வாசிப்பும், யோசிப்பும் 123 : பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிச் சில குறிப்புகள்…..

ஒல்லாந்தர் பார்வையில் ‘யாழ்ப்பாணத்தவர்’!

பேராசிரியர் கணபதிப்பிள்ளைபேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை எனத் தமிழ் இலக்கிய உலகில் கணபதிப்பிள்ளைகள் பலர். யாழ் இந்துக்கல்லூரியிலும் ஆசிரியரொருவரின் பெயர் கணபதிப்பிள்ளை. அவருமொரு பண்டிதரென்று நினைக்கின்றேன். அவரும் பத்திரிகைகளில் இலக்கியக்கட்டுரைகள் எழுதியதாகக்கூறக் கேட்டிருக்கின்றேன். இவ்விதம் கணபதிப்பிள்ளைகள் பலர் இருந்ததால் ஆரம்பத்தில் எனக்குப் பெருங் குழப்பமேயிருந்தது. நான் முதலில் அறிந்த கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள். அவரை அவரது சங்கிலி நாடகத்தினூடாகத்தான் முதலில் அறிந்து கொண்டேன். அந்தச் சங்கிலி நாடகப்பிரதி எனக்குக் கிடைத்தது தற்செயலானதொன்று. யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிலிருந்த பரண் மேலிருந்து கிடைத்த புத்தகங்களில் சில: மறைமலை அடிகளாரின் நாகநாட்டரசி குமுதவல்லி, திப்புசுல்தான் (பெரிய அதிக பக்கங்களுள்ள நாவல்), தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய மொழிபெயர்ப்பு நாவலான ‘மணிபல்லம்’ அடுத்தது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் சங்கிலி.

என் மாணவப்பருவத்தில் நீண்ட நாள்களாக நான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் ‘சங்கிலி’ நாடகத்தை எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்று எண்ணியிருந்தேன். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றிப்போதுமான நூல்கள் வெளிவந்திருக்கவில்லை என்பதுதான்.

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் ‘ஈழத்து வாழ்வும் வளமும்’ நூலினை அண்மையில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஈழத்தமிழர் வரலாறு பற்றி, அவர்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் பற்றி, அவர்தம் வாழ்வு பற்றி, அவர்தம் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள், அவர்தம் கிராமியத்தெய்வ வழிபாடு, அவர்தம் இசை, சிற்பக்கலை பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். குமரன் புத்தக இல்ல வெளியீடாக, கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கின்றது.

இந்த நூலில் பேராசிரியர் ‘யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் ஒல்லாந்தர் பார்வையில் யாழ்ப்பாணத்தவர் எவ்விதம் தோன்றினார்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். அதனை வாசித்ததும் வந்த சிரிப்பினை அடக்க முடியவில்லை. அது இது:

“அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட ஒல்லாந்தத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்தைப்பற்றிக்கூறியது கவர்ச்சிகரமானது: ‘யாழ்ப்பாண அரசில் வாழுவோர் கர்வமும், மமதையும் கொண்ட பிடிவாத குணமுள்ள முட்டாள்கள். இடங்கண்டால் தமக்கு மேலான உத்தியோகத்தர் மீது மேலதிகாரிகளுக்குப் பொய்க்குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால் , அவ்வுத்தியோகத்தர் கடுமையாக இருந்து இடங்கொடாது நடந்தால் அவருக்குப்பல்லுக்காட்டி அவர் காலில் போய் விழுவர்.’ இது அவர் அரசர் அரசாண்ட காலத்திலும், போர்த்துக்கேயர் அரசாண்ட காலத்திலும் அவர் பழகிய பழக்கம்.” (பக்கம் 12)

இது எப்படி இருக்கு?

 


பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றி மேலும் சில குறிப்புகள்…

‘ஈழத்து வாழ்வும் வளமும்’ என்னும் அவரது நூலுக்கு கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் கூறப்பட்டுள்ள விடயங்களின் மூலம் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஏனைய பேராசிரியர்களிடமிருந்து பல விடயங்களில் வேறுபட்டு நிற்பதை அறிய முடிகின்றது. இலங்கைத்தமிழ்க்கல்வெட்டு ஆய்வு,  ஒலியியல் பற்றிய மொழியியல் ஆய்வு,  தமிழர் வாழ்வியல், தமிழர் வரலாறு மற்றும் ஈழத்துத்தமிழிலக்கிய வரலாறு போன்ற துறைகள் மீதான ஆய்வு என  பன்முக ஆய்வுகளில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை என்பதை அம்முன்னுரையில் சிவத்தம்பி அவர்கள் தெளிவாகக்குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த இன்னுமொரு விடயம்தான் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையை ஏனைய பேராசிரியர்களிடமிருந்து வேறுபடுத்துக்காட்டுகிறதெனலாம். ஆய்வுத்துறையைவிட படைப்புத்துறையில் பேராசிரியர் அதிக அளவு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகச் சிவத்தம்பி குறிப்பிடுவதுதான் அது. நாடகம், கவிதை மற்றும் நாவல் ஆகிய இலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் பேராசிரியர் மிகுந்த, குறிப்பிடத்தக்க பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றார்.

மேலும் அம்முன்னுரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பேராசிரியரின் நாடகப்பங்களிப்புப் பற்றியும் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்: “படைப்புத்துறையில் நாடகமே இவரது பிரதான ஆக்கத்துறை எனலாம். இலங்கைத்தமிழ் நாடக வரலாற்றில் இவரது படைப்புக்கள்  ஒரு முக்கிய மைல் கல் எனலாம். நானாடகம் (1940), இரு நாடகம் ( 1952) எனும் நாடகத்தொகுதிகளும், சங்கிலி (1956) எனும் வரலாற்றி நாடகமும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிரசுரிக்கப்படாத சுந்தரம் எங்கே (1955), துரோகிகள் (1956) என்பன மிக முக்கியமானவையாகும்.” ‘

நாடகம் தவிர  பேராசிரியர் ‘பூஞ்சோலை’  (1953) மற்றும் ‘வாழ்க்கையின் விநோதங்கள்’ ஆகிய இரு நாவல்களையு எழுதியுள்ளார். இவற்றை முறையே பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் நாவல்கள் இரண்டின் வழி வந்தவையாக கா.சிவத்தம்பி அவர்கள் நினைவு கூர்வார்.

இவை தவிர சிவத்தம்பி அவர்கள் தன் முன்னுரையில் கூறிய இன்னுமொரு விடயம் மிகவும் முக்கியமானது. அது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை தனக்குப்பின்னால் பெயர் சொல்ல ஒரு மாணவர் பரம்பரையையே உருவாக்கியுள்ளது என்பதுதான். அது பற்றி சிவத்தம்பி அவர்கள் கூறுவதைப்பார்ப்போம்:

“பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மிகப்பெரிய சாதனை அவர் தோற்றுவித்த புலமைப்பாரம்பரியமே.  ஈழத்தில் கல்வெட்டாய்வியல், நாடகம், ஈழத்துத்தமிழியலாய்வு என்னும் துறைகளில் இன்று முன்னணியில் நிற்கும் ஆய்வாளர்கள் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மாணவர்களே.  . பேராசிரியர் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ் ஆகியோரும் திரு.ச.தனஞ்சயபரராசசிங்கமும் இவரின் மாணாக்கர்கள்.’

பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பற்றி நூல் எழுதியிருப்பதாகத்தெரிகிறது. ஆனால்  பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பற்றி நூல் எழுதியிருப்பதாகத்தெரியவில்லை.  பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் கவிதைகளின் தொகுப்பான ‘தூவுதும் மலரே’ என்னும் தொகுப்பினை வெளியிட்டதோடு, அதற்கு அம்பலத்தான் என்னும் புனைபெயரில் முன்னுரையும் எழுதியிருப்பதாகச் சிவத்தம்பி அவர்கள் ‘ஈழத்து வாழ்வும் வளமும்’  நூலுக்கான தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மறைவுக்குப்பின்னர் ஏன் அவரது புகழ்பெற்ற மாணவர்கள் யாரும் பேராசிரியரின் கலை, இலக்கிய மற்றும் ஆய்வுப்பங்களிப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை அதிக அளவில் எழுதவில்லை? இவரது மாணவர்கள் தமக்கு வழிகாட்டிய பேராசிரியர் பற்றி ஏன் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளைப்படைக்கவில்லை என்பது ஆச்சரியமானதொன்று. பேராசிரியரின் பங்களிப்பினைப்பார்க்கும்போது அவர் அதிகமாக நினைவு கூர்ந்திருக்கப்பட்டிருக்க வேண்டியவரென்று தெரிகின்றது. ஆனால் யாரும் பெரிதாக அவரை அவருடைய பங்களிப்புக்கேற்ப நினைவு கூர்ந்ததாகத்தெரியவில்லை. இவ்விடயத்தில் என் கருத்துகள் தவறாகவிருப்பின் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுங்கள். தவறினைத் திருத்திக்கொள்கின்றேன்.

ngiri2704@rogers.com