மீள்பிரசுரம்: ’ஆகாசத்திண்ட நிறம்’ ,மலையாளத் திரைப்படம் பற்றியதொரு பார்வை!

’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம். படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்த அந்தப்படம், ஆனந்தம் கலந்த அதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. படத்தின் ஒரு வரிக்கதை என்று சொல்லப்போனால் திருடன் திருந்தி நல்லவனாகும் வழக்கமான ஜீன்வால்ஜீன் கதைதான்….ஆனாலும் அதற்குத் தரப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட்…, அதைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி இவை சொல்லுக்கடங்காதவை.

அந்தமான் பகுதியில் கலைப்பொருள் விற்பனைக்கடை ஒன்றில் தான் உருவாக்கிய சிற்பங்களைக் கொடுத்துப் பணம் பெறுகிறார் ஒரு முதியவர்.இதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு வாலிபன் அவரைப்பின் தொடர்ந்து ஓடி வருகிறான்.வழியில் ஒருவரின் பர்ஸை அவன் பிக்பாக்கெட் செய்யும்போதுதான் அவனது நோக்கம் நமக்குப் புரிகிறது.கிழவர் ஒரு மோட்டார் படகில் ஏறி அமர்ந்து அதைச் செலுத்த ஆரம்பிக்கையில் அதற்குள் குதித்துக் கத்தியைக் காட்டி அவரை மிரட்டிப் பணம் பறிக்க முயல்கிறான் அவன்.அவரோ சற்றும் சலனப்படாமல் ‘உனக்குப்படகு வலிக்கத் தெரியுமா…/நீந்தத் தெரியுமா’ என்பது போன்ற எதிர்பாராத  கேள்விகளைக் கேட்டுக்கொண்டே  சட்டென்று சுக்கானின் திசை மாற்றி வேகத்தைக் கூட்டி விடுகிறார்.அவன் நிலை தடுமாறும் நேரத்தில் கத்தி அவர் கையில்வந்து விடுகிறது.தன்னை எதுவும் செய்து விட வேண்டாம் என அவன் கெஞ்சி மன்றாட அவர் சற்றும் சலனமின்றிப் படகைச் செலுத்தியபடி,சிறியதொரு தீவுக்கு வந்து சேர்கிறார்.

அதன் கரையில் அமைந்திருக்கும் அழகான மர வீடு ஒன்றில் அவரோடு ஒரு சிறுவன்,ஒரு[வாய் பேச முடியாத காது கேளாத]இளம்பெண் –மேலும் அவர்களுக்கு உதவியாளனாகத் திக்கு வாய் பேசும் ஒரு நடுத்தர வயதுக்காரன் ஆகியோரும் வசிப்பதை அவன் பார்க்கிறான். எவரும் அவனோடு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையென்றாலும் வேளாவேளைக்கு அவர்களோடு கூடவே அவனுக்கும் உணவும்,மதுவும் பரிமாறப்படுகின்றன;அவன் தேவைக்கேற்ற துணிமணிகள் அவனைத் தேடி வருகின்றன.அவனோ அந்த வீட்டின் மர்மம் புரியாத குழப்பத்திலும் அங்கிருந்து வெளியேற முடியாத தவிப்பிலும் திண்டாடுகிறான்.

அந்த வீட்டைத் தவிர வேறு ஆள் அரவமற்ற அந்த இடம் அவனை மிரட்சிக்கு ஆளாக்குகிறது. ஆனால்,அந்த வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.முதியவர் பொம்மைகள் செய்கிறார்;சிறுவனோடு விளையாடுகிறார்….மீன் பிடிக்கிறார்…அவனுக்குப் படிக்க எழுதக் கற்பிக்கிறார்.அந்தப் பெண்ணும் அவர்களுக்குத் தேவையானதை சமைத்து உணவு பரிமாறி சிறுவனோடு கடல்புரத்தில் களித்து விளையாடி..தோட்ட வேலை செய்து பொழுதைக் கழிக்கிறாள்.அவள் பேச முடியாதவள் என்பதையே தற்செயலாகத்தான் அந்தத் திருடன் அறிந்து கொள்ள நேர்கிறது.

அவன் சிறிதும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் அந்தக் கிழவர் ஒரு மோட்டார் பைக்கில் அந்தச் சிறுவனையும் ஏற்றிக் கொண்டு தீவுக்குள் எங்கோ செல்கிறார்.அந்த இடம் எங்கிருக்கிறது,அங்கே இருப்பது என்னஎன்பதைஅறியத் தவிக்கிறான் திருடன். அங்கே நிற்கும் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு அதைக் கண்டுபிடிக்க அவன் சென்றாலும் அதில் அவன் முயற்சி வெற்றி பெறவில்லை; வீட்டு உதவியாளன் அந்த சைக்கிளின் காற்றைப் பிடுங்கி அவன் எங்கும் செல்ல முடியாமல் ஆக்கி விடுகிறான்.

கிழவரிடம் தன்னை வெளியேற்றுமாறு அவன் கேட்டுக் கொள்ள, ‘நீ,என் அனுமதியோடு படகில் ஏறியிருக்கவில்லை;இப்போது நீ இங்கிருந்து செல்லவும் அது உனக்குத் தேவையில்லை’என்று மட்டுமே சொல்கிறார் அவர்.…ஆனால் அதற்கான வழி எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை.தூரத்தில் செல்லும் கப்பலுக்கு அவன் கூக்குரல் எட்டவில்லை;கடலுக்குள் நீந்தி அக்கரை செல்லும் முயற்சியில் அவன் தடுமாறித் தத்தளிக்க அந்தப் பெண் அவனைக் காப்பாற்றுகிறாள்.மீண்டும் அதே வீடு..அதே முகங்கள்!

ஒருநாள் படகில் நகரத்துக்குச் செல்லும் கிழவர் ஒரு சவப்பெட்டியோடு மீள்கிறார்; அதை மோட்டார் பைக்கில் கட்டிக் கொண்டு தீவுக்குள் செல்கிறார்.மர்ம முடிச்சு இன்னும் வலுவாக இறுக அந்த சவப்பெட்டி தனக்கானதோ என்ற பீதியில் அவன் உள்ளம் துணுக்குறுகிறது.

நகரத்திலிருந்து புதிய இளைஞன் ஒருவன் ஒருநாள் அவரோடு வருகிறான்.’’அந்த வீட்டில் இருப்பவர்கள் கதியற்ற அனாதைகள், அவர்களைக் காயப்படுத்தினால் அந்த முதியவரும் காயப்படக்கூடும்’’என்கிறான் அந்த இளைஞன்.
படிப்படியாக அந்த முரட்டு மனிதனின் உள்ளத்தில் ஏதோ ஒரு மாற்றம் தன்னையும் அறியாமல் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

ஒரு நாள் படகில் ஏறிக் கொள்ளுமாறு அவனை அவர் அழைக்க –தனக்கு அவர் விடுதலை தரப்போவதான களிப்பில் அவன் அவருக்கு நன்றி சொல்கிறான்;அவரோ அந்தச் சிறுவனையும் உடன் அழைத்துக்கொண்டபடி அந்த முழுநிலா ராவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் குதூகலிக்கிறார். அவன் ஆத்திரமும் பதட்டமும் அடைய….நிலவும், இரவும் கடலின் வனப்பும் துள்ளிப்பாயும் மீன்களின் களியாட்டமும் கொண்ட இந்தப் பிரகிருதியின் வனப்பை ஒரு கணம் அவனைப் பார்க்கச் சொல்கிறார் அவர்.

அவன் மனதுக்குள் சற்றே அசைவு பிறக்க அந்தச் சிறுவனோடு நட்புக் கொள்கிறான்;அவனோடு கடற்கரையில் விளையாடி மீன் பிடிக்கச் சொல்லித் தரவும் இரவில் கதை சொல்லித் தூங்க வைக்கவும் ஆரம்பிக்கிறான்.

தன்னோடு மோட்டார் பைக்கில் ஏறிக்கொள்ளுமாறு,ஒருநாள்,அந்தக் கிழவரே அவனை அழைக்கிறார். தீவின் மற்றொரு பகுதியிலுள்ள சிறிய இல்லம் ஒன்றில் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்கள் பலர், அவரது வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓவியர்களும் கவிஞர்களும் உண்டு;சாமானியர்களும் உண்டு. கிழவர் அவர்களோடு சேர்ந்து காரம்போர்டு விளையாடுகிறார்;இரவு உணவுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்து பாடி ஆடிக் களிக்கிறார்;தேவைப்படுபவர்களுக்கு மூலிகை மருந்துகள் இட்டு சிகிச்சையும் அளிக்கிறார். முன்பொரு முறை அங்கு வந்திருந்தஆங்கில மருத்துவனானஅந்த இளைஞனும்அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கண்ட திருடன் அவனோடு தனிமையில் மெல்லப் பேச்சுக் கொடுக்கிறான்.

அப்போதுதான் கிழவர் தான் மேற்கொண்ட பயணங்களின்போது,எங்கிருந்தெல்லாமோ அந்த வயதானவர்களைக்கொண்டு வந்து அங்கே சேர்த்திருப்பதும் அவர்களைத் தன்னால் முடிந்தவரையில் பராமரித்து வருவதும் அவனுக்குத் தெரிகிறது.

அவனது மனம் முழுமையாக நெகிழத் தொடங்கும் அந்தக் கட்டத்தில் கிழவர் அவனிடம் வாய் திறக்கிறார்.. ‘’நீ என் படகுக்குள் வந்தது போல்,வாழ்வில் நம் அனுமதியில்லாமலே எத்தனையோ விஷயங்கள் நம்மை எதிர்ப்பட்டு விடுகின்றன…..நானும்,இந்தத் தீவும்,கடலும் உன் வாழ்க்கைக்குள் வந்ததும் அது போலத்தான்;உன் வாழ்வை நீதான் முடிவு செய்ய வேண்டும்;அதில் தலையிடும் உரிமை பிறருக்கில்லை..இனி உன்னைக் கொண்டு போய் நகரத்தில் விட்டு விடுவதாக இருக்கிறேன்’’என்கிறார்.

அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் அவனுக்கும் பரஸ்பரப் பிணைப்பு நேரத் தொடங்கியிருந்த அந்தத்தருணத்தில் இரு தரப்பிலும் மனம் கனக்க அவன் படகில் ஏறிக் கொள்கிறான். அவனை இறக்கி விடும் அவர்..’’மகிழ்ச்சி என்பது பிறர் பொருளைப் பறிப்பதில் இல்லை…பிறருக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதிலேதான் அது இருக்கிறது’’என்று மட்டும் சொல்லி விட்டு  நகர்ந்து போகிறார்; வழக்கம் போலத் தான் செய்த சிற்பங்களை விற்றுக் காசாக்கிக் கொண்டு படகில் ஏறித் தீவுக்குக் கிளம்புகிறார். அவன் அதைப் பார்த்துக் கொண்டே உறைந்து நிற்கிறான்…

இதுவே நமது வழக்கமான மசாலா படங்களாக இருந்திருந்தால் அவன் தாவி ஓடி முட்டி மோதித் தன்னை இரத்தக் களறியாக்கியபடி அவர் படகில் எவ்விக் குதித்து அவரிடம் உணர்ச்சிகரமான மன்றாட்டை நிகழ்த்தியிருப்பான்..இங்கே அப்படி எதுவும் நிகழவில்லை; ஆனாலும் அவன்,வேறொரு தனிப்படகில்அங்கே திரும்பி வருகிறான்..நேராக அந்த முதியோர் இல்லத்தை நோக்கித் தான் கொண்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அவன் செல்ல அங்கே ஒரு ஓவிய முதியவரின் சாவு நிகழ்ந்திருக்கிறது.மெல்ல அந்தத் தனிமையான தீவில் வாழும் அவர்களின் வாழ்க்கை அமைப்போடு தன்னையும் கரைத்துக் கொண்டபடி தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கிறான்அவன்.

ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே எனத் தொடக்கத்தில் வரும் கவிதை போன்ற உரையாடலுடன் தொடங்கும் படம் அவ்வாறே நிறைவும் அடைகிறது..ஒரே ஒரு வித்தியாசம்….இப்போது அந்த முரடனும் அதில் பங்கேற்றிருப்பதே..

திரைப்படத்தின் கதையை இவ்வாறு  சொல்லிக் கொண்டு போவது எளிது….ஆனால் பாத்திரங்களின் இமை அசைவுகளில்,நுணுக்கமாக வேறுபடும் முக பாவனைகளில்,காட்சிகளை அடுத்தடுத்துத் தொகுத்துக் காட்டும் முறைமையில் திரைக் கலைக்கு இந்தத் திரைப்படம் இலக்கணமே வகுத்திருப்பதைப் பார்த்து அனுபவிக்கும்போதுதான் விளங்கும்.
.
இங்கு சொல்லப்பட்டிருக்கும் இத்தனை அழகான செய்திகளையும் படம் எங்குமே பேசவில்லை…உணர்த்த மட்டுமே செய்கிறது.படத்தின் மொத்த உரையாடல்களையும் ஒரே பக்கத்தில் அடக்கி விட முடியும்.திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் மட்டுமே என்பதை மிகத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.பஞ்ச் வசனங்களோ,குத்துப்பாட்டோ,நடனங்களோ கட்டிப்புரளும் சண்டைக் காட்சிகளோ கொஞ்சமும் அற்ற இந்தப் படத்தை,7,8 வயதுச் சிறுவர்கள் கூட ஆர்வமுடன் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.[உடன் வந்த என் 10வயதுப் பேத்தியும் அப்படித்தான்]

ஊமைப்பெண்ணாகக் கவர்ச்சி எதுவுமற்ற எளிமையான தோற்றத்தில்,ஒப்பனைகள் சிறிதும் அற்றுக் கண்களால் மட்டுமே நடித்திருக்கும் அமலாபால்,[நம் படங்களில் இதைக் கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா என்ன?]  கண்சிமிட்டும் குறும்புக்காரக் கிழவராக மிகை சிறிதுமற்ற நடிப்பைக் காட்டியிருக்கும் நெடுமுடிவேணு, இறுகிப் போன தோற்றத்துடன் கற்பாறையாகக் காட்சியளித்துப் பின்பு படிப்படியான நெகிழ்வைச் சித்திரித்திருக்கும் திருடன் பாத்திரமாக இந்திரஜித், சிறிது நேரமே தோற்றம் தந்தாலும் ஆரவாரமற்ற அமைதியுடன் வரும் பிருத்விராஜ்[டாக்டர்]. மற்றும் அந்தச் சிறுவன்,திக்கு வாய் உதவியாளன்,முதியோர் இல்லத்துப் பாத்திரங்கள் என இந்தப்படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களுமே மனதில் கல்வெட்டாகி விடுவதற்குக் காரணம் தாங்கள் இந்தப்படத்தில் நடிக்கவில்லை,வாழ்ந்திருக்கிறோம் என்பதான பிரக்ஞை அவர்களுக்குள்ளும் இருந்திருப்பதே. எந்தப் பாத்திரத்துக்குமே பெயரில்லை;இந்தப்படத்தைப் பொறுத்த வரை அது தேவைப்படவும் இல்லை.

படம் முழுவதும் அந்தமான் பகுதியைச் சேர்ந்த சிறு தீவு[அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து 40 கி மீ தள்ளியிருக்கும் ’நெயில்’ என்னும் அழகான சின்னஞ்சிறுதீவு] ஒன்றிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.கடலின் குமுறலும்,கடல் மற்றும் வானின் வண்ணமும்,கடற்காற்றின் சீறலும்,மர வீடுகளின் நேர்த்தியான வடிவமைப்பும்,அலைகளின் ஆர்ப்பரிப்புமே படத்துக்கேற்ற பின்னணியைச் சிறப்பாக அமைத்துத் தந்திருக்கின்றன.

சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் அந்நாட்டின் மிக உயரிய தங்க விருதுக்கான போட்டிப்படங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்ட மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று என்பது என்பதும்,அந்த விருதுக்கு-இதுவரை போட்டிக்குத் தெரிவான முதல் மலையாளத் திரைப்படமும் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகள்.

படம் தொடங்கும் முன்னர்,படத்தின் இயக்குநர் திரு பிஜு அவர்கள் மேடையேறித் தன் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். மிக அண்மையிலேதான் கேரளத்தில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் [அதற்கு முன்பே ஜூனில் ஷாங்காய் பட விழாவில் திரையிடப்பட்டுவிட்டது] ஒரு வாரம் மட்டுமே அங்குள்ள திரை அரங்குகளில் ஓடியது என்றார் அவர். தன் முந்தைய படங்கள் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடியிருப்பதால்-இப்போது இது ஒரு வாரம் ஓடியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்று அவர் வேடிக்கையாகச் சொன்னாலும் மாற்றுத் திரைப்படங்களை – நல்ல திரைப்படங்களை வரவேற்கும் கல்வியறிவு மிகுந்த கேரளம் போன்ற ஒரு மாநிலத்திலும் கூட இந்த நிலைதான் என எண்ணியபோது உள்ளம் வருந்தத்தான் செய்தது.. கூடவே…இவ்வாறான படங்கள் தமிழில் எப்போதுதான் வரும் என்னும் ஏக்கமும் கூடத்தான்…. [தற்பொழுது ஆஸ்கார் விருதுக்காகவும் சிறந்த படங்களிலொன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. – பதிவுகள் -]

நன்றி: http://www.masusila.com/2012/07/blog-post_30.html