மா -னீ கவிதைகள்!

மா -னீ கவிதைகள்!
1.

இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

நான்கிற்கு நான்காய்  வீடு
நடுவில் நீளமாய்  மேஜை
துணி விரித்துப்  போட்டு

விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து 
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

இரவுச்சாப்பாடு முடித்து …
குழந்தைகளும் தூங்க
ஆரம்பித்த

பிறகு
அவளருகே அமர்ந்தான்
சிநேகத்துடன்
“அவன்” .

2.
செல்லப்பூனை வந்தது
காலை வருடியது
அலைந்து திரிந்தது
சிணுங்கியது
கால்களை செல்லமாகக் கடித்தது

சட்டை செய்யவில்லை
ஓய்வு நாள் பரபரப்பு

அலைந்த பூனை
வெளியே சென்றது

சற்று நேரத்தில் திரும்பியது
அதன் வாயில் அணிலோன்றிருந்தது .

3.
உனக்கு உண்டு
ஒரு நாள்

அந்நாள்

உனக்கு ஒரு
வேலையுமில்லை

உனக்கு உண்டு
ஒரு நாள்

அந்நாள்

உனக்கு
உணவுமில்லை .

4.

எவர்க்கும்
தெரியாத
ரகசியமாய்
நான்கு
சுவருக்குள் மோதி
மீண்டும்
என்னுடன் மட்டுமே
பேசிக்கொண்டிருந்தது
மௌனம்.

5.

இப்போது நீ பார்க்கும் இது
இது மட்டுமே தான் நான்.
ஆம் !
இவ்வளவே நான் .

இது போதாது தான்
எனக்குத் தெரியும்.

குறைந்தது நீ
பார்க்கும் வகையில்
உயிருடனாவது இருக்கிறேன்
இது போதாதா ?

முன்பு ஒரு காலத்தில் தன் வீடு
எவ்வளவு அழகாக இருத்ததெனக் காட்ட
ஒரு செங்கல்லை பொறுக்கியெடுத்துக் காட்டும்
ஒரு மனிதனைப் போல நான் .

T.R.Manivel <t.r.manivel@gmail.com>