‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

லதா ராமகிருஷ்ணன்

1. ஆறாத்துயர்

ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.

பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.

இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.

’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.

ஆதிச்சமூக வரலாறும்
அந்தப்புரங்களும்
தற்காலத் திரைப்படங்களும்
இணையமெங்கும் பெருகியிருக்கும்
’போர்னோ’க்களுமாக _

விழியாலும் மொழியாலும்
ஒலி ஒளி ஊடகங்களாலும்
விதவிதமாய்
வழியெங்கிலும் வன்புணர்வுக்காளாக்கப்படும்
பெண்
பின் படுகொலை செய்யப்படுகிறாள்;
புதைக்கப்படுகிறாள்
அல்லது எரிக்கப்படுகிறாள் _

என்றும்போல்
இன்றும்.

(*ஹைதராபாதில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார் கால்நடை மருத்துவரான இளம்பெண்)


2. போர்வை

மழைக்காலத்தில் மழைபெய்யாமல்போகலாம்….

ஆனால் குளிர்காலத்திற்கென்று ஒரு தனிக் குளிர்
கண்டிப்பாக உண்டு.
மறைவிலிருந்து சிறிதுசிறிதாக ஒரு கூர்கத்தியைச்
சொருகும் அது.

அடிமுதல் முடிவரை பரவும் அந்த வலியை
சொகுசுப்படுக்கையிலிருந்தாலும்கூட
நம்மால் உணரமுடியும்.

உறக்கம் சமயங்களில்
உணவைவிட அதிகம் வேண்டப்படுவது;

தெருவோரம் முடங்கிக் கிடக்கும்
அந்த அடையாளமற்ற மெலிந்த உடம்பு
தூங்கவழியற்று நேற்று எத்தனை நிராதரவாய்
ஏங்கிச் சுருண்டிருந்தது.

இரண்டிற்குமேல் போர்வைகள் எனக்கிருப்பதற்காய்
ஆறுதலடையவா? அல்லது
குற்றவாளிக்கூண்டில் என்னை நானே
நிறுத்திக்கொள்ளவா?

தொடருமக் கேள்வி யொரு
தீராத் தண்டனையாக _

ஒரு போர்வையைச்
சுருட்டியெடுத்துக்கொள்கிறேன்.

அருகே சென்று அதைத் தந்தபோது
அந்த சகவுயிர் சொன்ன நன்றியில்
அதிகமாகிவிட்ட என் பாவச்சுமையை
எப்படி இறக்குவேன்?

எந்த நாட்டின் குடிமக்களாயிருந்தாலும்
சொந்த நாட்டில் வாக்குரிமையற்ற
அவர்கள்
போர்வைக்காக நீட்டும் கரங்கள்
பல்கிப்பெருகிக்கொண்டே போக _

கேவும் மனதின் கையறுநிலையைப்
பொறுக்கமாட்டாமல்

கேவலமான மாயாஜாலம்தான் என்று
தெரிந்தே
ஒரு கவிதையின் வரிகளையெல்லாம்
போர்வைகளாக விரித்துப்போடுகிறேன்..

[சமர்ப்பணம்: காலங்காலமாக வீதியோரங்களில் வாழ்ந்து முடியும் கணக்கற்ற சகமனிதர்களுக்கு]


3. விழித்திரையில் அழியும் பிம்பங்கள்

கண்மருத்துவமனையெங்கும் சிதறிக்கிடந்த கண்களில்
தங்களுடையதைத் தேடிக்கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்.

சில புழுதி படிந்தவை;
சில சற்றே சிதைந்தவை
சில நொறுக்கப்பட்டவை
சில பிய்த்தெறியப்பட்டவை.

இருப்பதில் தங்களுடையது குறைவாகச் சிதிலமடைந்தவையாக இருக்கட்டுமே
என்ற பிரார்த்தனை சப்தமில்லாமல் அந்தக் கூடமெங்கும் நிறைந்திருந்தது.

ஒருகாலை அவர்கள் காதலுக்காகக்
காத்திருந்திருக்கக் கூடும்;
இன்று தங்கள் கண்களுக்காகக் காத்திருந்தார்கள்.
தங்கள் காதலில் பிறந்த குழந்தையின் கண்
நன்றாகத் தெரியவேண்டுமே என்று
அன்பில் பேதலித்துக் காத்திருந்தார்கள்.

முதியவர்களை சமூகம் மதிப்பழிப்பதுபோலவே
காலமும் கண்ணழித்து கதியிழக்கச் செய்கிறது.

நேற்று பிறந்த மழலையின் விழிகளில் மருந்தூற்ற
பெருமுயற்சி செய்கிறார்கள்
மகத்தான செவிலியர்கள்.

நான்கு இருக்கைகளை நிரப்புமளவு பெருத்திருந்த
பார்வையற்ற மகனைத் தன் மெலிந்த கரத்தால்
வழிநடத்திக்கொண்டிருந்தாள் ஒரு தாய்.

கனிவோடு அவர்களிடம் பேசத் தெரிந்த
அவர்களுடைய கண்களை பழுதுபார்க்கத் தெரிந்த
மருத்துவர்கள்
மனிதக்கடவுளர்கள்.

விஞ்ஞானம்
தெய்வீகம்.

அத்தனை பேருக்கும் அன்பளிப்பாய்
ஆளுக்கு ஒரு ஜோடி அப்பழுக்கற்ற கண்களை
என் கவிதையால் தரமுடிந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்……


4 கண்ணோட்டம்

காதுகளும் நாசியுமாகத் தாங்கிப்பிடித்திருக்கும்
மூக்குக்கண்ணாடி உதவியோடு
சில பல மின்விளக்குகளின் உதவியோடு
என்னால் பார்க்க முடியும்;
படிக்க முடியும்

ஆனால்,
எனக்கு பானை செய்யத் தெரியாது.

பாடத் தெரியாது.

பறவைகளின் மொழியைப்
புரிந்துகொள்ளவியலாது.

பல காதங்கள் நடந்துசெல்ல முடியாது.

பகலவனை அண்ணாந்து பார்த்து
சரியான நேரத்தைக்கணித்துச்
சொல்லவியலாது.

பசியில் வாடும் அனைத்துயிர்களுக்கும்
அட்சயபாத்திரமாகவியலாது.

பார்ப்பதால் எனக்குப் ’பார்க்க’த்
தெரியுமென்று
நிச்சயமாகச் சொல்லவியலுமா என்ன?

பார்வைகள் ஆயிரம் எனில்
எனக்குத் தெரிந்தவை
பத்துக்குள் தான் இருக்கும்…..

அவருக்குப் பார்க்கமுடியாது;

ஆனால் பாடத் தெரியும்;

அற்புதமாக கிடார் வாசிக்கத் தெரியும்;

அவர்கள் வீட்டுப்பூனையிடம்
அவர் எப்படி அளவளாவுவார் தெரியுமா!

அந்தத் தெருமுனையிலிருக்கும் ஜூஸ் கடையில்
அவர் முப்பது ரூபாய் ஜூஸ்
குடிக்கும்போதெல்லாம்
அந்தக் கடைப்பையன்கள்
அத்தனை நேர்மையாகப் பிழிந்துதரும்
ஒன்றரை கோப்பை பழச்சாறில்
அரைகோப்பையை
தொலைதூர ஊரிலிருந்து வந்து
வேலைபார்த்துக்கொண்டிருக்கும்
தன் தம்பியொத்த சிறுவனுக்கு
அத்தனை அன்போடு தந்துவிடுவார்.

பார்க்கவியலாத தன்னைப் பார்த்தபடி
பேசும் மனிதரின்
மனதிலோடும் வரிகளை மிக நன்றாகவே
படித்துவிட முடியும் அவரால்.

பார்வைகள் ஆயிரமும் அவருக்கு
அத்துப்படியில்லையாயினும்
அறுபதாவது பரிச்சயமுண்டு கண்டிப்பாய்.

அதற்கும் மேல்
அம்மா அப்பாவிடம் அன்பாக
நடந்துகொள்ளத் தெரியும்;

அடுத்தவர் மனம் நோகாமல்
மாற்றுக்கருத்துகளை முன்வைக்கத்
தெரியும்.

அவ்வளவாகத் தன்னைப் பொருட்படுத்தாத
சமூகத்தின் அறியாமையை
மன்னிக்கத் தெரிகிறது;
மறந்துவிடக்கூட முடிகிறதுஅவரால்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் _

அவரால் பார்க்கமுடியவில்லையெனில்
அவரைப்போலவே என்னாலும்;

என்னால் பார்க்கமுடியுமெனில்
பார்த்தபடியேதான் அவரும்.


5. ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச் சுருக்கம்

ரத்தக்காட்டேரிகள் பசியோடு உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை அவற்றால் அங்கீகரிக்க
முடியாது.

அவற்றைப் பொறுத்தவரை
வெறுப்பும் விரோத முமே வாழ்வியல்பு.
தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்
பக்கத்திலிருப்பவரை அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு

வழிசெய்துகொள்ள முடியும்.

ரத்தக்காட்டேரிகள் நாவறள உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாமல்.
அது பயத்தால் விளைந்தது என்று
நாளும் சொல்லிச்சொல்லி உருவேற்றப்பார்க்கும்.

நயத்தக்க நாகரீகமும் நட்பும் நேசமும்
தன் துட்ட நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடும்
என்று ரத்தக்காட்டேரிகளுக்குத் தெரியாதா என்ன?

அறைக்குள் பாதுகாப்பா யமர்ந்தபடி
சுற்றுவட்டாரத்திலே
தேனும் சின்னச்
சண்டை நடக்குமா என்று சதா
கண்களை இடுக்கித்
துருவிக்கொண்டிருக்கும் அவை.

ஒரு பொறி போதும் கவிதை உருவாக என்பது
உண்மையோ பொய்யோ
அய்யோ அதுபோதுமே ரத்தக் காட்டேரிகளுக்கு.
தறிகெட்டோடி யனைத்தையும் உருக்குலைக்க.

.யாருடைய கரங்களாவது யாருடைய
குரல்வளைகளையாவது
கடித்துக்
குதறிக்கொண்டேயிருக்கவேண்டும்.

வழியும் ரத்தம் நின்றுவிடாதிருக்க அதுவே வழி.
பருகும் குருதியே பிரதானம்
ரத்தக்காட்டேரிகளுக்கு.

கலவரமுண்டாகிக் கைகால்கள் பிய்த்தெறியப்
படாவிட்டால்
பின் எப்படி குருதி குடிப்பது?

புத்தியைத் தீட்டிச் சில வித்தைகளைச் செய்யும்.
சித்தங்கலங்காமல்
அதன் பாட்டில் அமைதியாயிருக்கும் ஊரின்
ரத்தம் வழியச்செய்யும் வழி பிடிபடாவிடில்
முட்டும் வெறியில்
திட்டமிட்டுப் படுகொலையைச் செய்யும்
தன் கூற்றில் கவிதையில் கலந்துரையாடலில்.

அண்டசராசரமும் சொந்தமாயிருப்பவனிடம்
நான் தருகிறேன் அரைக்காணி யென்று
அறியாமையால் அறைகூவி அவசர
அவசரமாய்
பொதுவழியைக் கழிப்பறையாக்கிக்கொள்ளும்
ரத்தக்காட்டேரியிடம்
சுத்தம் பற்றி யார் பேசுவது?

மக்களே போல்வர் மாக்களென்பார்
மக்கள் மத்தியிலிருக்கும் இரத்தக்காட்டேரிகள்
மனித உருவில்.

ஹாம்லெட்டும் ஆம்லட்டும்
ஒலிக்கக்கூடுமொருபோலெனில்
இருவேறிரண்டுமென்றறிதல் வேண்டும்.

ரத்தக்காட்டேரிகளுக்குச் கரங்களுண்டோ –
தெரியாது,
சிறகுகள் உண்டோ – தெரியாது்…
எனில் _
கண்டிப்பாக இருக்கும்
மனசாட்சியிருக்க
வேண்டிய இடத்தில்
மிகப்பெரிய வெற்றிடம்.

lathaa.r2010@gmail.com