைச்சாலைகளில் ஆண்டுக்கணக்காக விசாரணையின்றி  700 க்கும் அதிகமான அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை.

7)  நான்கு ஆண்டுகள் கழிந்தும் 93,000 இடம் பெயர்ந்த தமிழ்மக்கள் மீளக் குடியமர்த்தப்படாது தெருவில் விடப்பட்டுள்ள  அநீதி.

8) சிங்கள தேசிய கீதத்தை தமிழ் மாணவர்கள் தொண்டைக்குள்  திணிக்கும் அடாவடித்தனம்.

9)  உதயன் போன்ற ஊடகங்கள் மீதான இராணுவப் புலனாய்வுத் துறையின்  தாக்குதல்கள்.

இப்படிக் காரணங்களை  அடிக்கிக் கொண்டே போகலாம்.

இந்தத் தேர்தல் நீதியான, நியாயமான முறையில் நடைபெறப் போவதில்லை. இராணுவம் மக்களை மட்டும் அல்ல ததேகூ வேட்பாளர்களையே மிரட்டுகிறது. நேரடியாக கொச்சைத் தமிழில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு பரப்புரை செய்கிறது.

இருந்தும் இவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் ததேகூ வெற்றிவாகை சூட வேண்டும். அப்படி வெற்றிவாகை சூடினால் மட்டும் போதாது. தமிழ்மக்களை கொன்ற குவித்து இனப் படுகொலை செய்து தப்பியவர்களை நடுத்தெருவில் பிச்சை எடுக்க விட்டிருக்கும்  ஆளும் அய்கிய சுதந்திர மக்கள் முன்னணி,  காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இபிடிபி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுக் காசை  இழக்கும்படி செய்ய வேண்டும்.  அதற்கு வாக்குரிமை என்ற ஆயுதத்தை தமிழ் வாக்காளர்கள்  பயன்படுத்த வேண்டும். தேர்தல் முடிவு தமிழர்கள் கேட்பது உரிமை அபிவிருத்தி  அல்ல என்ற செய்தியை பன்னாட்டு சமூகத்துக்கு உறைப்பான முறையில் தெரிவிக்க வேண்டும்.

 athangav@sympatico.ca