வாசிப்பும், யோசிப்பும் 286 :மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு !

இப்சனின்  ஒரு பொம்மை வீடு

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் ‘ஒரு பொம்மை வீடு ‘ பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

‘ஒரு பொம்மை வீடு’ இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

நாடகத்தின் இடைவேளையில் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். அது என் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமைக்காக நோராயிசம் என்றொரு சிந்தனைப்போக்கே உருவானதாம் மேற்படி இப்சனின் நோரா பாத்திரத்தால் என்று அவர் குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன். இப்பாத்திரமே நாடகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள பாத்திரம். இதனைச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை அரசி விக்னேஸ்வரன் மிகவும் சிறப்பாக, அநாயசமாகச் செய்திருந்தார். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற நாடகத்தில் ஒரு கட்டத்தில் கூடத் தளர்ச்சியேதுமற்ற நிலையில், நாடக வசனங்களை நினைவில் வைத்துச் சிறப்பாகத் தன் நடிப்புத்திறமையினால் நாடகத்தைக் கண்டு களிக்க வந்திருந்த அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார் அவர். அதற்காக அவருக்குப் பாராட்டுகள். இந்நாடகத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கியமானதொரு காரணம்.

நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனும் அரசி விக்னேஸ்வரனின் நடிப்பை விதந்து தன் கருத்துகளை நாடகத்தின் முடிவிலான அவருடனான உரையாடலின்போது குறிப்பிட்டார்.

நாடகத்தில் நடித்திருந்தவர்கள்...

ஏனைய பாத்திரங்களில் அவரது கணவராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் ஜெகவன் மற்றும் அவரது கணவரின் உடல்நலப்பயணச் செலவுகளுக்காக, டோராவின் கள்ளக்கையெழுத்துடன் பணம் கொடுத்து உதவியவராக நடித்திருக்கும் எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோருக்கு நாடகத்தில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவற்றை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இவர்களுடன் மேடையின் பின்னணியிலிருந்து உழைத்த கலைஞர்கள் அனைவரும் (இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி, ஒலி , மேடையமைப்பு போன்றவற்றுக்காக உழைத்தவர்கள்) பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பல வருடங்களுக்குப் பின்னர் நல்லதொரு நாடக நிகழ்வைக் கண்டு களித்த திருப்தியான உணர்வே நாடகத்தின் முடிவிலேற்பட்டது. அதுவே நாடகத்தின் வெற்றியும் கூட.

ngiri2704@rogers.com