மாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

இந்த அடிப்படையில் மாதொருபாகன் புதினத்தை அணுகும்போது, அந்தப் படைப்பு எடுத்துக்காட்ட முனையும், எடுத்துரைக்க விரும்பும், மையக் கருத்து என்ன? குழந்தையில்லாத தம்பதியர் சமூகத்தில் எதிர்கொள்ளும் மதிப்பழிப்பா? கடவுள், மதம் என்ற பெயரால் மனிதர்கள் மீது என்னவெல்லாம் கட்டுதிட்டங்கள், கட்டாயங்கள் காலங்காலமாகத் திணிக்கப்பட்டுவருகின்றன என்பதா? இந்த இரண்டும் தான் பிரதானமாக கருத்தோட்டங்களாக கதையில் புலப்படுகின்றன. ஆனால், இரண்டையுமே கையாண்ட விதத்தில் ஏதோவொரு போதாமையை உணர முடிகிறது.

INDIAN FOUNDAITON FOR THE ARTS, BANGALORE  என்ற அமைப்பின் நிதியுதவி (ரூ 3,28,500) பெற்று இரண்டு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டு இந்த நூலை ஆசிரியர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்த மையத்தின் MISSION ‘is to enrich the Arts in India by providing support to innovative projects’ என்று தரப்பட்டிருக்கிறது. கதாசிரியரின் ஆய்வு குறித்து பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.

For research towards the writing of a novelized history of Thiruchenkode in Namakkal district, Tamil Nadu. A town with an ancient history. Thiruchenkode is today marked by its hill temple dedicated to Murugan and Ardhanaareeswara but is also known for its vibrant modern industry. In the course of writing a historical account of Thiruchenkode the author will document references to the town in literature, analyze the town’s design and study its ritual and religious life.

மேற்குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் அந்த ‘அர்த்தநாரீஸ்வரர்’ கோயில் சடங்கே உச்சக்கட்டமாக ஆசிரியர் முடித்துக்கொண்டுவிட்டதுதான் [அந்தச் சடங்கையும் அவர் முழுவீச்சாக எதிர்க்கவில்லை] உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம். தரப்பட்ட வரைச்சட்டகத்திற்குள்ளாக ஊர் குறித்த, அதன் வரலாறு குறித்த, மக்கள் குறித்த, அவர்களின் வாழ்நிலைமை, சாதிப் பிரிவினை, குறித்த எத்தனையோ விஷயங்களை, அவற்றின் அடிப்படையிலான ஆக்கபூர்வமான கருத்துகளைப் பேசியிருக்க முடியும். ஊரின் நிலவளம், இயற்கைக்காட்சிகள் குறித்து விவரிக்கும் அளவுகூட ஆசிரியர் வேறு முக்கியமான விஷயங்களை – கோயில் சார் அந்த நம்பிக்கை தவிர்த்து, விரிவாக, in all seriousness,  பேசத் தலைப்படவில்லை.

கதாசிரியராவது ஒரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதன் பின்னணியில் ‘அந்தக் காலத்தைய’ கோயில் உற்சவம், அது தொடர்பான சடங்கு , நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக, ‘கருத்துச் சுதந்திரம்’ காக்க வேண்டி 15.1.2015 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியாகியுள்ள தலையங்கம் நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே அமைந்துள்ளது


 

தினமணி 15.1.2015 தேதியிட்ட நாளிதழின் தலையங்கம்:  அட, பெருமாளே!

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்’ நாவல் புரிகிறது. கோபம் வருகிறது. திருச்செங்கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சுவார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத்தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, பழக்கவழக்கங் களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார். தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாசனம் எழுதவும் முற்பட்டிருக்கிறார்.பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் “கண்மூடி’ ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக்குழந்தை யைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம்தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த்தமாடுதல் இவை யாவும், “இத்தனை நாள் இல்லாமல் எப்படி இப்போது?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகாரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிடலாகாது.

மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், “இரண்டாம் இடம்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. “நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன்தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பலவீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திடகாத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ…’ என்று குந்தி சொல்வதாகக் கதை செல்கிறது.இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமுதாயம் அது.

படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது. இலக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்குகளை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று “ஃபெர்டிலிடி சென்டர்’ எனப்படும் கருவூட்டு மருத்துவமனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள். அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும்போது, “உங்கள் குடும்ப மரபீனி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனைவியை கருவுறச் செய்யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்யலாம். உங்களுக்குச் சம்மதமா’ என்பதுதான் நேர்மையான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி.

பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில்கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமுறைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே, அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடியுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?

சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல்லாததையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததேகூட மிகப்பெரிய தவறு. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, “தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு’ என்பது. அதுவே பெருமாள் முருகனின் “மாதொருபாகன்’ பிரச்னைக்கும் பொருந்தும்.

சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டாலும் ஆணாதிக்க மானுடம் ஏற்க மறுக்கிறது. இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந்திருக்கும். தமிழனாய் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு!

ramakrishnanlatha@yahoo.com