முகநூற்குறிப்புகள்: இலக்கியங்காவிகளும் இனிவருங்காலங்களும்

முகநூற்குறிப்புகள்: இலக்கியங்காவிகளும் இனிவருங்காலங்களும்படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா? ஆகாதா?’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்தவர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.
 
சங்க காலத்திற்கும் அப்பாலான காலத்திலிருந்தே வாய்மொழி வழியாகவும், பின்னர் கல்வெட்டுகள் வழியாகவும், அதனைத் தொடர்ந்து ஓலைச் சுவடிகள் வழியாகவும், நவீன காலத்தில் கடுதாசிப் புத்தகங்கள் வழியாகவும் இலக்கியங்கள் பிறருக்கும், பிற்காலத்தவர்க்கும் காவிச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. படிமுறை ரீதியிலான இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய காலகட்டமொன்றில் இப்போது உலகு கால் பதித்துள்ளது. எண்ணிம தொழில் நுட்பத்தின் (digital technology) அறிமுகத்தின் பின்னர், இலத்திரனியல் சாதனங்களான மின் – வாசிப்பான்கள் (e-readers), இணையப் பலகைகள் (tablets) புது வரவுகளாகக் களமிறங்கியுள்ளன. Kindle, Nook போன்ற வாசிப்புக் கருவிகள் எமது வாசிப்புப் பழக்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன. இதற்குப் பக்கபலமாக, சமூக ஊடகங்களின் புதுவரவும் அவற்றின் பயன்பாடுகளும் வாசிப்பு முறைகளிலும் பிரசுரத் துறைகளிலும் ஒரு திடீர்ப் பாய்ச்சலை நிகழ்த்த ஆரம்பித்துள்ளன. முன்னர் சொன்ன இன்னல்கள், இடர்பாடுகளுக்கு இரையாகிப் போய்வந்த எழுத்தாளர்களின் மீட்பர்களாக இத்தொழில் நுட்பச் சாதனங்கள் அவதாரம் எடுத்துள்ளனவோ என எண்ணத் தோன்றுகின்றது! பயனாளிகளால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்களே பொதுவாக சமூக ஊடகங்கள் எனப்படுகின்றன. இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில் ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஒருவருக்கு வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான் பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர்.
 
சமூக ஊடகங்களின் வரவினால் விளம்பரத்துறை அளவிறந்த நன்மைகளைப் பெற்றுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. பெருந்தொகையிலான உற்பத்தி நிறுவனங்களும் விற்பனை நிறுவனங்களும் தமது பொருட்கள், பண்டங்கள், சேவைகள் பற்றிய புதுப்புதுத் தகவல்களை சமூக ஊடக விளம்பரங்கள் வழியாகச் சுடச்சுட நுகர்வோர்க்கு வழங்கிப் பயன்பெற்று வருகின்றன. விளம்பரத் துறையில் இவ்விதமாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்கள் இப்போது இலக்கியப் பரப்பிலும் தமது கால்களைப் பதிக்க ஆரம்பித்துள்ளன. பிரபலமான படைப்பாளிகளும் ஏனையோரும் தமது மூலப் படைப்புக்களை இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
Twitter எனும் சமூக ஊடகத்தினூடாக ‘Twitterature’ எனும் பெயரில் வெளிவந்த இலக்கிய முயற்சிகள் ஆரம்பத்தில் பலருக்கும் அபத்தமாகவே தென்பட்டன. ஆயினும் கடுதாசிப் புத்தக வடிவிலான பிரசுர முயற்சிகளின் வெற்றி தோல்விகளுக்கு மத்தியிலும், இன்று பலரும் தமது இலக்கியப் படைப்புக்களையும், ஏனையவகை எழுத்துக்களையும் Twitter, Face Book, Bloggs, Fan Fiction, YouTube, LinkedIn, MySpace, Digg, StumbleUpon, Delicious போன்ற ஏராளமான சமூக ஊடகங்கள் வழியாகப் பிரசுரித்து வருகின்றனர். இது மரபை மீறிய பிரசுர மார்க்கமாக இருந்த போதிலும், இப்புதுவகைப் பிரசுர முறைமையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, எழுத்தார்கள் பலர் பயனடைந்து வருவதாகவே அறியக் கிடக்கின்றது.
 
JunkDNA என்ற புனைபெயர் கொண்டு Twitterஇல் எழுதிவரும் எழுத்தாளர், சமூக ஊடகங்களூடான இலக்கிய வெளியீட்டு முயற்சியினால் பயனடைந்து வருபவர்களில் முக்கியமான ஒருவர். இந்த ஊடகங்களிலிருந்து இவரது படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களதும், இரசிகர்களதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருகின்றது. இவர்களோடு உடனுக்குடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்களை இவர் பெரிதும் சிலாகித்துச் சொல்கின்றார். முன்னர் எப்போதுமில்லாத வகையில் தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாக இவர் உணர்கின்றார். இவர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் சில நேர்த்தியான, நேர்மையான, காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றார். அவை வாசகர்களின் நாடித் துடிப்பைத் தாம் உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும் தம்மால் முடிவதாகக் குறிப்பிடுகின்றார். இது தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்த உதவுகின்றது எனவும் JunkDNA கருதுகின்றார்.
 
Alison Norrington என்ற இன்னொரு பிரித்தானிய எழுத்தாளர் சமூக ஊடகங்களூடாகத் தமது நான்கு நாவல்களைப் பிரசுரித்துள்ளார். இவரும் தமது விசிறிகளிடமிருந்து உடனடி அபிப்பிராயங்களைப் பெற்றார்; அவர்களுடன் நேரடித் தொடர்பாடலையும் உறவாடலையும் மேற்கொண்டார். இதனால் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச் சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்ல இந்தச் சமூக ஊடகங்கள் உதவுவதாகக் குறிப்பிடுகின்றார்.
 
இத்தருணத்தில் Fan Fiction பற்றிய சிறு தகவலைத் தன்னிலும் இங்கு தொட்டுச் செல்வது நல்லது. இது அனுபவம் அற்ற எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு தளமாகும். இதில் தமது ஆக்கங்களை வெளியிடும் அனுபவமற்ற புதிய எழுத்தாளர்கள், தமது விருப்புக்குரிய நூல்கள், திரைப்படங்களில் இடம்பெற்ற கதா பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பனைகளையும் பயன்படுத்தித் தமது படைப்புக்களை உருவாக்கிவிடுகின்றனர். தமது படைப்புக்களின் மூலங்கள் தமக்குச் சொந்தமானவை அல்ல என்பதை வெளிப்படையாகவே தெரியப்படுத்தி விடுகின்றனர். இவை அசாலான படைப்புக்கள் அல்ல என்பதனால், இவை முறைப்படி பிரசுரமாவதில்லை. அத்துடன், சில நாடுகளில் இவற்றைப் பிரசுரிப்பதற்கு அந்நாடுகளின் சட்டங்களும் அனுமதிப்பதில்லை. புதிய எழுத்தாளர்களுக்கான ஒரு பயிற்சிக் களம் என்ற வகையில் இதனைப் பாவித்துப் பயன் பெறுவோர் பலருண்டு.
 
இதேவேளை, சமூக ஊடகங்களால் பாதிக்கப் பட்டவர்கள் பலரது கண்ணீர்க் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. Stephenie Meyer என்ற இளம் அமெரிக்க எழுத்தாளர் Twilight தொடர் நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர். இவரது Twilight நாவல்கள் 100 மில்லியன் பிரதிகள் விற்பனையானவை; 37 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. அத்தகைய பிரபல எழுத்தாளரின் சமூக ஊடகம் குறித்த அனுபவம் கசப்பானது. சில வருடங்களுக்கு முன்னர், பூர்த்தியாக்கப்படாத நிலையிலிருந்த இவரது Midnight Sun என்ற நாவல், இவரது நம்பிக்கைக்குரிய யாரோ ஒருவரால் கசிய விடப்பட்டு, இவருக்குத் தெரியாமலே சமூக ஊடகமொன்றில் அரைகுறையாக வெளியிடப்பட்டு, இவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. தயாரற்ற நிலையில் சட்டவிரோதமாக உலகெங்கும் பரப்பப்பட்ட இந்த நாவலால் இவர் பெருத்த அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார்.
 
சமூக ஊடகம் வழியாக தமது நாவல்களை வெளியிட்டுப் பல்வேறு அனுகூலங்களையும் அனுபவித்த Alison Norringtonகூட அதன் பிரதிகூலங்களையும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு உதாரணம் கூறுவதாயின் – சமூக ஊடகங்களின் நிபந்தனைகளுக்கு இணங்க, தாம் எழுதும் நாவல்களில் இடம்பெறும் சொற்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். நாவலுக்கான தமது ஆரம்பத் திட்டத்தை இதன் காரணமாக மாற்றி அமைக்க வேண்டியாயிற்று எனக் கூறும் இவர், சமூக ஊடகங்கள் சில வேளைகளில் ஒரு படைப்பாளியின் படைப்பாக்கச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திவிடுகின்றன எனக் குற்றம் சாட்டுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமக்கு மிகவும் வேண்டிய வாசகர்களுக்குப் படைப்பின் மூலப் பிரதியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த வகையில், சமூக ஊடகங்களில் எழுதப்படும் இலக்கியங்கள் பலவும் புத்தகங்களில் பிரசுரிக்கப்படுவனவற்றை முற்றாக ஒத்தவையாகவோ அல்லது அவைபோன்று விரிவானவையாகவோ எப்போதும் இருப்பதில்லை. அத்துடன் இன்றைய வாசகர்கள் எல்லோருமே நவீன தொழில் நுட்பங்களிலும், மின்னணுவியலிலும் பரிச்சயம் உடையவர்கள் அல்லர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளிவரும் இலக்கியங்கள் அவ்வூடகங்களுடன் ஊடாடுவோரை மட்டுமே சென்றடைகின்றன.மேலும் சமூக ஊடகங்களில் பயனாளிகள் தமக்கு விரும்பிய எதனையும் தாமே எழுதிப் பிரசுரிக்கும் வசதி இருப்பதனால், தரக்குறைவான, பண்பற்ற, பகிரப்படக்கூடாத, சட்டவிரோதமான படைப்புக்களும் பகிரங்கமாக வெளிக் கொணரப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. உலகெங்கும் ஏராளமான சமூக ஊடகங்களும் e books, fan fictions என்பனவும் இணையங்களில் உள்ள நிலையில், இவற்றில் பிரசுரமாகும் இலக்கியங்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இலகுவான காரியமல்ல. பதிப்புரிமைச் சட்டதிட்டங்களும் நிலைமைகளுக்கேற்ப, நாட்டுக்கு நாடு பொருந்தலாம் அல்லது பொருந்தாமற் போகலாம். இதன் விளைவாக, இலக்கியத் திருட்டு சர்வ சாதாரணமாவே இடம்பெற முடியும். இவை அனைத்தும் ஒன்று திரண்டு, இலக்கியத்தின் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெருத்த சவாலாக அமைந்துவிடுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே இன்றைய இலக்கிய விமர்சகர்களுள் ஒருசாரார் சமூக ஊடகங்களில் இலக்கியங்கள் பிரசுரமாவதை எதிர்க்கின்றனர்.
 
இருப்பினும், சமூக ஊடகங்களில் தமது படைப்பிலக்கியங்களைப் பிரசுரித்துவரும் பிரபல படைப்பாளிகள் பலரும் இதனை மிகுந்த விருப்புக்குரிய ஒரு வழிமுறையாகக் கைக்கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் பொதுவாகத் தகவல்களையும் ஏனைய உள்ளடக்கங்களையும் உடனடியாகவும் இலகுவாகவும் மிகுந்த தாக்கத்துடனும் பகிந்துகொள்கின்றன; ஆக்கங்களைச் செலவின்றிப் பிரசுரிக்கின்றன; மிகப் பரந்துபட்ட, விரைவான, நெருக்கமான வாசகர் பரிவாரத்தைத் தேடித் தருகின்றன; புதிய தலைமுறையினரின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சிறந்த வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன. மேலும், ஒரு கவிதையின், ஒரு சிறுகதையின் அல்லது ஒரு நாவலின் இறுதிப் படைப்பை மட்டுமே படித்து அனுபவிக்கும் வாய்ப்பினை வாசகனுக்கு இதுவரை காலமும் புத்தகங்கள் வழங்கி வந்துள்ளன. இப்படைப்புக்களின் இறுதி நிலையைப் படைப்பாளி எப்படி எட்டினான் என்பதை அறியும் வாய்ப்பு வாசகனுக்கு அநேகமாகக் கிடைப்பதில்லை. ஆனால் சமூக ஊடகங்கள் வழியாகக் கிட்டும் நேரடி ஊடாட்டமானது, படைப்பாளியானவன் தனது படைப்பாக்க முயற்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் அனுபவித்த வலிகளையும், வேதனைகளையும், புத்துணர்வுகளையும், பூரிப்புக்களையும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள உதவுகின்றது. காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்களூடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது. நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒரு படி உயர்ந்ததுதானே!
 
சமூக ஊடகங்களில் தமது இலக்கியங்களைப் பிரசுரித்தவர்கள் யாவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் எந்தவித பணச் செலவுமின்றி இவர்கள் தமது இலக்கிய உலகின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளனர்; உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகள் பலரை இலகுவில் எட்டியிருக்கின்றனர்; மிகப் பெருந்தொகையிலான வாசகர்களையும், அவர்களிடமிருந்து உடனடியான பின்னுட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்; இவற்றின் வழியாகத் தமது எழுத்து நடையை மாற்றியிருக்கின்றனர் – விருத்தி செய்திருக்கின்றனர் என்றவாறான உண்மைகளையும் மறுப்பதற்கில்லை.
 
சமகால இலக்கிய கர்த்தாக்கள் அனைவருமே சமூக ஊடக சந்ததியைச் சார்ந்தவர்கள்தான். ஆகையால் அவ்வூடகங்களை நாம் பயன்படுத்தப்போகின்றோமா இல்லையா என்பதல்ல – எப்படிப் பயன்படுத்தப் போகின்றோம் என்பதுதான் எங்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி. ‘சமூக ஊடகம் என்பது ஒரு செங்கற் கட்டியை ஒத்தது; இதனைக் கொண்டு ஒரு அநாதையகத்தைக் கட்டியெழுப்பலாம் அல்லது யாரோ ஒருவரது காரின் கண்ணாடிச் சாளரத்தை எறிந்துடைத்து நாசமாக்கலாம்’ என்று சமூக ஊடக எழுத்தாளர் Jon Acuff என்பவர் ஒருமுறை கூறியமை இங்கு நினைவு கூரத்தக்கது. சமூக ஊடகங்களூடாக இலக்கியங்களைப் பகிர்வதென்பது, சாதாரண மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது; இலக்கியங்களைப் பகிர்ந்து, அச்சமூக ஊடகங்களை மக்கள் மயப்படுத்துவது; அதன் மூலம், பொதுவான உணர்வுகளைச் சுற்றி மக்களை ஒன்றுபடுத்துவது; எழுச்சிகளைத் தூண்டுவது; மகத்தான மாற்றங்களுக்கு ஒளியூட்டுவது போன்ற உன்னத பணிகளை இலக்கிய உலகு உணர ஆரம்பித்துவிட்டது. எனவே கவிதை, சிறுகதை, நாவல் போன்ற புனைவிலக்கியங்களை வாசகனிடம் காவிச்செல்லும் வாகனங்களாக, பல சமூக ஊடகங்கள் படிப்படியாக உருமாறி வருகின்றன. இனிவருங்காலப் படைப்பாளிகளுள், இந்த மாற்றங்களைச் சரிவரப் பயன்படுத்தத் தக்கவர்கள் தப்பிப் பிழைத்துப் பெயரறிந்து தொடர்ந்து வாழ்வர்; தகாதவர் பெயரழிந்து மறைந்து போவர் என அறுதியிட்டுச் சத்தியம் செய்ய முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியம் நிறைய உண்டு என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும். ‘தக்கன பிழைத்து வாழும்’ எனும் இயற்கை உயிரிகள் மீதான சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை இலக்கியத்திற்கும் பொருந்துமல்லவா!

நன்றி: முகநூல் நண்பர்கள் பக்கம்