மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள் இரண்டு

மட்டுவில் ஞானக்குமாரன்1. பிழைக்க வேறு வழியில்லை

கிளிஞ்ச பாய்
பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக்குடித்தனத்துக்கு 
கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;

ஊர் சுற்றும் தம்பியால் 
பீடி சுத்தும் அம்மா

காச நோய் கண்டதனால் 
பேசாப்பொருளான
அப்பா

சீதனம் கேட்டுவரும் 
தவணை முறைத் துன்பத்தால்
வாழாவெட்டியாய் வாழும்
அக்கா

போருக்குப்
பேர் போன தேசத்தில்
காணாது போன கணவன்

பசிதான்
மூத்த பிள்ளை பேசிய
முதல் வார்த்தை 
 
முதுகெலும்பை பிச்செடுத்த
ஒரு இஞ்சி செல் துண்டால்
பேசவே முடியாத
கடைசி மகன்

இப்படியாக இவள்
இத் தொழில் வர இருந்தன
ஏராளம் காரணங்கள்
 
விரும்பித் தெரிவு செய்த
விருப்பமில்லா தொழில்

பாவ புண்ணியம்
கௌரவம் பார்க்கில்
இந்தப் பசிமயக்கம் போகாதென்பதால்
யாருக்கும் தெரியாது இரகசியமாக
ஏற்றதொழில்

இரைப்பை நிரவ நடக்கும்
கருப்பை வியாபாரம்

மருந்தே கதியென காத்திருக்கும்
காசநோய்க்காரன் போல்
ஆசைநோய்
பிடித்த மீசைகளால் 
திசைமாறிக்கிடக்கிறது ஒரு
குலமகள் வாழ்க்கை

இவளென்ன
பொதிசுமக்கும் கழுதையா
அல்லது
நிறை காட்டும் எந்திரமா
இன்னும் எவ்வளவு காலத்திற்கென்றுதான்
இந்த பாரச்சிலுவைகளையெல்லாம்
சுமப்பது

உடலை வாட்டி
உழைக்க வந்தவளை
உறுப்பைக் காட்டி உழைக்க வைத்தது
யார் இழைத்த காலப்பிழை

கணவனைப்பற்றிக் கேட்டால்
அரசனோ கைவிரிக்கிறான்
வருவான்
வருவான் என அமச்சனும்
பொய் உரைக்கிறான்.

சேலை தர வந்தவர்கள் 
இங்கே 
துச்சாதனனாய் ஆனார்கள்
ஏதை தருவதென்றாலும்
உடல் தானம் கேட்டார்கள்

பாலுக்கழும் குழந்தைக்கு
வழி என்ன சொல்வது

இராமர்கள் மட்டும்
எப்போதும்
வில்லோடே அலைவதனால்
சீதைகள் மட்டும் தீயிலே வேகவே
சாபிக்கப்படுகிறார்கள்

இவளை சந்தியில் நிறுத்தி
சவுக்கடி தர
பல பேர்கள் வருகிறார்கள்
வந்தவர் முதுகிலே
மூட்டை மூட்டையாக அழுக்குகளை
காவியபடி

(போரால் பாதிக்கப்பட்ட தாயொருத்திக்கு நேர்ந்த கதியறிந்தெழுதிய கவிதை)


2. ஏன் எதற்கு எழுதாமல் போனேனோ …!

என்னை மன்னித்துவிடு அம்மா
உனது பிறந்த நாளைக்காக
ஒத்தை வரியிலொரு வாழ்த்தைக்கூட
எழுதாமல் விட்டதற்கு

யார் யாரையோ எல்லாம் வாழ்த்தி எழுதியிருக்கிறேன்.
மூளையைக் கசக்கிக் கவிதைகள் பிழிந்தேன்
சங்கத்தமிழையும் 
பரிமேலழகரையும் வலைபோட்டு இழுத்து வந்தேன்
இருந்தாலும்
உனக்காயொரு வார்த்தையினை எழுத மறந்தனே.

காதலர் தினத்தேதியை 
கவனத்தில் வைத்தவன்
உலகத்துக்குதவாத எத்தனையோ விடயத்தை
நினைவலே தைத்தவன்
பெத்தவள் பிறந்த நாளை 
எப்படி மறந்தேன்

பயன் தாரா வார்த்தையில்
பலன் ஏதுமில்லையென
எழுத மறுத்தேனா

நாடோடியாய் அலைந்து
சோம்பல் வாழ்க்கைக்கு வாழ்கைப்பட்டுப்போனதால்
உனைப்பற்றி எழுதாமல் போனேனா

பிஞ்ச சேலையில வந்த நூல் போல
இருக்கோ இல்லையோ என
தெரியாச் சங்கிலி
காதிலே இருந்த திருகாணி எல்லாம்
அடைவுவச்சு வழர்த்தவளே
சொத்தொன்றும் உனக்கு  இல்லையென்பதால்
எழுதாமல் போனேனா

சமுத்திரம் போலொரு
சோகக்கடலை
நெஞ்சுள் சுமந்து திரிபவளே
உன்னைப்பற்றி எழுத எந்தச் சொல்லுக்கும்
வலிமை இல்லையென்பதால்
எழுதாமல் போனேனா

ஓட்டைச்சிரட்டை எடுத்து
நீர் அள்ளும் குழந்தை போல
கையில் வரமுன்னமே கரைந்துபோகின்ற
சம்பளத்தில்
கொஞ்சமாவது அனுப்புவான் என
காத்திருக்கும் தாயே

ஒளிபடைத்த கண்ணிலே
வழிந்தொழுகும் இருளிலே மறுத்திட்ட வாய்ப்புகளை
தேடித்திரிகிறேன்

இது எரிமலை வயிறுள் எரியும் நெருப்பு
எறும்பு சுமந்துவரும்
தண்ணிப்பானையால் அணைக்க முடியுமா

சிகரத்திலே கூடு கட்ட
சொல்லிக்கொடுத்தவளே 
கொஞ்சம் பொறு இன்னும் நான்
பள்ளத்திலேயே விழுந்து கிடக்கிறேன்
எழுந்து வருவேன் அப்போ உனைப்பற்றி
ஒரு கோடி பாட்டிசைப்பேன்.

maduvilan@hotmail.com