வடக்கு நோக்கிய மகாவலி அபிவிருத்தித்திட்டம் பற்றி!

- தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் -

– தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் –

வீணாகக் கடலில் கலக்கும் மகாவலி ஆற்று நீரை அணைகள் கட்டித் தடுத்து , மக்களின் விவசாயத்தேவைகள் மற்றும் மின்சாரத்தேவைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துவதும், நகரங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காகப் படையெடுக்கும் கிராமப்புற மக்களை அவ்விதம் செல்லாமல் , தாம் வாழும் பகுதிகளில் தங்கி விடச்செய்வதும், புதிய நகர்களை நதியோடும் திசை வழியே உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். மகாவலித்திட்டம் திருப்பப்படுமாயின் உண்மையில் வட, கிழக்குப் பகுதிகளுக்கு நன்மையையே தரும். ஆனால் இவ்வகையான திட்டங்களைக் காலத்துக்குக் காலம் இலங்கை அரசுகள் பெரும்பான்மைச் சமூகத்தினரின் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்துவதுதான் பிரச்சினையைக் கொண்டுவருகின்றது. காலத்துக்காலம் தமிழ்ப்பகுதிகள் பல சிங்களப்பகுதிகளாகியதைப் பார்க்கின்றோம். அம்பாறை திகாமடுல்லாவாகியதையும், மணலாறு வெலிஓயா ஆகியதையும் பார்க்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இவ்வகையான குடியேற்றத்திட்டங்கள். இவ்விதமான திட்டங்களை நிறைவேற்றும்போது அப்பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் (அவ்விதம் அப்பகுதிகளில் வாழ்ந்திருப்பின், வாழ்ந்திருந்து வெளியேற்றப்பட்டிருப்பின்) மீளக்குடியேற்றப்பட வேண்டும். மேலும் அப்பகுதிகளில் புதிதாக மக்கள் குடியேற்றப்படுவதாக இருப்பின் அப்பகுதியில் வாழும் மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

எவ்வித இனவாத அரசியலும் கலக்காமல் வான் பார்த்திருக்கும் வடக்கு நோக்கி மகாவலி திரும்புமாயின் யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் இவ்விதமான குடியேற்றத்திட்டங்களை இனவாத அரசியற் காரணங்களுக்காக இலங்கை அரசுகள் பயன்படுத்துவதே இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அதிகப்படுத்துகின்றது.

அதே சமயம் இவ்விதமான குடியேற்றத்திட்டங்கள் , எல்லைப்புறங்களில், காட்டுப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும்போது அங்கு சென்று குடியேறத் தமிழர்கள் பலர் முன்வருவதில்லையென்பதும் கடந்த கால வரலாறு. கல்லோயாத் திட்டத்தில் குடியேற உரிமை வழங்கப்பட்ட தமிழர்கள் பலர் உதவிகளைப்பெற்றுக்கொண்டு, பின்னர் அங்கு சென்று குடியேறவில்லையென்ற தகவலை இணையத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மூலம் அறிந்தேன். உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் எழுபதுகளில் காந்தியக் குடியேற்றங்களுக்குத் துணிந்து சென்று குடியேறியவர்கள் மலையகத்தமிழர்கள் என்பதையும் பார்த்திருக்கின்றோம்.

இது பற்றிய “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்!” என்னும் தலைப்பிலான நீண்டதொரு விரிவான கட்டுரையொன்றினை , நக்கீரன் என்பவர் எழுதியது, தமிழ்சிஎன்சிஎன் தளத்தில் கண்டேன். அதிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இங்கு ஆரோக்கியமான தர்க்கமொன்றுக்காகத் தருகின்றேன். இது பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே!

மேற்படி கட்டுரையிலிருந்து…:

1. மகாவலி அபிவிருத்தித் திட்டம் 1975 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. அதனை 30 ஆண்டுகளில் முடிப்பதாக இருந்தது. ஆனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜேஆர். ஜெயவர்த்தனா அதனை ஆறு ஆண்டுகளில் முடிக்க எண்ணினார். திட்டம் திருத்தப்பட்டு 12 அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றை நடை முறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி வாரியம் 1979 இல் உருவாக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு காமினி திசநாயக்கா மற்றும் அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களின் புதல்வர் இரவி ஜெயவர்த்தனா இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். 1984 இல் தொடக்கப்பட்ட வெலி ஓயா குடியேற்றத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் (Gazette) மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டு அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

2. 1984 இல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும் வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன.

வவுனியா மாவட்டம்
அரியக்குண்டசோலை – 118, வெடிவைத்தகல்லு – 89, ஏனையவை – 85

முல்லைத்தீவு மாவட்டம்
கொக்குத் தொடுவாய் – 861, கருநாட்டுக்கேணி – 370, ஏனையவை – 66

கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு
கொக்குளாய் – 508, மரியமுனை – 04, முதத்துவாரம் – 1004, ஆலடிக்குளம் – 05, ஆறுமுகத்தான்குளம் – 69, நாயாறு – 465, தண்ணிமுறிப்பு – 243, ஆண்டான்குளம் – 49, குமுழமுனை – 1164, புளியமுனை – 16

வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு
புதுக்குடியிருப்பு – 351, காட்டுப்பூவரசங்குளம் – 91, கற்குளம் – 101, கோவில்புளியங்குளம் – 81, சொரியல் – 6448

இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும் பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் மேம்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(1) றேடியோ கண்ணன், (2) டொலர் பாம், (3) ஆனந்தா றேடிங் கொம்பனி, (4) செகசோதி அன்ட் கொம்பனி, (5) எஸ். இராசரத்தினம், (6) எஸ். செல்லத்துரை, (7) எஸ். அம்பலவாணர், (8) த.நடராசா, (9) கென்ட் பாம், (10) சிலோன் தியேட்டர், (11) அரியகுண்டன், (12) கார்கோ போட் கொம்பனி, (13) றெயில்வே குறூப் மற்றும் (14) போஸ்டல் குறூப். இவர்களை வவுனியாவில் பொலிஸ் அத்தியட்சகராக இருந்து ஆர்தர் ஹெரத் அடித்து கலைத்து விரட்டிவிட்டார்.

3. அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாகத் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான ஹேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் பொதுவெளிக்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது-

“All wars are fought for land…The plan for settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor… We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya if settled by non-separatists (Sinhala people) would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…”

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே.

”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம்.

‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’

4. 1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1997 இல் பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது,

இராணுவ நோக்கில் வெலி ஓயா மிகவும் முக்கியமானது. எங்களது இருப்பு வட – கிழக்கு இணைப்பை தடுத்துவிடும். நாங்கள் அங்கு நிலைகொண்டு இருக்கும் வரை பயங்கரவாதிகள் ஈழப் போரை வெல்ல முடியாது. நாங்கள் வெளியேறினால் பதவியா, கெப்பிற்றிகொலாவ ஈற்றில் அனுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். (சண்டே ஒப்சேவர் – 22 பெப்ரவரி, 1998)

“Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998).

மூலம்: https://www.tamilcnn.lk/archives/792545.html

ngiri2704@rogers.com