மலேசியா: இந்தியர்களைக் காப்பவர்களுக்கே நமது ஓட்டு!

வே.ம.அருச்சுணன் – மலேசியா‘ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்’ என்பது போல் அண்மையில்  பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது. 56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை. 2008 ஆம் ஆண்டு இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பக்கத்தானுக்கு ஓட்டளித்த பின்பு ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது, ஏழ்மையிலும் சமூகப்பிரச்சனைகளிலும் மூழ்கித்தவிக்கும் இந்திய சமுகத்தைக் கைதூக்கி விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் மண்விழுந்ததுதான் மிச்சம். கடந்த, 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாரிசான், 5 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாக்கத்தான் கட்சியும் நயவஞ்சகத்துடன்,இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தனர் என்பதை அறிய மிகவும் வருத்தமாக இருக்கிறது.
     
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியர்கள் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில், பச்சைக்காடாக இருந்த இந்நாட்டை,வளப்படுத்துவதில் இந்தியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இந்தியர்களின் இரத்த வியர்வில் உருவான இந்நாட்டு மண்ணுக்கு இலட்சக் கணக்கில் இரையாகிப் போன நம் இந்தியர்களின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுவிட்டது.

அந்தத் தியாகத்தை அங்கிகரிக்காதப் பாரிசான் அரசு இந்தியர்களை வந்தேரிகள் என்றும், குண்டர்கள் ,கொலைக்காரர்கள், கொல்லைக்காரர்கள், கடத்தல்காரர்கள், இன்னும் எப்படியெல்லாம் நம்மைக் கேவலப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் நம்மைக்கேவலப் படுத்துகிறார்கள்.பக்கத்தான் ஆட்சியிலாவது இந்தியர்களின் வாழ்வில் முன்னேற்றம் காணாதா என்ற ஏக்கத்தில் ஐந்து மாநிலங்களில் ஆச்சிப்பீடத்தில் அமர வைத்தோம்.ஆனால், இந்தியர்களின் வாழ்வில் எதிர்பார்த்த மாற்றங்களிக் கொண்டுவராமல் நம்மைக் கிள்ளுக்கீரையாக எண்ணிய பக்கத்தான் தலைவர்கள் நமது நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டுவிட்டனர்.
     
தேர்தலில்,இந்தியர்களின் வாக்கு முக்கியம் என்று தெரிந்தும்,அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைவிடுத்து, ஒட்டுமொத்த இந்தியர்களை ஏமாற்றும் விதத்தில் பாக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை அமைந்திருப்பது இந்தியர்களைச் மேலும் சினமூட்டும் நடவடிக்கையாகும்.இந்தியர்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்று பக்கத்தான் பகல் கனவு காண்கிறது.இனி இந்தியர்களை ஏமாற்ற நினைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெறப்போவதில்லை.2008 ஆம் ஆண்டு ஓட்டளித்த மக்கள்வேறு, எதிர்வரும் தேர்தலில் ஓட்டளிக்கவிருக்கும் மக்கள் வேறு என்பதை அரசியல் கட்சிகள் உணரவேண்டும்.
    
பாரிசான் மீது அதிருப்திக் கொண்ட இந்தியர்களே, கடந்த தேர்தலில் பக்காத்தானுக்கு ஓட்டுப் போட்டனர்.ஆனால், இந்தியர்களுக்குச் சாதகமாக பக்கத்தான் இல்லை என்ற நிலைவரும் போது நிச்சயமாகப் பாரிசானுக்கு ஆதரவாக  வாக்களிக்கத் தவறமாட்டார்கள்.
 
சபா,சரவா மற்றும் தீபகற்ப மலாய் மக்களின் ஏழ்மையைப் போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பக்கத்தான் அறிவித்துள்ளது.ஏழ்மையில் வாடும் இந்தியர்களின் புணர்வாழ்வுக்கு எந்தவொரு திட்டமும் குறிப்படவில்லை.சீன சமூகத்தின் 60 இடைநிலைப்பள்ளிகளின் மேம்பாடு குறித்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,தமிழ்ப்பள்ளிகள் குறித்தோ,அதன் வளர்ச்சி குறித்தோ யாதொருத் திட்டத்தையும் குறிப்படவில்லை.
    
மலேசியர்கள் என்ற பொது நோக்கிலேயே திட்டங்கள் வரையப்பட்டுள்ளன என்று பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.ஓட்டுக்காக மட்டும் இந்தியர்களை அணுகும் பக்கத்தான் தலைவர்கள்,இந்தியர்களின் வளர்ச்சிக்கு எழுத்துருவில் வாக்குக் கொடுக்கக்கூட தயக்கம் காட்டுகிறார்கள்.இது அவர்களின் சுயநலப்போக்கைக் காட்டுகிறது.
    
ஒருவேளை,இவர்கள் சொல்லிக் கொள்வது போல், மத்தியில் இவர்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், 56 ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்தியர்களை அழித்த பாரிசான் போன்றே பக்கத்தான் கட்சியும், ‘மரண சயாம்’ இரும்புப் பாதைப் போடும் பணியில் மரணமடைந்த இந்தியர்களைக் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜப்பானியர்,பெரிய குழிகளை வெட்டி புதைத்தது போல் இந்நாட்டு இந்தியர்களையும் புதைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மனதில் தோன்றுகிறது. 
    
சுதந்திரத்திற்கு பின் மலாய்க்காரர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சிறப்பு சலுகை மூலம் மலாய்க்காரர்கள் இன்றைய செல்வ நிலைக்கு வர முடிந்தது.அதைப்போன்று இந்தியர்கள் உயர்வதற்கும் சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.இதன் மூலமே ஏழை இந்தியச் சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.மாறாக,தற்போது சொல்லப்படும் நொண்டிச்சாக்குகளால் இந்திய சமூகம் எந்த நன்மையும் அடையப்போவதில்லை. உழைத்தவன் வெளியில் நிற்க,உழைக்காதவன் குளிர்ச்சாதன அறையில் சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இந்தியர்களை நாட்டாமை செய்வது என்ன ஞாயம்? உதவி என்று இந்தியர்கள் கேட்கும் போது மட்டும்,திடீர்ரென பக்கத்தான்,இந்தியர்களுக்கு எதிராகத் தேசியக்கொள்கைப் பற்றி பேசுவது ஞாயமா?
   
தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வார் தான் பிரதமர் என்றும் லிம்கிட்சாங், அவாங் ஆடி துணைப் பிரதமர்கள் என்றும் திட்டவட்டமாகக் கூறும் பக்கத்தான்,தமிழர் ஒருவரைத் துணைப்பிரதமராக ஒருவரை முன் மொழியாதது ஏன்? தமிழர்கள் அந்தப் பதவியை வகிக்கத் தகுதி இல்லாதவர்களா? நம்மில் படித்தவர்கள் இல்லையா? அல்லது உழைக்க மறுக்கும் சோம்பேறிகளா? 
        
கடந்த,56 ஆண்டுகளாக ஆட்சி செய்த மலாய் இனத்தைச் சேர்ந்த பிரதமர்தான் மீண்டும் ஆட்சி செய்யப் போகிறார்.ஆட்சிக்கே இன்னும் வரவில்லை,அதற்குள் இந்தியர்களை ஓரம் கட்டும் படலம் அரங்கேரத் தொடங்கி யுள்ளது.பக்கத்தான் கட்சியிலுள்ள இந்தியத் தலைவர்களும் ஊமைத்துரைகளாக இருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.நாம் ஓட்டுப்போட்டால்தான் அன்வர் பிரதமர். நமது உரிமைகளைக் கேட்பது நமது உரிமை. இந்த நேரத்தில் நமது உரிமைக்காகப் போராடவில்லை என்றால் இந்த நாட்டில் இந்தியர்கள் நிரந்திரமாக அடிமைகளாக வாழவேண்டியதுதான்.இந்த நிலை மாற வேண்டும். முன்னாள் பிரதமர் நயவஞ்சகமுடன் இந்தியர்களை அழித்தது போல் ஒரே குட்டையில் ஊறிய மட்டையான அன்வர் பிரதமரானால் இந்தியர்களுக்குச் சாவுமணி அடிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
       
நமக்குச் சாதகமாக இருக்கும் கட்சியோடு கைக்கோர்ப்போம்.இந்தியர்களை ஆதரித்து நமது குழந்தைகளுக்கு நல்வாழ்வு தரும் கட்சிக்கு ஓட்டுப்போடுவோம்!
 
arunveloo@yahoo.com