மண்ணின் வாசனையும் அதன் மகிமையும்

எம் மண்ணாகிய பூமி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பரந்து விரிந்த எல்லை கடந்த வெட்ட வெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து ஊர்ந்த வண்ணமுள்ளது. அதன்கண் புதன் (Mercury), சுக்கிரன் (Venus), பூமி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), விண்மம் (யுறேனஸ்-Urenus), சேண்மம் (நெப்டியூன்-Neptune), சேணாகம் (புளுட்டோ-Pluto) ஆகிய ஒன்பது கோள்களும் அடங்கும். சூரியன் சுமார் 456 கோடி 80 இலட்சம் (456,80,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். சூரியன், நட்சத்திரங்கள், ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் இவைகள் வானில் தரித்து நிற்கின்றன.  இற்றைக்கு சுமார் 454 கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து தெறித்துச் சூரியனைப்போல் எரிந்து கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் எரிந்த வண்ணம் உள்ளது. இன்றைய ஆய்வின்படி இந்த ஒன்பது கோள்களில் பூமி ஒன்றில் மட்டும்தான் உயிரினங்கள் வாழக் கூடிய காற்று, நீர், வெப்பம் ஆகியவை உள்ளன. எனவே மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிர் வாழ முடியாது. இந்தவகையில் மற்றைய கோள்களிலும் பார்க்கப் பூமி பல இயற்கை அற்புதங்கள் நிறைந்து அதி சிறப்புற்று விளங்குகின்றது. பூமியைத் தோண்டத் தோண்ட வற்றாக் கனிமப்பொருள்கள் பொதிந்திருப்பதைக் காண்கின்றோம். பூமியின் 71 சத வீதப் பகுதி உப்பு நீர் கொண்ட கடலால் மூடப்பட்டுள்ளது.

அதி ஆற்றலுடைய வேதியியல் தன்னைத்தானே பெருக்கக் கூடிய மிகச் சிறிய உயிரினமான அணுத்திரண்மத்தை (Molecule) சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டுகளுக்குமுன் பூமியில் முதன் முதலாகத் தோற்றுவித்து உயிர் மலர்ச்சி (Evolution of Life)  முறையை ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது.

நிலக்கரி 

பூமியின் மேற்புறத்திலிருந்து 1,800 மைல் (2,880 கி.மீ) ஆழத்தில் கற்பாறைகள் உருகி மலைக் குழம்பான (Lava) நிலையில் காணப்படுகின்றது. இவை சில சமயங்களில் பூமித் தரையைப் பீறிக்கொண்டு பூகம்பமாகவும், எரிமலையாகவும் சீறிப் பாய்ந்து உயிரினங்களையும், நாட்டையும் அழித்து விடுகின்றன. சதுப்பு நிலங்களிலும் பள்ளப் பகுதிகளிலும் வளர்ந்த மரங்;களும், அடர்ந்த காடுகளும் காலப் போக்கில் இயற்கை அனர்த்தங்களால் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் பார அழுத்தத்தால் நிலக்கரிப் பாறையாக மாறுகின்றது. நிலக்கரி உண்டாவதற்குச் சுமார் 20 கோடி (20,00,00,000) ஆண்டுகள்வரை நாம் காத்திருக்கவேண்டும்.

பாறை எண்ணெய் 

உலகளாவிய ரீதியில் பூமியடியின் ஆழத்திலுள்ள மலைகளின் வளைமுகடுகளில் பல இலட்ச ஆண்டுகளுக்குமுன் பொறியுட்பட்ட எண்ணெய்க்கும,; நிலத்திலிருந்து வெளிப்படும் வாயுவுக்கும் தேடுதல் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான எரிபொருள் பாரிய கைத்தொழில்களின் மூலப் பொருளாய் அமைந்துள்ளது.

நீரொழுக்கற்ற கடற் பகுதிகளின் சேறு வண்டல்களுடன் திரண்ட மிருக தாவர உறுப்புக்களிலிருந்து பாறை எண்ணெய் (Petroleum) உருவாகின்றது. உயரிய தனித்தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகள் (Bacteria)  தமக்குத் தேவையான பிராணவாயுவை உறுப்புக் கழிபொருளிலிருந்து உறுஞ்சிப் பெறுகின்றன. அதனால் உறுப்புக் கழிபொருள் கொழுப்பாகவும், மெழுகாகவும் உருமாற்றம் அடைகின்றது. அவை திரண்ட வண்டல்களால் புதைபடும் பொழுது, அமுக்கமும் தட்பவெப்ப நிலையும் அதிகரித்து பாறை எண்ணெய்யாக உருமாற்றமடைகின்றது. அப்பொழுது அதனைச் சுற்றியுள்ள சேற்றுப் பகுதிகள் களிப்பாறை (Shale)  என்று சொல்லப்படும் பாறையாக மாறிவிடும். பாறை எண்ணெய் உருவாவதற்கு சுமார் ஒரு கோடி (1,00,00,000) ஆண்டுகள் ஆகின்றன.

பூமியின் விட்டம்

பூமியின் விட்டப்பாதையான 8,000 மைல்களைக்; (12,800 கி.மீ) குடைந்து கொண்டு போவோமாகில் முதலில் மணல், களிமண், கூழாங்கல், நீர், மலை, வாயு, நச்சு வாயு, பெரும் பாறை, மலைக் குழம்பு, மீண்டும் பெரும் பாறை, நச்சு வாயு, வாயு, மலை, நீர், கூழாங்கல், களிமண், மணல் என்ற அமைப்பினைக் காணலாம். இவ்வாறு பூமியின் மேற்பரப்பு மணலால் மூடப்பட்டுள்ளது. நம் காலடியில் உள்ள மண் ஆனது, சிதைவுபட்ட பாறை, பதனழிவுற்ற தாவரம், மிருக உயிர் எச்சம் ஆகியவற்றின் சேர்மமாகும். இச் சேர்மத்தின் மேற் பகுதி உலக விவசாயத் தாவர வளர்ச்சிக்குப் பயன் படுத்தப்படுகிறது.

மண்ணின் பொருள் வரையறை

மண்ணியல் ஆய்வு, 0.0625 (1/16) மில்லி மீற்ரருக்கும் 2 மில்லி மீற்ரருக்கும் இடைப்பட்ட விட்டமுள்ள வண்டல் துகள்களை ‘மண;’ என்று வரையறுத்துச் சொற்பொருள் விளக்கமும் தருகின்றது. பாறைத் துண்டுகள் காற்று, மழை, ஆறு ஆகியனவற்றால் உடைக்கப்பட்டு மண் என்ற நிலையடைகின்றது. மண்ணானது செடி, கொடிகளை வளர்க்கக் கூடிய நீர், சூடு, உணவு, காற்று போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தியும் செடி, கொடியின் வேருக்கு உறுதுணையாகவும் நின்று செயற்படுகின்றது.
வியக்கத்தக்க சிக்கலான ஒரு பொருளாய் மண் இருப்பதினால் அதை நில இயலாளர், வேதியியல் வல்லுனர், நாட்டுப்புற பொருளாதார நூலார், உயிர்நூல் அறிஞர், மண் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்தவண்ணம் உள்ளனர். இயற்கையின் பெரும் வியப்புக்குரிய பொருள்களில் மண்ணும் ஒன்றாயுள்ளது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். மண் ஒரு நிலையில் நில்லாது, நீர்க்கசிவுச் (Percolating)  செயல், உயிரியக்கவியற் (Organic) செயல் என்பன மூலமாய் மாற்றமடைந்தும் உருமலர்ச்சி பெற்றும் வருகின்றது. மழை காலங்களில் மண்ணிலுள்ள கரைபொருள்கள் கழுவப்பட்டும் கரைந்தும் மண்ணடிக்குள் சென்று விடுகின்றன.

மண்ணின் பகுப்பு

உலக மண்ணை (1) மணல், (2) வண்டல், (3) களிமண், (4) களிச்சேற்று வண்டல், (5) தூள்மண், (6) சுண்ணம் நிறைந்த மண் என்று ஆறு (06) பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர் மண்நூல் துறையார். உலக மக்கள் தாம் பிறந்த மண்ணின் தரத்தையும், செழிப்பையும் அறிந்து அததற்கேற்ற பயிரை நாட்டி விவசாயம் செய்து உலகப் பசியைப் போக்கி வாழ்கின்றனர்.

தொல்காப்பியம்

இனித் தொல்காப்பியர் மண் கதை பற்றிக் கூறும் பாங்கினையும் காண்போம். திருமால் காக்கும் காடாகிய ‘முல்லை’ இடமும், முருகவேள் காக்கும் உயர்ந்த மலையாகிய ‘குறிஞ்சி’ இடமும், இந்திரன் காக்கும் நன்னீர் பொருந்திய வயலாகிய ‘மருதம்’ இடமும், வருணன் காக்கும் பெருமணல் பொருந்திய ‘நெய்தல்’ இடமும் மறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் கூறப்பட்ட பெயர்களாகும் என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
               
                                     ‘   மாயோன் மேய காடுறை உலகமும்
                  சேயோன் மேய மைவரை உலகமும்
                  வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
                  வருணன் மேய பெருமணல் உலகமும்
                  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
                  சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. ‘
                                                                                                               – (பொருள் 05)

தொல்காப்பியர் காலத்துக்குமுன் இருந்த நம் பண்டைத் தமிழர்கள் தாம் வாழ்ந்த மண்ணை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிட்டு நால்வகை நிலங்களாக வகுத்துள்ளமை புலனாகின்றது. இன்னும் காலப் போக்கில் முல்லையிலும் குறிஞ்சியிலும் உள்ள சில பகுதிகள் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, மழை குன்றி, வெம்மையடைந்து, தரிசுபட்ட வனாந்தர நிலத்தைப் ‘பாலை’ எனப் பெயரிட்டு, அதைக் காக்கக் ‘கொற்றவை’ என்ற தெய்வத்தை நியமித்தனர். உதவாத தரிசு நிலமென அறிந்திருந்தும் அதற்குமொரு பெயரிட்டமை நோக்கற்பாலது.

நால்வகையாய் அமைந்த நிலங்கள,; பாலை நிலத்துடன் ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. இவ்வண்ணம் ‘பாலை’ பிறந்த கதையைச் சிலப்பதிகாரம் கூறும் பாங்கிது.
                  
                      ‘ முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
           நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்,
           பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும். ‘
                                                                     – (காடுகாண் காதை. 64 – 66)

காடும் காடுசார்ந்த நிலத்தை முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வனாந்தரமும் அதனைச் சார்ந்த இடத்தை பாலை என்றும், வயலும் வயல்சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல்சார்ந்த இடத்தை நெய்தல் என்றும் மேற்கண்டோம். இந் நிலங்களின் தன்மையை அறிந்த மக்கள் முல்லையில் காத்து இருத்தலும், குறிஞ்சியில் புணர்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் நிகழ்த்தித் தம் வாழ்வியலைச் சீரும் சிறப்புடனும் நடாத்தி இன்புற்று வாழ்ந்தனர்.

தமிழ் இலக்கியங்கள்

இன்னும் மண்ணின் மகிமை பற்றித் தமிழ் இலக்கியங்களான புறநானூற்றில் நிலம் பெயரினும், நிலம்புடை, மலர்தலை உலகம், நாடா கொன்றோ, நிலனே, ஊரே என்றும், அகநானூற்றில் மண்கண், தருமணல், இடுமணல் என்றும், பரிபாடலில் பருமணல், மண்மிசை, நிலன் என்றும், பதிற்றுப்பத்தில் நிலம், மண்ணுடை என்றும், ஐங்குறு நூற்றில் வெண்மணல், நுண்மணல், வார்மணல், நெடுமணல் என்றும், நற்றிணையில் தருமணல், நிலம், நிலந்தாழ் என்றும், மணிமேகலையில் நிலாமணல், நெடுமணல் குன்றம், இடுமணல் என்றும், குறுந்தொகையில் நிலத்தினும் என்றும், திருக்குறளில் நிலம், மண்ணோடு, நிலத்தியல்பால் என்றும், கலித்தொகையில் நிலம்பூத்த, மண்கடல், மணல் நோக்கி என்றும் பற்பல கோணங்களில் நின்று பேசப்படும் பாங்கினைக் காண்கின்றோம்.

இந்திரனைச் சூழ்ந்த பழி

ஒரு சமயம் இந்திரன் பல பாவச் செயல்களைப் புரிந்துவிட்டான். அதனால் ஏற்பட்ட பழி பாவங்கள் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ள அவன் செயற்பாடுகள் தடைப்பட்டன. இதனால் கவலை கொண்ட இந்திரன் தன் பழி பாவங்களைப் போக்க மரத்தையும், மண்ணையும், பெண்ணையும் நாடிச் சென்று உதவி கேட்டு நின்றான். முதலில் மரத்திடம் போய் தன் பழி பாவங்களை மரத்திலிருந்து பாலாகவும், பிசினாகவும் கழிக்குமாறும;, அதற்காக மரங்களை வெட்ட வெட்டத் தழைக்கும் வரம் தருவதாகக் கூற, மரங்களும் அதற்கு உடன்பட்டன. இரண்டாவதாக மண்ணிடம் போய் தன் பாவத்தை மனிதர் மண்மேற் போடும் கழிவுப் பொருள் மூலம் கழிக்கும் படியும் அதற்காக மண்மேற் போடப்பட்ட கழிவுப் பொருள்கள் தானே உக்கி மண்ணுக்கு எருவாய் மாறும் வரத்தையும், மண்ணை அகழ்ந்து விட்ட பொழுது அது தானாகவே மூடும் வரத்;தையும் தருவதாகவும் கூற, மண்ணும் அதற்கு ஒத்துக்கொண்டது. மூன்றாவதாக இந்திரன் பெண்ணை நாடிச் சென்று, தன் பழி பாவங்களைப் பெண்களின் மாத விடாய் மூலம் கழிக்குமாறும், இதற்காக அவர்கள் கருவுற்றிருக்கும் காலத்திலும் தம் கணவருடன் மருவி வாழலாம் என்ற வரம் தருவதாகக் கூற, அவர்களும்; புன்முறுவலுடன் ஒத்துக் கொண்டனர். இவ் வரத்தால் பெண்களின் வாழ்வியல் பெருகிக் குடும்ப மகிழ்வும் பெறுகின்றனர். இங்கே மண்ணின் மகிமையையும் அதன் வாசனையையும் காண்கின்றோம். அதே நேரத்தில் இந்திரனைச் சூழ்ந்த பழி பாவங்களும் நீங்கித் தன் செங்கோல் ஆட்சியைத் திறம்பட நடாத்தத் தொடங்கினானென்பது ஒர் ஐதிக வழிவழிச் செய்தியாகும்.

மண்ணின் செயற்பாடு

மக்கள் தமக்கு வேண்டாக் கழிவுப் பொருட்களையும், இறந்துபடும் மிருக மனித உடலங்களையும், மனித மிருக எச்சங்களையும், வெட்டி எறியும் மரம;, செடி, கொடிகளையும் மண்மேற் போட்டும், மண்ணை அகழ்ந்து புதைத்தும் விடுகின்றனர். இதை மண் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சீரணித்துப் பசளையாக்கித் தன்னை வளப்படுத்தித் தன்மேல் வளரும் மரம், செடி, கொடி, பயிர்களுக்கு உணவாக்கி அவற்றின் விளைச்சலை அதிகரிக்கச் செய்து, உலகிலுள்ள சுமார் 700 கோடி மக்களுக்கும் உணவளித்து, பசிக் கொடுமை தணித்து, உயிர் கொடுத்தும், மற்றைய உலகச் சீவராசிகள் அனைத்திற்கும் உணவளித்துக் காத்துச் சுமார் கடந்த 400 கோடி (400,00,00,000) ஆண்டுகளாக இத் தொடர்ச் செயலைப் புரிந்தவண்ணம் உள்ளது. இதனால் மக்கள் மண்ணைத் தம் உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.

சேமப் பெட்டி

தீ, காற்று, நீர் போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்தும், கள்வர்களிடமிருந்தும் தமது பொருள்களான பணம், பொன், அணிகலன்கள், செல்வம், முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்காக இவற்றை மண்ணில் புதைத்துப் பின் வேண்டிய நேரத்தில் எடுத்துப் பாவிக்கின்றனர். சில நாட்டார் தம் நாட்டின் வரலாற்றுப் பொக்கிசங்களைப் பேழையில் வைத்து மண்ணில் மிக ஆழத்தில் புதைத்து விடுகின்றனர். இவை மண்ணில் மறைந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் சென்றாலும் மங்காது சேமப் பெட்டியில் வைத்ததுபோல் சேமித்துக் காப்பாற்றப்படுகின்றன.

நம் கிராமியப் பெண்கள் சமயலறையின் அடுப்பங்கரையைத் தோண்டித் தம் நகைகளையும், பணத்தையும் அதில் வைத்து மண்ணால் முடி, அதை மெழுகி, அதன்மேல் அடுப்புகளை வைத்துச் சமையல் செய்வர். இன்னும் குடங்கரையிலும் இவற்றைப் புதைத்துக் காப்பாற்றி வருகின்றனர். இவ்வாறான அடுப்பங்கரையும், குடங்கரையும் சமசியப்படாத இடங்களாகும். இம் மண்ணின் பெருமையை அந்த மக்கள்தான் நன்கு அறிவர்.

முடிவுரை

பூமியின் மேற்பரப்பில் அமைந்த மண்தான் பூமியின் உயிர். அம் மண்தான் மனிதனின் உயிர். மனிதன் மண்ணில் பிறந்து, உருண்டு, பிரண்டு, தவழ்ந்து, எழுந்து, விழுந்து, நடந்து, ஓடி விளையாடி, எழுதிப் படித்து, கொத்தி, உழுது, பயிரிட்டு, விவசாயம் செய்து, படுத்து, உறங்கி, பகல் இரவென்று பாராது தம் வாழ்நாள் முழுவதையும் மண்ணுடன் ஒட்டி உறவாடிப் பிறந்த அதே மண்ணில் மடிந்து மண்ணாகிப் போகின்றான். எந்த மண்ணை நேசித்தானோ அதே மண்ணில் அவன் கதை முடிகின்றது. ஆனால் அவன் மண்மேல் வாழ்ந்த நாட்கள் இன்பகரமானவை. இதுதான் மண்ணின் மகிமை. அவன் இறந்துபட்டது பெரிதல்ல. அவன் மண்ணில் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் கேள்வி? அவன் மண்ணுடன் இணைந்து மாண்புடன் வாழ்ந்தான் என்பதுதான் அதன் விடை.

அவன் இரவில் மண்மேல் படுத்து உறங்கினான். வயலில் வேலை செய்து களைப்புறும் பொழுதும் அருகிலுள்ள மரநிழலில் வெண் மணல்மேல் படுத்துத் தூங்கினான். அவனை மண்ணின் ஈர்ப்புச்சக்தி நோய் நொடி வராது காப்பாற்றியது. ‘மண் சிகிச்சை’ என்ற முறை அந்நாட்களில் மலிந்து காணப்பட்டது. மகாத்மா காந்தி அவர்களும், மறைமலை அடிகளாரும் மண் சிகிச்சை முறைகளைக் கைக்கொண்டு பலனும் கண்டனர்.

இன்று நம்மவர் அநேகர் நிலத்தில் படுப்பதில்லை. நிலத்திலிருந்து மூன்று, நான்கு அடி உயரத்தில் கட்டில் மெத்தைகளில் சொகுசாகப் படுத்து உறங்குகின்றோம். விஞ்ஞானம் நம் திசையை மாற்றிவிட்டது. நாமும் புதுப் புது நோய்களால் பீடிக்கப்பட்டு வாடி வதங்குகின்றோம். இதற்கொரு பரிகாரம் அவசியம் நாடல் வேண்டும்.

நம் பண்டைத் தமிழர்கள் தமிழ் மண்மேற் காதல் கொண்டு அதன் தன்மை, தரம், மகிமை, வாசiன ஆகிய இயற்கை நிலைகளை உற்றறிந்து அதற்கமைந்த வாழ்வினை அமைத்துப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டி அதன் எச்சங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். நாமும் அவ்வண்ணம் மண்ணோடு சேர்ந்து அவர் வழி நின்று, அற வழி நாடிப் பெருவாழ்வு காண்போம். 

wijey@talktalk.net