வவுனியாவில் பண்டாரவன்னியன் நாடகவிழா!

1_bandaravanniyan_viza2014.jpg - 25.67 Kbபோர்வாளை தனது கொடியின் சின்னமாக கொண்டு, புலியெனப்பாய்ந்து, முல்லைத்தீவில் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்த பிரமாண்டமான கோட்டையை நிர்மூலமாக்கி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்து, இறக்கும் வரை வன்னி பெருநிலப்பரப்பை அந்நிய சக்திகளிடம் வீழ்ச்சியுறாமல் அரசாண்ட, இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆவான். அந்த தீரனின் அஞ்சா நெஞ்ச வாழ்க்கையை கூறும் வரலாற்று நாடகம் எதிர்வரும் 06.07.2014 அன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும், “வன்னி குறோஸ்” சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் முயற்சியால், ஏறத்தாள ஏழு வருடங்களுக்கு பிறகு முல்லை கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்படவுள்ள இந்த நாடகவிழாவில், பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா மற்றும் வரலாற்று ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு முல்லை கலைஞர்களும், வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தினரும் பேருவகையுடன் அழைப்பு விடுக்கின்றனர்.

வவுனியாவில் பண்டாரவன்னியன் நாடகவிழா!

yathumaki@gmail.com