முகநூலிலொரு கலந்துரையாடல்: அறைகலனும், அறைக்கலனும்!

– அண்மையில் முகநூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தளபாடங்களுக்குப் பாவிக்கப்படும் – அறைக்கலன், அறைகலன் ஆகிய சொற்களைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து பலர் அதுபற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மிகுந்த பயனுள்ள கலந்துரையாடலது. அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் சிலவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். – பதிவுகள் –

முகநூலிலொரு கலந்துரையாடல்: அறைகலனும், அறைக்கலனும்!இனிவருங்காலங்களும்பெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture’ உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture’க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture’களுக்குத் தான் இடம்.

‘Furniture’ விற்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன. கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்னும் விதியை அரசு கறாராக அமல்படுத்தியபோது ‘Furniture’ கடைகள் எல்லாம் ‘அறைகலன்கள்’ என்னும் பெயர் பூண்டன. இச்சொல்லை உருவாக்கியவர்கள் யாரெனத் தெரியவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையினர் உருவாக்கிய சொல்லாக இருக்கலாம். இச்சொல் குறித்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பு எனக்குச் சென்ற ஆண்டு உருவாயிற்று.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. சுகுமாரன் மொழிபெயர்ப்பில் உருவான அந்நாவலின் மொழிநடையைச் செம்மை, மெய்ப்பு ஆகியவற்றிற்காக மூன்று நாள் நாகர்கோவிலில் தங்கினேன். மூன்று நாட்களில் ஓர் ஓட்டமாகவே நாவலை வாசித்துத் திருத்தங்கள் செய்ய முடிந்தது. எனினும் அது மிக முக்கியமான அனுபவமாக அமைந்தது. அந்த வாய்ப்பு இல்லாது போயிருந்தால் நாவலை உடனடியா.  வாசித்திருக்க மாட்டேன். பெரும்படைப்பாளி ஒருவரின் நாவல் தமிழில் வெளியாகும் சந்தர்ப்பத்தில் அதற்கு அணில் உதவியாக என் பங்களிப்பும் சேர்ந்தது என்னும் திருப்தியும் உண்டானது. அந்நாவலில் ‘Furniture’ என்னும் சொல்லுக்கு ‘அறைகலன்’ எனச் சுகுமாரன் பயன்படுத்தியிருந்தார். அச்சொல் பற்றிய என் கவனம் அதற்கு முன் நேரவில்லை.

அறைகலன் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன. அறை என்பது இங்கு Room என்பதைக் குறிக்கும். கலன் என்னும் சொல்லின் மூலவடிவம் ‘கலம்’ என்பதாகும். மகரத்திற்குப் போலியாகச் செய்யுளில் னகரம் வரும். இடம் – இடன், நிலம் – நிலன், அகம் – அகன் என்பன சான்றுகள். கலம் என்பதன் போலி வடிவமாகிய கலன் என்பதே பிற்காலத்தில் மூலவடிவம் போலச் செயல்படத் தொடங்கிவிட்டது. அணிகலம் என்று யாரும் எழுதுவதில்லை. அணிகலன் தான். கலம் என்பதற்குப் பாத்திரம், நகை முதலிய பொருள்கள் உண்டு. பொதுச்சொல் என்பதால் கலம் என்பதைப் பயன்படுத்தலாம். அதன் போலி வடிவமாகிய கலன் ஏற்கனவே வழக்கில் இருப்பதால் அதையே கையாளலாம். புதிதாக உருவாகும் கலைச்சொல் இரட்டைச் சொற்களின் சேர்க்கையாக அமைவது இயல்பு. அதுபோல அறையும் கலனும் இணைந்து இச்சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சொல்லின் பொருத்தம் பற்றி எனக்குக் குழப்பம் இல்லை. ஆனால் சொல்லை ஒலிக்கும்போது ‘அறை’ ‘கலன்’ ஆகிய இரண்டுக்கும் நடுவில் சிறு இடைவெளி தோன்றுகின்றது. அது சொல்லின் இயல்பைக் குலைத்துவிடுகிறது. ‘அறைக்கலன்’ என்று சொன்னால் இயல்பாக இருக்கிறது. இரண்டு சொற்களும் இணைந்து ஒற்றைச்சொல் போல ஒலிக்கின்றன. அதாவது இலக்கணப்படி சொன்னால் ‘ஒருசொல் நீர்மைத்து’ என்னும் தன்மையைப் பெறுகின்றன. ஆக ‘அறைக்கலன்’ என ஒற்று மிகுந்தே வரும் எனப் பட்டது. அதற்குரிய இலக்கணக் காரணம் சட்டெனப் பிடிபடவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கணம் பயிலவும் பயிற்றுவிக்கவும் செய்கிறேன் என்றாலும் சில விஷயங்கள் சட்டென மண்டையில் உறைப்பதில்லை. இந்தச் சொல்லில் சின்னக் குழப்பம் இருப்பதும் ஒரு காரணம். ‘க்’ கண்டிப்பாக வரும் என்று தோன்றுகிறது, காரணத்தைச் சொல்ல இயலவில்லை என்று சுகுமாரனிடம் சொன்னேன். அவர் ஒரு ஐயத்தைக் கிளப்பினார். ‘அணிகலன் என்பதில் க் வரவில்லையே’ என்பது அது. இரண்டையும் இணைத்து மனம் யோசித்துக் கொண்டேயிருந்தது. மூன்றுநாள் முடிவிலும் தீர்மானத்திற்கு வர இயலவில்லை.

மூன்றாம் நாள் மாலை சுகுமாரன் திருவனந்தபுரம் ரயிலுக்குச் சென்றார். நானும் ரயில் ஏறினேன். மனம் முழுக்க அந்தச் சொல்லே ஆக்கிரமித்திருந்தது. ஆரல்வாய்மொழி அருகே ரயில் வந்தபோது சட்டென மின்னல் போலக் காரணம் பளிச்சிட்டது. உடனே சுகுமாரனுக்குச் செல்பேசியில் தகவல் சொல்லிக் கண்டிப்பாக க் போட வேண்டும் என்று விளக்கினேன். பின் அச்சொல் வரும் எல்லா இடத்தையும் தேர்வு செய்து க் போடப்பட்டது. ‘அறைக்கலன்’ என்றேதான் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நூலில் அச்சொல் இடம்பெற்றுள்ளது.

காரணம் இதுதான்: அணி + கலன் = அணிகலன் என்றாகும். இதில் அணி என்னும் முதல் சொல் வினை. அணிந்த, அணிகின்ற, அணியும் என விரியும் வகையிலானது. ஆகவே ‘அணிகலன்’ என்பதில் ஒற்று மிகாது. வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை. வழக்கமான உதாரணம்: சுடுசோறு, ஊறுகாய். இவை போன்றதே அணிகலன். ஆனால் அறை + கலன் என்பதில் அறை என்பது வினையல்ல. வினையாக எடுக்கலாம். ஆனால் பொருள் வராது. கன்னத்தில் அறைதல், பறையறைதல் ஆகியவற்றில் அறை என்பது வினைதான். அவ்வாறு வினைத்தொகையாக எடுத்தால் அறைந்த கலன், அறைகின்ற கலன், அறையும் கலன் என்றாகும். கொதிகலன் என்பது வினைத்தொகை. கொதித்த கலன், கொதிக்கின்ற கலன், கொதிக்கும் கலன் என விரியும். பொருள் பொருத்தம் உண்டு. ஆனால் இங்கே அறை என்பது room என்று அர்த்தப்படும் பெயர்ச்சொல். கலன்களில் ஒருவகை அறைக்கலன். மண்கலன், கள்கலன், சமையற்கலன் என்பன போல. ஆகவே அறைக்கலன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கட்டாயம் ஒற்று மிகும். அறைக்கலன் என்றே அறைவோம்.

பவித்திரா பவி: இலங்கைத்தமிழர்களான எம்மிடையே furniture இற்கு “தளபாடம்” என்னும் சொல் வழக்கத்திலுள்ளது. இது ஒரு சிரமமற்ற பிரயோகம் என்று எண்ணுகிறேன்.

தேவதாஸ் சுவாமிநாதன்: திரு.பெ.முருகன் -நல்ல ஆழமான விளக்கம்.இதற்கு நன்னூல் சூத்திரத்தின் புணர்ச்சி விதி இருக்குமே அது என்ன கூறுகிறது?

லோகநாதன் வேணுகோபால்: அறையின் கண் உள்ள கலன் என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையும் உருபும் உடன் தொக்க தொகையாக வரலாமோ? (TNPSC) க்கு படித்தது.)

நமசிவாயம் பரமசிவம்: முக நூலை “காலை வணக்கம் மதிய வணக்கம் அந்தி வணக்கம் இரவு வணக்கம்” இவற்றிற்கு பயன்படுத்துவதை விட இதைப்போல் பயனுள்ள செய்திகளை படிக்கும்போது நிறைவான மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.

பெருமாள் முருகன்: அறையின்கண் உள்ள கலன் எனக் கொள்வதும் பொருத்தமே. அது ஏழாம் வேற்றுமைத்தொகை.

பெருமாள் முருகன்: ஏழாம் வேற்றுமைத்தொகையிலும் ஒற்று மிகும்.

கிரிதரன் நவரத்தினம் (வ.ந.கிரிதரன்): //இங்கே அறை என்பது room என்று அர்த்தப்படும் பெயர்ச்சொல். கலன்களில் ஒருவகை அறைக்கலன். மண்கலன், கள்கலன், சமையற்கலன் என்பன போல. ஆகவே அறைக்கலன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கட்டாயம் ஒற்று மிகும். அறைக்கலன் என்றே அறைவோம்.//

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வருமொழியின் இறுதி இ, ஐ, ய, ர, ழ போன்றவற்றில் முடிந்து, வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாகவிருந்தால் வல்லினம் மிகும் என்று தமிழ் இலக்கணம் கூறும். ஆனால் இது எல்லா விடத்திலும் பொருந்தி வருவதாகத் தெரியவில்லை. ( பெரும்பாலும் வல்லினம் மிகுந்து வந்தாலும் கூட). உதாரணமாக அறை கலன் போன்ற இன்னுமொரு சொல் பனை காய். பனை ஐகாரத்தில் (அறை’யை’ப் போல்) முடிகிறது. காய் வல்லினத்தில் (கலன் போல்) வருகிறது. அறைக்கலன் என்பதைப் போல் பனைக்காய் என்று எழுதுவதில்லை. பனங்காய் என்றுதான் எழுதுவது வழக்கம்.

அடுத்தது அறை கலன் என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகத் தெரியவில்லை. இரு பெயரொட்டுப் பண்புத்தொகையென்றால் இரு சொற்களும் ஒரு பொருளினையே தரவேண்டும். தமிழ்மொழி இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. தமிழ் என்றால் மொழி. இங்கு தமிழ் சிறப்புப் பெயர். மொழி என்பது பொதுப்பெயர். ஆனால் அறை என்ற சொல்லும் கலன் என்ற சொல்லும் ஒரு பொருளைத் தருபவை அல்ல. இங்கு அறைக்கலன் என்பது வேற்றுமைத் தொகையாகவே எனக்குத் தென்படுகிறது.

Furniture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இலங்கைத் தமிழில் தளபாடம் என்ற சொல் வழக்கிலுள்ளது. இதுபோன்ற ஒரு புதிய சொல்லினைக் கண்டு கொள்வதற்குப் பதில் எதற்காக அறை கலன் என்ற சொற்களை இணைத்துப் புதிய சொல்லினைக் கண்டார்களோ தெரியவில்லை. அறை கலன் என்று வைத்தவரை அறையலாமா என்றுதான் தோன்றுகிறது 🙂

சுடுகலன், அணிகலன், கொள்கலன் வினைத்தொகை ஆதலால் நிலைமொழிக்கும், வருமொழிக்குமிடையில் வல்லினம் மிகுந்திருக்கவில்லை. இவ்விதமாக அறையும் கருவிக்கு அறைக்கலன் என்று வைத்திருக்கலாம். எதற்காக அறை போன்ற வாழும் இடத்திற்கு அறைக்கலன் (அறை கலன்) என்று வைத்தார்கள். Furniture ஐ அறையில் (indoor) மட்டும் பாவிப்பதில்லை. வெளியிலும் (outdoor) பாவிப்பார்கள். இவ்விதமானதொரு நிலையில் அறைக்கலன் (அறைகலன்) என்ற சொல்லினை Furniture என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய சொல்லாக உருவாக்கியிருப்பது சரியாக எனக்குத்தென்படவில்லை.

கிரிதரன் நவரத்தினம் (வ.ந.கிரிதரன்):  இரு பெயரொட்டுப் பண்புத் தொகையான தெற்கு திசை என்பதை தென்திசை என்றும், கிழக்கு திசை என்பதை கீழ்த்திசை என்றும் (இங்கு வல்லினம் மிகுந்துள்ளது), வடக்கு திசையை வடதிசை என்றும், மேற்கு திசையை மேற்றிசை என்றும் (மேற்குத்திசை என்று கூறுவதில்லை), மேற்கு கடல் மேல்கடல் என்றும் (மேற்குக்கடல் என்று கூறுவதில்லை) என்று வல்லினம் மிகுந்தும், மிகாமலும் வருவதால் வரும் குழப்பங்கள் அதிகம். இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டாலும் ஏற்படலாம் 🙂

மேற்கு திசை ஆகியன இணைந்து வரும் மேற்றிசை என்பதை இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாகக் கருதலாம். ஏனெனில் மேற்கு என்பது சிறப்புப் பெயர். திசையினைக் குறிப்பது. திசை என்பது பொதுப்பெயர். ஆனால் மேல்கடல் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையல்ல. மேற்கு என்பது திசையையும், கடல் என்பது ஆழியையும் குறிப்பது இங்கு கடலின் ஒரு பண்பாக மேற்கு வந்துள்ளதால் இதனைப் பண்புத்தொகை என்றுதான் குறிப்பிட வேண்டும்.

இடது பக்கம் வலது பக்கம் ஆகியவை இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. இவை இடப்பக்கம், வலப்பக்கம் என்றுதான் இலக்கணப்படி வரவேண்டும். ஆனால் இன்று இடது பக்கம், வலது பக்கம் என்று தாராளமாகவே பழக்கத்திலுள்ளதால், தற்கால இலக்கண நூலாசிரியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். எனவே இலக்கணம் மீறப்பட்டுப் பாவனையில் நீண்ட காலமாக இருக்கும் சொற்களை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுதான் என் கருத்து. இவ்விதமான பல சொற்கள் தமிழ் இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கிலுள்ளன என்பதையும் மறுப்பதிற்கில்லை.

லோகநாதன் வேணுகோபால்: தளவாடம் என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். தளபாடம் என்பது இடுகுறிப் பெயராக காலந்தொட்டு வருவதாக இருந்தாலும் பரவாயில்லை. அவ்வாறு இடுகுறிப் பெயராக அமைவதற்கும் சிறப்பு காரணங்கள் இருக்கலாமல்லவா? மரம் இடுகுறிப்பெயர்; மரத்திலிருந்து செய்யப்படும் பொருளுக்கும் இடுகுறிப்பெயர் வரலாமா? மேலும் வேர்ச்சொல் ஆராய்ச்சி என்பது அவரவர்க்கு ஓய்வு நேரத்தில் தோன்றலாமல்லவா. அப்பொழுது ஓரளவு பொருத்தமான சொல்லாக இருக்க வேண்டும் என்றுதான் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுபவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

பனங்காய் என்பதுபோல பசும்பால் என்பதும் புழக்கத்திலுள்ளது. வட தமிழகத்தில் கொய்யாவை goyya என்றுதான் கூறுவோம். ஆனால் தென் தமிழகத்தில் Koyya என்று கூறுகிறார்கள். வடதமிழகம் ஆந்திரமாநிலத்தை ஒட்டியிருப்பதால் “4 க” ஓசை தமிழுக்கும் வந்திருக்குமோ என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

ஜெரோமி சாம்ராஜ்: முழுமையான விளக்கம். தற்பொதைய மனப்பாட முறை கல்விச்சூழல் மற்றும் அர்த்தமற்ற உளரல்கள் மிகுந்த ஊடக நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து மக்களிடம் எந்த வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த கவனமின்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தை மட்டும் சுத்தமாகவும் கவனமாகவும் பேசவேண்டும், தமிழை எப்படி பேசினாலும் எழுதினாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கு மிகுந்த சூழலில், இந்த விளக்கம் முக்கியம் என்று கருதுகிறேன்.

கிரிதரன் நவரத்தினம் (வ.ந.கிரிதரன்): அ.கி.பரந்தாமனார் ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ நூலில் கீழ் கணக்கு என்னும் சொற்கள் புணருவதைப் பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறுவார்:
;கீழ் கணக்கு என்று இரண்டும் சேரும்பொழுது அவை கீழ்கணக்கு என்றும் கீழ்க்கணக்கு என்றும் வரும். ‘கீழ் என கிளவி உறழத் தோன்றும்’ என்று தொல்காப்பிய எழுத்ததிகாரமும் ‘கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்’ என்று நன்னூலும் விதி கூறுகின்றன. இவ்விரு நூல்களும் இருவகையாகவும் எழுதலாம் என்று கூறுகின்றன. ஆனால் , தொல்காப்பிய உரையாசிரியர்கள் ‘பதினென் கீழ்க்கணக்கு’ என்றே எழுதியுள்ளதைக் காண்கிறோம்.’ என்கின்றார். இவ்விதமான சொற்புணர்ச்சி வேறுபாடுகள், விதிவிலக்குகள் அன்றிலிருந்தே இருந்து வருகின்றன.

மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அறை கலன் இணைந்து உருவாகும் சொல்லான அறைகலன், அறைக்கலன் ஆகியன  தொகைநிலைத்தொடர்கள்.  ஆனால் விரிக்கும்போது இரண்டுமே இருவேறு பொருளினைத் தரும். அறைகலன் அறையும் கலனும் என்னும் உம்மைத் தொகையாகவும், அறைக்கலன் என்பது வேற்றுமைத்தொகை. அறையின், அறையின்கண், அறைக்குரிய கலன் என்னும் அர்த்தங்களில் பொருள்தரும் சொல்லாகவுமிருக்கும். அந்த அர்த்தத்தில் அறைக்கலன் என்பதுதான் இங்கு சரியாகப்படுகிறது.

பெருமாள் முருகன்: வேற்றுமைத்தொகையாகக் கொள்வது பொருத்தம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எப்படியாயினும் ‘அறைக்கலன்’ என்றே ஒற்று மிகுத்து எழுத வேண்டும். இது வழக்கில் வந்து புழங்கும் சொல்லாக மாறிவிட்ட காரணத்தால் இதையே பயன்படுத்தலாம். ஆனால் ஒற்று மிகுத்துப் பயன்படுத்துவது நன்று. இச்சொல் தொடர்பான உரையாடலை முன்னெடுத்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

பெருந்தேவி பெருந்தேவி: பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சின்னக் கேள்வி. Furniture என்பதில் furnishing எனப்பொருள்படும் ”அழகுபடுத்தல்”/ “அலங்கரித்தல்” என்பதும் உள்ளிடையாக இருக்கிறது. ”அறைக்கலனில்” இந்தப்பொருள் இழந்துபடுவதுபோல உணர்வு. அறையணிகலன்?

இரா திரு: ஐயா …என் சிற்றறிவுக்கு அறைகலன் /அறைக்கலன் -உம் ஏற்படுத்தும் காட்சி புரிதல்/ உணர்வுகள் no where near to the word ‘furniture’. கண்டிப்பாக வேறொரு சிறந்த வார்த்தை இருக்கும் . எனக்கு இலக்கணம் தெரியாது .என்னுடை புரிதலில் அணியும் கலத்தினால் அழகு , கொள்ளும் கலம் – கொள்கலம் . உங்களது விளக்கங்கள் கட்டாயப்படுத்துவதாக தோன்றுகிறது Furniture என்ற வார்த்தை புரிதலுக்கு/உணர்வுகளுக்கு . கண்டிப்பாக எனக்கு இன்னும் பல விளக்கங்கள் தேவைபடுகிறது —அறைகலன் /அறைக்கலன் யும் ஏற்று கொள்வதற்கு .

சிவகுமார்: பெருந்தேவி அவர்களது கருத்து, மேற்படி அறைக்கலனில்… ‘பாங்கு’ என்னும் வார்த்தை பங்கு கொள்வதை நோக்கிய சொல்லாட்சிக்கு முனைவிக்கிறது.

சிவகுமார்: அறையுறு கலன்… ஒட்டி வருமா?

கிரிதரன் நவரத்தினம் (வ.ந.கிரிதரன்):  //தளவாடம் என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம்// தளபாடம் என்றுதான் இலங்கையில் எழுதுவது வழக்கம். ஆனால் இந்தியாவில் தளவாடம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.2 hrs · Like
..Giritharan Navaratnam //பனங்காய் என்பதுபோல பசும்பால் என்பதும் புழக்கத்திலுள்ளது// பசும்பால் என்பது பசுமையான பால் என்ற பொருள் தரும். பசுப்பால் என்பது பசுவின் பால் என்னும் பொருள் தரும்.

 //பனங்காய் என்பதுபோல பசும்பால் என்பதும் புழக்கத்திலுள்ளது// பசும்பால் என்பது பசுமையான பால் என்ற பொருள் தரும். பசுப்பால் என்பது பசுவின் பால் என்னும் பொருள் தரும்.

பெருமாள் முருகன்: கலன் என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அதில் நகை என்பதும் ஒன்று. ஆகவே ‘அறைக்கலன்’ என்பதில் அழகு, அலங்கரித்தல் ஆகிய பொருள்களும் இயல்பாகவே அமைகின்றன. இந்தச் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என நான் ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை. இந்தச் சொல் பொருந்தும் என்றே நினைக்கிறேன். கொஞ்சம் பொருத்தக் குறைபாடு இருந்தாலும் பரவாயில்லை. அச்சொல் வழக்குக்கு வந்துவிட்டது. அதிலிருக்கும் குறைபாட்டைச் சரிசெய்யலாமே தவிரச் சொல்லை வழக்கிலிருந்து மாற்றுவது இனி இயலாது. கூடுதல் பொருள்களை அதற்கு ஏற்றிக்கொள்ளலாம்.