மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

கதை தயாரிக்கும் அவசரமோ, எழுதியதை உடனடியாகவே அச்சுவாகனத்தில் ஏற்றிப்பார்க்கும் அந்தரமோ, வெளிவந்த கையோடு அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடும் நிர்ப்பந்தமோ, அடிக்கடி எழுதி வாசகர் மனதில் தன் பெயரை நிலைநிறுத்திக்கொள்ளும் அக்கறையோ இல்லாத எழுத்தாளர், ஸ்ரீதரன். நாவலாக எழுத ஆரம்பித்து, பின் நீண்டகதையாகப் பிய்த்துக்கொண்டுவந்திருக்கும் கமலம் என்ற நீண்டகதை எழுதிமுடிக்கப்பட்டு, பிரசுர உலகத்தையே காணாமல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக்கிடந்து, இந்தத் தொகுப்பிலேதான் அது பிரசுரம் பெறுகிறது. ஸ்ரீதரன் இலங்கையில் இருந்தபோது எழுதிய எட்டுக் கதைகளும், 1977இல் சிறிது காலம் டெல்லியிலிருந்தபோது எழுதி, பின் கணையாழி இதழில் வெளியான நிர்வாணம் எனும் நெடுங்கதையும், புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில் எழுதிய ஆறு கதைகளுமாக மொத்தம் பதினைந்து கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
 
ஸ்ரீதரனின் எழுத்து அபூர்வமானது. சமூக வாழ்வின் இருண்ட மூலைகளில் அவர் கூர்மையான பார்வையைப் பதித்திருக்கிறார். வாழ்வின் குரூர யதார்த்தங்களுடன் போராடும் மனித ஜீவன்களின் ஆத்மத்துடிப்பை அவர் தனது கதைகளில் அற்புதமாக இசைத்திருக்கிறார். மாங்குளம் சந்தியில் வெய்யிலில் வேகும் ராமசாமி, 1941இல் லொறி லைசென்ஸ் வாங்கிக்கொண்ட பேதிரிஸ் அப்புஹாமி, கத்தியால் கங்கணத்தை அறுத்தெறிந்துவிட்டு, “நீர் செய்யறதைச் செய்யும்” என்று திரும்பும் கந்தசாமிக் குருக்கள், கொழும்பில் ஒரு தகரப்பொந்தில் போய்ப் படுத்துக்கொண்டுவிடும் கரீம், கொழும்பு மாநகரசபை சுத்திகரிப்பில் அழுக்காகிப்போகும் எசக்கி, செவுத்தி, “ஏற்கனவே நான் சொல்லவில்லையா? இது ஒரு பெரிய மனிதர்மாதிரி இருக்கிற மிருகக்கூட்டம். இதற்குள் போகாதே” என்று சாராயம் போடாத நிலையிலும் உபதேசம்பண்ணும் மணி, என்று சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளிவிடப்பட்ட மனிதஜீவன்கள் ஸ்ரீதரனின் விஷேட கவனிப்பிற்குள்ளாகுகிறார்கள்.ஒழுங்குறுத்தப்பட்ட அமைப்பிற்குள்ளிருந்து வெளியே வீசப்பட்ட உதிரி மாந்தர்கள் இவரது கதைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
ஸ்ரீதரனுக்கு எழுத்து என்பது வாழ்வின் மீதான குறுக்கு விசாரணை. அன்றாட வாழ்வில் புதைந்துபோயிருக்கும் அபத்தங்களை, பொய்மைகளை, ஏமாற்றுகளை துருவித்தேடும் கூர்மையான விசாரம் இவருடையது. ஆழமான, பரந்த, பல்துறைசார்ந்த வாசிப்பு, இவருக்கு வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டிநிற்கிறது. அழுத்தமான மனிதாபிமான உணர்வு சமூகத்தில் வீசி எறியப்பட்டுவிட்ட விளிம்புநிலை மாந்தர்கள் மீதான கவனக்குவிப்பைத் தூண்டியிருக்கிறது. நிர்க்கதியாய் நிற்கும் மனிதர்கள், அவலவாழ்வையே இயல்பாகச் சுமக்கப் பழகிக்கொண்டுவிட்ட மனிதஜீவன்கள் இவரின் கதைகளில் உலா வருகிறார்கள். மெல்லிய துயரம் இவரின் கதைகளில் எல்லாம் கசிகிறது. லொரி டிரைவர்கள், டிபன் கேரியர்கள் விநியோகிப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், நகரசுத்தித் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், பாதாள உலகக் கோஷ்டியினர், கிளார்க்கர்மார் என்று இவரின் கதைகளில் வரும் பாத்திரங்கள் நமக்கு வித்தியாசமான, புதிய உலகைக் காட்டுகிறார்கள். நமது அநுபவ எல்லைக்கட்டுகளை இந்த மாந்தர்கள் விஸ்தரித்துப் போடுகிறார்கள். போலிகளும் பிரசங்கிகளும் இவரின் கூர்மையான விசாரணையில் வெளிறிப்போகிறார்கள். பணத்தையும் வசதிகளையும் தவிர வேறெதுவும்பற்றியுமே சிந்தையற்ற மனிதர்களை இவர் வியப்போடு பார்க்கிறார். உயர்தொடர்புகளைப் பேணும் கவனத்தில், மனிதாபிமான இழைகள் உதிர்ந்துபோகும் நிலையை இவரது சில பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. உயர்தத்துவ விசாரத்தில் ஆழ்ந்துபோகும் பாதிரிமார் கதையின் கனதிக்குப் பலம் சேர்க்கிறார்கள். ஆழ்ந்த தத்துவப் படுதாவில் இவரது சில பாத்திரங்கள் நகர்கின்றன. ராமசாமி காவியம், நிர்வாணம், தொடர்புகள் ஆகிய கதைகளில் விபரிக்க முடியாத மெல்லிய துயர உணர்வு கதை பூராவிலும் படர்ந்து கிடக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளின் கொடூரம் இவரது மனத்தை, சிந்தனையைப் புண்ணாக்கியிருக்கிறது.
 
இவரது கதைக்களங்கள் வித்தியாசமான பிராந்தியங்களில் தோற்றங்கொள்கின்றன. மாங்குளம், கேகாலை, கொட்டாஞ்சேனை, அமெரிக்கா என்று வேறுபடும் உலகங்கள். சிங்களக் கிராமங்களும், சிங்களக் கதாபாத்திரங்களும் ஸ்ரீதரனின் கதைகளில் உயிர்ப்போடு வெளிவருகின்றன. சிங்களக் கதாபாத்திரங்களை மையங்கொண்டு, தமிழில் சுயமாக எழுதப்பட்ட அபூர்வமான கதைகள். மொழி, இனம் என்ற எல்லைகளுக்கு அப்பால் மனித ஜீவன்களை எழுத்தில் தரிசிக்கும் கம்பீரம் ஸ்ரீதரனின் பெரும்பலம். வெவ்வேறு அநுபவங்களின் பின்னணியில் வார்ப்புப் பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் ஸ்ரீதரனின் கதைகளுக்குச் செறிவையும் செழுமையையும் தேடிக்கொடுக்கிறார்கள். எவ்வளவு வேலைப்பளுவிற்கு இடையிலும், இவரது மனக்குகையில் இடையறாது உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருக்கும் பாத்திரங்கள் சிறிய அவகாசத்திலும்கூட, ரத்தமும் சதையுமாய்ப் பிரசவிக்கப்படுகிறார்கள். நீண்ட இடைவெளிகள் என்பது இவரது எழுத்தில் எந்தக் குறையையும் விட்டுச்செல்வதில்லை.

 அசுர உழைப்பையும், தொடர்ந்த ஆராய்ச்சியையும் வேண்டிநிற்கும் அமெரிக்கப் புலமைத்துவ பிரமாண்டத்தின் மத்தியில், தமிழ்மொழியே பயிலாத, முற்றிலும் அந்நியச் சூழலுக்குள்ளும் அவர் வளமான, கம்பீரமான நடையில் தந்திருக்கும் சிறுகதைகள் பிரமிப்பூட்டுபவை.
 
ஈழத்து எழுத்தாளர்களில் கர்நாடக சங்கீதம் குறித்து ஸ்ரீதரனைப் போல் இவ்வளவு ஆழ்ந்த ஞானம் கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை என்றே கூறமுடியும். மணக்கால் ரங்கராஜன் வாழ்க்கை விவரண ஒளிக்குறிப்புகள் என்று ஸ்ரீதரன் எழுதியுள்ள கர்நாடக இசை விமர்சனமானது, அவரது இசை ஞானத்தின் ஒரு தெறிப்பு.
 
ஈழத்து எழுத்தில் இருப்பியல்வாதப் பின்னணியில் எழுதப்பட்ட அழகிய கதையாக நிர்வாணம், தனி முக்கியத்துவம் பெறுகிறது. சிங்களக் கிராமியச் சூழலில், சிங்களக் கதாபாத்திரங்களைக் கொண்டு கதை நகர்கிறது.பேதிரிஸ் அப்புஹாமி என்ற அநுபவம் மிகுந்த லொறி டிரைவரின் மகன் லயனலுக்கூடாக இடம்பெறும் இருப்பியல்வாத விசாரம், கதை நிகழ்வுடன், கதைமாந்தரின் அன்றாட வாழ்க்கை இழையுடன் இறுகப்பின்னி மிளிர்வது தனிச்சிறப்பு.
 
‘என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்’ என்று கடிதம் எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிடும் லயனலின் முடிவு, கதையின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது. ஆனாலும், கதை நகர்த்தப்படும் பாணி, கதை முடியும் வரை ஆவலையும் ஆதங்கத்தையும் மனதில் அழுத்தி இழைத்துச்செல்கிறது.
 
மனிதன் அவாந்தரத்திலிருந்து கருக்கொள்வதில்லை. அவன் இயற்கை வனைந்த மண் குடமுமல்ல. அவன் இறைவன் அமைத்துவைத்த மேடையில், யாரோ எழுதிய வசனத்தை அப்படியே ஒப்புவித்துச்செல்லும் நாடகமேடை நடிகனுமல்ல. மனித இருப்புத்தான் மனிதனைப் புனைகிறது. இந்த மனித இருப்பின் அர்த்தம்தான் என்ன என்பது காலாந்தரமாக தத்துவவாதிகளின் விசாரணைப் பொருளாக இருந்திருக்கிறது. இந்த வாழ்வின் அர்த்தமின்மையை, அபத்தத்தை The Myth of Sisyphus என்ற நூலில் விசாரணை செய்கிறார் அல்பேர் காம்யு.

நிர்வாணம் கதையில் வரும் லயனலின் பாடசாலை ஆசிரியர், சிசிபஸ் கதையை அவனுக்கு சொல்கிறார்.
 
அறிவுபூர்வமான விளக்கத்தை அவாவும் மனிதனுக்கும், அர்த்தமோ நியாயமோ அற்ற உலகிற்கும் இடையில் நிலவும் முரண்பாட்டின் அபத்தத்தை வலிமையோடு பேசுகிறார் காம்யு. இந்த அபத்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தற்கொலை செய்துகொள்வது என்பதை, காம்யு திட்டவட்டமாக நிராகரிக்கிறார். மனிதன் இல்லாமல் அபத்தம் இல்லை. இந்த முரண்பாடு வாழ்ந்து தீர்க்கப்பட்டாக வேண்டும். இந்த முரண்பாட்டை எதிர்த்து, அவன் தொடர்ந்த கிளர்ச்சியை மேற்கொண்டாக வேண்டும் என்கிறார் காம்யு.
 
கடவுளர்களை எதிர்த்து, மரணத்தைச் சங்கிலியால் பிணைத்த சிஸிபஸிடமிருந்து, மரணம் இறுதியில் விடுதலை பெற்றுவிடுகிறது.தெய்வங்களின் சாபத்திற்கு ஆளான சிஸிபஸ், ஜீவிதம் முழுதும் தண்டனைக்குட்படுத்தப்படுகிறான். ஒரு பெரும் பாறாங்கல்லை அவன் மலையுச்சிக்கு உருட்டிச்செல்ல வேண்டும், மலையுச்சியைச் சென்றடைந்ததும் அந்தப் பாறை மீண்டும் கீழே உருண்டு சென்றுவிடும். சிஸிபஸ் மீண்டும் அந்தப் பாறையை மேலே உருட்டிச்செல்ல வேண்டும். சிஸிபஸ் மரணத்தை வெறுப்பவனாகவும், வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து தீர்ப்பவனாகவும், அர்த்தமற்ற இலக்கை நோக்கிப் பயணிப்பவனாகவுமே வார்க்கப்பட்டிருக்கிறான்.
 
“இந்த சிஸிபஸ் சாதிக்கிறது என்ன? கல்லை மேலே உருட்டிக்கொண்டுபோய்விட, அது திரும்பவும் கீழே வந்துவிடுகிறது. அவன் பிரயத்தனம் முழுக்க வீணாகப் பிரயோசனமில்லாமல் போகிறது. எங்கள் வாழ்க்கையெல்லாம் இப்படித்தான். இதை உணர்ந்தவனுக்கு… ஆழமாக உணர்ந்தவனுக்குத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தோன்றும். நான் இதைத் திருப்பிச் சொல்ல வேண்டும். வாழ்க்கை… மனித வாழ்க்கை நெருக்குவாரமானது; அபத்தமானது… பிரயோசனமில்லாதது” என்று இக்கதையில் பேசுகிறார் லயனலின் ஆசிரியர்.‘என் வாழ்க்கை இத்துடன் முற்றாக வேண்டும்’ என்று லயனல் தற்கொலைசெய்து கொண்டுவிடும்போது, ஒரு பரிதாபமான மரணத்தின் சோகம் நம் மனதைக் கௌவிக் கொள்கிறது.
 
லயனலின் மரணம் அல்பேர் காம்யுவின் அபத்த விசாரணைக்கு எதிர்த்திசையில் சென்று முடிந்துவிடுகிறது.
 
1978இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை இதழில் ஆறு வாரங்களாக, இருபது அத்தியாயங்களில் வெளியான நெடுங்கதை சொர்க்கம்.
 
கொட்டாஞ்சேனைக் கள்ளுக்கடை என்ற சொர்க்கபுரியில் திளைக்கும் கொழும்பு மாநகரசபைச் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் எசக்கியும் செவுத்தியும் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் சுத்திகரிப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்து வந்து கொழும்பில் சமூக உருவாக்கம் கண்ட சமூகத்தின் வாரிசுகள். சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் இருத்தலே தொலைந்துபோன நிலையில், எழுத்திலும் இவர்களின் வாழ்வு இடம்பெறாமல் போனதில் வியப்படைய எதுவுமில்லை.
 
இத்தொழிலாளர் வர்க்கம் குறித்து எழுதப்பட்ட முதற் கதை இதுதான் என்று கூறத் தோன்றுகிறது. இவ்வளவு ஆண்டுகாலமாக இந்த சமூகம் எழுத்தியக்கத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்பது யோசித்துப்பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஸ்ரீதரன் இச்சமூகத்திற்கு வெளியாள் எனினும், மனிதாபிமானம் மிகுந்த அவரின் பார்வை வீச்சில், இச்சமுதாயத்தின் ஒரு தோற்றம் இலக்கியப் பதிவு பெற்றிருக்கிறது.
 
ஒரு நகர்ப்புறச் சேரியின் கூச்சலும் அழுக்கும் அறியாமையும், குடியும் போதையும், அச்சமும் விசுவாசமும், அசூயையும் எதிர்ப்பும் மாறிமாறி இக்கதையில் கோலம்காட்டுகின்றன.
 
செவுத்தி வாழுமிடத்தை ஸ்ரீதரன் விபரிக்கிறார்:
 
‘பெரிய வீதியிலிருந்து கிளையாக ஒரு சின்ன வீதி புறப்பட்டு, அது எங்கேயோ போக, சின்ன வீதிக்குக் கிளையாக ஒரு சந்து நீண்டு, சேறும் சகதியும் நிறைந்தவொரு இடத்தில் முடிந்தது. தகரமும் மரமும் மண்ணும் கலந்த பொந்து. தனித்ததல்ல. ஒருமித்த பொந்துகளின் இடையில் அடைந்துபோனதொன்று. எதிரும் புதிருமாகவும் அக்கம்பக்கமாகவும் பொந்துகள்.
 
‘மனித சீவியம் எவ்வாறு இருக்கமுடியாதென்றும், இருக்கக்கூடாதென்றும் பல மேதாவிகளும் நினைத்தும் வற்புறுத்தியும் இருக்கிறார்களோ அது இங்கே, இந்தப் பொந்துகளில் இருக்கிறது. சேற்றில் புரள்கிற நாய்களும், அவற்றுடன் விளையாடித்திரிகிற சிறுவர்களும், சொற்களை வீசி அவற்றின் உரசலில் தங்களை இழக்கிற பெண்களும், நீரிலும் புகையிலும் அமிழ்ந்துபோன ஆண்களும், அழுக்கான அழுக்கும்… கர்த்தரே! இது நரக மாகத்தான் இருக்க வேண்டும். இது கொழும்பு மாநகரத்திலேதான் இருக்கிறதா?”
 
எசக்கி, செவுத்தியுடன், அவர்களின் குரு ஸ்தானத்தில் வீற்றிருக்கும் கரீமும், செவுத்தியின் மனைவி அலிஸ் நோனா, அவளின் இரு மகன்மார், எசக்கியின் மகள்மார், ‘கெம்பா’ என்ற அடியாள் தலைவன், பாதர் தியோப்பிலஸ் என்ற பாத்திரங்கள் சொர்க்கம் கதையில் தனித்த முத்திரைகளுடன் வெகு இயல்பாகத் தோற்றம் தருகிறார்கள்.
 
‘அவஸ்தைகளும் வதைகளும் ஏற்பட்டபோது, ஆண்டவன் இந்த உலகைப் படைத்திருக்கிறான். அவனது கனவும், அதன் தீர்க்கமான வடிவம்தான் இந்த உலகம்; தெய்வீக அதிருப்தியின் வண்ணச் சாயல்கள். நன்மை, தீமை, இன்பம், துன்பம், நீங்கள், நான் அனைத்துமே சிருஷ்டிகரத்தின் ஒளிக்கதிரில் வண்ணம்காட்டும் நீர்த்துளிகள்’ என்று நீட்ஷே கூறிச்செல்வதன் அப்பட்டமான வார்ப்புதான் ஸ்ரீதரன் உருவகித்திருக்கும் சொர்க்கம்.
 
இந்நெடுங்கதையின் பெரும்பகுதி கள்ளுக்கடையிலேயே சுழல்கிறது. இச்சமூகத்தின் கூட்டுவாழ்வின் மையமாக, அவர்களது வாழ்விடத்தின் மிக அண்மித்த கூறாக இக் கள்ளுக்கடை திகழ்கிறது. இந்த சமூகமாந்தரின் பிரவேசமும், வெளிச்செல்லுதலும் இந்த ஸ்தலத்திலேயே நிகழ்கின்றன. அது அவர்களின் சந்திப்புக்கூடமாக, பிரச்சினைகளைப் பேசித்தீர்க்கும் மன்றாக, மன அவசங்களின் வடிகாலாக, எதிர்கால நடவடிக்கைகளின் திட்ட அரங்காக, தனிமையை வெல்லும் சாதனமாக, தாகசாந்தினியாக, உலக அழுத்தங்களை எல்லாம் மீறிச் செயற்பட முடிகிற வெளியாக, ‘சொர்க்கமாக’ இது அமைந்துபோகிறது.
 
‘ஒரு பிரகாசமான காலைப்பொழுதில், லாந்தர் விளக்கைக் கையில் ஏந்தியவாறு சந்தைச் சதுக்கத்திற்கு ஓடிச்சென்ற ஒரு பைத்தியக்காரன், “நான் கடவுளைத் தேடுகிறேன், நான் கடவுளைத் தேடுகிறேன்” என்று அழுது அரற்றும் நீட்ஷேயின் குரல், சொர்க்கம் கதையில் வரும் செவுத்தியின், “ஏ பாதரே! உன் கடவுளைக் கூப்பிடு, உன் கடவுளைக் கூப்பிடு, உன் கடவுளைக் கூப்பிடு” என்ற அலறலில் எதிரொலிக்கிறது.
 
சொர்க்கத்தில் செவுத்தியும் எசக்கியும் கரீமும் அருகருகே இருந்து அமுதம் பருக, “என் பிதா எனக்குத் தந்த கோப்பையில் அல்லவோ நான் பருக வேண்டும்” என்று பாதர் எதிர்வழியே நடக்க ஆரம்பிப்பதாகக் கதை முடிகிறது.

அவனவன் பாத்திரத்தில், அவனவனுக்குக் கிடைத்ததைப் பருக்கிக்கொள்ள வேண்டியதுதான் என்ற அர்த்தத்தில், இக் கதைக்குச் சில எழுத்தாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
 
ஆனால், ‘என் பிதா எனக்குத் தந்த கோப்பை’ என்பது சிலுவை என்றும், அது வதையையும் மரணத்தையும் குறிக்கிறது என்றும், மனுக்குலத்தின் நன்மைக்காக தன் வாழ்வையே பரித்தியாகம் செய்வதற்கான அழைப்பு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதையும் நாம் நினைவுபடுத்தலாம்.
 
பாத்திரச் சித்திரிப்புகளும், சம்பவக் களங்கள்பற்றிய விபரிப்பும், வெவ்வேறுபட்ட மொழிவழக்குகளைப் பாவிக்கும் லாவகமும், அற்புதமான நடையும் ஸ்ரீதரனைத் தனித்துவம் மிக்க எழுத்தாளராக நிலைநிறுத்துகிறது.
 
அலையில் வெளியான ராமசாமி காவியம் ஸ்ரீதரனின் அயனான படைப்பு. மலையகத் தமிழரின் கொடூர – இருண்ட வாழ்வின் ஒரு சரித்திரகதியை ஒரு கதைக்குள் அழியாத சமூகச் சித்திரமாக்கிய சாதனையின் வெளிப்பாடுதான் ராமசாமி காவியம்.
 
ராமசாமி காவியம் அழகான தலைப்பு. மலையகக் கூலிகளின் இனப்பொதுப்பெயர் ராமசாமி என்கிறார் வில்லியம் டிக்பி என்ற ஆங்கில எழுத்தாளர். ராமசாமிகளும் மீனாட்சிகளும் சிங்கள இனவாதக் கருத்தாடலில், அரசியல் பேச்சுகளில் வெகுசாதாரணமாகப் புழங்கிவரும் பெயர்கள்தான்.இந்தக் கதையில் வரும் ராமசாமியும் மீனாச்சியும் மலையகத் தொழிலாளர்களின் வகைமாதிரிப் பிரதிநிதித்துவத்தின் குறியீட்டுப் பெயர்களாகவே அமைந்துபோகின்றன.
 
1970களின் ஆரம்பக்கூறில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தோட்டப் புறங்களில் நிலவிய பஞ்சமும் பட்டினியும் மலையகத்தின் மிக அண்மைய வரலாற்றில் நாம் காணக்கிடக்கும் கொடூரமான யதார்த்தங்களாகும். பஞ்சம் போக்குவதற்காகத் தோட்டங்களை விட்டு, வெளியிடங்களை நோக்கித் தோட்டத் தொழிலாளர்கள் புலம்பெயர ஆரம்பித்திருந்த காலம் இது. வீடுகளில், நகைகளிலிருந்து பித்தளைப் பாத்திரங்கள் வரை பட்டினியைப் போக்க, நகை அடைவுகடைகளை நிறைத்த நேரம் இது. இந்தப் பஞ்சத்தின் பின்னணியில்தான் தெளிவத்தை ஜோசப்பின் மண்ணைத் தின்று என்ற சிறுகதை எழுந்திருக்கிறது.
 
1970ஆம் ஆண்டுகாலப்பகுதி மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் துயர்நிறைந்த ஒரு தசாப்தத்தைக் குறித்து நிற்கிறது. வன்முறைத் தாக்குதலும், உயிராபத்தும், வயிற்றைக் கழுவத் திசைகெட்டு அலைந்த நிர்க்கதியும், பீதியும் பயமும், சிதைந்துபோன நம்பிக்கைகளும், விரக்தியும் ஏமாற்றமும், இழிவுக்கும் ஏளனத்துக்குமுள்ளான மனித அவஸ்தைகளும் இந்த தசாப்தத்தை, கொடிய இருளின் குவிமையமாக்கியிருந்தது.
 
தேயிலைத் தோட்டங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட கையோடு இவ்வன்முறையும், உணவுப்பஞ்சமும், தோட்டங்களில் வேலை கிடைக்காத நிலைமைகளும் சேர்ந்து, தோட்டத் தொழிலாளர்களை அவர்கள் காலங்காலமாக வாழ்ந்த தோட்டப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி வவுனியா, கிளிநொச்சி, மாங்குளம், முத்தையன்கட்டு போன்ற பிரதேசங்களை நோக்கிப் பெயர நிர்ப்பந்தித்தது.
 
கம்பளையை விட்டு, வவுனியாவில் முத்தையன்கட்டிற்குத் தன் மனைவி, பிள்ளைகளுடன் வேலை தேடிப் புறப்படும் ராமசாமியின் அவலவாழ்வு ரணத்தின் வரிகளாக ஸ்ரீதரனின் இச்சிறுதையில் பதிவாகிறது.
 
மலையக சமூக வரலாற்றில் ஸ்ரீதரனின் ராமசாமி காவியம் என்ற சிறுகதையும், வண்ணச்சிறகு எழுதிய, சென்று வருகிறேன், ஜென்மபூமியே என்ற கவிதையும் இலக்கிய மகுடங்களாக அமையவல்லன.
 
எழுபதுகளில் மலையகத்திலிருந்து வேலை தேடி, மாங்குளத்துச் சந்தியில் அலையும் ராமசாமியைப் பற்றிய ஒரு காலகட்ட நிலைமையின் ஸ்தூல வார்ப்பாக இச்சிறுகதை அமையும் அதேநேரத்தில், நூறாண்டுக்கால மலையகத் தொழிலாளர்களின் துயரவாழ்வின் அடிச்சரடாயும் வியாபகம் கொள்ளும் சிறப்பு, இச்சிறுகதைக்கு அலாதியான மெருகு சேர்க்கிறது. 19ஆம் நூற்றாண்டிலிருந்து வேலை தேடி, தோட்டம்தோட்டமாக அலைந்த வாழ்வின் ஓட்டம் இன்னும்தான் நிற்கவில்லை.
 
ராமசாமி காவியம் கதையின் ஆரம்ப வரிகள் மலையக மக்களின் நூற்றாண்டுத் துயரைச் சுமந்து நெஞ்சில் கனல் கொட்டுகின்றன.

‘இந்த ராமசாமி மனிதனாகக் கருதப்பட்டதற்குச் சரித்திரமில்லை. தேயிலைச் செடிக்குள் ‘எல்லாமிருக்கும்’ என்று நம்பிக் கடல்கடந்த சீவராசிகளின் சந்ததியில் வந்தவன் மனிதனாக முடியுமா? காட்டையழித்துப் பச்சைக் கம்பளம் போர்த்து, அதைப் பேணி உணவுப் பிச்சையளித்தவன் மனிதனாக முடியுமா? இதெல்லாம் ராமசாமிக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள். இன்று இந்த மாங்குளத்துச் சந்தியில், வெய்யில் நெருப்பில், அதை வெல்கின்ற வயிற்று வெக்கையுடன் ‘மீனாச்சி’, ‘செவனு’, ‘மூக்கையா’வுடன் அலைந்து அவன் திரிவது ஒரு வெறும் பௌதிகநிலை. இதனால், இக்கணத்தில் இவன் மனிதனேயில்லை.’

நிர்க்கதியாக மாங்குளச் சந்தியில் நிற்கும் ராமசாமியை – மனிதவாழ்வின் மிகத்தாழ்ந்த எல்லைக்குள் – அந்தகாரத்துக்குள் திணிக்கப்பட்ட ஒரு மனிதஜீவனை ‘வெறும் பௌதிக நிலை’யாக மட்டுமே காணும் அசாதாரணமான தீட்சண்யத்தை, தனது கதையின் ஆரம்பத்திலேயே அபாரமாக வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீதரன் சிந்தாமல் சிதறாமல் அந்த அவலத்தை ராமசாமி காவியத்தில் அமரத்துவமாக்கியிருக்கிறார். ராமசாமி வன்னிப்பகுதியில் வேலை தேடிச்செல்லும் நிலையையும், மிளகாய்த் தோட்டங்களில் இவர்களின் உழைப்பு சுரண்டப்படும் விதத்தையும் விபரிக்கும் இடங்களில் இந்த அப்பாவி ஜீவன்களுக்காக நாம் நெஞ்சுருகிப்போகிறோம். ஸ்ரீதரனின் நேரடி அநுபவத்திலிருந்து, கூர்மையான அவதானிப்பிலிருந்து, ஒரு சமூகத்தின் பரந்த, நீண்ட பகைப் புலனிலிருந்து இக்கதை எழுகிறது.
 
மலையகத்திற்கு வெளியே, தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வாழ்வுப் போராட்டத்தினைச் சித்திரித்த அழியாத – தலையாய கதையாக ராமசாமி காவியம் என்றென்றும் பேசப்படவல்லது. இக்கதையில் நிகழ்ச்சிகள் விரியும் களமும், நுணுகிய கால எல்லைக்குள் சந்திக்க நேரும் மனித மனங்களின் விசாலமும், சில குறுகிய மனங்களின் சுரண்டல் மனோபாவமும் அகங்காரமும் வெறுமையும் கதையில் மிக இயல்பாகப் பிணைந்து, ஸ்ரீதரனை முதல்தரமான படைப்பாளியாக அடையாளங்காட்டுகிறது. இந்தக் கதையில் எந்தப் பகுதியையும் தள்ளிவிட்டுப்போக முடியாது. தேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு நீர்ப்பாசனவியல் விஞ்ஞானி செதுக்கித் தந்திருக்கும் அற்புதமான படைப்பு இது.
 
வடக்கில் சாதியக் கொடுமைக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் களத்தில் விரியும் மூலஸ்தானம் சிறுகதையை அவரது ஆரம்பச் சிறுகதை என்று பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது.
 
யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்ல முயலும் நீதியான போராட்டத்தினை ஆதரித்துநிற்கும் குருக்கள், கள்ளுக்கொட்டில் மார்க்கண்டு, கோயில் முகாமையாளர் என்ற சூழலில் படைக்கப்பட்ட ‘முற்போக்கு’ச் சிறுகதை இது. ஜெயகாந்தனின் தாக்கம் இந்தக் கதையில் சற்றுத் தூக்கலாகவே தென்பட்டாலும், யாழ்ப்பாண மண்ணில் காலாதிகாலமாக நடந்துவரும் உரிமை மறுப்பின் அநீதியை, கதை ஆக்ரோஷத்துடன் சொல்ல முயன்றிருக்கிறது. பொறியியல்துறை சார்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவரின் எழுத்தில் தெரியும் மூர்ச்சனை நம்மை அசரவைக்கிறது.
 
வேளாள அகங்காரத்திற்கு எதிரான போராட்ட ஜுவாலையின் அக்னிப்பொறியாகத் தலைநிமிர்த்தும் கந்தசாமிக் குருக்களுக்காக மனம் பனித்துப்போகிறது. யாழ்ப்பாணத்தின் தலித் போராட்ட வரலாற்றின் ஒரு பரிணாமத்தை வெளிக்கொணரும் பாங்கில் மூலஸ்தானம் சிறுகதை ஒரு சரித்திர முக்கியத்துவத்தைக் கோரிநிற்கிறது.
 
வாழ்வின் கொடூர ஒடுக்குமுறைக்குள் உழல நேர்கிற மனிதஜீவிகள்மீது ஸ்ரீதரன் காட்டும் வலிமையான மனிதாபிமானப் பார்வை அவரது சிருஷ்டிகளுக்கு அலாதியான கௌரவத்தைச் சேர்க்கிறது.
 
மலையகப் பிராந்தியத்திற்கு வெளியில் மலையக மக்கள் படும் துயரை யதார்த்தபூர்வமாகச் சித்திரிக்கும் ராமசாமி காவியம் இவ்வகையில் தனிக்கதை – ஒரே கதை – தனித்துவம்மிக்க கதை.
 
ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கையில் அமெரிக்காவாழ் தமிழர்கள்பற்றிய புனைவுகள் தமிழில் எதுவுமே இல்லை என்ற நிலையில், தொடர்புகள் என்ற சிறுகதை புலம்பெயர் இலக்கியத்தின் மிக அபூர்வமான கதையாக வெளிப்பட்டிருக்கிறது.
 
ஈழத்து தமிழர்களின் புலம்பெயர் வாழ்கையில் அமெரிக்கவாழ் தமிழர்கள்பற்றிய புனைவுகள் மிக அருந்தலாகவே வெளிப்பாடு கண்டிருக்கின்றன.
 
1993இல் கனடாவில் வெளியான தாயகம் சஞ்சிகையில் வ.ந. கிரிதரன் எழுதிய அமெரிக்கா என்ற குறுநாவல், அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அகதிகளின் நிலையை விபரிக்கிறது. தனது சொந்த அநுபவத்தின் பலத்தில் எழுதப்பட்ட இக்குறுநாவல், மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருகின்ற மகத்தான பூமி எனக் கருதப்படும் அமெரிக்காவில், அகதிகள் அநுபவிக்கும் கொடூரத்தை நிதர்சமாகச் சித்திரித்திருக்கிறது.

சித்தார்த்த ‘சே’ குவேரா என்ற புனைபெயரில் அமெரிக்காவில் இருந்து இரமணிதரன் எழுதியுள்ள சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதைப் புனைவில் புதிய பாய்ச்சலைக் காட்டிநிற்கின்றன. அவரது எழுத்தின் வீச்சு அசாதாரணமானது.அமெரிக்காவாழ் காஞ்சனா தாமோதரனின் வரம், மரகதத் தீவு ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் தனியே விதந்துரைக்கத் தக்கன.அமெரிக்காவில் ஊன்றிவிட்ட ஈழத்தமிழர்களின் நடப்புலகம்பற்றிய அபூர்வமான சித்திரிப்பாக ஸ்ரீதரனின் தொடர்புகள் என்ற சிறுகதை அமைகிறது.
 
அமெரிக்காவில் தமது தொழிலைத் தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தின் மத்தியில், தனது குடும்பத்தினர் இலங்கையின் யுத்தபூமியில் நின்று படும் அவஸ்தைகளையும், உயிரிழப்புகளையும் ஸ்ரீதரன் வெகு யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார். ஈழத்தமிழர்களின் அவஸ்தைகள் குறித்து எந்தக் கரிசனமும் இல்லை என்பதைவிட, அவர்களின் துயர வாழ்வையே கேலியாக நோக்கும் ‘உயர்மட்டத் தமிழர்களின்’ பார்வையை எள்ளலோடு பின்னிச்செல்வதில் ஸ்ரீதரனின் எழுத்து வல்லபம் பளிச்சிடுகிறது.
 
ஈழத்தமிழர்களின் அத்லாந்திக், பசுபிக் சமுத்திரங்கள் தாண்டிய குடும்ப உறவுகளின் வியாபகம், ஈழத்து உயர்குழாத்தினர் அகதிகளாகப் புலம்பெயர்ந்தோரை இழிவாகக் கருதும் மனோநிலை, காவியுடைகளின் சர்வலோகப் பிரசன்னம், ‘கார்கள், வீடுகள், முதலீடுகள், விஸ்கி இவற்றைத் தவிர வேறெதுவுமே’ தெரியாத தமிழ்க் குழாத்தினர், ‘ராஜீவ் காந்தியை கொலைபண்ணியது நான்தான் என்கிறமாதிரி’ நடந்துகொள்ளும் தமிழ்நாட்டுக்காரர் கிருஷ்ணன், ‘உங்கள் மச்சானை இன்னும் ஆமிக்காரர் பிடிக்கேல்லியோ’ என்று கண்ணாடியை நிமிர்த்திக்கொண்டு கேட்கும் திருமதி புண்ணியமூர்த்தி என்று இச் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என்று அனைத்தும் இணைந்து புலம்பெயர் சமூகத்தின் ஒரு நடைமுறைத் தோற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
 
தொடர்புகள் கதையில் அங்கதமும், எள்ளலும் குமிழிட்டாலும், கதையில் ஆத்மார்த்தமான ஒரு சோகராகத்தின் ரீங்காரம் இழையோடிக்கொண்டேயிருக்கிறது.
 
இரண்டாயிரத்து ஒன்று, ஸ்ரீதரனின் லாவகமான சூழல் சித்திரிப்புத்திறனுக்கு இன்னுமோர் சாட்சியம். மழையும் புயலும், இடியும் மின்னலும், வெள்ளமும் நீர்ச்சுழலுமாய்க் குடிசைகள் பிடுங்கி எறியப்பட்டு, மக்கள் நிராதரவாய் ஊர்ப் பாடசாலையில் ஒதுங்க நேர்வதையும், உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவதையும் தேர்ந்த எழுத்துநடையில் விபரிக்கும் ஸ்ரீதரன், ‘இனி மழை ஓய்ந்துவிடும் என்கிற உணர்வு இவனுக்குள் எழுந்தது. கொஞ்சம் பொறுக்கத்தான் வேண்டுமென்று முணுமுணுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரனையும் சேர்த்துக்கொண்டு பீடியும் நெருப்பும் தேடிப்போக ஆயத்தமானான்’ என்று எழுதி முடிப்பதில், எல்லா அவலங்களுக்குள்ளும் வாழ்வு துளிரிடும் அம்சம் வேர்கொள்கிறது.
 
விஸ்வ சம்பவம் ஒரு பரீட்சார்த்தச் சிறுகதையாகத் தனித்துநிற்கிறது. ‘விஸ்வரூபம்’ என்ற சொல் நமக்குப் பரிச்சயமானதுதான். ஆனால், வாழ்வின் ஒரு புள்ளியில் இடம்பெற்ற சம்பவம் வாழ்நாள் பூராவும் உறுத்திக்கொண்டிருப்பதை விஸ்வ சம்பவம் என்ற சிறுகதையின் தலைப்புச் சுட்டுகிறது. அவன், அவள் என்ற இருவருக்கிடையிலான உரையாடலுக்கூடாக இச்சிறுகதை பின்னப்பட்டிருக்கிறது. மிகவும் பூடகமான கதை.
 
‘ஒரு பொழுது கழிவதற்குமுன் வெய்யிலும் வியர்வையும்’ என்ற வரிகள் இளமையில் யாழ்ப்பாணத்தையும், ‘இப்போது குளிர். இந்த ஆற்றங்கரை’ என்பது புலம்பெயர்ந்த குளிர் நாடொன்றில் தரித்திருப்பதையும் இக்கதை சுட்டுகிறது.
 
சின்ன வயதில் அவன் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்ட சம்பவம் வெகு சொற்பவரிகளிலே கதையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது விஸ்வ சம்பவமாய் அவன் வாழ்நாள் முழுவதையும் அசக்தனாக்கிவிட்ட பலவீனத்தைப் போக்க, தன் மனைவியின் துணையை நாடும் அவனது நிலையும், மனைவியின் வாதமும் நுட்பமான தர்க்கத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகின்றன.
 
இவர்கள் வெளியே இருக்கிறார்கள் – ஸ்ரீதரன் நடப்புலகின் போலித்தனத்தின் மீது கொண்டிருக்கும் தார்மீக கோபத்தின் வெளிப்பாடு. இந்தக் கதையில் வரும் சமய ஸ்வாமிகளின் பிரசங்கக் கூட்டங்கள் இன்றும் நாம் எல்லா இடங்களிலும் காணமுடிகிற கூட்டங்கள்தாம். ‘த்வனி பேதம் செய்து, பாட்டுகள் பாடி, கதைகள் சொல்லி, ஹாஸ்யம் பண்ணி’ ஸ்வாமிகள் நடத்தும் சமத்காரமான பேச்சினை எழுதிச்செல்லும் இடங்களில் ஸ்ரீதரனின் நுட்பமான எள்ளல் பளிச்சிடுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாபற்றியெல்லாம் விந்நியாசம் நடந்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், அரசாங்க வேலையில் இடமாற்றம்பற்றிய ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டு, ‘குடுக்கிற காசுக்குப் பிழை வராதே’ என்ற பரிதாபமான கேள்வியும் எழுப்பப்பட்டு, ஆத்மீகக் கூட்டங்களின் அருவருப்பான போலித்தனம் மிகுந்த கலைரசனையோடு இக் கதையில் வெளிப்படுத்தப்படுகிறது.
 
மாமூல் வாழ்க்கையின் செக்குமாட்டுச் சுழலில் ‘ஒருத்தனாய்’ இருந்த கிளார்க் கந்தசாமியின் வாழ்க்கை ஓட்டத்தில், அலுவலகத்திற்கு வந்துசேர்ந்த புதிய டைப்பிஸ்டின் வரவு, அவனது மௌடீகத்தை உடைத்து, ‘ஒருத்தன்’ என்ற நிலையிலிருந்து விலத்தி, சாதாரண மனிதனாக்கிவிடும் பாங்கினை ஒரு புதிய யுகத்தை நோக்கி என்ற சிறுகதை, இருத்தலியல் சாயலில் விபரிக்கிறது.
 
குயில் பாட்டு சிறுகதையில், பாரதியின் காதல் வரிகளில் தோய்ந்துபோன ஸ்ரீதரன், பஸ் நிற்பாட்டும் இடத்தில் கதிர்காமநாதன் தன் குயிலைக் கண்டு, தூரத்தே நின்று காதல் கொண்டு, காதல் அவஸ்தை கொண்டு, செத்துவிடுவதைக் கூறிச்செல்லும் பாணி ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. பாரதியின் கவிதை வரிகளும், ஸ்ரீதரனின் கதைப்பின்னலும் இழைந்து மெருகூட்டுகிறது.
 
சரித்திர நிகழ்வுகள் உள்ளபடியே உண்மையாய் ஒருவிதமாக அமைய, சரித்திர ஆய்வுகள் எவ்வாறு உண்மை நிகழ்வுகளைக் கிட்டவும் சென்று அணுகாமல், மாபெரும் நிகழ்வுக் கருத்தாடலாகக் கட்டமைப்புச் செய்யப்படுகின்றன என்பதுபற்றிய ஒரு சித்திரம் காவற்காரர்கள்!

இன்று, பின்நவீனத்துவச் சிந்தனைகள் உண்மை, பகுத்தறிவு, அடையாளத்துவம், புறவயத்தன்மை பற்றிய செவ்வியல்ரீதியான எண்ணக்கருக்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மனித விடுதலைபற்றி இதுகாலவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள்கள்மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளன. ஒற்றைத் தனிச் சட்டகத்துக்குள், பெருங்கதையாடல் விபரிப்புகளை அது உடைத்துப்போட்டிருக்கிறது. உலகம் பன்முகப்பட்டதாக – ஸ்திதியில் தளம்பல்கள் கொண்டதாக – நிர்ணயமான முடிவுகள் எடுத்துக்கொள்ள இயலாததாக – ஒத்திசைவில்லாத பல்வேறு கலாசார வியாக்கியானங்களின் கதம்பமாக அமைவதை அது வலியுறுத்துகிறது. சரித்திரம் என்பதை மையத்தில் கெட்டிதட்டிப்போன அரசியலின் வெளிப்பாடாக அது நோக்குகிறது.
 
உண்மை/அழகு/சத்தியம்/வாய்மை/நேர்மை/இன்பம்/அறிவு/எண்ணம்/அநுபவம் போன்றன சகல சிந்தனை மரபுகளிலும் ஆராய்விற்குட்பட்ட விவகாரங்களாயினும், இன்று அவை புதிய வெளிச்சத்தில் அலசப்படுகின்றன.
 
ஸ்ரீதரனின் இராமாயண கலகம் உண்மைபற்றிய தேடலை புராணக்கதையின் படுதாவில் பரிசீலனைசெய்ய முயலும் கதை.
 
“உண்மையும் நேர்மையும் இவர்களுக்கு என்றுமே தெரியப்போவதில்லை” என்ற ஏக்கத்துடன் பூமாதேவியுடன் ஐக்கியமாகும் சீதாபிராட்டியின் மனச்சுமையோடு ஆரம்பமாகும் கதை இராமாயண கலகம்.

இவ்வுலகை அறியவேண்டுமென்கிற அவாவுடையவனாக – இராமகதையின் முழு விபரங்களையும் அறிந்து, உணர்ந்து சேவித்துக்கொள்ள வேண்டும் என்கிற ஞானநோக்கில் இராமகதையின் தடம்தேடிப் புறப்படும் படகோட்டி குகனின் சந்ததியினனான பரதனின் உண்மையைத் தேடும் யாத்திரை இது.
 
“நீ இளவயதுக்காரன். உனக்கெவ்வளவோ எதிர்காலம் உண்டு. அதுவே புதிராக இருக்கப்போகிறது. கடந்தகால நிகழ்வுகளைப் பற்றியே ஏன் இவ்வளவு ஆய்கிறாய்?”
 
“எதிர்காலம் நிச்சயமானதில்லை. எதுவும் நடக்குமா என்று தெரியாது. ஆனால், கடந்தகாலம் நிச்சயமானது. நடந்தது. தடயம் கிடைத்துவிட்டால், நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுவிடும். எந்த உண்மையையும் நடந்ததைவைத்தே சொல்கிறார்கள். நடக்கப்போவதைவைத்துச் சொல்கிறார்களா? எனக்குத் தடயங்களின் உண்மை தெரியவேண்டும்” என்கிறான் இக்கதையில் வரும் மையநாயகன்.
 
கடந்தகால அநுபவங்களின், நடந்தவைகளின் உறுதிப்பாட்டிலிருந்து “இது இவ்வாறு இருக்கக்கூடும்”, “இந்த நிலைமை இப்போது சாத்தியமாகலாம்” என்று நிகழ்தகவுகளாகக் கூறமுடியுமே தவிர, அளவையியல் உறுதிப்பாட்டுடன் (logical necessity) கூறப்பட முடியாது என்பது மெய்யியல் கருத்தாகும்.
 
“ஒரு பதில்” என்பது “புதிய கேள்விகள்” என்ற மிகப்பெரிய குடும்பத்தின் தந்தை மாதிரியாகத்தான் முடிந்துபோகிறது என்கிறார் ஸ்ரெயின்பெக்.

உண்மைகள் போலியாக – குருட்டு நம்பிக்கைகளின் அர்த்தத்தில் அதிகார ஊற்றாக உருவகிக்கப்பட்டுப் பேணப்பட்டுவருவதை இக்கதையின் நாயகன் அறியவருகிறான்.
 
உண்மைகள் எனப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவைகள்மீது ஐயங்கொண்டு, அவற்றின் உண்மைத்தன்மையினை அறிய முனைந்த இந்நாயகன், அந்த சத்தியவேட்ட லுக்குத் தன் உயிரையே பலிகொடுக்கவேண்டிய அவலத்தைச் சித்திரிக்கிறது இராமாயண கலகம்.
 
“நீ எப்படி சீதையின் சிறையிடம் அழகியபுரிவனம் என்று சொல்லுவாய்? எவ்வளவோ கடினத்துடன் உன்னைச் சீதை சிறையிருந்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனோமே! யுத்தகளங்களையுந் தாண்டிக் கூட்டிக்கொண்டு போனோமே! நாங்கள் என்னை மடையர்களா? ஏன் தவறான இடத்தை எல்லோருக்கும் சொல்கிறாய்?…” என்று உண்மைகளைக் கட்டியமைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கொதித்துப் போகிறார்கள், இந்தக் கதையில்.
 
சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம் மட்டுமல்ல, இன்று தமிழ்ப் பெண்களும் ஆண்களும் எங்கு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையே தெரியாமல் நாடு பரிபாலனம் செய்யப்பட்டுவருவதை நாம் உணர்வோம். செம்மணிகளில் சடலங்கள் அல்ல, உண்மைகளே புதைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் உண்மைகள் இன்று குப்பைக் கூடைக்குள் வீசியெறியப்பட்டுவிட்டன. மனித உரிமை அமைப்புகள், மனிதாபிமானிகளின், சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள், ஜனநாயகக் கோரிக்கைகள், மனுக்கள், உயர்மட்ட அமைப்புகளின் வேண்டுகோள்கள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போய்விட்டன. இராமாயணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை உண்மைகள் ஒருபோதும் நம்வசப்படுவதில்லை.
 
எமது விஞ்ஞான அறிவு பாரதூரமான எல்லைக்கட்டுகளைக் கொண்டிருப்பது இன்று முன்னென்றுமில்லாத அளவுக்கு வெளித்தெரியவந்திருக்கிறது. இன்று உருவாகிக்கொண்டி ருக்கும் குழப்பம் (chaos) மற்றும் சிக்கல்பிக்கலான முறைமைகள் பற்றிய கோட்பாடுகள், விஞ்ஞானத்தின் ஆதிக்கம், அதன் உறுதியான தன்மை என்பவற்றை உலுக்கியுள்ளன. Chaos என்பது ஒருவித ஒழுங்கமைப்பு என்று அறியப்படுகிறது.
 
பல்வேறு சிக்கலான அமைப்பின் கூறுகள் தனித்தனியே ஒவ்வொன்றுடனும் தொடர்புகொண்டு, ஒட்டி உறவாடி சுயசார்பான – தன்னெழுச்சியான அமைப்புகளை உருவாக்கிக்கொள்கின்றன. இந்தத் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் கீழைத்தேய பிரபஞ்ச அறிவின் பின்னணியில் ஆராய முயலும் ஸ்ரீதரனின் புதிய பயில்களம் அம்பலத்துடன் ஆறு நாட்கள் என்னும் நீண்டகதை. இந்த தத்துவ விசாரணையைத் தடைப் படுத்திவிடாத கதையோட்டம், ஸ்ரீதரனின் சிருஷ்டியாற்றலுக்குச் சிறப்பான சாட்சியம் கூறுகிறது. ஸ்ரீதரனின் எல்லாக் கதைகளிலும் உட்சரடாக இழையும் தத்துவ விசாரத்தின் விகாசமாக அம்பலத்துடன் ஆறு நாட்கள் அமைந்திருக்கிறது.
 
• இயற்கைச் சக்தி தாயக்கட்டை உருட்டுவதில்லை.
 
• எல்லாவற்றிற்கும் ஒரு நேரம், ஒரு இடம் இருக்கும். அந்த இயற்கையைக் குலைக்காதே. கேட்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. பதில் சொல்வதற்கும் ஒரு நேரம் இருக்கிறது.
 
• என்ன கணக்குகள் போடுகிறாய்?
 
• எல்லாம் எனக்கு நடப்பவற்றைப் பற்றித்தான். எனக்கு நடப்பவற்றில் நீயும் இருக்கிறாய் – இதோ இந்த எருமைகளும் இருக்கின்றன. சங்கரனும் இருக்கின்றான். இடப்பக்கத்து அறையில் கணபதியும் சின்னத்துரையும் இருக்கிறார்கள். வலப்பக்கத்து அறையில் லிங்கமும் ஆறுமுகமும் இருக்கிறார்கள்.
 
• ஏ, முட்டாளே! எத்தனைதரம் நான் உனக்குச் சொல்வது? நடப்பவையெல்லாம் தனித்தனியாக நடப்பவையல்ல. எல்லாம் தொடர்புள்ளவையாகவும் தொடர்ச்சியாகவும் நடக்கும். பார்த்தாயா?
 
• எல்லாச் சம்பவங்களும் எங்கள் கட்டுப்பாட்டில் நடப்பதில்லை என்றால், சம்பவங்கள் எப்படியும் போக்கற்று, தாயக்கட்டை உருட்டுவதுபோல் நடக்கலாம் என்பதில்லை. சம்பவங்களுக்குள் ஒரு காரண-காரியத் தொடர்பு இருக்கும்.
 
• இந்தப் பூமி தொடக்கமுமில்லை; வானம் எல்லையுமில்லை.
 
• மனிதனுக்கான சாபம் இதுதான். கணத்துக்குக்கணம் கிடைப்பதைவைத்தே வாழ்க்கையை ஓட்டப்பார்க்கிறோம். நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்ற யோசனை கொஞ்சமும் உன்னிடம் இப்போது இல்லை, பார்த்தாயா? ஆனால், எல்லாவற்றிக்கும் தொடர்ச்சியிருக்கிறது.
 
எக்ஸிஸ்டென்ஸலிஸத்துடன் கீழைத்தேய வானியல் சிந்தனையையும் இழைத்து, புதிய பார்வையைக் கதையில் தருகிறார் ஸ்ரீதரன்.
 
சமூகத்தில் பல கதைகள் இருக்கின்றன; பலபேரின் கதைகள் இருக்கின்றன. சொல்லப்பட்டவை சில. அறியப்பட்டவை சில. பல கதைகள் வீறாப்புடன் ஒலிக்கின்றன. மிகப் பல கதைகள் முனகலாய் – தொலைதூர ஓசையாய் அருகிப்போய்க் கேட்கிறது. எல்லோர் கதைகளும் சொல்லப்பட வேண்டியவை. தனித்த ஒரு ஆதர்ஸக் கதாநாயகனின் கதை மட்டுமல்ல. சாராயம் குடிக்கப்போவதில் எப்போதும் கவனமாக இருக்கும் மணி இந்தக் கதையின் மிகப் பெரிய protoganist ஆக வருகிறான்.
 
சிறைச்சாலை, சங்கிலிகள் நிலத்தில் உராய்ந்து எழும் சப்தம், கம்பிக்கதவுகள், கல்லுடைக்கும் மலைப்பாங்கான இடம், தள்ளுவண்டிகள், செங்கற்சூளைகள், நாற்சார் வீடு என்று அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையில் ஸ்ரீதரன் கோலங்காட்டும் நிலவியல் பரப்பு யதார்த்தத்திலும் கற்பனா யதார்த்தத்திலுமாய் மாறிமாறி அமைகின்றன.
 
அதிகாரப் பரம்பரையின் ஆணவம், தொழில்போட்டி, காட்டிக்கொடுப்பு, கொலை, காணிச்சண்டைகள், எஞ்சினியர் – டாக்டர் படிப்புகள், ஊழல்கள், லஞ்சங்கள் சகோதர உறவுகளை வெட்டித்தள்ளும் வாழ்க்கைப் பந்தயம், பணத்தின் வீம்பு போன்ற நடப்பியல் அறவியல்கூறுகளை ஊடுருவிச் சாடும் ஸ்ரீதரனின் எழுத்தில் சாகஸங்களும் இழைந்து மெருகு சேர்க்கின்றன.
 
சிறையிலிருந்து தப்பிப்போக பணவசதி படைத்த இரண்டு பேர் மேற்கொண்ட ஏற்பாட்டில் நேர்ந்த அந்தக் கணநேர மாற்றத்தில் தாடியம்பலமும் சிவமும் தப்பிச்சென்றுவிடும் வினோதம், குடைச்சாமியின் வீட்டை யார் எரித்தார்கள், அவர் உயிருடன்தான் இரக்கிறாரா என்ற புதிர், என் கணக்குகள் எனக்குத்தான் தெரியும்; நான் பிரியவேண்டிய நேரம் வந்து விட்டது என்று புறப்பட்டுவிடும் தாடியம்பலத்தின் தீர்க்கமான பாதை என்று ஸ்ரீதரனின் மொழி விரிக்கும் புனைவுலகம் நவீனத்திற்குரிய ஒன்று.
 
ஸ்ரீதரனின் பார்வைக்கோணமும் எழுத்துவளமும் ஈழத்து இலக்கிய உலகில் அவரைத் தனித்துவமான எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றன. சம்பவங்களைக் கொண்டு கதை பின்னுவதற்கப்பால் வாழ்க்கையைத் தத்துவப் பகைப்புலத்தில் அணுகும் தன்மை இவரது கதைகளைத் தனித்துவச் சிறப்பு மிக்கதாக்கியுள்ளது.
 
ஸ்ரீதரனின் புனைவுலகம் வினோதத்தை யதார்த்தத்துடன் பிணைத்து, யதார்த்தத்தை ஆழப்படுத்தி, மனித இருப்பின் சூட்சுமத்தைத் துளாவிப்பிடிக்க முனைகிறது. நடப்புலகின் சிதிலக்கூறுகளை ஆங்காங்கே தீட்டி வினோத உலகினை, வேறுபட்ட நிலவியல் களங்களில் புனைந்து பிரபஞ்சத்தின் கோலங்கள், வானவெளி, கிரகங்கள், வீடுகள் என்றும் மனித வாழ்வு குறித்த நிகழ்வுகள், குழப்பங்கள், காரணகாரியங்கள், வாழும் அந்தந்தக் கணங்கள் என்று மெய்யியல் விசாரணைகளாய் இவரது எழுத்துகள் விரிகின்றன.
 
ஸ்ரீதரனின் பிரதியை எதிர்கொள்ளும் வாசகன்/வாசகி நிஜம், கற்பனை, பொய், பிரமை, விநோதம், யதார்த்தம், புதிர், சாகஸம் என்பவற்றிற்கிடையிலே பயணிக்க வேண்டியவராகிறார். யதார்த்தவகை எழுத்திலே கட்டமைக்கப்பட்டிருக்கும் ஈழத்துப் புனைகதை வளர்ச்சியில் மொழி, புனைவு, பிரபஞ்ச விசாரம், யதார்த்த அவலட்சணங்கள், தத்துவ நோக்கு, நவீன எழுத்துப் பரிச்சயம் போன்ற வலிய இழைகளில் பின்னப்பட்ட ஸ்ரீதரனின் எழுத்துக்கள் அசாதாரண பாய்ச்சலைக் காட்டிநிற்கின்றன. ஒரு விஞ்ஞானியின் நுண்நோக்கும், ஒரு கலைஞனின் மென்னுணர்வும், ஒரு தத்துவதரிசியின் தீட்சண்யமும் இவரது எழுத்துகளுக்கு ஆழ்ந்த பரிமாணம் சேர்க்கின்றன. ஸ்ரீதரனின் எழுத்து, சந்தை இரைச்சலின் வாடைபடாத எழுத்து. வனாந்தர நீர்வீழ்ச்சியின் காம்பீரியமும் இதமும் உயிர்ப்பும் துடிக்கும் எழுத்து இது.
 
ஸ்ரீதரனின் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளுக்காக ஓவியர் கே. கிருஷ்ணராஜா தீட்டியிருக்கும் ஓவியங்கள் கதைகளுக்கான வெறும் விளக்கப்படங்களாக அல்ல, தனித்து வமான – கதைகளை மீறிய பிறிதொரு சிருஷ்டியாக மலர்ந்திருக்கின்றன. ஓவியர் மாற்குவிடம் பயின்ற கே.கே. ராஜா ஓவியம், சிற்பம் ஆகிய நுண்கலைகளை இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பயின்றவர். ஓவியம் அவரது ஜீவன்.
 
ஸ்ரீதரனின் ஸ்தூலமான சிறுகதைகளில் அடிநாதமாக இழையோடும் உணர்ச்சிகள், ஆக்ரோஷங்கள், வெறுமைகள், பொய்கள், தன்னலங்கள், சுரண்டல்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், துயரங்கள், இயற்கை அனர்த்தங்கள், சகமனிதனை இழிவாக நோக்கும் புன்மைகள் போன்ற அனைத்தும் ராஜா என்ற ஓவியனின் புரிதலில் – தூரிகையின் தஹிப்பில் காலத்தால் அழியாத வண்ண ஓவியங்களாகியுள்ளன.
 
இங்கு இடம்பெற்றிருக்கும் பதினாறு ஓவியங்களும் ராஜாவின் நீடித்த உழைப்பின் அறுவடை. ஸ்ரீதரனின் சிறப்பான சிறுகதைகள் தனது ஓவியத்திற்கான ஆத்மார்த்த உந்துதலைத் தந்தது என்கிறார் ராஜா. சிறுகதை வாசிப்பையும் ஓவிய ரசனையையும் இணைத்த தொகுப்பாக இந்நூல் வெளிவருவது தனிச்சிறப்பு.
 
ஸ்ரீதரனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்திருக்கும் அபூர்வமான பழைய-புதிய வரவு.
 
O O O
 
ஸ்ரீதரனின் நீர்ப்பாசனத்துறைசார் பொறியியல் புலமைத்துவம் பலம் வாய்ந்தது. Who’s Who Among America’s Teachers, Who’s Who in Science and Engineering ஆகிய பதிவுகளில் ஸ்ரீதரன் இடம்பெற்றிருக்கிறார். 2002-2003 ஆண்டின் America’s Registry of Outstanding Professionals என்ற பெரும் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
 
இலங்கையில் 5 ஆண்டுகள் நீர்ப்பாசனம்சார் பொறியியலாளராகப் பணியாற்றி, ஆராய்ச்சி நிமித்தம் 1978ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஸ்ரீதரன் Colorado State Universityயிலும் தற்போது Central State Universityயயிலுமாக 34 ஆண்டுகள் உயர் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். Central State Universityயின் நீர்வள முகாமைத்துவத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் திகழும் ஸ்ரீதரன் Journal of Irrigation and Drainage Engineering என்ற ஆராய்ச்சிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டுவருகிறார்.
 
அமெரிக்காவின் தலைசிறந்த பொறியியல் வல்லுநரான ஸ்ரீதரனின் விஞ்ஞானப் புலமைத்துவ உலகில், ஒரு அற்புதமான கதைசொல்லி ஒளிந்திருக்கும் உண்மையை இந்தத் தொகுப்பு துலாம்பரப்படுத்துகிறது. தொழில்சார் கல்வியின் நெருக்கடிக்குள்ளும், அமெரிக்காவின் யாந்திரீக வாழ்விற்கும் இடையில் ஒரு சிருஷ்டி எழுத்தாளன், ஒரு சங்கீத உபாசகன்

காணாமல்போய்விடக்கூடாது என்ற ஏக்கம் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது நெஞ்சை நெருடவே செய்கிறது. பத்மநாப ஐயர் என்ற க்ரியா ஊக்கி இல்லை என்றால், ஸ்ரீதரனின் அமெரிக்க வாழ்வின் எழுத்துலகை நாம் தரிசிக்கும் பாக்கியத்தை அடைந்திருக்க முடியாது என்பது மிகையாகக் கூறுவது ஆகாது.

பத்மநாப ஐயரின் நீண்ட பேருழைப்பில், ராஜாவின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில், ஸ்ரீதரனின் நெருக்குவாரமற்ற – ஒரு ஞானியின் சாந்தமான நீடித்த மௌனத்தில் இந்தத் தொகுப்பு சாத்தியமாகியிருக்கிறது.
 
கதைகள் பிரசுரம் பெறுதல், நூல் வெளியீடு என்பனவெல்லாம் ஸ்ரீதரனின் உலகில் பெருஞ் சலனங்களை ஏற்படுத்தும் வலிமை கொண்டன அல்ல எனினும், ஸ்ரீதரன் தொடர்ந்து எழுதுவதை, அவர் தனது தார்மீகக் கடமை என்று வரித்து, மேலும் புதிய ஆக்கங்களைத் தந்து, புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்த்திட வேண்டும்.
 
நன்றி: எதுவரை  http://eathuvarai.net/?p=4315