முகநூல் குறிப்புகள்: கவிதைகள் சில

 1. நரைத்த நினைவுகள்

– தேவேந்திர பூபதி –

பருவத்திலிருந்து விலகிய நதிக்கரையில்
கடலைப் பார்வையிடுவது
கர்ப்பத்திலிருக்கும் கண்கள்
…எல்லாப் புகைப்படங்களும்
மனித உடலுக்குப் பின்னால்
கடலை உறையவைக்கும்போது
காலத்திலிருந்து பிரிந்துபோவது
யாத்ரீக தர்மமாகிறது
மீண்டும் பருவத்தின் வாசலுக்கு
உணவின் கூடுதூக்கிச் செல்கிறது
ஒரு உஞ்சவிருத்தி
அது பல் துலக்காதது
ஈரத்துணிகளை உலர்த்துவது
கோடையில் நரைத்த
நினைவுகளிலிருந்து ஒரு மொட்டை
அது மலரும் மட்டும்
உற்று நோக்கி
கர்ப்பவாசக் கண்கள்போல
உறங்கிவிடுவது
இப்படித்தான் பிறக்கும்போதே
பிரபஞ்சத்தினூடான பிரிவும் நேர்கிறது


2. எழுதச் சொல்கிறது

– நட்சத்திரன் செவ்விந்தியன் –

மஞ்சட் பூக்காடுகளில் பூத்த மப்பில்
கிழக்கிலிருந்து கொழும்புக்கு
இந்தப் பிரிவுப் பயணம்
…மழை பெய்து ஓய்ந்து
நான் மனசார இழைப்பாறிய கொஞ்சக் காலம்
வாழ்வு கொடுத்த ஊர்
உன்னைப் பிரிந்து கொண்டிருக்கிறேன்

இந்தப் பயணம் தருகிற போதை
எழுதச் சொல்கிறது
இழந்த வாழ்வையும் வாழ்வின் கவிதையையும்
கவிதையின் போதையையும்
எழுதச் சொல்கிறது
பிரிவில் பூக்கிற ஒரு துயரம் இதில் இல்லை
வெண்மணல் கொடுக்கிற நதியும்
காடுகளும் கூட
என்னோடு தொடர்ந்து வருகிறது

மீண்டும் மீண்டும் நகரங்களை நோக்கிப் போனாலும்
நகரங்களை அவாவிய என் கனவுகள் போயிற்று
நகர வாழ்வும் போயிற்று
அழிந்துபோன நாகரிகங்களைப்போல
அந்த வாழ்வு அப்படியே இருப்பினும்
அங்கிருந்தபோது எனக்கு எழுத முடியவில்லை
மனசார வாழவும் கிடைக்கவில்லை

(1996) நன்றி: ’எப்போதாவது ஒருநாள்’
தாமரைச் செல்வி பதிப்பகம்


3. ஒவ்வா

– ஸர்மிளா ஸெய்யித்

அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் களைந்தெறிந்த என் உடல் பற்றி

என்னை அவர்கள் சேர்ப்பதுமில்லை
நான் பாறையாகக் கிடப்பதில்
அவர்களுக்கு உடன்பாடில்லை ஆதலால்.

இரவும் நிலவும் அவர்களுக்குப் போல்
…ஏன்னை வயப்படுத்துவதில்லை
சூனியக்காரனின் மந்திரத்தில் மயங்கி
கீஸாவில் அடைபட்ட ஆவியாக
இருள் சூழ்ந்த குகைகளுக்குள்
நான் கட்டுணவில்லையென அவர்களுக்கு
என்னோடு கோபம்

அவர்களது கம்பளம் எனது
வழியின் இயல்பை மாற்றிவிடக்கூடாதென்ற
என் கவனத்தை ஏற்கிறார்களில்லை
புறக்காரணிகளின்றி ஓங்கி வளர்ந்திட முடியுமாவென
சவாலிடுமவர்களை நேராக எதிர்கொள்வதே என் விருப்பம்

என் மாயச் சிறகுகளைக் கண்டவர்கள் பிரமிக்கிறார்கள்
சற்றேனும் சாயமற்ற என் வார்த்தைகள்
வாலற்ற நாகமென அவர்களைச் சுற்றிக் கொள்வதிலிருந்து
தப்பிக்க முடியாது தடுமாறுகிறார்கள்

மீண்டுமொரு முறை என்னைச் செதுக்குகிறேன்
முன்னரை விடவும் கூர்மையடைந்த
என்னைக் காணுகிறேன்.

என் உடல்
நான் களைந்தெறிந்த இடத்திலேயே கிடக்கிறது
உடலைத் தளுவிக் கொள்ளும்
பேராவலை மீண்டும் தவிர்க்கிறேன்
கீஸாவில் அடைபட்ட ஆவியாக
மாற எனக்குச் சம்மதமில்லை ஆதலால்.


4. சிகுல்தாவில்  இலையுதிர்காலம் ….

ரஷ்ய மொழியில் : அன்றெய்  ஊநெசன்ஸ்கி
ஆங்கிலம் வழி தமிழில் : சசி
முகநூலில் பதிவு: இரா.சடகோபன்

அன்றெய்  ஊநெசன்ஸ்கி (1933 – 2010 ) , முக்கியமான ரஷ்யக் கவிஞராக மதிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் ஓவியத்திலும்

கட்டடக்கலையிலும் ஆர்வம்கொண்டிருந்தார் ; பின்னர் அவரது ஈடுபாடு கவிதைத் துறையாகவிருந்தது .நோபல் பரிசுபெற்ற ‘போரிஸ்

பாஸ்டர்நெக்’குடனான தொடர்பு, இளமையில்  அவரை வளப்படுத்தி இருக்கிறது.ஈழத்தின் முக்கிய கவிஞருள் ஒருவரான
சண்முகம் சிவலிங்கம் – சசி என்ற புனைபெயரில் – மொழிபெயர்த்த  இக்கவிதை, மருதமுனை  ‘அல்மனார் மகா வித்தியாலய’

வெளியீடான ‘கலங்கரை ‘ இதழில் வெளியானது.

புறப்படும்  வேளை,
புகையிரதத்தின்  சன்னலின்  ஊடு
வெளியே  சாய்கிறேன்
இன்னும்  மழை.

கோடை   காலமே,  உனக்குக்  ‘குட்பை’,
நான்  போக  வேண்டும்,
எனக்குப்  பின்  உள்ள
இழுவைச்  சன்னலில்
ஆணி  அடிக்கிறார்,
ஆகட்டும்,
நான்  போக  வேண்டும்.

எனது  காடுகள்  வெறிதாய்  உள்ளன.
– மகிழ்ச்சியற்ற  வறிய  வெளிகள்.
உதிர  இனி  ஓர்  இலையும்  இல்லை –
இசைபோன  வெறும்  எக்கோடியன்
உறையினைப்  போல ( வெறிதாய் உள்ளது ).

நாமும் வெறுமைதான்.
நமது  காலமும்,
ஆம்  எனும்போது  அகல  இருக்கிறோம்,
தாயிடமிருந்து  தனிக்க  இருக்கிறோம் ;
பெண்ணிடமிருந்து  பிரிய  இருக்கிறோம்.
என்றும்  உள்ள  இருப்பின்  விதிப்புகள்….

நிறம்  மிகுந்திருந்த  வனத்தை  நினைக்கிறேன்
நன்றி  அதற்கு,

நாம்  அங்கு  கூடி
எங்கும்  அலைந்து  திரிந்தோம்.
இடுபுதர்  மேட்டிலும்,  ஆற்றங்கரையிலும் –
நீ  உனது
நாயினைக்  கழுத்து  நாரினால்  இழுத்தாய்.
என்ன  முரட்டு  ஆன்மா அது!
எனினும்,
அதற்கும்  நன்றி,  ஆகட்டும்.
ஆமாம்,
பழைய  நினைவுகளில்  பவனி  வருகிறேன்.
இலையுதிர்  காலமே,
என்னை  எனக்கு
நினைவு  படுத்தினாய்,  நினக்கும்  நன்றி ….

நீ  இப்போது  நீங்கப்  போகிறாய்.
வேதனையால்,  என் வெறுமையை  நிரப்பி
போகிறாய் – எங்கோ புறப்படும்  ரயில்போல்.
நாங்கள்  பிரிகிறோம்,
ஒருவர்  உள்ளிருந்து  மற்றவர்  போகிறோம்.
நானும்  என்தாயும்   பிரிந்ததைப்  போல
நீயும்  நானும்  பிரிய  இருக்கிறோம்.
பக்கமாய்  உள்ளாய்,
எனினும்  பலகாதம்!
வார்த்தையில்  புரியா  வனாந்திரத்தூரம் !

நேற்றுப்போல்  நாளை  நிகழும்.
நினது
பாங்கிலும் ஒரு சனூஸி  வருவாள் .
எனது
சாங்கத்திலும்  ஆங்கோர்  சசி  திகழ்வான்.
நண்பர்களும்,
அவர்தம்  நண்பிகளும்
எங்கள்  இடத்தை  மீண்டும்  எடுப்பர்.
அல்லது  வெறும்  புல் எனினும்  அங்கு
சில்  என்று  மொய்க்கும்
சிறு  சுவடும்  அற்று
நாங்கள்  தொலையோம்.
நம்மைப்  பிரதி
ஈடு  செய்ய  எதுவோ  விளையும்
வெற்றிடங்களை  இயற்கை  விடுவதில்லை.

இலையுதிர்  மரங்களே,
இனி  ஒரு  கோடித்
தளிர்கள்  உம்மைத்  தாலாட்டும்.
நன்றி,
இடைவெளி  என்றும்  இரா.
ஏன்  கவலை ?
விடும்.

ஆம்,  இயற்கை  விதியின்  வலியை
உணர்ந்தனம்,   நன்றி.
எனினும்
அதோ,   அதோ
திடலெலாம்,  வெளியெலாம் ,  வேகமாய்
ரயிலின்  வருகையில்,
சிதறும்  சிவப்புச்  சிலைபோல
ஒரு  பெண்  ஓடுகிறாள் ….
உதவுக!

நன்றி : கலங்கரை, கார்த்திகை 1977