முகநூல் இலக்கியக் குறிப்புகள்: சீனத்துக் கவிதைகள்: (தமிழில்: வை. சுந்தரேசன்)


-  தாஜ்  -[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]

இந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.

பறவையின் காவியம்

– லியு லீ

ஏ, குருவி வேட்டைக்காரா,
தயைகூர்ந்து என்னை மன்னிப்பாய்
மாளிகையில் உன் வாசம்,
பற்றை வேலியில் என் ஓய்வு
வலையில் என்னை அகப்படுத்தி
வலிமையான உன் கையில்
என்னைப் பற்றி,
சிறையில் இடுவதில்…
உனக்கேது மகிழ்ச்சி?

ஓ, குருவி வேட்டைக்காரா
உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன்,
சப்தம் எதுவுமற்ற உலகமும்
கண்ட துண்டமாய் வெட்டப்பட்ட
ஊணும் இரத்தமும் நிறைந்த
கசாப்புக் கடையும்தான்
உன் நாட்டமாய் இருப்பதனால்
இறக்கை மூடிய உடலையும்
இனிய குரலையும் நான் பெற்றமை
என் துரதிருஷ்டமே.

உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்
தங்கமும் வைரமும் ஜொலிக்கும்
மாளிகை ஒன்றுக்காக
வனாந்தரத்தில் உள்ள
என் கூட்டிலிருந்து
நான் வேறிடம் செல்வதற்கில்லை,
அன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக
பச்சை மரங்களையும்
நீல வானையும் பிரிந்து
வேறிடம் செல்வதற்கில்லை.

*

சுய ஓவியம்

– யாங் ஷான்

ஓவியர்களே, என் ஓவியத்தை
வரையாதிருப்பீர்களாக
நான் நானாகவே உள்ளேன்.

நான் துயரம் உள்ள மனிதன்,
நான் மகிழ்வு நிறைந்த மனிதன்;
மகிழ்வின்றி நான் இல்லை.

மூடர்களால் நான்
இம்சிக்கப்பட்ட போதிலும்
எவரையும் நான்
அவமதித்ததேயில்லை
நான் வாழ்கிறேன்,
நான் பணிசெய்கிறேன்.

என்முகம் அவலட்சணமானது,
என் தோல் சுருக்கங்களில்
காலத்தின் அழகு பிரதிபலிக்கின்றது.

வசந்தத் தென்றலில்
புல் போல எனது கேசம்,
தயைகூர்ந்து என் விழிகளில் பாருங்கள்
நம்பிக்கைச் சுவாலைகள்
ஒளிர்வதைக் காணுங்கள்.

*

வேர்

– நையூ ஹான்

நான் ஒரு வேர்
மென்மையாய் நிலத்தினுள்,
கீழநோக்கி, கீழ்நோக்கி-
வாழ்நாள் பூராக
வளர்வேன் நான் மையப் பூமியில்
என் நம்பிக்கை
ஒரு சூரியனில்.

கிளைகளில் ஒலிக்கும்
பறவையின் கானம்
என் செவிகளுக்கில்லை
இளந் தென்றலும்
என் உணர்வுக்கில்லை.
ஆனால் திறந்த மனதுடன்
சொல்வேன்,
நான் இதனால் சிறிதளவும்
துயரமோ துன்பமோ
அடையவில்லை.

மலரும் பருவத்தின்
இலையும் கிளையும் போல்
இரட்சிக்கப்படுகிறேன் நான்
பாரிய கனியினுள்
நிரம்பி இருப்பதெல்லாம்
என் இதயத்தின் முழு இரத்தமே.

*
வெளியீடு: குலசிங்கம் – உதயம் புத்தக மையம்
பருத்தித்துறை புலாலி கிழக்கு இலங்கை

நன்றி:வை. சுந்தரேசன், உதயம் புத்தக மையம்


கவிதை: இறந்தக் காலம்

–  தாஜ் –

தன் பேரழிவின்
உயிர்வதை யெண்ணி
அடிமரம் அழும்.
நின்றுப் படர்ந்து
நிழல் காத்தக் காலத்தினை
குரலற்றத் துடிப்பில்
நோந்து கொள்ளும்.
சாய்த்துப் பிளந்த
கோரக் கரங்களின்
ஆராஜகத்தை
மங்கும் ஜீவன் வியக்கும்.
காற்றாய் காலம் தழுவியாற்ற
காய்ந்து வரும் காயங்களில்
பூக்கும் புழுக்கள்
அரித்தெடுக்கும்
நமச்சலையும் சகித்து
ஓர் தூறலின் ஈரத்தில்
தன் வேரடித் துளிர்களை
வெக்களித்த உதயத்தில் காமிக்கும்.


கவிதை: இந்த வாழ்க்கை

– சுந்தர ராமசாமி –

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

[முகநூல் பதிவு: தாஜ்]


கவிதை: உயிரிசை

– தாஜ் –

காற்றில் மிதந்து வரும்
பேரிரைச்சல்களுக்கிடையே
கண்டுணர்ந்ததோர் கானயிழை
எங்கோ அறுப்பட்டுவிட்டது

பூக்களை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரமல்ல
தத்தித் தாவும் சிட்டுக்களின்
கொஞ்சிக் குழாவலுமல்ல
மரங்களின் ஆட்டமெழுப்பும்
ஆனந்த ரிதமோ
இலைகளின் படபடப்படக்கும்
சந்தோஷ தாளமோ
அங்கே மறைந்து கேட்கும்
கிளிகளின் காதல் மொழியோ
குயிலின் குதூகல ஆவர்த்தமோ அல்ல
கவிதை வயமானது அது.
மரக்கிளையில் கட்டிவிடப்பட்ட தொட்டி
காற்றில் நிதானமற ஆடுகையின்
பிடிப்படாத மொழி!
குழந்தை பேசும் குதூகல மழலை!

நித்தம் பொசுங்கும்
ரணங்களின் வலியோடு
செத்து சரிகிற போதெல்லாம்
காற்றில் மிதந்து வரும் அது
மெல்ல காதோடு வருடி
ஹிருதயத்தை தட்டி
உயிர்ப்பித்து எழுப்பும்
பறக்க இறக்கைகள் தரும்
இன்னொரு லோகத்து
ஒளிப் பிரதேசத்தில்
இன்னொரு சுடராய் என்னை
எனக்கு காட்டித் தரும்
மந்திரமொழி அது.
வறண்ட காலப் பக்கங்களில்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிடையே
இன்றைக்கும் அதைத் தேடித் திரிகிறேன்.


கவிதை: பாலை

– ஞானக்கூத்தன் –

வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்
உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை
… அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி
பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்
காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து
விடியற் பறவைகள் ஒருசில கூவ
வந்தேன் என்றாள் வராது சென்றாள்
யாருடன் சென்றாள் அவரை ஊரார்
பலரும் அறியத் தானறியா மடச்சி
உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்
எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி
நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி
மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்
நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ
கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி
சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்
போகப் போகக் குறையும்
ஆகாச் சிறுவழி அது எது என்றே.

[முகநூல் பதிவு: தாஜ்]


கவிதை: காலமும் காலமும்

 – தாஜ் –

தாரைத் தப்பட்டைகளின்
… எதிரொலி வெள்ளத்தில்
கரங்கள் குவிய சிரங்கள்
தாழும் ஆராதனை கொண்டு
வலம் வருமாம்
கோலவெளியில்
வித்தகர்களின் தேரழகு

வியக்கும் விரல்களின்
கண்களது நசிவில்
பூத்த மாதிரட்சி
திரு பார்வைகள் தீண்டா
காலத்தில் விண்டு
தடுப்பிற்குள் பொழிவழிய
சுற்று அடி
சந்தைக் கடைகளில்
பரபரப்பு அடையும்
கலைகள் வளர்த்த
வம்சாவளிகள்

மண்ணில் நிறம் தேடி
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களையும்
காண வியந்து
இடைமலை வண்ணங்களில்
பாதம் பதியாப் பாய்ச்சலாய்
நம் நடப்பு
காலத்தைக் கடக்கிறது.

(அமரர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி எழுதிய நினைவு கவிதை)


கவிதை: உலகின் மிக மோசமான புத்தகம்

– சுகிர்தராணி –

நிசப்தம் பின்னப்பட்ட நள்ளிரவில்
காலக்கிரமமாய்
நிறுத்தப்பட்டிருக்கும் புத்தகங்கள்
அலமாரியிலிருந்து கீழிறங்கி
உறக்கத்திலிருக்கும் என்னைப்
புரட்டிப் புரட்டி வாசிக்கின்றன
முடிந்ததும்
மூலைக்கு ஒன்றாய்
என்னைச் சிதறிடித்தபடி
குறிப்பேட்டில் எழுதிவிட்டுச் செல்கின்றன
இவள்
உலகின் மிக மோசமான புத்தகம்.

[நன்றி:சுகிர்தராணி/ தீண்டப்படாத முத்தம்/ காலச்சுவடு; முகநூல் பதிவு: தாஜ்]


இரா முருகனின் முகநூல் குறிப்பு: எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறது புதுக் கவிதை ஒரு காலத்தில். உருண்டை உருண்டையாக உருவகங்களை ரொப்பி இன்றைக்கு புதுக்கவிதை என்றாலே நெட்டோட்டம் ஓட வைக்கிறார்கள்…

சுந்தரராமசாமி (பசுவய்யா)

நகத்தை வெட்டியெறி

நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
அகிலமே சொந்தம் அழுக்குக்கு!
நகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு!
‘பிறாண்டலாமே-எதிரியைப்
பிறாண்டலாமே?’
பிறாண்டலாம், பிடுங்கலாம்,
குத்தலாம், கிழிக்கலாம்.
ஆரத் தழுவிய
அருமைக் கண்ணாளின்
இடது தோளில்
ரத்தம் கசியும்.
வலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு.
தூக்கி சுமக்கும்
அருமைக் குழந்தையின்
பிஞ்சுத் துடைகளில்
ரத்தம் கசியும்.
இடது கை நகத்தை வெட்டியெறி-அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு.
நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
‘குறும்பை தோண்டலாமே-காதில்
குறும்பை தோண்டலாமே?’
குறும்பை தோண்டலாம்
குறும்பை தோண்டலாம்
குறும்பைக் குடியிருப்பு
குடலுக்குக் குடிமாற்றம்
குருதியிலும் கலந்துபோம்-உன்
குருதியிலும் கலந்துபோம்.
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.