ரொறன்ரோவில் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!

தனிநாயகம் அடிகளார்பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால்,  பாரதியார் கவிஞன் மட்டுமல்ல  அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர்.  பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு  கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: “தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்.”

தமிழர்களிடையே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒருவர் உயிரோடு இருக்கும் போது போற்றமாட்டார்கள்.  ஒருவர் வாழும் காலத்தில் அவரைப் பாராட்ட மாட்டார்கள். இறந்தபின்தான் வானளவு புகழ்ந்து பேசுவார்கள். இது பாரதிக்கே நடந்தது. உலக மகாகவிஞனான பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை இருபதைத் தாண்டவில்லை.  அன்றைய தமிழகத்துச் செய்தித்தாள்கள் பாரதியின் மறைவுக்கு எதுவித  முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. இறந்த பின்னர்தான் அவரை மெச்சித் தமிழர்கள் உச்சிமீது வைத்துக் கொண்டாடினார்கள்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மை, இனிமை, செழுமை,  வண்மை, வளம் போன்றவற்றால்  ஈர்க்கப்பட்டுத்  தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் கற்றுத் தண்டமிழின்  புகழ் பாடியவர் பலர். இவர்களில் தனிநாயகம் அடிகளார் ஒருவர்.

தனிநாயகம் அடிகள் (1913 – 1980) என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார் (Rev. Xavier S.Thani Nayagam) அவர்களின் நூற்றாண்டு விழா அங்கொன்று இங்கொன்றாகக் கொண்டாடப் படுகிறதேயொழிய, கொண்டாடப்பட வேண்டிய அளவில் கொண்டாடப்படவில்லை என்பது கவலை தரும் செய்தியாகும்.

தமிழுக்குத் தொண்டாற்றிய வீரமாமுனிவர், அழியும் தறுவாயில் ஓலைச்சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சுவடிவம் ஏற்றிய  உ.வே. சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம்பிள்ளை, தமிழ் உரைநடைக்கு புதிய பாதை அமைத்த ஆறுமுக நாவலர்,  ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், ஜி.யூ. போப், தமிழ்மொழி செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர்,  20 ஆம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகளார்,  திரு.வி.கல்யாணசுந்தரனார்,  பாட்டுக்கொரு புலவன் பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,  பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா. பெரியார்,   அறிஞர் அண்ணா, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோரது தமிழ்த் தொண்டோடு ஒப்பிட்டுப்  பேசக் கூடியவர் தனிநாயக அடிகளார் ஆவர்.

உலகப் பற்றைத் துறந்து துறவியான தனிநாயக அடிகளாரால் தமிழ்மீதுள்ள பற்றைத் துறக்க முடியவில்லை. முறையாகத் தமிழைக் கற்க வேண்டும் என்ற அவாவில் அண்ணாமலைப் பல்கழகத்தில் 1945 ஆம் ஆண்டு சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார்.  அவரிடம் காணப்பட்ட அறிவையும் ஆர்வத்தையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரத்தினசாமி  மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் இருவரும் எடுத்த முடிவினால் இளங்கலைப் படிப்பை  முடிக்காமலே நேரடியாக முதுகலைப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கியத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுகலைப் பட்டத்தைப்  (M.Litt)  பெற்றார். இந்த முதற் தமிழ் ஆய்வே அவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.  

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்தில்  இந்தியக் கல்வியாய்வுகள் துறைத் தலைவராக இருந்தார். அவர் ஏற்கனவே ‘Tamil Culture’  எனும் சஞ்சிகை மூலம் உலகளாவிய  தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16 – 23 தேதிகளில் நடத்தப்பட்டது.

தனிநாயகம் அடிகளார்  1964 ஆம் ஆண்டு சனவரியில் தில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் உலகெங்கணும் இருந்து கலந்துகொண்ட தமிழ் அறிஞர்களைத் திரட்டி  உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association for Tamil Research, IATR)  என்ற அமைப்புக்கு அடிகோலினார்.    மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை 1964 சனவரி மாதம் 7 ஆம் நாள்  தொடக்கி  வைத்தனர்.  இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன் பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. அய். சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர்.  அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசுந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கள் ஆகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் ஈழத்தவர்களான பண்டிதர் க.பொ. இரத்தினம், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை இருவரும் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய அளவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியுள்ளது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடை பெற்றன. இவர் பொதுச் செயலாளராக இருந்து முதல் மாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து கோலாகலமாக நடத்திய பெருமை இவரைச்  சேரும்.

கோலாலம்பூரில் 1966 ஏப்பிரல் 16 – 23  நாள்களில் முதலாவது மாநாடு மலேசிய தமிழ் சமூகத்தின் ஆதரவோடு நடத்தப்பட்டது. துங்கு அப்துல் இரகுமான் அரங்கிலே மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் இரகுமான் தொடக்க உரையாற்றித்  தொடக்கி வைத்தார்.  முதலாவது மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துகொண்டு 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இந்த ஆய்வுக் கட்டுரைகளை   மாநாட்டிற்குப் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியிட்டனர்.

தமிழாய்ந்த அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு 03-01-1968 இல்  சென்னை மெரீனா கடற்கரையில் இந்தியாவின் அன்றைய சனாதிபதி கலாநிதி ஜாகீர் உசேன் தொடக்க உரையாற்றித் தொடக்கி வைத்தார். இதில் முன்னாள் முதலமைச்சர் கு. காமராசர் அப்போதைய தமிழக எதிர்கட்சியிர்  கலந்துக்கொண்டனர்.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 15-07-1970 அன்று தொடங்கியது. பாரிசில் நடைப்பெற்றதால் பெருமளவு பேர் கலந்து  கொள்ளவில்லை எனினும் 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் அதில் கலந்துகொண்டனர்.  அதில் ஒருவர் கலைஞர் மு. கருணாநிதி.

 1972 இல் நான்காவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு இலங்கையில்  நடைபெற இருந்தது. சோசலிசம் பேசிய  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இமுஎச) அய்க்கிய முன்னணி அரசு 1970 இல்  பதவிக்கு வந்தபோது மீண்டும் உயிர்பெற்றுத் தழைத்தது. அதில் பேராசிரியர் கா. சிவத்தம்பி,  பேராசிரியர் க. கைலாசபதி, இராம்ஜி  ஆகியோர்  முக்கிய உறுப்பினர்கள். அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் தொடர்பான  காரியங்களுக்கான அரசின் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆலோசனை வட்டத்திலே இமுஎச முக்கிய இடம் வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினர் அரச ஆசியோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று.

1972 இல்  இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள ‘சாந்தம்’ மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும் அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும் அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே தெரிந்துவிட்டன. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பு பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றது. அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினர்களுக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இந்த முடிவை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

1966 இல்  கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் H.W. தம்பையா. அங்கு அவர் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.  தம்பையா கம்யூனிஸ்டுகளின் இமுஎச கும் வேண்டியவர். அதனால் அவரை இலங்கைக் கிளையின் முகாமைக் குழுவின் தலைவராக முன்மொழியப்பட்ட  போது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 ஒக்டோபர்  தொடக்கம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக் குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கு ஆளாயினார்.  இதனால் அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 இல்  தமது பதவியினைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கொண்டார்.  அரச ஆதரவாளரான அவருக்கு சிறீமா பண்டாரநாயக்க  அரசு வெளிநாட்டுத் தூதுவர்  பதவியைப் பரிசாகக் கொடுத்தது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் 5.10.73 இல் முகாமைக் குழுவின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு  மூன்று மாத இடைவெளியே இருந்தது.  பாதுகாப்பு அமைச்சர் இலக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்று வித்தியானந்தன் அமைச்சரைச் சந்தித்தார். அமைச்சர் நான்கு ஆலோசனைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தரப்படும் எனக்  கூறினார்.

1) தமிழ் ஆராய்சி மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க மண்டபத்தில்  இடம்பெற வேண்டும்.  

2) பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா மாநாட்டினைத் தொடக்கி வைக்கவேண்டும்.

3) அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும்.

4) மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அரச செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் கொடுக்கப்படும்.

பேராசிரியர் வித்தியானந்தன் முதல் ஆலோசனையையே மறுத்து விட்டார். அதனால் மேற்கொண்டு வேறு பேச்சுகே இடமில்லாமல் போய்விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து ‘அபே பலமு’ (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சபதம் எடுத்தார். அரசு ஆதரவு தராமல் இருப்பதுமட்டுமல்ல மாநாட்டுக்கு குறுக்குசால் ஓட்டப்போகிறது என்பது தெரிந்தது.  யாழ்ப்பாண நகரசபை  மேயர் அல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும்  மாநாட்டுக்கு எதிராக  சிங்கள அரசின் ஆட்டத்திற்குத் தாளம் போட்டார். மாநாட்டுக்குத் திறந்த வெளி அரங்கத்தைக் கொடுக்க மறுத்தார். இருந்தும் அசுர வேகத்தில் எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம் இருந்தும் அரசின் தடைகளை மீறி மாநாடு நடந்தது.  பல நெருக்கடிகள் மத்தியில்   20 நாடுகளில் இருந்து 197 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மக்கள் தமிழினத்தின் மானத்தைக் காப்பாற்றினார்கள். யாழ்ப்பாணம் முழுதும்  தென்னை,  மாவிலைத் தோரணங்கள், வாழை, கமுகு, தென்னை, பனை மரங்களால் வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு விழா வெற்றிகரமாக நடந்தது. ஆனால் விழாவின் கடைசி நாளன்று (சனவரி) காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மின்சாரக் கம்பி அறுந்து மின்சாரம் தாக்கியதில் 9  தமிழர்கள்  உயிரிழந்தனர்.(கலப்பை, சித்திரை 2005 (சிட்னி)

1995 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் 8 ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது.  அதனை நொபொரு கராஷிமா முன்னின்று நடத்தினார்.  மாநாட்டுக்கு வந்த பிறநாட்டு அறிஞர்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.  இந்த மாநாட்டின் பின்னர் 9 ஆவது மாநாடு இன்னும் நடைபெறவில்லை. 2010 இல் முதல்வர் கருணாநிதி 9 ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை ஒருதலைப்பட்சமாக அறிவித்தார். ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்  கழகத் தலைவர்  நொபொரு கராஷிமா ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கு போதிய அவகாசம்  இல்லை 2011 இல் மாநாட்டை நடத்தலாம் என்று யோசனை சொன்னார். அதனை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் கருணாநிதி  பெரும் பொருள் செலவழித்து தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி முடித்தார். 

தனிநாயக அடிகளார் அவர்களால் தொடக்கப்பட்ட தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தற்போது செயல்படுவதாகத் தெரியவில்லை. அதன் தலைவர் நொபொரு கராஷிமாவுக்கு (80)  இந்திய அரசு மிக உயர்ந்த பத்ம ஸ்ரீ விருது வழங்கி மதிப்பளித்தது.  அதனை சென்ற மே 29 இல் யப்பானுக்கு செலவு  மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு வைத்து அவ்விருதை நேரில் வழங்கினார்.  நன்றாகத் தமிழ் பேசக்கூடிய நொபொரு கராஷிமா தென்னிந்திய வரலாறு மற்றும்  கல்வெட்டுகள்  குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.  டோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியரான அவர் ஒரு சிறந்த வரலாற்றாசிரியரும் எழுத்தாளரும் ஆவார்.

1966, 1968, 1970, 1981 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளின் ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் நமக்குக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணம் (1974), கோலாலம்பூர் (1987), மொரீசியஸ் (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய மாநாட்டுக் கட்டுரைகள் அச்சு வடிவம் பெற்றதாகக் தெரியவில்லை. நான்கு மாநாடுகளில் வழங்கப்பட்ட ஒன்பது தொகுதிகள் உள்ளன.
 
இந்திய வரலாறு என்பது சமற்கிருத மொழி சார்ந்த பின்புலங்களிலிருந்துதான் எழுதப்பட்டது. அதனால் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள திராவிட மொழிகள் சார்ந்த வரலாறு இந்திய வரலாறு எழுதுவோரின் கவனத்தில் இடம் பெறவில்லை. அப்படி இடம் பெற்றாலும் தமிழ் உட்பட திராவிட மொழிகள் சமற்கிருத மொழியின் பிறிதொரு வடிவமாகவே காட்டப்பட்டது.  சமற்கிருத மொழிக்கு இணையானதும் அடிப்படையில் முற்றிலும் வேறானதுமான திராவிட மொழிகள் குறிப்பாகத் தமிழ் சார்ந்த சமூக வரலாறு எழுதும் முறைக்கு உலகத் தமிழ் மாநாடுகள் உத்வேகம் அளித்தன. மேலும் இந்திய மொழி என்றால் சமற்கிருதம் என்றும் ஆய்வு என்றால்  வேதங்கள், மகாபாரதம், இராமாயணம், புராணங்கள்  பற்றிய ஆய்வு என்றும் இருந்த  நிலைமாறி தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள்  தொடர்பான ஆய்வுகளுக்குக்  களம் அமைத்துக் கொடுத்தன.  இதற்கான பெருமை  தனிநாயக அடிகள் அவரையே சாரும். 

உண்மையில் தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும் ஆங்கில வணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக் காடாகத் தமிழகம் கிடக்கிறது.  நீதிமன்றுகளில் ஆங்கிலம் – தமிழ் இல்லை, வழிபாட்டில் சமற்கிருதம் – தமிழ் இல்லை, இசையில் தெலுங்கு – தமிழ் இல்லை, பெயர்கள் தமிழ் இல்லை, பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை என்ற இழிவு தொடர்கிறது.  உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எதனையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டு வருவது தமிழக ஆட்சியாளரைப் பல்லாண்டு காலமாய்ப் பீடித்துள்ள  பெருநோய் எனலாம்.
 

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதியும் செத்ததுண்டோ?  என பாரதிதாசன் வினாவுவார். இது தனிநாயக அடிகளாருக்கும் பொருந்தும்.

வட அமெரிக்கச் சங்கங்களின் பேரவை 26 ஆவது மாநாடு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நினைவை யூலை 5 – 6 நாள்களில் கொண்டாடுகிறது. அடிகளார் பற்றிய ஆய்வரங்கு, வாழ்க்கை வரலாறு, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய வரலாறு, அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவரைப் பற்றிவெளிவந்த சிறப்பு மலர்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், குறும் படம், கண்காட்சி   ஆகியன இடம்பெற இருக்கிறது.

தென் தமிழ் கற்றோரும் மற்றோரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

athangav@sympatico.ca