மரபியல் செப்பும் தொல்காப்பியம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

‘மரபு’, ‘மரபியல்’ என்பதற்கு ‘முறைமை, இயல்பு, பெருமை, நியாயம், வழிபாடு, நல்லொழுக்கம், வழக்கம், வாடிக்கை, பழக்கம், சட்ட மதிப்புடைய வழக்கம், செயல் வழக்காறு, அடிப்பட்ட வழக்காறு, கர்ண பரம்பரை, nவிவழி மரபுரை, வழிவழிச் செய்தி, வாய்மொழிக் கட்டளைமரபு, மரபுத் தொகுதி, மரபுரை வகுப்பு, தலைமுறைத் தத்துவம், ஐதிகம், பரம்பரை வழக்கங்கள், முன்னோர் சொல்வழக்கு, தொல்காப்பிய இலக்கணப் பகுதி ஆகிய சொற்பதங்களை அகராதி கருத்துரையாகக் கூறுவதைக் காண்கின்றோம்.

தமிழ் இலக்கியங்களில் காலத்தால் மூத்த தொல்காப்பியம் எனும் பெருநூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்துள்ளார். அதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களில் ஒருமித்து ஆயிரத்து அறுநூற்றிரண்டு (1,602) சூத்திரங்கள் உள்ளன. இனி, பொருளதிகாரத்தில் உயிரினம் சார்ந்த மரபியல் பற்றிக் கூறப்படுவதைச் சற்று விரிவுபடுத்திப் பார்ப்போம்.

1. இளமைப் பெயர்கள்

பார்ப்பும் (பறவைக் குஞ்சு), பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் என்னும் ஒன்பதும் இளமை குறிக்கும் சிறப்பினையுடைய மரபிலக்கணப் பெயர்களாகும். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்திற் காண்போம்.

‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பில்
பார்ப்பும் பறழுங் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று
ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே.’ ….. (545)

அவற்றுள், ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை’- (548) மேற்கூறிய ‘பார்ப்பு’, ‘பிள்ளை’ என்னும் இரண்டும் பறவையின் இளமைப் பெயர்களாகும். ‘தவழ்பவை தாமும் அவற்றோரன்ன’ – (549) என்ற சூத்திரத்தால், மேற்கூறிய ‘பார்ப்பு, பிள்ளை’ என்னும் இருவகை இளமைப்பெயர்கள் ஊர்வனவற்றிற்கும் பொருந்தும் என்கின்றார் தொல்காப்பியர். மூங்கா (கீரிப்பிள்ளை), வெருகு (காட்டுப்பூனை), எலி, அணில் என்ற நான்கின் இளமையை – ‘மூங்கா வெருகெலி மூவரி யணிலொ டாங்கவை நான்குங் குட்டிக் குரிய’- (550)- ‘குட்டி’ என்றும், ‘பறழெனப் படினும் உறழாண் டில்லை’- (551)- ‘பறழ்’ (ஆடு, கீரி. நாய், பாம்பு, பூனை, முயல், அணில், நரி, பன்றி, புலி, மான்)  என்றும் கூறலாமென்றும் சூத்திரம் அமைகின்றது.

நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகிய ஐந்தின் இளமைகளைக் ‘குருளை’ என்று கூறப்படும். ‘நாயே பன்றி புலிமுயல் நான்கும், ஆயுங் காலைக் குருளை யென்ப’ – (552), ‘நரியும் அற்றே நாடினர் கொளினே’ – (553).  இதிற் கூறப்பட்ட ஐவகை உயிர்க்கும் ‘குட்டி’, ‘பறழ்’ என்பனவும் வழங்கும் எனத் (‘குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்’–554) தொல்காப்பியம் கூறும். மேலும், ‘பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை, கொள்ளுங் காலை நாயலங் கடையே’ –(555) என்ற சூத்திரத்தில், நாய் தவிர்ந்த மற்றைய பன்றி, புலி, முயல், நரி ஆகியவற்றின் இளமைகளைப் ‘பிள்ளை’ என்று கூறலாமென்கிறது.

‘ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும், ஓடும் புல்வாய் உளப்பட மறியே’- (556) என்ற சூத்திரம் ஆடு, குதிரை, நவ்வி (புள்ளிமான்), உழை (மான், பசு), புல்வாய் (கலைமான்) என்னும் ஐந்தின் இளமையும் ‘மறி’ என்னும் பெயர் பெறும் என்கின்றது. கிளைகளிலே வாழும் குரங்கின் இளமையையும் ‘குட்டி’ என்று கூறுவர் – ‘கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப.’–(557). மேற் சூத்திரத்திற்; கூறிய ‘குட்டி’ என்னும் பெயருடன், ‘மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்’ எனப்பட்ட நான்கும், குட்டியென்னும் பெயரைப்போல, அக்குரங்கின் இளமைக்கு உரியனவாம்.- ‘மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும், அவையும் அன்ன அப்பா லான’- (558).

யானை, குதிரை, கழுதை, கடமை (காட்டுப்பசு), மான், எருமை, மரை, கராம் (கரடி), கவரி (கவரிமான்), ஒட்டகம் ஆகிய பத்தின் இளமைகளும் ‘கன்று’ என்னும் பெயரைப் பெறும்.-
‘யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானோ டைந்தும் கன்றெனற் குரிய.’ – (559)
‘எருமையும் மரையும் வரையா ராண்டே.’ –(560)
‘கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே.’ – (561)
‘ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்.’ – (562)

யானை, பசு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு (குரங்கினம்), ஊகம் (கருங்குரங்கு) ஆகிய எட்டின் இளமைகள் ‘குழவி’ எனும் பெயர்க்கு உரியனவாம்.

‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.’ – (563)
‘ஆவும் எருமையும் அதுசொலப் படுமே.’ – (564)
‘கடமையு மரையு முதனிலை யொன்றும்.’ – (565)
‘குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய.’ – (566)

‘குழவி’, ‘மகவு’ என்று கூறப்பட்ட இரண்டு இளமைப் பெயரும் அல்லாத ஏனையவை மக்களுக்கு உரியனவல்ல என்று சூத்திரம் அமைகின்றது.

‘குழவியு மகவு மாயிரண் டல்லவை
கிழவ வல்ல மக்கட் கண்ணே.’ – (567)

பிள்ளை, குழவி, கன்று, போத்து என்ற நான்கும் ஓரறிவுயிரின் இளமைப் பெயர்களாகவும் வரலாம்.

‘பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே.’ – (568)

2. உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும்

ஓரறிவு உயிரை உடம்பினாலே அறிவது, ஈரறிவு உயிரை உடம்பினாYk;> வாயினாலும் அறிவது, மூவறிவு உயிரை உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும் அறிவது, நாலறிவு உயிரை உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது, ஐயறிவு உயிரை உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது, ஆறறிவு உயிரை உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது என்று சூத்திரம் அமைத்தமையால் உயிர்கள் ஆறு வகையாயின.  

‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.’ – (571)

ஓரறிவு உயிர்கள்:-  ‘புல்’, ‘மரம்’ ஆகியவை ஓரறிவை உடையனவாம். இன்னும் கொட்டி, தாமரை முதலியனவும் ஒரறிவை உடையனவாம்.

‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (572)

ஈரறிவு உயிர்கள்:- நந்தும், முரளும் ஈரறிவுடையன. இன்னும், ‘நந்து’ என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும், ‘முரள்’ என்றதனால் சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பனவும், ஈரறிவு உடையனவாகக் கருதப்படும்.

‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (573)

மூவறிவு உயிர்கள்:- சிதலும், எறும்பும் மூவறிவு உடையன. இவற்றுடன் அட்டை முதலியனவும் மூவறிவுடையனவாகும்.

‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (574)

நாலறிவு உயிர்கள்:- நண்டு, தும்பி, ஞிமிறு (தேனீ), சுரும்பு (வண்டு) போன்றவை நாலறிவினையுடையன என்று சூத்திரம் அமைகின்றது.

‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ – (575)

ஐயறிவு உயிர்கள்:- நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை முதலியன ஐவகை அறிவினை உடையன.

‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்களைப் பிறப்பே.’ – (576)

ஆறறிவு உயிர்கள்:- மக்கள், தேவர், அசுரர், இயக்கர் முதலானோர் ஆறறிவு உடையோர் என்று சூத்திரம் கூறும்.

‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பறப்பே.’ – (577)

ஆறறிவு, ஒரு முடிபு:- கிளி, குரங்கு, யானை ஆகியவைக்கு ஆறறிவு உடையன என்று சூத்திரம் அமைகின்றது.

‘ஒருசார் விலங்கும் உளவென மொழிப.’ – (578)

3. ஆண்பாற் பெயர்கள்

ஏறு, ஏற்றை (ஆண் விலங்கு), ஒருத்தல், களிறு, சே (காளை), சேவல், இரலை (கலைமான்), கலை, மோத்தை, தகர், உதள் (ஆட்டுக்கடா), அப்பர், போத்து, கண்டி (மந்தை), கடுவன் என்னும் பதினைந்தும், பிறவும், ஆண்பாற் பெயர் என்று கூறுவர்.

‘எருதும் ஏற்றையும் ஒருத்தலுங் களிறும்
சேவுஞ் சேவலும் இரலையுங் கலையும்
மோத்தையுந் தகரு முதளு மப்பரும்
போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப. – (546)

ஆண் யானையையும், ஆண் பன்றியையும் களிறு என்று சிறப்பித்Jக் கூறலாம்

‘வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்.’ – (579)
‘கேழற் கண்ணும்; கடிவரை யின்றே.’ – (580)

புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை போன்றவற்றின் ஆணினை ‘ஒருத்தல்’ என்னும் பெயரைப் பெறுவனவாம்.

‘புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும்.’ – (581)
‘வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன.’ – (582)
‘ஏற்புடைத்  தென்ப எருமைக் கண்ணும்.’ – (583)

பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம் (எருது), சுறா ஆகியவற்றின் ஆணினை ‘ஏறு’ என்று கூறுதற்குரியதாகும்.

‘பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறெனற் குரிய.’ – (584)
‘எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.’ – (585)
‘கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே’ – (586)

பெற்றம், எருமை, புலி, மரை, மான், நீர்வாழ் முதலை, மயில், எழால் (பறவை) போன்றவற்றின் ஆணினைப் ‘போத்து’ என்னும் பெயரினைப் பெறுவதற்கு உரியன.

‘பெற்றம் எருமை புலிமரை புல்வாய்
மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே.’ – (587)
‘நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய.’ – (588)
‘மயிலும் எழாஅலும்  பயிலத் தோன்றும்.’ – (589)

‘இரலை’ என்னும் பெயரும், ‘கலை’ என்னும் பெயரும், மானின் ஆண்பாற்கு உரியனவாம். ‘கலை’ என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரியதாம். ‘மோத்தை’, ‘தகர்’, ‘உதள்’, ‘அப்பர்’ எனும் பெயர்கள் ஆட்டின் ஆண்பாலுக்கும் உரியனவாம் என்று சூத்திரம் அமைகின்றது.

‘இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய.’ – (590)
‘கலையென் காட்சி உழகை;கும் உரித்தே
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்.’ – (591)
‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே.’      – (592)

அழகிய தோகையுடைய மயில் அல்லாத பிற பறவைகளின் ஆண்பெயர் ‘சேவல்’ எனக் கூறப்படும். ஆற்றல் பொருந்திய ஆண்பால்களுக்கு எல்லாம் ‘ஏற்றை’ என்ற சொல் உரியதாகும். ஆண்பால் உயிர் யாவும் ‘ஆண்’ எனும் பெயர் பெறும். பெண்பால் உயிர் எல்லாம் ‘பெண்’ எனும் உயிர் பெறும்.

‘சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே.’     – (593)
‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம்
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப.    – (594)
‘ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய
பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய
காண்ப வவையவை அப்பா லான.’      – (595)

4. பெண்பாற் பெயர்கள்

பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்னும் பதின் மூன்றும் (13) பெண்பாற் பெயராகும். என்று கூறுவர்.


‘பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகுங் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே.’ – (547)

‘பிடி’ என்னும் பெயா,; பெண் யானையைக் குறிக்கும். ஒட்டகம், குதிரை, கழுதை, மரை ஆகிய நான்கின் பெண்ணும், ;பெட்டை’ என்னும் பெயரைப் பெறும். பெட்டை எனும் பெயர் புட்களின் பெண்பால்களுக்கு உரியனவாம். ‘பேடை’, ‘பெடை’ என்னும் சொற்கள், பெரும்பாலும் பறவைக்கே உரியனவாம்.. ‘கோழி, கூகை, மயில்’ ஆகியவற்றின் பெண்பால்களை ‘அளகு’ என்று கூறுவர்.

‘பிடியென் பெண்பெயர் யானை மேற்றே’ – (596)
‘ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய’ – (597)
‘புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப’ – (598)
‘பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்’ – (599)
‘கோழி கூகை யாயிரண் டல்லவை
சூழுங் காலை அளகெனல் அமையா’ – (600)
‘அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே’ – (601)

புல்வாய், நவ்வி, உழை, கவரி ஆகிய நான்கின் பெண்ணும் ‘பிணை’   என்னும் பெயர் பெறும். பன்றி, புல்வாய், நாய் ஆகிய மூன்றின் பெண்பாலும் ‘பிணவு’ என்றும், ‘பிணவல்’  என்றும் பெயர் பெறும். 

‘புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே.’ – (602)
‘பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை.’ – (603)
‘பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.’ – (604)

‘பெண்’, ‘பிணவு’ என்ற பெயர்கள் மக்களின் பெண்பாலாற்கு உரியனவாம். எருமை, மரை, பெற்றம், நீர்வாழ் நந்து ஆகியவை ‘நாகு’ என்னும் பெண்பாற் பெயர் பெறும்.

‘பெண்ணும் பிணவும் மக்கட் குரிய.’ – (606)
‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே.’ – (607)
‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே.’ – (608)

‘மூடு’, ‘கடமை’ என்னும்  பெயர்கள்  பெண் ஆட்டிற்குரியனவாம்.  பன்றி, நாய், நரி ஆகியவற்றின் பெண் விலங்குகளை ‘பாட்டி’ என்ற பெயரைப் பெறும். குரங்கு, முசு, ஊகம் என்பவற்றின் பெண்ணை ‘மந்தி’ என்றழைப்பர்.

‘மூடுங் கடமையும் யாடல பெறாஅ.’ – (609)
‘பாட்டி என்பது பன்றியும் நாயும்.’ – (610)
‘நரியும் அற்றே நாடினர் கொளினே.’ – (611)
‘குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி.’ –(612)

5. மருவிய சில வழக்குகள்

குரங்கின் ஆணைக் ‘கடுவன்’ எனவும், மரத்தில் வாழும் கூகையைக் ‘கோட்டான்’ என்றும், சிவந்த வாயினையுடைய கிளியைத் ‘தத்தை’ எனவும், ntவ;விய வாயினையடைய பூனையைப் ‘பூசை’ எனவும், ஆண் குதிரையைச் ‘சேவல்’ என்றும், கருநிறப் பன்றியை ‘ஏனம்’ எனவும், ஆண் எருமையைக் ‘கண்டி’ எனவும், முடிவாகக் கூறப்பட்ட உலகவழக்குச் சொற்கள் இருப்பதினால், கடமையை உணர்ந்தோர் இவைகளையும் விலக்கார் என்றவாறு.

‘குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும்
nவt;வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமை ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த வழக்கின் உண்மையில்
கடிய லாகா கடனறிந் தோர்க்கே.’ – (613)

முடிவாக

இதுகாறும், மரபியல் தொடர்பான இளமைப் பெயர்கள், உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள், மருவிய சில வழக்குகள் ஆகியவை பற்றித் தொல்காப்பியர் வகுத்துத் தொகுத்துத் தந்த அரும் பெரும் செய்திகளைப் பார்த்தோம்.  

தொல்காப்பியர், உலகின் கண்ணே உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், மூவறிவு உயிர்கள், நாலறிவு உயிர்கள், ஐயறிவு உயிர்கள், ஆறறிவு உயிர்கள் என்று வகுத்து, அததற்கேற்ற உயிரினங்களையும் தொகுத்துக் காட்டியுள்ளார். இன்னும், இவ்வுயிரினங்களின் பொதுவான இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள் ஆகியனவற்றையும் தனித்தனியே வகுத்துத் தொகுத்தும் காட்டியுள்ளமை ஓர் அரிய செயலாகும். இவை அனைத்தும் மக்கள் மத்தியில் மயக்கமின்றி ஒரே சீராகச் செயற்பட உதவி நிற்கின்றன.

இரண்டாயிரத்து எழுநூறு (2700) ஆண்டின்முன் தோன்றிய தொல்காப்பிய விதிகள், மரபுகள் இன்றும் தமிழன் மத்தியில் நிலவி நின்று அவர்கள் வாழ்வியலை மேம்படுத்தும் சிறப்பு வியத்தற்குரியதாகும். எனவே நாமும் தொல்காப்பியரை ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றுவோம்.

wijey@talktalk.net