வாசிப்பும், யோசிப்பும் – 20: மறக்க முடியாத ‘ஈழநாடு’ மாணவர் மலர்….

– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. –

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகைக்கும் , குறிப்பாக அதன் ‘மாணவர் மலர்’ பகுதிக்கும் முக்கியத்துவமுண்டு. அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு மாணவர் மலரில் ‘தீபாவளி இனித்தது’ என்றொரு கட்டுரைப் போட்டியினை உயர்தர மாணவர்களுக்காக அறிவித்திருந்தார்கள். அதற்கு நானுமொரு கட்டுரையினை …’தீபாவளி இனித்தது’ என்னும் தலைப்பில் அனுப்பினேன். அப்போட்டியில் தெரிவான கட்டுரை கண மகேஸ்வரனின் கட்டுரை. அவர் அப்பொழுது உயர்தர மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார். எனது கட்டுரை பிரசுரமாகவில்லையென்றாலும், வவுனியா மகா வித்தியாலயத்து ஆறாம் வகுப்பு மாணவன் கிரிதரனின் கட்டுரை நன்றாக இருந்தது என்னும் அர்த்தத்தில் குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. அந்த வயதில் அது எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. அதன் பின்னர் சுதந்திரனுக்குப் பொங்கல் கவிதையொன்றினை எனது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் அனுப்பினேன். அது தான் முதன் முதலாகப் பத்திரிகையொன்றில் வெளியான எனது கவிதை. இதன் பின்னர் அவ்வப்போது ஈழநாடு மாணவர் மலருக்குக் கவிதைகள், கட்டுரைகள் அனுப்பியிருக்கிறென். அவற்றையும் ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியிருந்தது. பீன்னர் எனது பதின்ம வயதில் எனது சிறுகதைகள் நான்கு ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. கட்டுரைகள் சிலவும் ,’நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’, மற்றும் ‘பழைமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம்’ பற்றி எழுதியவை, ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியுள்ளன. அப்பொழுது ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரை நான் ஒருமுறையும் சந்தித்ததில்லை. ஆனால் அவர்தான் என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்குவித்தவர். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் ‘ஈழநாடு சிறுகதைகள்’ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை ‘மல்லிகை ஆண்டு மலரொன்றில் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் அவர் என்னை ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிக்லொருவராகக் குறிப்பிட்டு, எனது ‘மணல்வீடுகள்’ என்னும் சிறுகதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பை இன்னும் நினைவு வைத்து இதுபோன்றதொரு கட்டுரையினை எழுதிய செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவர். இது போல் ‘இலங்கையில் வெளியான ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான புனைகதைகள் பற்றியும் (சிறுகதை, நாவல் போன்ற) யாராவது எழுதினால் நல்லது. அவை பயனுள்ள ஆவணப் பதிவுகளாகவிருக்கும்.

நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில் ஈழநாடு வாரமலர் ஈழநாடு பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தது. அதனை எழுதியவர் எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன். அவர் அப்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.. அவரிடம் என்னைப் பற்றியும் அத்தொடரில் எழுதும்படி ஈழநாடு நிறுவனம் கேட்டிருந்தது. அவர் என்னுடன் தொடர்புகொண்டு நேர்காணலுக்கு நேரம் கேட்டிருந்தார். அப்பொழுது நான் சிறிது ‘பிஸி’யாக இருந்ததால், அவரிடம் கேள்விகளை அனுப்பும்படி கேட்டிருந்தேன். அவரும் கேள்விகளை அனுப்பியிருந்தார். அத்துடன் எனது புகைப்படத்துக்குரிய ‘புளக்’ செய்தும் அனுப்பும்படியும் கேட்டிருந்தார். நான் ‘புளக்’ செய்து அனுப்பவில்லை. அதன் காரணமாக நேர்காணலும் பிரசுரமாகாமலேயே முடங்கிப் போனது.

ஈழநாடு மாணவர் மலர் தந்த ஊக்கத்தினால் எழுதத்தொடங்கிய எனது முதலாவது சிறுகதை சிரித்திரனில்தான் வெளியானது. சிரித்திரன் நடாத்திய ‘அறிஞர் அ.ந.கந்தசாமி சிறுகதைப் போட்டி’யில் ஆறுதல் பரிசு பெற்று பிரசுரமான சிறுகதை அது. அச்சிறுகதை மூலம் எனக்குச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. சிரித்திரன் வெளியிட்ட ‘கண்மணி’ என்னும் சிறுவர் சஞ்சிகையும் எனது சில சிறுவர் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது.

இச்சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகை பற்றியும் குறிப்பிட வேண்டும். எனது சிறுவர் காலத்துப் படைப்புகள் சிலவற்றை (உருவகக் கதையொன்று, பொங்கல் பற்றிய சிறு கட்டுரையொன்று) ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தியது. இவ்விதமாக ஈழநாடு மாணவர் மலர் தந்த ஊக்கம் காரணமாக எழுதிய கவிதைகள் பல வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சிந்தாமணி, ஈழமணி, சிரித்திரன் ஆகியவற்றில் எனது மாணவப் பருவத்தில் வெளியாகின. இப்பத்திரிகைகள், சஞ்சிகைகளெல்லாம் என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தன.

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....எனது ஆரம்பகாலத்துச் சிறுகதைகளிலொன்று, ‘ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்’, தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியாகியிருக்கிறது. உண்மையில் அச்சிறுகதைக்கு நான் கொடுத்த தலைப்பு: ‘நவீன புத்தன்’. புத்தர் அரச மரத்தடியில் ஞானம் பெற்றதுபோல் அச்சிறுகதையின் நாயகன் ‘ஆலமரத்தடியில் ஞானம் பெறுகின்றான். புத்தர் மனைவி, மக்களைத் துறந்து சென்று அரசமரத்தடியில் ஞானம் பெறுகின்றார். இச்சிறுகதையின் நாயகனோ கடன் சுமைகளால் மனைவி, மக்களை நள்ளிரவில் விட்டுப் பிரிந்து, வாழ்வை முடித்துக் கொள்வதற்காகச் செல்லும் வழியில் , ஆலமரத்தடியில் ஒரு பிச்சைக்காரத் தம்பதியினரின் நடத்தை கண்டு (பிச்சைக்காரர்களாக இருந்தபோதும், ஒருவருக்கொருவர் துணையாக, ஏழ்மையிலும் வாழும் அவர்களைக் கண்டு , அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு, வெட்கித்து) மனம் மாறி வீடு திரும்புகின்றான்.

இப்பொழுது நினைத்தாலும் ஈழநாடும், அதன் மாணவர் மலர் பகுதியும் நெஞ்சினில் மகிழ்வினைத் தருவன. அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுவர்களுக்கென்று ஒரு பகுதி கட்டாயமிருக்கும். ஆனால் இன்று வெளியாகும் பல பத்திரிகை, சஞ்சிகைகளில் இவ்விதமான சிறுவர்/ சிறுமியர்களுக்குரிய பகுதியினைக் காண்பதே அரிது. ஆனால் இளம் பருவத்தில் சிறுவர்களை வாசிக்க, எழுத ஊக்குவிப்பதற்கு இது போன்ற பகுதி நிச்சயம் அவசியம் என்பதை உணர்ந்து பத்திரிகை, சஞ்சிகளை வெளியிடுவோர் செயற்பட வேண்டும். பத்திரிகை, சஞ்சிகைகளின் ஓரிரு பக்கங்களில் வெளியானாலும், சிறுவர் பகுதியும் அதில் வெளியாகும் ஆக்கங்களும், ஓவியங்களும் குழந்தைகளிடம் களிப்பையும், கனவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் சக்தி மிக்கவையல்லவா