ராஜினி திரணகம: மண்ணின் மகளே நீ வாழி!

– செப்டம்பர் 21 ராஜினி திரணகமவின் நினைவு தினம். அவர் நினைவாக –

ராஜினி திரணகம

மானுடர்தம் உரிமைகளுக்காய்ப்போராடினாய்!
மண்ணின் விடுதலைக்காய்க் குரல் கொடுத்தாய்.
மாணவர்க்கு மருத்துவம் போதிப்பதற்காய்
மீண்டும் வந்தாய் நீ பிறந்த மண்ணுக்கு.
மண்ணோ யுத்த பூமியாக,
மரண பூமியாகக் கொந்தளித்துக் கிடந்தது.

மண்ணின் அச்சூழல் கண்டும் நீ
மனந்தளரவில்லை.
மக்களுக்காய், மக்கள்தம் உரிமைகளுக்காய்
மீண்டும் மீண்டும் முழங்கினாய்.

மரணம், உன் மரணம் உன்
மண்ணின் மைந்தனொருவானாலே புரியப்படுமென்று
மனத்தில் உணர்ந்திருந்தாய்.
மனத்தில் உணர்ந்ததை எதிர்வும் கூறினாய்.

மருத்துவபீடத்தின் முன்னால் உன்
மரணம் நிகழ்ந்தது தீராத்துயர்; மாறா வலி.

மழலை பேசிப்பின் மங்கையாக, மனைவியாக
மாதாவாக , மருத்துவத்துறை அறிஞராக
மலர்ந்திருந்தாய்! உனை
மண்டையில் குண்டுகளிட்டு மெளனிக்க வைத்தார்.
மண்ணில் குருதி வழிய , நீ குடங்கிக் கிடந்த காட்சி
மனத்தில் தோன்றுகையில் மனது வலிக்கின்றது.

மரணமும் உன்னை மக்கள்தம் மனங்களில்
மறக்க முடியாத மானுடநேயப் போராளியாக்கியுள்ளது.

மண்ணின் மகளே! இம்
மண்ணில் வாழ்ந்து இம்
மண்ணுக்காய் மடிந்தாய்!
மகளே! நீ வாழி.
மண்ணில் வாடா மலரென என்றும்
மக்கள்தம் மனங்களில் மலர்ந்திருப்பாய்!
மகளே! நீ வாழி!