யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

யாழ் ராணி திரையரங்குஅண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

1. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் ‘சீமாட்டி’ வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் ‘கட் அவுட்’ இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திலிடம் பெறும் ‘ஒரு பக்கம் பார்க்குறா’ பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு ‘கட் அவுட்’டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

யாழ் ராணியில் பார்த்த , நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்காரவேலன்’, ‘ராஜா, பட்டிக்காடா பட்டணமா’, ‘சவாலே சமாளி’, ‘பணமா பாசமா’, ‘அன்புச் சகோதரர்கள்’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘என் தம்பி’, ‘இருவர் உள்ளம்’ (மீள் வெளியீடு), வி.பி.கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ , ‘புதிய காற்று’, ‘நாளை நமதே’, ‘வாடைக்காற்று’ , ‘பட்டணத்தில் பூதம்’& ‘நீதி’

இன்னுமொரு விடயத்துக்காகவும் யாழ் ராணி நினைவிலுள்ளது. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் சுட்டுக் கலவரமாகிய சூழலில் தப்பி ஓடிக்கொண்டிருந்த மக்களைத் தன் திரையரங்கில் தங்க வைத்த மனிதாபிமானச் செயல் அது. அதன் மூலமும் ‘ராணி’ திரையரங்கு நெஞ்சில் பதிந்து விட்டது. இன்று திரையரங்கே இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்கள் அரியவை. சேகரித்துச் சேமிக்கப்பட வேண்டியவை. இவை ஒரு காலகட்ட வரலாற்றுச் சின்னங்கள்


முகநூல் எதிர்வினைகள் சில:

Janaki Karthigesan Balakrishnan : ராணி தியேட்டர் உரிமையாளரின் மகள் ஒருவர் வேம்படியில் எனது சக மாணவி. எமக்கு இலவச டிக்கட் கிடைத்ததில்லை. சில சினிமாக்கள் ராணியில் பார்த்திருக்கிறேன்.

Janaki Karthigesan Balakrishnan அது “அந்த நாள் நெஞ்சிலே ஞாபகம் வந்ததே” என்பது போல, பல வருடங்கள் முன்பு. நான் வேம்படியில் படிந்தது 1959-1970 வரை. OMG! பின்பு உரிமையாளர்கள் மாறியிருக்கலாம்.

Thambirajah Pavanandarajah:  உங்களுக்கு ராணி திரையரங்கு மறக்க முடியாதுள்ளதுபோல் எனக்கு ராஜா திரையரங்கை மறக்கமுடியாது 70களில் எனது சகோதரி ஒருவர் அங்கு கல்விகற்றுககொண்டிருந்தார் அவரைச் சந்திப்பதற்காக யாழ் சென்றிருந்தநேரம்தான் ராஜா திரையரங்கில் நடிகர் திலகத்தின் ராஜா திரைப்படம் போட்டிருந்தார்கள் ,அன்றுமுதல்நாள்என்பதால் கூட்டம் அலைமோதியது ,நள்ளிரவுமுடிந்து அதன்பின்னரும் இருகாட்சிகள் இருப்பதாக அறிவித்திருந்ததால் கட்டுப்படுத்தமுடியாத சனக்கூட்டம் போலீசார் அழைக்கப்பட்டிருந்தனர் ,குண்டாந்தடிப்பிரயோகமும் இடம்பெற்றது ,இந்த இழுபறியை தாங்கமுடியாமல் தியேட்டரின் முன் சுவர் சரிந்துவிளுந்த நிகழ்வு அன்று இடம்பெற்றது .கடைசியில் படம் பார்க்க முடியாமல் வீடு திரும்பினாலும் இன்று ம் என்னால் மறக்கமுடியாத நிகழ்வு இது

Iravi Arunasalam:  Thambirajah Pavanandarajah ராஜா திரையரங்கில் ‘ராஜா’ திரைப்படம் ஒருபோதும் வரவில்லை. நீங்கள் ‘எங்கள் தங்க ராஜா’ திரைப்படத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

Thambirajah Pavanandarajah : நடந்த சம்பவமும் ராஜா படம் என்பதும் நிச்சயம் தெரிந்தவை ஏனென்றால் நான் அருகில் நின்றவன் திரையரங்கின் பெயர் வேறாக இருக்கலாம் 47வருடங்களுக்கு மேலாகிட்ட ஒரு நிகழ்வு ,

Giritharan Navaratnam:  Thambirajah Pavanandarajah இரவி கூறியதுபோல் ராஜா திரையிடப்பட்டது ராணி தியேட்டரில். திரையரங்கின் பெயரை மறந்துவிட்டீர்கள் என்று நீங்கள் கூறுவதும் சரியே.

Sinnakuddy Mithu:  ராணி தியேட்டரில் box room வகையில் பார்க்கும் வசதி இருந்த்து ..சிவாகமியின் செல்வன் படம் வந்த பொழுது எத்தனை அழகு கொட்டி கிடக்குது என்ற பாட்டின் பொழுது ஜோடிகள் அந்த கால வரையறையை தாண்டி செயற்பட்டமையால் பின்னர் இல்லாமால் ஆக்கப்பட்டது

Giritharan Navaratnam : ராணி தியேட்டரில் அவ்விதம் இருந்ததாக நினைவில்லை. சாந்தி தியேட்டரில் ‘சுப்பர் பல்கணி’ இருந்ததாக நினைவு.

Karunakaran Sivarasa:  உத்தமன் வின்சர் தியேட்டரிலும் ஓடியது. அங்குதான் நான் பார்த்தேன்

Iravi Arunasalam:  Karunakaran Sivarasa வின்ஸர் திரையரங்கில் ஒருபோதும் ‘உத்தமன்’ ஓடவில்லை.

Karunakaran Sivarasa:  வின்சர் தியேட்டர் படியில் தடக்கி விழுந்து படத்துக்கு நுழைந்த நினைவுண்டு. நானும் சித்தப்பாவுமாக.

Giritharan Navaratnam : மேலுள்ள படத்தில் உத்தமன் வெளியான ஆண்டு 1976 என்றுள்ளது. அக்காலகட்டத்தில் நான் யாழ் இந்து மாணவன். உத்தமன் என்றொரு திரைப்படம் வந்த நினைவே இல்லை 🙂

Vimal Kulanthaivelu : நான் முதன்முதலில் யாழ்ப்பாணம் போனபோது ராணியின் மேலே பாம்பு கண்களோடு சிறிபிரியா பார்த்துக்கொண்டே வரவேற்றது இன்றும் என் நினைவில் . சிவந்த மண். மீனவ நண்பன். தனிமரம் .. யாழ்ப்பாணத்தில் பார்த்த படங்கள்.

Karunakaran Sivarasa : பிறகும் ஸ்ரீபிரியா அதே கண்களோடு ராணியில் நடனமாடினார். சபதமெடுத்தார்…

Iravi Arunasalam:  ‘அடிமைப்பெண்’ணுக்கு முன்னரேயே ‘மாட்டுக்காரவேலன்’ வந்துவிட்டது.

Karunakaran Sivarasa : மாட்டுக்கார வேலனை ராணியில்தான் பார்த்தேன்.

Giritharan Navaratnam : //‘அடிமைப்பெண்’ணுக்கு முன்னரேயே ‘மாட்டுக்காரவேலன்’ வந்துவிட்டது// வரிசை தவறு. மாட்டுக்கார வேலன் 1970 இல் வெளியானது. அடிமைப்பெண் 1969இல் வெளியானது.

Iravi Arunasalam Giritharan:  Navaratnam அப்படியா? மா.கா.வேலன்-1968 என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

Punniyamoorthy Visvanathar:  அண்டி நெருக்குண்டோம் தள்ளுண்டோம் ரிக்கற் கிடைக்கவில்லை

Punniyamoorthy Visvanathar:  வசந்தமாளிகையும் கட்டவுட்

Srirham Vignesh : ஐயா…,வசந்தமாளிகை….வெலிங்டன் தியேட்டரில….,

Giritharan Navaratnam : Srirham Vignesh வெலிங்கடனிலும் , லிடோவிலும்… ‘ஃபிலிம் ரோல்’களைத் தியேட்டருக்குத் தியேட்டர் மாற்றி மாற்றி ஓட்டினார்கள். 🙂

Alex Paranthaman : உண்மை.

Edward Anton:  என் மனதில் நிற்பது ‘இரவும் பகலும்’ சுழலும் பூமி. அடுத்தது ‘சித்தி படம்.

Srirham Vignesh:  நான் யாழ்.மத்திய கல்லூரியில் படித்த காலத்தில் இங்கு வெளியான படம், “பட்டிக்காடா பட்டணமா” இந்தப் படத்துக்கோ,தவிர வேறு எந்தப் படத்துக்காயினும், வைக்கப்படும் “கட் அவுட்” படங்களை பெரிய அளவிலே வரிந்து கொடுப்பவர், ஆட்டிஸ்ட் மணியம்” என்னும் ஓவியர். மிகத் தத்ரூபமாக வரையக்கூடிய இவரது, கலையை இன்றய, “டிஜிற்றல் பானர்” விஞ்ஞான வளர்ச்சி சாப்பிட்டுவிட்டது துர் அதிர்ஷ்டமே…..

Parathan Navaratnam:  தாறு மாறாக பதிவுகள் வருகின்றது கிரி . உத்தமன் முதன் நாள் நானும் ராணி தியேட்டரில் பார்த்தேன் .இடைவேளைக்கு பின்னர் பார்க்கமுடியாத ஒரு படம் .அதே நாள் சிறீதர் தியேட்டரில் வந்த காலங்களில் அவள் வசந்தம் நான் மிகவும் விரும்பி பார்த்த படம் .

Parathan Navaratnam : இதே காலத்தில் வந்த எந்த ஒரு படமும் நானும் அமலனும் தவறவிட்டேதேயில்லை .தமிழோ ஆங்கிலமோ ஹிந்தியோ அதற்கு விதிவிலக்கு இல்லை .

Giritharan Navaratnam : ராணியில் ஆங்கிலப்படமொன்று பார்த்ததாக நினைவு.பாலு மகேந்திரா அப்படத்தைத்தழுவி எடுத்ததே ‘அழியாத கோலங்கள்’. அந்தப்படம் Summer of 42.

Parathan Navaratnam:  அடுத்தநாள் Zoology exam அமலன் சொன்னான் இந்த முறை எப்படியும் பல்கலைக்கழகம் போக போவதில்லை வா ஒரு படம் பார்ப்பம் என்று .பார்த்த படம் ராணி தியேட்டரில் விஜயசந்திரிக்கா நடித்த ராசாத்தி என்றொரு படம் பார்த்தோம் .

Parathan Navaratnam : நல்லதொரு படம் .முத்துராமன் சந்திரகலா சிறிவித்தியா நடித்தது .

Giritharan Navaratnam:  இந்தப்புகைப்படத்தையும் , இங்குள்ள நனவிடை தோய்தல்களையும் பார்க்கும்போது உத்தமனை முதல் நாள் காட்சி பார்ப்பது போல் ஓருணர்வு. படத்தைப்பார்த்தால் போச்சு

Alex Paranthaman : படிக்கும்போது கவலைதான் வருகிறது. போரோடு அதற்குப்பின் வந்த ; வருகிற நவீனமயமாக்கலுக்குள் நாம் எல்லாவற்றையும் இழந்து வருகிறோம். இப்படம் ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில்…See More

Giritharan Navaratnam : அன்று எம் பிரதான பொழுதுபோக்குகள் வானொலி,சினிமா. அவ்வகையில் திரையரங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Vetti Mani : ஒரு காலத்தில் எங்கள் கோயில் குளங்கள் இதுவாகவும் இருந்தன.


2. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ராஜா!

ராஜா திரையரங்கில் காவல்காரன்ராஜா (யாழ்ப்பாணம்) திரையரங்கினை எண்ணியதும் பல நினைவுகள் சிறகடிக்கின்றன. அதன் ஒரு மதிலை ஒட்டிச் செல்லும் ஒழுங்கையில்தான் (கஸ்தூரியார் வீதியையும் , கே..கே.எஸ் வீதியையும் இணைக்கும் ஒழுங்கை) எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை காரியாலயமிருந்தது. யாழ் ராஜா திரையரங்கென்றதும் முதலில் நினைவுக்கு வருவது வாத்தியாரின் காவல்காரன் திரைப்படம். இலங்கையில் திரையிடப்பட்டபோது மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திரைப்படம். வவுனியாவில் அத்திரைப்படம் றோயல் திரையரங்கில் ஓடியது. அங்குதான் அத்திரைப்படத்தைப்பார்த்தேன். ஆனால் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது , யாழ் ராஜா திரையரங்கினைக் கடந்து செல்கையில் கண்ணில் பட்டது ஓவியர் மணியத்தின்
கைவண்ணத்திலுருவான உயர்ந்த எம்ஜிஆரின் ‘கட் அவுட்’. யாழ் நகரில் நூறு நாள்களைக் கடந்து ஓடிய திரைப்படம் காவல்காரன். அதன் நூறுநாள் வெற்றியையிட்டு வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியாகியிருந்ததாக நினைவு. படிக்கட்டில் இறங்கும் டீசேர்ட்டுடன் கூடிய எம்ஜிஆரின் உருவத்துடன் கூடிய விளம்பரம். ராஜா திரையரங்கக் கட்அவுட்டிலும் எம்ஜிஆர் ‘டீ சேர்ட்’டுனிருந்த உருவத்தையே பாவித்திருந்தார்கள். நான் என் வாழ்க்கையில் பார்த்த ‘கட் அவுட்’ காவல்காரன் ‘கட் அவுட்’டே.

யாழ் ராஜா திரையரங்கில் பார்த்த , இன்னும் நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: மனம் ஒரு குரங்கு, ஒளி விளக்கு, பாபு, எங்கள் தங்க ராஜா, நீரும் நெருப்பும், மயங்குகிறாள் ஒரு மாது, அலைகள்.

யாழ் ராஜா திரையரங்கின் அருகிலிருந்த ஒழுங்கையினைப்பிரிக்கும் மதிலில் வரவிருக்கும் திரைப்படங்களின் போஸ்டர்களை ஒட்டியிருப்பார்கள். அவ்விதம் வருடக்கணகில் ஒட்டியிருந்த விளம்பரம் வாத்தியாரின் ‘நீரும் நெருப்பும்’ படத்துக்கானது.

நீண்ட காலத் தயாரிப்பிலிருந்த அத்திரைப்படம் ஒருவழியாக வெளியானபோது முதல் நாள் காட்சிக்குச் சென்று பார்த்தோம். யாழ் ராஜா திரையரங்கென்றால் மறக்க முடியாத திரைப்படம் எம்ஜிஆரின் நூறாவது திரைப்படமான ‘ஒளி விளக்கு’. முதல் தடவை அங்கு வெளியானபோது 169 நாள்கள் வரையில் ஓடியதாக நினைவு. பின்னர் இரண்டாவது தடவையாக வெளியாகி மீண்டும் நூறு நாள்களைக்கடந்து ஓடியது.

யாழ் திரையரங்குகளைப்பொறுத்தவரையில் ராஜா மற்றும் மனோஹரா திரையரங்குகளுக்கிடையிலொரு விடயத்தில் ஒற்றுமையிருந்தது. இரு திரையரங்குகளுக்கும் சுற்றுமதிலுக்கும், திரையரங்குக்குமிடையில் விசாலமான விசாலமான நிலப்பரப்பிருந்தது. இதனால் திரைப்படங்களின் முதல் நாள் காட்சிகளின்போது இரசிகர்கள் வீதியை மறிக்காமல் , பாதுகாப்பாக உள்ளேயே நிற்பதற்கு இந்நிலப்பரப்பு பெரிதுமுதவியது.

ராஜா திரையரங்கு இன்னும் இயங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா திரையரங்கு பற்றிய காணொளி: https://www.youtube.com/watch?time_continue=4&v=9cDQhjBYUDk


முகநூல் எதிர்வினைகள் சில:

Parathan Navaratnam:  அழகிரிசாமியை விட்டு விட்டீர்கள் கிரி .

Giritharan Navaratnam //அழகிரிசாமியை// ???

Parathan Navaratnam : ராஜா தியேட்டரின் பின் பக்கம் இருக்கும் சாராயக்கடை . பிரபல இராசாயன ஆசிரியர் VTK ஆபத்திற்கு போய் ஒரு சொட் அடிக்குமிடம் . எமக்கு ஸ்பெசல் மீன் பொரியலும் தருவார் கஷ்டம் என்றால் காசும் தருவார் .

Giritharan Navaratnam Parathan Navaratnam விடிகே செல்வது நினைவிலுள்ளது. சாராயக்கடை என்றுதான் தெரியும். பெயர் நினைவிலில்லை.

Parathan Navaratnam இவையெல்லாம் யாழ் இந்துவின் அடையாளங்கள்.

Muthurajah Thiyagarajah பசுமையான நிகழ்வுகள் கட்டவுட் பட காட்சிகளின் போஸ்டர்ஸ் இன்னும் பல மறக்க முடியாத நினைவுகள் .உங்களின் பதிவுகளுக்கு நன்றி !

Maheswaran Murugaiah:  அந்நாட்களில் – (1960 களில் ) காலையில் மாவிட்டபுரத்தில் இருந்து புறப்பட்டால் 10.3o காட்சி 2.30காட்சி முடிந்தால் சில வேளை 6.30 காட்சியும் பார்த்துவிட்டு “பட பஸ்” இல் வீடு திரும்புவதும் உண்டு .

Punniyamoorthy Visvanathar:  இராஜா தியட்டரில் ஞாபகம் சிங்களப்படம் ஐந்து லட்சம் படத்திற்கு நேரடியாக நடிகர்கள் திரையின் முன் காட்சியளித்தனர் என நினைக்கிறேன்


3. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ‘புது வின்சர்’

வின்சர் திரையரங்குஇன்றுள்ளவாறு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராத , டிஜிட்டல் ஊடகங்களெதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில் , சினிவா பார்ப்பதென்பது முக்கியமானதொரு பொழுதுபோக்கு. திரையரங்குகளைப் பற்றி எண்ணியதுமே முதலில் என் நினைவுக்கு வருவது யாழ் ‘புது வின்சர்’ திரையரங்குதான்.

‘புது வின்ச’ரில் படம் பார்ப்பதென்பதே சுகமானதோர் அனுபவம்தான். அக்காலகட்டத்தில் இலங்கையிலேயே சிறந்த திரையரங்காக வின்சரே திகழ்ந்தது என்பேன். குளிரூட்டப்பட்ட வசதி இல்லையென்றாலும், வின்சரின் வடிவமைப்பு அதற்கு இயற்கையான குளிரூட்டும் வசதியை அளித்திருந்தது. விசாலமான திரையரங்கு; பெரிய ஜன்னல்கள் படம் தொடங்கும்மட்டும் திறந்திருப்பதால் காற்று ஜிலுஜிலுவென்று வீசிக்கொண்டிருக்கும்,. படம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்தின் முன், பணியாளர் ஒருவர் ஒவ்வொரு ஜன்னலையும்  சாத்தத் தொடங்குவார். அதனைத்தொடர்ந்து திரையரங்கினுள் உள்ள ஒளியை வழங்கும் மின் குமிழ்கள் ஒவ்வொன்றாக மங்கிக்கொண்டு வர, திரைப்படம் ஆரம்பமாகும்.

திரையரங்குகளிலேயே பெரிய திரையரங்கு. நன்கு வடிவமைக்கப்பட்ட திரையரங்கு. இவற்றால் ‘புது வின்சர்’ ஏனைய திரையரங்குகளிலிருந்து தனித்துவத்துடன் வேறுபட்டு விளங்கியது. ‘புது வின்சர்’ கட்டியதும் ‘பழைய வின்சர்’  லிடோ என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது. அளவில் சிறிய திரையரங்கு அது.

‘புது வின்ச’ரில் பார்த்த நினைவில் நிற்கும் திரைப்படங்கள்; இரு மலர்கள், ரகசிய போலிஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ராஜராஜ சோழன், விளையாட்டுப்பிள்ளை, தனிப்பிறவி, நினைத்ததை முடிப்பவன் & நல்லநேரம்.   ‘புது’ வின்சரிலேயே சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் ‘கோமாளிகள்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. புகழ்பெற்ற வானொலி நாடகம் அது. ‘குத்துவிளக்கு’ திரைப்படமும் இங்குதான் வெளியிடப்பட்டது. கட்டடக்கலைஞர் துரைராஜா தயாரித்த திரைப்படம்.  அக்காலகட்டத்தில் வெளிநாட்டு இறக்குமதிகள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளூர்த் தயாரிப்புகள் வெற்றிகரமாக விளங்கின. அக்காலகட்டத்தில்தான் செங்கை ஆழியானின் ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக  ஓடியது. அக்காலகட்டத்தில்தான் மலையக அரசியல்வாதியான வி.பி.கணேசனின் (மனோ கணேசனின் தந்தையார்) ‘புதிய காற்று’, ‘நான் உங்கள் தோழன்’ ஆகிய எம்ஜிஆர் பாணித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடின.

இன்று ‘புது வின்ச’ரில் திரைப்படங்கள் ஓடவில்லை. கடடடக்கூட்டுத்தாபனப்பொருட்கள் விற்குமோரு விற்பனை நிலையமாக மாறிவிட்டது.  காலத்தின் பாதிப்புகள்,  போர்ச்சூழலின் தாக்கங்கள் ஆகிவற்றால் பழைய நினைவுச் சின்னங்களிலொன்றாகி விட்ட ‘புது வின்சர்’ திரையரங்கினைப் பார்க்கையில் நெஞ்சில் இலேசானதொரு வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எம் இளமைக்காலத்துக் கனவுகளின் இருப்பிடங்களாக விளங்கிய திரையரங்குகளில் ‘புது வின்ச’ருக்கு முக்கிய இடமுண்டு.

முகநூல் எதிர்வினையொன்று:

Pena Manoharan:  தனிப்பிறவி எந்த வருடம் வெளியானது? 1967/68 இல் தனிப்பிறவி எம்.ஜீ.ஆர். அணிந்த மாதிரி பனியன் ஒன்றை சிவாஜியின் தீவிர இரசிகரான என் அண்ணன் எனக்குப் பரிசளித்தார்.வருடம் முன்பின்னாக இருக்கலாம்.


4. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – றீகல்

யாழ் றீகல் திரையரங்குயாழ்ப்பாணத்தில் அறுபதுகளில், எழுபதுகளில் , மாணவர்கள், இளவட்டங்கள், நடுத்தரவ வயது ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக விளங்கிய திரையரங்கு ‘றீகல்’. காரணம்: அதிகமாக ஆங்கிலத்திரைப்படங்களை அங்கு திரையிடுவார்கள். அதிகமாகப் பாடசாலை மாணவர்களே இத்திரையரங்கை நோக்கிப்படையெடுப்பார்கள். பலரும் கலரி, இரண்டாம் வகுப்பு டிக்கற்தான் எடுப்பார்கள். பின்னர் இந்நிலை மாறி அவ்வப்போது பழைய திரைப்படங்களையும் போடத்தொடங்கினார்கள். பெண்களும் இத்திரையரங்கு நோக்கி வரத்தொடங்கினார்கள். இருந்தாலும் அதிகமாக இங்கு படம் பார்க்கச் செல்பவர்கள் மாணவர்களும், இளவட்டங்களும், நடுத்தரவ வயது ஆண்களுமே. ‘பாவை விளக்கு’ திரைப்படத்தை நான் இங்குதான் பார்த்தேன்.

இங்கு நான் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள் அனைத்தையுமே கூற முடியாத அளவுக்கு எண்ணிக்கையில் அதிகம். நினைவில் நிற்பவை: கசன்ரா குரொஸ்ஸிங் (The Cassandra Crossing) . கிறகரி பெக், ஓமர் ஷெரீஃப், டெலி சவிலாஸ் நடிப்பில் வெளியான் மக்கனாஸ் கோல்ட் (Mackenna’s Gold)ம, ஆஃப்ரிகன் சஃபாரி, அந்தனி குயீன், ஓமர் ஷெரீஃப் போன்ற நடிகர்கள் பலரின் நடிப்பில் உருவான, மூன்றரை மணித்தியால நீளமுள்ள லாரன்ஸ் ஆஃப் அரேபியா (Lawrence of Arabia).. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.

இள வட்டங்கள் மத்தியில் றீகல் புகழ்பெற்றிருந்ததற்கு இன்னுமொரு காரணமுமிருந்தது. அங்குள்ள ‘கண்டீ’னில் லயன் லாகர், திறீ கொயின்ஸ் பியர் வகைகளை (முழுப்போத்தல் சுமார் ரூபா 6; அரைப்போத்தல் ரூபா 3) விற்பார்ர்கள். பியர் குடித்து விட்டுப்படம் பார்க்கலாம்.

றீகல் திரையரங்கு அமைந்திருந்த இடம் எனக்கு மிகவும் பிடித்த சூழல். யாழ் முற்றவெளி, கோட்டை, பண்ணைக் கடல், திறந்தவெளி அரங்கு ஆகியவற்றை அண்மித்திருந்த பகுதியில், யாழ் பஸ் நிலையத்துக்கு அண்மையிலிருந்தது. காற்று வீசும் சூழலில் றீகலுக்குச் செல்வது எனக்குப்பிடித்த விடயம். இரவில் படம் முடிந்து வெளிவருகையில் பரந்த வெளியும், நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானும் நெஞ்சை அள்ளுவன. றீகல் திரையரங்குக்கும் , யாழ் பஸ் நிலையத்தையுமிணைத்துச் செல்லும் வீதியில் ஒரு தேநீர்க் கடை இருந்தது. நண்பர்களுடன் அவ்வழியால் செல்லும்போது அடிக்கடி செல்லும் தேநீர்க்கடை அது.

யாழ் நீகல் என்றதும் நினைவுக்கு வருமொருவர் சார்ஜண்ட் கணேசன் (பெயர் இவ்விதம்தான் நினைவிலுள்ளது) . ஆறடிக்கும் உயரமான, கட்டப்பொம்மன் மீசையுடன் கூடிய ஒருவர். அக்காலகட்டத்தில் பொலிஸார் பான்ட்ஸ் போடுவதில்லை. காற்சட்டைதான் போடுவதுதான் வழக்கம். ஆனால் தமிழகத்துப் பொலிஸார் போல் பாவாடைக் காற்சட்டை போடாமால் 🙂 அழகாக உடலுடன் அளவெடுத்துத் உருவாக்கப்பட்ட போலிஸ் காற்சட்டை. அவ்விதமணிந்துவரும் அவரின் தோற்றம் ஒருமுறை பார்த்தாலும் மறக்க முடியாத தோற்றமாக விளங்கியது. இவரை நான் ஒருபோதும் மறக்க முடியாது. யாழ் பொது நூலகத்தில் காணாமல்போன என் சையிக்கிள் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பொலிஸ்காரரும் இவரே. யாழ் றீகல் திரையரங்கில் சிலவேளைகளில் கூட்டம் அலைமோதுகையில் கூட்டத்தைக்கட்டுப்படுத்த இவரையும் நிர்வாகம் பாவிப்பதுண்டு. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அவரது தோற்றமும் நினவிலுள்ளது.

இவரது முடிவும் துயரகரமானது. யாழ் பரிசத்து விலாஸில் (தாமோதர விலாசுக்கண்மையில், கே.கே.எஸ் வீதியிலிருந்த உணவகம்) ஒருமுறை அங்கு வந்த இராணுவத்தினன் ஒருவன் தகராறு செய்தபோது அதனை அங்கிருந்த சார்ஜ்ண்ட் கணேசன் தட்டிக்கேட்டிருக்கின்றார். ஆத்திரத்துடன் சென்ற இராணுவத்தினன் முகாமுக்குச் சென்று மேலும் பலரை அழைத்துவந்து சார்ஜண்ட் கணேசனைச் சுட்டுக்கொன்றது மறக்க முடியாத நிகழ்வு. றீகல் தியேட்டரை எண்ணும்போதெல்லாம் அவரது நினைவும் கூடவே தோன்றிவிடும்.

யாழ் நீகல் திரையரங்கு கோட்டைக்கு அருகாமையில் விளங்கியதால் போர்ச்சூழலில் அதிகம் பாதிக்கப்பட்ட திரையரங்காக விளங்கியது. கோட்டையிலிருந்து ஏவப்பட்ட இராணுவத்தினரின் ஷெல்லடிக்கு உள்ளாகி உருக்குலைத்திருந்த அதன் தோற்றமொன்றினையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.

அண்மையில் றீகல் திரையரங்கின் இன்றைய தோற்றத்தை இணையத்தில் கண்டபோது (அதனையே இங்கு காண்கின்றீர்கள்) நெஞ்சு வலித்தது. யுத்தச் சூழலின் கோர வடுக்களைத்தாங்கி நிற்கும் அதன் இன்றைய தோற்றம் அன்று நாம் அங்கு கழித்த இன்பமான தருணங்களை எண்ண வைத்துத் துயரை மேலும் அதிகரித்தது.


முகநூல் எதிர்வினைகள் சில:

K S Sivakumaran:  The English films I enjoyed then were many,.Some were:The Great Escape, Rear Window,Ten Commandments, many Westerns, Twelve Angry Men, Nurremburg Trials, Two women, Bicycle Thieves,I will stop here.My

Giritharan Navaratnam : Dear Sir, thank you very much for taking time to share your memories.

K S Sivakumaran:  I shall continue when my memory reawakens dear lovable friend vng.

Thambirajah Pavanandarajah : உங்கள் கட்டுரை மீண்டும் ஒருபழைய நினைவைக்கொண்டு வந்தது 70 களில் ஒருமுறை யாழ் வந்தபோது ரீகல் திரையரங்கில் Client Eastwwood நடித்த Where Eagles Dare என்ற படம் பார்த்திருக்கின்றேன், அந்தக்காலத்தில் ஆங்கிலம் பெரிதாக விளங்காவிட்டாலும் அப்படங்களில் இருக்கும் அப்படி இப்படிக்காட்சி களுக்காக ஆங்கிலப்படங்ககளுக்கு இளைஞர்கள் அலை மோதுவது வழக்கம் அதுவும் வயது வந்தவர் களுக்கு மட்டும் என்று போட்டுவிட்டால் போதும் சொல்லவேதேவையில்லை அருமை உங்கள் தொடர் வாழ்த்துக்கள் ,

Vadakovay Varatha Rajan:  அப்பா என்ன ஞாபகசக்தி உங்களுக்கு

Giritharan Navaratnam : இவையெல்லாம் என் பதின்ம வயதுகளில் பார்த்தவை. 🙂 அதன் பின் பல்கலைக்கழகம் சென்ற பின்னர் படம் பார்ப்பதே குறைந்து விட்டது. தற்போது பிடித்த திரைப்படங்களை அவ்வப்போது கணினியில் பார்ப்பதுண்டு. ஆனால் அன்று பார்த்தவையெல்லாம் இன்றும் பசுமையாக நெஞ்சினில் அழியாத கோலங்களாகவுள்ளன.

Vadakovay Varatha Rajan:  Giritharan Navaratnam Great

Muthurajah Thiyagarajah:  மிகவும் அருமையான பதிவு !

AS Kantharajah:  முக்கியமாக ஆங்கில திரைபடங்களில் வரும் முத்தக் காட்சிகளைப்பாரக்க இளவட்டங்கள் போவார்கள். ஆங்கிலம் விளங்கி அல்ல….எனக்குத் தெரிந்த ஒரு 50 வயது தமிழ் வாத்தியார் ஒருவர் ஒருபடத்தையும் தவறவிட்டதில்லை..

Karunaharamoorthy Ponniah : தமிழும் காமமும் விகுதியும் பகுதியும்போல இழைந்தவை

AS Kantharajah:  Karunaharamoorthy Ponniah  உங்கள் கதையில் வரும் உடையார் போல…

Thamayanthi Vimal : றீகல் இருந்த இடம் இன்று….

றீகல் இன்று

Hemachandra Pathirana : நல்ல தகவல் நன்றி


5. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – மறக்க முடியாத மனோஹரா!

யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்தான் யாழ் இந்துவில் படிக்கையில் தங்கிப்படித்த ஆச்சி வீடிருந்தது. யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தது முதலே மனோஹராவில் திரைப்படம் பார்ப்பது தொடங்கிவிட்டது. அப்பொழுதெல்லாம் மனோஹராவில் பழைய படங்கள் திரையிடுவார்கள். கலரி என்றால் முழு டிக்கற் 65 சதம். அரை டிக்கற் 35 சதம். அவ்விதம் பார்த்த திரைப்படங்களில் சில: பாகவதரின் ‘புது வாழ்வு’, சிவாஜி , பானுமதி நடித்த ‘அறிவாளி’, வாத்தியாரின் ‘மாடப்புறா’, ‘பாசம்’, ‘கொடுத்து வைத்தவள்’. இவ்விதம் பார்த்த பழைய திரைப்படங்கள் பல.

இன்னுமொரு சமயம் யாழ் மனோஹராவில் அதிகமாக ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அப்பொழுது பார்த்த திரைப்படங்களும் பல. அந்தனி குயீனின் தி ஹன்ச் பாக் ஒஃப் எ நோட்ர டாம் (The Hunchback of Notre Dame) .

எழுத்தாளர் விக்டர் கியூகோ எழுதிய புகழ்பெற்ற நாவல். பழமை வாய்ந்த, ஐரோப்பிய கோதிக் கட்டடக்கலையின் சின்னமாக விளங்கிய , 856 ஆண்டுப் பழமை வாய்ந்த இந்தக் கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து மனோஹரா தியேட்டரையும், இத் திரைப்படத்தைப்பற்றிய நினைவுகளையும் மீண்டும் ஏற்படுத்தி விட்டன.

இந்தக் கிறிஸ்தவ ஆலயத்தின் கட்டடக்கலைச் சிறப்பினை மக்களுக்கு எடுத்துக் காட்டும்பொருட்டு விக்டர் கியூகோ எழுதிய இந்நாவலின் பாத்திரங்களான குவாசிமோட்டோ (கூனன்) மற்றும் ஜிப்ஸிப்பெண் எஸ்மரால்டா ஆகியவை மறக்க முடியாத பாத்திரங்கள்.

கூனனாக அந்தனி குயீனும், ஜிப்ஸி பெண்ணாக இத்தாலிய நடிகை ஜீனா லொல்லோஜிபிரிடாவும் நடித்திருப்பார்கள். நாவல் நோட்ர டாம் ஆலயத்தைக் கதைககளமாகக்கொண்டிருக்கும். இத்திரைப்படத்தின் தழுவலே தமிழில் கல்யாணகுமார் கூனனாக நடித்திருக்கும் ‘மணியோசை’ திரைப்படம். இத்திரைப்படமே நான் பார்த்த நடிகர் அந்தனி குயீன் நடித்த முதலாவது திரைப்படமாகும்.

அப்பாவின் பிரியத்துக்குரிய நடிகர்களிலொருவரான சாள்ஸ்டன் ஹெஸ்டனின் (‘டென் கமான்ட்மென்ட்ஸ்’ திரைப்படத்தில் மோஸசாக நடித்திருப்பவர்) ‘தி ஒமேகா மான்’ , ஜீன் போல் பெல்மண்டோ (Jean Paul Belmondo) நடித்த ‘தி பிரெயின்’ , கேர்க் டக்லஸ் & ஹென்றி ஃபொண்டா நடிப்பிலுருவான ‘There Was a Crooked Man’ , கிறிஸ்டோபர் லீ நடித்த ‘ டேஸ்ட் த பிளட் ஆஃப் டிராகுலா’ (Taste the Blood of Dracula ), மைக்கல் கெயின் நடிப்பில் ‘தி இத்தாலியன் ஜாப்’ (The Italian Job ), ஜோன் வெயினின் ‘ஹட்டாரி’ , சார்ள்ஸ் பிரான்ஸனின் ‘தி புல் ஆஃப் தி வெஸ்ட்’ (The Bull of the West), மற்றும் ‘இட் இஸ் எ மாட் மாட் மாட் மாட் வேர்ல்ட் ‘ (It’s a Mad, Mad, Mad, Mad World), ‘டேஞ்சர் டயபாலிக்’ (Danger: Diabolik).. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம், இவ்விதம் பல ஆங்கிலத் திரைப்படங்கள்.

இன்னொரு சமயம் மனோஹராவில் புதுத்திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. வாத்தியாரின் ‘இதயக்கனி’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ஜெய்சங்கரின் ‘உயிர் மேல் ஆசை’ , ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘மேனாட்டு மருமகள்’.. இவை மனோஹராவில் நான் பார்த்த , இன்னும் நினைவில் நிற்கும் புதுத்திரைப்படங்கள். இவற்றில் ‘இதயக்கனி’ நூறு நாள்களைக் கடந்து ஓடியது. இது தவிர ராஜேந்திரகுமார், மாலாசின்ஹா நடிப்பிலுருவான ‘கீற்’ (Gheet) மறக்க முடியாத ஹிந்தித்திரைப்படம். மனோஹராவில் நீண்ட காலம் ஓடிய திரைப்படமாக நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் ‘மேரே மித்துவா’ பாடலை மறக்க முடியாது. இங்கு பார்த்த இன்னுமொரு ஹிந்தித்திரைப்படம் ஷம்மி கபூர் நடிப்பில் வெளியான ‘பிரம்மசாரி’. இதுவே பின்னர் தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான  ‘எங்க மாமா’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரையிட்டபோது ஆரம்பத்தில் மனோஹராவிலும், ஶ்ரீதரிலும் மாறி மாறித் திரையிட்டதாக நினைவு. முதல் நாள் நள்ளிரவே மனோஹராவில் முதற் காட்சி ஆரம்பமாகிவிட்டது இன்னும் நினைவிலுள்ளது. திருவிழா மாதிரி சனக்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் திரைப்படங்களில் புகழ்பெற்றவை இவ்விதமே முதல் நாள் நள்ளிரவே முதற் காட்சி ஆரம்பமாகிவிடுவது அக்காலகட்டத்தில் வழக்கமாகவிருந்தது.

மனோஹரா தியேட்டருக்கு உரிமையாளர்களாகப் பலரிருந்தனர் என்று கேள்வி. அவர்களில் ஒருவர் குழந்தை என்று அழைக்கப்படும் ஒருவரிருந்தார். அங்கு பணிபுரிந்த அண்ணாமலை என்பவரை மறக்கவே முடியாது. அவர் உரிமையாளர்களி லொருவரின் சகோதரர் அல்லது உறவினராகவிருக்க வேண்டும். ( மனோஹராவின் உரிமையாளர்கள் பற்றி அறிந்தவர்கள் அவ்விபரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளாலாம். ) அவரின் பெயர் அண்ணாமலை. நல்ல குரல் வளமுள்ளவர்.

அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் லவுட் ஸ்பீக்கர் பூட்டிய காரில் நகரில் வெளியாகும் திரைப்படம் பற்றி ஒலிபரப்பிக்கொண்டு வருவார்கள். அவ்விதம் வருகையில் அத்திரைப்படம் பற்றிய ‘நோட்டீ’சுகளை எறிந்துகொண்டு வருவார்கள். அவ்விதம் விளம்பரக் காரில் ஒலிபரப்பிக்கொண்டுவருவார் அண்ணாமலை. அவர் ஒருமுறை ஒலிபரப்பிக்கொண்டுவந்த சிங்களப்படமொன்றின் விளம்பரம் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பெயர் ‘பாரா வலலு’. நடித்திருப்பவர்கள்: காமினி பொன்செகா & மாலினி பொன்செகா. அண்ணாமலை அப்படத்தை விளம்பரத்திக்கொண்டுவருகையில் ‘ ஸ்டைலா’க விளம்பரத்துவதாக எண்ணிக்கொண்டு “காமினி கொன்செகரா , மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு” என்று விளம்பரத்திக்கொண்டு வந்தது அழியாத கோலங்களிலொன்றாக அடிமனத்தில் பதிந்து விட்டது.

என் பதின்ம வயதுகளில் என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருந்த சூழலாக மனோஹரா திரையரங்கு, நாவலர் வீதி, சாந்தையர் மடப்பிள்ளையார், சந்திரா கபே, அருகிலிருந்த கந்தசாமி மாஸ்டரின் டீயூசன் கிளாஸ், கந்தசாமி மாஸ்டரின் டியூசன் கிளாஸ் நடக்குமிடத்தில் சிறிது காலம் நடந்த சிவஞானசுந்தரம் மாஸ்ட்டரின் பல்கலைக்கழகப்புகுமுக வகுப்புக்கான கணிதப்பாடத்துக்கான இரை மீட்டல் வகுப்பு, ஐந்து சந்தியிலிருந்த பிளவுஸ் உணவகம், மொக்கங் உணவகம், ஆசாத் உணவகம் , அண்ணா அறிவகம் ஆகியவை அமைந்திருந்த சூழல் விளங்கியது.

மனோஹரா திரையரங்கைப்பொறுத்தவரையில் இன்னுமொரு விசேடமென்னவென்றால்… அங்கு ஒரு காலத்தில் நாடகங்களும் மேடையேறின என்று கூறினார்கள். அதனை நிரூபிப்பது போல் திரை அமைந்துள்ள மேடையின் கீழ் நடிகர்கள் மேக் அப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு அறைகள் விளங்கின.

பதின்ம வயதுகளில் எம் கனவுலகத் திரையரங்காக விளங்கிய மனோஹராவின் அண்மைக்காலத் தோற்றத்தினையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள்.


முகநூல் எதிர்வினைகள் சில:

Gv Venkatesan:  அழியாத நினைவு அலைகள்..

Sri Sritharan : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் “பிச்சைக்காரி”  படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை.

Giritharan Navaratnam : தகவலுக்கு நன்றி. இவை போல் வின்சர், ராணி போன்ற திரையரங்குகளின் ஆரம்பம், உரிமையாளர்கள் பெயர்கள் தெரிந்தாலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Vimal Kulanthaivelu : கொக்குவிலில் இருந்ததுதானே மனோகரா தியேட்டர்?

Giritharan Navaratnam : யாழ்ப்பாணத்தில் .. நாவலர் வீதியும் , கே.கே.எஸ் வீதியும் சந்திக்குமிடத்தில் , சாந்தையர் மடப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ளது.

Vimal Kulanthaivelu:  Giritharan Navaratnam பெரியதொரு அரசமரமோ,ஆலமரமோ அந்த கோவிலுக்கு முன்னால் கண்ட நினைவிருக்கிறது.

Linges Lingeswaran போனவருடம் போய்ப் பார்த்தபின்புதான்.. “வந்திருக்கக்கூடாது, உன்னைப்பார்த்திருக்கக் கூடாது, .பார்க்காமலே உன் நினைவுகளுடன் வாழ்ந்திருக்கலாம்” எனச்சொன்னது மனசாட்சி. அந்தக்காற்றுவெளி. அரசமரம். அந்த ரசிகர். அனைத்தையும் இழந்து கதைசொல்ல முடியாமல் தவிக்கும் பாலைவனம் எங்களின் மனோஹரா.

Vimal Kulanthaivelu : Giritharan Navaratnam 2016 இல் நானும் யாழ்ப்பாணம் போய் பழைய நினைவுகளுடன் அலைந்தேன். கிளிசிறியா மர வேலிகளும் ,பனை வடலி வளவுகளும் மட்டுமே ஏமாற்றாமல் ஆறுதல் தந்தது.


ஓவியர் மணியம் பற்றி….

ஓவியர் மணியம்அறுபதுகள், எழுபதுகளில் யாழ் திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் திரைப்படங்களுக்கான பிரமாண்டமான ‘கட் அவுட்’டுகளை வரைந்த ஓவியர் மணியம் இவர்தான். இவரைப்பற்றி நண்பர் லிங்கேஸ்வரன் (Linges Lingeswaran ) பின்வருமாறு நினைவு கூர்ந்திருந்தார்: “யாழ். திரையரங்குகளின் அன்றைய காலகட்டங்களில் கட் அவுட்டுக்களிற்கு பிரபலமாக Artist Maniyam அவர்கள்தான் விளங்கினார். நாளடைவில் அவரும், அவருடைய நண்பர் பாலாவும் (நியூ விக்டேர்ஸ்) யாழ்.இந்துவின் முன்னால் இருந்த பத்மா கபேக்கு பின்னேரங்களில் வருவார்கள். ஒவியர் மணியம்கூட ஒரு பச்சை கியர் சைக்கிள் வைத்திருந்தார்.”

முகநூல் எதிர்வினைகள் சில:

Linges Lingeswaran:  இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் எனப்பெருமைப்பட ஓவியர் மணியம் அவர்களையும் நினைவுகூர்வதில் திருப்தி.நல்லூர்.நல்லூர் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதுவும் தேர்த்திருவிழா.தேர் உற்சவம் பார்த்து, அருகிலேயுள்ள செட்டித் தெருவுக்குள் நுழைந்தோம். அங்குதான் இந்த ஓவியமேதை வாழ்ந்தார். ஓவியத்தை வரைவதற்கான, தளபாடங்களை கட்டமைப்பதற்கான, வர்ணங்களைக்கலப்பதற்கான, தனக்குள் வாழ்ந்த, தனக்குக் கிடைத்த அந்த வரத்தை, அந்தக்கலையைச் செதுக்குவதற்கான அந்த நந்தவனமே அவர் குடிகொண்டது என என் கண்கள் சொன்னன. வாசல் கடந்துவர வரவேற்கின்றார். மெல்லிய புன்னகை. ஆங்காங்கே துண்டு துண்டுகளாக மரப்பலகைகள். அதிலே
ஓவியங்கள். இது எப்படியென வியந்து போகின்றோம். நல்லூர் கற்பூரவாசம் அவர் நேசித்த அந்த மரங்களை அசைத்து மனங்களை விசுவாசித்த காலம் அது. இன்னும், இன்னும் நாம் வாழ்ந்த வாழ்வையும், எமது கலை, இலக்கியங்களையும் ஆராய்ந்து எழுதவேண்டும். எம் கலைஞர்களைக் கொண்டாடவேண்டும். எம் பொக்கிஷங்களை இனிமேலாவது பாதுகாத்தல் அவசியம்.

நான் சொல்வேன். ஓவியர் மணியத்தைப்போல நான் இன்றுவரை இந்திய சினிமாவின் கட் அவுட்டுக்களில் ஓவியத்திற்கு உயிர் கொடுத்ததாகத்தெரியவில்லை.”பட்டிக்காடா பட்டணமா” படத்திற்கு கட்அவுட் கட்டியாச்சு. செய்து பரவுது. பல செய்திகள் அப்போது அப்பாவால் அறிந்ததுண்டு. காரணம். அப்பா யாழ்.வைத்தியசாலையில் கடமைபுரிந்தபடியால். நண்பர்கள்கூட்டம்கூடி ஊண்டி சைக்கிள் உழக்கி வெய்யிலின் வெக்கை உடம்பில் ஒட்ட ஒட்டப்பறக்கின்றோம். மூன்று கட் அவுட். ஒன்று
பட்டிக்காட்டுச் சிவாஜி, அடுத்தது பட்டணத்துச் சிவாஜி. ஒன்றைக்கவனித்தோம்.

‘பார்த்தியா மச்சான். சிவாஜி போட்டிருக்கிற நஷனலுக்குள்ளால பெனியன் தெரியுதுமச்சான். ஜெயலலிதா போட்டிருக்கிற சண்கிளாசுக்குள்ளால அந்த வடிவான கண்கள் மச்சான். எப்படி மச்சான் இப்படியெல்லாம் ஆட் பண்றது? He is a one of the best machchan” என்ன? நீ என்ன சொல்றா? அங்கபார் கிருபாவை. வாய்க்குள்ளால வீணி வடியுது.பட்டணத்துப்பொம்பிளையை ஏற, இறங்கப்பார்க்கிறான் பார்.’ 3 கட் அவுட்டுக்களுக்குள் பெயர்போனது அந்த மினியுடனும், சண் கிளாஸ் உடனும் நின்ற பட்டணத்துப் பொம்பிளைதான். இதனாலேயே எத்தனை சிறு விபத்துக்கள் அன்று? வெலிங்டனில் வசந்தமாளிகை. அதன் கட் அவுட். அப்படத்தின் 100 ஆவது நாளில் கலன்டர் வெளியீடு.அக்கலன்டரை வாங்கி சிவாஜியையும், வாணிஸ்ரீயையும் அதே போல் வரைந்த பித்தன் நான். இமைகளை மூடியபடியே காதலை வெளிப்படுத்திய அந்த ஓவியத்தை எமது கலைஞன் ஓவியர் மணியத்தைத்தவிர யார் உளர்? சொல்லுங்கள். ஒன்று சொல்வேன். சரியோ, பிழையோ என வாதாடும் களமல்ல இது. எம்மவரை நாம் போற்றாமல் வேறு யார்…? தவிலுக்குச்சக்ரவர்த்தி தட்சணாமூர்த்தி யென்றால், ஓவியத்தில் அற்புதன் (கண்ணாளன்) என்றும் எமது மண்ணின் மணியம் அவர்களே.”

Sugumar Cumarasamy:  ஒவியம் எண்றால் மணியம் அவர்கள்தான். அவருடைய கட் அவுட்டுகள் எல்லாம் கதை பேசும்.


பசுமை நிறைந்த நினைவுகள்: அன்று யாழ்நகரில் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள்.

THE Hunchback of Notre Dameஅண்மையில் ஐபிசிதமிழ் தொலைக்காட்சியினரின் ‘வணக்கம் தாய்நாடு’ என்னும் தலைபில் அன்றைய யாழ்நகரத்திரையரங்குகளின் இன்றைய நிலை என்பது பற்றிய காணொளியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். அது பழைய நினைவுகள் பலவற்றைக் கிளறிவிட்டது. அன்று றியோ, றீகல், மனோஹரா போன்ற திரையரங்குகளில் , என் பதின்மவயதுகளில் எத்தனை ஆங்கிலத்திரைப்படங்களைப் பார்த்திருப்பேன். அவற்றை எனக்கு அறிமுகம் செய்த அத்திரையரங்குகளின் இன்றைய நிலை நெஞ்சில் ஒருவித கழிவிரக்கத்தை வரவழைக்கும். இப்பதிவு அன்று யாழ்திரையரங்குகளில் நான் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள் பற்றியதொரு பொதுவான பதிவு.

அது ஒரு காலம். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் றீகல் (வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்திருந்த றீகல் இப்பொழுது இல்லை), மனோஹரா தியேட்டர்களில் மட்டுமே அதிக அளவில் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் அதில் ரியோ திரைப்பட அரங்கும் சேர்ந்து கொண்டது. யாழ் நகர மண்டபத்தின் பகுதியே அவ்விதம் ரியோ தியேட்டராக மாறியது. ஆங்கிலப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகள் பாடசாலை மாணவர்களால் நிறைந்திருக்கும். கலரி, இரண்டாம் வகுப்பு மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். பாடசாலை விட்டதும் றீகலுக்கும், மனோஹராவுக்கும் மாணவர்கள் படையெடுப்பார்கள். அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன. அத்திரைப்படங்களினூடு எனக்கு அறிமுகமான நடிகர்கள் பலர். அந்தனி குயீன், சாள்டன் கெஸ்டன் (இவர்களெல்லாரும் என் அப்பாவின் காலகட்டத்து நடிகர்கள். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். எங்கள் காலகட்டத்திலும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.), மைக்கல் கெயின், ஜான் வெய்ன், கிறிஸ்தோபர் லீ, லீ வான் கிளீவ், ஜீன் போல் பெல் மாண்டோ , யூல் பீரயினர், சீன் கானரி (ஷான் கானரி), ஜீனா லொல்லோ பிரிஜிடா (இவரது ஒரேயொரு படத்தைத்தான் பார்த்திருக்கின்றேன். அது விக்டர் ஹியுகோவின் புகழ் பெற்ற நாவலான The Hunch Back a Notre Dame , தமிழில் அதன் தழுவல் கல்யாணகுமார் நடிப்பில் மணியோசை என்று வந்தது.), உர்சுலா அன்ரெஸ், சார்ள்ஸ் பிரோன்சன், அலன் டிலோன், ஜூலியனா ஜெம்மா, கேர்க் டக்ளஸ், ஹென்றி ஃபொண்டா, ஹரி கூப்பர் (இவர் எங்களது அப்பாவின் பால்ய காலத்து நாயகர்களில் ஒருவர்; எங்களது காலத்திலும் இவரது புகழ்பெற்ற திரைப்படமான High Noon திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன்.), கிரகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வூட், டெலிச விலாஸ் என்று பெரியதொரு நடிகர்/ நடிகைகளின் பட்டாளம் அறிமுகமானது அக்கால கட்டத்தில்தான். சிசில் டிமில் (Cecil DeMille ) ஹாலிவூட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்; இயக்குநர்; வசனகர்த்தா. ‘பென்ஹர்’ , ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ , ‘த கிரேட்டஸ்ட் ஷோ ஒன் ஏர்த்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். இவரது மகளே அந்தனி குயீனின் முதல் மனைவி என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

இவ்விதமாக அன்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியவையாக விளங்கின. ஜேம்ஸ் பாண்டின் துப்பறியும் படங்கள், ஆல்ஃபிரெட் ஹிட்ஷாக்கின் திகில் படங்கள் (‘சைக்கோ திரைப்படத்தை அந்த வயதிலேயே பார்த்திருக்கிறேன்.), திகில் மிகுந்த பேய்ப்படங்கள் (கிறிஸ்தோபர் லீ டிராகுலாவாக வரும் திரைப்படங்கள்), வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்கள் (It is a mad mad mad wordl திரைப்படத்தை இப்பொழுது நினைத்தாலும் புன்னகை அரும்பும். அவ்வளவுக்கு வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம்; மனோஹராவில் பார்த்தது), கானகத்து மிருகங்களைப் பற்றிய படங்கள் (ஜான் வெயினின் ‘ஹட்டாரி’ , ஆபிரிக்கன் சவாரி போன்ற படங்கள். ஹட்டாரிக்குப் பாடசாலைகளே மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்), ‘வெஸ்டேர்ன் (அல்லது Cow-Boy) படங்கள் (லீ வான் கிளீவ், சார்ள்ஸ் புரோன்சன், ஜான் வெயின், ஜூலியனா ஜெம்மா போன்றவர்களின் பெரும்பாலான திரைப்படங்கள்; சார்ள்ஸ் புரோன்சன் தனது ஆரம்ப காலத்தில் இவ்விதமான படங்கள் அதிகமானவற்றில் நடித்திருக்கின்றார். அதிலொன்றான The Bull of the West எங்கள் காலத்தில் திரையிட்டபோது பார்த்திருக்கின்றேன். நான் பார்த்த இவரது முதலாவது படம் ‘ரெட் சன்’, யாழ் றியோ தியேட்டரில் பார்த்தேன். பின்னர் இவர் பல்வேறு வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வெளிவந்தன.), அறிவியல் அல்லது விஞ்ஞானத் திரைப்படங்கள் ( சாள்டன் ஹெஸ்டனின் ‘த ஒமேஹா மான்’, யூல் பிரையினரின் ‘வெஸ்ட் வேர்ல்ட் இவை இரண்டையும் ஒருபோதுமே மறக்க முடியாது.

யூல் பிரயினர் ‘அன்ட்ராயிட்’டாக நடிக்கும் ‘வெஸ்ட் வேர்ல்ட்டில்’ பலமுறை இறந்து பிழைப்பார். ‘ஜூராசிக் பார்க்’ புகழ் மைக்கல் கிரைய்க்கடன் எழுதி, இயக்கிய திரைப்படமது. பொழுதுபோக்குப் பூங்காவொன்றில் அமெரிக்காவின் ஆரம்ப காலகட்டம், ரோம் காலகட்டம், ஐரோப்பாவின் மத்திய காலகட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய விருப்பமான காலகட்டத்துக்குரிய கம்யூட்டர் மனிதர்களுடன் நீங்கள் விளையாடலாம். அவர்களைக் கொல்லவும் முடியும். இவ்விதமான கம்யூட்டர் மனிதர்கள் ஒருபோதுமே மனிதர்களை மீறாத வகையில்தான் ‘புறோகிறாம்; எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தக் கம்யூட்டர் மனிதர்கள் புறோகிறாமையும் மீறிச் செயற்பட ஆரம்,பித்துவிடுகின்றார்கள். மனிதர்களைக் கொல்லவும் செய்கின்றார்கள். இவ்விதமாகச் செல்லும் கதை. மைக்கல் கிராய்க்டனின் ஜுராசிக் பார்க்கிலும் இவ்விதமானதொரு பொழுதுபோக்குப் பூங்காவொன்று , ஃபாசிலிலுள்ள டைனோசர்களின் உயிர் அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் அம்மிருகங்கள் மனிதர்களை மீறிச் செயற்பட ஆரம்பிக்கும்.), கொள்ளைகளை மையமாக வைத்து உருவான படங்கள் (டேஞ்சர் டயபோலிக், த பிரயின், த இத்தாலியன் ஜாப், த கிரேட் ட்ரெயின் ராபரி, தெயர் வாஸ் அ குரூக்ட் மான் போன்ற) என்று பல்வகையான ஹாலிவூட் திரைப்படங்களில் மூழ்கிக் கழிந்தது எங்களது பாடசாலை மாணவப் பருவம். பல திரைப்படங்கள் எங்கள் வயதுக்கு மீறிய காட்சிகள் ( நடிகையின் நீர் வீழ்ச்சியில் நிர்வாணக் குளியல், நாயக- நாயகியரின் முத்தக் காட்சிகள் போன்ற) அவ்வப்போது , ஓரிரு கணங்கள், வருவதுண்டு. அவற்றுக்காகவும் சிலர் ஆங்கிலப்படங்களுக்குப் படையெடுப்பதுண்டு.

ஹேர்க் டக்ளஸின் There was a crooked man மறக்க முடியாத திரைப்படங்களிலொன்று. அதில் அவர் செல்வந்தர் ஒருவரிடமிருந்து அரை மில்லியன் டாலர்கள் கொள்ளையடிப்பார். அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களில் அவரைத் தவிர மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இவர் பணத்தைப் பெண்களின் உள்ளாடைக்குள் முடிந்து, பாம்புப் புற்றொன்றில் போட்டு விடுவார். பின்னர் இவர் கொள்ளையடித்த செல்வந்தரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அரிசோனாவிலுள்ள பாலைநிலமொன்றின் நடுவிலுள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்படுகின்றார். அவரைச் சிறைப்பிடிக்கும் சிறையதிகாரியாக ஆரம்பத்தில் ஹென்றி ஃபொன்டா வருவார் (பின்னர் ஏற்கனவே இருந்த சிறை வார்டனாக வருவார்). சிறையிலிருந்த வார்டனுக்கு ஹேர்க் டக்ளஷின் பணத்தைப் பங்கு போடவேண்டுமென்று ஆசை. அதற்காக அவர் ஹேர்க் டக்ளசுடன் திட்டமிடுகையிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றார். அதன் பின்னர் புதிய வார்டனாக வருகின்ரார் ஹென்றி ஃபொன்டா. பின்னர் சிறையை உடைத்து ஹேர்க் டக்ளஸ் தப்பிச் சென்று பாம்புப் புற்றிலிருந்து பண முடிப்பை எடுத்து, மகிழ்ச்சியுடன் திறக்கையில் எதிர்பாராத வகையில் அதற்குள்ளிருந்த பாம்பு பாய்ந்து இவரைக் கொத்திவிடவே இறந்து போகின்றார். இவரைப் பின்தொடர்ந்து வரும் வார்டன் ஹென்றி ஃபொன்டா இவரது உடலையும், பண முடிப்பையும் எடுத்துக்கொண்டு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். சென்றவர் ஹேர்க் டக்ளசின் உடலைப் போட்டுவிட்டு, பணமுடிப்புடன் மெக்சிக்கோவுக்குத் தப்பிச்செல்கிறார். ஹேர்க் டகள்சின் பாம்புப் புற்றுக்குள்ளிருந்த பண முடிப்பை எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அதனுள்ளிருந்த பாம்பு பாய்ந்து கொத்தும் கட்டத்தில் திரையரங்கு அதிர்ச்சியில் ஆழ்ந்துவிடும். அந்தக் கட்டம்தான் எப்பொழுதும் இந்தப் படத்தைப் பற்றி எண்ணுகையில் நினைவுக்கு வரும்..

WalkAbout ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நாவல்களிலொன்றான WalkAbout என்பதை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம். ஒரு பதின்ம வயது வெள்ளியினத்துச் சிறுமியும், அவளது இளைய தம்பியும் ஆஸ்திரேலியப் பாலை வனத்தில் வழிதடுமாறிச் சிக்குண்ட நிலையில் (சுற்றுலாவுக்காக அழைத்து வந்த அவர்களது தந்தை அவர்களைச் சுட்டுக்கொல்ல முற்படுகையில் இவர்கள் இருவரும் தப்பிச் செல்கின்றார்கள்; தந்தை காருக்குத் தீ வைத்து விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொல்கின்றார்), அவர்களுடன் சேரும் ஆஸ்திரேலியவின் பூர்விகக் குடி இளைஞனொருவனும் சேர்ந்து கொள்கின்றான். இவர்கள் மூவரும் அப்பாலை வனப் பிரதேசத்தில் தப்பிப் பிழைத்தலுக்காக நடத்தும் போராட்டம் பற்றிய படம். என் மனதில் பசுமையாக நிற்கும் ஆங்கிலப் படங்களில் WalkAbout ற்கும் முக்கிய இடமுண்டு.


முகநூல் எதிர்வினைகள் சில:

Iravi Arunasalam:  அக்காலத்தில் மிக முக்கியமான திரைப்படம் வெளியாயிற்று. தலைப்பு: “One Flew Over the Cuckoo’s Nest “‘ என்ற திரைப்படம். ‘குயிற்கூட்டின் மேலால் பறந்த ஒன்று’ என ஏ.ஜே.கனகரத்தினா அதன் தலைப்பைச் சொன்னார். சேரன், ‘குயிற்கூட்டின் மேலால் ஒரு பறப்பு’ என்கிறார். அற்புதமான சினிமா அது. Jack Nicholson எனும் மகா நடிகன் நடித்த திரைப்படம் அது. ‘Krammer VS kramer’ படம் பார்த்தீர்களா? ‘Doctor Zhivako’? என்றும் ஒரு படம் இருக்கிறது. Antony Quin நடித்தது. அவர் நடித்த ‘Omar Sherif’ இருக்கிறதே, மகத்தான திரைப்படம். ‘Neithar The Sea Nor The Sand’ பார்த்தபோது நான் இந்த உலகில் இல்லை. ‘Casendra Crosing’, ‘Alfie Darling’ என்பவையெல்லாம் வெகுஜன ரசனை. அது ஒன்றும் தவறல்ல. அப்போது எனக்கு மிகப் பிடித்த நடிகர்கள் இருவர். இருவரும் இரு முனை. Jak Nicholsan. Charles Brownson. இருவேறு வடிவங்களை நியாயப்படுத்தியவர்கள்.

Giritharan Navaratnam:  //’Doctor Zhivako’? என்றும் ஒரு படம் இருக்கிறது. Antony Quin நடித்தது. அவர் நடித்த ‘Omar Sherif’ இருக்கிறதே, மகத்தான திரைப்படம்.// ‘Doctor Zivako’ படத்தின் நாயகன் ‘ஓமர் ஷெரீவ்’ அந்தனி குயீன் அல்லர். ‘ஓமர் ஷெரீவ்’ திரைப்படத்தின் பெயரல்ல. நடிகரின் பெயர்.

Giritharan Navaratnam : //”One Flew Over the Cuckoo’s Nest -‘ என்ற திரைப்படம். ‘குயிற்கூட்டின் மேலால் பறந்த ஒன்று’ என ஏ.ஜே.கனகரத்தினா அதன் தலைப்பைச் சொன்னார். சேரன், ‘குயிற்கூட்டின் மேலால் ஒரு பறப்பு’ என்கிறார்.// One Flew Over the Cuckoo’s Nest – நானும் இப்படம் பார்த்தேன். உண்மையில் இப்படத்தை நான் அன்று பார்க்கவில்லை. கனடாவில் பார்த்தேன். ஜக் நிக்கல்சனின் அற்புதமான நடிப்புக்காகப் பார்க்கலாம். இத்திரைப்படத்தின் மூலக்கதையான நாவல் அமெரிக்கப் பூர்வீகக் குடியினரின் உரிமையினை வலியுறுத்தும் குறியீட்டு நாவல். நாவலின் தலைப்பின் மொழிபெயர்ப்பினைப்பொறுத்தவரையில் ஏ.ஜே.கனகரத்தினாவின் தமிழாக்கமே எனக்குச் சரியாகப்படுகின்றது. ஏனெனில் அது தலைப்பின் முழுமையான மொழிபெயர்ப்பு. கதையும் அவ்விதம் குயிற்கூட்டிற்கு மேலால் (உண்மையில் குயிற்கூட்டிற்குள்ளேயே) பறந்த ‘Randle McMurphy, (படத்தில் Jack Nicholson – ஜாக் நிக்கல்சன்) என்ற மனிதர் ஒருவரை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதை என்பதால்தான் அக்கதைக்கு அத்தலைப்பு. ‘குயிற்கூட்டின் மேலால் ஒரு பறப்பு’ என்பதில் அந்த ஒருவர் அல்லது ஒன்று விடுபட்டுப்போயுள்ளது. இத்தலைப்பு குயிற்கூட்டின் மேலால் பறக்கும் எல்லாவற்றுக்கும், எவருக்கும் பொருந்தும். இது பொதுவான கூற்று. ஆனால் படத்தின் தலைப்பு இறந்த காலத்திலுள்ளது (flew – “One Flew Over the Cuckoo’s Nest ‘). ‘குயிற்கூட்டின் மேலால் ஒரு பறப்பு” என்பது காலத்தைக் காட்டவில்லை. ‘குயிற்கூட்டின் மேலால் ஒரு பறப்பு’ எப்படியுமிருக்கலாம். எப்போதும் நிகழலாம். ஆனால் ‘குயிற்கூட்டின் மேலால் பறந்த ஒன்று’ என்பது இறந்த காலத்தைக் காட்டுகின்றது. நடந்த ஒன்று பற்றியது.

Iravi Arunasalam : Giritharan Navaratnam உண்மையில் இக்கதையாடல் எவ்வளவு ஆசுவாசமாக உள்ளது.

Parathan Navaratnam: கொழும்பில் ஓடிய பின்னர்தான் யாழ்பாணத்திற்கு ஆங்கிலப்படம் வரும் எனவே கொழும்பு சென்றால் முடிந்தவரை ஆங்கிலப்படங்கள் பார்த்துவிட்டுத்தான் ஊர் திரும்புவேன் .ஆங்கில படங்களிலும் தமிழ் படங்கள் மாதிரி முதலில் Action பட ரசிகனாக இருந்து பின்னர் சீரியஸ் பட ரசிகனாக மாறினேன் .ஆரம்பம் Clint Eastwood ,Charles Bronson தான் பின்னர் Robert De Nero ,Jack Nicholson ,Al Pacino ,Dustin Hoffman என்று மாறியது .

Giritharan Navaratnam : Robert De Nero நடிப்பில் Deer Hunter பார்த்தது நினைவிலுள்ளது. ஶ்ரீதர் தியேட்டரிலாகவிருக்கலாம்.

Giritharan Navaratnam : ஹேர்க் டக்ளஸின் There was a crooked man மறக்க முடியாத திரைப்படம். மறக்க முடியாத முடிவு. யாருமே எதிர்பாராத நேரத்தில் திரைப்படத்தின் முடிவில் ஏற்பட்ட அதிர்ச்சியினைத்தந்த முடிவு.

ngiri2704@rogers.com