மறைந்த நண்பர் அ. ந. க.

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிஎழுத்தாளர் செ.கணேசலிங்கன்எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமி மறைந்து இன்றுடன் ஐம்பத்தொரு வருடங்களாகிவிட்டன. இன்றும் தமிழ் இலக்கிய உலகு அவரை மறந்து விடவில்லை. அவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் , நாவல் , மொழிபெயர்ப்பு ஆகியவை இணையத்தில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதானுள்ளன. இதுவரையில் அவரது படைப்புகளில் ‘மதமாற்றம்’ (நாடகம்), ‘வெற்றியின்  இரகசியங்கள்’ (உளவியல் நூல்) ஆகியவையே நூலுருப்பெற்றுள்ளன. ஏனைய படைப்புகளும் விரைவில் நூலுருப்பெறுமென எதிர்பார்ப்போம்.

1967 ஆம் ஆண்டினை அ.ந.க.வின் ஆண்டு என்று காவலூர் ராஜதுரை அ.ந.க பற்றி கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாண்டில்தான் அவரது ‘மனக்கண்’ தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பினைப்பெற்றது. அவரது ‘மதமாற்றம்’ நாடகம் கொழும்பில் லடீஸ் வீரமணி இயக்கத்தில் நான்கு தடவைகள் மேடையேறிப் பெரும் வரவேற்பைபெற்றது. இவ்விதம் அவ்வாண்டில் எழுத்துலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தவர் பெப்ருவரி 14, 1968  அன்று , தனது நாற்பத்து நான்காவது வயதில் அவரைத்தாக்கியிருந்த நோய்களின் தாக்கத்தால் மரணித்தது துயரகரமானது.

அ.ந.க.வின் இறுதிக்காலத்தை அவரது நண்பர்களிலொருவராக விளங்கிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவரது குமரன் சஞ்சிகையில் எழுதிய ‘மறைந்த நண்பர் அ. ந. க.’ என்னும் கட்டுரையில் நினைவு கூர்ந்திருந்தார். கொழும்பு ஆஸ்பத்திரியில் நோயின் தீவிரம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அ.ந.க.வைப்பற்றி அங்கிருந்தவர்கள் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவருக்குப் போதிய கவனிப்புகள் கிடைக்கவில்லை. இதனைக்கண்டு மனம் நொந்த செ.க உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவரைக் கவனிக்க ஏற்பாடுகள் செய்தார். அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக விளங்கிய அ.ந.க.வின் கலையுலக நண்பர்களான எழுத்தாளர் ஏ.இக்பால், லடீஸ் வீரமணி தம்பதியினர் செய்த அரிய உதவிகளையெல்லாம் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார் செ.க.

அ.ந.க இளமையிலேயே தன் உறவுகளை விட்டுப்பிரிந்து தனித்துத் தன் வாழ்வினைக் கொண்டு நடாத்தியவர், தொழிலாளர் போராட்டங்கள், இலக்கியமென்று , ஊடகத்துறைப்பங்களிப்பு எனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த அவருக்கு இறுதிவரை உறுதுணையாக நின்றவர்கள் அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களே. இவ்விதமான நண்பர்களைப்பெற்ற அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் இறுதிக்காலத்தில் அ.ந.க.வைப்பராமரித்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன், லடீஸ் வீரமணி தம்பதியினர், கவிஞர் ஏ.இக்பால் போன்றவர்களைத் தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இக்கட்டுரையின் இறுதியில் செ.க. “நண்பர் தமது திறமை பற்றி கடைசி நாட்களில் கற்பனை செய்ததுபோல இலக்கிய வரலாற்றில் அவர் மதிப்புப் பெறாதுபோக நேரினும் நாடகத்துறையில் இந் நாடகம் அவருக்கு ஒர் அழியாச் சின்னமாக நிலைத்து நிற்கும் என்று துணிபாசுக் கூறுவேன்.” என்று கூறுவார். ஆனால் அ.ந.க.வின் படைப்புகள் அனைத்துமே அழியாச்சின்னங்களாக நிலைத்து நிற்பதைக் காலம் இதுவரையில் நிரூபித்திருக்கின்றது. இனியும் நிரூபிக்கும் என்று துணிந்து கூறுவேன். வ.ந.கி, ஆசிரியர், பதிவுகள் –


குமரன் பெப்ருவரி 15, 1974
மறைந்த நண்பர் அ. ந. க. (1)

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிநண்பர் அ. ந. கந்தசாமி மறைந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. பல நண்பர்கள்போல இன்று அவரை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன், இறந்த உடனே ஏற்பட்ட சோக உணர்வுகள் இன்று குறைந்துவிட்டன. ஆயினும் கடைசி நாட்கள் இன்னும் நினைவிலே துள்ப அலைகளை எழுப்பிக்கொண்டேயிருக்கின்றன.

கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அடிக்கடி சென்று பார்த்து தேவைகளை கவனித்து வந்தேன். அவரது நோய் தீராத நோயாகும். அதை நண்பரே அறிந்திருந்தார். அவரது நோய் பற்றிய விபரங்களை எந்த டாக்டரிலும் பார்க்க அவரே நன்கு அறிந்திருந்தார். மருந்துகளைத் தேடிப் பெற்று உடலைக் காப் பாற்றி வந்தார். தோல் நோய்க்காக உண்ணும் மருந்து அவரது எலும்புகளையே பாதித்துவிட்டது. நீரிழிவு நோய் வேறு. குடும்பமே யில்லை. தனி மனிதனுக கும்பனித்தெருவிலுள்ள ஒரு சிறு ஒட்டலிலுள்ள அறையில் வாழ்ந்து வந்தார். நோய்க்கேற்ற பிரத்தியேக உணவு கிடையாது. அவர் பெற்ற பென்ஷன் பணம் அவரது மருந்து களுக்கே அளவாயிருந்தது. எழுத்துமூலம் சிறு வருவாய் இடையிடை வந்துகொண்டிருந்தது.

தமக்குக் கிடைத்த வருவாயை மிகவும் சிக்கனமாகவே செலவு செய்துவந்தார். தன் பணக்கஷ்டங்கள் பற்றி ஒருசில நெருங்கிய நண்பர் தவிர வேறு எவருக்கும் கூறியிருக்கமாட்டார் என்றே நம்புகிறேன். என்னிடம் ஒருதடவை உதவி கேட்டபோது மிகவும் தயக்கத் துடனே, தவிர்க்கமுடியாத நிலையிலேயே கேட்டார். அவ்வேளைதான் என்னாலும் அவரது நிலைமையை அறிய முடிந்தது. மிகவும் வருத்தமடைந்தேன். அவர் கேட்டதை உதவினேன். அதேவேளை எவ்வேளையும் தேவையேற்படும்போது தயங்காது கேட்கும்படியும் சொல்லியிருந்தேன். மிகவும் நாணயமான முறையிலேயே என் வேண்டுகோளையும் அவர் பயன்படுத்தினார் என்றே கூறுவேன்.

ஆசுபத்திரியில் கட்டிலிலிருந்து இறக்கி விட்டுவிட்டனர் என்ற செய்தி ஒன்று காலையில் நாள் அலுவலகம் சென்றதும் டெலிபோனில் அறிந்தேன். உடனே என்னோடு பணியாற்றிய சிங்கள நண்பர், ஆஸ்பத்திரியில் செல்வாக்குப் பெற்றவரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். வாட்டின் ஒரமாக இருந்த ஒரு வாங்கில் தன் சிறு உடைமைகளை தலையணைபாக வைத்து அரை உயிரில், சவநிலையில், குடங்கியபடி கிடந்தார். என் நெஞ்சு ஒரு தடவை அதிர்ந்ததையும் அச்சோகமயமான காட்சியையும் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. என்றும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். என் சிங்கள நண்பரிடம் அவரின் சிறப்புகள் பற்றிக் கூற முனைந்தபோது என் நெஞ்சு அடைத்து கண்ணிரே வந்து விட்டது. சிங்கள நணபர் உடனே உரியவர்களிடம் சொல்லி கட்டிலுக்கு ஏற்பாடு செய்தார். நண்பரை தட்டி எழுப்பினேன். குரல் ஒலியெல்லாம் குறைந்துவிட்டது. நான் செய்த ஏற்பாடுகள் பற்றி சொல்லி ஆறுதல் கூறினேன். அலுவலகம் , திரும்பியதும் பெரியாஸ்பத்திரியில் செல்வாக்குள்ள நண்பர்களிடமெல்லாம் டெலிபோனில் சொன்னேன். முக்கியமாக திரு மு: கணபதிப்பிள்ளை அவர்கள் சுகாதார அமைச்சின் செயலாளர், ஆஸ்பத்திரி அதிபர் ஆகியவர் மூலம் அ. ந. க. வை தக்க படி கவனிக்க ஏற்பாடு செய்தார். ஆஸ்பத்திரி அதிபர் அன்று மாலையே சென்று நண்பரை பார்வையிட்டதாகப் பின் அறிந்தேன். எப்படியிருப்பினும் ஆஸ்பத்திரியில் அவர் ஒரு சாதாரண நோயாளியே உணவு, பதார்த்த வகைகள் நண்பருக்குப் பிடித்தபடி அங்கு எதிர்பார்ச்ச முடியாது; எங்கள் வீட்டிலிருந்து இடையிடை அனுப்பிளேன். ஆயினும் உணவு வகையிலும் அவரை நாள்தோறும் பார்த்து தேவைகளைக் கவனித்ததிலும் நன்கு உதவியவர்கள் அவரது நீண்டநாள் நண்பர்களான இருவர், ஒருவர் இக்பால், மற்றவர் லடீஸ் வீரமணி.

லடிஸ் விரமணியும் அவரது மனைவியாரும் செய்த பணிகளை என் நெஞ்சம் என்றும் மறந்து விடமுடியாது. நோயுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் அ. ந. க. போன்ற  ஒருவருக்கு நண்பரும் மனைவியும் பதார்த்த உணவு ஊட்டுவதில் காட்டிய மனிதாபிமானத்தை நானே’ பார்த்து வியந்தேன். எந்த உடன் பிறந்த சகோதரரோ, கட்டிய மனைவியோ கூட இத்தகைய ஆர்வத்தோடு பணிவிடை செய்திருக்க முடியாது என்றே கூறுவேன்! சூப், கஞ்சி போன்ற திராவக உணவை அவரை நிமிர்த்தி இருத்தி வாயில் சிறிது சிறிதாக ஊட்டினர். அவ்வுதவியின் முன் நான் செய்த பண உதவிகளெல்லாம் சிறுமை பெற்றன. ஏனெனில் நண்பரின் உடல் நிலை சாதாரண நோயாளி போன்றதல்ல. நோய் தீவிரமடைய அவரது தோல் நோய் அவரது உருவத்தையே அசிங்க மாக்கிவிட்டது. அந்நோயின் தன்மையை அறிந்த எவரும் அண்மையில் நெருங்கி அவரைத் தீண்டமாட்டார்கள், நானே என் வீட்டுக் குழந்தைகளை நினைத்து தூக்க, நிமிர்த்த தயங்குவதுண்டு. அவரது நெருங்கிய சில நண்பர்களே இந்த நோய்க்கு அஞ்சியே அவரைப் பார்க்க ஆசுபத்திரிக்கு வராது விட்டதையே நான் அறிவேன். (இதை உணர்ந்தோ, உணராமலோ நண்பர் அவர்கள் தன்னை வந்து பார்க்காததற்காக கவலைப்பட்டார்) இத்தகைய நிலையில் லடீஸ் வீரமணி, அவரது மனைவியாரின் தொண்டுகள் மறக்கவே முடியாது. இத்தகைய நல்ல நண்பர்களைப் பெற்றதும் அவரது பாக்கியமேயாகும்.

நான் மூன்றுவார விடுமுறையில் தமிழ்நாடு செல்ல வேண்டி நேரிட்டது. நண்பர் இக்பால், காவலூர் இராசதுரை ஆகியவர்களிடம் அவரைப்பற்றிக் கவனிக்கும்படியும் எதிர்பாராத நிகழ்வு ஏற்படின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கூறிவிட்டுச் சென்றேன். நண்பர் வாய்விட்டுக் கேட்காத போதும் அவர் என் உதவியை நம்பி யிருந்தார். அந்த நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற நினைவு என் மனதில் என்றும் நிலைத்திருந்தது.

சென்னையிலிருந்து திரும்பியபோதும் அவர் உடல் நிலையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஆஸ்பத்திரியிலேயே ஏற்றமும் தாழ்ச்சியுமாக அவரது உடல்நிலை நீடித்தது. வேறு வாட்டிற்கு மாற்றப்பட்டிருந்தார். சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. மரண பயம் அவரை ஆட்கொண்டது. மீண்டும் வெளியேறி வருவேன் என்ற தெம்பு குறைந்துவிட்டது. அர்த்தமற்ற கதைகள், ! புலம்பல்கள் மன நிலையை புலப்படுத்தின. ۔

மாலையில் பாரித்தபோது உணர்வற்ற நிலையிலேயே கிடந்தார். நண்பகல் அல்லது மாலையில்தான் நான் வழமையாக அவரைப் பார்க்கச் செல்வதுண்டு. ஆனால் அன்று அதிகாலை எட்டரை மணிக்கே என்றுமில்லாதபடி ஆசுபத்திரிக்கு அவரைப்பார்க்கச் சென்றேன். வாட்டில் அவரது கட்டில் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை. நர்சிடம் ஆவலோடு கேட்டேன். அவள் அழைத்துச் சென்று ஒதுக்குப் புறமாக திரையில் மறைக்கப்பட்டிருந்த நண்பரின் உடலைக் காட்டினுள். மரணத்தின் தனிமையும் சோகமும் பயமும் என்னை ஒரு கணம் ஆட்கொண்டது. நெஞ்சு விறைத்துவிட்டது. கண்ணிரே வரவில்லை.

குமரன் பெப்ருவரி 15, 1974


குமரன்  மார்ச் 15, 1974
மறைந்த நண்பர் அ. ந. க. (2)

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிநண்பர் அ. ந. க. வின் சடலத்தை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிறிது நேரத்திற்குமேல் தனிமையில் என்னால் பார்க்கவே முடியவில்லை. வாட்டிலிருந்து சவ அறைக்கு எடுத்துச் சென்ற பின்னரே நாம் வெளியே எடுத்துச் செல்லமுடியும் என்பதை அறிந்தேன். அதற்கு மேலும் ஒரிருமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் உடனே அலுவலகத்திற்கு ஓடிவந்து டெலிபோனே எடுத்து நண்பர்கள் அனைவருக்கும் அறிவித்தேன். காவலூர் ராசதுரை, இக்பால், சில்லையூர் செல்வராசன் ஆகிய நண்பர்கள் தினகரன் அலுவலகத்தில் உடன் சந்திப்பதாகத் தெரிவித்தனர். அரைமணி நேரத்தில் அங்கு கூடி மரணச்சடங்கை பொறுப் பேற்று நடாத்துவது பற்றி முடிவு செய்தோம். நண்பர் சிவகுருநாதனும் எம்முடன் இருந்தார். பொரளையிலுள்ள ரேமென்ட்ஸ் மரணச் சடங்கு அலுவலகத்திலுள்ள காட்சியறையில் பார்வைக்கு வைத்து மறுநாள் தகனம் செய்வதாக முடிவு செய்தோம். பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்துவிட்டு, தந்தி அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிவிட்டு பெரியாஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கு செய்தி எட்டிய நண்பர்கள் வரத் தொடங்கிவிட்டனர். சில உறவினர்களும் வந்தனர். ஆயினும் மரணச்சடங்கு பற்றிய முழுப் பொறுப்பும் எழுத்தாள நண்பர்களின் பொறுப்பிலேயே நடந்தது. நண்பர் பிரேம்ஜியும் எம்முடன் சேர்ந்து ரேமன்ஸ் ஏற்பாடுகளைக் கவனித்தார். இத்தனைக்கும் அ. ந. க.வுக்கும் எனக்கும் ஏற்பட்டிருந்த நேரடி உறவும் பழக்கமும் மிகக் குறுகிய காலத்ததேயாகும். ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஆர்வம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அ. ந. கந்தசாமி என்ற பெயரை அறிந்திருந்தேன். ஆயினும் நேரிற்கண்டு பழகியது குறைவு. 1961இன் பின் முற்போக்கெழுத்தாளர் சங்கத்து நடவடிக்கைகளில் அ. ந. க.வும் ஈடுபட்டிருந்தபோதும் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்படவில்லை. அரசாங்க செய்திப் பகுதியில் கடமையாற்றிய காலத்தில் அவர் இலக்கிய உலகில் அதிகம் ஈடுபட்டதில்லை என்றே கூறவேண்டும்.

அரசாங்க செய்திப் பகுதியிலிருந்து ஓய்வுபெற்றதும் தமது பென்ஷன் பெறுவதை துரிதப்படுத்துவதற்காக திறைசேரிக்கு வந்திருந்தார். அதையொட்டி அவரை அடிக்கடி காணநேரிட்டது. அவரோடு நெருங்கிப் பழகவேண்டியும் ஏற்பட்டது. ஓய்வுபெற்ற காலத்தில் மீண்டும் எழுத ஆரம்பித்தார். தினகரனில் தொடர்ந்து எழுதிஞர். தினகரன் ஞாயிறு இதழில் ‘மனக் கண்’ என்ற அவரது நாவல் தொடர்ந்து வெளிவந்த காலம், சுதந்திரனில் அவர் ஆசிரியராக இருந்து எழுதிய காலத்தின் பின் ஏற்பட்ட ஓர் உச்சக்கட்டமான காலமாகும். நண்பர்களிடமெல்லாம் தனது நாவலின் சிறப்பு பற்றிக் கேட்டு அறிவதில் பெருமகிழ்வு அடைந்தார். நாவல் எழுதுவதில் கவனிக்க வேண்டிய நவரச உத்திகள் பற்றியெல்லாம் படித்தும், படித்த நாவல்களை ஆராய்ந்து உணர்ந்தும் அறிந்திருந்தார். உதாரணமாக சோகரசமான கதைகளே மக்கள் மனதில் நீண்டு நிலைத்திருக்கும் என்பதைப் பல கதைகளை உதாரணமாகக் கூறி நிரூபிப்பார். அவர் முடிபாகக் கொண்ட கருத்துகளை வாதிட்டு வெற்றிபெற முடியாது. அவர் காலம், நேரம், இடம் அனைத்தையும் மறந்து வாதிடுவார். அவ்வேளை உணர்ச்சிவசப்பட்டு தன்னையே மறந்துவிடுவார். கலை, இலக்கியத் துறைகளிலுள்ள உருவங்கள் அனைத்தினையும், தன் கருத்துக்களைக் கூறப் பயன்படுத்தினார். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிளெல்லாம் தமது வல்லமையை வெளிப்படுத்தினார். எந்த விஷயம் பற்றி எழுதவேண்டுமாயினும் அதைப்பற்றிக் கிடைக்கக் கூடிய நூல்களையெல்லாம் உடனே தேடிப் படித்துவிடுவார். இலங்கை வானெலியிலும் அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர். அவரை ஒரு வானெவிக் கலைஞர் என்றுகூடக் கூறுவதில் தவறில்லை. இலங்கை வானெலி தமிழ்ப் பகுதியில் அவரை அனைவரும் நன்கு அறிந்து பழகியிருந்தனர். அதுவுமன்றி ஈழத்தின் பிரபலமான ஆக்க கலை, இலக்கிய கர்த்தாவாக விளங்கிய அ. ந. க. வின் மறைவு பற்றிய செய்தியை இலங்கை , வானெலி செய்தி அறிக்கைமூலமும் அறிவிக்கப்படவேண்டும் என விரும்பினேன்.

இலங்கை வானெலி தமிழ்ப் பகுதியை டெலிபோனில் எடுத்து முக்கிய அதிகாரி ஒருவரிடம் மரணச்செய்தியைத் தெரிவித்து செய்தி அறிக்கைமூலம் அறிவிக்க ஆவன செப்பும்படியும் வேண்டினேன். அந்த நண்பர் இதற்காக உதவ முன்வரவில்லை. அது வேறு பகுதியினரின் கடமை, “நான் அப்பகுதியில் தெரிவிக்கிறேன்” என்று சாதாரணமாகக் கூறிஞர். நாள் உணர்ச்சி வசப்பட்டிருந்த அவ்வேளை அவர் கூறிய தொனி எனக்கு மிகவும் வேதனையாகவும் இருந்தது. அவர் கவனிப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை. செய்தியில் அறிவிக்கச் செய்வது மிகவும் சிக்கலான விஷயமாயிருக்கலாம் என்று கூறி என் மனதைச் சாந்தப்படுத்திக்கொண்டேன். அதைத் தொடர்ந்து சோர்வுடன் பாராளுமன்றத்தில் பணியாற் றிய அ. ந. க.வின் நண்பர்களுக்கு செய்தி தெரிவிக்கச் சென்றேன். அங்கு நண்பர் சுந்தரலிங்கத்தைக் கண்டு மரணச்செய்தியைச் சொன்னதும் இலங்கை வாஞெலி பற்றிய நினைவு வந்தது, சுந்தர் வெளியே கடமையாற்றியபோதும் இலங்கை வானொலியுடன் நெருங்கிய தொடர்புள்ளவராக இருந்ததை அறிவேன். வானெவிச்செய்தி அறிக்கையில் தெரிவிப்பது பற்றிக் கூறியதும் “இதுவா, இப்பொழுதே செய்கிறேனே” என்று மிகவும் சாதாரணமாகக் கூறிவிட்டு டெலிபோனை எடுத்தார். செய்திப் பகுதியில் இருந்தவர், நீர் கூறும் விபரத்தை அப்படியே வாசிக்கச் செய்கிறோம்” என்று கூறி அவரது ஸ்ரெனேவிடம் போட்டுவிட்டார். நண்பர் சுந்தர் அ. ந. க. பற்றிய விபரம் யாவையும் கூறிஞர். மாலை, இரவு வானொலிச் செய்தியில் அப்படியே முழுமையாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் தமிழ்ப் பத்திரிகைகளிலெல்லாம் முதற் பக்கத்திலேயே படங்களோடு செய்திகள் வெளிவந்தன. ரேமென்ஸ் கூடத்தில் காலையிலிருந்தே முக்கிய நண்பர்கள் நின்று யாவையும் கவனித்தோம். ஒய்வானபோது நண்பரது சிறப்புகள், “குறைபாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டோம். அவ்வேளைதான் நண்பரது ஆரம்பகால எழுத்துவாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றியெல்லாம் என்னால் ஒரளவு அறியமுடிந்தது. நண்பர் சில்லையூர் செல்வராசனே அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருந்தார். நாவல்களில் வரும் கலைஞரின் வாழ்க்கைபோல அ. த. க.வின் வாழ்க்கையும் அமைந்திருந்ததுபோல் தோன்றியது. அவரது வாழ்வின் ஏற்றங்களும் வீழ்ச்சிகளும் வருத்தத்தையே தந்தன. “என்ன சீமானாக ஒரு காலத்தில் வாழ்ந்த நண்பர் இப்போது இப்படியாக கடைசிக் காலத்தைக் கழிக்க நேரிட்டது” என்று ஒருதடவை நண்பர் செல்வராசன் கூறியது இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

குமரன் மார்ச் 15, 1974


குமரன் ஏப்ரில் 15, 1974
மறைந்த நண்பர் அ. ந. க. (3)

எழுத்தாளர் அ.ந.கந்தசாமிகனத்தை மயானத்தில் நடைபெற்ற அ.ந.க.வின் தகனக் கிரிகைக்கு எழுத்தாளர்கள். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகளாகவும் பலர் வந்திருந்தனர். நீண்ட அமைதியான ஊர்வலத்தின் பின் தகனக்கிரிகை நடைபெற்றது. அவர் ஒரு தனிமனிதராக வாழ்ந்து மடியவில்வே, பொது மனிதராக வாழ்ந்து மறைந்தார் என்பதை அவரது மரணமும் நிரூபித்தது.

அவர் மரணத்தைத் தொடரித்து உணர்ச்சி வசப்பட்டிருந்த நண்பர்களாகிய எம்மில் சிலர் அவர் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். முதலாவதாக அவரது நினைவுக் கூட்டம் ஒன்றை கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடாத்தினோம், அக் கட்டத்தில் உணர்ச்சி மிகுதியில் பேச முடியாது என் நெஞ்சு அடைத்துக் கொண்டது இன்றும் நினைவில் வருகிறது. முக்கியமாக அவர் நினைவாக அவரது எழுத்துக்களை நூல்வடிவில் கொண்டுவர வேண்டும் எள விரும்பினோம்.  இதற்காக அ.ந.க நினைவுக் குழு ஒன்றை அமைத்தோம். இக் குழுக் கூட்டம் மூன்று தடவை வரை நடந்தது, புத்தக வெளியீட்டிற்குப் பணம் சேர்க்கவும் முயன்றோம். எதிர்பார்த்தபடி எதுவும் சேரவில்லை. இதற்காக நேரம் செலவிட்டு உழைக்கத்தக்கவரும் கிடைக்கவில்லை, இதனால் இம் முயற்சிகள் பாவும் தோல்வியே அடைந்தன. நண்பர் அ.ந.க.வை நிமைக்கும்போது நாம் செய்யத் தவறிய இப்பணி எம்மைத் தலைகுனியச் செய்கிறது.

அ. ந. க. விள் “வெற்றியின் இரகசியங்கள்” என்ற நூலை அவர் வாழ்ந்தபோதே தமிழ் நாட்டில் வெளியிட ஏற்பாடு செய்தேன். அவரது எழுத்துக்களில் பூரணத்துவமாக இன்றும் புத்தக உருவில் நிலைத்து நிற்கும் ஒரே நூல் இதுவேயாகும். மிகவும் சிரமப்பட்டே இந்நூலே வெளிக்கொணர முடிந்தது. இந் நூலின் முழுப் புருவ்வையும் நானே சில நாட்களில் இரவு பகலாக சென்னை நகரில் திருத்திக் கொடுத்தேன். அவ்வேளை பஸ்ஸிலும் தெருவிலும் நின்றே வேகமாக புரூவ் பார்த்தது இன்றும் என் நினைவில் வருகிறது. இந்நூலின் அட்டை அமைப்பையும் எளிமையாக தானே திட்டமிட்டு அ. ந. க. வின் அனுமதியையும் பெற்றேன். அவருக்கும் இந்த அட்டை அமைப்பு நன்கு பிடித்துக் கொண்டது. இந்த அட்டையின் பின்புறத்தில் அவரது படத்துடன் ஆசிரியரின்  வாழ்க்கைக் குறிப்பையும் வெளியிட விரும்பினேன். தமது எழுத்துலக தொடர்புபற்றி அவர் விரிவாக எழுதியிருந்தார், இக் குறிப்புகளை அட்டை அச்சிட ஏற்பாடு செய்த அச்சகத்தில் சுருக்கி எழுத வேண்டிய சூழ்நிலை  ஏற்பட்டது. அச்சகத்தார் வேண்டிய அளவுக்கமைய நண்பர் எழுதித் தத்த விபரங்களை நூலில் ஒன்றாக 10 நிமிடங்களில் சுருக்கி எழுதிக் கொடுத்திருப்பேன் என நினைக்கின்றேன். அவரி வீரகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, ஶ்ரீலங்கா . ஆகிய பத்திரிகைகளில் சில வருடங்களில் ஒன்று மாறி ஒன்றாக வேலை செய்த விபரங்களைச் சுருக்கும்போது “…. இதழ்களோடு ஒட்டியிருந்தவர்’ என்று எழுதிய நினைவு. இந்த ஒட்டியிருந்தவர் என்ற என் வார்த்தைப் பிரயோகம் அ.ந.க. வின் மனதை மிகவும் பாதித்து விட்டது. அவர் ஓரிரு நாள் அதே நினைவாக இருந்து ஆற்றாது என்னிடம் வந்து அவரது அறிமுகக் குறிப்பைத் திருத்தி அச்சடிக்க முடியாதா என்று கேட்டார். நல்லெண்ணத்தோடு நான் எழுதிய குறிப்பு அவருக்கு இத்தனை மன நோவு தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவ்வார்த்தை அவரது எழுத்துலகச் சிறப்பை எவ்விதமும் பாதிக்க மாட்டாது எனவும் அவ்வார்த்தையை வேண்டின் அடித்து விடலாம் எனவும் கூறினேன். நான் எதிர்பார்த்தபடியே நூல்கள் சில மாதங்களில் விற்பனைக்கு வந்ததும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உணர்ச்சி வசமான அவரது ஆளுமையை அவரோடு பழகிய எவரும் மறக்க மாட்டார்கள்.

மனிதர் தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து முதலாளித்துவ உலகில் பொருளாதார நோக்கோடு முன்னேறும் வழிகள் பற்றி மனோதத்துவரீதியில் எழுதப்பட்ட பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் அவ்வாறான நூல்கள் குறைவே. தமிழ்வாணன் சில எழுதியுள்ளார். அ.ந.க. வின் “வெற்றியின் இரகசியங்கள் தமிழ்வாணனுடையவற்றிலும் பார்க்க மிகவும் சிறப்பான நூலேயாகும். அமெரிக்க, ஆங் கில நூல்கள் பலவற்றைப் படித்தே அவர் இந்நூலை எழுதினூரி, என் மனைவியாருக்கு இந்நூல் மிகவும் பிடித்திருந்தது. அதை நான் அ. ந. சு. விடம் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மனைவியார் ஒருநாளக்கு விருந்துக்கு அழைத்து வரும்படி வேண்டியது பற்றியும் தெரிவித்தேன். அவர் மிக மகிழ்வோடு ஒப்புக் கொண்டார்,

பல நோய்களிடை நாள்தோறும் மருந்தோடு வாழ்ந்ததால் அவர் உணவுபற்றி மிக விழிப்பாக இருந்தார். அவருக்குப் பிடித்தமான இரவுணவுபற்றி வினாவி கடைசியில் தோசைக்கு ஒப்புக்கொண்டார், மனைவியார்  சூடாக ஒவ்வொன்றாக சுட்டு தட்டில் இட்டதை, சுவைத்து அளவொடு சாப்பிட்டது இன்றும் என் நினைவில் நிலைத்துள்ளது. அவருடைய குடும்பவாழ்வு பூரணத்துவம் பெறாததால் போலும் அவர் குடும்பங்களுக்கும், குடும்பப் பெண்களுக்கும் அளவு மீறிய மரியாதை காட்டுவதையும் அவதானித்தேன்.

அவரது படைப்புகளில் “மதமாற்றம்” சிறந்ததோர் படைப்பாகும். அந் நாடகத்தில் எனக்குப் பிடித்த அம்சம் கதையமைப்பாகும். தமிழ் நாடகம், சினிமா, நாவல்களில் பெரும்பாலும் எதிர்பாராத சம்பவங் ளேயும் நிகழ்வுகளையும் முன்வைத்தே கதை நகர்த்தப்படுவதைக் காணலாம்.. இக் குறைபாட்டையே தம் நாடகத்தின் அ.ந.க. உத்தியாக சிறப்பாகப் பயன்படுத்தினூர். இத்தகைய சம்பவங்களுக்கு தெய்வாம்சம் கொடுத்து மத வழிபாட்டுச் சிறப்பை விளக்குவதுபோல் காட்டி அதன் அடிப் படையையும், ஏமாற்றையும் அழுத்தமாகச் சாடியுள்ளார்.

நண்பர் தமது திறமை பற்றி கடைசி நாட்களில் கற்பனை செய்ததுபோல இலக்கிய வரலாற்றில் அவர் மதிப்புப் பெறாதுபோக நேரினும் நாடகத்துறையில் இந் நாடகம் அவருக்கு ஒர் அழியாச் சின்னமாக நிலைத்து நிற்கும் என்று துணிபாசுக் கூறுவேன்.

குமரன் ஏப்ரில் 15, 1974