மரணப் படுக்கைத் தரிசனங்கள்

மரணப் படுக்கைத் தரிசனங்கள்- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -“ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்.” என்றார் தீனக் குரலில். காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது. ‘ஐயா’ என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது. இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions) காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பௌதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நியமான துறையில்; ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின்போது குருதி  இழப்பினால் மரணத்தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட்டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. (முழமையான விபரங்களை இணையத்தில் தேடுங்கள்)

மரணப்படுக்கைச் சாட்சியங்கள்
 
பிறப்பு எவ்வாறு எமது கைகளில் இல்லையோ அதேபோல இறப்பும் நிச்சமானதே. அதுவும் எமது வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமேயாகும். இருந்தபோதும் மரண பீதியானது காரிருளில் கன்னமிடும் கள்வன் போல பெரும்பாலானவர்களிடம் மறைந்திருக்கிறது.
 
ஆனால் மற்றொருவரின் இறப்புக் கணத்தில் சாட்சிபோல அருகில் நிற்பதுதானது மற்றெதையும் விட உள்ளத்தை உலுப்பிப் போடுவதாக இருக்கும். மனதிற்கு நெருக்கமான ஒருவர் நினைவிழந்து, மூச்சுத் திணறி, படிப்படியாக சுவாசம் அடங்கி பிணமாக அடங்கிப் போவதைப் பார்த்திருக்க நேர்வது பெரும் துன்பம். அதைப் போல உணர்வுகளைக் கிளறும் சம்பவம் வேறு எதுவும் ஒருவரின் வாழ்வில் இருக்க முடியாது.
 
ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்று Palliative-care physician Ira Byock சொல்கிறார்.
 
மேலை நாடுகளிலும் பெரு நகர்களிலும் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றன. இதனால் இறுதி நேரத்தில் அருகில் நிற்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் மூன்று தசாப்தங்களான போரில் மரணத்துள் வாழ்ந்த எம்மவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் அளவிற்கு அதிகமாகவே கிட்டியிருக்கும்.
 
மரணம் என்பது எப்பொழுதும் ஒரே விதமாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவற்றில் தனித்துவங்கள் இருக்கவே செய்யும். மரணங்கள் நிகழும்போது அருகே நின்றவர்களின் அனுபவங்களை Dying Well என்ற தனது நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் மேற் கூறிய மருத்துவரான Ira Byock.
 
இரு வேறு உலகங்கள்
 
மேற் கூறிய நபர் ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களில் சஞ்சரித்திருக்கிறார். மறைந்து போன தனது தந்தையுடன் பேசிய அவர், பிறகு நிஜ உலகில் தன்னருகில் நிற்பவர்களுடன் அந்தச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். இது அண்மையில் இங்கு நடந்த சம்பவம்.
 
இது போன்ற பல சம்பவங்களை Ira Byock தனது நூலில் பகிர்ந்திருக்கிறார்.
 
மிஷேல் என்ற பெண் தான் மரணத்தைத் தழுவுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ‘நான் சாரா அல்ல’ என்று சொன்னாள். சாரா என்பது அவளது தாயின் பெயர். அங்கிருந்த எவரது கேள்விக்கான மறுமொழியாக அது இருக்கவில்லை. கண்ணுக்குப் புலப்படாத யாருடனோ பேசியிருக்கிறாள். பிறகு அருகில் நின்ற கணவனைப் பார்த்து ‘நான் உங்களை விரும்புகிறேன்.’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தினாள்.
 
இவ்வாறாக இரண்டு வெவ்வேறு உலகங்களில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதானது மரணப்படுக்கையில் கிடக்கும் பலருக்கு சிரமமாக இருப்பதில்லை. அருகில் இருப்பவர்களது கண்களுக்குப் புலப்படாத யாருடனனோ பேசலாம் அல்லது சைகை காட்டலாம். அல்லது அவர்களுக்கு மட்டுமே அவ்வேளையில் புலப்படும் ஒரு இடம் பற்றியோ பொருள் பற்றியோ கதைக்கலாம். உதாரணமாக ரம்யமான தோட்டத்தில் நிற்பது பற்றியும் அழகான ஒளி விளக்குகள் பற்றியும் பலர் பேசியதான குறிப்புகள் பல உள்ளன.
 
சுற்றி நிற்பவர்களுக்கு அது சன்னியில் பிதற்றுவதாகத் தோன்றக் கூடும். ஆனால் அவர்கள் தெளிவாகப் பேசியதாகவே அறிக்கைகள் சொல்லுகின்றன. இவற்றில் பல மருந்துவர்களாலும் மருத்துவ உதவியாளர்களாலும் பெறப்பட்ட தகவல்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
75 சதவிகிதமானவர்கள் இறந்து போன தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பற்றிப் பேசியதாக The Art of Dying என்ற தனது நூலில் Fenwick கூறுகிறார். இது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைத்த தகவல்களாகும்.
 
ஆனால் 50 சதவிகிதமான இந்தியர்கள் மதத் தலைவர்கள் பற்றியே பேசினார்களாம். முன்னொருபோதும் அறியாத அந்நியர்கள் பற்றிப் பேசியது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. 

பொதுவாகப் பார்க்கும்போது அமைதி சாந்தம் மற்றும் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும் இடங்கள் அல்லது நபர்கள் பற்றியே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
குறியீட்டால் உணர்த்தல்
 
விட்டு விலக வேண்டிய அவசியம், தவிர்க்க முடியாத மாற்றம், அல்லது மரணம் பற்றிய வேறு குறியீடுகளால் தனது மரணத்தை உணர்த்துவதுண்டு. எங்காவது பயணப்படுவதாகக் கூறிய பதிவுகள் அதிகம். ஆரம்பத்தில் பேசப்பட்டவர் ஆலயத்திற்கு போவது (சந்நிதி) பற்றிக் குறிப்பிட்டார் அல்லவா.
 
“ஏன் இன்னமும் தாமதிக்கிறோம். அதோ பிளேன் ஆயத்தமாக காத்திருக்கிறது” என Patricia Anderson,  தான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டதாக Ira Byock தனது நூலில் உதாரணம் கூறுகிறார்.
 
வேறு சிலர் பயணத்திற்கான பொருட்களைப் பொதி செய்வது பற்றியும், அவற்றைச் சரி பார்ப்பது பற்றியும் குறிப்பிடுவதுண்டு.
 
பயணப்படுதல் பற்றிய அத்தகைய குறிப்புகள், தான் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக அடி மன உந்துதலால் எழுந்த சமிக்கையாகக் கொள்ளலாம் என பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
 
இத்தகைய நேரத்தில் சுற்றி நிற்பவர்கள் செய்யக் கூடியது என்ன? கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது மனத் துயரை வெளிப்படுத்துவதா? நிச்சமாக இல்லை. தாங்கள் படுக்கையில் கிடக்கும் அவரது நிலமையைப் புரிந்து கொள்வதாகவும், பிரிய வேண்டும் என அவர் நினைத்தால் தாம் அதற்குத் தடையாக இல்லை என்பதையும் உணர்த்த வேண்டும். துயருற்றாலும் தாங்கள் துணிவுடன் இருந்து அவர் விட்டுச் செல்லும் பணிகளைத் தவாறாது செய்வோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
 
இறுதிக் கணத்தைத் தானே தேர்ந்தெடுத்தல்.
 
பொதுவாக மரணப்படுக்கையில் இருப்பவரைச் சுற்றி நெருங்கிய உறவினர்கள் இருப்பார்கள். வேண்டிய பாராமரிப்புகளைச் செய்வார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இவர்கள் ஒரு சில நிமிடங்கள் வெளியே செல்ல நேரும். திரும்பி வரும்போது அவரது ஆவி பிரிந்திருக்கும்.
 
“கட்டிக் காத்து நின்றும் கடைசி நேரத்தில் உயிர் பிரியும்போது நாம் அருகில் நிற்கவில்லையே” என இவர்கள் கலங்குவர்.
 
ஆனால் தனது மரணத்திற்கான கணத்தை தானே தேர்ந்து எடுத்திருக்கக் கூடும் என்பதாக நாம் என்றுமே நினைப்பதில்லை. ஆனால் அதுதான் உண்மை என்கிறார்கள்; இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள்.
 
‘தமக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருக்கும்போது பெரும்பாலானவர்கள் உயிர் துறப்பதில்லை. அதிலும் முக்கியமாக குடும்பத்திற்கு தலைமை தாங்கி அவர்களை அணைத்துச் சென்றவர்கள் தமது இறுதிக் கணத்தில் தனக்கு நெருங்கியவர்கள் இருப்பதை விரும்புவதில்லை’ என எழுத்தாளரான
Lise Funderberg தனது அனுபவங்களை வைத்துக் கூறுகிறார்.
 
திடீரென நினைவிழந்த தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்தார் ஒரு மருத்துவர். மூளைக்குள் இரத்தம் உறைந்திருந்தது. கண் திறக்கவில்லை. கட்டைபோலக் கிடந்தார். நினைவு திரும்பாது மரணம் நிச்சயம் என்பது உறுதியாயிற்று. வெளியூர்களிலிருந்து பிள்ளைகள் வந்தனர். மிகுந்த பாசத்தோடு வளர்த்த தாயோடு ஒரு வார்த்iதானும் பேசமுடியாது கவலையோடு நின்றனர்.
 
மருத்துவர்களின் முடிவுகளைத் தகர்த்துக் கொண்டு திடீரென அந்த அம்மையார் கண் விழித்தார். தனது பிள்ளைகளோடு சில வார்த்தைகள் பேசினார்.
 
ICU அறையை விட்டு வெளியே வந்த பிள்ளைகள் தமது தாயார் இனித் தப்பிவிடுவார் எனப் பேசி மகிழ்ந்தனர்.
 
ஒரு சில நிமிடங்கள்தான கடந்திருக்கும். அவள் இறந்துவிட்டதாக பொறுப்பு மருத்துவர் தகவல் சொன்னார். ஆம்! அந்தத் தாய் தனது பிள்ளைகளின் உள்ளங்களைத் திருப்திப்படுத்திவிட்டு மரணத்தை அரவணைத்தார்.
 
மரணம் வரை தொடரும் அவரவர் தனித்துவங்கள்
 
தனது தாயாரிடம் ‘எனது மகனின் திருமணத்திற்கு தம்பி வரவில்லை’ என குற்றம் சாட்டினார் 40 வயதான திருமதி Dawn Barclay. “So shoot him!” என மரணப் படுக்கையில் இருந்த தாயார் சொன்னார். வழமையாகவே பகிடிகளை விடும் அவர், மரணப்படு;க்கையிலும் தனது நகைச்சுவை உணர்வைக் கைவிடவில்லை.
 
“என்னைத் தெரிகிறதா” என மற்றொருவரது உயிர் நண்பர் கேட்டார். மிகுந்த சிரமத்தோடு தனது தலையைத் திருப்பி அவரைப் பார்த்தபின் “இல்லை” என்றார் மரணப்படுக்கையில் கிடந்தவர்.
 
வினவியவர் முகம் சோகத்தில் தளர்ந்த போது. “நீ என்னோடு படிக்கவில்லைத்தானே” என்றதும் இவர் முகம் மலர்ந்தார். குறும்பாகப் பேசும் அவரது குணம் இறுதிவரை மாறவில்லை என்பதைப் புரிந்து கொண்டதாலேயே அவர் முகம் மலர்ந்தது.
 
“தாம் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே மரணத்தையும் தழுவுகிறார்கள். மென்மையானவர்கள் இறுதிக் கணங்களில் மேலும் மென்மையானவர்கள் ஆகிறார்கள். அவ்வாறே பகிடியும் கிண்டலும் உள்ளவர்களிலும் தொடரும். மற்றவர்களை அடக்க முற்படுபவர்கள் இறுதிவரை தமது திமிரை விடுவதில்லை” என்கிறார் 2000 ற்கு மேற்பட்ட மரணங்களுக்குச் சாட்சியாக நின்ற Maggie Callanan. இது இவரது பேசப்பட்ட நூலான Final Gifts இல் வருகிறது.
 
தரிசனங்களின் உள்ளர்த்தம்
 
இருந்தபோதும் மரணப்படுக்கையில் உள்ளவர்களது தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் பேச்சாலோ சைகை மொழியாலோ வெளிப்படுத்தும் சம்பவங்கள் அதிகம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் மரணிப்பவர்களில் 10 சதவிகிதமானவர்கள் மட்டுமே இறப்பதற்கு முன் சுய உணர்வோடு இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு
(50% to 67%)    மரணப்படுக்கைத் தரிசங்கள் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தகைய இறுதிக்கட்டத் தரிசனங்களின் அர்த்தம் என்ன? அவை மற்றொரு உலகம் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றனவா? மரணத்திற்குப் பின்னான மற்றொரு வாழ்வு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகின்றனவா?
 
என்னால் அப்படி எண்ண முடியவில்லை. அதற்கான தெளிவான விஞ்ஞான விளக்கங்களும் கிடைக்கவில்லை என்றே சொல்ல முடிகிறது. பரம்பரை பரம்பரையாகவும் கலாசார ரீதியாகவும் நாம் கட்டி எழுப்பியுள்ள நம்பிக்கைகளின் நீட்சி இத்தகைய தரிசனங்களாக இருக்கலாம்.
 
பார்த்திருப்பவர்களின்  உளநிலை மாற்றம்
 
நெருக்கமான ஒருவரின் மரணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதானது ஒருவரின் மன உணர்வுகளை உச்சநிலையைத் தீண்டிச் செல்கிறது. அச்சம் தரும் ஒரு நிகழ்வாகவே அதற்கு முன்னர் மரணத்தை பார்திராதவர் உணர்வார். மறுபரிசீலனை செய்யும் போது அது பயங்கரமானதாகவும் சோகத்தில் திளைக்க வைப்பதாக இருந்தாலும் சில நன்மைகளையும் தருவதைப் புரிந்து கொள்ள முடியும். தன்னலமற்ற அன்பு, வற்றாத பாசம், இயலாதவரைப் பராமரிப்பதில் கிட்டும் உள நிறைவு போன்றவை தன்னில் நிறைந்திருந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியும்.
 
பல சில்லறைப் பிரச்சனைகளால் கசந்தும் மறந்தும் போயிருந்த பல உறவுகள் மரணம் நிகழும் கணத்தில் மனதிற்கு நெருங்கியிருப்பார்கள். பழைய காயங்கள் ஆறியிருக்கும். உடன் பிறப்புகளுடனான நெருக்கம் அதிகரித்திருக்கும்.
 
இறுதிப் பராமரிப்பில் கைகொடுத்த வகையில் மருத்துவர்கள் மருத்து உதவியாளர்கள, ஒத்தாசை அளித்த ஏனையவர்கள் மீதான பற்றும் மரியாதையும் அதிகரித்திருக்கும்.
 
பொறுமை, ஒத்தாசை, அன்பு, கருணை போன்ற நற்குணங்களை வெளிப்படுத்த அந்தத் தருணம் வழிகோலும். எங்கள் ஆழ் மனதில் உறைந்திருந்த பண்புகள் பட்டை தீட்டப்பட்டு மாசுமறுவற்ற சூரியக் கதிர்களாக ஒளிரும்.
 
ஆம் மரணப்படுக்கையானது மரணிப்பவருக்கு மட்டுமின்றி அதைப் பார்திருப்பவர்களுக்கும் புதிய தரிசனங்களைத் தரவே செய்கிறது
 
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com