மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதைத் தொகுதியின் மீதான பார்வை

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'- அஷ்ரஃப் சிஹாப்தீபுதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

 கவிதையின் சூட்சுமம் புரிபடாத நிலையில் எழுதப்பட்டுத் தொகுக்கப்படும் இந்த நூல்களால் கவிதையின் ஆரோக்கியமும் கெட்டுப்போயிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு சிறுகதைத் தொகுதியின் விற்பனையை விட கவிதைத் தொகுதிகள் விற்பனையில் பின்தங்கியிருக்கின்றன. அதாவது கவிதைத் தொகுதிகளைப் படிப்பது ஒரு வீண்வேலை என்ற நிலைக்கு வாசகர்கள் வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையைத் தோற்றுவித்தது கவிஞர்கள்தாம் அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள்தாம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளையும் எவ்வாறு நம்மால் படிக்க முடிவதில்லையோ அவ்வாறுதான் நூல்களும். இலக்கியம் சோறு போடாத ஒரு தேசத்தில் இந்த இடைவெளி இருப்பதைத் தப்பு என்று யாரும் குறை சொல்ல முடியாது. எனவே மட்டுவில் ஞான குமாரன் ஏற்கனவே 2000மாம் ஆண்டு வெளியிட்ட ‘முகம் அறியா வீரர்களுக்காக’ என்ற தொகுதியும் 2002ல் வெளியிட்ட ‘வசந்தம் வரும் வாசல்’ என்ற தொகுதியும் எனது வாசிப்புக்கு உட்படவில்லை.

‘சிறகு முளைத்த தீயாக’ என்ற தலைப்பில் 2010ல் வெளியாகியிருக்கும் அவரது மூன்றாவது தொகுதியைக் கையிலெடுத்த போது இது ஒரு சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் என்ற எண்ணத்தை நூலின் அட்டைப் படம் எனக்கு உணர்த்திற்று. நூலைத் திறந்து படிக்க ஆரம்பிக்கும் வரை அந்த உணர்வுதான் மேலோங்கியிருந்தது.

‘அம்மா’ என்கிற தனது முதலாவது கவிதையிலேயே அவர் என்னைக் கவர்ந்தார். காதலிக்காக தாஜ்மஹலைக் கட்டிய ஷாஜஹான் மீது அம்மாவுக்கு எதையும் கட்டி வைக்கவில்லையே என்று கோபப்படும் ஞானகுமாரன் கவிதையை முடிக்கும் போது நெக்குருக வைக்கிறார். ‘ஐந்து வயதில் என் பிஞ்சு விரலைப் பிடித்துக் கொண்டு சாமி கும்பிடப் போனாயே… ஒரு சாமி இன்னொரு சாமியைக் கும்பிடுமா அம்மா?’ என்ற கேள்வியில் தனது தாய்ப்பாசத்தின் ஆழம் எத்தகையது என்பதைப் புரிய வைத்துவிடுகிறார்.

இத்தொகுதியிலுள்ள ஞானகுமாரனின் அநேக கவிதைகள் அரசியலைப் பேசுகின்றன. எல்லோரும்தான் அரசியல் பேசுகிறார்கள். அரசியல் பேசும் ஒரு சாரார் இலக்கியப் படைப்பாளிகள் அதை எவ்வாறு செய்கிறார்கள் என்பதில் அண்மைக் காலமாக தமது கூர்மையான அவதானத்தைச் செலுத்தி வருகிறார்கள். தாம் நினைப்பது போலவே நினைக்க வேண்டும் என்றும் தாம் கொண்டிருக்கும் கருத்துக்களையே கொண்டிருக்க வேண்டும் என்றும் தாம் எவ்வாறு செயற்படுகிறோமோ அவ்வாறே செயற்பட வேண்டும் என்றும் சில குழுக்கள் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளைப் பலவந்தப்படுத்தும் ஒரு நிலைதான் அது. தனது சொந்தக் கையொப்பத்தை வைக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை ஸ்மோல் லெற்றறரிலும் அடுத்த எழுத்தை கெப்பிட்டல் லெட்டரிலும் வைப்பவர்கள் கூட இவ்வாறான ஒரு வன்முறையைத் தமிழ்ப் படைப்பாளிகள் மேல் செலுத்தி வருகிறார்கள்.
படையினர் விற்கும் குறைந்த விலை மரக்கறியை வாங்குபவன் சிங்களப் பெரும்பான்மைக்குச் சாமரம் வீசுபவன் என்றும் வாங்காதவன் தமிழ் உணர்வுள்ளவன் என்கிற அளவுகோல் கொண்டு நிறுக்கும் அளவுக்கு அரசியல் நிலைப்பாடு போய்க் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தோற்றத்தில் மட்டுமன்றி எண்ணங்கள், ஆசைகள், பழக்க வழக்கங்களில் வித்தியாசமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு வகையான அரசியல் உள்ளது. அவரவர் அவரவருக்குத் தேவையான முறையில் அவரவர் அரசியலை பேச்சிலும் எழுத்திலும் நடத்தைகளிலும் காட்டுகிறார்கள். சிலருக்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியலில் ஆர்வம் இருக்கும். சிலருக்கு கூட்டம் போட்டுக் கொம்பித் தீர்ப்பதில் நாட்டம் இருக்கும். சிலர் ஒத்துழையாமை மூலம் தமது அரசியலை வெளிப்படுத்துவார்கள். அது அவரவர் நோக்கங்களையும் எண்ணங்களையும் பொறுத்தது.

உலகத்தில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களிடையேயும் ஓர் கருத்துடன்பாடு உண்டு. இந்தக் கருத்துடன்பாட்டைத்தான் நான் முன்னர் சொன்னபடி அவரவருக்கு ஏற்ற விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆர்ப்பாட்ட அரசியல் நடத்துபவன் அமைதியாகக் கவிதை எழுதிக் கொண்டிருப்பவனைத் தூஷிப்பதும் கூட்டம் நடத்தும் அரசியல் செய்வோர் அடுத்த குழுவினரைக் கிண்டல் செய்வதும்தான் வெறுக்கத் தக்கது.

ஆர்ப்பாட்ட அரசியலும் கூட்ட அரசியலும் ஒரு சில அறிக்கைகளுடனும் ஒரு நாள் தொலைக் காட்சிச் செய்தியுடனும் சில வேளை பொலிஸ் அடிதடியுடனும் முடிந்து போய்விடுகின்றன. ஆனால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லலுக்குள்ளாகியிருக்கும் மக்கள் சமூகத்தின் வாழ்வியலை எழுதுகிறான் பாருங்கள் படைப்பாளி. அவனுடைய எழுத்துத்தான் நித்தியமானது. நாளைய வரலாறாக விரிவது. நாளைய சாட்சியாக இரத்தமும் சதையுமாகப் பேசவல்லது. அதைத்தான் படைப்பாளி செய்கிறான். அதுதான் அவனது பங்கு. அது மகத்தான பங்கு. உன்னதமான பங்கு.

ஞானகுமாரன் தனது பங்கைச் செவ்வனே நிறைவேற்றியிருப்பதை இந்தக் கவிதை நூல் சாட்சியாக நின்று பேசுகிறது. அவர் அதனைப் பேசும் அழகு சிலாகிக்கத் தக்கது. உப்புச் சப்பற்ற, உணர்வு பூர்வமற்ற வெற்று வார்த்தைகள் கொண்டு பேசாமல் ஒரு கலை நயத்துடன் அவர் அணுகிச் செல்கிறார்.

அன்பளிப்புச் செய்கிறேன்
என்று ஆக்கினை செய்கிறாய்

வாசலிலே எனைக் காக்க வைத்து
காகத்துக்கு விருந்து படைக்கிறாய்

என் பட்டினி தெரிந்தும்
தீ வளர்க்கும் யாக மேடைக்கே
உணவைக் கொட்டுகிறாய்

ஆனாலும் அடிக்கடி நீளப் பொய் சொல்கிறாய்
என் நேசமானவன் நீ என்று

என்று பேசும் ‘நண்பா இல்லையா…’ என்ற கவிதையாகட்டும் –

‘எங்கள் தாள்கள்
வெள்ளையாக இருப்பதையே
இவர்கள் விரும்பித் தொலைக்கிறார்கள்
மீறி
எழுதினால்
எங்களின் தாலிக்குரியவர்கள்
வெள்ளைச் சேலையிலே உலாவருவார்களென
சபிக்கிறார்கள்’

என்று பேசும் ‘வெள்ளளைத்தாள்’ என்ற கவிதையாகட்டும்…. அவை பேசும் அரசியல் உள்ளீடு மிகவும் ஆழமானது. அதை எடுத்துச் சொல்லும் விதம் அழகானது. வெள்ளைத் தாள் கவிதையைப் படிக்கும் போது தமது எழுத்தின் காரணமாக உயிர் இழந்த அனைத்துப் பேனாப் போராளிகளும் நம் கண்முன்னே வரிசையாய் வந்து போகிறார்கள். அவர்களை நம்பியிருந்த மனைவி, பின்னைகள், குடும்பத்தார் வந்து போகிறார்கள்.

ஓரரயிரம் வார்த்தைகளில் எழுதப்படும் மக்களின் பிரச்சினையை கவிஞன் ஒரு கவிதையில் மிகவும் சூட்சுமமாக விளக்கி விடுவான் என்பதற்கு இவரது கவிதைத் தொகுதியில் இன்னும் ஏராளம் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணத்துக்கு ‘இரும்புத் தொப்பிகள்’ என்று ஒரு கவிதையின் சில வரிகளைச் சொல்ல முடியும்.

பதினெட்டு ஆண்டுகளின் பின்னால்
வெளியூரில் இருந்து வந்து
அன்னையைத் தேடினேன்
அகதி முகாமிலே தேடச் சொன்னார்கள்

நண்பனைத் தேடினேன்
வெலிக்கடைச் சிறையின்
முகவரி தந்து போகச் சொன்னார்கள்

தத்தித் தவழ்ந்த மண்ணையாவது
முத்தமிடலாம் என்று போனேன்
கிட்டே போக முடியாத பாதுகாப்பு வலயம்
தொலை நோக்கி கொண்டு எட்டிப் பார் என்றனர் என்று பேசும் இந்தக் கவிதை கடந்த முப்பதாண்டு துயரத்தின் பாதியை நமக்கு விளக்கிச் சொல்லிவிடுகிறது. தமிழ் இனத்துக்கு நேர்ந்த கதியைப் பேசி நிற்கிறது.

நாயின் உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும் அது காலைத் தூக்கிக் கொண்டு தெத்தித் தெத்தி ஓடும் என்பார்கள். அதே போல் மனிதர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு முகங் கொடுக்க நேரும் போது அல்லது ஒரு துயரை எதிர் கொள்ளும் போது சட்டென்று செய்யும் ஒரு காரியம் மற்றவர்களைக் குறை காண்பதுதான். அந்தக் குறை காணல் மூலம் மனிதர்கள் மற்றவர்களுக்கு உணர்த்த நினைப்பது என்னவெனில் தாம் புனிதமானவர்கள், சுத்தமானவர்கள், தப்புச் செய்யாதவர்கள் என்பதைத்தான். அதாவது குற்றத்தில் எந்த ஒரு பங்கும் தனக்கு இல்லை என்கிற ஒரு தற்காப்புக் கவசத்தை மற்றவர்கள் மீது குறை சொல்லுவதன் மூலம் அணிந்து கொண்டு தப்பிக்கும் மனோ நிலை.

தமிழ் மக்களின் கடந்த காலத் துன்பங்களின் பின்னாலுள்ள பெரும்பான்மை அரசியலை எவ்வாறு ஞானகுமாரன் சுட்டிக் காட்டினாரோ அதே போல தன்தரப்பையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்த நேர்மை ஓர் உண்மையான படைப்பாளிக்குத்தான் இருக்கும். படைப்பாளி எல்லோரையும் ஒன்று போல் மதிக்கும் மனத்தினன். நியாயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்பதை உரத்துக் கூவுபவன். இங்கே ‘தமிழ்சாதிக்கொரு..’ என்கிற – நூலின் கடைசிக் கவிதையில் இப்படிச் சொல்கிறார்.

தமிழ் ஒரு திரவியம் என்பதாலா
நீங்கள் போட்டி போடுகிறீர்கள்
ஏலம் போட்டு விட
போட்டி போடுகிறீர்கள்

இங்கே நடக்கும் போட்டி கூட
தமிழை யார் ஊட்டி வளர்ப்பதில் அல்ல
அதை யார் காட்டிக் கொடுப்பதென்பதிலேயே…

ஆறேழு வரிகளில் தனது கோபத்தைத் துல்லியமாகப் பதிவு செய்கிறார். அந்த இழி செயலைச் செய்வோரின் கன்னங்களில் தனது எழுத்தால் ‘சப்’பென்று ஓங்கி அறைந்து விடுகிறார். இதைப் படைப்பாளியின் அகங்காரமாக எடுத்தக் கொள்ளக் கூடாது. அவன் சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதாகவும் நோக்கக் கூடாது.

இக்கவிதை நூலின் எல்லாக் கவிதைகளையும் எடுத்துக் காட்டிப் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு இல்லை. என்ற போதும் இனப் பிரச்சனையில் தமிழகத்தின் அல்லது இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் சொல்லும் ஒரு வரியை நான் கோடிட்டுக் காட்ட வேண்டும். கவிதையில் தமிழகத்தில் வைத்திருந்த இலங்கைத் தமிழனின் நம்பிக்கை எத்தகையது என்பதை அவர் சொல்ல எடுத்தாளும் உதாரணம் என்னைக் கவர்ந்தது. அவர் சொல்கிறார்…

மூத்திரத்தைக்
கயிறென எண்ணிக் கொண்டதால்
வந்த விளைவுகள் ஏராளம்!

ஏகாதிபத்தியம் அது என்ன வடிவில் இருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுக்காத கவிஞன் இல்லை. படைப்பாளி இல்லை. ஞானகுமாரன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பயன்படுத்தும் வசனங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல எல்லா ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பொருத்தமானது. ‘நிர்வாணம்’ என்ற கவிதையில் அவரது குரல் இப்படி ஒலிக்கிறது.

பூசணிக்காயைக் கூட
சோறு மூடலாம்
ஆனால்
உன் ஆக்கிரமிப்பு நிர்வாணத்தை
நிவாரண ஆடைகள் மூடாது

நீ வலி செய்தால் மனித நேயம்
உனக்கு வலி செய்தால்
அது மனுக்குல விரோதம்
கோவணத்தால்
தலைப்பாகை கட்டுவது போலிருக்கிறது உன் செய்தி.

இவ்வாறான பல கவிதைகளையும் சில தனிப்பட்ட ஆளுமைகள் பற்றியும் ஆளுமைகளை நோக்கியும் சில கவிதைகள் பேசுகின்றன. நெல்சன் மண்டேலா, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மு.மேத்தா, கோபி அன்னான், குன்னக்குடி வைத்தியநாதன், ஆதித்தனார், கவிஞர் நாவண்ணன், யஸீர் அரபாத் ஆகியோர் அக்கவிதைகளின் கருப் பொருள்களாக அமைந்துள்ளனர். தவிர காதல், பிரிவு, வறுமை, ஏமாற்றம் போன்ற உணர்வுகளைப் பகிரும் கவிதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

இனி, இவரது கவிதைகளில் என்னைக் கவர்ந்த சில வரிகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“அம்மன் கோவில் திருவிழாலிலே
கம்மலைத் தொலைத்தவள் போலொரு நிலையில் நான்”

“வெள்ளைக் கொடி சமாதானம்தான்
பறந்த இடம் என்னவோ பிணமேடு’

“இரும்புத் தொப்பியை மாட்டியபடி
பச்சைச் சட்டைக்குள் உறைந்திருக்கிறது ஊர்”

“விருத்தங்கள் எழுதமுடியாத அளவுக்கு வருத்தங்கள்”

“அழுகிய பீடைகளைக் கொளுத்தலாம்
உயிர் ஆடைகளைக் கொளுத்தலாமா?”

மதங்களைப் பற்றிச் சொல்லும் போது, “மரங்கள் படையைக் கழற்றலாம்… நீங்கள் மனிதாபிமானச் சட்டையைக் கழற்றலாமா?” என்று கேட்கிறார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றதை “இராமேஸ்வரம் மாறியிருக்கிறது இராஜ் பவனுக்கு” என்று குறிப்பது அழகு!

கவிஞர்கள் தமது கவிதை நூல்களை வெளியிடும் போது வடிகட்டும் வேலையொன்றைச் செய்ய வேண்டும். காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான் என்ற போதும் எழுதப்படுவன எல்லாமே நூல்வடிவாக வருவதற்குரியன அல்ல. எனவே ஒரு கவிதைத் தொகுதியைத் தயாரிக்கும் போது நண்பர்கள் மூத்த கவிஞர்கள் போன்றோரிடம் கவிதைகளைக் கொடுத்து அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தொகுதியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பட்டிருந்தால் இந்தத் தொகுதியின் பெறுமானம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும்.

எல்லாக் கவிதைகளுக்கும் படம் போட அவசியமில்லை. படங்களை விட கவிதை வல்லமையானதாக இருந்த போதும் ஒரு கவிதை நூலைத் திறக்கும் வாசகனுக்கு முதலில் படத்தின் மீதே கவனம் செல்லும். அதே போல் அட்டைப் படத்திலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இவை யாவும் நிகழ்ந்திருப்பின் மேல்மட்ட வாசகர் அநேகரின் கவனத்துக்கு இது செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். எந்த ஒரு பொருளுக்கும் சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. அவை அதி சிறப்பு வாய்ந்தவையாக இருந்த போதுங் கூட.

ஞானகுமாரனின் கவிதைகளின் உணர்வுக்கும் அது பேசும் ஆழ்ந்த அரசியலுக்கும் ஏற்றாற்போல் அதன் வடிவம் இல்லை என்பது எனது கருத்து. இதனை அவர் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவே சொல்கிறேன். இரண்டு கவிதைத் தொகுதிகளைத் தந்த நல்ல கவிஞனின் கவிதைத் தொகுதி போலல்லாது ஓர் ஆரம்ப நிலைக் கவிஞனின் முதலாவது கவிதைத் தொகுதி போல் இதன் வடிவமைப்பு நடந்திருக்கிறது. அடுத்த தொகுதியில் இந்த விடயத்தில் அவர் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

மொத்தத்தில் ஞானகுமாரனின் கவிதை மனது விசாலமானது. அழகானது. அவரது கவிதை மொழி மிக இலகுவானது. வலிந்து சொற்களைப் புகுத்தாமல், தான் ஒரு விற்பன்னர் என்பதைக் காட்டிக் கொள்ள முயலாமல் எளிய மொழியில் அவரது கவிதைகள் ஆழமாகப் பேசுகின்றன. ஞானகுமாரன் வெகுஜனத்தை அடைய இது பெரிதும் துணையாக இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

(27.03.2011 அன்று தமிழ்ச் சங்கத்தில் நடந்த வெளியீட்டு விழாவல் ஆற்றப்பட்ட உரை.)
 
also visit http://ashroffshihabdeen.blogspot.com/
ashroffshihabdeen@gmail.com