முனைவர் சி.திருவேங்கடம் கவிதைகள் ஐந்து!

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

1. வேழத்தின் ஓலம்

அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி

கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.

பெரும் இரைச்சலுடன்
விரைந்து வந்த
புகைவண்டி மோதி
சதைப் பிண்டமாய்…

காடு கொன்று நாடாக்கி தன்
எல்லைகளைப்
பெருக்கிக் கொண்டேயிருக்கும்
மனிதர்களின்
அகோரப் பசிக்கு
இரையானது
ஒரு பெரும் ஜீவன்..

சிதைந்த
தாயின் உடலைச் சுற்றி
வடித்த கண்ணீர் துளிகளோடு
குட்டி யானைகள்
எழுப்பிய
பெருத்த ஓலத்தின்
நீட்சியால்
வனம் அதிர்ந்தது ….


2. துளை வழி ஒலிக்கும் கீதம்

அடர்வனத்தில்
வளர்ந்த எம்மை
எவரேனும்
தேடி எடுத்து
துண்டமாக்கி,
துளைகளிட்டு
நெருப்பின்
அனல்கொண்டு
வாட்டி எடுத்தாலும்
வதங்காமல்
பொறுத்துக் கொண்டு
அமைதியாய் ……..

பின்னாளில்
உரியவரின்
விரல்கள் வழி
நாட்டியத்தால்
இசை மீட்டு
பலரின் துயர் நீக்கி,
செவிவழி இன்பம்
தரப்போகும்
நம்பிக்கையுடனே
காத்திருக்கிறது
ஒற்றைப்
புல்லாங்குழல்.


3. புன்னகை

புன்னகைப் பூக்களை
உதிர்த்திட
முப்பொழுதும் தயாராக
இருங்கள்.
முடியாத தருணங்களில்
புகைப்படத்திற்கு
முகம் காட்டிடும்
நொடிப்பொழுதாயினும்…

உடைத்தெறிய இயலாக்
கடும் பாறையென
இருக்கமாய் முகம்
கொண்டு குவிந்த
புகைப்படக் கருவியில்
விழுந்த உங்கள் பிம்பம்
பிரதிபலிப்பது
காகித அட்டையன்று..
உங்கள் இருப்பைக்
காட்டும் ஆவணமே …

நிலை மாறிடும் முகத்தோற்றம்
அந்நிழற்படத்தில்
நீங்கள் அழகாக
இன்னும் அழகாக …
தோன்றிட வேண்டி

என்றாவது ஓர் நாள்
உங்கள் பிள்ளைகள்
வழிப் பிள்ளைகள்
விடுமுறைக்கு
உங்களை நாடி வரும் வேளை

பரணிலிருந்து
தூசி தட்டி எடுத்து
இளம் பிராயத்தில்
எடுத்ததென
காட்சிப்படுத்தி
மலரும் நினைவுகளை
அசை போட்டு

உங்களை அறிமுகம்
செய்யும்
வேளை தனில்
அப்பிஞ்சு மனதில்
உங்கள் முகம்
பதிந்திட வாயினும்
புன்னகை செய்வீர் …


4. நாவன்மை கவிதை

எழும்புகளற்ற
தசைக்கூடுகளால்
பின்னப்பட்டு
முன்னும் பின்னும்
லாவகமாக சுழற்றி
இரையை எடுத்தும் ,
கோபக் கனல்
கொப்பளிக்கும் வேளை
அது கொண்டே சுழற்றி
எறியும் ரௌவுத்திரமும்
கொண்ட வேழத்தின்
துதிக்கையைத்
தோற்கச் செய்யும்
பலம் வாய்ந்தது
மானிடர் பலரின் பற்களிடை
பொருந்தியிருக்கும்
செந்நா


5. காற்றில் மிதந்த சொல்…

நீ உதிர்த்த
சொற்களுக்குக்
கற்பனையாய்
உருவம் கொடுத்து
இருப்பு வைக்க
முயற்சித்தேன்.
கை,கால்கள்,
உடல் என முழுதும்
பொருத்தி
நிறைவாய்
முகம் வைத்து
நிமிர்ந்து பார்த்தேன்.
உன் சொற்களை
விட கொடூரமாக
அகோரமாய்
வெளிரிய போது..
அலறியபடி
கற்பனை
உருவத்தைக்
கலைத்தேன்.
இப்போது
உன்னிலிருந்து
பெறப்பட்ட
சொற்கள் மட்டும்
அறையில்
அனாதையாய்
காற்றில் உலவியபடி……..

cn.thiru@gmail.com