மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல். – அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு –

1_ariviyal5.jpg - 26.82 Kbவந்தவாசி.ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டிய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத்  திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்கள் தெ.இராஜேஸ்வரி, இரா.அப்பாண்டைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் இரா.அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.           
‘பூமி, சூரியன் மற்றும் சந்திரன்’ பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பட்டது. ‘உலகம் உருவான கதை’ எனும் அறிவியல் நூலை வெளியிட்டு, ‘அறிவியலும் நாமும்’ எனும் தலைப்பில் யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது, காலம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறினாலும், வளர்ந்த நாடுகள் போராயுதங்களை-அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு, சிறிய வளரும் நாடுகளை மிரட்டுகிற போக்கு இன்னும் மாறவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்கிற அறிவியல் ரீதியான தெளிவைப் பெற மாணவர்கள் எப்போதும் தயங்க கூடாது. சிறுவயதில் நமக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடமும் கற்றறிந்த சான்றோர்களிடமும் கேட்டு, அவற்றிற்கான விளக்கங்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை மாற வேண்டும். நமது அன்றாட வாழ்வில் நிகழ்கிற ஒவ்வொரு செயலுக்குமான அறிவியல் காரணத்தை சரியாய் நாம் புரிந்து கொண்டாலே, பல சிக்கல்களுக்கு விடை கிடைத்துவிடும். அறிவியலின் பயனை பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல், நாமும் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிகிற அறிவியல் விஞ்ஞானிகளாக மாறிட வேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும் அறிவியல்துறையில் சாதனைப் படைக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக விண்வெளி அறிஞர் மயில்சாமி அண்ணாத்துரை இன்றைக்கு நம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிற மனிதராக உயர்ந்து நிற்கிறார் என்றார்.
 
பின்னர் நடைபெற்ற அறிவியல் விநாடி-வினாப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வந்தவாசி ரோட்டரி சங்க செயலாளர் F.அல்லாபகஷ் பரிசுகளை வழங்கினார்.
 
நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.

படக்குறிப்பு;
வந்தவாசியை அடுத்த இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு விழாவில், ’உலகம் உருவான கதை’ அறிவியல் நூலை யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் வெளியிட, பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் பெற்றுக் கொண்டபோது எடுத்தபடம். அருகில், வந்தவாசி ரோட்டரி சங்க செயலாளர் F.அல்லாபகஷ் உள்ளார்.

muduvaihidayath@gmail.com