லெ. முருகபூபதி – மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்!

எழுத்தாளர் முருகபூபதிஅநேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும்  வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன. கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார். தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் – செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.

 ‘எவ்வளவு முரண்பாடு உள்ளவர்களும் பூபதியை முறித்துக் கொண்டு எதிர்நிலைக்குப் போக இயலாது. அவர் எப்பவும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். மற்றவர்களையும் ஊக்குவிப்பார். அவருக்காகவே, அவருடைய முயற்சிகளுக்காகவே நாங்களும் எதையாவது செய்யத்தான் வேணும். தன்னுடைய சக்தியை எல்லாம் குவித்து அவர் செய்து வருகின்ற பணிகளை நினைத்தால் ஆச்சரியமே வரும்’ என்று பூபதியைப் பற்றி அவருடைய நண்பர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். கிருஷ்ணமூர்த்தியும் ஒரு எழுத்தாளரே. பூபதிக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவிற்தான் இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி சொல்வதைப்போல பூபதி ஒரு அசாத்தியமான மனிதர்தான். தனியொருவராக நின்று நிறுவனம்போலச் செயற்படும் சில ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதுதான் அவருடைய பலமும் அடையாளமும் சிறப்பும்.

பூபதிக்கும் எல்லோரையும் போல இரண்டு கண்களே உள்ளன. ஒன்று இலக்கியமும் எழுத்தும். மற்றது உதவிப் பணியும் பின்தங்கிய நிலையிலிருப்போருக்கான தொண்டும்.

இந்த இரண்டாவது கண் விசயத்தில் பூபதி படைப்பாளிகளிடத்தில் ஒரு முன்னோடியே. வேறு சில படைப்பாளிகள் பூபதியைப் போலப் பொதுப்பணிகளைச் செய்து வந்தாலும் அவை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட  விதத்தில் தொடர்ச்சியைக் கொண்டவையல்ல. நடேசன் பூபதியின் வழியில் “வானவில்“ என்றொரு உதவித்திட்டத்தை இப்போது ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாந்தி ரமேஸ் “நேசக்கரம்“ அமைப்பின் மூலமாக உதவி வருகிறார். சஞ்சயன் செல்வமாணிக்கம் பலரையும் உதவிக்கு தூண்டி அவர்களை நன்செய் பரப்பில் ஈடுபடுத்துகிறார். இதைவிட தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா என இன்னும் சிலர் உதவிப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி இன்னும் சிலர் உண்டு. ஆனால், எல்லாவற்றுக்கும் சிகரம் பூபதியே. அவருடைய பணிகளே!!

கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக தன்னோடு வேறு பல நண்பர்களையும் இணைத்துக்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வறிய மாணவர்களுடைய கல்விக்காக அவர் உதவி வருகிறார். இதில் ஏறக்குறைய 600 க்கும் மேலான மாணவர்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பயன்பெறுகிறார்கள்.

இலங்கையில் பிறந்து, அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முருகபூபதிக்கு உலகமெங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் நண்பர்களைக் கொண்டாடும் விதம் அப்படி. அது அவருடைய நண்பர் வட்டத்தை பெருப்பித்துக் கொண்டேயிருக்கிறது. நண்பர்களை அவர் தேடிச் செல்கிறார். அவர்களுக்கிடையில் இருக்கும் பேதங்களைத் தவிர்த்து விட்டு நட்பைக் கொண்டாடுகிறார். அந்த நட்பைப் பராமரிக்கிறார். அந்த நட்பின் ஊடாக அந்த நண்பர்களையும் தன்னுடைய பொது வெளியை நோக்கி, அந்தப் பொது வெளியின் செயற்களத்தை நோக்கி, பணிப் பிராரந்தியத்தை நோக்கி அழைத்து வருகிறார். இது ஒரு வித்தியாசமான நடத்தை. நாம் கவனங்கொள்ள வேண்டிய நடத்தை. கவனத்திலெடுக்க வேண்டிய முன்மாதிரிகளில் ஒன்று.

முருகபூபதியினால் அப்படிப் பொது வெளிக்கும் பொதுச் செயற்களத்துக்கும் அழைத்து வரப்பட்ட பல நண்பர்களின் பங்களிப்பு இன்று இலங்கையில் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதி மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பூபதியின் அக்கறைகளும் செயற்பாடுகளும் பெரும் பயன். நன்கு ஒழுங்கமைப்பட்ட திட்டமிடலில் இந்த உதவிகளும் உதவிகளின் மூலமான விருத்தியும் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் என்னுடைய மகன் படிக்கின்ற பாடசாலைக்கும் பூபதியின் நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணம் கொக்குவிலிலும் திருகோணமலையிலும் இப்படி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி மையங்கள் இயங்குகின்றன. கொக்குவிலில் இயங்குகின்ற மையத்துக்கு நான் போயிருக்கிறேன். சிறுவர் அபிவிருத்திக்கான நிலையம் என்ற பெயரில் அது இயங்குகிறது. (இப்பொழுது அது யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் அதை இடம் மாற்றியிருக்கிறார்கள்). அங்கே எந்தப் பிரமாண்டமான நிர்வாக நடவடிக்கைகளும் கிடையாது. அதிக வளங்களைக் குவித்து நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் தன்மை இல்லை. மிக மட்டான, அடிப்படை வசதிகளே குறைந்த நிலையில் அந்த உதவி மையம் இயங்குகின்றது. இரண்டு பணியாளர்களும் ஒரு கணினியும் ஒரு நிர்வாகியும் மட்டுமே அங்கே உண்டு. வழமையான, தொண்டு நிறுவனங்களின் நிர்வாக அமைப்பின்  செழிப்பை அங்கே காண முடியவில்லை. அங்கே இருக்கின்ற பாலதயானந்தன் என்பவர், தன்னைப் போல அந்த அலுவலகத்தையும் அமைதியாகவும் எளிமையாகவும் நல்ல முறையிலும் நிர்வகிக்கிறார்.

வெளியாரின் அல்லது புலம்பெயர்ந்த மக்களின் நிதிப் பங்களிப்பில் அல்லது அவர்களுடைய உதவியில் இயங்குகின்ற எந்த அமைப்பும் அல்லது நிறுவனமும் இப்படி மட்டுமட்டான வளங்களுடன் இருப்பதில்லை. அவற்றில் ஒரு மினுக்கமும் ஆடம்பரத்தன்மையும் இருக்கும். டொலர் ரூபாயாக ஆகும்போது ஏற்படுகின்ற மினுக்கம் அது. அல்லது பிராங்கோ மார்க்கோ நொஸ்க்கோ ரூபாயாகும்போது உருவாகின்ற வீக்கம். ஆனால், முருகபூபதியாலும் மற்றும் நண்பர்களாலும் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பு இதற்கு மாறாகவே இருக்கிறது. காசை வீணாக்காத கரிசனை. கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை பெறுமதியாகச் செலவழிக்க வேணும் என்ற அக்கறை. அந்தச் செலவு உண்மையில் செலவே அல்ல. அது எதிர்கால மனிதர்களுக்கான பயன் என்ற புரிதலுடன் செய்யப்படும் எளிமையான முதலீடு.  இதுவும் இந்த விலகல்களில் – வேறுபடல்களில் ஒன்று.

பூபதியின் இந்த அமைப்பு பலருடைய கூட்டு முயற்சியின், பலருடைய சிந்தனையின் வடிவம் என்றாலும் அதை “பூபதியின் அமைப்பு“ என்றே அவருடைய நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு பூபதியின் நல்நோக்கத்தை அவர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்கள்,  பூபதியின் மீது மிகப் பெரிய மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். ஒரு நல்ல மனிதரில் நம்பிக்கை கொண்ட பலருடைய கூட்டுச் செயற்பாட்டின் வெற்றியாகவும் அடையாளமாகவுமே அதைப் பார்க்கிறேன்.

இப்பொழுது இந்த அமைப்பு தன்னுடைய சேவைப் பரப்பையும் ஆழத்தையும் மேலும் விரிவாக்கவே சிந்திக்கிறது. அதற்கே முனைகிறது. புலம்பெயர்ந்து வௌவேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற நண்பர்பகளை எப்படியோ ஒருங்கிணைத்து (அந்த ஒருங்கிணைப்பின் கதையை முருகபூபதிதான் சொல்ல வேண்டும்) போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுடைய கல்விக்கு உதவும் ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்தவர்களை இணைத்து தங்களுடைய சேவையை ஆற்றிவருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த அமைப்பின் ஆண்டு நிறைவொன்றையொட்டி முருகபூபதி 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.

பொதுவாக தங்கள் நாட்டுக்குத் திரும்பும் புலம்பெயர்வாசிகள் இங்கே கோவில்கள், நண்பர் மற்றும் உறவினர் வீடுகள், அங்கே நடக்கும் கொண்டாட்டங்கள் என்றமாதிரியான ஒரு சுற்று வட்டத்தில்தான் தங்களுடைய நிகழ்ச்சி நிரலையும் நிகழ்ச்சிப் பரப்பையும் வைத்துக் கொள்வார்கள். சிலர் மட்டும் விலகலாக எங்காவது வயோதிபர் இல்லம், சிறுவர் இல்லங்கள் என்று இயங்குகின்ற நிறுவனங்களுக்குச் சென்று உதவுவார்கள். மற்றும்படி பொதுவாக தனிப்பட்ட பயணங்கள், கேளிக்கைகள், செலவுகள்தான். இன்னும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் காரைநகரில் இருக்கும் கசூரினா பீச்சுக்குப் போவார்கள். அல்லது “கள்“ அடிப்பார்கள்.

முருகபூபதி இதிலிருந்து வேறுபடுகிறார். அவருடைய “2010 ஜனவரி – யாழ்ப்பாணப் பயணம்“ பல விசயங்களை வேறுபடுத்திக் காட்டியது. நான் நினைக்கிறேன், நான்கு நாட்கள்தான் முருகபூபதி யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றிருப்பார் என்று. அந்த நான்கு நாட்களிலும் அவர் இந்த உதவும் அமைப்பின் செயற்பாடுகளை நேரில் கவனித்தார். இந்த அமைப்பின் மூலம் பயன்பெறும் பிள்ளைகளையும் பெற்றோரையும் சம்மந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தைப் பொங்கல் நாளன்று, ஒரு சந்திப்பை நடத்தினார். அந்தச் சந்திப்பில் இந்த அமைப்பின் மையவாளர்களான புலம்பெயர் நாடுகளின் பிரதிநிதிகளையும் இணைத்திருந்தார்.

அதற்கு முதல் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் நடந்த போர்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கிலும் கலந்து கொண்டார். அந்த அரங்கில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விவாதத்துக்குரிய விசயங்களைப் பற்றி ஒரு படைப்பாளியும் சமூகச் செயற்பாட்டாளரும் என்ற வகையில் பூபதியும் தன்னுடைய கவனங்களைச் செலுத்தியிருக்கக்கூடும்.

இதேவேளை பம்பரமாகச் சுழன்ற அந்த நான்கு நாட்களுக்குள்ளும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் யாழ்ப்பாணத்தில் நடத்தினார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தன், நோயல் நடேசன், சித்தாந்தன், இராஜேஸ்கண்ணா உட்பட வேறு சிலருடன் நானும் கலந்து கொண்டேன்.

இவற்றினூடே அவர் தன்னுடைய இலக்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதற்காக அவர் அதிக சிரமமெடுத்துக் கொண்டு தேடிச் சென்றமை  முக்கியமானது. குறிப்பாக சுதந்திராஜா, அ.யேசுராசா, சாந்தன்  போன்றவர்களிடம். தாயகம் குழுவினரையும் சந்திப்பதற்கு ஆர்வமாக இருந்தார். சட்டநாதனிடம் போக முயன்றபோதும் இறுதியில் ஏனோ பொருத்தமின்னை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று கவலைப்பட்டார். அதிலும் மல்லிகையில் மிக நீண்டகாலம் பணியாற்றிய சந்திரசேகரத்தைத் தேடிக் கொண்டு அவருடைய வீடு இருக்கும் நீர்வேலிக்குப் போய் அவரைப் பார்த்துப் பேசியது முக்கியமான ஒன்று. பழகிய ஒருவரைத் தேடிப்போவதென்தில் என்ன புதினம் இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

இங்கே பூபதி தேடிச் சென்ற சந்திரசேகரம் ஒரு சாதாரண அச்சுக் கோர்ப்பாளர். இன்று அச்சுக்கோர்க்கும் தொழிலும் இல்லை. கலையும் இல்லை என்ற நிலை வந்து விட்டது. இன்றைய விளக்கத்தின் படி அன்றைய கணினி வடிவமைப்பாளர் என்று சந்திரசேகரத்தைச் சொல்லலாம். அவர் மல்லிகையின் அச்சுக் கோர்ப்பாளராக ஏறக்குறைய இருபது வருசத்துக்கு மேலாக வேலை செய்தவர்.

இங்கே பூபதி தேடிச் சென்ற சந்திரசேகரம் ஒரு சாதாரண அச்சுக் கோர்ப்பாளர். இன்று அச்சுக்கோர்க்கும் தொழிலும் இல்லை. கலையும் இல்லை என்ற நிலை வந்து விட்டது. இன்றைய விளக்கத்தின் படி அன்றைய கணினி வடிவமைப்பாளர் என்று சந்திரசேகரத்தைச் சொல்லலாம். அவர் மல்லிகையின் அச்சுக் கோர்ப்பாளராக ஏறக்குறைய இருபது வருசத்துக்கு மேலாக வேலை செய்தவர்.

ஆனால் சந்திரசேகரம் மல்லிகையில் முக்கியமானவர். மல்லிகையின் வளர்ச்சியில் முக்கியமானவர். அவர் மல்லிகையின் அச்சுக் கோப்பாளராக மட்டும் இருக்கவில்லை. அதற்கப்பால், எங்கே எந்தப் படைப்பாளியைக் கண்டாலும் மல்லிகைக்காக எழுதும்படி கேட்கும் அளவுக்கு மல்லிகையுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.  மல்லிகை அலுவலகத்துக்கு வருவோரை வரவேற்றுப் பேசுவதும் பதில் சொல்வதும் சந்திரசேகரமே. அவரே அனைத்தையும் பார்ப்பார். அனைத்தைப் பற்றியும் முடிவெடுப்பார். டொமினிக் ஜீவா இல்லாத வேளைகளில் சந்திரகேசரமே மல்லிகையின் “சீவ் எடிற்றர்“. ஏ.ஜே. கனகரட்ணா கூட சந்திரசேகரத்தையே “சீவ்எடிற்றர்  ஒவ் மல்லிகை“ என்று சொல்வார். எனவே அவரை ஒரு சாதாரண அச்சுக்கோப்பாளர் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அழகும் அல்ல. மல்லிகைக்காக சந்திரசேகரம் ஊழியம் செய்தார் என்றே சொல்லலாம்.

ஜீவா மல்லிகை அலுவலகத்தில் இருந்தாலென்ன இல்லாது விட்டாலென்ன மல்லிகை அலுவலகத்தில் சந்திரசேகரம் இருப்பார். வேலைகள் நடக்கும். ஆட்கள் வந்து போவார்கள். ஜீவாவுடன் பேசாதவர்கள், முரண்பாடு கொண்டவர்கள் கூட சந்திரசேகரத்துடன் நட்பைப் பாராட்டினார்கள். சந்திரசேகரத்துக்காகவே மல்லிகைக்கு வந்து போவோரும் உண்டு. அதனால், சந்திரசேகரத்துக்காகவே மல்லிகையில் எழுதிய பலர் இருக்கிறார்கள்.

இதனால் மல்லிகைக்குப் போகிற அத்தனை பேருடனும் சந்திரசேகரத்திற்கு நட்பு. சந்திரசேகரத்தை மல்லிகையின் எந்தப் படைப்பாளியும் மறக்க முடியாது. மல்லிகையுடன் நெருக்கமான வாசகர்களும் மறக்கேலாது.

ஆனால், இப்பொழுது யாரும்  சந்திரசேகரத்தைத் தேடிப் போய்ப்பார்ப்பது குறைவு. யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்தை ஜீவா, கொழும்புக்கு இடம் மாற்றிய பிறகு, சந்திரசேகரம் சில காலங்கள் ஒரு தொடர்புக்காக யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை அலுவலகத்திற்குப் போய் வந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாண அலுவலகத்துக்கு வரும் படைப்பாளிகளுடன் பேசுவதும் மல்லைகைக்கு படைப்புகளைச் சேகரிப்பதும் சந்திரசேகரத்தின் பணி. பின்னர் அதுவும் நின்று விட்டது. சந்திரசேகரமும் வீட்டோடு நின்று விட்டார். அப்படி இருந்த சந்திரசேகரம் இப்போது முதுமையில் தன்னுடைய ஊரோடு – நீர்வேலி, மாதுவனில் இருக்கிறார்.

ஒரு காலத்தில் சந்திரசேகரத்துடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது அவரைச் சந்திப்பதோ விசாரிப்பதோ குறைவென்றாலும்  அவர், எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார். எவருடைய அன்பையும் அவர் மறக்கவில்லை.

பூபதி சந்திரகேசரத்தைப் பார்க்க விரும்பினார். ஆகையால் நீர்வேலிக்குப்   போனோம். முருகபூபதியைக் கண்டதும் சந்திரசேகரத்துக்கு பெருமகிழ்ச்சி. பெருங்கொண்டாட்டம். குழந்தைக் குதூகலத்தோடு வரவேற்றார். முருகுபூபதிக்கும் அந்தச் சந்திப்பு நிறைவான மகிழ்ச்சியே.

கடந்த காலத்தில் நடந்த பல விசயங்களை இருவரும் நினைவுகூர்ந்தார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. சீராகத் தொடர்பு கொண்டதுமி்ல்லை. ஆனால் இருவரும் ஆளையாள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்  இப்போது சந்தித்துக் கொண்டதில் இருவருக்குமே பெரும் மகிழ்ச்சி.

கொழும்பிலிருந்து கொண்டு வந்த  மல்லிகை 45 ஆவது மலர் உட்பட சந்திரசேகரத்துக்கென்று எடுத்து வந்த பொருட்களைக் கொடுத்தார் பூபதி. எல்லோருமாகச் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டோம். சந்திரகேசரம் வீட்டிற் கிடைத்த மாலைத் தேனீரும் உபசரிப்பும் நன்றாகவே இருந்தன.

அப்படியே இரவு சுதுமலையில் உள்ள சாந்தனின் வீட்டுசக்குச் சென்றோம்.  “சுதந்திரராஜா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அதைவிட அவர் தனிமையில் இருக்கிறார். உதவிகள் கிடையாது. திருமணம் செய்யவில்லை. இப்பொழுது முதுமையில், மனங்குழம்பிய நிலையில் இருக்கிறார்“ என்றார் சாந்தன். அவரை அடிக்கடி சென்று சாந்தன் பார்ப்பதால் அந்தத் தகவலை சாந்தனின் மூலமாக அறிந்த பூபதி என்னையும் அழைத்துக் கொண்டு மறுநாள் சுதந்திரராஜாவிடம் போனார். கூடவே அவுஸ்ரேலியாவில் இருந்து பூபதியுடன் வந்திருந்த நோயல் நடேசனும் வந்திருந்தார். நடேசனுடன் இந்த நாட்களில்தான் அறிமுகமாகினேன். அவர் சனங்களின் நிலைமையைப் பற்றி அறிவதிலேயே அக்கறையாக இருந்தார். சனங்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற சிந்தனையையே முதன்மைப்படுத்தினார்.

சுதந்திரராஜாவின் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பாலதயாளனின் உறவினரான ஒரு இளைஞர். இருண்டு,  பூஞ்சணவன் படர்ந்த வீட்டில் தனியாளாக இருந்தார் சுதந்திரராஜா. மிகச் சிரமப்பட்டு, இறுதியில் முருகபூபதியை அடையாளங் கண்டு கொண்டார். ஆனாலும் நினைவுகள் தெளிவாக இல்லை. சிந்தனையும் குழம்பி விட்டது. முடிந்த அளவுக்குத் தன்னுடைய நிலைமையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார். தான் வெளியிட்டிருந்த சிறுகதைத் தொகுதியொன்றைக் கொடுத்தார்.

முருகபூபதி சுதந்திரராஜாவுக்கு காசும் சில பொருட்களும் கொடுத்தபோது அதை வாங்குவதற்கு சுதந்திரராஜா மறுத்து விட்டார். என்றபோதும் தன்னுடைய அன்பை முன்னிலைப்படுத்தி முருகபூபதி அவற்றை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்திக் கேட்டபோது மறுப்புச் சொல்லாமல் சுதந்திரராஜா அவற்றை வாங்கிக் கொண்டார்.

இந்தப் பயணங்கள், சந்திப்புகளின் போது எங்கள் வீட்டுக்கு, சித்தாந்தன் வீட்டுக்கு என்று செல்லக்கூடிய இடங்களுக்கு அந்த அவவசரத்தினூடேயும் முருகபூபதி வந்து போனார். வன்னி நிலவரங்களைக் கேட்டார். அகதி வாழ்க்கை, அகதி நிலையின் துயரங்களைப் பற்றி எல்லாம் பேசினோம். “எல்லாவற்றுக்காகவும் கவலைப்படவேண்டிய ஒரு காலம் இது“ என்று  சொல்லித் துக்கப்பட்டார் பூபதி.

மேலும், இந்தப் பயணத்தின் போது இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய இலக்கிய முயற்சிகள் பற்றியும் கதைத்தோம். எனினும் நேர அவகாசம் இல்லாத காரணத்தால் அதுபற்றி எதையும் திட்டமிட முடியவில்லை. என்றாலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகத்தமிழ் மாநாட்டையொட்டி குறிப்பிடத்தக்க வெளியீடுகளைக் கொண்டுவந்தால் நல்லது என்று பேசினோம்.

இந்தப் பயணத்தின் நிறைவாக நல்லூர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. செங்கை ஆழியான் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நோயல் நடேசன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முருகபூபதி உள்ளிட்ட புலம் பெயர் எழுத்தாளர்களும் யாழ்ப்பாணத்தின் கவிஞர்கள், படைப்பாளிகளும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதரசிங்கும் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழ் இலக்கியத்தின் போக்குகள், அதன் தாக்கங்களைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் அது. கோட்பாட்டு ரீதியான விவாதங்களாக மேற்கிளம்பாமல்  தணிந்த நிலையில், கடந்த கால நிகழ்ச்சிப் போக்குகளைத் தொட்டதாக நடந்தது. அது தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் இடம் பெற்றன. ஆனால், எதுவும் தெளிவான முன்வைப்புகளாக அமையவில்லை. என்றாலும் போருக்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியச் சந்திப்புகளில் இந்தக் கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் முருகபூபதி நின்ற நாட்களில் அவர் ஒரு கணமேனும் சும்மா இருந்ததில்லை. நான் நினைக்கிறேன், அவர் முன்னர் ஒரு பத்திரிகையாளனாக இருந்த படியால் ( வீரகேசரியில் ) அதே சுறுசுறுப்போடும் துணிச்சலோடும் இப்படி எங்கேயும் பஞ்சி அலுப்பென்று இல்லாமல், ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கக் கூடியதாக இருந்ததென்று.

தன்னுடைய உடல் நிலைமையைப் பாராமல், மருந்துக் குளிசைகளைப் போட்டுக் கொண்டும் ஓய்வின்றித் திரிந்த  பூபதி  அசாத்தியமானவர்தான். இருக்கும் சிறிய அவகாசங்களுக்குள் தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளால் தானும் இயங்கிக் கொண்டேயிருப்பதென்பது ஒரு கெட்டித்தனந்தான்.

எப்படியோ பூபதியினுடைய யாழ்ப்பாண வருகை சலனங்களையும் அலைகளையும் எழுப்பியிருக்கிறது. அந்த அலையின் இயக்கம் பல்வேறு அசைவுகளைக் கொண்டிருக்கிறது.

எனவே முருகபூபதி ஒரு விலகல்தான். என்றபடியால்தான் இன்று அவருடைய உதவிகளால், நூற்றுக் கணக்கான பிள்ளைகள் தொடர்ந்து படிக்கிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு என செயற்பரப்பு விரிந்து கொண்டே போகிறது. அதுபோல இன்னும்பலவும். இவ்வளவுக்கும் பூபதி வடக்குக் கிழக்கில் பிறந்தவரல்ல. அதாவது தமிழீழப் பரப்பில் பிறந்து வளர்ந்தவரல்ல. அவர் பிறந்து வளர்ந்தது நீர்கொழும்பில். ஆனால், அவருடைய தாத்தா கார்த்திகேசு யாழ்ப்பாணத்தின் மாதகலைச் சேர்ந்தவர். பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்து பொலிஸ் சார்ஜன்ட். தொழில் நிமித்தமாக நீர்கொழும்புக்குச் சென்றிருந்த கார்த்திகேசு தையலம்மாவின் அழகில் மயங்கி அவரை மணந்தார். வடக்குக் கிழக்குப் பகுதிக்கு வெளியே பிறந்து வாழ்ந்திருந்தாலும் பூபதி யினுடைய எண்ணங்கள் வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறித்தனவாகவே உள்ளன.

நாங்கள் அகதியாக இருந்த போது அந்த நாட்களில் அவர் அன்போடு வாங்கித்தந்த சைக்கிள்தான் இப்பொழுது முற்றத்தில் நிற்கிறது என்று சொல்கிறான் எங்களுடைய இளைய மகன்.

பூபதி இதைப்போல இன்னும் யார் யாருக்காகவோ எல்லாவற்றையுமே  செய்வதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பார்? அதுதான் பூபதி. அதுதான் அவருடைய சிறப்பும் இயல்பும் அடையாளமும் மனமும்.

http://pulvelii.blogspot.ca/2012/10/blog-post_31.html

பதிவுகளுக்கு அனுப்பியவர்: முருகபூபதி letchumananm@gmail.com