வாசிப்பும், யோசிப்பும் 105 : மேலும் சில முகநூல் குறிப்புகள்!

-*முகநூலில் அவ்வப்போது எழுதிய குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – வ.ந.கி. –

1. செர்கய் ஐஸன்ஸ்டினும் இலக்கியமும்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் சென்னை ஃப்லிம் சொஸட்டி / சவுத் ஏசியன் புக்ஸ் இணைந்து வெளியிட்ட நூலான திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டின்’ நூலினை வாசித்தேன். சிஸன்ஸ்டினின் கட்டுரைகள் சிலவற்றை (எழுத்தாளர் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில்) உள்ளடக்கிய நூலிது. நூலுக்கு ‘அமரக் கலைஞன் ஐஸன்ஸ்டின்’ என்றொரு அணிந்துரையினை கே.ஹரிகரன் எழுதியிருக்கின்றார். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அதற்கொப்ப அமைந்துள்ள நூலிது. நூல் சிறியதானாலும் கூறும் பொருளில் பெரியது , சிறந்தது என்பேன்.

இத்தொகுதியிலுள்ள ஐஸன்ஸ்டினின் கட்டுரைகள் வருமாறு:

1. ஐஸன்ஸ்டினின் முன்னுரை
2. நான் இயக்குநர் ஆனது எப்படி?
3. வண்ணம் திரைக்கு வந்த கதை
4. தொழிலாளர் – திரைப்படங்களைத் தயாரிப்பது எப்படி?
5. இலக்கியத்திலிருந்து சில பாடங்கள்.
6. பொட்டம்கின் படக்கட்டமைப்பின் ஒருங்கிணைவும் உணர்வெழுச்சியும்

மேலுள்ள கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பில் இறுதியாக ஈர்ப்புகளின் படத்தொகுப்பு, ஐஸன்ஸ்டின் : வாழ்க்கையும், படைப்பும் ஆகிய ஐஸன்ஸ்டின் பற்றிய ஆவணக்கட்டுரைகளுமுள்ளன.

கலை, இலக்கியப்பிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ள நூல்களிலொன்றாக இந்நூலினைக் கருதுகின்றேன். இந்நூலிலுள்ள ‘இலக்கியத்திலிருந்து சில பாடங்கள்’ என்னும் கட்டுரையில் ஐஸன்ஸ்டின் கூறிய சில விடயங்கள் ( எழுத்தாளர்கள் பற்றிய, விமர்சகர்கள் பற்றிய ) என் கவனத்தைக் கவர்ந்தன. அவற்றை இங்கு பட்டியலிடுகின்றேன் ஒரு பதிவுக்காகவும் மேலதிக தர்க்கத்துக்காகவும்.

1. விமர்சகர்கள் பற்றி….
“இலக்கியப்படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதும் தேந்தெடுப்புக்கான அடிப்படைகளைத் தர்க்கரீதியாக விளக்கிவருவதும் விமர்சகர்களின் கடமை.  இதற்கு எழுத்தாளர்கள் படைப்புகள் பற்றிய ஆழமான ஆய்வு தேவை.  தான் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தை எழுத்தாளன் சரிவர தனது எழுத்தில் பிரதிபலித்திருக்கிறானா, தனது மனச்சாட்சியை  தனது காலகட்டத்தின் வரையறுக்கப்பட்ட சமுதாய விதிகளுக்கு அடகு வைத்திருக்கின்றானா, என்பதையெல்லாம் விமர்சகர்கள் ஆராய வேண்டியிருக்கிறது.  இந்தப் பிரச்சினைகளை  அவன் எவ்வாறெல்லாம் சந்திக்க முயல்கிறான் என்பதையும்  விமர்சகர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.  டால்ஸ்டாய் பற்றிய லெனினின் விமர்சனமும், பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஸோலா பற்றி எங்கெல்ஸ் கூறியவையும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.”

2. எழுத்தாளர்கள் பற்றி
“எழுத்தாளர்களின் குறைபாடுகளையும் மீறி அவர்களுடைய செவ்வியல் படைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.  இப்படைப்புகளின் வெவ்வேறு அலகுகளை ஆராய்வது மிகவும் பயனளிப்பதான ஒன்றே ஆகும். எனவே ‘யார் சிறந்த எழுத்தாளர்’ என்றெல்லாம் பார்த்துக்கொண்டிராமல் ஒவ்வொரு எழுத்தாளரிடமும் நாம் படிக்க வேண்டியது எது என்பதில் நாம் கவனல் செலுத்த வேண்டும். குறிப்பிட்டதொரு பிரச்சினையைத் தெளிவாக்குவதில் குறிப்பிட்ட எழுத்தாளர் ஒருவரது படைப்பு உதவுகிறது என்றால், அவ்வாறு உதவுகிற அம்சங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.”

3. எமிலி ஸோலா பற்றி…
“ஸோலாவின் நாவல்களில் எந்தப்பக்கத்தை எடுத்துப்படித்தாலும் அது ஒரு காட்சியாக எழுதப்பட்டிருப்பதை நீங்கள் உணர முடியும். அந்தன் அடிப்படையில் நீங்கள் ஒரு காட்சியை எடுத்து விடலாம். இயக்குநர், ஆக வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் எல்லோரும் பின்பற்றிய வேண்டிய திட்டவட்டமான செயற்பாடுகளுகளை விவரிப்பதாக ஸோலாவின் நாவல் இருக்கிறது.”

4. எழுத்தாளர்கள் , விமர்சகர்கள் பற்றி…
”  ஆக  இலக்கியம் பற்றிய  நமது விவாத அடிப்படையே  ஒவ்வொரு எழுத்தாளரிடமும் பிரத்தியேகமான  அம்சம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். 

எழுத்தாளர்களிடையே யார் முக்கியமானவர்?, யார் சிறந்தவர்? போன்ற கேள்விகளையெல்லாம் விமர்சனம் என்பதை வெறும் Academic விஷயங்களின் சுழற்சியாக மாற்ற முயன்றுகொண்டிருப்பவர்களுக்கு விட்டுவிடுவோமாக!  இனி கோகோலின் அம்சங்களை ஃப்ளாபரிடம் தேடாதீர்கள். டால்ஸ்டாயின் எழுத்துகளின் அம்சங்களைப்போய் தாஸ்தாயேவ்ஸ்கியிடம் தேடிக்கொண்டிருக்காதீர்கள். இப்படி எழுத்தாளர்களின் முகவரிகளைக்குழப்பிக்கொண்ட்ருப்பது சரியல்ல; நமது வேலையும் அல்ல.”

5. திரைக்கதை எழுதுவதற்கு…
” ஒரு படைப்பை எப்படி வாசிப்பது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்படி வாசிக்கும் முறையைக்கற்றறிந்தால்தான் திரைக்கதை எழுதுவதும் காட்சிகளைத் தொகுத்தமைப்பதும் நமக்குச் சாத்தியமாக முடியும்.”

மேலுள்ள கூற்றுகள் சினிமா உலகின் மகத்தான கலைஞராக அறியப்படும் செர்கய் ஐஸன்ஸ்டினின் இலக்கியம் பற்றிய சிந்தனை, திரைக்கதை எழுதுவதற்கு இலக்கிப்படைப்பொன்றின் மீதான வாசிப்பு பற்றியெல்லாம் விபரிக்கின்றன. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால்தான் இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


2. நா.சபேசனின் ‘இனி வரும் காலம்’ : ஜூலி பெர்ணாண்டோ!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் நா.சபேசனின் ‘இனி வரும் காலம்’ தொகுப்பினை வாசித்துக்கொண்டிருந்தபொழுது எதிர்ப்பட்ட கவிதையிது.  ‘ஒரு சிநேகிதிக்கு எழுதியது’ என்னுமிக் கவிதையியிலுள்ள ஜூலி என்னும் சொல்லினையும், சினேகை என்பதை சிநேகிதி என்பதாக மாற்றிவிட்டு ‘வலைத்தமிழ்’ என்னும் இணையத்தளத்தில் ஸ்வாதி என்பவர் தன் கவிதையாகப் பிரசுரித்துள்ளதையும் அவதானித்தேன்.
.
இந்தக் கவிதை என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் இக்கவிதை குறிப்பிடும் ஜூலி பெர்ணாண்டோ. இவரை நான் ஓரிரு தடவைகள் சந்தித்திருக்கின்றேன் சிறுமியாக. சிறுமியாக இருந்த அச்சமயத்திலும் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒருவராகவே சந்தித்திருக்கின்றேன். ‘காந்தியம்’ அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவராகச் சந்தித்தது இன்னும் ஞாபகத்திலுள்ளது. பொட்டும் , இரட்டைப்பின்னல்களும் சைக்கிளுமாகத்தோன்றியதாக ஞாபகம். வவுனியா இறம்பைக்குள அநாதைகள் விடுதியில் நடைபெற்ற ‘தமிழீழமும், சமயமும்’ என்னும் கருத்தரங்களில் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் போன்றோருடன் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அந்தக் கருத்தரங்கில் சிறுமியான இவரையும் உரையாட அனுமதித்திருந்தார்கள். டாக்டர் ராஜசுந்தரம் இவர் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்ததை இவர் பற்றி எம்முடன் உரையாடியபோது பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

அக்கருத்தரங்குக்குச் சென்றிருந்தபொழுது காந்தியப்பண்ணைகளுக்குக் குழுக்களாகச் சென்றபொழுது எம் குழுவில் இவருமிருந்தார். அப்பொழுது பண்டத்தரப்பு ‘கான்வென்’டில்  படித்துக்கொண்டிருந்தபொழுது விடுதி ‘வார்ட’னின் அடக்குமுறைகள் , அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட ஆரம்பத்தில் தன்னைத்தூண்டியதாக குழந்தைத்தனமாக இவர் (அப்பொழுது இவர் சிறுமி) கூறியதும் இன்னும் ஞாபகத்திலுள்ளது.

அதன் பின்னர் இவரைச் சந்திக்கவில்லை. பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில்தான் பார்த்தேன். வவுனியா விமானப்படையினரின் தாக்குதல் சம்பந்தமாகத் தேடப்படும் நபர்களிலொருவராக இவரது பெயரினையும் பிரசுரித்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்கள் விடுதலைப்போராட்ட வரலாறுகளில் இவரைப்போன்ற பெண்கள் பலரின் பங்களிப்புகள் பற்றிய போதிய விபரங்களைக் காண்பதில்லை. அந்த வகையில் சபேசனின் இந்தக்கவிதை முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழ விடுதலைபோராட்டத்தில் போராடிய பெண்களிலொருவரான ஜூலி பெர்ணாண்டோ பற்றிய தகவலை அவரது ஆளுமையினூடு ஆவணப்படுத்தியிருக்கின்றது.

இந்தக் கவிதையில் சபேசன் இரு தடவைகள் சிநேகிதிக்காக சினேகை என்ற சொல்லினைப்பாவித்திருக்கின்றார். அந்தச் சொல்லினை நான் இக்கவிதையில்தவிர வேறெங்கும் பார்த்திருப்பதாக ஞாபகமில்லை. அப்படியொரு சொல் தமிழில் எங்காவது பாவிக்கப்பட்டிருக்கிறதா? அறிந்தவர்கள் கூறவும்.

ஒரு சிநேகிதிக்கு எழுதியது.

என்னரும் சினேகை ஜூலி
உன்னை ‘அவர்கள்’ உதைத்தார்களாமே.
காக்கிகள் போட்ட காவற் ஊட்டம்.

இனமத பேதமற்று இன்று
வவுனியாவில் உண்ணாவிரதம்
பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டேன்.
நீயும் அங்கிருப்பாய் என்று, நினத்தேன்.

வயல்கள் நிறையும் வவுனியாத் தெருக்களில்
சயிக்கிளில் திரியும்
உனது நினைப்பு சந்தோஷமளிக்கும்
எனக்கு.

ரியூசனுக்குச் செல்லும் பெண்களை,
ஒழுங்கை முடக்குகளில்
காதலர்களோடு நின்று சல்லாபிக்கும்
உன் வயதுப்பெண்களை காண நேர்கையில்
என்னரும் சினேகை ஜூலி
உனது நினைவு பிரமிப்பாகும்.

எல்லோருமே படித்தால்
என்னரும் மக்களை, தங்களைப் பற்றிய
தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை
தட்டியெழுப்புவது யாராம்?
அம்றொருநாள் எனைக் கேட்டாய்
யாழ்ப்பாணத்தில்.
திரும்பவும் உனைக் கண்டது
வன்னியிலே தான்.

என்னரும் மக்களை , தங்களைப் பற்றிய
தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை
கட்டியெழுப்பும் உனைக்கண்டேன்.

ஒரு சயிக்கிள் போதுமுனக்கு.
எனது மக்களை கட்டியெழுப்ப
யாழ்ப்பாணத்திலிருந்து
நீ கொணர்ந்ததும் இவை தான்.
செருப்பு,
ஒரு சயிக்கிள்,
புத்தகங்கள் கொஞ்சம்,
இரண்டு சோடி உடுப்புகள்.

என்னரும் சினேகை ஜுலி
இன்றுதான் ஒருவர் சொன்னாரிதனை
கண்ணீர்ப் புகையின் பின்னர்
உனது கூந்தலைப் பிடித்து உதைத்தனராம்.

கண்ணீர்ப்புகைகளும்,
குண்டாந்தடிகளும்
உன்னை இனும் வளர்க்கும் என்பதை
அவர்கள் அறியார்?

”இனிவரும் காலம்’ தொகுப்பிலிருந்து
வெளியீடு: பொதிகை வெளியீடு செப்டமபர் 1986

சபேசனின் ‘இனி வரும் காலம்’ நூலினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். http://noolaham.net/project/112/11193/11193.pdf


3. ஒரு நல்ல படைப்பு, இலக்கியம் மற்றும் திறனாய்வாளர்கள் பற்றி…..

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஒரு நல்ல படைப்பானது தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ளும வல்லமை மிக்கது. அவ்விதமான படைப்புகளுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் தேவையில்லை. அவ்விதமான படைப்புகளை மக்களே காலநதியினூடு இழுத்துச் செல்வார்கள். பாரதியாரின் படைப்புகளைப் பெரிதாக அவர் வாழ்ந்த காலத்தில் அக்காலகட்டத் திறனாய்வாளர்கள், படைப்பாளிகள் அங்கீகரிக்கவில்லை. நடந்ததென்ன? அவர்களெல்லாரும் காலவெள்ளத்தில் அடியுண்டு சென்றுவிட , பாரதியார் நிலைத்து நின்று விட்டார். ஓவியர் வான்கோவின் ஓவியங்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. நடந்ததென்ன? இன்று அவரது பெயர் வரலாற்றில் நிலைத்து நின்று விட்டது.  என்னைப் பொறுத்தவரையில் நல்லதொரு படைப்பு எப்படியும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும். இன்றைய இணையம் போன்ற நவீனத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினை இளம் படைப்பாளிகள் உரிய முறையில் பயன்படுத்துவதே சிறந்தது. எந்தவித அங்கீகாரமும் அவர்களுக்குத் தேவையில்லை.

தற்போதுள்ள சூழலில் திறனாய்வாளர்கள் விரிவான ஆய்வுகள் செய்து திறனாய்வுகள் செய்வதைக் காண்பது அரிது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கமைய , கிடைக்கும் ஓரிரு நூல்களை வைத்துக்கொண்டு, தம் திறமையினைக் காட்டுவதற்காக பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுவதைத்தான் காண முடிகிறது.

இலக்கியத்தில் பல்வேறு போக்குகளுண்டு. எல்லாவற்றிலும் குறை, நிறைகளுள்ளன. எல்லாவிதமான போக்குகளுக்கும் மானுட வளர்ச்சியில் தேவையுண்டு. உதாரணமாகக்குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம், யதார்த்த இலக்கியம், மிகையதார்த்த இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம், ‘மாந்திரிக யதார்த்தவாத இலக்கியம்’ என்று போக்குகள் பல. இவற்றில் சில வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டுகளாக விளங்குகின்றன என்பதென் கருத்து. உதாரணமாக குழந்தை இலக்கியம், வெகுசன இலக்கியம் போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

ஏனைய நவீனத்துவ போக்குகளைப்பொறுத்தவரையில் அவையனைத்துமே மானுட வாழ்வைப்பல்வேறு கோணங்களில் நின்று நோக்குகின்றன. உதாரணத்துக்கு மானுட வாழ்வினைப்பிரதிபலிக்கும் ஓவியமொன்றினை ஒருவர் கியூபிச பாணியில் வரையலாம். இன்னுமொருவர் யதார்த்தமாக வரையலாம். இவ்விதம் பல்வேறு பாணிகளில் வரையலாம். ஆனால் அவையனைத்தும் மானுட வாழ்வின் பல்வேறு பார்வைகளின் பிரதிபலிப்புகளே. ஆனால் ஓவியங்களின் போக்குகள் பல்வகைப்பட்டனவாகவிருந்தபோதும் அவற்றில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்கள், கோடுகள் போன்ற கட்புல அம்சங்களினடிப்படையில் அவை ஆராயப்பட வேண்டும். அதுபோல்தான் இலக்கியப்படைப்புகளும் பலவேறு போக்குகளில் (இஸங்களில்) படைக்கப்பட்டிருந்தாலும் அவை கூறும் மொழி, பாத்திரப்படைப்பு, உரையாடல், கதைப்பின்னல் போன்ற அம்சங்களின் அடிப்படையில் விரிவாக ஆராயப்பட வேண்டும். எல்லாப்படைப்புகளே எல்லா அம்சங்களிலும் சிறப்பாக இருந்து விட முடியாது. அவற்றையெல்லாம் ஆராய்ந்து அவை எவற்றில் சிறப்புற்றிருக்கின்றன, அல்லது எவற்றில் சிறப்பிழந்திருக்கின்றன என்பது பற்றியெல்லாம் திறனாய்வாளர்களால் கூறப்பட வேண்டும்.

இந்நிலையில் திறனாய்வாளர்கள் பல்வேறு படைப்புகளைப்படித்து , பல்வேறு வகைப்பட்ட படைப்புகளையும் உள்வாங்கி, நிதானமாக அவற்றை விமர்சிக்க வேண்டும். அவ்விதமாக விமர்சனத்துறை வளர வேண்டும்.


4. இரத்தக்காட்டேரியும் , புளியமரத்து முனியும் , சிறிலங்காப்பாராளுமன்றத்தேர்தலும்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இந்தப்பாராளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சா கும்பல் தீவிரமாக இறங்கியிருப்பதற்கு முக்கிய காரணங்களில சில:

*ஜனவரி 8இல் இழந்த பதவியை எவ்விதமாவது பெற்றுக்கொள்வது?
பாராளுமன்றத்தேர்தலில் மிக அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியக் கைப்பற்றுவது.

*அதன் பின்னர் சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி பதவிக்காலம் சம்பந்தமான திருத்தத்தை நீக்கி மீண்டும் ஜனாதிபதியாகத் தன்னை அமர்த்திக்கொள்வது.

சோதிடரின் கூற்றை நம்பி, பதவி முடியும் முன்னரே தேர்தலை நடாத்தி, எதிர்பாராதவிதமாகச் சிறுபான்மை இனங்களின் ஒருமித்த வாக்குகளினால் தோல்வியைச்சந்தித்த மகிந்தவுக்கு அடைந்த ஏமாற்றத்தைத்தாளவே முடியவில்லை. அதனால்தான் பாராளுமன்றத்தினூடு புகுந்து மீண்டும் ஜனாதிபதியாவது என்பது அவரது தந்திரமாகவுள்ளதுபோல் தெரிகிறது.

பாராளுமன்றத்தினுள் நுழைந்து விட்டால் போதும், அதன் பின் அந்தச் செல்வாக்கை வைத்து ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் பணத்தால் வாங்குவதென்பது மகிந்த கும்பலுக்கு மிகவும் இலகுவானது . அவ்வளவுக்கு அவர்களிடம் செல்வம் செறிந்து கிடக்கின்றது.

வடகிழக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை மக்களும் ஒன்றுபட்டு வாக்களிப்பது மட்டும் மகிந்தவின் மீள்வருகையினைத்தடுப்பதற்குப் போதுமானதல்ல. அதற்கு இலங்கைச்சிங்களச் சமூகமும் ஜனவரியில் வாக்களித்தைதை விட இன்னும் அதிக அளவில் மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

மகிந்த ஜனவரியில் ஜனாதிபதித்தேர்தலை நடாத்தியபோது அவரிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. இருந்தும் அவர் தோற்றுப்போனார் சிறுபான்மை இன வாக்குகளின் எதிர்ப்பினால். சிங்கள மக்களும் சரிக்குச்சரியாக எதிர்த்திருந்தார்கள். ஆனால் இன்று மகிந்தவின் கையில் ஆட்சியில்லை. மகிந்தாவுக்கு எதிரானவர்கள் கைகளில் ஆட்சி , அதிகாரமுள்ளது. அவர்கள் தம்மிடமுள்ள வளங்கள் அனைத்தையும் பாவித்து மகிந்த கும்பலின் ஊழல்களை, மனித உரிமை மீறல்களை (தென்னிலங்கை)  வெளிப்படுத்தி அதிக அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும். மனித உரிமைகளை, ஊழல் ஒழிப்பினை முன் வைத்து ஆக்ரோசமாகத்தம் பிரச்சாரத்தைச்செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால் ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமையான வாக்குகளினால் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச இம்முறை நடைபெறும் பாராளுமன்றத்தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமையான வாக்குகளினால் மட்டுமல்ல, பெரும்பான்மைச்சமூகத்தின் அதிகரிக்கும் மகிந்த எதிர்ப்பு வாக்குகளினாலும் தோல்வியடையும் சாத்தியமுண்டு.  அவ்விதம் அவர்கள் செய்யாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு யாராலுமே இலங்கையின் மக்களைக்காப்பாற்ற முடியாது.

இந்த நேரத்தில் ஒன்றினை இலங்கைச்சிறுபான்மை இன மக்கள் கருத்தில் கொள்வது அவசியம். பிரதான பெரும்பான்மையினக்கட்சிகள் இரண்டுமே தம் நலன்கள் விடயத்தில் கவனமாகவிருக்கின்றன. இன்றைய மைத்திரியின் அரசும் நாட்டில் ஆங்காங்கே உள்ளதாகக்கருதப்படும் சித்திரவதை முகாம்கள் இல்லையென்றுதான் கூறிவருகின்றது. இது போன்ற சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற சூழல் இன்றைய அரசிலுள்ளது. மகிந்தவின் கீழுள்ள அரசொன்றில் இவ்விதமான சூழல் நிலவப்போவதில்லை. வெள்ளை வான் கலாச்சாரம் முடுக்கி விடப்பட்டு , உரிமைக்காகக்குரல் கொடுப்பவர்கள் குரல் வளைகள் அறுக்கப்படும் சாத்தியமே அதிகமுண்டு.

அதனால்தான் இரண்டு பேய்களில் இரத்தக்காட்டெரியினைத் தோல்வியுறச்செய்வதற்கு, புளியமரத்து முனியின் வெற்றி அவசியமாகின்றது.


5. கியூபிசமும் , பப்லோ பிக்காசோவும்!

“A picture used to be a sum of additions. In my case a picture is a sum of destructions.” –  Pablo Picasso

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

இருபதாம் நூற்றாண்டின் ஓவியம், சிற்பம, இலக்கியம், கட்டடக்கலை என்று கலைத்துறையில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திய கோட்பாடாகக் கியூபிசம் என்னும் ஓவியப்பாணியினைக் கருதலாம். இவ்விதமான கலைப்பாணியில் பொருள்கள் துண்டுகளாக்கப்பட்டு, பல்வேறு கோணங்களிலிருந்து பகுத்தாராயப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. இவ்விதமான ஓவியப்பாணியின் மூலவர்களாக பாரிஸில்  வாழ்ந்த ஜோர்ஜெஸ் பிராக்சையும், பாப்லோ பிக்காசோவையும் குறிப்பிடலாம். நேரடியாக ஒருவரை அல்லது ஒரு பொருளை, ஓருயிரை ஒரு கோணத்திலிருந்து (புகைப்படங்களில் உள்ளதைப்போல்)  பார்த்து, உள்வாங்கி வரைந்து வந்த ஓவியர்கள் அவற்றைப் பல்வேறு கோணங்களிலிருந்து , துண்டுகளாக்கி, கேத்திரகணித வடிவங்களினூடு கற்பனை செய்து, அவ்வடிவங்களின் ஒருங்கிணைப்பாக வெளிப்படுத்திய கியூபிசப்பாணி ஓவியங்கள் ஓவியத்துறையில் , கலைத்துறையில் முக்கியமான மைல்கற்களாக அமைந்துள்ளன.

http://www.artyfactory.com/art_appreciation/animals_in_art/pablo_picasso.htm