லண்டனில் பெண்களின் விமர்சன அரங்கு: நான்கு பெண்களின் படைப்புகள் மீதான பார்வை!

நவஜோதி, மீனா‘மலையாள எழுத்தாளரான கமலாதாஸ் ‘என்கதை’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே அது பெரும் புயலைக் கிளப்பியது. அவரது ‘என் கதை’ நூலாக வெளியானபோது பதினொரு மாதங்களிலேயே ஆறு மறு பதிப்புகளைக் கண்டது. முப்பத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. தன் வாழ்க்கையில் தனது இந்த சுயசரிதையை எழுதும்போது தான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை என்று அவர் கூறுகின்றார். கமலாதாஸின் எழுத்துக்களைப்பற்றி அதீத பாராட்டுக்களும், கடுமையான கண்டனங்களுமாக பல்வேறு நிலைப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று மீளாள் நித்தியானந்தன் கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை, லண்டனில் இடம்பெற்ற பெண்களின் கருத்தாடல் நிகழ்வில் பங்குபற்றிப் பேசியபோது குறிப்பிட்டார். நவரட்னராணி சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மீனாள் நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது ‘தந்தைவழி சமூக அமைப்பிற்குள் பெண் என்பவள் மூச்சுவிடமுடியாமல் திணறும் அவஸ்தையைப் பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை இந்த நூலிலே முன்வைத்திருக்கிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பாட்டுக் குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் இந்த நூலிலிலே ஒளிவு மறைவின்றி எழுதிச் செல்கிறார். அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில், கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோலச் சிக்கி, வாராத துணைநாடி அலைமோதும் தன் நெஞ்சத்துக் குமுறல்களை அவர் அநாயாசமாக எழுதிச் செல்கிறார். கமலாதாஸின் ‘என் கதை’ என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்’  ‘இப்படிக்கு ஏவாள்’ என்ற தமிழகத்தின் பெண்ணிய எழுத்தாளர் சுகிர்தராணியின் கவிதைத் தொகுப்பை விமர்சித்த நவஜோதி ஜோகரட்னம் உரையாற்றும்போது ‘நமது தமிழ் சமூகத்தில் பெண் என்பது ஒரு வகைப் பின்னடைவு என்;றால் தலித்; பெண் என்பது இரட்டைச் சுமையாகிப் போகிறது. இந்நிலையில் எழுதுவது என்பது குடும்பப் பெண்ணுக்கான இலக்கணம் இல்லை என்று சுகிர்தராணிக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்டு உடைத்து எழுத முன்வந்ததால்தான் அவருடைய எழுத்து உயிர்ப்புடன் இருக்கிறது. பெண்வெளி, உடல் அரசியல், பெண்ணியம், தலித்தியம் என்று பலவற்றையும் வலிமையான வார்த்தைகளின் வழி சுகிர்தராணி இக்கவிதைத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். உடல் அரசியல் என்பது உடல் உறவு குறித்தது என்ற தவறான பார்வைதான் பலருக்கும் இருந்திருக்கிறது என்று குறிப்பிடும் சுகிர்தராணி அவற்றைமீறிப் பெண்ணின் சுயத்தையும், அவளது தனிமையையும், மரியாதையையும் மதித்துப் பெண்ணிய வேதனைகளை அழகான கவிதை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகையில் ஈழத்துப் பெண் கவிதைகளின் தாக்கம் தமிழகத்து இலக்கிய உலகில் உள்ளடக்கம் வெளிப்பாட்டு முறைகள், பெண்ணியச் சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான சாட்சியமாகச் சுகிர்தராணியின் கவிதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது. ஈழத்தின் பெருந்துயரின் குறியீடாகத் திகழும் இசைப்பிரியா பற்றியும், சவ10தி அரேபியாவின் வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்று கொலை செய்யப்பட்ட ரிஸானா நஃபீPக்கின் நினைவாகவும், தமிழகத்தில் தலித் பெண்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதியை எதிர்க்கும் கலகக் குரலாகவும் சுகிர்தராணியின் கவிதைகள் அமைந்துள்ளன’ என்று மேலம் அவர் தெரிவித்தார்.

நைஜீரிய எழுத்தாளர்  சிமாமந்தா எங்கோசி அடிச்சி என்பவர் எழுதிய ‘ஊதாநிறச் செம்பருத்தி’ என்ற ஆபிரிக்க நாவலை விமர்சித்த கௌறி பரா ‘பெண்ணியம் என்றதும் ஒட்டுமொத்த ஆண்களையும் பொதுவாகச் சாடாமல் மிகவும் யதார்த்தமானதாகவும், ஆணியம் என்ற ஒன்றையும் உள்ளடக்கி, ‘ஊதாநிறச் செம்பருத்தி’ என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்நாவலில், பன்மைத்துவ கலாசாரம் சார்ந்த அறிவாந்த சிந்தனையை தனது கதாபாத்திரங்களின் மூலம் ஊக்குவிக்கிறார். நைஜீரியா நாட்டில் வாழும் இக்போ மொழி பேசும் இபோ இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வழியாக இந்தக் கதை கூறப்படுகிறது. நைஜீரிய மண்ணையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சூழலையும் இந்த நாவல் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த நாவல் காலனி ஆட்சி, அந்நியமொழி, புதிய மத வருகை, புராதன மதங்களைப் பின்பற்றிய ஆபிரிக்கப் பூர்வீகக் குடிகள், இவற்றை எதிர் கொண்ட விதம் ஆகியவற்றை  இந்த நாவல் தொட்டுச் செல்கிறது. ஒரு புது விடயத்தை – ஒரு சமூகத்தில் அறிமுகப்படுத்தும்போது ஏற்கனவே அங்கு நிலவிய பழமைகள் எல்லாமே சிதறிப்போகும் அவலத்தை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார்.

மன்னார் அடம்பனைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச் செல்வி எழுதிய ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூலை விமர்சித்த சந்திரா ரவீந்திரன் ‘முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் பம்பைமடு தடுப்பு முகாமில் தான் அனுபவித்த அனுபவங்களை மிக நேர்த்தியாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். தடுப்பு முகாம் வாழ்வில் எதிர்கொண்ட கஷ்ட நஷ்டங்களை, முள்ளுக் கம்பிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அனுபவித்த வேதனைகளை, கிடைத்த ஒரு குவiளைத் தண்ணீரையும் தமக்குள் பங்கிட்டுக்கொண்ட நேசத்தையும், குப்பைகளை அள்ளிக்கொண்டு போக வந்த குப்பை வண்டிக் காரர்களின் மனித நேயத்தையும் வெற்றிச் செல்வி திறமையோடு விபரித்திருக்கிறார். பம்பைமடு வாழ்க்கையின் பல தளங்களையும், பல இயல்புகளையும் தனக்கே உரித்தான எழுத்து நடையில் வெற்றிச் செல்வி எழுதிச் செல்வதைப் பாராட்டியே தீர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

‘தனது வாப்பா மார்க்சிய சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்படிருந்தார். வாழ்க்கையைப் பற்றி ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது. அவரின் மடியில் இருந்துதான் நான் எனது இலக்கியத்தைக் கற்க ஆரம்பித்தேன் என்று தொடங்கி தன் எழுத்து, இலக்கியவாழ்வில்; தமிழ் இலக்கியங்களையும், உலக இலக்கியங்களையும் கற்பதற்கு தனது தந்தைதான் ஆதர்சமாகத் திகழ்ந்தார் என்று சமீலா யூசுப் அலி தனது எழுத்து அனுபவங்களைப் பற்றி பேசுகையில் குறிப்பிட்டார். தனது வாசிப்பு அனுபவத்தை விளக்கிக் கூறிய அவர் எழுத்தில் துணிச்சலான விடயங்களை வெளிக்கொண்டுவரும்போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், குடும்ப அமைப்புக்குள் ஏற்படும் நெருக்கடிகள் தனது எழுத்தின் வீரியத்தைக் குறைத்துவிட்டன என்றும் விபரித்து தான் எழுதிய மூன்று கவிதைகளை உணர்வுடன் வாசித்துக் காட்டி தனது கவிதை அனுபவங்களையும் விபரித்திருந்தார்;’ மாவனல்லையைச் சேர்ந்த சமீலா யூசுப் அலி.

லண்டனில் நான்கு பெண்களின் அரிய நூல்களைத் தெரிவுசெய்து பெண்களின் விமர்சனங்களை முன்வைப்பதற்கான இந்த விமர்சன அரங்கை  ஒழுங்கு செய்த தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தின் பொறுப்பாளர் பௌசர் அவர்களுக்கும், ஓவியக் கலைஞர் கே. கிருஷ்ணராஜா அவர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக நவரட்னராணி சிவலிங்கம் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். லண்டனில் பெண்கள் பங்கு கொள்ளும் மிக முக்கிய கருத்தாடலாக இந்த அமர்வு அமைந்தது.
21.7.2016
navajothybaylon@hotmail.co.uk